மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத்தலைவரும் அறிவியலாளருமான ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுடனான என் உறவு தொடங்குவது 2000த்தில். விஷ்ணுபுரம் நாவலை வாசித்துவிட்டு ஓரிருவரிகளில் கிறுக்கலான கையெழுத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். சுஜாதா அந்நாவலைப் பரிந்துரைத்ததாகவும் பாதிவரை வாசித்திருப்பதாகவும் சொல்லி பாரட்டியிருந்தார்.
பின்னர் 2001ல் விகடனில் சங்கசித்திரங்கள் வெளிவந்தபோது ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 2008ல் சென்னையில்பாவலர் வரதராசன் விருது பெறுவதற்காகச் சென்னையில் அவரை நேரில் சந்தித்தேன். அருகே இளையராஜாவும் ஜெயகாந்தனும் இருந்தனர்.
ஜெயகாந்தன் தலைமை ஏற்ற அவ்விழாவுக்காக கலாம் நேரில் சென்று ஜெயகாந்தனைக் காரில் அழைத்து வந்திருந்தார்.கலாம் அவர்களிடம் ஓரிரு சொற்கள் பேசினேன். சற்றுக்கழித்தே நான் விஷ்ணுபுரம் எழுதியவன் என்பது அவருக்கு நினைவுக்கு வந்தது. ஜெயகாந்தனிடம் விஷ்ணுபுரம் சங்கசித்திரங்கள் இரு நூல்களைப்பற்றியும் பாராட்டிப்பேசிக்கொண்டிருந்தார்.
அவர் எப்போதும் என் ஆதர்சங்களில் ஒருவர். அவரது அவ்வரிகளை எனக்குக்கிடைத்த ஆசி என்றே எடுத்துக்கொன்டேன். விருதை அவர் கையில் இருந்து பெற்றேன்அப்துல்கலாம் அவர்களிடம் ஓட்டுநராகப் பணியாறிய ஒரு மாமா எனக்கு இருந்தார். மிகப்பெரிய கலாம் பக்தர். அவரிடமிருந்துதான் கலாம் பற்றிய செய்திகளை அறிந்தேன். அன்றுமுதல் அவரை நானும் உளமார வழிபடுபவர்களில் ஒருவராக இருந்தேன். கல்வியாலும் வாசிப்பாலும் நான் வளர வளர அக்கால ஆதர்சங்களில் பலர் எளிய மனிதர்களாக ஆனார்கள். கலாம் மேலும் வளர்ந்தார்
ஜவகர் யுகத்தின் மகத்தான இட்சியவாதத்தால் கவரப்பட்டவர்களில் ஒருவர் கலாம். அன்றைய நன்னம்பிக்கையை அறிவியல்மீதான வழிபாட்டை மானுடம் மீதான கனவை தானும் கொண்டவர். அதை ஒவ்வொருநாளும் முன்வைத்தவர். அன்றைய தலைவர்களுக்குரிய தியாக வாழ்க்கையும் எளிமையும் தனித்தன்மையும் உடையவர். அவ்வரிசையில் கடைசித்தூண். அவருடன் ஒரு யுகமும் மறைகிரது
இந்திய அறிவியலில் கலாம் போன்றவர்களின் பங்களிப்பு என்பது இன்னும் பேசப்படாதது. ஒருவேளை பேசப்படாமலேயே போய்விடக்கூடியது. வானியல் , அணுசக்தி போன்ற துறைகளில் மேலைநாடுகளின் முக்கியமான கண்டுபிடிப்புகள் எப்போதும் ரகசியமாகவே வைக்கப்படும். இப்போது மருத்துவ உயராய்விலும் அப்படியே செய்யப்படுகிறது.
இந்திய அறிவியல் என்பது மேலைநாட்டு ஆய்வுகளை ஊகித்து அறிந்துகொள்வது, அதன் வழியாக அக்கண்டுபிடிப்புகளை மீன்டும் அசலாக தாங்களே நிகழ்த்துவது. கலாம் அப்படி ஆற்றிய சாதனைகள் பல. அவை ஒரு புதுக்கண்டுபிடிப்புக்கான நுண்ணுணர்வும் கற்பனையும் உழைப்பும் கொண்டவை. மிகக்குறைவான நிதியாதாரத்தால் செய்யப்படுவதனலால் அவற்றின் கற்பனையும் உழைப்பும் மேலும் பலமடங்கு எனலாம்.
அந்தக்கண்டுபிடிப்புகளுக்கு எந்த ஆய்வுலக மதிப்பும் இருக்கப்போவதில்லை. எந்தவகையிலும் அவை கண்டுபிடிப்பாளர்களுக்கு தனிப்பட்ட புகழையும் செல்வத்தையும் ஈட்டித்தரபோவதும் இல்லை. இந்த நாட்டின் மேலும் இங்குள்ள மக்களின் பேரிலும் உள்ள பற்று ஒன்றினாலேயே செய்யப்படுபவை இந்த ஆய்வுகள். உலக அரசியலில் மிகப்பெரிய அதிகாரச் சமநிலையை உருவாக்குபவை என்பதனால் வரலாற்றின் போக்கையே முடிவுசெய்யும் அளவுக்கு முக்கியமானவையும் கூட. அப்துல்கலாம் போன்றவர்களின் சாதனையும் பங்களிப்பும் அவ்வகையில் முதன்மையானவை.
நம் சமகாலத்து இலட்சியவாதத்தின் ஒளிரும் முகமாக, இந்திய அறிவியலின் முன்னுதாரண வடிவமாக கலாமின் இடம் மகத்தானது. என் எளிய அஞ்சலி