க.நா.சு- வாசகன், விமர்சகன்,எழுத்தாளன்

க.நா.சுப்ரமணியம்

நவீன இலக்கியம் தொடர்பான தமிழ்ச்சிந்தனைகளில் க.நா.சு ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி. ஏற்கனவே வ.வே.சு அய்யர், ரா.ஸ்ரீ .தேசிகன், ஆ.முத்துசிவன், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் ஆகியோர் உருவாக்கிய இலக்கிய அழகியல் ஆய்வுமுறையையே க.நா.சு.முன்னெடுத்தார். ஆனால் அவர் அதை தொடர்ச்சியாகப் பேசி விவாதித்து படிப்படியாக வளர்த்து ஒரு கருத்துப்பள்ளியாக ஆக்கினார்.

அதன்பின்னர் வந்த அழகியல் விமர்சகர்கள் பெரும்பாலும் அனைவருமே அப்பள்ளியைச் சேர்ந்தவர்கள்தான். வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன், க.மோகனரங்கன் என மூன்று தலைமுறைக்காலமாக அந்தப்பள்ளி மையப்போக்காகவே இன்றும் தமிழிலக்கியச் சூழலில் நீடிக்கிறது.

இப்பள்ளியைச்சேர்ந்த இலக்கியவிமர்சகர்களுக்கு அவர்களுக்கே உரிய சொந்தக்கருத்துக்கள் உண்டு, தங்களுக்கே உரிய இலக்கிய ஆய்வுமுறைகள் உண்டு. இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான விவாதங்களில் அவர்கள் முரண்படுவதும் சாதாரணம். ஆனால் அவர்கள் பொதுவாக ஒன்றுபடும் சில அடிப்படைக்கருத்துக்கள் உள்ளன. அவற்றை க.நா.சுவே தமிழில் நிலைநாட்டினார். ஆகவேதான் ஒட்டுமொத்தமாக இவர்களை க.நா.சு.பள்ளி என்கிறோம். பிற்பாடு க.நா.சுவின் எதிரிபோல செயல்பட்டாரென்றாலும் சி.சு.செல்லப்பாவும் க.நா.சுவின் பள்ளியைச் சேர்ந்தவரே.

இலக்கியத்தின் அடிப்படைகள் இன்று பரவலாக அறியப்பட்டுவிட்டன. தரமான எழுத்துக்களுக்கான வாசகர்கள் இன்று பலமடங்குபெருகிவிட்டனர். கேளிக்கைக் கலைகள் பூதாகரமாக வளர்ந்தமையால் வணிக எழுத்து மிகமிகப் பலவீனப்பட்டு ஒரு சிறிய ஓட்டம் மட்டுமே என்ற நிலையை அடைந்திருக்கிறது தமிழில். இருந்தாலும்கூட பிரபலமான ஓர் எழுத்தாளர் மேல் எளிமையான விமர்சனத்தை முன்வைக்கையில்கூட எதிர்கொள்ள நேரும் மனக்கசப்புகளைப் பார்க்கையில் க.நா.சு நடத்திய கருத்துப்போரின் உக்கிரம் பிரமிப்பூட்டுகிறது

க.நா.சு விமர்சகராக மலர்ந்த காலகட்டம் ’கல்கியுகம்’ எனலாம். கல்கியின் மேலோட்டமான நகைச்சுவையும், மேலைநாட்டு கற்பனாவாத நாவல்களையும் தேசிய பெருமிதங்களையும் கலந்து உருவாக்க்கப்பட்ட அவரது நாவல்களும் தமிழில் காவியச்சுவையாகவும் காவியங்களாகவும் புகழப்பட்ட காலம். அவரை முன்னுதாரணங்களாக கொண்டு வந்த நா.பார்த்தசாரதி, அகிலன், ஜெகசிற்பியன் போன்றவர்கள் மக்களிடையே உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்துடன் திகழ்ந்தார்கள். அவர்களின் எழுத்தை ஒருபக்கம் மரபுவாதிகள் கொண்டாடினார்கள். மறுபக்கம் பல்கலைகள் ஆய்வுசெய்தன. விருதுகளும் அங்கீகாரங்களும் முழுக்க அவர்களுக்கே அளிக்கப்பட்டன. அவர்களின் எழுத்தை ஒட்டியே இலக்கிய அளவுகோல்கள் உருவாக்கப்பட்டன.

மறுபக்கம் நவீனத்தமிழிலக்கியத்தின் சிகரங்களான புதுமைப்பித்தன் போன்றவர்கள் முற்றாகவே மறக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை வாசிக்க சிலநூறுபேர் கூட இருக்கவில்லை என்ற நிலை. அவர்களின் மரபுவழி வந்தவர்கள் எழுதுவதற்கு ஊடகங்கள் இல்லை. அவர்களின் நூல்கள் அச்சேறுவதில்லை. அவர்களின் எழுத்துமுறையை முழுமையாக நிராகரிக்கும் அழகியல்நோக்கே அன்று நிலவியது. உலக இலக்கியங்களைப்பற்றிய அறிமுகமே தமிழின் பொதுச்சூழலில் இல்லை. முந்தைய காலங்களில் டி.எஸ்.சொக்கலிங்கம்,க.சந்தானம் போன்றவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட உலகப்பேரிலக்கியங்களும் த.நா.குமாரசாமி , த.நா,சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர்.ஷண்முகசுந்தரம் போன்றவர்களால் செய்யப்பட்ட இந்தியப்பேரிலக்கியங்கலும் கவனிப்பாரற்று மறைந்தன. மொத்த தமிழிலக்கியச் சூழலும் மேலோட்டமான கேளிக்கை வாசகர்கள் மற்றும் அவர்களால் போற்றப்பட்ட கேளிக்கை எழுத்தாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்த இருண்ட காலகட்டம் என்று அதைச் சொல்லலாம்.

க.நா.சு தன்னை இலக்கிய விமர்சகர் என்று சொல்லிக்கொண்டவரல்ல. அவர் நாவலாசிரியர். ’ஒருநாள்’, ’பொய்த்தேவு’ ஆகிய இருநாவல்களும் தமிழிலக்கியத்தின் சாதனைகளே. இலக்கிய விமர்சனத்தின் முறைமைகளில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால் அன்று ஏறி ஏறி வந்த மேலோட்டமான கூச்சல்களை தாங்க முடியாமல் அவர் இலக்கிய விமர்சனக்குறிப்புகளை எழுத முன்வந்தார். கல்கி குறித்தும் பின்னர் அகிலன் குறித்தும் அவர் எழுதிய விமர்சனங்கள் அவருக்கு கடுமையான வசைகளையும் ஏளனங்களையும் பெற்றுத்தந்தன. அவற்றுக்கெல்லாம் அவர் பொறுமையாக நீண்ட விளக்கங்களை அளித்தார். மீண்டும் மீண்டும் ஒரே கேள்விகளே அவரிடம் கேட்கப்பட்டன. அவற்றுக்கு அவர் மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்தார். இரண்டுதலைமுறைக்காலம் அவர் தன் தரப்பை சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.

க.நா.சு சொன்னவற்றை அவரால் எளிதில் நிறுவ முடியவில்லை என்பதே உண்மை. கல்கி ஒரு கேளிக்கை எழுத்தாளர்தான் என்பதையும் நா.பார்த்தசாரதியின் இலட்சியவாதம் என்பது கேளிக்கை எழுத்தின் ஒரு பாவனை மட்டுமே என்பதையும் அறுபதுகளில் ஒருவர் சொல்லி நிறுவுவது சாதாரணமா என்ன? ஆனால் அவர் சலிக்கவில்லை. இருதளங்களில் சோர்வேயில்லாமல் போரிட்டார். தன் வாழ்க்கையையே அதற்காக அவர் அர்ப்பணித்தார்

முதலாவதாக , கநாசு சிற்றிதழ் என்ற கருதுகோளை அவர் உருவாக்கினார். அவருக்கு முன்னால் இருந்த இலக்கிய இதழ்களான மணிக்கொடி போன்றவை உண்மையில் சிற்றிதழ்கள் அல்ல. மணிக்கொடி இன்றைய உயிர்மை, காலச்சுவடு இதழ்களை விட அதிகமாக விற்றது. ஐம்பதுகளுக்குப் பின்பு அத்தகைய தரமான இதழ்கள் சாத்தியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டிருந்தது. க.நா.சு தரமான வாசகர்கள் மட்டுமே வாசிக்கக்கூடிய தனிச்சுற்று இதழ்களே இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல போதுமானவை என்ற கருத்தை முன்வைத்தார். அவரே சூறாவளி போன்ற பிரபல இதழை நடத்தி கைப்பணத்தை இழந்தவர்தான். இலக்கியவட்டம் தமிழில் சிற்றிதழ் பற்றிய பிரக்ஞையுடன் தொடங்கப்பட்ட முதல் இதழ். வெற்றிகரமான முதல் சிற்றிதழ் எழுத்து.

சிற்றிதழ்கள் சம்பந்தமாக க.நா.சுவின் இரு கோட்பாடுகள் முக்கியமானவை. ஒன்று, அது ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படக்கூடாது. அப்படி அச்சிடப்பட்டால் அதற்கு அமைப்பு தேவையாக ஆகும். பணம் தேவைப்படும். அப்போது சமரசமும் தேவைப்படும். விளைவாக நோக்கம் தோற்கடிக்கப்படும். இரண்டாவதாக சிற்றிதழ்கள் அதிகபட்சம் ஐந்து வருடங்களுக்கு மேல் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் அது ஒரு சம்பிரதாயமாக மாறிவிடும். அதில் படைப்பூக்கம் இருக்காது.

க.நா.சு சந்திரோதயம், சூறாவளி போன்று பல பேரிதழ்களையும் இடைநிலை இதழ்களையும் பின்னர் இலக்கியவட்டம் என்னும் சிற்றிதழையும் நடத்தினார். அவற்றில் தொடர்ச்சியாக இலக்கிய விமர்சனங்களையும் இலக்கிய ஆக்கங்களையும் வெளியிட்டு ஒரு மாற்று இயக்கத்தை அறுபடாமல் முன்னெடுத்தார். அச்சிற்றிதழ்கள் பலசமயம் 300 பிரதிகளே அச்சிடப்பட்டன. ஆனால் நாம் இன்று காணும் நவீன இலக்கியம் என்ற அமைப்பே அந்த முந்நூறு பிரதிகள் வழியாக உருவாகி வந்த ஒன்றுதான்.

இரண்டாவதாக, தான் சொல்லிவந்த கருத்துக்களை நிறுவும்பொருட்டு க.நா.சு மொழியாக்கங்களைச் செய்தார். அவரது காலகட்டத்தில் ருஷ்ய இலக்கியங்கள் இடதுசாரிகளால் மொழியாக்கம் செய்யப்பட்டன. அமெரிக்க இலக்கியங்கள் ராக்பெல்லர் அறக்கொடை சார்பில் பெர்ல் பதிப்பகத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டன. க.நா.சு அவற்றை கவனப்படுத்தியதோடு கவனிக்கப்படாமலிருந்த ஐரோப்பிய இலக்கியங்களை மொழியாக்கம் செய்தார்.

க.நா.சு ஐரோப்பிய இலக்கியங்களை மொழியாக்கம் செய்ய ஒரு காரணம் உண்டு. அவர் இங்கே உருவாகவேண்டுமென எண்ணிய இலக்கியம் ‘மண்ணின்’ இலக்கியம். அதாவது ஒரு வட்டாரத்தின் அல்லது ஒரு சிறுமக்கள்க்குழுவின் மொழியையும் பண்பாட்டையும் மனநிலைகளையும் நுட்பமாகவும் நேர்மையாகவும் முன்வைக்கும் இலக்கியம். அவ்வகை இலக்கியங்கள் ஐரோப்பிய மொழிகளிலேயே அதிகம் என அவர் நினைத்தார். க.நா.சுவின் மொழிபெயர்ப்புகளே தங்களுக்கு தூண்டுதலாக இருந்தன என பின்னர் வந்த பல எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வட்டாரம் சார்ந்த , அடிமட்ட மக்கள் சார்ந்த எழுத்துக்களை க.நா.சு முழுமூச்சாக ஆதரித்தார். அன்று வணிகரீதியாக எழுதப்பட்ட எழுத்தில் எந்தவகையான தனிப்பண்பாட்டு அம்சமும் இருக்காது – இருந்தால் அது நகர்ப்புற பிராமணப் பண்பாட்டு அம்சமாக மட்டுமே இருக்கும். அந்த எழுத்துக்களை நிராகரித்து க.நா.சு கவனப்படுத்திய எழுத்துக்களே இன்று தமிழின் சாதனைகளாக கருதப்படுகின்றன. அவற்றின் வழிவந்த யதார்த்தவாத எழுத்திலேயே இன்றும் தமிழில் சாதனைகள் நிகழ்கின்றன. ஆர்.ஷண்முகசுந்தரம், நீல.பத்மநாபன் முதல் பூமணி வரை க.நா.சு கவனப்படுத்திய எழுத்தாளர்களின் வரிசை பெரிது. இன்று சு.வேணுகோபால், கண்மணிகுணசேகரன், சோ.தருமன், இமையம், ஜோ.டி.குரூஸ் என அவ்வரிசையிலேயே புதிய கலைஞர்கள் உருவாகி வருகிறார்கள்.

க.நா.சு அவரது காலகட்டத்தில் வணிக எழுத்தாளர்களாலும் அவர்களின் வாசகர்களாலும் மிக மோசமாக வசைபாடப்பட்டார். அவர் சிபாரிசு செய்த சிறந்த நாவல்களின் பட்டியலில் எப்போதும் தன் இருநாவல்களையும் அவர் சேர்ப்பதுண்டு. ’பொய்த்தேவு’ ’ஒருநாள்’ என்ற இரு நாவல்களையும் சொல்லாமல் எந்த விமர்சகரும் தமிழ்நாவல் பட்டியலைச் சொல்லிவிட முடியாது. க.நா.சு தன்னடக்கம் காரணமாக அவற்றை தவிர்த்திருக்க வேண்டும் என்றார்கள் சிலர். ஆனால் அவர் ஒரு இலக்கிய மதிப்பீட்டை கறாராக முன்வைத்தார், ஆகவே தன் நாவல்களை தவிர்க்கவில்லை.

அதைச்சுட்டிக்காட்டி அவர் கல்கிக்கு எதிராக தன் நாவல்களை முன்வைத்து சுயப்பிரச்சாரம்செய்யவே அந்த விமர்சனங்களை எழுதுகிறார் என்று கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் பலநூறு கட்டுரைகள் எழுதப்பட்டன. அத்துடன் அவர் தன் விமர்சனங்களை எழுத பல்வேறு இடங்களில் இருந்து பணம் வாங்குகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அவர் சி.ஐ.ஏ ஒற்றர் என்று கைலாசபதி போன்ற இடதுசாரிகள் எழுதினார்கள்.

க.நாசு.எழுத்தை நம்பி வாழ்ந்தார். ஆனால் முதல் இருபதாண்டுகள் அவர் அவரது அப்பா சம்பாதித்த சொத்துக்களை விற்றுத்தான் வாழ்ந்திருக்கிறார். அதன்பின்னர் அவரது போராட்டங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட ஆங்கில நாளிதழாசிரியர்கள் அவரது ஆங்கிலக்கட்டுரைகளை வெளீயிட்டு அளித்த சன்மானத்தால் வாழ்ந்தார். எம்.கோவிந்தன் போன்ற மலையாளச் சிந்தனையாளர்களும் அவருக்கு உதவியிருக்கிறார்கள். க.நா.சுவுக்கு உணவு தவிர செலவே கிடையாது. அதுவும் இருவேளை எளிமையான சிற்றுண்டி மட்டுமே அவர் விரும்பியது. அவர் தாக்குப்பிடித்தமைக்குக் காரணம் அதுவே.

இந்தக்காலகட்டத்தில் க.நாசுவின் விமர்சனங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான எதிர்வினையே நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையிலும் இருக்கிறது. பிரபலமான எழுத்தாளர்கள் ‘நாங்கள் லட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறோம். எங்களுக்கு இந்த சிறு கும்பலின் அங்கீகாரம் ஒரு பொருட்டே அல்ல’ என்று சொன்னார்கள். ‘கோடிக்கணக்கானவர்களால் ஆராதிக்கப்படும் இவர்களை விமர்சிக்க நீ யார்?’ என்று கேட்டார்கள்.

இன்னொருபக்கம் ‘இலக்கியம் என்பதே வாசகனுக்காகத்தான். அவன்தான் இலக்கியத்தின் தரத்தையும் முதன்மையையும் தீர்மானிக்கவேண்டும்’ என்று சிலர் வாதிட்டார்கள். ‘நல்ல இலக்கியமென்பது வாசகனுடனான உரையாடலாக வாசக ரசனையை திருப்தி செய்வதாக அமைய வேண்டும்’ என்றார்கள். ஆகவே எது பிரபலமாக இருக்கிறதோ அதுவே சிறந்தது என்பது இவர்களின் கருத்து. மிக அப்பட்டமான அபத்தம் இந்த கருத்தில் உள்ளது. இப்படிச் சொல்பவர்கள் கல்கியின் எழுத்தை அதைவிட பிரபலமான ஒரு கீழ்த்தரப் பாலியல் எழுத்துடன் ஒப்பிட்டு அந்தப் பாலியல்எழுத்தே மேல் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? அப்போது தரம்தானே அவர்களின் அளவுகோலாக அமையும்?

இந்தவிவாதங்களை க.நா.சு எதிர்கொண்ட விதத்தின் சிறந்த உதாரணம் இக்கட்டுரை. க.நா.சு அந்த கேளிக்கை எழுத்தாளர்-வாசகர்களை பொருட்படுத்தவில்லை. அவர்களிடம் தனக்கு விவாதிக்க ஏதுமில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். வாசகர்களுக்கு கேளிக்கை எழுத்து தேவை, அதை எழுத்தாளர்கள் கொடுக்கிறார்கள் என்றால் அது அவர்களின் உலகம், அவர்களிடம் சென்று அப்படி எழுதுவதும் வாசிப்பதும் தவறு என அவர் சொல்ல முனையவில்லை. அவர்களை சொல்லி திருத்துவதும் சாத்தியமல்ல. வணிக எழுத்து எப்போதும் இருக்கும். நான் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே வாசிக்கிறேன் என்பவர்களும் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் கலாச்சார சக்திகள் அல்ல. அப்படி தவறாக கருதப்படக்கூடாது என்று க.நா.சு கருதினார்

க.நா.சு இலக்கியம் சார்ந்த தேடல்கொண்டவர்களை நோக்கி மட்டுமே பேசினார். அன்று இலக்கிய நுண்ணுணர்வு கொண்டவர்களில் கணிசமானோர் வாசகர்களுக்கான எழுத்துதானே இயல்பானது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம்தான் அவர் இக்கட்டுரையில் உரையாடுகிறார். இலக்கிய ஆக்கத்தில் வாசகனின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்க முடியும் என்பதை ஆராய்கிறார். உலக அளவில் செயல்படும் இலக்கிய இயக்கத்தைக் கருத்தில் கொண்டு அதை விவாதிக்கிறார். அவருக்கே உரித்தான முறையில் மென்மையாக, சற்றே ஐயத்துடன், அதைச் சொல்லி முடிக்கிறார்

பொதுவாக க.நா.சுவுக்கு இலக்கியத்தின் ஒழுக்க ரீதியான பயன், அதன் சமூகப் பங்களிப்பு , அதற்கும் தத்துவத்துக்குமான உறவு போன்றவற்றைப்பற்றி ஐயங்கள் இருந்தன. ஆகவே அவர் எப்போதும் அவ்வளவாக அழுத்தாமல்தான் அவற்றைப்பற்றி பேசுகிறார். இலக்கிய உருவாக்கம் என்பதில் ஆழ்மனம் சார்ந்த பல மர்மமான தளங்கள் உள்ளன என்பதை அவர் அறிவார். ஆகவே அவர் அதைப்பற்றி எளிய கோட்பாடுகளை முன்வைப்பவர்களை நிராகரிப்பார் , அதேசமயம் அதை அதீதமாக மர்மப்படுத்தவோ புனிதப்படுத்தவோ செய்வதில்லை. க.நா.சுவின் சிறப்பியல்பே அவரது நிதானம் மற்றும் சமநிலைதான்.

இவ்வாறு இலக்கிய நுண்ணுணர்வு கொண்ட ஒரு சாராரிடம் எது நல்ல இலக்கியம், எது நல்ல வாசிப்பு, அதன் சாத்தியங்கள் என்ன என்பதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார் க.நா.சு. அவர்களிடம் நல்ல இலக்கியமென்பது எழுத்தாளனின் ஆழம் அந்தரங்கமான ஒரு தருணத்தில் மொழியைச் சந்திப்பதன் விளைவு என்று சொன்னார். அது பெருவாரியான வாசகர்களிடம் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாமலிருக்கலாம். அதற்கு மிகச்சில வாசகர்களே சாத்தியமாகலாம். அது அல்ல இலக்கியத்தின் அளவுகோல். இலக்கியம் அதன் அந்தரங்கமான நேர்மை, அதன் வெளிப்பாட்டில் உள்ள நேர்த்தி, அதன் சாராம்சமான அற எழுச்சி ஆகிய மூன்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படவேண்டும்.

அவ்வாறு இலக்கியத்தை நுட்பமாகவும் முழுமையாகவும் மதிப்பிடுவதற்கு வாசகனுக்கு இரு அடிப்படைகள் தேவை என்றார் க.நா.சு. ஒன்று, அந்தரங்கத்தன்மை. இலக்கிய ஆக்கத்தை தன் அகத்துக்கு ஏற்புள்ள நேர்மையுடன் அணுகுதல். பெருவாரியானவர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களால் அடித்துச் செல்லப்படாமல் தன் கருத்தை தன் அந்தரங்கத்தாலும் தன் வாழ்க்கை அனுபவத்தாலும் புரிந்துகொள்ள முயல்தல். இரண்டு, பயிற்சி. எந்த நல்ல கலையும் அதற்கான பயிற்சியை தேவையாக்குகிறது. இலக்கியமும் அக்கறையுடன் பயிலப்படவேண்டும். உலக இலக்கியப்போக்குகளையும் தன் இலக்கிய மரபையும் இலக்கியத்துடன் உறவாடும் தத்துவம் போன்ற துறைகளையும் இலக்கிய வாசகன் அறிந்துகொள்ள வேண்டும்

இவ்வாறு தகுதிகொண்டு வாசிக்கும் வாசகர்களின் ஒரு சிறுவட்டம் இருந்தாலே போதும், அவர்களின் கருத்துக்கள் காலப்போக்கில் அந்தச் சமூகத்தையே பாதிக்கும், வழிநடத்தும். எந்த ஒரு அறிவியக்கமும், பண்பாட்டியக்ககும் அத்தகைய சிறு எண்ணிக்கையினராலேயே முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. பெருவாரியினர் எப்போதுமே கவனமில்லாமல், மேம்போக்காகவே கலையிலக்கியத்தை அணுகுகிறார்கள். ஏற்கனவே தங்களுக்கு பழக்கமானவற்றையே மீண்டும் கோருகிறார்கள். அவர்களால் கலையிலக்கியம் வளர்வதில்லை என்றார் க.நா.சு

இக்கட்டுரையுடன் சேர்த்து யோசிக்கவேண்டிய ஒரு தகவல். ஜெயகாந்தனை இலக்கிய ஆசிரியராக கருதும் க.நா.சு அவர் பெருவாரியான வாசகர்களின் ரசனைக்கும் விருப்புக்கும் ஏற்ப எழுதி மெல்லமெல்ல நீர்த்துப்போன ஓர் எழுத்தாளராக விமர்சித்தார். அவரது பல கதைகளை ஆழமற்றவை, அதிர்ச்சி மதிப்பு மட்டுமே கொண்டவை என்றார். இன்றும் சிற்றிதழ்ச்சூழலில் உள்ள பொதுவான கருத்து அதுவே. அக்காலகட்டத்தில் ஜெயகாந்தன் க.நா.சுவுக்கு தன் முன்னுரைகளில் கடுமையான பதிலைச் சொல்லியிருக்கிறார். தன் ’சஹிருதய’னுடன் தான் கொள்ளும் ‘சம்பாஷணை’களே தன் எழுத்துக்கள் என்றார் ஜெயகாந்தன்.

ஆனால் 1998 ல் நான் அவரை எடுத்த ஒரு பேட்டியில் ஜெயகாந்தனிடம் ‘நீங்கள் வாசக ரசனையால் அடித்துச் செல்லப்பட்டீர்களா?’ என்று கேட்டேன். ‘இல்லை.நான் ஒருபோதும் வாசகர் கடிதங்களை படிப்பதில்லை. பத்திரிகை அலுவலகத்துக்கு கட்டுகட்டாக கடிதங்கள் வரும். நான் அவற்றில் ஒன்றைக்கூட பிரித்து பார்க்கமாட்டேன். நான் எனக்கு தோன்றியதை மட்டுமே எழுதினேன்’ என அவர் பதிலளித்தார்.

ஜெயகாந்தனின் நல்ல கதைகள் அவர் சொன்னதுபோல அவருக்கு ’தோன்றியது’ போல எழுதப்பட்டவைதான். ஆனால் பெரும்பாலான கதைகள் க.நா.சு சொன்னதுபோல வாசகர்களுக்காக எழுதப்பட்டவை. அந்த வாசகர்களும் அந்த காலகட்டமும் காலப்பெருக்கில் மூழ்கிப்போய்விட்டன. கூடவே அக்கதைகளும். நல்ல இலக்கிய ஆக்கங்கள் எழுத்தாளனின் ஆழ்மனத்தின் வெளிப்பாடுகள். அவன் தன் ஆழ்மனத்துடன் கொள்ளும் உரையாடல்கள். அப்படியானால் ‘சமூகம்’ எங்கே இருக்கிறது அதில்? எழுத்தாளனின் ஆழ்மனம் என்பது அச்சமூகத்தின், மானுட இனத்தின், ஆழ்மனமேதான்.

 உலக இலக்கியச்சிமிழ்

க.நா.சுவின் படித்திருக்கிறீர்களா?

முந்தைய கட்டுரைவிக்கிப்பீடியாவின் அடிப்படைகள்
அடுத்த கட்டுரைதேவிபாரதியின் நீர்வழிப்படூஉம்…