நீலம் ஒரு கனவு போல என்னிடமிருந்து வெளிப்பட்ட நாவல். மகாபாரத நாவல்வரிசையில் அது மட்டும் ஓர் உச்சம். அதை பக்தி என்றோ பித்து என்றோ சொல்லவிரும்பவில்லை. அவை வெறும் சொற்கள். அத்தருணத்தில் அது என்னில் நிகழ்ந்தது. ஊமையன் பாடத்தொடங்கியது போல. இன்று அதை வாசிக்கையில் என்னிடமிருந்து மிக அப்பால் நின்றிருக்கிறது, எட்டமுடியாத உச்சியில் காலைப்பொன்னொளியில் நின்றிருக்கும் கயிலை முடி போல.
நீலனை தன் பெரும்பிரேமையால் ராதை உருவாக்கி எடுப்பதன் கதை அது. பிரேமையே அருவாகிய அதற்கு அழகிய உருவை அளிக்கிறது என்பதல்லவா பக்தியின் மெய்யியல்? ராதையின் மடியிலமர்ந்து பீலியை வேய்குழலை அவன் பெற்றான். தன்னை கண்ணன் என்று அறிந்துகொண்டான். அவளை ராதை என்று சுட்டிக்காட்டினான். ஆராதிப்பவள் அவ்வாறுதான் உருவானாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆக்கி அறிந்து கலந்து அமைந்த கதை இது
நீலத்தின் மூன்றாம் பதிப்பு இது. முதல் செம்பதிப்பும் பொதுப்பதிப்பும் நற்றிணைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. நற்றிணை யுகனுக்கு என் நன்றி. அரியபடங்களால் இந்நூலை அணிசெய்த ஷண்முகவேலுக்கும் உதவிய ஏ.வி.மணிகண்டனுக்கும் நன்றி. இந்நூலை செம்மைசெய்து உதவிய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கும் என் இணையதளத்தை சீராக நடத்த உதவும் ராமச்சந்திர ஷர்மாவுக்கும் நன்றி
ஜெ
நீலம் மூன்றாம் பதிப்புக்கான முன்னுரை