ஜென்,அசலும் நகலும்

உயர்திரு .ஜெயமோகன் அவர்களுக்கு ,இந்த ஜென் கவிதைகளை பற்றி உங்கள் அபிபிராயம் சொல்ல முடியுமா? .இக் கவிதைகள் நான் எழுதியது .
அன்பும் நன்றியும்
நரன்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்

கிளையை பிடித்து
தொங்காதே.
கிட்டத்தட்ட 127 ஆண்டுகள்
பழையது இந்த மரம் .
ஆனால்
அதன் இலைகள் அப்படி இல்லை

*********
குட்டி தவளைகள்
குட்டி பூச்சியை வுன்க்கிறது.
குட்டியான வாயால்
குட்டியான சப்தங்களை எழுப்புகின்றது -தம்
குட்டியான கால்களால்
குட்டியான வுயரத்தை
குட்டியான நீளத்தை தாவுகின்றன .
பெரிய தவளைகளும் அப்படியே
யாவற்றிலும் பெரிய ….

********

அவன் சிலநேரம்
காற்றில்
அப்படியும்
இப்படியுமாய்
வாளை வீசும்போது
அம்மரத்திலிருந்து
ஓரிரு இலைகள்
உதிர்கின்றன.

நரன்

www.narann.blogspot.com

*

அன்புள்ள நரன்,

மன்னிக்கவும், இந்தக்கடிதம் உங்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்க வாய்ப்பில்லை. இக்கடிதத்தினூடாக நீங்கள் கொஞ்சம் பயணப்பட முடிந்தால் உபயோகமாக இருக்கலாம். இக்கடிதத்தை பொதுவாக எழுதுகிறேன், ஏனென்றால் இவ்வகையான எழுத்துக்கள் இப்போது அதிகமாகவே வெளிவருகின்றன. இவற்றில் உள்ள அடிப்படையான சிக்கல் ஒன்றைச் சுட்டிக்காட்டுவது இந்த தளத்தில் மனஓட்டத்தைச் செலுத்தும் அனைவருக்குமே உதவியாக இருக்கக்கூடுமென தோன்றுகிறது.

ஜென்னை சீனி என்று சொல்லலாம். கரும்பில் இனிப்பு இருக்கிறது. பீட் கிழங்கில் இனிப்பு இருக்கிறது. பனைவெல்லத்தில் இனிப்பு இருக்கிறது. அந்த இனிப்பை அதன் மூலப்பொருட்களில் இருந்து தூய்மைப்படுத்திப் பிரித்தெடுத்து தனியாக வைத்திருப்பதே ஜென். அதன் தூய்மையே அதன் அழகு, அதன் மகத்துவம். அதை அணுகுவதற்கான பிரச்சினையும் அந்த தூய்மையில் இருந்தே வருகிறது.

சீனி சீனாவில் உருவானது, ஆகவேதான் அப்பெயர். ஜென்னும் அங்கேதான் உருவானது. அதன் மூலப்பொருட்கள் இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள தொன்மையான ஆன்மீக வழிகளில் விளைந்து வந்தவை. தியானம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லே சீனமொழியில் சான் என்று சொல்லப்பட்டு ஜப்பானிய மொழியில் ஜென் என்று உச்சரிப்பு கொண்டது. பற்பல நூற்றாண்டுக்காலத்தைய சிந்தனைச்செம்மையாலும் யோகநுண்மையாலும் படிப்படியாக மரபான ஞானவழிகளில் இருந்து ஜென் சுத்திகரித்து எடுக்கப்பட்டது.

இந்தியாவில் தென்னகத்தில் நாமறியும் வரலாற்றின் மிக ஆரம்பநிலையிலேயே யோகாரூடரின் சிலை உள்ளது. அதை நாம் தென்றிசைமுதல்வன் [தட்சிணாமூர்த்தி] என சைவத்துடன் இணைத்திருக்கிறோம். தன்னுள் தான் ஆழ்ந்து தன் மெய்மையையும் தானாக உள்ள பிரபஞ்ச மெய்மையையும் அறிவதே யோகம். அது தொல்தமிழில் ஊழ்கம் எனப்பட்டது. அதைச்செய்பவர் படிவர் என்று சொல்லப்பட்டார்கள்.

தியானம் என்பது வழிமுறை மட்டுமே. வழிமுறையும், குறிக்கோளும், தத்துவமும் இணைந்த ஒட்டுமொத்தம் யோகம் என்று சொல்லப்பட்டது. யோகம் என்றால் இணைதல் என்று பொருள். இந்தியாவின் தொன்மையான ஆறுதரிசனங்களில் ஒன்று யோகம். அதன் மூலநூல் பதஞ்சலி யோகசூத்திரம். அது அதற்கு முன்னர் இருந்த நூல்வரிசைகள் மூலம் உருவான ஞானத்தை செறிவான சூத்திரங்களாகத் தொகுக்கும் நூலாகும்.

யோகம் சாங்கிய தரிசனத்தின் துணைத்தரிசனம். ஆரம்பத்தில் அது பொருள்முதல்வாத தரிசனமாகவே இருந்தது. தூய அறிவியலாகவே வகுக்கப்பட்டது. பின்னர் அது ஆன்மீக தரிசனங்களுடன் இணைந்துகொண்டது. வேதாந்தம் உட்பட அனைத்து ஞானமரபுகளுடனும் பிணைந்து வளர்ந்தது. ஞானத்தை முழுமையாக்கும் வல்லமை யோகத்துக்கே உண்டு என அடையாளம் காணப்பட்டது. இந்து தெய்வங்கள் அனைத்துமே யோகரூபர்களாக உருவம் கொண்டார்கள்.

பௌத்தமும் சமணமும் யோகத்தை உள்வாங்கிக்கொண்டன. யோகாசார மரபுகள் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்து ஒருமாபெரும் மரமாக கிளைவிரித்தன. பௌத்தம் திபேத் வழியாகச் சீனாவுக்குச் சென்றபோது அங்கிருந்த தாவொ மதத்துடன் உறவாடியது. அலகிலாவெளியின் அனைத்து அர்த்தங்களும் செறிந்த வெறுமையை வழிபட்ட மதம் தாவோ. தாவோ உருவாக்கிய தியான வழிகளும் பௌத்த யோகாசாரமும் கொண்ட நூற்றாண்டுக்கால உறவின் மூலம் பிறந்தது என ஜென்னைச் சொல்லலாம்.

ஞானமார்க்கங்கள் அனைத்துமே இருபட்டைகள் கொண்டவை. ஒன்று, கருமம் அல்லதுசெயல்நோக்கு. இன்னொன்று, ஞானம் அல்லது அறிவுநோக்கு. குறியீடுகளை வழிபடுவதும் குறியீட்டுச்செயல்பாடுகளில் ஈடுபடுவதும்தான் கருமம் எனப்படுகிறது. வேள்விகள், பூசைகள், பண்டிகைகள் ,விழாக்கள் போன்றவை அதைச் சார்ந்தவை. உலகமெங்கும் உள்ள மதங்களின் வழியாக மிகமிகப் பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கும் வழி இதுவே. இதற்கு மாறாக அறிதல்களை தொகுத்து, மேலும்மேலும் நுண்மையாக்கி, மெய்மையைச் சென்று தொடுதல் ஞானம். அது பலவகைகளில் உலக மதங்களில் உண்டு.

இவ்விரு வழிகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவையும்கூட. குறியீடுகள் என்பவை அடையாளங்களாக மாற்றப்பட்ட ஞானமே. ஆகவே அவற்றை வழிபடுகிறவன் ஞானத்தை நுண்வடிவில் அடைகிறான். மறுபக்கம் எந்த ஞானமார்க்கியும் குறியீடுகள் இல்லாமல் அந்தரத்தில் நின்று சிந்திக்க முடியாது. ஆகவே அவன் கருமநோக்கை கொஞ்சம் தானும் கடைப்பிடிக்கிறான்

இவ்விரு வழிகளுக்கும் பொதுவானது யோகம். வழிபாடுகள் மற்றும் பூஜைகளில் குறியீடுகளை ஆழ்மனத்துக்குக் கொண்டு செல்ல தியானம் வழியாக ஆகிறது. ஞானமார்க்கங்களில் தர்க்கம் உச்சத்தை அடைந்து நிலைத்து நிற்கையில் மேலே செல்ல தியானம் வழி திறக்கிறது.

பொதுவாக கரும மார்க்கத்தை தங்கள் அறிவுத்திறனால் போதாததாக உணர்பவர்கள் ஞானமார்க்கத்தை நோக்கிச் செல்கிறார்கள். ஞானமார்க்கத்தில் நிறைவின்மையை அறிபவர்கள் மீண்டும் கரும மார்க்கம் நோக்கி வருகிறார்கள். ஆனால் ஜென் கருமம்,ஞானம் என்ற இந்த இரண்டையுமே பின்னுக்குத்தள்ளி அதிதூய யோகத்தை மட்டுமே தன்வழியாகக் கொண்ட மார்க்கமாகும்.

அனுபூதிமார்க்கம் என்ற பேரில் ஜென் பலநூற்றாண்டுகளாகவே இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால் அது அனைவருக்கும் உரியதாக முன்வைக்கப்படவில்லை. அது ஓர் அமைப்பாக ஆகவில்லை. அது குருவிலிருந்து சீடனுக்கு அந்தரங்கமாக பகிரப்பட்ட ஒன்றாகவே எப்போதும் இருந்தது.

சீனாவில் இருந்து பலநாடுகள் வழியாக ஜப்பானுக்குச் சென்ற ஜென் மெல்ல மெல்ல ஓர் அமைப்பாக மாறியது வரலாறு. அமைப்பாக அது ஆகும்போது பலவகையான மாற்றுத்தரப்புகள் உருவாகும். பலகிளைகள் விரியும். கீழைநாடுகளில் பல ஜென் மரபுகள் உள்ளன. ஜப்பானில் ஸோட்டோ, ரின்ஸாய், ஒபாகு என மூன்று பெரும் ஜென் மரபுகள் இன்று உள்ளன. ஜென்னின் வரலாறு விரிவாகவே இன்று எழுதப்பட்டுள்ளது

ஜென்னை புரிந்துகொள்வதற்கான சில அடிப்படைகள் உள்ளன. அதில் முதல்விஷயம் ஜென் மரபான கர்மம் ஞானம் இரண்டையும் துறந்து விட்டிருக்கிறது என்பதே. கர்மம் எனப்படும் வழிபாடுகளும் சடங்குகளும் வழிவழியாக வந்த குறியீடுகளின் மீது உருவாக்கப்பட்டவை. ஆகவே ஜென் அத்தகைய குறியீடுகளை முழுமையாகவே நிராகரிக்கிறது. மதம் சார்ந்த, பாரம்பரியம் சார்ந்த, ஏன் நேற்று வரை இருந்த எந்த அடையாளமும் எந்தக்குறியீடும் ஜென்னுக்குரியதல்ல.

இருவகைகளில் அந்த நிராகரிப்பை ஜென் செய்கிறது. ஒன்று, அது அன்றாட நிகழ்வாக உள்ள அனுபவத்தில் இருந்தே குறியீடுகளை பெறுகிறது. வண்ணத்துப்பூச்சி, புல்நுனி மட்டுமல்ல டீக்கோப்பை வரை. அந்தக்குறியீடுகளை புனிதப்படுத்துவதில்லை. அவை எதைச்சுட்டுகின்றனவோ அதைச் சுட்டிவிட்டு அப்படியே உதிர்ந்துபோகவேண்டுமென எதிர்பார்க்கிறது. இரண்டாவதாக, ஜென் மரபான குறியீடுகளை கேலிசெய்கிறது அல்லது தலைகீழாக்குகிறது அல்லது அர்த்தமற்றதாக்குகிறது. ’சாலையில் புத்தரைச் சந்தித்தால் கொன்றுவிடு’ என்ற வரி காட்டுவது அதையே.

அதேபோலத்தான் மரபான ஞானத்தின் வழிகளை ஜென் துறந்துவிடுகிறது. தர்க்கபூர்வமாக அறிதல்களை அடுக்கி அர்த்தங்களை உண்டுபண்ணுவதை அது நிராகரிக்கிறது. ஆனால் காலம் என்ற தொடர்ச்சி இருக்கும் வரை இது சாத்தியமே இல்லை. நேற்றைய அறிதல் இன்றைய அறிதலுடன் சேரத்தானே வேண்டும்? அதற்கு ஜென் கண்டறிந்த வழி என்பது அந்தந்தக் கணங்களுடன் அறிதலை அப்படியே நிறுத்திக்கொள்வதே. அதில் ‘ஆகவே’ என்ற சொல்லே இல்லை. ஓர் அறிவு ஒரு மின்னலாக அப்போதே நிகழ்ந்து அங்கேயே நின்றுவிடவேண்டும்.

ஜென் மரபில் அறிவை உறையச்செய்தல் ஒரு வழிமுறையாகவே இருந்து வந்திருக்கிறது. தர்க்கத்த்தால் எட்டமுடியாத புதிர்களை அல்லது முரண்களை நோக்கி சித்தத்தைக் கொண்டுசெல்லுதல். ‘ஒருகை ஓசை’ என்ற ஜென் சொல்லாட்சி இதற்கான உதாரணம். நாம் அதன்மீது நம் தர்க்கத்தை போடப்போட அது அர்த்தமற்றதாக ஆகும். ஓரு சம்பிரதாயமான அறிதல் மீது ஓர் உலுக்கலை நிகழ்த்துவதும் ஜென் வழியே. ஒரு காட்சியைக் கண்டுகொண்டிருக்கும் சீடனை குரு தடியால் அடிக்க சட்டென்று புதிய சாத்தியம் ஒன்று திறந்துகொண்டு அவன் ஞானமடையும் கதைகளை ஜென்னில் பார்க்கலாம்.

ஞானம் என்பது மொழியுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதனால் ஜென் கூடுமானவரை மொழியை தவிர்க்கிறது. மௌனமான உணர்த்துதலையே தன் வழியாகக் கொள்கிறது. மொழிக்குப்பதிலாக அக்கணங்களில் நிகழும் குறியீடுகளைக் கொண்டு அது தொடர்புறுத்த முயல்கிறது. ஜென் ஆசிரியர்கள் பலவகையான பொருட்களையும் சைகைகளையும் கொண்டு சீடர்களிடம் பேசுவதைக் காணலாம். புத்தர் தன்னுடைய தர்மப்பேருரையில் ஒரு தாமரை மலரைக்காட்டி குறியீட்டுரீதியாக மகாகாசியபனுக்கு ஞானமளித்தார் என்றும் அதுவே ஜென்னின் தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு சடங்குகளை உதறி, அறிவுத்தர்க்கத்தை உதறி , தூய உள்ளுணர்வால் மட்டுமே மெய்மையைச் சென்று தீண்ட முயன்ற ஒரு மரபுதான் ஜென். அது அனைவருக்கும் உரியதல்ல. குறியீடுகளையும், அறிவித்தர்க்கத்தையும் முழுமையாக உதறக்கூடியவர்களுக்கு மட்டுமே உரியது. சாமானியர்களுக்கு அது சாத்தியமே அல்ல. எந்நிலையிலும் நம் மனம் மரபான குறியீடுகளுக்குள் தான் சுழல்கிறது. நம் அறிவு தர்க்கத்திலேயே உழல்கிறது

ஆகவெ இந்தியாவில் அது அந்தரங்கமான குருமரபாக மட்டும் இருக்கிறது. ஒரு மாணவன் கடுமையான ஞானப்பயணத்தின் மூலம் குறியீடுகளையும் தர்க்கத்தையும் கடந்து தன்னை தூய்மைப்படுத்திக்கொண்டபின் குருவிடமிருந்து பெறும் அகஞானம் அது. அவர் சொல்லாமல் இவன் கேட்காமல் கற்றுக்கொள்வது. அவர் கொடுக்காமல் இவன் எடுக்காமல் பெற்றுக்கொள்ளப்படுவது.

ஜென் ஜப்பானிலும் நெடுங்காலம் குருவுக்கும் சீடனுக்கும் இடையெயான அந்தரங்கமான ஒரு தளத்தில் நிகழ்வதாகவே இருந்தது. பின்னர் அதை அமைப்புகளாக ஆக்கினார்கள். ஜப்பானில் மாபெரும் மடாலயங்கள் உருவாகி வந்தபோது கடுமையான பயிற்சிமூலம் உரியவர்களை தேர்வுசெய்து நெடுங்காலம் பயிற்சி கொடுத்து அவர்களை ஜென்னை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என நம்பினார்கள்.

பதிநான்காம் நூற்றாண்டுக்குப் பின்னர் அந்த மடாலயங்களில் இருந்தே ஜென் உலக கவனத்துக்கு வந்தது. ஜென் உருவாக்கிய கவிதைமுறையான ஹைக்கூ உலகப்புகழ் பெற்றது. ஜென் கதைகள் உலகமெங்கும் பரவின. இன்று உலக அளவில் மிக அதிகமாக அறியப்பட்ட கீழை ஞான மார்க்கம் என்பது ஜென்னே. நாம் ஐரோப்பிய அறிஞர்கள் வழியாக ஆங்கில ஊடகத்தில் ஜென்னை அறிந்துகொண்டிருக்கிறோம்.

ஜென்னின் அடிப்படைகளை பொதுவாக மேலைநாட்டினரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஓர் இந்தியர் எளிதாக புரிந்துகொள்ள முடியும், ஆனால் அதற்கு அவருக்கு தன் மரபில் ஓரளவேனும் ஆர்வமும் பயிற்சியும் இருக்கவேண்டும். இங்குள்ள யோகமுறையை அறியாமல் ஆங்கிலம் வழியாக ஜென்னை அறிகையில் எளிய மனச்சித்திரங்களுக்குள் செல்ல நேர்கிறது. அதன் விளைவுகளை நாம் நம் இலக்கியச் சூழலில் கண்டுகொண்டிருக்கிறோம்.

சீனி குடலுக்குரிய இயல்பான உணவல்ல. கரும்பும் பனைவெல்லமும் போன்றதல்ல அது. அது அசாதாரணமானது. செயற்கையானதும்கூட. அது ஒரு தூய ரசாயனம். அதை நாம் நேரிடையாக உண்ணமுடிவதில்லை. மீண்டும் பிறவற்றுடன் கலந்து உணவாக ஆக்கித்தான் உண்ணமுடிகிறது. ஜென் பல படிகளில் ஏறியவர்களுக்குரிய ஒரு வழி. பிறர் அதை அறிந்தாலும் மீண்டும் கருமமாகவும் ஞானமாகவும் ஆக்கித்தான் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

ஜென்னின் எளிமையே அதில் உள்ள மிகப்பெரிய இக்கட்டு. ஒரு ஜென் கவிதையை அல்லது உதாரண கதையை வாசிக்கும் எவருக்கும் அதைப்போல தன்னாலும் எளிதில் உருவாக்கிவிட முடியும் என்ற எண்ணம் ஏற்படும். ஏனென்றால் ஜென் குறியீட்டு ஆழத்தையும் அறிவார்ந்த நுட்பத்தையும் திட்டமிட்டே விலக்கிவிடுகிறது. எஞ்சியிருப்பது வாழ்க்கையின் ஒரு கணம். அக்கணத்தில் நிகழும் அனுபவம் மீதான ஒரு திறப்பு. அது எப்போதும் குழந்தைத்தனமான ஒரு வியப்பு மட்டுமே.

வாழ்க்கையின் எந்த ஒரு கணத்தையும் அப்படி நிறுத்திப்பார்க்க முடியும். அவ்வாறு பார்த்தால் எல்லா கணமுமே பேரழகும் பெரும்பொருளும் நிறைந்தவை என்பது எவருக்கும் தெரியும். ஜென் அளிக்கும் ஞானமே அதுதான். ஒவ்வொருவருடைய ஒவ்வொரு கணமும் ஜென்கணம் என்றே ஜென் சொல்கிறது. அக்கவிதைகள் காட்டுவது அதையே.

என் குழந்தைகள் வளர்ந்த போது கவனித்தேன், அவை ஒவ்வொரு கணமும் ஜென்னில் இருக்கின்றன. அவை சொல்லும் ஒவ்வொன்றும் ஜென். ‘சிலேட்டை அழுத்திவச்சு எழுதத்தானே சின்னப்புள்ளைகளுக்கு தொப்புள் வச்சிருக்கு’ என்றாள் சைதன்யா. ‘இந்த மலை ஏன் அங்க வச்சிருக்கு தெரியுமா? இங்கதானே பாப்பு ஒக்கார எடமிருக்கு’ என்றாள். கொஞ்சம் கண் திறந்தால் உலகமே ஜென் பிரவாகமாக ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஜென் நமக்களிக்கும் மனவிரிவு என்பது அவ்வப்போது அப்படி பிரபஞ்ச அற்புதத்தை தெருவிலும் வீட்டிலும் கழிப்பறையிலும் எல்லாம் காணச்செய்வதையே.

எளிமையாக வாசிக்கும்போது நமக்கு ஜென்னில் இருந்து கிடைப்பது அது கணங்களை காலமில்லாமல் ஆக்கி நமக்கு அளிப்பதன் ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. அந்த தொழில்நுட்பத்தை மிக எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். நாமும் எழுதிக்குவித்தபடியே இருக்கலாம். ஆங்கிலத்தில் பலர் அப்படி நிறைய ஜென்கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். தமிழ்ப்புதுக்கவிதையின் ஆரம்ப நாட்களில் ஆனந்த், காளி-தாஸ்,கனகதாரா,சமயவேல் போன்ற பலர் அவ்வாறு நிறைய எழுதியிருக்கிறார்கள். கவிதைகளாக அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஜென் படைப்புகளை உருவாக்க நாம் ஒரு ஜென் ஞானத்தேடியாக ஆகவேண்டும். குறியீடுகளையும் தர்க்கத்தையும் முற்றாக ஒழித்து அதிதூய பிரக்ஞையுடன் இயற்கை முன் அமரவேண்டும். காலமில்லாத கணங்களின் முடிவிலா வெளியில் இருந்து பிரபஞ்சத்தை அறிய வேண்டும். அந்த அனுபூதி நிலைக்கான சான்றுகளாக அக்கவிதைகள் அமையவேண்டும். சுருக்கமாக இதுதான், ஜென் கவிதையை ஜென்னில் அமர்ந்தவரே எழுதமுடியும். நாம் அதன் பார்வையாளகள் மட்டுமே.

ஏன் நம்மால் எழுதமுடியாதென்றால், நாம் ஜென்னை உடனடியாக நம்முடைய குறியீட்டு உலகுக்குள் கொண்டு வந்துவிடுவோம் என்பதனால்தான். அதை தர்க்கப்படுத்தாமல் நம்மால் இருக்கமுடியாது என்பதனால்தான். தமிழ்க்கவிதையையே பாருங்கள் எத்தனை வண்ணத்துப்பூச்சிகள், எத்தனை பெயரற்ற பறவைகள். எல்லாம் ஜென்னில் இருந்து வந்தவை. இப்போது அவை அங்கீகரிக்கப்பட்ட புதிய மரபுக்குறியீடுகள்.

பலசமயம் நாம் இன்னும் மோசமான ஒரு வீழ்ச்சி நோக்கிச் செல்கிறோம். குறியீடுகளில், தர்க்கங்களில், காலத்தில் மூழ்கிய நம்முடைய அகத்தைக்கொண்டு நாம் ஜென்னை ஜோடனை செய்ய ஆரம்பிக்கிறோம். அடையாளங்களற்ற, தர்க்கமற்ற, காலமற்ற பிரக்ஞை வெளியைப்பற்றி போலியாக படிமங்களை கட்ட ஆரம்பிக்கிறோம். புதுக்கவிதையில் ஆனந்த்,சமயவேல் முதலியோர் ஆரம்பகாலத்தில் செய்தது அதையே. எப்போது நாம் படைப்புலகில் பாவனை செய்ய ஆரம்பிக்கிறோமோ அப்போதே உண்மையைத் தீண்டும் ஆற்றலை இழக்க ஆரம்பிக்கிறோம். மேலே சொன்ன எவருமே தங்கள் சொந்தக் கவிதையைக் கண்டடையவில்லை. தமிழ்க்கவிதையின் பரப்பில் அவர்களுக்கு இடமும் இல்லை.

நாம் எங்கே இருக்கிறோமோ அங்கே இருந்துகொண்டு நம் கவிதையை அடைய முயல்வோம். நம் அகம் முழுக்க குறியீடுகள் கொந்தளிக்கின்றன என்றால் அது நம் கவிதை ஆகட்டும். நமக்குள் தர்க்கம் வலைபின்னுகிறதென்றால் அது நம் கவிதையாகட்டும். காலம் நம் படுக்கைக்கு அடியில் பாம்பாகச் சுருள்கிறதென்றால் அதுவே நம் கவிதையாக ஆகட்டும்.

எது நம் கவிதையோ அது நம் அகத்தில் இருந்து ஊறி நம் பல்லில் பீரிடும் விஷமாக இருக்கவேண்டும். நம் உடல் கீறி வெளிவரும் குழதை போல் இருக்கவேண்டும்.அந்தரங்க சுத்தியே கவிதையின் முதல் அடையாளம். ஆகவே குருதிவாசனையே அதற்கு இயல்பானது. நம் கவிதை நாமாகவே இருக்கவேண்டும். காலத்துக்கு செவிகொடுத்து நாம் எழுந்து செல்லும்போது நம் இடத்தில் ‘இது நான்’ என நம்பி விட்டுச்செல்லும் நான்கு வரி போதும், அதுவே நமது கவிதை

ஜெ

முந்தைய கட்டுரைதுளை
அடுத்த கட்டுரைஆவுடையக்கா