‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 2

திருஷ்டத்யும்னனை அரசவைக்கு அழைத்துச் செல்வதற்காக சாத்யகி தன் தேரில் அவன் மாளிகை முற்றத்துக்கு வந்திருந்தான். அவன் தேர் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் அணியாடையுடன் மாளிகை முகப்புக்கு வந்து சாத்யகியை நோக்கி கை அசைத்து புன்னகை புரிந்தான். அவனிடம் வழக்கமான சிரிப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு ”இன்னமும் முடிவெடுக்க முடியவில்லை போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் தேரில் ஏறி எடையுடன் பட்டு விரித்த இருக்கையில் அமர்ந்து தன் கைகளை முழங்கால் மேல் வைத்துக்கொண்டு “ஆம்” என்று தலையசைத்தான்.

“முடிவெடுக்க முடியவில்லை என்பதையே அதற்கான விளக்கமாக சொல்லும் படைத்தலைவன் ஒருவன் என்னிடம் இருக்கிறான்” என்றான் சாத்யகி. “அவனை பலமுறை இகழ்ந்திருக்கிறேன். ஆனால் அவன் உண்மையை சொல்கிறான், நாம் வேறு சொற்களில் அதை விளக்குகிறோம் என்று பின்னர் தோன்றியிருக்கிறது.” திருஷ்டத்யும்னன் “யாதவரே, நாம் அரசவைக்குச் செல்வதற்கு முன் மத்ரநாட்டு அரசியை பார்க்கச் செல்கிறோம்” என்றான். சாத்யகி சற்று வியப்புடன் “மாத்ரியையா? ஏன்?” என்றான். “அங்கிருந்து அழைப்பு வந்தது” என்றான் திருஷ்டத்யும்னன். “இப்போதா?” என்றான் சாத்யகி. “ஆம். அரசவை கூடுவதற்கு முன் தன்னை வந்து சந்திக்கும்படி மாத்ரியின் ஆணை வந்துள்ளது.”

சாத்யகி ”அப்படியென்றால், தாங்கள் அரசவைக் கூட்டத்திற்குப்பின் யாதவ அரசியை சந்திக்கவிருப்பதைப் பற்றி மாத்ரி அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி தலையசைத்து “எதற்காகவென்று உணரமுடியவில்லை” என்றபின் “அப்படியென்றால் தங்கள் தந்தை அனுப்பிய தூதைப்பற்றி மத்ரநாட்டு அரசி அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம், அவர்களுக்கும் அங்கு அவையில் ஒற்றன் இருந்திருப்பான். சல்யரின் தூது மத்ர நாட்டில் இருந்து கிளம்புகையிலேயே அவர் அறிந்திருப்பார்” என்றபின் திருஷ்டத்யும்னன் “இதில் மாத்ரியின் ஆர்வம் என்ன?” என்றான்.

சாத்யகி “பாஞ்சாலரே, சல்யரின் மகளை தாங்கள் மணமுடிப்பதை மாத்ரி விரும்பமாட்டார்” என்றான். திகைப்புடன் “ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “மாத்ரியை இளைய யாதவர் மணம் கொண்ட முறையை தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “சூதர் பாடல்களில் கேட்டிருக்கிறேன். அஷ்டாத்யாயியில் அதை வாசித்திருக்கிறேன். ஆனால் அவற்றிலிருந்து அரசியலை உய்த்துணர கூடவில்லை” என்றான்.

சாத்யகி “நான் விரிவாக உரைக்கிறேன். நமக்கு நேரமுள்ளது“ என்றபின் பாகனின் தோளைத்தட்டி தேரை கொற்றவை ஆலயமுகப்பின் செண்டுவெளிக்கு செலுத்துமாறு ஆணையிட்டான். தேர் துணைச்சாலையில் திரும்பி மேடுபள்ளங்களின்மேல் சகடங்கள் விழுந்து எழுந்தமையால் ஒலி எழுப்பியபடி சென்றது. நுகம் வளைத்து புரவிகள் கழுத்து திருப்பி நீள்மூச்சிட்டு குளம்புகள் உதைத்து வால்குலைத்து நிற்க செண்டுவெளியின் தெற்கு மூலையில் நின்றது தேர். சாத்யகி இறங்கி வடுக்கள் நிறைந்த முகம் என புரவிக்குளம்புகள் இடைவெளியில்லாமல் படிந்த செம்மண் முற்றத்தின் மறுஎல்லையில் ஏழு தட்டுகள் கொண்ட கூம்புக்கோபுர முகடுடன் நின்ற கொற்றவை ஆலயத்தையும் அதன்மேல் பறந்த செந்நிறக் குருதிக்கொடியையும் நோக்கினான்.

திருஷ்டத்யும்னன் அருகே வந்து நின்றான். சாத்யகி “இளவரசே, முன்பு மத்ர நாட்டில் இருந்து சல்யரின் தூது ஒன்று துவாரகைக்கு வந்தது. அரசி லக்ஷ்மணையை மாத்ரி என்ற சொல்லால் சுட்டலாகாது, மத்ர நாட்டுக்கும் அவர் தந்தை பிருஹத்சேனருக்கும் எவ்வித உறவும் இல்லை என்று” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம். அதை நான் அறிவேன். சல்யரின் கொடிவழியில் வந்தவரெனினும் முடிசூட உரிமையற்றவர் பிருஹத்சேனர்” என்றான். “முடி சூடும் உரிமையற்ற தாயாதியர் எந்த அரசகுலத்திலும் உண்டு. அவர்களுக்கென நெறிகளும் முறைமைகளும் வகுக்கப்பட்டுள்ளன.”

“பிருஹத்சேனர் சல்யரின் அன்னை கிருபாதேவியின் இளையோனாகிய சுகேசவர்மரின் முதல் மைந்தர். சல்யரின் தந்தை ஆர்த்தாயனரின் அரண்மனையில் பிருஹத்சேனர் இளவரசர்களில் ஒருவராக வளர்ந்தார். சல்யரின் களித்தோழராக இருந்தார். ஆனால் சல்யரின் விற்தொழில் தேர்ச்சியும், படைத்திறனும், துணிவும் அற்றவராக இருந்தார். அறியா இளமையில் அவரை வளர்த்த செவிலியன்னை ஒருத்தி மடியிலிருந்து அவர் வீணையை தொட்டறிந்தார். படைக்கலப் பயிற்சிக்கு சென்றபோதும்கூட அவர் உள்ளம் வீணையிலேயே இருந்தது. இரவுகளில் எவருமறியாது அரண்மனைச் சூதரிடம் வீணை கற்றுக்கொண்டார்” சாத்யகி சொன்னான்.

வீணை பழகிய அவரின் விரல்கள் வில்லையோ வாளையோ ஆளும் திறனற்று இருந்தன. அவர்களின் ஆசிரியரான விஜயவர்மரின் குருகுலத்தில் ஒரு வில்தேர்வில் ஏழு முறை அவரது அம்புகள் பிழைபட்டன. சினம்கொண்டு எழுந்துவந்து வில் மூங்கிலால் அவரை ஓங்கிஅறைந்த ஆசிரியர் அவர் குடுமியைப்பற்றி எழுப்பி சுவரோடு சேர்த்து நிறுத்தி ”மூடா, இங்கு நீ என்னிடம் கற்றதெல்லாம் எங்கு சென்றன? இங்கு நீ அமர்ந்திருக்கையில் உன் உள்ளம் எங்கிருக்கிறது?” என்றார். ”நீ நான் அளித்த பயிற்சிகள் எதையும் ஆற்றவில்லை. உன் கைகளைக் காட்டு. அங்கு நாண் தழும்பு உள்ளதா என்று பார்க்கிறேன்” என்று கூறி அவர் கரங்களை தூக்கிப்பிடித்துப் பார்த்தார். அங்கு நாண் தழும்புகளுக்கு மாறாக சுட்டு விரலில் வீணைநரம்பு பட்டு காய்த்த தழும்பு இருந்தது.

அதைத்தொட்டு நோக்கி “உண்மையைச் சொல்! நீ செய்யும் பயிற்சி என்ன? எப்படைக்கலத்தை நீ வெல்கிறாய் நான் அறியாமல்?” என்றார் விஜயவர்மர். பிருஹத்சேனர் கைகூப்பி கண்ணீர்மல்கி “என் இறையே, பொறுத்தருள்க! இரவுகளில் நான் வீணை பயில்கிறேன்” என்றார். “வீணையா?” என்று நம்பமுடியாமல் கேட்டார் விஜயவர்மர். தலைகுனிந்து “ஆம்” என்றார் பிருஹத்சேனர். பற்றியிருந்த குடுமியைச் சுழற்றி அவரைத்தூக்கி சேற்றில் வீசி ”சீ! இழிமகனே, இப்பயிற்சிக்களத்தில் நின்று என் முகம்நோக்கி இதைச் சொல்ல நீ நாணவில்லையா? வாளெடுத்து களம்காண வேண்டிய கைகளால் வீணையை மீட்டுவதற்கு நீயென்ன சூதனா? உன் தாயின் களவில் பிறந்தாயா?” என்று கூவினார். மண்ணில் விழுந்து ஆடைகலைய குழல்சிதறக் கிடந்து கண்ணீர் வழிய பிருஹத்சேனர் விம்மினார். அவரை ஓங்கி உதைத்து “எழுக! இக்கணமே என் கல்விக்கூடம் விட்டு செல். இனி ஒருமுறையும் உன் முகத்தில் நான் விழிக்கலாகாது. உன்னை பேடி என்று நான் எண்ணுவதனால் மட்டுமே இப்போது நெஞ்சைப் பிளந்து உயிர் குடிக்காமல் விடுகிறேன். செல்க இழிமகனே!” என்றார் விஜயவர்மர்.

மண்ணில் தவழ்ந்து உடலெங்கும் சேறும் பொடியும் படிந்து எழுந்து கூடியிருந்த பிற மாணவர்களின் இளிவரல் நகைப்பைக் கண்டு விழிதாழ்த்தி உடல்குறுக்கி கூப்பிய கை அணைந்த மார்பின்மேல் கண்ணீர் சொட்ட பிருஹத்சேனர் களம்நீங்கினார். பின்னர் அவர் மத்ரபுரியில் தங்கவில்லை. தனியராகக் கிளம்பி காசிக்கும் பின் மகதத்திற்கும் இறுதியாக தென்னகத்திற்கும் சென்று அங்கிருந்த பாணரிடம் யாழும் வீணையும் கற்று தேர்ந்தவரானார். வீணை அவர் நெஞ்சாகியது. விண்ணில் அவருக்கென பேசும் தெய்வமாகியது என்பது சூதர் சொல்.

எட்டு ஆண்டுகளுக்குப் பின் அவரது ஆசிரியர் விஜயவர்மர் தன் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்திக்கொண்டிருந்தபோது களத்தை வளைத்த மூங்கில்வேலியை விலக்கி தன் வீணையுடன் பிருஹத்சேனர் வந்தார். ஓங்கிய வேங்கை மரத்தின் உச்சியில் மலர்ந்திருந்த ஒற்றைமலர் ஒன்றைச்சுட்டி அதை அம்பால் வீழ்த்தவேண்டும் என்பது விஜயவர்மர் தன் மாணவர்களுக்கு அளித்த தேர்வு. விற்களுடன் நிரைவகுத்து நின்ற மாணவர்கள் அம்பறாத்தூணியில் ஏழு அம்புகளை மட்டுமே சூடியிருந்தனர். ஆசிரியர் ஆணையிட்டதும் ஒவ்வொருவராக வந்து நின்று அம்புகொண்டு மலர்கொய்ய முற்பட்டனர்.

அவர்களின் விற்களில் இருந்து எழுந்த அம்புகள் ஒவ்வொன்றாக வளைந்து அம்மலரைச் சூழ்ந்திருந்த இலைகளையும் தளிர்களையும் சீவி நிலம் மீண்டன. காற்றிலாடும் கிளையில் இலைகளுக்கு நடுவே இருந்த அம்மலரை மட்டும் தொட எவராலும் முடியவில்லை. சல்யர் இறுதியாக வந்தபோது ஆசிரியர் “இளையோனே, இக்கல்விக்கூடம் உன்னால் நிறைவுற வேண்டும்” என்று மன்றாடும் குரலில் சொன்னார். “ஆம்” என தலைவணங்கியபின் சல்யர் அம்புகளைத் தொடுத்தார். ஏழு அம்புகளில் ஆறு இலையையும் தளிரையும் கொய்தன. ஏழாவது அம்பு அம்மலரை வீழ்த்தியது. அனைவரும் ஆரவாரம் எழுப்பியபோது இளிவரல் குரல் ஒன்று எழுந்தது.

அனைவரும் நோக்க சிரித்தபடி அங்குவந்த பிருஹத்சேனர் அவர்களை நோக்கி இகழ்ச்சியுடன் நகைத்து ”இவ்வெளிய உலோக முனைகளை ஆளவா இத்தனைப் பெருந்தவம்?” என்றார். சினம் கொண்ட சல்யர் திரும்பி “இவ்வெளிய உலோக முனைக்கு நீ இமைப்பதற்குள் உன் உயிர் குடிக்கும் ஆற்றல் உண்டு மூடா” என்றார். “இமைக்க எண்ணம் எழுவதற்குள் உயிர் குடிக்கும் ஆற்றல் இந்த வீணைக்கும் உண்டு” என்றார் பிருஹத்சேனர். ”எளிய காற்றால் அள்ளிச்செல்லப்படும் கருவி உங்களுடையது. விண்ணை ஆளும் கருவியைக் கொண்டவன் நான். காண்கிறீர்களா?”

“என்ன சொல்கிறாய்?” என்று கூவி அம்புடன் அருகே வந்த தன் ஆசிரியரிடம் “விஜயவர்மரே, நீங்கள் இம்மரத்திலே எம்மலரையும் சுட்டுங்கள் எனக்கு. ஏழு அடிகள் கூடத் தேவையில்லை. ஒன்றே போதும்” என்றார் பிருஹத்சேனர். சினம் கொண்ட ஆசிரியர் மரத்தின் கிளைகளுக்குள் மறைந்து இருந்த சிறுமலர் ஒன்றைச் சுட்டி ”அதை வீழ்த்து” என்றார். பிருஹத்சேனர் அதை நோக்கி விழிகூர்ந்து அமர்ந்து வீணையை மடியில் அமர்த்தி முதற் சுருதியை எடுத்தார். மலர் ஒரு காற்றால் கொய்யப்பட்டு சிறிய மஞ்சள் பறவையென பறந்து வந்து பிருஹத்சேனரின் மடிமீது விழுந்தது.

சினத்தால் நிலைமறந்து விஜயவர்மர் திரும்பி “சல்யனே, அதோ அந்த மதகளிற்றை உன் அம்புகள் மத்தகம் பிளந்து வீழ்த்தட்டும்” என்றார். சொல்லி முடிப்பதற்குள் மத்தகம் அம்பால் பிளக்கப்பட்டு கொம்பு நிலத்தில் குத்தியிறங்க, துதிக்கை நெளிந்து அமைய, முன்னங்கால் மடித்து அலறிச் சரிந்து, ஒருக்களித்து வயிறெழ விழுந்து, வால் சுழல கால்துடிக்க சங்கொலி என மும்முறை கூவி உயிர் விட்டது களிறு. “அதற்கடுத்த களிறை நீ வீழ்த்து” என்ற விஜயவர்மர் கைதூக்கி அதை பிருஹத்சேனரை நோக்கி ஏவும்படி ஆணையிட்டார்.

பாகனின் துரட்டியால் குத்தப்பட்ட களிறு கடும் சினத்துடன் துதிக்கை வீசி, கொம்பு உலைத்து, காதுகோட்டி, பிளிறியபடி பெரும் கால்களை எடுத்து பிருஹத்சேனரை நோக்கி வந்தது. அச்சமில்லாதவராக தன் வீணையுடன் அதன் முன் சென்று அவர் இசை மீட்டினார். முன்பே அறிந்த ஒன்றைக் கேட்டது போல அது செவிதழைத்து துதிக்கை தாழ்த்தி அசையாது நின்றது. பின்பு ஐயத்துடன் காலெடுத்து அருகணைந்து துதிக்கை நீட்டி அவர் கால்களைத் தொட்டது. முழங்கால் மடித்து அவர் முன் அமர்ந்து கொம்புகளை நிலத்தில் தாழ்த்தி அவ்விசையைக் கேட்டு மயங்கி அங்கிருந்தது.

வெற்றியுடன் எழுந்த பிருஹத்சேனர் “விஜயவர்மரே, படைக்கலம் என்பது மானுடஉள்ளத்தின் பருவடிவே. ஆற்றலால் அல்ல, நுண்மையாலேயே கருவிகள் வெல்லற்கரியவை ஆகின்றன. எந்த வில்லை விடவும் நுண்மையானது யாழும் அதன் சுருதியும் என்றுணர்க! இந்த மண்ணில் முன்பு விழுந்து எழுந்து கண்ணீருடன் விலகிய கணமே நான் அறிந்தேன், உங்களை சினம்கொள்ளச்செய்வது எது என. உங்கள் கருவிகளில் ஒவ்வொருநாளும் நீங்கள் அறியும் நிறைவின்மைதான். நான் அந்நிறைவை அடைந்தேன். அதற்கு எனக்கு அருளிய அனைத்து நல்லாசிரியர்களையும் இங்கு வணங்குகிறேன்” என்று சொல்லி அந்த மண்ணை கைதொட்டு “மண் சான்று” என்று கூறி திரும்பிச் சென்றார்.

மத்ர தேசத்து ஆர்த்தாயனருக்கு இரு மனைவிகள். மூத்தவரின் மைந்தர் பட்டத்தரசரான சல்யர். இளையவரின் மைந்தர் கிருதர். இரண்டாமவர் என்பதனால் த்யுதிமான் என்றழைக்கப்பட்டார். அப்பெயரே அவருக்கு நிலைத்தது. இரண்டாமவர் என்று முற்றாக வகுக்கப்படுதலின் சுமையை நினைவுநின்ற நாள் முதல் தாங்கி இருந்தார் த்யுதிமான். களத்தில், அரண்மனையில், மகிழ்வறையில் எங்கும் இரண்டாமவர் என்றே ஆனதன் இளிவரலால் துயருற்றார். வெற்றி கொள்ளும் வாளும் பிழைக்காத வில்லும் கொண்ட சல்யரின் முன் எங்கும் ஏவலனுக்குரிய இடமே தனக்கு என்றுணர்ந்தார்.

”பாஞ்சாலரே, தன்னை இழித்து உணர்பவனின் அனைத்து இலக்குகளும் பிழைக்கும். த்யுதிமானின் வாள் அவர் கையில் நிற்கவில்லை. அம்புகள் குறி தேரவில்லை. அவரது சொற்களெல்லாம் நனைந்த சிறகுகள் கொண்டிருந்தன” என்று சாத்யகி தொடர்ந்தான். “அந்தப் பெருந்துயர் அவரை துணையற்றவராக்கியது. மத்ர நாட்டில் சல்யரின் மேல் பெருவியப்பு அற்ற விழிகள் கொண்ட எவரையும் அவர் காணவில்லை. எனவேதான் பிருஹத்சேனர் அவருக்கு விருப்புக்குரியவரானார். வீணை மீட்டி வென்று திரும்பிய அவரை தேரில் சென்றழைத்து தன் அரண்மனையில் அமர்த்தி பரிசிலும் பாராட்டும் அளித்து மகிழ்ந்தார் த்யுதிமான். அவருடன் நெஞ்சு பகிர்ந்து சொல்லாடிக் களித்தார்.”

மத்ரநாட்டு இளையவரின் அரண்மனையில் அவருக்கிணையான பீடம் பிருஹத்சேனருக்கு அளிக்கப்பட்டது. அவரையும் “இளவரசே” என்று ஏவலர் அழைத்தனர். நூறுமுறை அவ்வாறு அழைக்கப்படும் ஒருவர் பின்னர் தன்னை இளவரசர் என்றே எண்ணிக்கொள்வதில் வியப்பில்லை. பிருஹத்சேனர் மத்ர நாட்டு மண்ணுக்கு தானும் உரியவர் என்றே உணர்ந்தார். ஆணைகளிடும் குரலில் அவை வந்திறங்கும் நடையில் எங்கும் அதையே பயின்றார். அவையோர் அறிந்திருந்தனர் அதன் எல்லை. இளையவரும் எங்கோ அறிந்திருந்தார். அறியாதவர் பிருஹத்சேனர் மட்டுமே.

ஆர்த்தாயனர் மண்மறைந்தபோது மணிமுடிக்கு பூசல் தொடங்கியது. ஒருவரும் அதை சொல்லென மாற்றவில்லை என்றாலும் ஒவ்வொருவரும் அறிந்ததாக இருந்தது அது. சல்யர் மண்ணில் ஒரு பிடியையேனும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதை அறிந்த இளையவர் செளவீரர்களின் உதவியை நாடினார். பால்ஹிக நாடுகளில் செளவீரமும் யவனமும் மத்ரத்தை அன்று அஞ்சிக் கொண்டிருந்தன. வில்தேர்ந்த சல்யர் ஒருங்கிணைந்த பால்ஹிகத்தின் பேரரசராக முடிசூடி அமர முனையாமல் இருக்கமாட்டார் என அறிந்திருந்தனர். எவ்வண்ணமேனும் சல்யரை முடி நீக்கம் செய்ய வாய்ப்பு நோக்கி இருந்தவர்களுக்கு வந்து அமைந்த நற்தருணம் என்றிருந்தது த்யுதிமானின் தூது. அவர்களின் படையும் செல்வமும் அளித்து த்யுதிமானை ஆதரித்துநின்றனர்.

செளவீரம் முன்பே மகதத்துடன் சொல் உறவு கொண்டிருந்தது. பால்ஹிக நாட்டில் வலுவான வேர்களை ஊன்ற விரும்பிய ஜராசந்தரின் தந்தை பிருஹத்ரதர் தன் படைகளை மலைகடந்து அனுப்ப ஒப்புக்கொண்டார். அச்செய்தி தன்னை வந்து அடைந்ததும் பிறிதெவரும் எண்ணாத ஒன்றை சல்யர் செய்தார். தேரில் ஏறி நேராக தன் இளையவனின் அரண்மனை முகப்பில் சென்று இறங்கினார். நீராடி மன்றமர்ந்து வந்த செய்திகளை ஆய்ந்துகொண்டிருந்த த்யுதிமானிடம் சென்று நின்று “இளையவனே, உன்னிடம் நம் மூதாதையரை சான்றாக்கி சில சொல் உரைக்கவேண்டும் என்று வந்தேன்” என்றார். “சொல்க!” என்றார் த்யுதிமான். அப்போது பிருஹத்சேனர் எழுந்து செல்லும் முறைமையை பேணியிருக்கவேண்டும். அது அவரது எண்ணத்தில் உறைக்கவில்லை. வீணையுடன் அங்கேயே ஆவல்மீதூற அமர்ந்திருந்தார்.

சினம் கொண்ட சல்யர் “உன் தோழரை வெளியே அனுப்புக!” என்று சொன்னபின்னர் த்யுதிமான் பிருஹத்சேனரை நோக்கி “சற்று வெளியே சென்று அமருங்கள்” என்றார். பிருஹத்சேனர் வீணையுடன் எழுந்து முகமன் சொல்லாமல் வெளியே சென்றார். முழுதுரிமை கொண்ட அரசகுடியினரான தன்னை அவமதித்துவிட்டதாகவே அவரது எளிய உள்ளம் எண்ணியது. தமையனும் இளையோனும் அமர்ந்து உரையாடினர். சல்யர் “இளையோனே, மத்ர நாட்டின் மன்னனாக நீ முடிசூட விழைவதை நான் அறிந்தேன். அயலவரிடம் நீ உதவிகோரினாய் என்று கேட்டபோது நான் நம்பவில்லை. அவ்வெண்ணம் உனக்கு இருக்கும் என்றால் என் மூதாதையரை சான்றாக்கி இதை உரைக்கிறேன். இந்நாட்டுக்கு முற்றுரிமை கொண்ட மன்னனாக நீ முடிசூடு. உன் மூத்தவனாக மட்டுமே இந்நாட்டில் இருக்கிறேன். நீ விழைந்தால் இந்நாட்டை விட்டு விலகவும் ஒப்புக்கொள்கிறேன். உன் அச்சம் நீங்க ஒரு சொல் அளிக்கவும் சித்தமாக உள்ளேன். நீ விழைந்தால் நான் பீஷ்மரைப்போல மணமுடிக்காமல் காமவிலக்கு நோன்பு கைகொள்கிறேன்” என்றார்.

திகைத்து உடல்நடுங்க அமர்ந்திருந்த த்யுதிமான் பின்னர் எழுந்து அவர் காலில் விழுந்து பற்றிக்கொண்டு “மூத்தவரே, இளையவன் மட்டும் அல்ல இழிந்தவனும்கூட என்று காட்டிவிட்டேன். என்முன் நின்று இச்சொல்லை சொல்லும் இடத்திற்கு தங்களை கொண்டுவந்ததற்காக நாணுகிறேன். தங்கள் அடி விழுந்து கிடக்கும் இவ்வெளியவன் மேல் கருணை காட்டுங்கள்” என்றார். அவரை அள்ளி நெஞ்சோடு அணைத்து “இளையவனே, உன்னை தோளில் தூக்கி அலைந்திருக்கிறேன். உன் நலம் நாடாத ஒன்று எனக்கில்லை” என்றார் சல்யர்.

த்யுதிமான் “மூத்தவரே, எனக்கு மண் தேவையில்லை, உங்கள் அருள் ஒன்றே போதும். உங்கள் நிழலில் வாழ்கிறேன்” என்றார். “நீ விழைந்தபின் அதை மறுக்க முடியாது. விழைவு உடல் புகுந்த நோய் போல் முற்றிலும் விலகுவதில்லை. வருக, மன்றமர்ந்து இந்நாட்டை இருபகுதியாக பிரிப்போம். உத்தர மத்ரத்தில் மன்னனாக நீ முடிசூடு. தட்சிண மத்ரம் என்னிடம் இருக்கட்டும். எப்போதும் எந்நிலையிலும் இருநாடுகளும் ஒன்றாக இருக்கும் என்று குலமூத்தாருக்கு வாக்களிப்போம். தந்தை அமர்ந்த அரியணையில் பிறிதொருவர் அமர நேர்ந்தால் மூத்தார் பழிச்சொல் ஏற்று நம் கொடிவழி அழியும். பழி சூழ்ந்து நாம் சிதை ஏற நேரும். அது நிகழலாகாது” என்றார் சல்யர். “ஆம், மூத்தவரே” என்று அழுதார் இளையவர்.

மத்ரம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. உத்தர மத்ரத்தில் மன்னராக த்யுதிமான் பதவியேற்றார். அத்தருணத்தில் தன் இளையவரிடம் ஒரு சொல்லை வேண்டிப் பெற்றார் சல்யர். அதன்படி பிருஹத்சேனர் அரண்மனையில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்களிக்கப்பட்ட அரசுக்குறிகள் முறைமைகள் அனைத்தும் விலக்கப்பட்டன. இசைக்கு அப்பால் உலகுணராத பிருஹத்சேனர் எதையும் அறியவில்லை. தன் யாழுடன் அவை புகுந்தபோது எதிர்கொண்ட அவைநடத்தும் சிற்றமைச்சர் அவரை “தங்கள் இடம் இங்கு வகுக்கப்பட்டுள்ளது இசைவாணரே” என்று சொல்லி அழைத்துச்சென்று சூதர்நிரையில் அமரவைத்தார். அங்கு போடப்பட்டிருந்த சிறியபீடத்தைக் கண்ட பின்னர்தான் என்ன நடந்தது என்று பிருஹத்சேனர் உணர்ந்தார். வெங்குருதி குமிழியிட்டு தலைக்குள் கொப்பளிக்க யாழேந்திய கரங்கள் நடுங்க நின்றார். உதடு துடிக்க “எவர் ஆணை இது?” என்றார். ”இரு அரசர்களும் இணைந்து அளித்த ஆணை. இங்கு அரசகுடி பிறந்தவரே இளவரசர்களாக இருக்க முடியும்” என்றார் அமைச்சர்.

அனல் பழுத்துச்சிவந்து அமைந்ததுபோல் பீடத்தைப் பார்த்து சில கணங்கள் நின்றபின் தன் வீணையை நெஞ்சோடு அணைத்தபடி சென்ற வழியெங்கும் கண்ணீர்சிந்த தன் அரண்மனைக்கு மீண்டார். அன்றிரவே தன் வீணையுடன் கிளம்பி செளவீர நாட்டை அடைந்தார். மத்ர நாட்டில் இருந்து ஒருவர் நாடி வந்ததற்கு செளவீரர்கள் மகிழ்ந்தனர். அவருக்கு அங்கு ஒரு மாளிகை அளித்தனர். இரண்டாண்டுகாலம் அங்கு எவரையும் விழிதூக்கிப் பாராமல் தன் அரண்மனை அறைக்குள்ளேயே விழித்திருக்கும் நேரம் வீணை உடனிருக்க வாழ்ந்தார். அவர் அங்கிருப்பதை அனைவரும் மறந்து விட்டிருந்தனர்.

யவன நாட்டுக்கு ஒரு தடையற்ற வணிகச் சாலையை பெற விரும்பிய மகதம் செளவீரத்திடம் நிலம் கோரிப் பெற்றது. அதன் மறுபக்கமிருந்த மத்ரத்திடம் நிலம் கோரச் சென்ற அமைச்சர்களை சல்யர் மறுசொல் அளித்து திருப்பி அனுப்பினார். மத்ரத்தின் ஒரு காலடி நிலமும் எவருக்கும் அளிக்க முடியாது என்றார். மத்ரத்தின் மண் வழியே உரிய சுங்கம் அளித்து மகதத்தின் வண்டிகள் செல்லலாம் என்றார். மகதம் எங்கும் சுங்கம் அளிக்கும் வழக்கமில்லை என்று மகதச் சக்ரவர்த்தி பிருஹத்ரதரின் தூதுவர் சொன்னார்.

மறுநாளே மகதத்தின் பெரும்படை வந்து மத்ரநாட்டின் கீழ் எல்லையின் எண்பத்தியேழு மலைக்கிராமங்களையும் நதிக்கரைக் காடுகளையும் கைப்பற்றியது. அத்தனை விரைவில் ஒரு பெரும்படை தன் நாட்டுக்குள் புகும் என சல்யர் எதிர் நோக்கியிருக்கவில்லை. சல்யரின் எதிர்ப்பை முன்னரே உய்த்து படைகொண்டுவிட்ட பின்னரே தூதனுப்பியிருந்தார் பிருஹத்ரதர். மகதப் படை உள்ளே புகுந்த போது பால்ஹிக நாடுகள் தன்னை துணைக்கும் என்று எண்ணியிருந்தார், அதுவும் நிகழவில்லை. மகதப்படைகள் அவ்வழியாக வணிகச்சாலையை அமைத்து நெடுகிலும் காவல்மாடங்களை நிறுவி நிலைப்படைகளை நிறுத்தினர்.

மத்ரநாட்டில் கைப்பற்றிய நிலங்களை படைநிறுத்தி மகதக்கொடியுடன் ஆள்வது இயல்வதல்ல என்று சில நாட்களிலேயே பிருஹத்ரதர் புரிந்துகொண்டார். ஒவ்வொரு கிராமமும் மலைச்சரிவுகளில் வழிந்தும் தேங்கியும் காடும் ஓடையும் சூழ தனித்துக்கிடந்தது. படை அனுப்பி அவற்றை எப்போதைக்குமென வெல்வது இயல்வதல்ல. மத்ரத்தின் கொடி அடையாளம் இன்றி அங்கொரு நிலையான ஆட்சி அமைக்க இயலாதென்று உணர்ந்தார். செளவீர நாட்டு சுருதகோஷர் ஓர் எண்ணத்தை சொன்னார். அதை ஏற்று அந்நிலத்தை உபமத்ரம் என்றொரு தனி நாடாக்கி பிருஹத்சேனரை அதற்கு அரசராக மகதம் முடிசூட்டியது.

தனக்கென ஒரு நாட்டைப்பெற்ற பிருஹத்சேனர் செளவீர நாட்டரசர் சுருதகோஷரின் இளைய மகள் மிலிந்தையை மணந்து அரசாளலானார். அவருக்கு சோமகீர்த்தி என்ற மைந்தன் பிறந்தான். அவனுக்கு இளையவளாகப் பிறந்தவள் லஷ்மணை. புன்னகையில் ஒளிபெறும் எழில்முகம் கொண்ட அவளை சாருஹாசினி என்றழைத்தனர் உபமத்ரத்தினரும் சௌவீரரும். யானையின் காலடியில் நின்று சிம்மத்திடமிருந்து தப்பும் மான்போலிருந்தது உபமத்ரம்.

“சல்யரின் மத்ரமும் சௌவீரம் தவிர்த்த பிற பால்ஹிகநாடுகளும் பிருஹத்சேனரை அரசரென ஏற்றதில்லை. உபமத்ரம் ஒரு நாடென்று ஒப்புக்கொள்ளப்பட்டதுமில்லை” என்றான் சாத்யகி. “மத்ரநாட்டின் கொடியடையாளத்தை குலமூத்தார் வரிசையை உபமத்ரம் கொள்வதை சல்யர் எப்போதும் எதிர்த்துவருகிறார். மத்ரநாட்டரசி என லக்ஷ்மணை எந்த அவையிலும் வழங்கப்படுவதை அவர் மறுக்கிறார்.” திருஷ்டத்யும்னன் “மத்ரநாட்டரசிக்கு சல்யரின் தூதுபற்றி தெரிந்திருக்குமென்பதில் ஐயமே இல்லை” என்றான்.

முந்தைய கட்டுரைமதங்களின் தொகுப்புத்தன்மை
அடுத்த கட்டுரைதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்