ஒரு பொருளியல் விபத்து

காலையில் எழுந்ததுமே தற்கொலை பற்றி ஏதோ எழுதவேண்டியிருந்தது. அதன்பின் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றிய நினைவுகள். தற்கொலை செய்துகொண்டவர்களை முன்பெல்லாம் உடனே நடுகல் நட்டு சாமியாக்கி வருடத்திற்கு ஒரு கோழி பலி கொடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். இப்போது போல சிந்தனை செய்து செய்து அவர்களை வானளாவ வளர விடுவதில்லை. ‘தற்கொலை போல உண்மையான தத்துவச் சிக்கல் வேறில்லை’ என்றான் காம்யூ. உண்மைதான். கொலை போல நடைமுறைச் சிக்கலும் வேறு இல்லை.

நடுவே இணையத்தின் கட்டணம் முடிந்துவிட்டது என்றது இணைப்பு. அருண்மொழி ஆபீஸ் போய்விட்டாள். அன்றாடச் செலவுக்கு அவளிடம் முன்னரே பணம் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். சட்டென்று ஏடிஎம் கார்டு நினைவுக்கு வந்தது. வடஇந்தியப் பயணத்தின்போது எதற்கும் இருக்கட்டும் என்று வாங்கியது. ‘ஒரு பைசாகூட எடுக்கப்பிடாது.சும்மா ஒரு இதுக்குத்தான் அது’ என அருண்மொழி கடுமையாக எச்சரித்திருந்தமையால் நான் அதை பயன்படுத்தவே இல்லை. மேலும் பயணத்தில் செலவெல்லாம் பொதுநிதிவழியாகத்தான்.

திரும்பிவந்து நாகர்கோயிலில் ஒருமுறை பணம் எடுக்கச் சென்றேன். எந்திரத்தில் பணம் இல்லை என்றார்கள். அது எப்போதாவதுதான் இருக்குமாம். பணம் இருக்கும் தகவல் தெரிந்தால் உடனே கிளம்பிவந்தால்தான் எடுக்கமுடியும். நகரின் மூன்று ஏடிஎம் எந்திரங்களிலும் பணம் இல்லை. சரி, யோகமில்லை என்று வந்துவிட்டேன்.

உலகம் முழுக்க நானறிந்தவரை சிக்கல் இல்லாமல் ஓடும் எந்திரம் என்றால் இந்த ஏடிஎம் தான். இந்தியாவில் அதில் பெரிய நிர்வாகச்சிக்கல். தேசியமய வங்கிகளில் எவருமே பொறுப்பாக பணத்தைக் கொண்டு வைக்கமாட்டார்கள். அதற்கென ஒரு ஊழியர் இருப்பார். ஒருமுறை கொஞ்சம் பணம் கொண்டுவைத்தால் அவர் மீண்டும் வரமாட்டார். ஏடிஎம்மை நம்பி இந்தியாவில் எங்குமே செல்லக்கூடாது என்று அனுபவசாலிகள் சொன்னார்கள்.

இப்போது ஏடிஎம்மைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் என்ன? தற்கொலைச் சிந்தனை விலகி சற்று உற்சாகம். காலையில் அலுவலகம் போனதுமே கிளம்பிச்சென்றேன். ஏடிஎம் இருக்கும் இடம் வங்கிக்கு நேர் எதிரில். கண்ணாடிக் கதவை திறந்து உள்ளே போகும் வழியில் இரண்டு பிச்சைக்காரர்கள் ”அய்யா” என்று இருபக்கமும் கை நீட்டினார்கள். எரிச்சலுடன் ”உள்ளபோனாத்தானே பணம் இருக்கும்?”என்றேன். முன்கூட்டியே சொல்லி வைக்கிறார்களாம்.

உள்ளே போனேன். பித்தான்களை அழுத்தி கார்டைச் செருகினேன். இந்தமாதிரி வேலைகளில் எனக்கு என்ன சிக்கல் என்றால் நான் சிந்தித்துக் கொண்டிருப்பவற்றை என்னால் நிறுத்த முடியாது. அச்சொற்களும் வெளித்தகவல்களின் கூடவே ஓடுமாதலால் எண்களை கவனித்து திருப்பி அழுத்துவது போன்றவற்றைச் செய்தால் எப்போதும் குளறுபடிதான். ‘ராணுவங்களும் தற்கொலை செய்துகொள்ளும்’ என்று தல்ஸ்தோய் எழுதியதை அப்போது நினைக்கவேண்டிய தேவையே இல்லைதான்.

கடைசியில் வெற்றி. காலையாதலால் பணமும் இருந்தது. ஐநூறு ரூபாய்தான். ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள். எடுத்து நாலைந்துமுறை எண்ணி விட்டு திரும்பி வந்து கதவைத் திறந்தேன். பூட்டியிருந்தது. இழுத்தேன். மீண்டும் இழுத்தேன். மீண்டும் மீண்டும் இழுத்தேன். பகீரிட்டது. மார்பு அடிக்க ஆரம்பித்தது

உள்ளே ஏஸி வேலை செய்யவில்லை. மூச்சுத்திணறல் ஆரம்பித்தது. பிச்சைக்காரர் கண்ணாடிக்கதவுக்கு அப்பால் எழுந்து நின்று  ‘என்ன?’  என்று நடித்தார்.

‘திறக்க முடியவில்லை’ என்று நடித்தேன். மாறி மாறி உணர்ச்சிகரமாக நடித்தோம். அங்கே எந்தக் குமிழும் எந்த பிடியும் கையில் சிக்கவில்லை. ஒரு தொலைபேசி இருந்தது. எதிர்பார்த்தபடியே அதில் தம்பூரா நாதம்தான்

ஆவேசத்துடன் கதவைப் பிடித்து இழுத்தேன். ஒரு முனகல் ஒலி. திறக்கிறது. கடுப்புடன் மீண்டும் இழுத்தேன். வெளியே அவரும் சற்று தள்ளினார். சலார் என்ற ஒலியுடன் கதவின் கண்ணாடிப்பரப்பு ஒன்று உடைந்து ஒருசில துண்டுகள் கீழே கொட்டின. நான் கையை எடுத்து அவசரமாக பின்னுக்கு நகர்ந்தபோது மொத்தக் கண்னாடியும் கொட்டியது. பாதி உள்ளே மீதி வெளியே. என் உடம்பெங்கும் கண்ணாடித்தூள்.

வெளியே நின்ற பிச்சைக்காரர் “என்ன சார்? உள்ள சுச்சு இருக்குமே..அத அமுக்கினாப்போருமே..” என்றார் “எம்பிடு மட்டம் சொன்னேன்… மனுசனானா மனசிலாக்க வேண்டாமா?”

ஆமாம் ஒரு சுவிட்ச் இருந்தது. அதன் மீதாக அதை அழுத்தினால் கதவு திறக்கும் என்று தமிழ் ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. பதற்றத்தில் அது மட்டும் என் கண்ணில் படவில்லை.

அமுக்கி, கதவை திறந்து வெளியே வந்தேன். அதற்குள் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எங்கும் என்னை வேடிக்கைபார்க்கும் கண்கள். தலையில் முக்காடு போட்ட நாலைந்து பீபிக்களுக்கு ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார். இத்தனை வேகமாக பெருங்கூட்டம் கூடும் என நான் நினைக்கவேயில்லை. வேடிக்கை பார்ப்பதற்காகவே எக்கணமும் விழிப்பாக இருப்பார்கள் போல.

வங்கியில் இருந்து இரு ஊழியர்களும் பாதுகாவலரும் என்னை நோக்கி ஏதோ கூவியபடி வந்தார்கள். “டேய், டேய்!”  என்று ஒருவர் கத்தினார்.

என்ன செய்வதென தெரியவில்லை. “ஒடச்சுபிட்டாரு சாமி” என்றார் பிச்சைக்காரர்.

நிலைமை சரியில்லை, சரி பிறகு பார்ப்போம் இப்போது போய்விடுவோம் என்று நான் வேகமாக நகர்ந்தேன் – அதாவது மெல்ல ஓடினேன். “பிடி பிடி!” என்றெல்லாம் யாரோ கூவுவது கேட்டது

மூச்சிரைக்கச் செல்லும் வழியில் ‘திருவட்டார் சிந்துகுமார்’ என்ற குமுதம் நிருபர் பைக் நிறுத்தி காலை ஊன்றி என்னைத் தெருவில் மடக்கினார். “சார் நல்லாருக்கேளா? பகவத்கீதை உபன்னியாசம் கேசட் குடுத்தேனே கேட்டேளா?’ என்றார்.

எழுத்தாளனாக மீண்டும் மாறி “கேட்டேன்” என்றேன்

“பிளாக்லே ‘வற்கீஸின் அம்மா’ கட்டுரை படிச்சேன் சார். நல்லா இருந்தது. வற்கீஸ் சார் நமக்கு ரொம்ப வேண்டிய ஆளாக்கும். முன்ன பீமன் மாதிரி இருந்தார். இப்ப கொஞ்சம் உடம்பு சரியில்லை..”

நான் “ஆமா, மூணுநாள் முன்னாடி போயிப் பாத்தேன்” என்றேன்.

அலுவலகம் வந்து அமர்ந்தபோதுதான் மூச்சிரைக்கிறது என்று தெரிந்தது. ஷாஜி ·போனில் அழைத்து அவர் வேலைவிஷயமாக எர்ணாகுளம் போய் மோகன்லாலைப் பார்த்ததைப் பற்றி பரவசமாகப் பேசினார். சரியாகக் காதில் விழவில்லை. என்ன செய்வதென கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. ·

போனில் வங்கியை அழைத்தேன். வங்கி மானேஜர் என் நல்ல வாசகர். ஆனால் அவர் அன்று லீவு. பொறுப்பில் இருந்த காஷியர் பதற்றமாக இருந்தார். “நீங்கதானா? என்னசார்?”என்றார் “போலீஸு வந்து பாத்தாச்சு…நான் திருநவேலிக்குக் கூப்பிட்டுச் சொல்லிட்டேன்…”

நான் நடந்ததைச் சொன்னேன், “அங்க வெளியே இப்ப யாருமே கெடையாதே…பிச்சைக்காரங்க இல்லியே” என்றார்.

“அப்ப இருந்தாங்க”

“நான் பாத்தப்ப இல்லியே”

“நான் ஏன் சார் பொய் சொல்லணும்?”

”எனக்கு ஒண்ணும் புரியல்லை. நான் இண்ணைக்கு மட்டும்தான் இஞ்சார்ஜ் கேட்டேளா? நான் திருநவேலிக்கு கூப்பிட்டு பேசுதேன். அங்க இன்ஸ்பெக்டர் வந்து பாக்குதாரு”

போலீஸ்காரர்கள் உள்ளே வந்தால் நான் கண்ணாடியை உடைத்ததற்கு மட்டுமல்ல, ஏடிஎம் கார்டு வைத்திருந்ததற்கே என்னிடம் காசு கேட்பார்கள். கண்டிப்பாக, என்னுடைய பிறப்பு சம்பந்தமான கெட்டவார்த்தையும் சொல்வார்கள். பதற்றமாக தொழிற்சங்கத்தோழர் ஆறுமுகத்தை அழைத்தேன். பிரச்சினையின்போதுதான் நமக்கு கம்யூனிஸ்டுக்கள் எத்தனை மகத்தானவர்கள்கென்று புரிகிறது. ஆறுமுகம் ”பாத்துக்கலாம் சார்” என்றார் தன்னம்பிக்கையுடன்.

அவரது பைக்கில் வங்கிக்குச் சென்றோம். ஆறுமுகம் உள்ளே சென்று மேனேஜரை வரச்சொன்னார். தொழிற்சங்கத்தவர் என்றதுமே முகங்கள் மாறின. “உட்காருங்கள்” என்றார்கள்.

ஏஸி அறையில் காத்திருந்தோம். ஒருவர் உள்ளே வந்து “கண்ணாடிய ஒடைச்சது ஆராக்கும்?” என்றார்.

“ஒடைஞ்சு போச்சு சார்” என்றேன்.

“ஒடைக்கப்பிடாதுலா? நம்ம நாட்டுக்க சொத்துல்லா? அப்டீன்னா நம்ம சொத்து” என்றார்.

”ஆமாசார்..தெரியாம ஒடைஞ்சு போச்சு” என்றேன்.

”தெரியணும்லா? நம்ம சொத்துல்லா அது?”

”மன்னிச்சுக்கிடுங்க”

”ஒடைச்ச ஆளைப்பாப்பம்னு வந்தேன்…நான் இங்க காஷியராக்கும்”

கொஞ்சநேரம் கழித்து பொறுப்பு மானேஜர் கவுண்டரில் இருந்து எழுந்து வந்து பதற்றத்துடன் மீண்டும் ”நான் இண்ணைக்கு மட்டும்தான் இஞ்சார்ஜ்” என்றார். திருநெல்வேலிக்குக் கூப்பிட்டார். அவர்கள் ·போனையே எடுக்கவில்லை. ”நான் இதுமாதிரி பாத்ததில்லை” என்றார். நீங்கள் இதற்கு முன்பு கண்ணாடியை உடைத்தபோது என்ன செய்தீர்கள் என்று கேட்கப்போகிறார் என நினைத்தேன்.

நான் மேனேஜரின் எண்ணைக் கேட்டேன். அவரது செல்போனை தேடி எடுத்து எண்களை ஒற்றி என்னிடம் நீட்டினார். அவரிடம் நான் நடந்தவற்றைச் சொன்னேன். சொல்ல ஆரம்பிக்கும்போது ”ஒண்ணுமில்ல சார் , ஒரு சின்ன பிரச்சினை” என்றது தவறோ என்று மனம் நடுவே ஓடியது. சின்னப்பிரச்சினை மாதிரி தெரியவில்லையே.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், இத்தனைக்கும் நடுவே ‘நம்முடைய பழைய புராணங்கள் இலக்கியங்கள் அனைத்திலுமே தற்கொலை ஒரு மகத்தான காரியமாக மட்டும்தான் சொல்லப்பட்டிருக்கிறது. குற்றமாகவோ தவறாகவோ அல்ல’ என்ற ஒரு புதிய எண்ணமும் ஊடாக ஓடியது. பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஊடாக சின்னப்பிள்ளை துணியில்லாமல் பொத்து பொத்தென்று ஓடுவதைப்போல.

”ஒன்றும் பிரச்சினை இல்லை சார். நீங்கள் ஒரு லெட்டர் குடுங்க. இந்த மாதிரி தவறுதலா ஒடைஞ்சுபோச்சு, நான் பொறுப்பு ஏத்துக்கிடுதேன்னு..”என்றார் மேனேஜர்.

”சரி சார்..ரொம்ப தேங்ஸ்” என்று சொல்லி விட்டு கீழே போய் காகிதம் வாங்கி வந்து எழுதி பொறுப்பு மானேஜரிடம் கொடுத்தேன்.

”ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க…பாப்பம்” என்றார் ஆறுமுகம்.

“சரி சார், நான் இங்க இன்னைக்கு மட்டுமாக்கும் இஞ்சார்ஜ்”

அலுவலகம் வந்தேன். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ”நம்முடைய மரபில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எல்லாருமே சொர்க்கத்துக்குத்தான் போனார்கள். அது ஒரு பாவம் என்ற எண்ணம் அவர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்ற எண்ணம் எப்படி வந்தது? அது ஒரு கிறிஸ்தவக் கோட்பாடா?” இந்த மூளையை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யமுடியாது. நிஜமாகவே தற்கொலை செய்துகொள்ள போனால்கூட இப்படித்தான் யோசிப்பேன் போலிருக்கிறது.

இரண்டு மணிநேரம் கழித்து போன் வந்தது. ”சார், கண்ணாடிக்கதவை சரி செய்ஞ்சாச்சு. பில் ஐநூற்றிஎண்பது ரூபா… கொண்டுவந்து கவுண்டர்ல குடுத்திடறீங்களா?”

கையில் பணம் இல்லை. எடுத்த பணத்துக்கு இணையத்தொடர்பு வாங்கிவிட்டேன்.

”ஏடிஎம் கார்டு இருக்குல்ல…போய் எடுத்து குடுத்திருவோம் சார்”என்றார் ஆறுமுகம்.

”வேண்டாம்..ஏடிஎம்னாலே பயமா இருக்கு”

”என்ன பயம்? வாங்க நானும் வாறேன்”

பைக்கில் மீண்டும் போனால் ஏடிஎம் அறை முன்பு போலவே இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் பிச்சைக்காரர்களும் இருந்தார்கள். அவர் என்னைப் பார்த்து நட்பாக புன்னகை செய்தார். உள்ளே போய் பணம் எடுத்து கொண்டுவந்து மேலே கவுண்டரில் கொடுத்தேன்.

”கண்ணாடிகளை எல்லாம் ஒடைக்கப்பிடாது சார்” என்றார் ஒருவர்.

பொறுப்பு மேனேஜருக்கு திருநெல்வேலி தொடர்பு கிடைத்ததா என்று கேட்கலாமென எண்ணினேன். எதற்கு வம்பு என்று அடக்கிக் கொண்டேன். இரண்டு பெண் ஊழியர்கள் கவுண்டருக்கு அப்பால் எழுந்து என்னை வேடிக்கை பார்த்தார்கள்.

திரும்பிவரும்போது ‘தற்கொலை பற்றி இருத்தலியலாளர்கள் அளவுக்கு வேறு எந்த சிந்தனைமரபும் யோசித்தது இல்லை’ என்ற எண்ணம் ஏற்பட்டது. ‘அடச்சீ’ என்று மண்டையை அறைந்தேன்.

அலுவலகம் போய் அமர்ந்ததும் ஷாஜி மீண்டும் கூப்பிட்டார். ”நான் மோகன்லாலைப்பற்றிச் சொன்னதை நீங்கள் அப்போது சரியாக கவனிக்கவில்லை என்று தோன்றியது. அதுதான் இன்னொருமுறை சொல்லலாம் என்று கூப்பிட்டேன்”.

நான் சோகமாக, ”ஷாஜி ஒரு பிராப்ளம்”என்றேன்.

”என்ன?” என்றார். நடந்தவற்றைச் சொன்னேன்.

ஷாஜி ”பிரச்சினை இனிமேல்தானே…” என்றார்.”அருண்மொழிக்கு அறுநூறு ரூபாய்க்கு எப்படி கணக்கு சொல்லபோகிறீர்கள்?”

மாலை நான் வாயையே திறக்கவில்லை. எங்கள் வீட்டில் ஒன்பதரை மணிக்கு இரவுச் சாப்பாட்டின்போது ஒருமணிநேரம் ஏதாவது நகைச்சுவையாகப் பேசி சிரிக்கும் வழக்கம் உண்டு. நாளெல்லாம் பள்ளியின் பதற்றத்திலும் அழுத்தத்திலும் இருக்கும் பிள்ளைகள் நன்றாகச் சிரித்தபின் தூங்கச்செல்வது நல்லது என்பது என் கோட்பாடு. வழக்கமாக முக்கிய நகைச்சுவை விருந்து நான் அளிப்பதுதான். இம்முறை நான் பேசாமல் இருந்தேன்.

ஒருசில சிரிப்புகளுக்குப் பின் நான் மெல்ல இந்த சோகச் சமபவத்தை சொல்ல ஆரம்பித்தேன். அனுதாப அலை கிளம்பவில்லை, சிரிப்பலைகள்தான்.

”அப்பா இழுத்தா வரலைன்னா உடனே சுவிட்ச் இருக்கான்னு பாக்க மாட்டியா?” என்றாள் சைதன்யா.

”சும்மாருடீ, அதான் ஒடைச்சதுக்கு அப்றம் பாத்திருக்காங்கல்ல? என்ன இப்ப? நீ மேலே சொல்லு அப்பா” என்றான் அஜிதன்.

கண்ணீர் வழிய சிரித்தபின் அருண்மொழி சாந்தமானாள். ”ரொம்ப டென்ஷனாயிட்டேன்” என்றேன்.

”சரி விடு” என்றாள் அருண்மொழி ”அந்த ஏடிஎம் மெஷின் கண்டுபிடிச்சபிறகு இன்னிக்கு வரைக்கும் இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்காது ஜெயன்…இந்த மாதிரி வேற யாருக்குமே தோணியிருக்காது….. அதனாலதான் சொல்றேன் நீ ஒரு யுனீக் ரைட்டர்” என்றாள்.

அது பாராட்டுதானா என்று ஓரக்கண்ணால் அவள் முகத்தைப்பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Nov 12, 2008 @ 0:03

முந்தைய கட்டுரைபால விநோதக் கதைகள்
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம் கூடுகை, 54