எம்.எஸ்.வியும் கலாமும்

index

அன்புள்ள ஜெயமோகன்,

சமீபத்தில் இறந்த இரண்டு முக்கியமான ஆளுமைகள் M.S விஸ்வநாதன் மற்றும் A.P.J அப்துல்கலாம் இந்த இருவரும் இறந்தபொழுது மக்கள் இரங்கல் தெரிவித்த விதம் எல்லோரும் அறிந்த ஒன்று .இருவரும் அவரவர் துறைகளில் முழு அர்பணிப்பும் ,ஈடுபாடும் கொண்டவர்கள் ,ஒருவர் பாரதரத்னா பெற்றவர் மற்றொருவர் தன்னுடைய 50 வருட இசை வாழ்வில் எந்த ஒரு பெரிய அங்கீகாரமும் இல்லாமல் இறந்தவர் .

எங்கு பார்த்தாலும் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படங்களும் ,பெரிய பேனர்களும் எல்லா தொலைக்காட்சிகளிலும் அஞ்சலி மற்றும் விவாதம் நடைபெற்றது . மாணவர்களின் ஆதர்ச நாயகன் ,இளைய தலைமுறையின் வழிகாட்டி என்று விவாதம் நடைபெற்றது . மக்கள் அவரை ஒரு எளிய மனிதராக ,அணு விஞ்ஞானி ,நடுநிலையான குடியரசு தலைவர் என்று வெவ்வேறு காரணங்களுக்காக அவரை மரியாதை செய்தனர்

என்னுடைய அம்மா சொல்கிறார் ” அவரு தனக்குன்னு எதுவும் சேர்த்து வெச்சுகில,ரொம்ப எளிமையா வாழ்ந்துட்டார் ” என்று இது ஒரு பார்வை .இந்தப் பார்வை அவரை ஆதர்ச நாயகனாக பார்க்கும் மாணவர்களிடம் உள்ளதா ? எளிமை .இந்த எளிமை என்பது சக மனிதனை பார்ப்பது ,தனக்காக காவல் வேளையில் 3 மணி நேரம் நின்று வந்த அந்த ராணுவ வீரனுக்கு நன்றி செல்லி ,எதாவது சாப்பிடுகிறாய்யா ? என்ற கேட்ட அந்த மனிதனின் பண்பை அவர்கள் ஆதர்சமாக கொண்டு செயல்படுவார்களா ?.

மாறாக விஸ்வநாதன் அவர்கள் தன்னுடைய இசையால் பலருக்கு ஆறுதல் அளித்தவராக உள்ளார் .விஸ்வநாதன் அப்துல் கலாமை காட்டிலும் வெகு காலமாக மக்களுக்கு பரிச்சயமானவர் ,இசையில் முழு அர்ப்பணிப்பு கொண்டவர் ,எளிமையான மனிதர் ,ஆனால் அவர் இன்றைய தலைமுறைக்கு ஓர் ஆதர்சமா என்றால்? அது கேள்விக்குறியே.இவரின் பாதை கலை துறை ,கலாமின் பாதை அறிவியல் ,கலை மற்றும் அறிவியல் சார்ந்து நம் சமுகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு இங்கும் தொடர்வதாக என் எண்ணம் .

நம் குடும்பங்களில் நீ ஒரு “அப்துல் கலாம் போல வரவேண்டும் என்பார்களா ? வரவேண்டும் என்றால் எப்படி ?நல்ல மனிதர் ,பண்பானவர் என்று சொல்லியா ? இல்லை “அணு விஞ்ஞானி,ஏவுகணை விஞ்ஞானி” என்று சொல்லியா ?.சேலம் ,நாமக்கல் செல்லும் வழியில் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வகுப்பறை நடத்தி மாணவர்களை மதிப்பெண் எந்திரமாக மற்றும் பள்ளிகளும் ,நாமக்கலில் இருக்கும் கோழி பண்ணைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை .இந்த பள்ளிகளில் இருக்கும் மாணவனுக்கும் அப்துல் கலாம் ஒரு நாயகன் எந்தப்பார்வையில் என்பதுதான் கேள்வி

விஞ்ஞானி என்றால் மகிழ்ச்சியே ,ஆனால் அப்துல்கலாம் போன்ற ஆளுமைகளின் எளிமையும் ,பண்பும் தான் இவரை போன்றவர்களை சாமானியனில் இருந்து ஒரு ஆதர்ச நாயகனாக மாற்றுகிறது என்பது என் எண்ணம் .எளிமை என்றால் முற்றிலும் துறப்பது அல்ல ,மானிடத்தை பார்ப்பது . இந்த பள்ளிகளில் இந்த மானிட பார்வை கற்றுத்தரப்படுமா ?.

முரளி

index1
அன்புள்ள முரளி

நீங்கள் கேட்ட இக்கேள்வியை வேறு சிலரும் பேச்சில் கேட்டார்கள். இதையொட்டி பல கோணங்களில் யோசிக்கலாமென நினைக்கிறேன்

பொதுவாக ஒரு சமூகம் எவரை முன்மாதிரியாகக் கொள்கிறது, எவரை முன்மாதிரியாகக் கொள்ள விழைகிறது என்ற வினா முக்கியமானது. பெரும்பாலும் எல்லா சமூகங்களுமே உலகியல் அடிப்படைகளால் கட்டப்பட்டவைதான். ஆகவே உலகியல்வெற்றி அடைந்தவர்களே அதற்கு முன்மாதிரிகள். எல்லா குடும்பங்களிலும் ஏராளமாகச் சம்பாதித்து வசதியாக வாழும் ஒருவரைத்தான் முன்மாதிரியாகச் சுட்டிக்காட்டுவார்கள். நம் சமூகம் ஒட்டுமொத்தமாக உடனடி முன்மாதிரியாகக் கொள்வது பெரும்பணம் சேர்த்த அரசியல்வாதிகளையும் நடிகர்களையும்தான்.

அதே சமயம் சமூகத்தின் அறவுணர்வு முன்மாதிரியாகக் கொள்ள விழைவது ஆன்மிகமான வெற்றி அடைந்தவர்களை. நம் சூழலில் துறவிகள் பெருமதிப்புக்குரியவர்கள். ஆனால் எவரும் தங்கள் பிள்ளைகள் அவர்களைப்போல ஆகவேண்டுமென விரும்புவதில்லை அல்லவா? நாராயணகுரு ஒருமுறை அவரது பக்தர்களிடம் அவர்களின் பிள்ளைகளில் ஒருவரை துறவியாக தன்னிடம் அனுப்பும்படி சொன்னபோது அத்தனைபேரும் அதிர்ச்சியுடன் மறுத்துவிட்டார்கள். நாராயணகுருவின் பிரதம சீடரான டாக்டர் பல்புவே மறுத்தார். ஆனால் அதை அறிந்த அவரது இரண்டாவது மகன் தந்தையின் எதிர்ப்பை மீறி சீடராக முன்வந்தார் – டாக்டர் நடராஜன் பின்னாளில் நடராஜ குரு.

இதுதான் நம் மனநிலை. இந்த இரண்டு பக்கமுமே உண்மை. நாம் பொள்ளாச்சி மகாலிங்கத்தை முன்னுதாரணமாகக் கொள்வோம். மகரிஷி வேதாத்ரியை இலட்சியபிம்பமாக எண்ணுவோம். இரண்டுக்கும் நடுவே உள்ள ஒரு முரணியக்கத்தால்தான் நாம் கொள்ளும் நிலைப்பாடுகள் முடிவாகின்றன.

இங்கே அப்துல் கலாம் எப்படி பொருள்படுகிறார். அவரிடம் இரு அம்சங்களுமே உள்ளன. வெற்றிகரமான அறிவியலாளர், உச்சகட்ட பதவிகளை அடைந்தவர், இது அவரது உலகியல் வெற்றியாகக் கருதப்படுகிறது. இதைத்தான் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகக் கூறுகிறார்கள். மறுபக்கம் அவரது எளிய வாழ்க்கை, கிட்டத்தட்ட துறவு மனநிலை அவரை இலட்சியவடிவமாக ஆக்குகிறது. ஆனால் அவ்வியல்புகளை பிள்ளைகளுக்குப் பரிந்துரைக்கமாட்டார்கள். நாம் உள்ளூர மதிக்கும் இரு தன்மைகளுமே அவரிடம் இருப்பதுதான் இந்த ஒட்டுமொத்த மதிப்பை அவர் அடைவதற்கான காரணம்.

நம் சூழலில் இன்று நம்பக்கூடிய ஆதர்சபிம்பங்கள் இல்லை. அப்துல் கலாம் அவரது அறிவுத்திறனுக்காக கொண்டாடப்படவில்லை. அவரைவிட அறிவுடையவர்கள் பலர் இருக்கலாம். நோபல் பரிசு பெற்ற இந்தியர்களே சிலர் உள்ளனர். அவர்கள் கொண்டாடப்படவில்லை. எந்தச் சமூகமும் வெறும் அறிவுத்திறனைக் கொண்டாடாது. அதற்கும் அப்பால் உள்ள சில மதிப்பீடுகள் அதற்குத்தேவை. அந்த மதிப்பீடுகளின் வடிவமாக தன் வாழ்க்கையால் தன்னை ஆக்கிக்கொண்டவர்களையே அது கொண்டாடும்

கலாமின் இரு பண்புகளே அவரை முதன்மையானவராக ஆக்கின. தனக்குச் சற்றேனும் திறமை இருப்பதாக எண்ணும் ஒவ்வொரு இந்தியனும் அதை உலகியல்வெற்றியாக மாற்றிக்கொள்ளும்பொருட்டு தேசத்தைத் துறந்து தன்னை ஆளாக்கிய சமூகத்தைத் துறந்து அது தனக்களித்த அனைத்தையும் நிராகரித்து விட்டுவிட்டு ஓடுவதையே நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம். அந்தக்குற்றவுணர்வை வெல்ல இந்தத்தேசத்தின் மீது சமூகம் மீதும் ஏளனத்தையும் காழ்ப்பையும் உருவாக்கிக்கொண்டிருப்பதை அரைநூற்றாண்டாக கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் எவரைவிடவும் திறமையும் வாய்ப்பும் கொண்டிருந்த ஒருவர் இங்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்பது நமக்கு ஒரு நிறைவை அளிக்கிறது.

உயர்பதவிகளை அடைந்த ஒருவர் அதை தனக்கும் குடும்பத்திற்குமென சொத்துசேர்க்க்க மட்டுமே பயன்படுத்துவதை நாம் ஒவ்வொருநாளும் காண்கிறோம். அப்துல் கலாமின் தியாக வாழ்க்கை நமக்க்கு எழுச்சியை அளிக்கிறது. என்றும் எப்போதும் இலட்சியங்களே வழிபடப்படுகின்றன தியாகங்களே மதிக்கப்படுகின்றன. வெற்று அறிவுத்திறன் அல்ல. சொல்லப்போனால் ஆணவத்துடனும் சுயநலத்துடனும் இணைந்த அறிவுத்திறன் அருவருக்கவே படுகிறது.

மறுபக்கம் கலைத்துறைச் சாதனையாளர்களை நோக்குவோம். ஒரு கோணத்தில் அவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்கள் காலத்தில் வாழ்ந்த அதிகாரம் மிக்கவர்கள், சேவைசெய்தவர்கள் எவருக்கும் இல்லாத அழியாப்புகழ் கலைத்துறைச் சாதனையாளர்களுக்கு உள்ளது. நாம் வி.பி.சிந்தனை நினைவுறுவதில்லை. ஜி.டி.நாயுடுவை நினைவுறுவதில்லை.எம்.எஸ்.வியை மறந்ததே இல்லை. இதுவே பெரிய அங்கீகாரம்தான்.

ஆனால் கூடவே இன்னொன்றும் உள்ளது. வணிகக் கலை என்பது சமகாலத்துடன் உரையாடிக்கொண்டிருப்பது. ஆகவே அடுத்தடுத்த மாற்றங்களை அடைந்தபடியே இருப்பது.ஆகவே பெரும்கலைஞர்களுக்குக் கூட அவர்களைக் கடந்து காலம் சென்றுவிடும் அனுபவம் கண்டிப்பாக இருக்கும். எம்.எஸ்.வி சாதாரணமாக பிரசாத் ஸ்டுடியோ வாசலில் அமர்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட தொன்மம் ஆக ஆகிவிட்டிருந்த டி.எம்.எஸ்ஸை எவருமே அடையாளம் காணாமல் கடந்துபோவதைக் கண்டிருக்கிறேன். இது மிக இயல்பானது. அடுத்த நட்சத்திரம் உருவாகிவிட்டபின் இவர்கள் ஒளிமங்கியாகவேண்டும்

எம்.எஸ்.வி போன்றவர்கள் தங்கள் கலையால் மட்டுமே அடையாளம் காணப்படுபவர்கள். அவர்கள் ஆளுமைகள் அல்ல. ஆகவே முன்னுதாரணங்களும் அல்ல. இசைத்துறையில் ஈடுபடும் ஒருவருக்கு எம்.எஸ்.வி முன்னுதாரணமாக இருக்கலாம். ஒட்டுமொத்தச் சமூகத்துக்கே முன்னுதாரணமாக அமையமுடியுமா என்ன? அவர் சிறந்த கலைஞர். தன் தொழிலில் வெற்றிகரமாக இருந்தார். அவ்வளவுதான். அவர் எந்த விழுமியத்துக்கும் வாழும் உதாரணம் அல்ல – கலாம் போல.

ஆகவே இந்தவகையான ஒப்பீடுகளே பிழை. இன்னொன்றும் உள்ளது. கலாமை ஏன் இந்தியச்சமூகம் கொண்டாடியது? அதற்கான விடைதேடிச்செல்வதே அறிவியக்கவாதியின் பணி. இந்திய சமூகம் எதைக் கொண்டாடவேண்டும் என்று ஆணையிடும் இடத்தில் அறிவுஜீவிகள் இல்லை. இவர்களை ஏன் கொண்டாடவில்லை என்று கேள்விகேட்கும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் மட்டும்தான் அறிவுஜீவிகள் தங்களை ‘மக்கள்’ அல்ல என நினைத்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைதெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 77