‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62

பகுதி பத்து : கதிர்முகம் – 7

கூஷ்மாண்டையின் ஆலயம் விட்டு வெளிவருகையில் வாயிலில் ருக்மி போர்க்கோலத்தில் தன் சிறிய படைப்பிரிவுடன் நின்றிருப்பதை அமிதை கண்டாள். அதை ருக்மிணி பார்த்தாளா என்று விழிசரித்து நோக்கினாள். அவள் விழிகள் இவ்வுலகில் எதையுமே அறியும் நோக்கற்றவை என்று தோன்றியது. ருக்மியையோ அவனுடன் நின்ற அமைச்சர் சுமந்திரரையோ அறியாது கடந்துசென்று தன் தேரிலேறிக் கொண்டாள்.

ருக்மி அமிதையை தன் விழிகளால் அருகே அழைத்து மெல்லியகுரலில் “உளவுச் செய்தி ஒன்று வந்துள்ளது செவிலியே. நம் இளவரசியின் தூது சென்றுள்ளது துவாரகைக்கு” என்றான். அனைத்தையும் அவன் அறிந்துவிட்டான் என அச்சொற்களில் இருந்து அறிந்த அமிதை ”ஆம். இளவரசி முத்திரைச்சாத்திட்ட அழைப்பு துவாரகைக்கு கொண்டு செல்லப்பட்டது” என்றாள். ருக்மி “இங்கிருந்த பிராமண மருத்துவனொருவன் அங்கு சென்றதை நான் முன்னரே அறிவேன். பறவைக்காலில் நான் கண்டடைந்த அவ்வோலை அவன் நெஞ்சில் பதிந்து சொல்லில் சென்றிருக்க வேண்டும்” என்றான்.

அமிதை “ஆம், பிராமணனின் சொல் மண்ணில் முதன்மையான சான்று” என்றாள். சினத்துடன் பற்களைக் கடித்தபடி ருக்மி “இளைய யாதவன் விதர்ப்ப இளவரசியைக் கொள்ள படை கொண்டுவரக்கூடும் என்றனர் என் ஒற்றர். விதர்ப்பம் அதற்கும் சித்தமாகவே உள்ளது. மண்ணுக்கென குருதி பெருகலாம், பெண்ணுக்கெனவும் பெருகலாம் என்பது நெறி. இம்மண்ணில் என் தலை விழுந்தபின் அவன் இவளை கொள்வான். அல்லது அவன் தலைகொய்து கொண்டு கூஷ்மாண்டை அன்னையின் காலடியில் வைப்பேன்” என்றான்.

அமிதை ”இளவரசே, இவை அரசு சூழ்தல்கள். நானறிந்தது என் இனியவளின் விழைவை மட்டுமே. எனக்கு தெய்வங்கள் ஆணையிட்ட செயல் எதுவோ அதையே நான் செய்வேன்” என்றபின் தேரை நோக்கி சென்றாள். அவள் பின்னால் நடந்தபடி வந்த ருக்மி மேலும் தாழ்ந்து காற்றொலியாகவே மாறிவிட்டிருந்த குரலில் ”இன்று நகரில் துணைநாட்டரசர்கள் குவிந்திருக்கிறார்கள். இந்நகர் சூழ்ந்துள்ள பெரும் படையுடன் நேர்வந்து சமரிட அவன் விழையமாட்டான்” என்றான்.

“காற்றெனப் புகுந்து கவர்ந்து செல்லும் மாயமறிந்தவன் என்கிறார்கள் அவனை. கரவுருக்கொண்டு இங்கு அவன் வரக்கூடும். இளவரசி தனித்து ஒன்பதன்னையர் ஆலயத்தையும் வழிபடும் நாளென்பதால் இன்று அவனுக்கு வாய்ப்புகள் மிகுதி. வென்று சென்றால் இவ்வரசர்கள் அனைவரையும் கடந்தவனாவான். எனவே கரையிலும் நீரிலும் மும்மடங்கு காவலுக்கு ஆணையிட்டேன். இங்கு இவளுடன் இறுதி வரை நானுமிருக்க எண்ணினேன்” என்றான் ருக்மி.

“அது நன்று. தங்கள் விழைவு வெல்க!” என்றாள் அமிதை. “செவிலியே, உன் நெஞ்சில் எழுந்த புன்னகையை நான் அறிவேன். நான் மாயனல்ல. புவியடங்க வெற்றிகொள் வீரனும் அல்ல. ஆனால் இந்நகரையும் எந்தை எனக்களித்த உடைமைகளையும் எங்கள் குலம் கருக்கொள்ளும் அன்னையர் மகளிரின் வயிறுகளையும் காக்கும் திறன்கொண்ட வாள் என் கையில் இருக்கிறது” என்றான். ”இவ்வனைத்தும் உன் உளமறிந்த சூது என்று நான் அறிவேன். உன் முலை அருந்தியிருக்காவிட்டால் இவ்வேளையில் நீ இருக்குமிடம் தெற்குக்காட்டின் கழு என்றுணர்க!” என்றான்.

தலை வணங்கி “என் இளையவளுக்கென கழு அமரும் நல்லூழ் அமையுமென்றால் என் வாழ்க்கை முழுமை கொள்ளும் இளவரசே” என்றபின் அமிதை சென்று தேரில் ஏறிக்கொண்டாள். ருக்மிணியின் தேருக்குப் பின்னால் தன் நூறு புரவிகள் தொடர கரிய புரவிகள் மூன்றால் இழுக்கப்பட்ட உறுதியான விரைவுத்தேரில் ருக்மி வந்தான். அதற்குள் போருக்கு என பெருவில்லையும் அம்புக்குவைகள் செறிந்த ஆவநாழிகளையும் வைத்திருந்தான். அவனும் வீரர்களும் இரும்பு ஒளிரும் முழுக்கவச உடை அணிந்திருந்தனர்.

ஸ்கந்தமாதாவின் ஆலயம் கரிய தேன்மெழுகு பூசப்பட்ட மூன்றடுக்குக் கோபுரம் எழுந்த மரக்கட்டடம். கோபுர விளிம்பில் பன்னிரு இயக்கியர் விழி விரித்து, வெண்பல் காட்டி, வஜ்ரமும் கதையும் வேலும் வாளும் வல்லயமும் வடமும் ஏந்தி, கீழ்நோக்கிப் பறந்தவண்ணம் நின்றனர். கருவறையில் ஆறு பொன்னிறத் தாமரைகள் சூழ நடுவே பொன்னரியணையில் செந்நிற ஆடை அணிந்து இரு கைகளிலும் தாமரைகள் மலர்ந்திருக்க அருளும் அஞ்சலும் காட்டி அன்னை வீற்றிருந்தாள்.

மலரிதழ்கள் கொண்டு அமைக்கப்பட்ட அணிமுடி சூடியிருந்தாள். புதுமலரடுக்கு கொண்டு கோத்த சரப்பொளி அணிந்திருந்தாள். பொன் ஒளிரும் அவள் கால்கள் முத்துக்களாலான சிலம்புகளை அணிந்திருந்தன. ”அன்னை இன்னும் பிறக்காத கந்தனை தன் ஆழத்தில் ஒளிரும் கருவாகக் கொண்டவள்” என்றாள் அமிதை. “கன்னியென்று இருக்கையிலேயே அவள் கனவில் எழுந்துவிட்டான் அழகுத்திருமகன். இளையவளே, நினைவறிந்த நாள் முதலே பெண்ணென்பவள் பேரழகு மைந்தன் ஒருவனை தன் கனவில் சூடிக்கொண்டவள் அல்லவா?”

விழிசரித்து தன் கருவறைக்கு அப்பால் கனவுக்கும் அப்பால் சுஷுப்திக்கும் அப்பால் கனிவின் முடிவின்மை முத்திட்டது என நின்ற கந்தனைக் கண்டு சிற்றிதழில் புன்னகையுடன் அமர்ந்திருந்த அன்னையை ருக்மிணி நோக்கி நின்றாள். அவள் முகம் உருகி நெகிழ்ந்து பிறிதொன்றாகி புன்னகை சூடியது.

திரும்புகையில் ஆலய வாயிலில் நின்றிருந்த ருக்மியை அப்போதென கண்டு அமிதையை நோக்கி திரும்பினாள். அமிதை “தங்களுக்கு காவலென மூத்தவர் வந்திருக்கிறார்” என்றாள். ”ஆம், எப்போதும் என் காவலனாக தன்னை உணர்பவர் என் தமையன். இனியவர்” என்றாள் ருக்மிணி. அமிதை ”இளையவளே, இனியவராக இல்லாத எவரையேனும் தாங்கள் அறிவீர்களா?” என்றாள். ருக்மிணி திரும்பி புன்னகைசெய்து “இல்லை. இவ்வுலகில் நான் காணும் முகங்கள் அனைத்திலும் அழகொன்றே பொலிகிறது. அவற்றின் அகக்குவளைகள் அனைத்திலும் இனிய நறுந்தேன் நிறைந்துள்ளது. சுனை மலரென உடலில் எழுந்தவை அல்லவா முகங்கள்? அவற்றில் இனியவை அன்றி எவை இருக்கமுடியும்?” என்றாள்.

அமிதை ”திருமகள் நோக்கு தொட்ட எதுவும் திருவுருவாகும் என்பார்கள் சூதர்கள்” என்றாள். ருக்மி அவளருகே வந்து “இளையவளே, இன்னும் நான்கு ஆலயங்கள் உள்ளன. விரைந்து முடித்தாயென்றால் அரசவைக்கு நீ வரலாம். இன்று அங்கே உனைப்பார்க்க மகதத்தின் சிற்றரசர் பன்னிருவர் வந்துள்ளனர்” என்றான். “அவ்வண்ணமே ஆகுக!” என்ற ருக்மிணி புன்னகையுடன் சென்று தேரிலேறிக்கொண்டாள்.

ஓரக்கண்ணால் அவள் முகத்தை நோக்கியபடி அமிதை அமர்ந்திருந்தாள். உண்மையிலேயே அனைத்தையும் மறந்துவிட்டாளா? இன்று அவள் விழைவு பூவணியும் என்று அறிந்திருக்கவில்லையா? அரசு சூழ்தலின் உச்சம் தேர்ந்த ஒருவர்கூட அத்தனை நடிக்க இயலாது. “இளவரசி” என்று மெல்ல அழைத்தாள். அவள் விழி திருப்ப ”இன்று கவர்ந்து செல்ல இளைய யாதவர் இந்நகர் நுழைகிறார்” என்றாள்.

அச்சொற்களை அவள் உள்ளம் வாங்கிக் கொள்ளவில்லை என்பதுபோல வெறுமையை நோக்கி ”எவர்?” என்றாள். ”இளவரசி, தாங்கள் வரைந்த ஓலைச்செய்தி இளைய யாதவரை அடைந்தது. தங்கள் கைபற்ற இன்று அவர் இந்நகர் புகுகிறார்” என்றாள் அமிதை. மலர்தேடி தவிக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்போல விழியலைய அவள் திரும்பிக் கொண்டாள். பின்னர் திரும்பி “இன்றா?” என்றாள். “ஆம், இளவரசி” என்றாள் அமிதை.

தேர் சென்று கார்த்தியாயினியின் ஆலயமுகப்பில் நின்றபோது சகடங்கள் உரசிய ஒலியில் விழித்துக் கொண்டவள் போல உடலதிர திரும்பி நோக்கி “இன்றா?” என்றாள். “ஆம், இளவரசி” என்றாள் அமிதை. “இங்கிருந்தா?” என்றாள். “ஆம். ஒன்பதாவது அன்னையின் ஆலயத்துக்கு அப்பாலுள்ள பெருஞ்சுழியில் நீரேறி அவரது படகுகள் வரக்கூடும்.” ருக்மிணி உளம் தளர்ந்தபோது கைவளைகள் ஒலிக்க இரு கைகளும் அவள் மடியில் விழுந்தன. ”ஆம், இன்றுதான். நான் நினைவுறுகிறேன், இன்றுதான்!” என்றாள்.

”எதை நினைவுறுகிறீர்கள் இளவரசி?” என்றாள் அமிதை. “நான் நன்கறிந்திருந்தேன்.” பதறும் கைநீட்டி அமிதையின் கைகளை பற்றிக்கொண்டு ”அன்னையே, தாங்கள் என்னிடம் சொன்னீர்கள், இன்று ஒன்பதாவது துர்க்கையம்மன் ஆலயத்தில் இருந்து என்னை அவர் கவர்ந்து செல்வதாக” என்றாள். அமிதை திகைத்து ”நானா?” என்றதும் “ஆம், நீங்களேதான்” என்றாள் ருக்மிணி. ”நான் உவகைகொண்டு எழுந்தேன். உங்களை ஆரத்தழுவி நற்செய்தி சொன்னமைக்காக வாழ்த்தினேன்.”

அமிதை இன்னொரு கையை அவள் தோள்மேல் வைத்து ”இளவரசி, தங்களிடம் நான் சொல்லவேயில்லை. நான் சொல்லலாகாது என்று எண்ணினேன்“ என்றாள். ”இல்லை அன்னையே, நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். நாம் இருவரும் வரதாவில் ஒரு படகில் தனித்தமர்ந்திருந்தோம். என் இரு கைகளையும் பற்றி மடியில் வைத்துக்கொண்டு கண்களை நோக்கி சொன்னீர்கள்.” அமிதை “நாம் வரதாவில் சென்று பல நாட்களாகிறது இளவரசி” என்றாள். ”அவ்வண்ணமெனில் இது கனவு. ஆனால் உங்கள் ஒவ்வொரு சொல்லையும் நன்கு நினைவுறுகிறேன்” என்றாள் ருக்மிணி.

ஆலயவாயிலில் நின்ற ருக்மி “செவிலியன்னையே, நேரமாகிறது” என்றான். தேர் நகர்ந்ததும் ருக்மிணி அவனை நோக்கியபின் ”தமையன் ஏன் என்னுடன் வந்திருக்கிறான்?” என்றாள். “இளைய யாதவர் தங்களை கைக்கொள்ள எழுவதாக அவருக்கு சொல்லப்பட்டுள்ளது. இன்று வரக்கூடுமென்று அவர் அறியவில்லை. ஆனால் சிறிய அச்சம் ஒன்று அவருக்கு உள்ளது. ஆகவே காவல் வந்துள்ளார்” என்றாள் அமிதை.

ருக்மிணி இகழ்ச்சியுடன் ”எனக்கு இவன் காவலா?” என்றாள். அமிதை ஒன்றும் சொல்லவில்லை. “இக்கணமே வில்லெடுத்து இவன் தலைகொய்தபின் அவருடன் செல்ல என்னால் ஆகாதா என்ன? வேலியிட்டு என்னை தடுக்க முடியுமென்று எண்ணும் மூடனா இவன்?” என்றாள். உலை ஏற்றி பழுக்க வைத்த உலோகச் சிலையென கனன்ற அவளை நோக்கி ”இளவரசி” என்ற சொல்லை உச்சரித்து நிறுத்திக்கொண்டாள் அமிதை.

“மூடன், என்னை அரண்மனையில் சிறையிட்டான் என்று எண்ணியிருக்கிறான். சிறையிட்டது என் பொறை. சொல்லெடுத்து இந்நகரையும் இவன் கோட்டையையும் அழிப்பதொன்றும் அரியதல்ல எனக்கு” என்று அவள் சொன்னாள். ”எதை அணையிட எண்ணுகிறான்? என்னுள்ளம் கொண்ட எழுச்சியையா? அவர் மார்பில் நானிருந்தாகவேண்டும் என்ற பேரூழ்நெறியையா?” அமிதை “இளவரசி, சற்றுமுன் அவரை அளியர் என்றீர்கள். நாம் இங்கு ஆலயம் தொழ வந்துள்ளோம்” என்றாள். “ஆம்” என்றாள் ருக்மிணி. “பெருங்கடலை திரையென ஈர்க்கும் வல்லமை கொண்டது குளிர்நிலவு என்பார்கள் இளவரசி. எளிய மானுடர் அதை அறிவதில்லை” என்றாள் அமிதை.

எரிதழல் என பறக்கும் செம்பிடரி நடுவே குருதி ஊறிச்சொட்டும் நாவும் வெண்கோரைப்பற்கள் பிறைநிலவென வளைந்தெழுந்த வாயும் எரி விண்மீன் என சிவந்த விழிகளுமாக நின்ற சிம்மத்தின் மேல் வலக்கால் தூக்கிவைத்து எட்டு பெருங்கைகள் விரித்து கருவறையில் கார்த்தியாயினி நின்றிருந்தாள். இடது பக்கக் கைகளில் சந்திரஹாசமும் பாசமும் அங்குசமும் அம்பும் வலது கைகளில் சூலமும் மின்னலும் கேடயமும் வில்லும் கொண்டு தழல்முடி சூடி அன்னை நின்றிருந்தாள். மின்னல் செம்முகில் மேல் எழுந்தது போல் தோன்றினாள்.

அன்னையின் எரிபீடத்துச் சாம்பலை மலருடன் பெற்று நெற்றியில் அணிந்து திரும்புகையில் தேர் அகலாக அதில் அவள் சுடராக எழுந்தாடுவதாக அமிதை எண்ணினாள். மண்ணிலிருந்து அனைத்தையும் உண்டு விண்நோக்கி கரிய குழல்பறக்க எழுந்து துடித்துக்கொண்டிருந்தாள். அணையும் தழல்களெல்லாம் விண்ணின் முடிவிலியால் உறிஞ்சி எடுக்கப்பட்டு அதன் மையத்தில் வாழும் பெருந்தழல் ஒன்றில் இணைவதாக சூதர் பாடல் சொல்வதை எண்ணிக்கொண்டாள்.

காளராத்ரி அன்னையின் ஆலயம் சடைத்திரிகளை விரித்து இருண்ட நிழல்பரப்பி நின்றிருந்த பேராலமரத்தின் விழுதுத்தொகைகளுக்கு உள்ளே அமைந்திருந்தது. சாலையில் தேர் சென்றபோது காலையின் முதல் வெளிச்சம் எழுந்து வரதாவின் நீரலைகளை மின்னச் செய்துகொண்டிருந்தது. சூழ்ந்திருந்த அனைத்து இலைப்பரப்புகளும் பளபளத்தன. ஒளியை சிறகுகளாக சூடியபடி சிறுபூச்சிகள் பறந்தலைந்தன. விண்வகுத்த கணமொன்றில் திரும்பி சுடரென எரிந்து மீண்டன. மரத்தொகைகளுக்கு மேல் எழுந்த பல்லாயிரம் பறவைகள் வானில் சுழன்றும் அமைந்தும் எழுந்தும் எழுப்பிய குரலால் அப்பாதை முற்றிலும் சூழப்பட்டிருந்தது.

மங்கல இசை நடுவே ஆலயமுகப்பில் வந்திறங்கியபோது ருக்மிணி மெல்ல குளிர்ந்து மேலும் கருமை கொண்டு இரும்புப் பாவையென எடை மிகுந்திருந்தாள். படிகளில் அவள் கால்வைத்தபோது தேர் முனகியபடி ஓசையிட்டது. புரவிகள் முன்கால்வைத்து எடை பரிமாறிகொண்டன. அவள் நடக்கையில் நிலம் சற்று அதிர்வதைப்போல் உணர்ந்தாள் அமிதை.

அத்தனைபேர் சூழ வாழ்த்தொலி எழுப்பியும் முற்றிலும் தனித்தவள்போல் சென்று கருவறையில் எரிந்தணைந்த சிதையென நின்ற சாம்பல்நிற அத்திரி மேல் கால்மடித்து அமர்ந்திருந்த கரியநிற அன்னையை நோக்கி வணங்கினாள். கருங்கூந்தல் இறங்கி மண்ணில் பரவி வேர்களெனச் சுற்றி மேலே சென்றது. கருமணி ஆரங்கள் அணிந்து கரிய பட்டு சுற்றி அமர்ந்திருந்த அன்னையின் காலடியில் நீலமணிக்கண்களில் விளக்கொளி மின்ன நூற்றெட்டு காகங்கள் செதுக்கப்பட்டிருந்தன.

இடது மேற்கையில் சூலமும் கீழ் கையில் கபாலமும் வலது மேற்கையில் உடுக்கையும் கீழ் கையில் நீலமலரும் கொண்டு அன்னை அமர்ந்திருந்தாள். திறந்த வாயில் இருந்து குருதியிலை என நீண்ட நாக்கு தொங்கியது. இருபுறமும் மூன்றாம் பிறைகள் என வெண்தேற்றைகள் வளைந்திருந்தன. உருண்ட கருவிழிகள் வெறித்து ஊழிப் பெரும்பசியென காட்டின.

வலம்வந்து வணங்கி மலர்கொண்டு திரும்புகையில் அவளிடம் ஒரு சொல்லேனும் பேச அமிதை விழைந்தாள். நூறுமுறை சொல்லெடுத்து நழுவவிட்டு பின் துணிந்து அருகேசென்று ”இளவரசி” என்றாள். ருக்மிணி திரும்பி நோக்கவில்லை. அமிதை அவளுக்குப் பின்னால் ஓடினாள். ஒரு சொல்லேனும் அவளிடம் கேட்க விழைபவள் போல. சொல்லற்ற தவிப்பே உடலசைவானவள் போல.

அவள் துயரத்தால் மேலும் மேலும் எடை கொண்டவள் போலிருந்தாள். முற்றிலும் தான் மட்டுமே புடவியில் எஞ்சியவள் போலிருந்தாள். அங்கு அவள் நெஞ்சு நிறைந்த மாயன்கூட இல்லை. அவளைத் தொடர்ந்து சென்ற அமிதை வளைந்து வழிந்தோடும் கரியநாகமொன்றென அவளை உணர்ந்தாள்.

ஒளி எழுந்து பரவ அலையடித்துச் சென்று கொண்டிருந்த வரதாவின் கரையில் விரிந்த மணல்வெளியை நோக்கி திரும்பி அமைந்திருந்தது எட்டாவது துர்க்கையான மகா கௌரியின் பேராலயம். ஏழடுக்கு மாளிகை மரத்தால் கட்டப்பட்டு மேலே வெண்சுண்ணம் பூசப்பட்டு சித்திரமெழுதி அணி சேர்க்கப்பட்டிருந்தது. முதல்மாடத்தில் பாதாள நாகங்களும் இருண்ட கரிய தெய்வங்களும் விழி சினந்து வாய்திறந்து நா நீட்டி கீழ்நோக்கி கூர்ந்திருந்தன. இரண்டாவது அடுக்கில் மானுடரின் வாழ்க்கை சித்திரங்களாக பொறிக்கப்பட்டிருந்தது. படைக்கலம் ஏந்தி போர்புரியும் வீரரும் கலந்த வண்ணச்சித்திரக்கோலம் நீரலையில் ஆடும் வண்ணச்சேலை போல வளைந்து சுற்றியிருந்தது.

மூன்றாவது அடுக்கில் யக்ஷர்களும் நான்காவது அடுக்கில் கின்னரரும் ஐந்தாவது அடுக்கில் கிம்புருடரும் ஆறாவது அடுக்கில் மூதாதையரும் தீட்டப்பட்டிருந்தனர். ஏழாவது அடுக்கில் தேவர்கள் மலர் மாலைகள் ஏந்தி பொன்மணி முடிசூடி முகில்களில் பறந்தனர். இந்திரனின் வ்யோமயானமும் காமதேனுவும் கற்பகமரமும் தெரிந்தன. உச்சியின் மூன்று கலசங்கள் மும்மூர்த்திகளை குறிப்பவை. அவற்றின்மேல் எழுந்து ஒளிவிட்ட வெண்படிகக்கல் தூயமுழுமையாகிய அன்னை. ஆயிரமிதழ்த் தாமரையில் நெற்றிமையத்தில் எழும் ஒளி.

அமிதை தன் அருகே அமர்ந்திருந்த ருக்மிணியை நோக்கிக் கொண்டிருந்தாள். முற்றிலும் புதிய எவளோ என ஆகி அமர்ந்திருந்தாள். ஒரு மானுடச் சொல்லேனும் இனி அவள் இதழ்களிலிருந்து எழாதென்று தோன்றியது. கைநழுவி விழப்போகும் அரும்பொருளை ஆரத்தழுவும் பதைப்புடன் அவள் நெஞ்சு விம்மியது. அவளுடன் பேச மீண்டும் மீண்டும் நூறு முறை சொல்லெடுத்தாள். ஒவ்வொரு சொல்லும் அவள் நெஞ்சு தொட்டதுமே சிறகுதிர்த்து புழுவாகியது.

ருக்மியின் படை சென்று மகாகௌரி ஆலய முகப்பில் அணி வகுக்க இசைச்சூதர்களின் தேரும் சேடியர் தேரும் சென்று விலக உருவான வட்டத்தில் அவள் தேர் சென்று நின்றபோது ருக்மிணி எழுந்து நின்றாள். படிகளில் கால்வைத்து இறங்கிச்சென்றபோது நீர்மேல் நடப்பவள் போல் மாறியிருந்தாள். அருகே நடந்த அமிதை அவளுடலில் இருந்து பனிமலைகளின் தண்மை பரவுவதை உணர்ந்தாள். குளிர்காலத்தில் காட்டின் தண்மையை முழுக்க பலநூறு சிற்றோடைகளாக தன்முன் இழுத்துக்கொண்டு ஆழங்களில் சுருண்டுறையும் மலைச்சுனை போலிருந்தாள்.

ருக்மிணியை எதிர்கொண்ட ருக்மி “இன்னும் ஓராலயம் மட்டுமே இளவரசி. இன்று வழிபாடு முடிந்ததும் அரண்மனைக்குச் சென்று இளைப்பாறி அரசவைக்கு வருக! மூன்று நாழிகையில் அவை கூடவேண்டுமென்று முரசறிவிக்கப்பட்டுள்ளது. மன்றுகூட சிசுபாலரும் சிற்றரசர் பன்னிருவரும் வந்துள்ளனர். அவையமர அரசர் ஒப்புக்கொண்டுள்ளார்” என்றான். அமிதையை நோக்கி “இன்று நம் ஊழின் நாள்” என்றான். அமிதை தன் விழிகளை சொல்லேதுமின்றி வைத்துக் கொண்டாள். ருக்மிணி அவனை நோக்கி புன்னகைத்து பின் உள்ளே சென்றாள்.

அதைக்கண்டு சற்று குழம்பி நின்றுவிட்டு ஓசையின்றி காலடிகளை வைத்து தொடர்ந்துவந்த ருக்மி அமிதையிடம் ”அவள் புன்னகைக்கிறாள். அவ்வண்ணமெனில் இன்று அரசவையில் எழப்போகும் அறிவிப்பை ஏற்கிறாள் என்றல்லவா பொருள்?” என்றான். ”இளவரசே, அவள் புன்னகையின்றி இருந்த பொழுதை தாங்கள் கண்டதுண்டா?” என்றாள் அமிதை. ருக்மி கண்கள் அலைவுற “ஆம், ஆனால் இன்று அவள் முகத்திலிருந்தது எப்போதும் உள்ள புன்னகையல்ல. ஆறுதல் அளிக்கும் அன்னையின் புன்னகை. அவள் என் துயரை அறிந்திருக்கிறாள். நான் சிக்கியுள்ள இக்கட்டிலிருந்து என்னை விடுவிக்க உளம் கொண்டிருக்கிறாள்” என்றான்.

அமிதை திரும்பி ருக்மிணி முன்னால் சென்றுவிட்டதை அறிந்து தலைவணங்கி ஓடி அருகணைந்தாள். கருவறையில் மாகாளை மேல் அமர்ந்த கோலத்தில் இருந்தாள் மகாகௌரி. வெண்சுண்ணத்தால் சமைக்கப்பட்டிருந்தது அவள் சிலை. வெண்கலை ஆடை அணிந்திருந்தாள். இரு மேற்கைகளில் வெண் தாமரையுடன் இரு கீழ்க்கரங்களும் அஞ்சலும் அருளலுமாக மலர விழி கனிந்திருந்தாள். கருங்கூந்தல் ஏழுபின்னல்களாக தோளில் தவழ்ந்தது. வெண்படிக மணிகளால் ஆன மாலையை குழலிலும் கழுத்திலும் இடையிலும் சுற்றியிருந்தாள். அவள் காலடியில் மும்மூர்த்திகள் தலை வணங்கி நின்றிருந்தனர்.

ஏழு திரி கொண்ட மலர் விளக்கு ஏந்தி பூசகர் அவளுக்கு சுடராட்டு செய்தபோது ஒற்றைச்சொல் நின்று ததும்பும் இதழ்கள் மறுகணம் மலருமென மயக்கூட்டின. ருக்மிணி அவளை வழிபட்டு மலர்கொண்டு திரும்புகையில் அருகே நின்றிருந்த அமைச்சர் ”கருவறைவிட்டு கௌரியே எழுந்தருளியது போல்” என்றார். அமிதை அவரை திரும்பி நோக்கிவிட்டு நீள்மூச்சு விட்டாள். மீண்டும் ருக்மியை நோக்கி விழிமலர புன்னகைத்து ஆலய முகப்புக்குச் சென்று தன் தேரில் ஏறிக்கொண்டாள் ருக்மிணி.

”ஆம், அவள் புன்னகை உரைப்பது ஒன்றே. அவள் அனைத்தும் அறிந்தவள். என் சொற்கள் எதுவும் அவளுக்குப் புரியவில்லை. அவளிடம் நான் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றான். அமிதை “நானும் நெடுந்தொலைவில்தான் உள்ளேன் இளவரசே” என்றபின் தேரில் ஏறிக்கொண்டாள். தேர் கிளம்ப பாகன் புரவிகளின் கடிவாளத்தை சுண்டுவதற்குள் ருக்மி விரைந்துசென்று தன் புரவியில் ஏறிக்கொண்டு ஒன்பதாவது துர்க்கையான சித்திதாத்ரியின் ஆலயம் நோக்கி சென்றான்.

வரதா ஆழிவண்ணன் கையில் அமைந்த ஆழிபோல பெரும்சுழியாக நின்று சுற்றி எழுந்து செல்லும் பூர்வாக்ஷம் என்னும் கரையிலிருந்த ஓங்கிய கரிய பாறையின் உச்சியிலிருந்தது சித்திதாத்ரியின் ஆலயம். அங்கு செல்ல பாறையின் புரிநூல் போல நூற்றியெட்டு படிகள் சரிவாக வெட்டப்பட்டிருந்தன. படிச்சரடின் உச்சியில் ஆலயத்தின் முகமுற்றம் பாறையில் அரைவட்டமாக வெட்டப்பட்டிருந்தது.

வரதாவில் ஒழுகிவந்த இலைகளும் தழைகளும் நெற்றுகளும் இணைந்து சுழற்றப்படும் மாலையாகி பின் மாபெரும் வில்லென வளைந்து அஞ்சியதைப்போல வட்டத்தின் விளிம்பில் தத்தளித்து மெல்ல மெல்ல ஆவல் கொண்டு விரைவு மிகுந்து சுழன்று உருவான சக்கரத்தின் நடுவே விண்வடிவோனின் உந்தி என சுழித்த மையம் நோக்கிச் சென்று ஓசையின்றி புதைந்து மறைந்தன.

நீர்க்கரையில் நின்று நோக்குகையில் அரைவட்டப் பாதையில் விரையும் நெற்றுகளையும் தழைகளையுமே காண முடிந்தது. சித்திதாத்ரியின் ஆலயமுற்றத்தில் நின்றால் மட்டுமே பெருஞ்சுழியின் முழுத்தோற்றத்தையும் காணமுடியும். படிகளின் முகப்பிலிட்ட பன்னிருகால் பந்தலில் வியர்வை வழிய உடல் சிலிர்த்து பிடரி குலைத்து இருமியும் மூச்சு சீறியும் நின்றன புரவிகள். அவற்றிலிருந்து குதித்து தங்கள் கவசங்கள் அணிந்த உடல்களை அணி நிரக்கச் செய்தனர் ருக்மியின் படை வீரர்கள்.

படைக்கு முன்னால் நெஞ்சில் இரும்புக்கவசமும் கால்களிலும் கைகளிலும் யானைத்தோல் கவசமும் கொண்டு ருக்மி நின்றான். அவனருகே நின்ற சுமந்திரர் மெல்லியகுரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். ருக்மிணியின் தேர் வந்து நின்றதும் ஓடிவந்து அதன் புரவிகளின் கடிவாளங்களைப் பற்றிய சேவகர் தேரை நிறுத்தினர். முன்னரே இறங்கிய இசைச்சூதரும் சேடியரும் இருபுறங்களிலாக விலகி மங்கலஇசையும் வாழ்த்தொலியும் முழக்கினர். ஆலயத்திற்குள்ளிருந்து வெளிவந்த பன்னிரு இசைச்சூதர்கள் கொம்பும் குழலும் முழவும் முரசும் முழங்க அவர்களுக்கு வரவேற்பு இசை எழுப்பினர்.

சித்திதாத்ரியின் பாறைமேல் சாய்ந்து கிளைவிரித்திருந்த நூற்றுக்கணக்கான செண்பகமரங்கள் நீலவிழிகளென செவ்விதழ்களென மலர் உதிர்த்திருந்தன. ருக்மிணி இறங்கி விழிதூக்கி மேலே எழுந்து நின்ற அன்னையின் ஆலயத்தை பார்த்தாள். கற்களாலான சிறிய ஆலயம் குன்று சூடிய முடிபோல தெரிந்தது.

”நூற்றி எட்டு படிகள் இளவரசி” என்றார் ஆலய காரியக்காரர். ”இங்கு அன்னை தன் உளம்கொண்ட உருத்திரனின் ஒருபகுதியாக அமர்ந்திருக்கிறாள். மாளாதவம் புரிந்து அன்னை அடைந்தபேறு இது என்பார் சூதர். மணநாள் அன்று மங்கலம் கொள்ள கன்னியர் வரும் ஆலயமாக ஆயிரம் ஆண்டுகளாக இது அமைந்துள்ளது. இடப்பாகம் என்றமைந்த இளநங்கையைக் கண்டு மலர்கொண்டு சென்றால் மணம் சிறக்கும்” என்றார். அவரை நோக்கி புன்னகைத்து ”ஆம், அறிவேன்” என்றாள் ருக்மிணி.

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கும் சிவக்குமாருக்கும் விருது
அடுத்த கட்டுரைகலாம் பற்றி சுஜாதா