‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 59

பகுதி பத்து : கதிர்முகம் – 4

துயிலெழுகையில் வந்து மெல்ல தொட்டு பகல் முழுக்க காலமென நீண்டு, அந்தியில் இருண்டு சூழ்ந்து, சித்தம் அழியும் கணத்தில் மறைந்து, இருண்ட சுஷுப்தியில் உருவெளித்தோற்றங்களாகி தன்னை நடித்து, விழித்தெழுகையில் குனிந்து முகம் நோக்கி எப்போதும் உடனிருந்தது அந்த எதிர்பார்ப்பு. அமிதை படியிறங்குகையில், இடைநாழியில் நடக்கையில், அடுமனைகளில் ஆணையிடுகையில் ஒவ்வொரு கணமும் அதை தன்னுடன் உணர்ந்தாள்.

எப்படி இளைய யாதவரின் செய்தி தன்னை வந்தடையப்போகிறது என்று அவள் எத்தனை எண்ணியும் உய்த்துணர முடியவில்லை. அரண்மனை முழுக்க ருக்மியின் படைவீரர்களும் சேடியரும் ஏவலரும் நிறைந்திருந்தனர். வாயிலில் மூன்றடுக்கு காவலிருந்தது. அரசியர் மாளிகைகளும் அவர்களின் சேடியரும் உளவறியப்பட்டனர். பறவைத்தூது அணைவதென்பது எண்ணியும் பார்க்கமுடியாது எனினும் செய்தி வருமென்றே அமிதை எண்ணினாள்.

சூதர் சொல்லில் வாழும் மாயனை அவள் நெஞ்சம் நூறாயிரம் சித்திரங்களென விரித்தெடுத்திருந்தது. நறுமணம் சென்று சேரும் இடமெல்லாம் தானும் சென்று சேரும் தடையற்றவன் என்று அவனை பாடினர் சூதர். விழைவு கொண்டு நீண்ட கைகளில் சிறகடித்து அமரும் வண்ணத்துப்பூச்சி என்றனர். காற்றுக்கு தடையுண்டு வானுக்கு தடையுள்ள இடமொன்றில்லை என்றனர். எனவே அவன் அணுகுவான் என்று உறுதிகொண்டிருந்தாள். ஒவ்வொரு காலடியோசைக்கும் ஒவ்வொரு இறகுஅசைவுக் காற்றுக்கும் ஒவ்வொரு உலோக ஒலிக்கும் இதோ என துணுக்குற்றது உள்ளம்.

விருஷ்டியும் கீர்த்தியும் வகுத்தளித்த நெறிப்படி அவள் செய்தி அனுப்பியிருந்தாள். அவள் எழுதிய மந்தணத் தோல் சுருளை பறவைக்காலில் கட்டி பறக்கவிட்டாள். அதற்கு முன்பு ருக்மிணியைப் பார்க்க வந்த முதிய பிராமண மருத்துவர் அச்சுருளை சொல் ஊன்றி ஏழுமுறை படித்தார். பின் விழிமூடி தனக்குள் சொல்லிக் கொண்டார். சொல்லற்ற விழிகளுடன் அவளை நோக்கி தலைவணங்கி கிளம்பிச்சென்றார். ஓலைச்சுருளுடன் சென்ற கழுகு வாயிலிலேயே ருக்மியின் வீரர்களால் பிடிக்கப்படுமென அமிதை அறிந்திருந்தாள். அச்செய்தி பிடிக்கப்பட்டதனாலேயே பின் ஒரு செய்தி தொடருமென்று ருக்மி உய்த்திருக்கவில்லை.

ஒவ்வொரு நுண்ணிய அரசுசூழ்தலுக்கும் நிகரான பிறிதொரு அரசு சூழ்தலை எளிதில் மானுட உள்ளங்கள் உண்டாக்கிவிடுவதை எண்ணி அவள் வியந்தாள். நன்கறிந்த ஒருவரை ஒருபோதும் அரசு சூழ்தலில் வெல்ல முடியாது. அவன் செய்யக்கூடுவதென்ன என்பதை அணுக்கமானவர் எளிதில் உய்த்துவிடலாம். ருக்மியை சிற்றரசியர் தங்கள் தோள்களில் தூக்கி வளர்த்திருந்தனர். அவன் விழி ஓடும் திசையை உய்த்து முன்னரே பந்து வீசி விளையாடி வந்திருந்த அவர்களுக்கு அவன் உள்ளம் செல்லும் திசை தெரிந்திருந்தது.

ருக்மிணியின் முத்திரைச் சாத்துடன் சென்றிருந்தது அவ்வோலை. அவள் நெஞ்சம் துளித்த கண்ணீர். ஆனால் அமிதை அடைந்த எவ்வுணர்வையும் அவள் அடைந்திருக்கவில்லை. அச்செய்தி அனுப்பப்பட்டதையே அவள் மறந்துவிட்டிருந்தாள். அமிதை ஒருமுறை “இளைய யாதவரிடமிருந்து எச்செய்தியும் இல்லையே இளவரசி” என்றாள். வியந்து விழிவிரித்து “என்ன செய்தி?” என்றாள் ருக்மிணி. சற்றே சினம் எழ “தங்கள் உளம் அவர்மேல் எழுந்துள்ளதை எழுதி அனுப்பியிருந்தோம், மறந்துவிட்டீர்கள் போலும்…” என்றாள். “ஆம், எழுதி அனுப்பினேன், நினைவுள்ளது” என்றாள் ருக்மிணி.

அந்தக் குரலிலிருந்த இயல்புத் தன்மை மேலும் சினமுறச்செய்ய “அவர் தங்களை ஏற்கிறாரா என்பதை இன்னும் அறிய முடியவில்லையே?” என்றாள் அமிதை. ”என்ன?” என்றாள் ருக்மிணி. “தங்களை அவர் மறுக்கவும் வாய்ப்புள்ளது. தங்கள் கைகொள்வது என்பது மகதத்துடன் போர் அறிவித்தலேதான்” என்றாள் அமிதை. அச்சொற்களை சொல்லும்போதே அச்செய்தியின் கசப்பால் அவள் முகம் சுருங்கியது. ஆனால் ருக்மிணி “ஏற்கவில்லை என்றால்தான் என்ன?” என்றாள். “அவர் ஏற்பும் மறுப்புமா என் நெஞ்சை பகுப்பது? நான் இங்கிருக்கிறேன், அவர் நெஞ்சு அமர்ந்த திருமகளென. ஏற்பிலும் மறுப்பிலுமா வகுக்கப்படுகிறது என் இடம்?” அவள் சொல்வதென்ன என்று அமிதையின் உள்ளம் அறிந்தது. இங்கிருப்பதும் முடிசூடி துவாரகை மன்றில் அமர்ந்திருப்பதும் அவளுக்கு நிகரே எனில் அவன் சொல்லால் அவளுக்கு ஆவது ஒன்றில்லை என்பதே உண்மை.

அப்படியென்றால் இவை அனைத்தும் தான் கொண்ட துடிப்பின் விளைவே. இத்துயர் தன்னுடையது மட்டுமே. ஆம் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். விழைவது நான். என் மகள் அரசியாக வேண்டுமென்று. அவள் காதல் கனியென்றாவது என் நிறைவுக்கே. என் கையில் பூத்த மலரை ஒழுகும் பேரியாற்றில் மெல்ல இறக்கிவிடவே உள்ளம் எழுகிறது.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து மெல்ல சிற்றடி வைத்து நடந்து மஞ்சத்தறை கதவை விலக்கி மலர்ச்சேக்கையில் நீள்விழி மூடி, வளைந்த கொடியென கிடக்கும் ருக்மிணியின் கரிய ஒளியுடன் திகழ்ந்த முகத்தை நோக்கி நெடுமூச்சு விடுவாள். முதல் திருமகள், அன்னம் என்றாகி வந்த மூலத்திருமகள் அவளென்றனர் நிமித்திகர். அவள் கையை அன்றி பிறிதை அவன் கொள்ள இயலாது. அவன் சொல் வரும், வாராதிருக்காது என்று தன் நெஞ்சடக்கி திரும்புவாள். நான்கடி எடுத்து வைத்து இடைநாழியை அடையும்போது அந்நம்பிக்கை தேய்ந்து மீண்டும் நெஞ்சு ஏங்கி தவிக்கத் தொடங்கும்.

எட்டாம் நாள் துவாரகையின் செய்தி வந்தது, ஒருபோதும் அவள் எண்ணியிருக்காத வகையில். ருக்மியின் அவையில் தென்னாட்டுப் பாணனொருவன் இசை மன்றில் அமர்ந்தான். அரசரும் அரசியும் சிற்றரசியரும் அமர்ந்த அந்த அவைக்கு ருக்மிணியுடன் அமிதையும் சென்று இளவரசியின் பீடத்தருகே அமர்ந்தாள். கரிய பெரிய விழிகளும் செறிந்த நீண்ட தாடியும் வெண்ணிற தலைப்பாகைமேல் வெண்பனிபோல் அன்னமயில் இறகும் சூடிய இளம்பாணன் தன் இரு விறலியரையும் அருகமர்த்தி மடியில் மகர யாழை வைத்து நீண்ட விரல்களின் நுனியில் அமைந்த சிப்பி நகங்களால் மீட்டி ஆழ்ந்த முழவுக்குரலில் தென்னாட்டுக் கதையொன்றை பாடினான்.

மூதூர் மதுரை அருகே ஆயர் குடியொன்றில் பிறந்த அழகி, அவளுக்கென அங்கொரு மாயன் பிறந்ததை அறிந்து மையல் கொள்ளும் கதை. அவள் பெயர் நப்பின்னை. அவள் உள்ளம் கவர்ந்தவன் ஆழி நீலவண்ணன். வேய்ங்குழல் கொண்டு காட்டை மயக்கும் கள்வன். அக்கதையை தன் தொல் மொழியில் அணிச்சொற்கள்கூட்டி பண்முயங்க அவன் பாடினான். அவையில் அரசகுடியினரும் அமிதையும் அமைச்சருமே அம்மொழியை அறிந்திருந்தனர். எட்டு நாள் காத்திருந்து பிறிதொன்றிலும் நெஞ்சமையாது விழி அலைய செவிகூராது அமர்ந்திருந்த அமிதை பாடலின் ஓரிரு வரிகள் கடந்த பின்னரே அது எவருக்கென பாடப்படுவது என அறிந்தாள். பாடுபவனும் அதன் பொருளை அறிந்திருக்கவில்லை.

முதல் பன்னிரு வரிகளுக்குபின் வந்த ஆறு வரிப்பாடல் அவன் பாடுவதை பொருள் கொள்ளும் முறையென்ன என்று உரைத்தது. ஒன்று தொட்டு நான்கெடுத்து ஆறு வைத்து கூட்டுக எனச்செல்லும் அது மயில் நடன சொல்லடுக்கு முறை என அவள் கற்றிருந்தாள். கேட்டிருந்தவர் எவருமறியாத பொருளை அவளுக்கு மட்டும் அளித்தது அது. ருக்மி அப்பாடலை தன் கூரிய விழிகளை நாட்டி இடக்கையால் மீசை நுனியை முறுக்கியபடி கேட்டிருந்தான். அவன் அமைச்சர்களும் அதன் ஒவ்வொரு சொல்லையும் செவி கூர்ந்து மீண்டனர். நிகழ்வதென்ன என்று அறியாது பீஷ்மகர் இளமது மயக்கில் அரைக்கண் மூடி அமர்ந்திருக்க அரசி இறுகிய முகத்துடன் எவரையும் நோக்காமலிருந்தாள்.

ஐயமும் ஆவலும் தயக்கமுமாக அமிதையை வந்து தொட்டுத் தொட்டுச் சென்றன சிற்றரசியரின் விழிகள். தன்னுள்ளம் அடைந்த கிளர்ச்சியை மறைப்பதற்கு அதுவரை அடைந்த அரசுசூழ்தல் கல்வி அனைத்தையும் பயன்படுத்தினாள் அமிதை. யாழ் தேரும் பாணனின் விரல்களை மட்டும் நோக்கி விழிநாட்டி உதடுகளை ஒன்றோடொன்று இறுக்கி அசைவற்று அமர்ந்திருந்தாள். கூடுகட்டும் குருவியின் உளஒருமையுடன் அவன் பாடும் சொல்லில் இருந்து உரிய சொற்களைத் தேர்ந்து செய்தியை பின்னிக் கொண்டிருந்தாள்.

பாடி முடித்து பாணன் இருகைகளையும் தூக்கி வணங்கியபோது அவை ஆரவரித்தது. தென்னாட்டிலிருந்து துவாரகைக்குச் சென்று மீண்ட தன் ஆசிரியனை அவன் வாழ்த்தினான். சரடறுந்து நிலையழிந்தவள் போல உடலசைய சித்தம் விடுபட்டு அதுவரை கேட்ட செய்திகளை மீண்டுமொருமுறை தன் உள்ளூர ஓட்டினாள். திருமகளின் கைகொள்ள இளையவன் உளம்கொண்டிருந்தான். அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் முன்னரே கோடிமுறை தன் செவிகள் கேட்டதுதான் என்றான். ஆடி மாதத்து இறுதிப் பெருக்கு நாளில் கொற்றவை ஆலயத்தின் ஆயிரம்குட நன்னீராட்டு விழவில் ருக்மிணி வழிபட வரும்போது அவளைக் கவர்ந்து கொள்வதாக திட்டம் வகுத்திருந்தான்.

பெரு விழவிலா என்று அமிதை திகைத்தாள். மறுகணம் பெருவிழவிலன்றி வேறெங்ஙனம் அது நிகழும் என எண்ணி புன்னகை புரிந்தாள். எங்கும் தான் மட்டுமே என்று தெரிபவன் எத்திரளிலும் பிறிதின்றி கலக்கவும் கற்றிருப்பான். அவன் தோணி கரையணைய உகந்த இடம் கொற்றவை ஆலயத்திற்கருகே வரதா வளைந்து செல்லும் சுழியே. அங்கு அணைவதும் விலகுவதும் ஒற்றை நீர்வளைவிலென நிகழமுடியும். சுழி தாண்டத்தெரிந்த படகை எளிய காவல்படகினர் எளிதில் பின்தொடர முடியாது. மேலும் அவன் அதை அவ்விழவுக்கென வந்து நகர்நிறைந்திருக்கும் மகதத்தின் சிற்றரரசர் பார்வையில் நிகழ்த்த விரும்புகிறான். அவர்களை வென்று அவளைக் கொண்டால் அவன் புகழ் ஓங்கும். அதில் சூதென ஏதுமில்லை என்பது உறுதியாகி பீஷ்மகருக்கு பழியும் நிகழாதொழியும்.

அதை ருக்மிணியிடம் சொல்லவேண்டியதில்லை என அவள் முடிவு செய்தாள். திருமகள் ஆழிவண்ணன் மார்பில் எப்போதுமென இருப்பவள். அவள் அங்கிருந்து விலகுவதுமில்லை மீள்வதுமில்லை. அவளை அவையமர்ந்து நோக்கியிருக்கையில் அழகென்பதன்றி இறையெழுந்தருளும் வழியொன்று உண்டா இப்புடவியில் என அவள் எண்ணிக்கொண்டாள். விழியறியும் அழகெல்லாம் அவளே என்று நூல்கள் சொல்கின்றன. அவ்வண்ணமெனில் அவளை நெஞ்சிலோ முடியிலோ விழியிலோ சூடாத தெய்வமென ஒன்று இருக்கமுடியுமா?

மன்று முடிந்து விறலியருக்கு அரசியும் பாணனுக்கு அரசரும் பரிசில் அளித்தனர். ருக்மிணி அரசமேடை ஏறிச்சென்று அரசியை வணங்க அவள் தலைவகிடில் கைவைத்து வாழ்த்தினாள். அவள் விழிகளை சந்தித்து இவள் எவள் என வியந்தவள் போல அரசியின் நோக்கு வந்து அமிதையை உசாவியது. அமிதை புன்னகைத்தாள். மங்கலப்பேரிசையும் வாழ்த்துகளும் செவியழித்து சூழ பீஷ்மகரின் விழி வந்து அமிதையை தொட்டது. அமிதை இதழ்களை மட்டும் அசைத்து ‘செய்தி வந்துவிட்டது’ என்றாள். ஒரே கணத்தில் அரசியர் மூவர் விழிகளும் வருடப்பட்ட யாழின் தந்திகள் என அதிர்ந்து அதை பெற்றுக் கொண்டன.

அரசர் “என்று?” என்றார். அமிதை “ஆடி நிறைவில்” என்றாள். அதற்குள் அருகணைந்த அமைச்சர் “இளவரசியின் உடல் நலம் எங்ஙனமுள்ளது?” என்று உதடுகள் சொல்ல விழிகூர்ந்து அவள் உதடுகளை நோக்கினார். அதில் துவாரகைக்குத் தூதுபோன மருத்துவர் பற்றிய குறிப்பை தொட்டறிந்த அமிதை “ஆவணி இறுதிவரை அவள் உள்ளம் நிலைக்காது என்றனர் மருத்துவர்” என்றாள். நகைத்தபடி “கன்னியர் உள்ளம் கனவைக் கடக்கும் முறையென்ன எனறு நாமும் அறிவோம்” என்றார் அமைச்சர். அமிதை தலை வணங்கினாள்.

ருக்மி அருகே வந்து பீஷ்மகரிடம் “சேதி நாட்டரசரின் மூன்றாவது தூது வந்துள்ளது தந்தையே. மணநிகழ்வுக்கு எப்போது நாள் குறிக்கப்படும் என்று கேட்டிருக்கிறார்” என்றான். பீஷ்மகர் “இதில் நான் என்ன சொல்வது? என் சொற்கள் அரியணை அமர்வதில்லை” என்றார். ருக்மி “ஆவணி நான்காம் நாளில் நாள்குறிக்கிறேன் என்று செய்தியனுப்பியுள்ளேன். அரச மணநிகழ்வுக்கு உகந்த மாதம் ஆவணி. திருவோண நாள் பன்னிரு பொருத்தங்களும் அமைந்தது என்றனர் நிமித்திகர்” என்றான். “நாளை நானும் அமைச்சர்களும் முறைப்படி தங்கள் அரண்மனைக்கு வந்து மொழி கேட்கிறோம். தங்கள் ஆணையுடன் செய்தியை சேதி நாட்டரசருக்கு அனுப்புகிறேன்.”

பீஷ்மகர் சினத்துடன் அவனை நோக்கி பின் தோள்களை தளர்த்தி “என் மகள் விழையாத எதையும் செய்ய என் சொல் ஒப்பாது” என்றார். ருக்மியின் உள்ளத்தில் இருந்த மெல்லிய ஐயத்தை அவரது அச்சினம் இல்லாமலாக்கியது. அவன் புன்னகைத்து “தந்தையே, இறுதியில் தங்கள் ஒப்புதல் வருமென்று நானறிவேன். தங்கள் அரண்மனைக்கு வந்து அதற்கான அரசுசூழ் முறைகளை நானே விளக்குகிறேன்” என்றான். அந்த உரையாடல் முழுக்க தான் கேட்பதற்காக நிகழ்வதென உணர்ந்த அமிதை முகத்தில் எவ்வுணர்வும் இன்றி தலைவணங்கி புறம் காட்டாது விலகி அரச மேடையிலிருந்து வெளிவந்தாள்.

விறலியருக்கு பரிசளித்து முகமன்சொல்லி நின்றிருந்த ருக்மிணியின் மேலாடை நுனியைப்பற்றி அமிதை “இரவேறிவிட்டது, மகளிர்மாடத்துக்கு மீள்வோம் இளவரசி” என்றாள். ருக்மிணி திரும்பி “ஆம்” என்றாள். ”எத்தனை இனிய பாடல்!” என்றாள். “எங்கோ ஒருத்தி மையல் கொள்கிறாள். அம்மையல் சிறகு விரித்து தன் மலர்க்கிளையை தேடிச்சென்று அமைகிறது. அன்னையே, விழைவு நீர்போன்றது, தனக்குரிய பாதையை கண்டடையும் விழிகள் கொண்டது என்று ஒரு வரி வந்தது, கேட்டீர்களா?” அமிதை “ஆம்” என்று சொல்லி “வருக” என்றாள்.

இளங்காற்றில் கொடியென கைகள் துவள நடந்தபடி ருக்மிணி தன் கனவில் ஆழ்ந்து பின் நீள்மூச்சுவிட்டு திரும்பி “அன்னையே, அவள் பெயர் நப்பின்னை” என்றாள். “இனிய பெயர்” என்றாள் அமிதை. “அது என் பெயர் என்றே ஒலிக்கிறது” என்றாள் ருக்மிணி. “எங்கோ இருக்கும் அவள் எனக்கு மிக அண்மையானவள் என்று தோன்றுகிறது.” அமிதை “அவ்வாறு ஒருத்தி இருக்க வாய்ப்பில்லை இளவரசி. அது சூதர்களின் கனவில் எழுந்த பெயர் என்றே எண்ணுகிறேன். இக்கதைகள் ஒருகதையின் பலநூறு வடிவங்கள் மட்டுமே. பஞ்சு சூடிய விதைகள் என பாரதவர்ஷமெங்கும் இவை பறந்தலைகின்றன. ஈரமண்ணில் பதிந்து முளைக்கின்றன” என்றாள். “கற்பனை என்றாலும் இனியது” என்றாள் ருக்மிணி.

ஆடிமுழுமைக்கு மேலும் பன்னிரு நாட்கள் இருந்தன. நூறுமுறை மாறி மாறி எண்ணிக் கணக்கிட்டாலும் நாட்கள் குறையாமலேயே இருக்கும் இரக்கமற்ற காலநெறியை எண்ணி சினந்தது அவள் உள்ளம். ஆயிரம் மாயம் செய்பவன் இந்நாட்களை ஒவ்வொன்றாகத் தொட்டு நீர்க்குமிழியென உடையச் செய்தாலென்ன? இருட்டி விடிகையில் ஆடிமுடிந்த அந்நாள் அணைந்து தன் விரைவுப் படகுடன் குழல்சூடிய நீலம் சிரிக்க வந்து நின்றாலென்ன? இதோ என் மகளை கொண்டு செல்கிறான். என் மடியமர்த்தி நான் கொஞ்சிய கருஞ்சாந்துச் சிற்றுடலை, விழிசிரிக்க பல்முத்துக்கள் ஒளிர என்னோடு கைவீசி ஆடிய சிறுமியை, கிளிக்கொஞ்சல் என்ற மொழிகொண்டு என்னைச் சூழ்ந்த பேதையை, சிற்றாடை கட்டி என்முன் நாணிய பெதும்பையை, உடல் பூத்த முலைகள் ஒசிய வளைந்த இடையுடன் நான் கண்டு கண் நெகிழ்ந்த கன்னியை. என் இல்லத்து பொற்குவை களவு போகிறது. என் கருவூலம் காற்று நிறைந்ததாகப்போகிறது.

ஆனாலும் நிறைந்துள்ளது நெஞ்சு. இங்கு நானிருக்கமாட்டேன். செல்லும் அவள் சிற்றடிகளைத்தொடர்ந்து செல்லும் அவள் நிழல் நான். உயிர் சென்றபின் இங்கு எஞ்சுவது நான் மறைந்த வெற்றுடல். அங்கு சென்று அவள் மலரும்போது சூழ்ந்து மலர்வது என் அகம் நிறைந்த கனவு. மீண்டும் மீண்டும் ஓசையில்லா காலடிகளுடன் சென்று உப்பரிகையில் அமர்ந்து வரதாவை நோக்கும் ருக்மிணியை மறைந்து நின்று பார்த்தாள். ஒவ்வொரு கணமுமென ஒளி கொள்கிறதா இவள் உடல்? கருமுத்து. காலை ஒளிபட்ட நீலம். நீர்த்துளி தங்கிய குவளை. உடலே ஒரு ஒளிர் கருவிழியென்றாகி அந்த உப்பரிகையில் இமையா நோக்கென்று இருந்தாள்.

இத்தனை பூத்திருக்க இவள் கொண்ட காதல் எத்தனை பெரியது! அதை தன் நெஞ்சமலரெனக் கொள்ளும் அவன் எத்தனை இனியவன்! இப்புவியில் அவ்விண்ணில் அவன் கொண்ட பேறுக்கு நிகரென பிறிதொன்றுண்டா? இவளை தொட்டுத் தழுவி என் நெஞ்சில் பூக்கவைக்கும் பெரும்பேறுகொண்ட நான் அவனுக்கு நிகர். அவன் வந்து என் அருகே நின்று இவள் கைகொள்ள கோருவான். அப்போது ஒரு கணம் அவனுக்குமேல் ஒரு நிழல்மரமென கிளைவிரிப்பேன். வாழ்த்தி மலருதிர்ப்பேன்.

கருவூல அறை திறந்து அவள் அணிகளை தந்தப் பேழையிலிருந்து எடுத்துப் பரப்பி ஒவ்வொன்றாக நோக்கி நெடுமூச்செறிந்து ஏற்றும் விலக்கியும் தன்னுடனாடிக்கொண்டிருந்தாள் அமிதை. இதில் அவள் சூடிச்செல்லவேண்டிய அணி எது? இத்தனை அணிகளையும் அணிந்து சென்றாலும் அவள் செல்லுமிடத்தின் செல்வச் சிறப்புக்கு நிகராகுமா? பெண் கவர்ந்து செல்பவன் பொன் கொண்டு செல்லலாகாது என்று நெறியுள்ளது. மகள்செல்வம் பெற அவன் முறையுடையவனல்ல. ஆயினும் வெற்றுடலுடன் செல்லக் கூடுமோ என் மகள்? கையறிந்த நாள் முதல் அவள் உடலில் அள்ளி நானிட்ட அணிகள் அனைத்தும் தொடரவேண்டாமா அவளை?

ஆனால் கொற்றவை ஆலயத்திற்கு வழிபடச் செல்கையில் மண நாளின் முழுதணிக்கோலம் உகந்ததல்ல. செம்மணியாரங்கள் செஞ்சுடர்த் தோடுகள் பவளநிரை நெற்றிமணிகள் என சிலவே வகுக்கப்பட்டுள்ளன. எவரும் ஐயம்கொள்ளலாகாது என்று எண்ணியதுமே அச்சம்கொண்டு வயிறு அதிர்ந்தது. என்ன நிகழுமென்று அவள் அறியக்கூடவில்லை. போர் நிகழ்ந்தால் படையின்றி வரும் யாதவன் என்ன செய்வான்? எது நிகழ்கினும் என் மகள் இங்கிருந்து செல்கையில் அவள் உடலெங்கும் நிறைந்திருக்க வேண்டும் அன்னை தொட்டளிக்கும் வாழ்த்து. இளவரசியென அவள் எழுந்தருள வேண்டும். அங்கே மணிமுடி சூடும் பேரரசியென அமர்ந்திருக்க வேண்டும்.

வாசலை நிறைத்து இரவென கருமை காட்டி மறையும் யானையென இருண்டு வெளுத்து இருண்டு ஒவ்வொரு நாளாக சென்று மறைந்தன. வரதா செம்பெருக்காக எழுந்து இறுதிப்படி கடந்து நகர்ச் சதுக்க முனை வரை வந்து அலையடித்துத் தளும்பி அலைவடிவு காட்டி பின் வடிந்து அன்னை அடிவயிறென சேற்றுவரிகளை மிச்சம் வைத்து சுருங்கியது. அவ்வருடம் பதினான்கு சேற்றுவரிகள் அமைந்தன என்றனர் வேளிர்குடி மூத்தோர். கழனி பொன்னாகிவிட்டது, இனி கதிரெழுந்து பொன்பொலியும் என்று கணித்தனர் கணியர். அவ்வுவகையை கொண்டாட வேளிர்குடியின் பதினெட்டு மூத்தார் ஆலயங்களில் அக்கார அடிசிலும் கரும்பும் மஞ்சளும் கொண்டு அன்னக்கொடை கொடுத்து மலராட்டு செய்தனர்.

வரதாவின் நீரின் சேற்றுமணம் குறைந்து செம்பளிங்கு என நீர் தெளிந்தது. அதன் கரைச்சேறு உலர்ந்து செம்பட்டு போல நெளிநெளியாகி பின் மூதாய்ச்சியின் முகச்சுருக்கமென வெடித்தது. அதில் சிறு பறவைகளின் கால்களெழுதிய சித்திரங்கள் கல்வெட்டுகளென எஞ்சின. வரதாவின் ஆழங்களில் பல கோடி மீன்முட்டைகள் விரிந்தன. வெள்ளித் துருவல்களென இளமீன்கள் எழுந்து வெயில் நாடி வந்து நீரலையின் பரப்பின்மேல் நெளிந்தன. படகில் சென்று குனிந்து விண்மீன் செறிந்து பெருகிய வானமெனத் தெரிந்த நீர்ப்பரப்பைப் பார்த்து “இவ்வாண்டு நம் வலைகிழிய மீன்செழிக்கும். நம் இல்லங்களில் வெள்ளி நிறையும்” என்று கூவினர் முதிய குகர்.

வரதாவின் இரு கரைகளிலும் அமைந்த மச்சர்களின் சிறு குடில்கள் அனைத்திலும் இரவில் பந்தங்கள் ஏற்றி மீனூன் கலந்த பெருஞ்சோறு பயந்து மூதாதையரை வழிபட்டனர். சிறுதுடி மீட்டி குலப்பாடல் பாடி இரவெல்லாம் நடனமிட்டனர். காட்டுக் கருங்குரங்கின் ஒலிகள் போல இரவெல்லாம் அவர்களின் குறுமுழவுகளின் ஒலி நகரைச்சூழ்ந்த்து. இருளில் வரதாவிலிருந்து வந்த மெல்லிய ஆவிக்காற்றில் மீன்முட்டைகள் விழிதிறக்கும் வறுத்த உளுந்து மணம் கலந்திருந்தது.

மழையினால் ஈரமூறி பொலிவிழந்த மரச்சுவர்களின் இணைப்புகளை பூசி செப்பனிட்டனர். பாசிபடிந்த சுவர்களை செதுக்கி வெண்பிசின் பூசி முட்டையோடென பளிங்கென ஆக்கினர். மரச்சட்டங்களில் தேன்மெழுகும் அரக்கும் கலந்த சாந்து பூசப்பட்டது. தரைப்பலகைகளில் மெழுகும் சுண்ணத்தரைகளில் அரக்கும் சுண்ணமும் கலந்த மெழுகுச்சாந்தும் பூசப்பட்டன. அரண்மனையின் ஊதல் காற்றில் நனைந்து கிழிந்த திரைச்சீலைகள் அனைத்தும் புதுப்பட்டாக மாற்றப்பட்டன. மழைப்பிசிர் படிந்து ஊறித் தளர்ந்த முரசுத் தோல்களை நீக்கி புதுத்தோல் கட்டி இறுக்கி இழுத்து சுதி சேர்த்தனர்.

நகரத்து இல்லங்களனைத்தும் நீராடி புத்தாடை மாற்றி அணி புனைந்து வருவது போல பொலிவு கொண்டன. தெருக்களில் வரதாவின் வளைந்த கரையிலிருந்து அள்ளிவரப்பட்ட வெண்மணல் விரிக்கப்பட்டது. தூண்களும் மாடங்களும் செஞ்சாந்து கலந்த அரக்கு பூசப்பட்டு வண்ணம் கொண்டன. கதவுகளின் வெண்கலக்குமிழ்கள் நெல்லிக்காய்ச்சாறும் மென்மணலுமிட்டு துலக்கப்பட்டு பொன்னாயின.

அரண்மனையை அணி செய்ய மலைகளிலிருந்து ஈச்ச ஓலைகளையும் குருத்தோலைகளையும் சிறுதோணிகள் வழியாக கொண்டு வந்து அடுக்கினர். தாமரையும் அல்லியும் குவளையும் என குளிர்மலர்களை தண்டோடு கொண்டுவந்து மரத்தோணிகளில் பெருக்கிவைத்த நீரில் இட்டு வைத்தனர். பாரிஜாதமும் முல்லையும் தெச்சியும் அரளியும் செண்பகமும் என மலர்கள் வந்துகொண்டே இருந்தன. கூடியமர்ந்து எழுந்தமரும் சிறுகுருவிகள் போல் கைகள் நடனமிட மலர் தொடுக்கத் தொடங்கினர் சேடியர்.

ஆடி நிறைவு விதர்ப்பத்தின் ஏழு பெருங்குலங்களை ஆளும் ஒன்பது அன்னையரின் பெருநாள். சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாந்தை, கூஷ்மாண்டை, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி என ஒன்பது துர்க்கையரும் முழுதணிக்கோலம் கொண்டு குருதியும் அன்னமும் என பலி பெற்று அருளும் நன்னாள்.

அரண்மனையின் நீள் கூடம் வழியாக ஒவ்வொரு மூலையும் மறு நாள் விழவுக்கென விழித்தெழுந்து விரைவு கொள்வதைப்பார்த்தபடி அமிதை நடந்தாள். உடலெங்கும் ஒரு நூறு துடி முழங்கியது போல தோன்றியது. கால்கள் பறந்தன. நிலை தவறி விழுந்துவிடுவோமென உடல் பதைத்தது. அவையில் இரு முறை அவள் விழிகளை தொட்ட சிற்றரசியர் சிறிய அசைவால் என்ன என வினவினர். அவள் ஆம் என்று மட்டும் விழியசைத்தாள். அனைத்திற்கும் அப்பால் யாதொன்றும் அறிந்திலாதவள் போல் வரதாவை நோக்கி ருக்மிணி அமர்ந்திருந்தாள்.

முந்தைய கட்டுரைடொலெடோ
அடுத்த கட்டுரைஎம்.எஸ்.வி பற்றி சுகா