இருநாய்கள்

Hero

 

அப்பாவின் நாயின் பெயர் டைகர். அவர் நாயில்லாமல் இருந்ததே இல்லை. நாய் என்பது ஓர் அழியாத ஆத்மா என அவர் நம்பியிருக்கலாம். அவரிடம் இருந்த டைகர்களின் உடல்கள் மட்டும் மாறிக்கொண்டே இருந்தன. தூய கரிய உடலும் மின்னும் கண்களும் கொண்ட டைகர் கனத்த குட்டியாக வீட்டுக்கு வந்து சகல மூலைகளிலும் சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்து வீட்டை உரிமைப்படுத்தி, அப்பாவின் கட்டிலின் காலடியிலும் நாற்காலியின் இடப்பக்கத்திலும் தன் இடத்தைக் கண்டடைந்தபின் முதிர்ந்து கிழத்தன்மை எய்தி, ஒருநாள் அவரது அருகில் படுத்து இறந்த சிலநாட்களிலேயே மீண்டும் சுழலும் வாலும் உலகத்தையே அறிந்துவிடத்துடிக்கும் மூக்கும் தீவிரப்பசியுமாக, புதிய கருப்புநிறக்குட்டி உடலுடன் திரும்பிவந்துவிடும்.

உரிமையாளரின் குணத்தை நாய்களும் கொண்டுவிடும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நாய் உரிமையாளரை மிகமிகக் கவனமாக பார்த்துக்கொண்டே இருக்கிறது. டைகர் அதன் நாய்த்தன்மையை வெளியே கொண்டுவரும் ஈக்கள் பூனைகள் போன்ற உயிரினங்கள் குறுக்கிடாதபோதெல்லாம் வாகான இடத்தில் படுத்து அப்பாவையே பார்த்துக்கொண்டிருக்கும். அவர் வெற்றிலைப்போதையில் மோனம்கொள்ளும்போது அதுவும் அங்கே இருக்கும். எழுந்து சோம்பல் முறிக்கும்போது அதுவும் முதுகை கீழ்நோக்கி அழுத்தி நிமிரும்.அவர் தொண்டையைக் கனைத்து அம்மாவை வரவழைக்கும்போது அதுவும் அதிகாரமாக அம்மாவைப்பார்க்கும். என்னை அது பார்க்கும்போதெல்லாம் ‘எப்படி இவனை வளர்த்து ஆளாக்கப்போகிறேன்’ என்ற கவலை அதன் முகத்தில் தெரியும்.

அப்பா தூங்குவதற்கு நேரமாகும். இரவில் ஒரு சட்டியில் தீ போட்டு அருகே வைத்துக்கொண்டு நாற்காலியில் தொழுவத்தில் அமர்ந்து பசுக்களுக்கு உண்ணி பொறுக்கிக் கொண்டிருப்பார். அப்போது மென்மையாகப் பசுக்களிடம் உரையாடுவார். பசுக்களும் கழுத்தை வளைத்து செவி தாழ்த்தி அவற்றின் உயிரியல்பின் வேலிக்கு அப்பாலிருந்து புரியாத மொழியில் கசிந்துவரும் பேரன்பைக் குடித்தபடி காற்று கடந்து செல்லும் புல்வெளிபோல மயிர்ச்சருமம் ஆங்காங்கே புல்லரிக்க நின்றிருக்கும். அப்பா பசுக்களிடம் மட்டுமே அவரது ஆத்மாவைப் பகிர்ந்துகொண்டார். ஆகவே டைகருக்கும் பசுக்களை மிகவும் பிடித்தாகவேண்டியிருந்தது. ஆனால் அது தன்னை அப்பாவின் பக்கம் சேர்த்துக்கொண்டு பசுக்களை மிருகாபிமானத்துடன் நடத்தியது.

அப்பாவின் அருகே மிகுந்த கம்பீரத்துடன் தலையைத் தூக்கி வைத்துக்கொண்டு கிடக்கும் டைகரை நான் நன்றாகவே நினைவுகூர்கிறேன். இந்த ஈக்கள் மட்டும் இல்லையென்றால் அதன் தோரணை முழுமையடைந்து அதுவும் ஒருநாள் சார்பதிவாளர் அலுவலகத்துக்குக் கையில் பையுடன் கிளம்பிச் செல்லமுடியும் என்று தோன்றும். ஈயை வாயால் அள்ளிக்கடிக்க அது அடிக்கடி சடப் சட் என்று முயலும்போதுதான் அது மிருகத்துக்குரிய செல்லமான அசட்டுத்தனம் கொண்டதாக ஆகிவிடுகிறது. மற்றபடி அனாவசியமாகக் குரைப்பதில்லை. உறுமுவதும் அவசியத்துக்கே. பார்வை மற்றும் கெத்தாக திரும்பிப்பார்த்தல் ஆகியவற்றிலேயே தன் குணச்சித்திரத்தைக் காட்டிவிடும்.

அப்பாவுக்கு அலுவலகத்தில் பழைய ஆவணங்களைப் பாதுகாப்பதே வேலை. அவர் ஒன்றும்செய்யாமலிருந்தாலே அவை பாதுகாப்பாக இருக்கும்படி அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. பழைய காகிதங்கள்மேல் அவருக்கு மோகம் அதிகம். அவை தூசியில் புதையுண்டிருந்தால் மேலும் பிரியம். கண்டுபிடிக்க முடியாமல் பிற காகிதங்களில் புதையுண்டிருந்தால் மோகவெறி. முகர்ந்து முகர்ந்து பார்ப்பார். பூதக்கண்ணாடி வைத்து அதிகூர்ந்து படிப்பார். டைகரும் எல்லா வாழைத்தடங்களிலும் எதையாவது புதைத்து வைத்து அவ்வப்போது தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்தபின் திரும்ப புதைத்து வைக்கும்.

டைகர் புதிதாக சிலவற்றைத் தோண்டியும் எடுக்கும். எங்கள் வீட்டுக்குப் பின்பக்கம் வைக்கோற்போருக்கு அடியில் இருந்து ஒரு சிறுகுழந்தையின் மண்டை ஓட்டை அப்படித்தான் எடுத்தது. அப்பா அதை ஆராய்ந்து அது அரை நூற்றாண்டுக்கு முன்னர் இறந்த அவரது பெரியப்பாவாக இருக்கலாமெனக் கண்டுபிடித்தார். அக்காலங்களில் தலைச்சன் குழந்தையை வீட்டுக்குள்தான் புதைப்பார்கள். அந்த வீடு இருந்த இடத்தில்தான் பின்னர் வைக்கோற்போர் உருவானது.அப்பா அந்த மண்டை ஓட்டைப் பட்டுத்துணியில் சுற்றிப் பூஜைப்பொருட்களுடன் மிகப்பத்திரமாக ஒரு பானையில்போட்டுக் கிழக்குப்பக்க மூலையில் புதைத்தார். ‘மண்டை காலியா இருந்தாத்தான் உங்கப்பாவுக்குப் பிடிக்கும்’ என்றாள் அம்மா

டைகர் அம்மாவைக் கறாராகவே நடத்தியது. அதற்கு காலையில் ஒருவேளை மட்டும்தான் உணவு அளிப்பது. அது சரியான நேரத்தில் கிடைக்கவேண்டுமென அது எதிர்பார்த்தது. காலை பத்துமணிக்கு உரப்புரை அருகே வந்து சத்தமே இல்லாமல் கம்பீரமாக தலைதூக்கி அமர்ந்துகொள்ளும். அம்மா கஞ்சி ஊற்றியதும் சத்தமில்லாமல் குடித்துவிட்டு திரும்பிவிடும். அம்மாவுடனான உறவு அவ்வளவுதான். வாலாட்டுவதில்லை. அம்மாவைப்பார்த்தால் எழுந்திருப்பதுமில்லை. அம்மாவைப் பார்த்தமைக்கு அடையாளமாகக் காதுகள்பின்பக்கமாக லேசாக மடியும் . பொதுவாகவே டைகர் பெண்களை மதிப்பதில்லை. வைக்கவேண்டிய இடத்தில் அவர்களை வைக்கவேண்டுமென்ற கொள்கை.

பகல் முழுக்க டைகர் வாசலில் மாமரத்தடியில் படுத்து அரைக்கண்மூடித் தூங்கிக்கொண்டிருக்கும். வாசலைக் கடந்து உள்ளே வர அதன் வாலைத் தாண்டவேண்டியிருக்கும் பல சமயம். உரிய முறையில் அனுமதி பெற்று வராமல்போனால் அது ஆபத்தானது என்பது ஊரில் தெரியும். டைகர் பெண்களைக் கண் திறந்து பார்த்து பின் கண்களை மூடிக்கொள்ளும். ஆண்களுக்கு எழுந்து உடலை நீட்டி கொட்டாவி விட்டோ வாலை மெல்ல ஆட்டியோ வரவேற்பளிக்கும். பிச்சைக்காரர்கள் சிறுவணிகர்களுக்கு அவர்களின் அருகே வந்து அமைதியாக நின்று அவர்கள் சென்றபின் திரும்பிப் படுத்துக்கொள்ளும். அவர்கள் விற்கலாம் வாங்கலாம் சாப்பிடலாம், எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

டைகரின் பற்கள் ஊரில் பிரபலம். வீட்டுக்குள் புகுந்து ஒரு செம்பை எடுத்துக்கொண்டு ஓடியவனை அது அரைகிலோமீட்டர் துரத்திப் பிடித்து கீழே வீழ்த்தி ஏழெட்டு இடங்களில் கடித்து குதறி அப்பாவை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லவைத்திருக்கிறது. வருடத்துக்கு இருவர் கடிபடுவார்கள். இரவில் அப்பா உறங்கியபின் வீட்டைச்சுற்றியும் தோட்டத்திலும் உலவிக்கொண்டே இருக்கும். பெருச்சாளிகள் முயல்கள் சிறு சாரைப்பாம்புகள் என பிடித்து கிழித்து சாப்பிடும். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் எங்களது எந்த தோட்டத்திலும் டைகர் இருக்க வாய்ப்பிருந்தது. ஒரு சிறிய அசாதாரண சலனம் இருந்தாலும் அங்கே சென்றுவிடும். ஒருமுறை தெற்கு தோட்டத்தின் உள்ளிருந்து ஆற்றங்கரை வரை கட்டிகட்டியாக மனிதக் காலடிகளில் குருதி உறைந்திருப்பதைப் பார்த்தோம், காலையில் டைகரே கூட்டிக்கொண்டுசென்று காட்டியது. அப்பா பாராட்டாக ‘உம்’ என்றார்.

அப்பாவிடமிருந்து மிருகபாசம் எனக்கும் தொற்றிக்கொண்டது. சொந்தமாக வீடுகட்டியதுமே நான் நாய் வளர்க்க விரும்பினேன். ‘வளத்துக்கோ, நான் எங்கம்மா வீட்டுக்குப் போயிடறேன்’ என்று அருண்மொழி கறாராகச் சொல்லிவிட்டாள். சைதன்யா மற்றும் அஜிதனை நான் ஏற்கனவே மிருகநேயர்களாக மாற்றியிருந்தமையால் வேறு வழியில்லை. ஆனால் வாங்கியபின் அருண்மொழிதான் நாய்களுக்குப் பிரியமான அம்மா. ஒரு நாள்கூட ‘குட்டீஸுக்கு சாப்பாடு வச்சாச்சா, இதுகள் சாப்பிட்டுதுங்களா?’ என்று கேட்காமலிருக்க மாட்டாள். இரண்டாவதாகச் சொல்வது குழந்தைகளை.

நான் எப்போதுமே கரியநாய்களையே தேர்வுசெய்கிறேன், நாய் நம் நிழல். அப்படியானால் அது கருமையாகத்தானே இருந்தாகவேண்டும்? ஹீரோ நிழலுக்கு நிழலிருந்தால் எப்படி இருப்பானோ அந்த நிறம். லாப்ரடார் சாதி. பளபளவென எண்ணைப்பூச்சுள்ள முடிமேனி. ‘போன ஜென்மத்திலே என்னைய மாதிரி நிக்க நேரமில்லாம அலைஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். சேத்து வச்சு ரெஸ்ட் எடுக்குது’ என்பாள் அருண்மொழி. பெரும்பாலான நேரம் ஈரமாக இஸ்திரிபோட்ட கருப்புக்கைக்குட்டை மாதிரி தரையோடு தரையாக ஒட்டித் தூங்கிக்கொண்டிருப்பான். உலகில் என்ன நிகழ்கிறது என்றறிய ஒற்றைக்காதைக் கொஞ்சம் தூக்கிப்பார்த்தாலே போதும் என்ற எண்ணம்.

சாப்பாடு கொண்டுவைக்கும்போதுகூட படுத்தபடியே சாப்பிட விரும்புவான். நாக்குக்கு எட்டாமல் இருந்தால் ‘அறிவே கிடையாதா?’ என்பது போல ஒரு சலித்த பார்வை. நீக்கி வைத்தால் படுத்துக்கொண்டே பக்கவாட்டு வாய்வழியாக சாப்பிடுவான். பக்கத்துவீட்டு பூனை வந்து அருகே அமர்ந்து ‘என்னடே” என்று கேட்டுக்கொண்டே இருக்கும். விலாவதிர உறுமி லேசாக தலைதூக்கி பவ்வித்து அதன்மேலும் அது போகவில்லை என்றால் முன்காலைத் தூக்கி அமர்ந்து மெல்லப் பின்னங்கால்களையும் தூக்கி வைத்து நான்குகால்களும் ஊன்றப்பட்டுவிட்டதை உறுதிசெய்தபின் குரைத்தபடி பாயும்போது பூனை கூரைமேல் சௌகரியமாக அமர்ந்து வாலையும் நன்றாக அடியில் சுருட்டி வைத்து நுனிக்காதைத் திருப்பி கூரிய மீன்முள் பற்களைக் காட்டிச் சிரிக்கும்.

இரவில் ஹீரோ ஓய்வெடுக்கும் இடத்தை மாற்றிக்கொள்வான். என்னுடைய அறைக்கு வெளியே ஜன்னலோரமாகப் படுத்து இளம்குளிர் காற்றில் கண் வளர்வான். திடீர் என்று சுறுசுறுப்பு வரவேண்டுமென்றால் கனவு வந்திருக்க வேண்டுமென பொருள். அவனாக வந்து குளிர்ப்பெட்டி முன்னால் நின்று வாலை மின்விசிறி போல சுழட்டினால் பிஸ்கட் முறுக்கு என ஏதோ ஆழ்மனத்தில் இருந்து வெளிவந்திருக்கிறதென அறிந்து உடனே திறந்து கொடுப்போம். வாங்கிக்கொண்டு தன் இடத்துக்குச் சென்று அதை இரு கைகளாலும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டு ஆர்வமாக உண்பான்

அடிப்படையில் ஹீரோ ஒரு பூதாகரமான நாய்க்குட்டி. அவனுடைய உடல் அந்த அளவுக்குப் பெரிதானதற்கு அவன் ஒன்றும் செய்வதற்கில்லை. குழந்தைகள் விளையாடாதபோது தூங்கிக்கொண்டுதானே இருக்கவேண்டும்? அவனுக்கு விளையாட ஒரு பாலிதீன் கவர் போதும், அதன் வழியாகத் தெரியும் தன் காலுக்கு ஏன் தன் காலின் வாசனை இல்லை என்ற தத்துவப்புதிர் அவனை ஆறு வருடமாக வாட்டிக்கொண்டிருக்கிறது. டப்பாக்களை முடிவிலாமல் உருட்டி விளையாடுதல் மரக்கட்டைகளைக் கரம்புதல் தபாலில் வரும் கவிதைத் தொகுதிகளைத் தண்ணீர்த் தொட்டிக்கு அப்பால் கொண்டு வைத்து கிழித்துப் பார்த்தல் என அவனுடைய விளையாட்டுகள் பல.

எம்ஜியார்,சிவாஜி கட்டுரை வந்து அது தொடர்பான மிரட்டல் காலகட்டத்தில் எங்கள் வீடே உச்சகட்ட விரைப்புநிலையில் இருந்தது. ஒருநாள் நாலைந்துபேர் திமுதிமுவென வீட்டுக்கு வந்து முகப்புக் கதவைத் திறந்து உள்ளே வந்து அழைப்புமணியை அழுத்தினார்கள். நல்ல கட்டுமஸ்தான மனிதர்கள். நான் பீதியுடன் ”எனக்கு ஏதாவது ஆச்சுன்னா..” என்று உரிய தேய்வழக்குக்களை ஆரம்பிப்பதற்குள் ”சும்மா இரு…நான் போய்ப் பாக்கிறேன்” என்றாள் அருண்மொழி. ”நாய் இருக்குல்ல அப்பா” என்றாள் சைதன்யா எனக்கு ஆறுதலாக. வெளியே ஹீரோ வந்தவர்களை ஆவலாகப் பார்த்துக்கொண்டு நிற்க ஒருவன் அவனுக்குத் தலைகோதிவிடக் கண்டேன்.

அருண்மொழி ”என்ன வேணும்?” என்றுகேட்க ”ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸுக்கு ஆளு சேக்கிறோம் அம்மா.. புள்ளைங்களை சேக்கலாம்” என்றார் அவற்றில் மூத்தவர். ”பையனுக்கு நெறைய டியூஷன் இருக்கு…டைம் இல்லை” என்றாள். ”அப்ப வீட்டுக்காரரை சேரச்சொல்லுங்க..சும்மா இருக்கிற நேரத்திலே இங்கிலீஷ் கத்துக்கிட்டா நல்லதுதானே?” என்றார். எப்படி சரியாக கண்டுபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ”அவருக்கு அந்தமாதிரில்லாம் மூடு இல்லைங்க…”. அவர் ”அப்ப சரிம்மா… நாயி ரொம்ப நல்ல நாயி…லாப்ரடாரா?” என்றார்.

அருண்மொழி அவர்கள் போனபின்னர் என்னிடம் ”நாயி வளக்கிற லெச்சணம் பாரு…போய் வாலாட்டிட்டு நிக்குது… பெரிய அகிம்சாவாதி… சோறு போடக்கூடாது. நாலு தெருவிலே அலைஞ்சு சோத்துக்கு அலமலந்தா தானா வன்முறை வந்திடும்…” என்றபின் ”மூஞ்சிய காட்டாதே…ராத்திரி சோறு இல்லை” என்று அவனிடம் சொன்னாள். ஹீரோ அவனிடம் யார் எதுபேசுவதையும் விரும்பி மகிழ்வான். வாலாட்டி எம்பி குதித்தான். ”மூக்கப்பாரு…என்ன சொன்னாலும் துள்ளி குதிச்சிட்டு”என்று உள்ளே வந்தாள். அவ்வளவுதானா என்று அவன் கம்பிகள் வழியாகப் பார்த்தான்.

”எங்கப்பா வச்சிருந்த நாயி இருக்கே, டைகர்…” என்று நான் ஆரம்பிக்க ”அவன் சாப்பிட்ட சட்டி இருக்கான்னு பாருங்க. அதில இவனுக்கு சோறுபோட்டாலாவது புத்திவருதான்னு பாப்போம்”என்றாள். நான் ஹீரோவைப் பார்த்தேன். ‘நல்ல நாய்களுக்கு இங்கே முறுக்கு உண்டா?’ என்றபாவனையில் பார்த்தான். சட்டியையே தின்றாலும் புத்திவரும் என்று படவில்லை. டைகர் வாழ்ந்த காலம் அப்படியே மண்ணுக்குள் போய்விட்டது என்று பட்டது. ஹீரோ போவது தெரிந்தது, பின்பக்க அசைவிலேயே அசாதாரணமான பவ்யம். அது ஆபத்து என என் உள்ளுணர்வு எச்சரிக்க பாய்ந்துபோனேன். சைதன்யாவின் சாக்ஸை எடுத்துக்கொண்டு சென்றிருந்தான். அவன் பற்களில் இருந்து அதை நான் இழுக்க நான்கு காலையும்பரப்பி எதிர் அடம் புரிந்தான். பிடுங்கியபோது கிழிந்து வந்தது. ‘நீதான் கிழிச்சே’ என்ற பாவனையில் அவன் தன் கூண்டுக்குச் சென்றான். அங்கே இருந்து ஒரு விரிவான கொட்டாவி. அடுத்த தூக்கம் அலையலையாக வருகிறது போல.

[மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2008]

முந்தைய கட்டுரைநத்தை -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமுன்வெளியீட்டுத் திட்டம் , இலக்கிய முன்னோடிகள்