பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 3
”பிருஹத்சேனர் மண்ணாளும் விழைவு கொண்டிருந்தாலும் மன்னருக்குரிய எவ்வியல்பும் கொண்டவரல்ல. முடிசூடிய மறுநாள் அவர் வீணையுடன் மகளிர் அறையில் புகுந்தார் என்றும் பின்னர் மகதத்தின் நிலைப்படைத் தலைவரிடமே செங்கோலையும் மணிமுடியையும் அளித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்” என்றான் சாத்யகி. “விழவு நாட்களில் அரியணை அமர்ந்து முடிசூடி முறைமைகளைக் கொள்வதன்றி மன்னரென அவர் ஆற்றியது ஏதுமில்லை. மகதம் தன் காலடியில் அவரை வைத்திருந்தது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மகதத்துக்குச் சென்று சிற்றரசர்களுக்குரிய நிரையில் அமர்ந்து அவை நிகழ்வுகளில் பங்கெடுப்பதை பெரும் வெகுமதி என்றே அவர் எடுத்துக் கொண்டார்.”
ஆயினும் தன் மகள் பேரழகியாக கண்முன் மலர்ந்து வருகையில் அவர் கவலை கொண்டார். அவள் அன்னை மிலிந்தை தன் ஐயங்களை ஒவ்வொருநாளும் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். பால்ஹிகநாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு அவள் அரசியென்று சென்றாலொழிய கொடிவழிக்கு குலமதிப்பு அமையப்போவதில்லை. ஆனால் அதை மகதம் ஒருபோதும் விரும்பாது. மகதத்தின் எண்ணப்படியே இளவரசிக்கு மணமகனை தேடமுடியும். அது குடிமதிப்புக்குரியதாக இருக்குமா? குலக்குருதி அழிந்தபின் எஞ்சும் அடையாளம் என்ன? அரசியின் ஐயங்களின் ஊடாக துயருற்ற இரவுகளை கழித்தார் பிருஹத்சேனர்.
மணவுறவுகளின் வழியாக உபமத்ரம் ஒரு தனித்த அரசகுடியாக அடையாளம் பெற்றுவிடுவதை மகதம் விரும்பாது என்றே அமைச்சரும் சொன்னார். தகுதிக் குறைவான அரசகுலங்களில் ஒன்றில் இருந்தே மணமகன் வருவான். மச்சர்களோ மலைவேடரோ ஜராசந்தருடன் இணைந்திருக்கும் ஆசுரநாட்டு சிறுகுடிகளோ. “பால்ஹிக அவையில் அமரமுடியவில்லை என்றாலும் நாம் மத்ர அரசகுடியினர் என்றிருந்தோம். அவ்வண்ணம் ஓர் உறவு நிகழ்ந்தால் மலைவேடர் நிலைக்கு நாம் இழிவோம். பிறகு ஒருபோதும் நம் கொடிவழியினர் பால்ஹிக குலங்களில் ஒன்றில் குடிக்குறிகொண்டு வாழமுடியாது” என்றாள் அரசி.
எதை எண்ணினாலும் அவ்வினாவையே சென்றடைந்தது உள்ளம். எவ்வினாவுக்கும் முடிவில் முற்றமூடிய நெடுஞ்சுவரே நின்றது. “எவரும் அறியாது பால்ஹிகக்குடிகளில் ஒன்றுடன் மணவினை நிகழ்த்தினால் என்ன?” என்று அரசர் வினவினார். அமைச்சர் “அவ்வண்ணம் ஒரு மணம் நிகழும் என்றால் மறுகணமே நீங்கள் முடியிழந்து மகதத்தின் இருட்சிறைக்குள் செல்லவேண்டியிருக்கும். மகதத்தைப் பகைத்து நம் இளவரசியைக் கொள்ளும் துணிவுள்ள அரசர் எவரும் இம்மலைச்சாரலில் இல்லை” என்றார். “நான் என்ன செய்வது அமைச்சரே?” என்று மனமுடைந்து கேட்டார் பிருஹத்சேனர்.
“இப்போதிருக்கும் வழி ஒன்றே. சென்று சல்யரின் கால்களில் விழுவது. அடைக்கலம் கோரி அவர் மண்ணை அவரிடமே அளிப்பது. உங்கள் மணிமுடி இல்லாமல் ஆகும். ஆனால் குலம் எஞ்சியிருக்கும். மகதத்திடம் இருந்து உங்கள் உயிர் காக்கப்படும். மணிமுடியை நீங்கள் இழந்தாலும் என்றும் உங்கள் கொடிவழியினர் பால்ஹிகர்கள் என்று வாழமுடியும்” என்றார் அமைச்சர். “ஆம் அரசே, அதுவொன்றே வழி” என்றார் படைத்தலைவர். அரசியும் “நானும் எண்ணி எண்ணி அங்குதான் சென்றடைகிறேன்” என்றாள்.
அந்த இரக்கமற்ற உண்மையை எதிர்கொள்ளமுடியாது தலையை கைகளில் தாங்கி அமர்ந்திருந்தபின் எழுந்து ஒரு சொல்லும் சொல்லாமல் மகளிர்மாளிகைக்குச் சென்று யாழெடுத்து மீட்டத் தொடங்கினார் அரசர். அவர் விரல்பட்ட வீணை அவ்வினாவையே எழுப்பியது. வீணையொலி கேட்டு அருகே வந்தமர்ந்த இளவரசியைக் கண்டு நெஞ்சு கலுழ்ந்தார். அரசப்பெண்டிர் கலைமானின் கால்கணு போன்றவர்கள் என்பது முதுமொழி. விசையனைத்தும் வந்துசேரும் மெல்லிய தண்டு. தேர்ந்த வேடன் அங்குதான் உண்டிவில்லால் அடிப்பான்.
‘முடிவெடுங்கள் முடிவெடுங்கள்’ என்று ஒவ்வொருநாளும் அரசி சொன்னாள். “நான் ஒன்றும் அறியேன். நீ ஆவது செய்” என்றார் பிருஹத்சேனர். “அமைச்சர் சொன்னதே உகந்த வழி. வெற்றாணவத்தால் நாமிழைத்த பிழையின் சுமையே இவையெல்லாம். சல்யரிடம் சென்று காலடி பணியுங்கள்” என்றாள் அரசி. அமிலம் பட்டதுபோல நெஞ்சு எரிய “சீ” என கை ஓங்கி அவளை அடிக்கச்சென்று பின் நின்று “நாணிழந்து சூதன் என்றாகி அவர் அவையில் அமர வேண்டுமா? ஆண்மையற்றவன் என்று என்னை அவையில் இகழ்ந்தசொல் இன்னும் என் செவிகளில் உள்ளது. அவர்முன் சென்று ஆம் அவ்வாறே என்று அமைய வேண்டுமா? என்ன சொல்கிறாய்?” என்றார். “ஆம். அது இழிவே. இத்தனை நாள் மணிமுடி சூடியதற்கு அது ஈடு. ஆனால் எஞ்சுவது நம் மகளின் குலம். அவள் குருதியில் பிறக்கும் மைந்தரின் அடையாளம். இன்று நாம் செய்யவேண்டியது அது ஒன்றே” என்றாள் அரசி.
“அதைவிட நான் உயிர் துறப்பேன்” என்றார் பிருஹத்சேனர். “இறப்பதென்றால் அதற்குமுன் உங்கள் கொடிவழிக்கு வழிகோலிவிட்டு செல்லுங்கள்” என்றாள் அரசி. “இன்றறிந்தேன், குருதிதேடும் கான்விலங்குகள் உறவுகள். குருதிவிளையும்வரைதான் நாம் பேணப்படுவோம்” என்று சொல்லி தன் யாழுடன் வெளியே நடந்தார் பிருஹத்சேனர். “என்னசெய்வது அமைச்சரே? இவரது வெற்றாணவத்தால் என் மகள் குலமிலி ஆகவேண்டுமா?” என்றாள் அரசி. “ஆற்றலற்ற உள்ளங்கள் எப்போதும் மிகையாகவே எதிர்வினை புரியும் அரசி. அவர்கள் தங்கள் ஆற்றலின்மையை அஞ்சுகிறார்கள். அதை சினத்தால் மறைக்கிறார்கள்” என்றார் அமைச்சர். “இறுதியில் அவர் அடிபணிந்தாகவேண்டும். நின்றுமறுக்கும் வல்லமை கொண்டவரல்ல அவர்.”
காட்டுக்குள் நுழைந்து மலைப்பாறை ஒன்றில் அமர்ந்து அந்தி எழும் வரை வீணை மீட்டினார் பிருஹத்சேனர். இருளில் குளிர்ந்த பாறையில் உடல் பதித்து அதிர்ந்துகொண்டிருந்த யாழைத் தழுவிப் படுத்து கண்ணீர் உகுத்தார். எண்ணி எண்ணி தொடுவானம் வரை சென்ற சொற்சரடுகள் அனைத்தும் ஓய்ந்தபின் விழிசோர்ந்து கால்தளர்ந்து பின்பு மறுநாள் திரும்பி வந்தார். அரசியிடம் வந்து “வேறு ஒன்றும் எண்ண என்னால் இயலவில்லை. நேற்றிரவுடன் நான் இறந்துவிட்டேன் என்றே கொள்கிறேன். உங்கள் விழைவுப்படி உடல் சென்று சல்யரின் கால் பனியும்” என்றார். இரக்கமற்ற இரு வாள்நுனிகளென விழிகள் கூர்ந்திருக்க அரசி அவ்வாறே என தலையசைத்தாள். மறுமொழி ஒன்று வருமென ஏங்கியவராக பிருஹத்சேனர் அமைச்சரை நோக்கினார். “ஆம், அரசே. அது ஒன்றே வழி” என்றார் அமைச்சர். தன்னந்தனிமையில் விண்ணுக்குக் கீழ் நிற்கும் உணர்வை அடைந்து நெஞ்சுபொங்கி விழிகலங்கியபின் அதை இமைகொட்டி வென்று நீள்மூச்சென வெளியிட்டு வீணையை அணைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டார்.
அன்று மாலை அவர் மத்ரபுரிக்கு கிளம்பும் முறை ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. அவர் ஆணைப்படியே அமைச்சர் மத்ரபுரிக்கு அவர் வருவதை அறிவித்து பறவைத்தூது அனுப்பினார். ‘மத்ரநாட்டு அரசர் சல்யர் பாதம் பணிந்து அடைக்கலம் கொள்ள அவரது குடிவழி வந்த எளியோனாகிய பிருஹத்சேனன் விழைகிறேன்’ என்ற வரியை அமைச்சர் வாசித்தபோது பிருஹத்சேனரின் தொடை நடுங்கியது. “திருமுகத்தில் முத்திரையிடுங்கள் அரசே” என்று அமைச்சர் சொன்னதும் ஒருகணம் சினம் எழுந்தது. மறுகணமே கசப்பு நிறைந்த சிரிப்பு வந்தது. “எளியோன் என்றா அரசன் என்றா?” என்றார். அமைச்சர் “இது ஓர் அரசு சூழ்தல். தாங்கள் அரியணை அமர்ந்திருக்கும் வரை அரசரே” என்றார். “அரியணை இன்னும் எத்தனைநாள்?” என்றார் பிருஹத்சேனர். அமைச்சர் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் வருகையை எதிர்நோக்குவதாக சல்யரின் மறுமொழியும் வந்தது. அரசரும் அரசியும் இளவரசியுடன் அன்று மாலை கிளம்பி மறுநாள் புலரியில் மத்ரபுரி செல்வதாகவும் அன்று பின்மாலையில் சல்யரை அவையில் சந்திப்பதாகவும் ஒருங்கிணைக்கப்பட்டது. சல்யருக்கான ஐவகை பரிசில்களும் தேரில் ஏற்றப்பட்டன. அரசணித் தோற்றம் பூண்டு வந்த பிருஹத்சேனர் எவர் விழியையும் நோக்காது விடைபெற்று தேரில் ஏறி ஒரு சொல்லும் சொல்லாமல் புரவிகளை நோக்கி அமர்ந்திருந்தார். தனித்தேரில் அரசியும் இளவரசியும் ஏறிக்கொண்டார்கள். அவர்களும் நிலைகுலைந்த உள்ளம் கொண்டிருந்தனர். இருளில் மலைவிளிம்பிலிருந்து குதிப்பதுதான் அது என அவர்கள் அறிந்திருந்தனர். அங்கே நீரோ மென்சதுப்போ இருக்கலாம். கரும்பாறை வாய்திறந்த பெரும்பள்ளமும் காத்திருக்கலாம்.
புரவிக் குளம்படிகள் ஒலிக்கத்தொடங்கியபோது பிருஹத்சேனர் உடல்நடுங்கினார். தேர் நகரைவிட்டு நீங்கியபோது தலைகுனிந்து அமர்ந்திருந்தார். வழிநெடுகிலும் எழுந்த வாழ்த்தொலிகள் எதையும் ஏற்கவில்லை. எல்லைக் காவல்மாடங்களில் வணங்கியவர்களை நோக்கவுமில்லை. அரசியின் தேரின் திரைச்சீலைகள் விலக்கப்படவில்லை. அரசி மெல்லமெல்ல அழத்தொடங்கிவிட்டிருந்தாள். இளவரசி முகத்திரைமூடி அழும் தாயை நோக்காமல் வெளியே உடன் ஓடிவந்த காட்டையே நோக்கிக்கொண்டிருந்தாள்.
அவர்களுடன் பதினெட்டு புரவிவீரர்களும் ஏழு அகம்படியினரும் அமைச்சரும் மட்டும் சென்றனர். உபமத்ரத்தின் குயில்கொடியுடன் வீரன் ஒருவன் முன்னால் சென்றான். உபமத்ரம் மகதத்தின் படைகளால் சூழப்பட்டிருந்தது. அதன் நிலைப்படைத் தளபதிக்கு எச்செய்தியும் சொல்லப்பட்டிருக்கவில்லை. உபமத்ரத்தின் வட எல்லையில் இருந்த கொற்றவை ஆலயத்தில் அரசரும் அரசியும் தன் மகளுக்காக மங்கலப்பூசனை செய்வதாகவே வெளியே அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப கொற்றவை ஆலயத்தில் அலங்காரங்களும் பலிவழிபாட்டுமுறைமைகளும் ஒருக்கப்பட்டிருந்தன. பன்னிரு பலியாடுகள் அரசருடன் பலிக்கென கொண்டு செல்லப்பட்டன.
கொற்றவை ஆலயத்தில் பலிகொடுத்து பூசை முறைமைகள் இயற்றி அனைவரும் ஊன்சோறு உண்டு படையல் மதுவை அருந்தி மகிழ் கொண்டாடிக் கொண்டிருக்கையில் அரையிருளில் பிருஹத்சேனரும் மிலிந்தையும் லக்ஷ்மணையும் கிளம்பி எல்லையென அமைந்த சிற்றோடையை அடைந்து மத்ர நாட்டுக்குள் செல்வதாக வகுத்திருந்தார் அமைச்சர். அரசகுலம் நீங்கிச்சென்ற செய்தி மிகவிரைவிலேயே வெளிப்படும் என்றும் உடனே அரண்மனையினரும் அமைச்சர்களும் சிறைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிந்திருந்தார். முதலில் அவர் கழுவேற வேண்டியிருக்கும். தன் மைந்தனிடம் கழுவேறி உயிர்விட்டபின் தனக்கு ஆற்றவேண்டிய நீத்தார்கடன்கள் என்னென்ன என்று ஓலையில் எழுதியளித்துவிட்டு அவர் வந்திருந்தார்.
கொற்றவை ஆலயம் காட்டின் ஓரமாக இருந்த கரும்பாறை ஒன்றில் குடைந்து உருவாக்கப்பட்டது. எட்டுதடக்கைகளும் நெற்றிப்பிறையும் கொண்டு சினந்து செவ்விழி சூடி அமர்ந்திருந்த அன்னை பாறைச்சுவரிலேயே செதுக்கப்பட்டிருந்தாள். ஆலயமுகப்பை அடைந்து இறங்கி அங்கிருந்த சிற்றோடையில் கால்கழுவி ஆலயத்துக்குள் சென்ற பிருஹத்சேனர் தன் பீடத்தில் கைகளை மார்போடு கட்டிக்கொண்டு அமர்ந்தார். அருகே மேலாடையால் முகம்மூடி மிலிந்தை அமர பின்னால் இளவரசி அமர்ந்தாள். பூசகர்கள் நெறிகாட்ட அரசரும் அரசியும் பொறிஅமைக்கப்பட்ட செயல்பாவை போல் முறைமைகளை செய்தார்கள்.
பலி பீடத்தருகே ஒவ்வொன்றாக இழுத்து வரப்பட்டு தழைகாட்டி கழுத்துநீட்டச் செய்யப்பட்டு நீர்தெளித்து ஒப்புதல்பெற்று தலைவெட்டப்பட்ட ஆடுகள் கால்உதைத்து மெய்விதிர்ப்பு கொண்டு விழிஉறைந்து அசைவின்மைக்குள் மூழ்கிச் செல்வதை வெறுமனே நோக்கிக் கொண்டிருந்தார். அவ்வூனை உரித்து தினைச்சோறுடன் சமைத்து அன்னைக்கும் உடனமர்ந்த பதினெட்டு துணைத்தெய்வங்களுக்கும் படைத்தனர். பின்பு வீரரும் பூசகரும் துடியும் முழவும் என விழவு கொண்டாடிய சூதரும் ஊனுணவுக்கென வந்த மலைமக்களும் உண்பதற்கு அமர்ந்தனர். அன்னைக்கு பதினெட்டு புதுமண்கலங்களில் படைக்கப்பட்ட எரிமண மலைமதுவை தொன்னைகளில் வாங்கி மூக்குவழிய அருந்தினர். ஊன்சோறு அள்ளி உண்டு கூவி நகைத்து நடனமிட்டு கொண்டாடினர். அவர்கள் ஏற்றிய பந்தங்களும் பெருங்கணப்புகளும் காடெங்கும் சுடர் விட்டன.
கையில் மதுவுடன் அமர்ந்திருந்த அரசர் அருகே வந்த அமைச்சர் குனிந்து “அரசே, கிளம்பும் நேரம்” என்றார். பிருஹத்சேனர் எழுந்து தன் ஆடையை சீரமைத்து தொடர்ந்துவந்த அரசியையும் இளவரசியையும் திரும்பி நோக்காமல் தேரில் ஏறிக்கொண்டார். ஓசைகளின்றி அவர்கள் காட்டுக்குள் சென்றனர். மது உண்டு களித்திருந்த எவரும் அதை அறியவில்லை. சகடங்களை மெல்ல உருட்டி புதர்செறிந்த காட்டை வகுந்து சென்றார்கள். அமைச்சர் “நான்காவது சிற்றோடைக்கு அப்பால் மத்ரம் அரசே. அதைக் கடந்தபின் நீங்கள் அஞ்சவேண்டியதில்லை” என்றார்.
மத்ர நாட்டின் எல்லையென ஓடிய சிற்றோடை பச்சை ஆடைக்குள் கரந்த வஞ்சக்கூர்வாள் என மின்னித்தெரிந்தது. அதன் ஓசை காதில் விழுந்ததுமே உடல்நடுங்க தேரில் எழுந்துவிட்டார். இரு கைகளாலும் தேர்த்தூண்களைப் பற்றியபடி நின்றார். மலைவிளிம்பில் சிறுகொடியில் பற்றித்தொங்க காலடியில் அடியற்ற பேராழம் தென்படுவதைப் போல பதைத்தார். புரவி நீரோடையை நெருங்கியது. கூழாங்கற்சரிவில் அதன் சகட ஒலி மாறுபட்டது. ஓடையை அளையும் ஆரக்கால்கள் மான்கூட்டம் நீர் அருந்துவதுபோல் ஒலித்தன. மறுபக்கக் கூழாங்கற்சரிவில் தேர் ஏறியபோது அவர் பின்னால் சரிந்தார்.
எல்லை கடந்ததும் பாகன் சற்று எளிதாக ஆகி கடிவாளத்தை தழைக்க குதிரைகள் கால்களை மெல்லவைத்தன. அந்த ஒலிமாறுபாட்டை உணர்ந்ததுமே பிருஹத்சேனர் கைகளை விரித்து ”நில்லுங்கள்! நிறுத்துங்கள் தேரை!” என ஆணையிட்டார். பாய்ந்து தேரில் இருந்து இறங்கி திரும்பி புண்பட்ட பன்றி என காட்டுப்புதர்களைக் கடந்து ஓடி உபமத்ரத்தின் எல்லைக்குள் நுழைந்தார். பின்னால் வந்த தேரிலிருந்து இறங்கிய அரசி “அரசே!” என்று கூவியதை அவர் கேட்கவில்லை.
“அரசே, என்ன ஆயிற்று?” என எதிரே பதைத்து ஓடிவந்த அமைச்சரிடம் “அமைச்சரே, என் குடி இழிந்து கொடிவழிகளின் மேல் பழி விழுந்தாலும் சரி, மலை வேடருக்கும் மச்சர்களுக்கும் நிகராக அமர்ந்துண்ணும் இழிவடைந்தாலும் சரி, இதை என்னால் இயற்ற முடியாது. உயிர் இழத்தலைவிட கொடியது. எரிநரகைவிட கொடியது. மலப்புழுவெனப் பிறத்தலைவிடக் கொடியது… என்னால் இயலாது அமைச்சரே” என்று கூவி கண்ணீர் விட்டபடி அவர் முன் காலோய்ந்து விழுந்தார்.
அவர் சென்றதையும் மீண்டதையும் மகதம் அறிய சிலநாழிகைகளே போதுமென பிருஹத்சேனர் அறிந்திருந்தார். எதிர்பார்த்தபடியே சிலநாட்களில் உபமத்ரத்திற்கு மகதத்தின் செய்தி வந்தது. மச்ச நாட்டு அரசர் உலூகரின் மகன் சம்புகனுக்கு அவர் மகள் லக்ஷ்மணையை மணம் பேசிய அச்செய்தியுடன் வந்த மகதத்தின் அமைச்சர் கலிகர் ஜராசந்தர் அம்மணவிழாவுக்கு நேரில் வந்து உபமத்ரத்தை வாழ்த்தவிருப்பதாக சொன்னார். அதிலிருந்தது ஒரு தண்டனையும் கூட என அறிந்தார் பிருஹத்சேனர். அரியணையில் அமர்ந்திருந்தவர் ஒரு சொல்லும் சொல்லாமல் உறைந்த முகத்துடன் ஓலையை வாங்கி ஓரிரு வரிகளை படித்துவிட்டு தன் அமைச்சரிடம் கொடுத்துவிட்டார்.
மகதத்தின் அமைச்சர் கலிகர் “இக்கடிமணம் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் நிகழவேண்டுமென்று ஜராசந்தர் விரும்புகிறார். எல்லைப்பகுதி நட்புநாடுகளை நேரில் காணும் பொருட்டு அவர் இம்மாதம் முழுநிலவு நாளில் கிளம்புகிறார். சௌவீரத்திற்கு வந்தபிறகு இங்கும் வருவார். அவர் வரும்பொழுது மணநிகழ்வை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். வளர்பிறை பதின்மூன்றாம் நாள் உகந்தது. காலைநேரம் திருமணத்திற்கு உரியது என ஜராசந்தர் கருதுகிறார். மாலைநேரங்களில் அவர் மது அருந்தி கலைகள் தேர்வதனால் அவை நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் இல்லை” என்றார்.
அரியணை அருகே அமர்ந்திருந்த அரசி சற்றே சினத்துடன் “மணமகனையும் மணநாளையும் மட்டுமின்றி நேரத்தையும் குறித்து அனுப்பியிருக்கிறார் உங்கள் அரசர்” என்றாள். கலிகர் சினம் தெரிந்த விழிகளுடன் “என் சொல் பொறுத்தருள்க அரசி! அவர் உங்களுக்கும் அரசரே” என்றார். அரசி தன் மேலாடையை நெற்றிமேல் இழுத்துவிட்டுக்கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டாள். பிருஹத்சேனர் “இதில் மாற்றுச்சொல் ஏதும் நான் சொல்வதற்கில்லை கலிகரே. நான் மகதச் சக்ரவர்த்தியின் அருள்நாடி நிற்பவன்” என்றார்.
சற்றே விழிகனிந்த அமைச்சர் “மச்ச நாட்டு இளவரசரை நான் நேரில் பார்த்ததுண்டு. அவரது தோற்றம் அழகியது அல்ல. அவர் குலம் உயர்ந்ததும் அல்ல. அவர்கள் சென்ற ஐந்து தலைமுறைகளாகவே அரசகுடியென கருதப்படுகிறார்கள். படைக்கலமேந்தி போரிடவோ நூல் கற்று மன்றம் வரவோ இன்னும் அவர்களில் எவரும் பயிற்சி பெறவில்லை. உண்மையில் இளவரசர் இன்னும் சர்மாவதியில் மீன்பிடிக்கும் பரதவராகவே நாட்களை கழிக்கிறார். ஆயினும் இனிய குணமுடையவர். பிறரை புரிந்துகொள்ளும் விழிகள் கொண்டவர். உங்கள் இளவரசி ஒருபோதும் அவரை வெறுக்கமாட்டாள்” என்றார்.
அவர் சொற்களில் ஒலித்தது சிறிய ஏளனமா என்று எண்ணியபடி பிருஹத்சேனர் நோக்கினார். அமைச்சர் “நீங்கள் எண்ணுவது புரிகிறது பிருஹத்சேனரே. நான் என் உள்ளக்கிடக்கையைத்தான் சொன்னேன். நானும் ஏழு பெண்களுக்கு தந்தைதான். என் மகள்களை குலமும் செல்வமும் கொண்ட இளைஞர்களுக்கு மணம் முடித்தேன். அவர்களில் நல்லியல்பு கொண்ட இருவரிடம் மட்டுமே என் பெண்கள் மகிழ்ந்து வாழ்கிறார்கள். பிற மணங்களனைத்துமே அவர்களுக்கு ஒருவகை இறப்புகளாகவே அமைந்தன. இதை நான் சொல்வது உபமத்ரத்தின் அரசரிடமல்ல, இளம் பெண்ணொருத்தியைப் பெற்ற தந்தையிடம்” என்றார்.
பெருமூச்சுவிட்டு பிருஹத்சேனர் சொன்னார் ”இத்தகைய எளிய சொற்களால் என்னை நிறைவு செய்து கொள்ளவேண்டியதுதான். பிறிதொரு வழியும் எனக்கில்லை அமைச்சரே.” பேச்சை விலக்கும்பொருட்டு கலிகர் புன்னகைத்து “தாங்கள் வீணை வல்லவர் என்றார்கள். உங்கள் இசையை கேட்க விழைகிறேன் அரசே” என்றார். பிருஹத்சேனர் “தவறான விழைவு அமைச்சரே. என் இளவயதில் அவமதிக்கப்பட்ட இளமையின் சீற்றத்துடன் சென்று இவ்வுலகையே உதறி அது ஒன்றே அடைக்கலமெனக் கருதி அடிபணிந்து இசையை அடைந்தேன். இன்று அதை நான் இழந்துவிட்டேன்” என்றார்.
“இறைவனைக் காண்பதற்கு நிகரான தவம் செய்து இசையை அடைந்தேன். ஆனால் என்று மீண்டு வந்து என் ஆசிரியர் முன் நின்று வென்றேனோ அப்போதே அதன் பணி முடிந்துவிட்டது. அதன் பின் என் வீணை வெறும் கேளிக்கைப் பொருளாகவே இசைத்திருக்கிறது. என் வெற்று ஆணவத்தை மட்டுமே அது வெளிக்காட்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அது தன் நுண்மையை இழப்பதை நான் அறிந்திருக்கவில்லை. என் மகள் தன் கைகளால் வீணையைத் தொட்டு கற்றுக் கொண்டது என்னிடம். ஒவ்வொரு நாளும் தன் கனவின் இசையை அவள் விண்ணிலிருந்து பெற்றுக்கொண்டான். ஒரு முறை அவள் இசைக்கையில் பிறிதொரு அறையிலிருந்து கேட்ட நான் எண்ணியிருக்காத கணமொன்றில் உள்ளம் திறந்து உடல் சிலிர்த்தேன். அவ்வறைக்குள் சென்று பார்த்தபோது அறைமுழுக்க தோட்டத்துச் சிறுகுருவிகள் வந்தமர்ந்து இசை கேட்பதைக் கண்டேன். நான் விட்ட இடத்திலிருந்து தொட்டு அவள் முன் சென்றிருக்கிறாள் என்று அறிந்தேன். நான் இழந்ததென்ன என்று புரிந்து கொண்டேன். இன்று என்னிடமிருப்பது ஓசையை மட்டுமே கிளப்பும் ஒரு வீணை மட்டுமே” என்றார்.
அமைச்சர் “தாங்கள் உளமிசைந்தால் நான் இளவரசியின் இசையை கேட்க விழைகிறேன்” என்றார். “வேதமறிந்த பிராமணராகிய நீங்கள் கேட்டு ஒரு சொல் வாழ்த்தினாலும் அது இளவரசிக்கு கொடையே” என்றார் பிருஹத்சேனர். அமைச்சரை அன்று மாலை தன் மகளிர் மாளிகையின் சிற்றவைக்கு வரச்சொன்னார். அங்கு அவரும் அரசியும் அரச மகளிர் நால்வரும் மட்டும் அமர்ந்த அவையில் அவர் கோரியதற்கிணங்க இளவரசி லக்ஷ்மணை தன் வீணையை மீட்டி இசைக்க ஒப்புக்கொண்டாள்.
சேடியர் வந்து அவள் அமர செம்பட்டு விரித்த பீடத்தை ஒருக்கிவிட்டுச் சென்றனர். அருகே துணைப்பீடங்களிட்டனர். அமைச்சர் தாம்பூலத்தை எடுத்து சுருட்டிக் கொண்டிருக்கும்போது மெல்லிய சிலம்பொலியை கேட்டார். இயல்பாக விழி திருப்பியவர் திறந்த கதவுக்கு அப்பாலிருந்து மெல்ல இருளில் வண்ணங்கள் பூத்து உள்ளே வந்த மத்ர நாட்டு இளவரசியைக் கண்டார். தன்னை அறியாது எழுந்து நின்றார். இயல்பாக கூப்பிய கைகளுக்குள் இருந்த வெற்றிலைச் சுருளை உணர்ந்து திகைத்து மீண்டும் தாலத்திலேயே வைத்தார். அவர் கண்டது மெய்களை அனைத்தும் அறிந்து அறிவதற்கு அப்பால் என நின்ற கல்வித் திருமகளை.
பீடத்தில் வந்தமர்ந்து தந்தையையும் அமைச்சரையும் வணங்கி அன்னையை நோக்கி புன்னகைத்து இளவரசி வீணையை மடியிலிருத்திக் கொண்டாள். அதன் கம்பிகளை அவள் நீண்டமெல்லிய விரல்கள் முறுக்கின. மெல்ல வருடி இறுக்கத்தை அறிந்தன. அவள் மீட்டத் தொடங்குவதற்குள்ளாகவே அமைச்சர் தேனிசை ஒன்றை கேட்டுவிட்டார். வீணை இசையென மாறத் தொடங்கியபின் அவர் அங்கு இல்லை. பருப்பொருளென தன்னை விரித்து இங்கே நிறைந்திருக்கும் மாயை ஒலி மட்டுமே என அவர் முன் நின்றது. மீட்டி முடித்து இளவரசி கை கூப்புகையில் கண்ணீர் வார நெஞ்சில் கை சேர்த்து தாடியின் வெண்மயிர்களில் விழிநீர் முத்துகள் தங்கி ஒளிர அமைச்சர் அமர்ந்திருந்தார். பின் எழுந்து அரசரை வணங்கி தன் மாளிகைக்கு மீண்டார். மறு நாள் கிளம்பி மகதத்திற்கு சென்றார்.
ஜராசந்தரிடம் அவர் சொன்னது என்ன என்பதை நூல்கள் வகைக்கொன்றாக சொல்கின்றன. அறிவதெல்லாம் ஆகி நின்ற கலைத்திருவை கண்களால் கண்டதாக அவர் சொன்னார் என்கிறார்கள். நிகரற்ற வைரம் தூய வெண்பட்டிலேயே அமர்ந்திருக்கவேண்டும். மண்ணாளும் மணிமுடி ஒன்றே அதை சூட வேண்டும். தெய்வம் என்பது ஏழ்நிலை மாடம் எழுந்த பேராலயத்திலேயே அமர வேண்டும் என்று அவர் சொன்னார்.
இளவரசி அழகு குறித்த அவரது சொற்கள் ஜராசந்தரை ஈர்த்திருக்க வேண்டும். சில நாட்களுக்குப் பின் அவர் கிளம்பி பிறநாடுகளைத் தவிர்த்து நேராக உபமத்ரத்திற்கு வந்தார். அவரது வருகை அச்சுறுத்தினாலும் மெல்லமெல்ல பாரதவர்ஷத்தின் பெரும் சக்ரவர்த்தி ஒருவரின் வருகையின் களியாட்டை உபமத்ரம் அடைந்தது. அரசவை கூடி மகதத்தின் பேரரசருக்கு வரவேற்பு முறைமைகள் அமைத்தது. நகரம் கொடித்தோரணமும் மலர்த்தூண்களும் பட்டுப்பாவட்டாக்களுமாக அணிகொண்டு பூத்தது.
மதமெழுந்த பெருங்களிறுகள் நூறும் ஆயிரம் வெண்புரவிகளும் ஐந்தாயிரம் கவசவேல் படையினரும் அணிச்சேடியரும் இசைச்சூதரும் அகம்படியாக வர நகர்நுழைந்தார் ஜராசந்தர். முரசுகள் இயம்ப கொம்புகள் பிளிற நகர்வாயிலில் சென்று நின்று அவரை தாள்தொட்டு வாள்தாழ்த்தி வணங்கி வரவேற்று அழைத்து வந்தார் பிருஹத்சேனர். தனது அரியணையில் ஜராசந்தரை அமரச்செய்து அருகே எளிய பீடத்தில் அமர்ந்துகொண்டார். அரசியும் இளவரசியும் அவர் அருகே ஜராசந்தரைப் பணிந்து நின்றனர். உபமத்ரத்தின் மணிமுடியையும் செங்கோலையும் தான் அணிந்து அமர்ந்து குடிகளுக்கும் வணிகருக்கும் கொலுவளித்தார் ஜராசந்தர். வேதியருக்கும் புலவருக்கும் சூதருக்கும் பாணருக்கும் விறலியருக்கும் தொழும்பருக்கும் அவர்கள் வாழ்நாளில் கண்டிராத பெரும் பரிசுகள் அளிக்கப்பட்டன. வணிகர்களுக்கான சாத்துகள் பிறப்பிக்கப்பட்டன. அதன் பின் மத்ரகுடிகள் அதுவரை அறிந்திராத பெரும் உண்டாட்டொன்று நிகழ்ந்தது.
உண்டாட்டு நிகழ்வில் விருந்துக்கு முன் தன்னறையில் மது அருந்தி அமர்ந்திருந்த ஜராசந்தர் உபமத்ரத்தின் இளவரசியை தான் மணக்கவிருப்பதாக சொன்னார். பிருஹத்சேனர் திகைத்து எழுந்துவிட்டார். ஜராசந்தருக்கு பதினெட்டு துணைவியர் முன்னரே இருப்பதை அவர் அறிந்திருந்தார். முறைசாரா துணைவியர் எண்ணிலடங்காதவர். பட்டத்து அரசி வங்கத்து அரசனின் மகள். அரண்மனையில் ஒரு சேடி என்பதற்கு அப்பால் தன் மகளுக்கு இடமிருக்கப்போவதில்லை என்று உணர்ந்தார். ஆயினும் அவரால் சொல்லெடுத்து முன்வைக்க இயலவில்லை.
“உமது மகளை இன்று அவையில் பார்த்தேன் மகதத்தின் மகளிரறையில் அன்றி வேறெங்கும் இருக்கலாகாது அவள். அவள் அழகு பேரரசர்களுக்குரியது” என்று சொல்லி ஜராசந்தர் நகைத்தார். பிருஹத்சேனர் சொல் அடங்கி விழிநனைந்து அமர்ந்திருந்தபோதிலும் அரசி அச்சொற்களைக்கேட்டு மகிழ்ந்தாள். ”மகதத்தின் அரசருக்கு துணைவியாவது எனது குடி மூதாதையருக்கு உவகையளிப்பது. எனது மகளின் வாழ்வு இப்போது பூத்தது. இதைவிட பெரிய கொடை என ஏதும் நாங்கள் வேண்டவில்லை” என்றாள்.
திரும்பி தன் அமைச்சரை நோக்கிய ஜராசந்தர் “அமைச்சரே, அவ்வண்ணமெனில் இனி பிந்தவேண்டியதில்லை. இளவரசியை கைக்கொள்ள நாளும் கோளும் தெரிந்து சொல்ல நிமித்திகருக்கு ஆணையிடுக!” என்றார். கலிகர் “அவ்வண்ணமே” என்று தலைதாழ்த்தினார்.