மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். கிறித்தவம் மற்றும் முகமதிய மதங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கொள்ளாத போது இந்துத்துவம் மட்டும் ஏன் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கொள்கிறது என்று சிலர் வினா எழுப்புகிறார்கள். கிறித்தவமும் முகமதியமும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது என்று கூறும் மதங்களா ?
நன்றி
ரா.ஜேம்ஸ்ராஜா
அன்புள்ள ஜேம்ஸ்ராஜா
பொதுவாக மதப்பிரச்சாரங்களை ஏதேனும் வகையில் பொருட்படுத்துபவர்கள் அறிவார்ந்த இயக்கத்துக்கு வெளியே நிற்பவர்கள். மதப்பிரச்சாரம் இரண்டுவகை. ஆதரவுப்பிரச்சாரம், எதிர்ப்புப் பிரச்சாரம். இரண்டுமே ஒரேவகையான அசட்டுத்தனங்கள்தான். தன் மதத்தை ஆதரித்துப்பிரச்சாரம் செய்பவர்கள் அதேமூச்சில் ஏதேனும் ஒருவகையில் இன்னொரு மதத்தைப்பற்றிய வெறுப்புப் பிரச்சாரத்தையும் மேற்கொள்வார்கள்.
இந்துமதத்தைப் பொறுத்தவரை இங்கு பல்வேறு அரசியல்குழுக்களாலும் மிகப்பெரிய அளவிலான வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இப்பிரச்சாரங்கள் வழியாக இந்து மதத்தையோ இந்துதத்துவமரபையோ அறியமுயல்வது மிகவும் பிழையானதாகவே அமையும். அவற்றுடன் உரையாடும்போதே நமது அணுகுமுறை சீரழியத்தொடங்குகிறது. அவற்றை முற்றிலும் பொருட்படுத்தாமல் நேரடியாக அறியமுயல்வதே சரியானது.
ஆனால் நம் சூழலில் அது சாத்தியமல்ல. ஆகவே ஒரு தொடக்கக் கேள்வியாக மட்டுமே இந்தவகையான வெறுப்புப் பிரச்சார -அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துக்களை எடுத்துக்கொண்டு சுயமான தேடலை நோக்கிச் செல்வதே சரியானதாக இருக்கும். அத்தகைய அணுகுமுறை கொண்டவர்களையே நான் அறிவுஜீவிகள் என எடுத்துக்கொள்கிறேன்.
மதம் என்பது எப்போதும் இரண்டு அடுக்கு கொண்ட ஓர் அமைப்புதான். ஒன்று அதன் தத்துவ- ஆன்மீகத் தளம். இன்னொன்று அதன் சமூகத்தளம். பெரும்பாலும் எந்த மதத்திலும் அதன் தத்துவ- ஆன்மீக தளத்தில் மானுட ஏற்றத்தாழ்வு குறித்த செய்திகள், ஆணைகள் நேரடியாக இருக்காது. பிரபஞ்ச இயக்கத்தை, மானுடவாழ்க்கையின் அறம் பொருள் இன்பம் போன்றவற்றை தத்துவார்த்தமாகத் தொகுத்துக்கொள்ளவும் படிமங்கள் மூலம் முன்வைக்கவும் முயல்வதாகவே அவை இருக்கும்.
இரண்டாவது அடுக்கில் எந்த மதமும் ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்கி நிலைநிறுத்தவே முயல்கிறது. ஆகவே அது உருவான காலகட்டத்திலிருந்த சமூகப்போக்குகளை ஒட்டியே அதன் நோக்கு அமையும். எல்லா மதங்களுமே நிலப்பிரபுத்துவ காலகட்டத்தைச் சேர்ந்தவைதான். நிலப்பிரபுத்துவம் [ஃப்யூடலிசம்] என்பதே உறுதியான மேல்-கீழ் அடுக்குமுறையை அமைத்து அதன்மேல் சமூகத்தை உறுதியாக கட்டி நிறுத்தி அதனூடாகச் செயல்படுவதுதான்.
பிறப்பு அடிப்படையிலான மாறாத அதிகார அடுக்கு அமைப்புதான் நிலப்பிரபுத்துவத்தின் ஆதாரமே. ஆகவே நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உருவான எந்தமதமும், எந்த நீதிமுறையும் பிறப்பு அடிப்படையிலும் தொழில் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுகளை வலுவாக நிலைநாட்டும்போக்கையே கொண்டிருக்கும். இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துமதம், பௌத்தமதம், சமணமதம் எவையுமே விதிவிலக்கு அல்ல. காலத்தால் முந்தைய மதங்களில் இது இன்னும் வலுவாக இருக்கும்.
எந்த மதத்தினரானாலும் இந்த ஏற்றத்தாழ்வு அம்மதத்தின் சமூகத்தளத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டினால் உடனே அதன் தத்துவ -ஆன்மீக தளத்தில் அது இல்லையே என்ற பதிலையே சொல்வார்கள். அதெல்லாம் மூலநூலில் இல்லை என்பார்கள். ஆனால் மதத்தை அது என்ன சொல்கிறது என்று மட்டும் புரிந்துகொள்ளக்கூடாது, என்ன செய்திருக்கிறது என்பதைக்கொண்டுதான் புரிந்துகொள்ளவேண்டும்
இந்துமதத்தின் நூல்கள் இருவகை. சுருதிகள், ஸ்மிருதிகள். சுருதிகள் என்பவை மூலநூல்கள். அவை அழியாத ஞானத்தைச் சொல்லக்கூடியவை, காலமாற்றத்திற்கு அப்பாற்பட்டவை என்பார்கள் இந்துமதத்தினர். ஸ்மிருதிகள் சமூக மேலாண்மைக்கு உரியவை, அதாவது சட்டநூல்கள். ஆகவே காலந்தோறும் மாறக்கூடியவை. சுருதிகள் மானுடரிடையே ஏற்றத்தாழ்வைச் சொல்பவை அல்ல. ஸ்மிருதிகளே அவற்றைச் சொல்கின்றன. இதை விவேகானந்தர் முதல் பலர் விரிவாக எழுதியிருக்கிறார்கள். காந்தி நாராயணகுருவை வந்து சந்தித்து மூலநூல்கள் மானுடரிடையே ஏற்றத்தாழ்வை சொல்லவில்லை என்று தெளிவடைந்தார் என்பதை அறிந்திருப்பீர்கள்.
ஆனால் ஸ்மிருதிகள் மனிதரை பலவகையாகப்பிரித்து ஒருவருக்குமேல் ஒருவராக அடுக்கி அவர்களுக்குரிய கடமைகளை வகுத்து அவற்றை கண்டிப்பாக ஆற்றியாகவேண்டும் என்றே வகுக்கின்றன.மனுஸ்மிருதி அவற்றில் கடைசியானது. ஆனால் அவற்றை இறையாணைகளாகக் கருதவேண்டியதில்லை என்று சொல்லப்பட்டிருப்பதனால் அவற்றைக் கடந்துசெல்வதும் இந்துமதத்தால் முடியக்கூடியதாகவே உள்ளது.
இஸ்லாம் அராபிய இனமேன்மையின் அடிப்படையில்தான் இன்றும் செயல்படுகிறது என்பதை அறிய எழுதப்படிக்கத் தெரிந்தாலே போதும். ஒருபோதும் அது மானுடரை நிகராகக் கருதியதில்லை. உருவான நாள் முதல் இன்றுவரை அதற்குள் சமூகப்போரின் குருதி உலர்ந்ததே இல்லை. இன்றுவரை அது அடிமைமுறையை வலியுறுத்துகிறது. போகோ ஹராம், தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகள் அடிமைமுறையை இஸ்லாமின் அடிப்படை வணிகமுறையாகவே சொல்லி வருகின்றன.
கிறிஸ்தவம் யூத மேன்மையைச் சொல்வதாகவே எழுந்தது. பைபிளிலேயே அத்தகைய வரிகள் உண்டு. பின்னாளில் உலகமதமாக அது ஆனபின்னரும்கூட உலகமெங்கும் சென்று பழங்குடிகளை முற்றாக அழித்தொழித்தது. மிஷனரிகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள பழங்குடிகளை ‘ஆன்மா அற்ற’ மக்கள் என்று எண்ணி செய்த அழிவுகள்தான் மானுட வரலாற்றின் மிகப்பெரிய கொடுமைகள். அவற்றை இன்று அந்நாடுகள் முழுக்க ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள்
கிறிஸ்தவப் புனிதர்களான புனித தாமஸ் அக்வினாஸ், மார்ட்டின் லூதர் போன்ற பெரும்பாலானவர்கள் ஏதோ ஒருவகையில் மானுடரின் ஏற்றத்தாழ்வைப்பற்றி மிகத்தீர்க்கமாகப் பேசியிருப்பதையும் அவர்களின் அக்கருத்துக்கள் பலநூறாண்டுக்காலம் நாவிதர், தச்சர்,யூதர் போன்ற பலவகையான மக்களை அடிமைவாழ்க்கைக்குத் தள்ளியதைப்பற்றியும் ஐரோப்பிய வரலாற்றை வாசித்தால் அறியலாம். கத்தோலிக்கத் திருச்சபை பலநூறாண்டுக்காலம் நிலஅடிமைமுறையைப்பேணி நிலைநிறுத்தியது.ஆனால் கிறிஸ்துவின் அடிப்படைச்செய்தி என்பது ஆன்மிகமானது என்பதையும் காணலாம்.
இதெல்லாம் மதங்கள் உருவாகி நிலைபெற்ற நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் இயல்புகள் என்றே கொள்ளவேண்டும். ஆகவே எந்த மதமாக இருந்தாலும் அதை அறிவார்ந்த முறையில் பகுத்து ஆராய்வதே உகந்தது. அதற்குத்தேவை மதங்களை வரலாற்றுரீதியாகப் பார்ப்பது. முழுக்க முழுக்க நம்பிக்கை, பற்று ஆகியவற்றின் அடிப்படையில் அணுகாமலிருக்கும் தெளிவு. அத்தகைய நம்பிக்கைமட்டும் கொண்டவர்களை முழுமையாகப் புறக்கணிப்பதே உகந்தவழி.
மதங்கள் வெறுமே கடவுள் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துபவை அல்ல. சமூக உருவாக்கத்தில் அவற்றுக்குப் பெரும்பங்கு உள்ளது. அவை பல்வேறுவகையான இறைநம்பிக்கைகளை ஒன்றாகத் தொகுக்கின்றன. மையத்தை உருவாக்குகின்றன. அதனடிப்படையில் பல்வேறு மக்களை இணைத்து வலுவான சமூகக்கட்டமைப்பை எழுப்புகின்றன. நாம் வாழும் இச்சமூகம் அவ்வாறுதான் உருவாகிவந்துள்ளது. வெவ்வேறு பண்பாடுகள், வாழ்க்கைமுறைகள் மதங்களின் மூலமே ஒன்றாகத் திரள்கின்றன. ஒன்றை ஒன்று வளர்த்துக் கொள்கின்றன
நாம் இவ்வுலகில் காணும் வளர்ச்சியடைந்த அத்தனைச் சமூகங்களுக்கும் அவ்வளர்ச்சிக்குக் காரணமாக பெரிய மதங்கள் உள்ளதை கண்டறியலாம். அவை சமூகங்களை தொகுத்து நிலைநிறுத்தும் தன்மைகொண்ட மதங்களாக இருக்கும். ஆகவே அவற்றின் மையமாக தத்துவமும் விளிம்பில் சமூகநடைமுறை சார்ந்த நெறிகளும் ஆசாரங்களும் காணப்படும். அந்நெறிகள் பலசமயம் அவை உருவான காலகட்டத்திற்குரியவையாக இருக்கும்.
அவ்வாறு பெருமதங்கள் உருவாகாத நாடுகள் எப்படி இருக்கும் என்தற்கு நாம் நம் நாட்டின் வடகிழக்கை, அல்லது ஆப்ரிக்காவை உதாரணம் காட்டலாம். பழங்குடிகள் ஒருவரோடொருவர் பூசலிட்டு ஒவ்வொரு நாளும் என கொன்றுகொண்டிருப்பார்கள். சமூக உருவாக்கமே நிகழ்ந்திருக்காது. ஆகவே வேளாண்மை, வணிகம் எவையும் வளர்ந்திருக்காது. பஞ்சம் வந்து கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து அழிவார்கள்
மறுபக்கம் வரலாற்றில் மதப்பூசல்களால் மக்கள் செத்து அழிந்திருப்பதைக் காணலாம். இதை எப்போதும் நாத்திகர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் மதப்பூசல் என்பது மேலோட்டமான தோற்றம்தான். மதம் வழியாக வலுவாக தொகுக்கப்பட்டு அரசியல் வல்லமை கொண்ட சமூகங்கள் நிலம் மற்றும் வளங்களுக்காக நிகழ்த்திக்கொள்ளும் போர்கள் அவை என்பதே உண்மை. மனிதனுக்கு முன் வரலாற்றில் இரண்டே தேர்வுகள்தான் இருந்தன. மதத்தால் வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவகாலப் பேரரசுகளின் போர்களா, பழங்குடிப்போர்களா எது தேவை என்பது. பழங்குடிப்போர்கள் சமூகங்களை வளச்சிக்கு அனுமதிப்பதே இல்லை. நிரந்தரமாக தேக்கநிலையில் வைத்துவிடுகின்றன என்பதே நடைமுறை யதார்த்தம்
மதங்களினால் ஆக்கமும் உண்டு, அழிவும் உண்டு. மதங்கள் சென்றகாலகட்டத்தில் சமூகத்தில் இருந்த மேலாதிக்கத்தை உருவாக்கி நிலைநிறுத்தின. மதப்போர்களை உருவாக்கின. இவை இன்றைய நம் நோக்கில் எதிர்மறையானவை. மதங்கள் பண்பாடுகளை தொகுத்தன. ஒன்றோடொன்று உரையாடவைத்தன. மதங்கள் தத்துவத்தை உருவாக்கி நிலைநிறுத்தின. மதங்கள் சமூகத்தை தொகுத்து உள்முரண்பாடுகளை அழித்து வளர்ச்சியை உருவாக்கின. இவை சாதகமான அம்சங்கள்
ஒருநவீன மனிதன் இந்த இருபக்கங்களையும் பார்க்கக்கூடியவனாக இருப்பான். அவ்வகையில் உலகம் முழுக்க மதங்களின் கொடை என்ன என்பதை அறிந்திருப்பான். மதங்களில் இருந்து எவை களையப்படவேண்டும், எவை வளரவேண்டும் என தெளிவுகொண்டிருப்பான்
ஜெ