யதா யதாய

download”மச்சினா, அம்பதாயிரம் ரூவா அட்வான்ஸ் வெங்கிப்போட்டு திண்ணவேலி சங்சனிலே வெத்திலப்பேட்ட சுப்பையாவை போட்டுத்தள்ளப்போன நம்ம ‘கோழி’ அர்ச்சுனனும் ஒப்பரம் போன ‘உருண்டை’ கிருஷ்ணனும் அங்கிண என்னதான் செய்யுகானுகோ? எளவு, நேரமாச்சுல்லா? ”

என்று செல்போனில் பிலாக்காணம் வைத்த ‘கறுத்தான்’ நாராயணனுக்கு அவனுடைய மைத்துனனும் இளைஞனுமாகிய செருப்பாலூர் கணேசன் திருநெல்வேலி ஜங்ஷனில் ஒரு வெற்றிலைக்கடை அருகே மறைந்து நின்றுகொண்டு செல்போனை காதில் செருகி ரகசியமாக கீழ்க்கண்டவாறு சொல்லலுற்றான்.

‘அந்நா கன்யாகுமரி எக்ஸ்பிரஸிலேருந்து எறங்கி வெத்திலப்பேட்ட சுப்பையாவும் அவனுக்க தாய்மாமன் சம்முகமும் பின்ன மத்தவனுகளும் சேந்து வாறானுக. கோனாரு இப்பம் நம்ம கோழிய கூட்டிட்டுப்போயி நேர் முன்னால நிப்பாட்டுதாரு. டேசனுக்க நடுசென்றர்மத்தியத்தில. அவன் சொல்லுகதை நான் சொல்லுதேன்.

இந்நாப்பாருலே இவனாக்கும் வெத்திலப்பேட்ட சுப்பையா. ஒப்பரம் வாறது அவனுக்க தாய்மாமன் சம்முகம். தொரப்பன் சம்முகம்னு சொல்லுவாக. அடிமுறை ஆசானாக்கும். பொறத்தால வாறது ‘எருமை’ குமரேசன். அவனுக்க எடதுபக்கம் வாறது சுப்புரமணி. நம்ம எடலாக்குடி எசக்கிமுத்துக்க மருமகன். அதாம்லே அஞ்சுகிராமம் செவந்தி அண்ணாச்சிக்க தம்பி…லே மயிராண்டி, கன்யாகுமரியில பொம்மைக்கடவச்சிருக்காருல்லா மீசை முத்துநாயகம்? அவருக்க எளைய அனந்திரவன்லே…மத்தது ‘குப்பி’ சங்கரப்பாண்டி…

ஒடனே நம்ம கோழி தோளுக்குப்பின்னால கைய வச்சு நீட்டு இருக்கான்னு ஒருக்கா பாத்துப்போட்டு நேராட்டு போய் அவனுக முன்னால கூட்டத்துக்குள்ள ஒளிச்சு நிக்கான். எல்லாவனுகளையும் ஏறிட்டு ஒரு பார்வை பாக்குதான். ஒடனே சீட்டித்துணிய கிழிக்கப்பட்டதுமாதிரி பர்ர்ருனு ஒரு அழுகைச்சத்தம்.நம்மாளுதான் கிளிஞ்சு கரையுதான். ஏம்லே மூதேவீண்ணு கேக்காரு உருண்டை.

அண்ணாச்சி, இவிகள்லாம் நம்மாளுகள்லா? இந்த எருமை தானே எனக்கு மூணுசீட்டு படிப்பிச்சு குடுத்தான். சுப்புரமணியும் நானும் டாஸ்மாக்கிலே சில்லற சலம்பா சலம்பியிருப்போம். அண்ணாச்சி என்னைய மின்னல்ராபின்சன் முதமுதலா பிடிச்சு திருட்டுமுதலை தலையில ஏத்தி  தெருவில கொண்டுபோனப்ப வெலங்குக்க மத்த வளையத்தில இருந்தவன் ஆருண்ணு நெனைக்கிய? அது இந்தக் குப்பியாக்கும். அவனுக்கு டம்ப்ளர்ல குடிச்சா ஏறாது. குப்பியிலேருந்து ஏத்துவான் அண்ணாச்சி.

அண்ணாச்சி, எனக்கு ஒண்ணுக்கு வாற மாதிரி இருக்கு. ரெண்டு ·புல்லு சேத்து ராவா அடிச்சது மாதிரி கெறங்கிட்டு வருது. நிக்க முடியல்ல. தெரியாம கேக்கேன், எவனோ ஒருத்தன் பணம் குடுத்தான்னுட்டு நாம நம்ம ஆளுகளை போட்டுத்தள்ளினாக்க அது என்ன நாயம்?

அண்ணாச்சி, இவனுகளுக்கோ அறிவு கெடையாது. மடப்பயக்க, எவனாம் ஒருத்தன் ஆ·ப் முட்டைபரோட்டா வேங்கிக்குடுத்தா போயி கொலைய செஞ்சுப்போட்டு வருவானுக. நமக்கு ஒரு இது இருக்குல்லா? என்ன நான் சொல்லுகது?

என்னத்துக்கு அண்ணாச்சி இதெல்லாம்? ஒருலெச்சம் ரூவாய்க்காட்டா? ஒருமாசம் இருந்து குடிச்சா தீந்துப்போயிடுமே. இல்ல கேக்கேன், கக்கூஸில மூத்திரமா போகப்போற காரியத்துக்காட்டா நாம இங்க நிண்ணு பேசுதோம்? எனக்கு ஒண்ணும் வேண்டாம். எனக்க அப்பன் நட்டு வச்ச நாப்பதுமூடு ரப்பர் நிக்குது பேச்சிப்பாறையில. நான் போறேன்’

அப்டீண்ணு சொல்லிப்போட்டு நீட்டை எடுத்து கோனாரு கையில குடுத்திட்டு அப்பிடியே தரையில குந்தி இருந்துபோட்டான் கோழி. கோனாரு பக்கபக்கன்னு முழிக்காரு. ஒண்ணும் புரியல்ல அவருக்கு” என்று சொன்ன செருப்பாலூர் கணேசன் மேலும் சொல்லலானான்.

” ஆனா உருண்டை ஆளு ஆரு ? கெஜகில்லில்லா? ஒருமாதிரி சமாளிச்சுகிட்டு பேச ஆரம்பிச்சாரு. ஏலே கோளி, மயிரே, அறிவிருக்காலே உனக்கு? ஏல, சோத்தத் திங்கியா மண்ணத்திங்கியா? இருக்கான்பாரு  அடைக்கோளி இருந்தது மாதிரி. லே, குவார்ட்டரோட நிப்பாட்டுண்ணு எம்பிடுமட்டம்லே சொன்னேன், கழிச்சலிலே போறவனே

நம்மாளுகளுக்கு ஒருநாளும் வரப்பிடாத்த ·பீலிங்ஸ்லாடே இது? இது வந்தவனுகள்லாம் நேரா செண்டிரல் ஜெயிலுக்குல்லா போயிருக்கானுக. எந்திரி, எந்திரிலே ,நான்லா சொல்லுகேன்? பெரிய லாயரு கணக்காட்டுல்லா பேசுகே? செய்யப்பட்டது பாத்தா பரட்ட கெளவி மாதிரி இருக்கு. லே எந்திரி. எந்திரிலே மயிராண்டி.

என்னத்துக்காட்டு இங்கிண நிண்ணுட்டு பெரிய பேச்சு பேசுதே? இவனுகள்லாம் ஆரு? வெட்டுக்குத்து பார்ட்டிய. ரோக்கியத இல்லா பயலுகளுக்காட்டு நாயம் பேசுகே. இவனுக இருந்தாலும் செத்தாலும் ஆரும் ஒண்ணும் கவலப்பட மாட்டாக பாத்துக்கோ.

லே மக்கா, இப்பம் நாம இருக்கோம். இதே கோட்டாறிலே முன்னாடி இரும்பன் சங்கரனும், கயிறு மணியும் இருந்தானுக. அதுக்கு முன்னால காதர்பாட்சான்னு ஒருத்தன் இருந்தான்னு சொல்லுவானுக. இப்பம் நாம செத்தா நம்ம பயக்க வருவானுக. எனக்க சின்னவன் பீதாம்பரனுக்கு இப்பமே நாலு கேஸ் ஆயாச்சு.

லே, நாம எண்ணைக்குமே இல்லாம இருந்தது கெடையாது. இனிமே இல்லாம இருக்கப்போறதும் கெடையாது. அதை நீ நெனைச்சுக்கிடணும் பாத்துக்க. இருக்கிவனை நெனைச்சு சந்தோசப்படுகதும் போனவனை நெனைச்சு டாஸ்மாக்குக்கு போறதும் நம்ம மாதிரி ஆளுகளுக்குள்ள மார்க்கம் இல்ல. இந்த மாதிரி ·பீலிங்ஸ்லாம் சினிமா பாக்கிறப்ப வச்சுகிட்டு சத்தம் காட்டாம வந்திரணும். அப்பதாம்லே நாம மனுசங்க
இல்ல கேக்கேன், நீ கொல்லல்லண்ணா இவனுக என்ன நூறுவருசம் கெடந்து கோலு ஊணி நடக்கவா போறானுக? லே, இண்ணைக்கு நீ வெட்டல்லேண்ணா நாளைக்கு இன்னொருத்தன் வெட்டுவான். பிராய்லர் கோழிக்கு அறுவதாம் கல்யாணம் உண்டாலே? நீ கொன்னா இவனுக இல்லாம போயிருவானுகளா? ஏல, இன்னொருத்தன் வருவான். இதெல்லாம் எண்ணைக்குமே இருந்திட்டிருக்கும்லே எரப்பாளி.

மயிரு மாதிரி பேசப்பிடாது. இவனுக ஆளு தான் மாறுவானுக. இந்த கேடித்தனம் இப்பிடித்தான் இருக்கும். இதுக்கு தொடக்கம் இல்ல. முடிவும் இல்ல. அப்ப நீ ஆரைக்கொல்லுதே? ஆரை கொல்ல வைக்குதே?

சாவுண்ணா என்ன? சத்திரியன்னு விசயகாந்த் படம் பாத்தேல்ல? சூப்பர் பஞ்ச் டைலாக்கு உண்டு. சத்திரியனுக்குச் சாவு கெடையாது.அழுக்குச் சட்டைய மாத்திட்டு வேர்வைக்கு பவுடர் அடிச்சுப்போட்டு மறுக்கா டாஸ்மாக்குக்கு போறது மாதிரியாக்கும் சாவுங்கியது.

லே மக்கா, சொல்லுகதைக் கேளும். நாம மனுசங்க. ஆனா உள்ள இருக்கப்பட்டது வேற. இப்பம் நீ இங்க இருக்க. உனக்க மனசு காளிவிலாஸிலே கொத்துபரோட்டாவும் பாயாவும் திங்குது. லே உன் மனசைக்கொல்லணுமானா காளிவிலாசுக்குல்லலே போகணும்? அங்க போனா அங்கிண நீ இருக்க மாட்டேல்ல?

அதாக்கும் அண்ணாச்சி சொல்லுதேன், நீட்டு வச்சு அதை வெட்டமுடியாது. தண்ணிய விட்டு நனைக்க முடியாது. தீ வச்சு எரிக்கவும் முடியாது. அதுபாட்டுக்கு சைலேண்டா இருந்திட்டிருக்கும். அதுக்கு காலு கெடையாது. கை கெடையாது. பின்ன மூக்கு மட்டும் இருக்குமாக்கும். நெனைச்சுப்பாரு

செரி நீ நெனைச்சு கிளிச்சே. லே, அது நெனச்சாலும் பிடிகிட்டாததுலே. சும்மா இருந்து சிந்திச்சா ஒண்ணும் புரியாது. லே இஞ்சபாரு கண்ணதாசன் செட்டியாரு எளுதினான்லா? ‘வந்தது தெரியும் போவது எங்கே வழியில் நமக்கே தெரியாது. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில நமக்கே எடமேது’ அதாக்கும் காரியம். கண்ணைத்தொடை.

இந்த ரயிலு வாறது மாதிரியாக்கும் மனுசனுக்க வரவு. கைகாட்டி விழுந்து செவேப்பு லைட் எரிஞ்சா வரவு. கூவேண்ணு சத்தம். ஆரவாரம். பின்ன இந்தா போறேனேண்ணு ஒரு சத்தம். போனா தண்டவாளம் மட்டும் கெடக்கும் ஏணி கீள விளுந்தது மாதிரி. அதில இன்னொரு ரயிலு வரும்.

மக்கா அருவாள எடுத்துப்போட்டே. இனி அதை வச்சு நீ நாலு தலைய உருட்டினாத்தான் உனக்கு வாழ்வு பாத்துக்க. உனக்கு மேலே வீர சொற்கம் தெறந்து கெடக்கு. கீழ பாளையங்கோட்ட சப்ஜெயிலு. ரெண்டும் கணக்குதான். இங்கிண சோத்துக்கு மணியடிப்பானுக. இப்பம் நீ நீட்டை போட்டுட்டுப் போனேன்னாக்க நம்மாளுக உன்னையப் பத்தி என்னலே நெனைப்பானுக? கேணையன்னுதானே? பின்ன என்ன மயித்துக்குலே ஜீவிக்கணும்? சொல்லு.

அதனால ஒண்ணியும் நெனைக்காம நீட்டை எடுத்துக்கோ. போயி வெட்டு. உனக்கு ஒரு கொறையும் வராது . அண்ணனாக்கும் சொல்லுதேன்.

லே, ஓரோருத்தனுக்கும் ஒண்ணு சொல்லியிட்டுண்டு பாத்துக்கோ. ஒருத்தன் பேப்பரில எளுதி எளுதி வெட்டுதான். இன்னொருத்தன் கசாப்பு வெட்டுதான். அவனவனுக்குள்ளத அவனவன் செஞ்சாக்க அவனுக்கு நல்லது. இப்பம் உன்னைய பிடிச்சு அந்த கண்ணாடி ஓட்டைக்கு பொறத்தால இருத்தி டிக்கெட்டு குடுலேண்ணு சர்க்காரு சொன்னா நடக்குமா? பைசா தேறினா உன்னை பின்ன கொச்சியிலேல்லாலே பிடிக்கணும்?

இதாக்கும் உனக்க தொழிலு. உனக்க அப்பன் கோமணத்தை அவுத்தப்பமே அது தீருமானம் ஆயாச்சு. இனி அதை நீ நெனைச்சு மாத்த முடியாது பாத்துக்க.உனக்குண்டானதை நீ செய்தாக்க உனக்கு மோட்சம் உண்டு

இப்பம் உனக்க கடமை சொன்னதைச் செய்யியது. நல்ல தலவெட்டுகாரன் ஒருநாளும் ஏன் செய்யணும் எதுக்கு செய்யணும் செஞ்சாக்க என்ன ஆவும் ஒண்ணையும் சிந்திக்க மாட்டான். சொன்னதைச் செஞ்சுட்டு டாஸ்மாக்குக்கு போயிட்டே இருப்பான். கடமைய செய்லே கட்டேல போறவனே, பலனை எதிர்பார்க்காதே.’

உருண்டை சொல்லி முடிச்சப்பம் கோளி எந்திரிச்சு நிக்கான். எங்க எங்கண்ணு தேடுகான்…”என்று செருப்பாலூர் கணேசன் ஆவலுடன் கேட்டிருந்த கறுத்தான் நாராயணனுக்கு மேலும் சொல்லலானான்.

”ஆனாக்க அதுக்குள்ள டேசன்ல வந்து எறங்கினவனுகள்லாம் போயிட்டானுக. காலியாட்டு கெடக்கு. ‘கடல கடல கடலேய்’ன்னு ஒரு பையன் வந்து கோனாரிட்டே கடல வேணுமா அண்ணாச்சிண்ணு கேக்கான். போல அந்தால, சீவிப்போடுவேன்ன்னு சொல்லுதாரு.

இப்பம் என்ன அண்ணாச்சி செய்யுகது? ஒரு சந்தேகம்னு கேட்டாக்க சட்டுபுட்டுண்ணு சொல்லி நிப்பாட்ட மாட்டேளா? எளவு, காளை மூத்திரம் போன சேலுக்கு வேதாந்தமாட்டு சொல்லிட்டே போறியளே?’ங்கியான் கோளி.

செரிலே, இப்பம் என்ன? வந்தது போனது வரப்போறது ஒண்ணுக்கும் கவலைப்படமாட்டான் பண்டிதன். நீ வாடே மக்கான்னு சொல்லுகாரு உருண்டை. ரெண்டுபேரும் நேராட்டு எதிரே இருக்கப்பட்ட டாஸ்மாக்குக்குள்ள போறாங்க. உள்ள துரும்பு பிடிச்ச மேசையில உக்காந்து நாலு புல்ஸையும் ரெண்டு சிக்கனும் சொல்லிட்டு ரம்மு ·புல்லுக்கு சொல்லுறாங்க.

புல்லு எந்த மயித்துக்கு காணும்னு கோளி சொல்லுகான். எதை நீ கொண்டு வந்தே, எதை நீ கொண்டு போறேன்னு உருண்டை ஆரம்பிச்சப்ப இனிமே பேசினாக்க குப்பிய தூக்கி மண்டையில அடிப்பேன்னு சொல்லுகான் கோளி.

பின்ன ரெண்டு பேரும் காலும் கையும் கண்டபடி நாலு திக்கும் இளுத்துகிட்டு இருக்கிற நெலைமையில வெளிய வாறாங்க. தண்ணிக்குள்ள நீந்தி வாறது மாதிரி நடக்காங்க. கோளி உடுதுணியை உரிஞ்சு தலையில கெட்டியிருக்கான். ஒருத்தரை ஒருத்தர் தாங்கிக்கிட்டிருக்கதனால ரெண்டுபேருமே விளாம போறாங்க.

எங்க வீரனான கோளியும் விவேகமுள்ள உருண்டையும் இருக்காங்களோ அங்க பேலன்ஸ் உண்டுண்ணு சொல்லலாம்” என்று செருப்பாலூர் கணேசன் சொல்லி முடித்ததும் வானிலிருந்து பூமாரி பெய்தது.

ஆத்மாவை நிரூபிக்க அரியவழி! http://jeyamohan.in/?p=785

மறுபிரசுரம்/முதற்பிரசுரம்  Jan 27, 2013

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 66