இயல்விருது பெறுவதற்காக கனடா செல்ல ஜூன் எட்டாம் தேதி நானும் அருண்மொழியும் நாகர்கோயிலில் இருந்து கிளம்பினோம்.பத்தாம்தேதி விடியற்காலையில் கிளம்பி பதினொன்றாம்தேதி டொரெண்டோ வந்தோம். இயல்விருது பெற்று 23 அன்று கிளம்பி அமெரிக்கா சென்றோம். ஜூலை 25 ஆம் தேதி கிளம்பி 26 மாலை 930க்கு சென்னை வந்து சேர்ந்தோம். 27 கிளம்பி 28 அன்று நாகர்கோயில் செல்வதாகத் திட்டம்
இப்பயணத்தை முக்கியமாக அருண்மொழிக்காகவே திட்டமிட்டேன். சென்ற சிலவருடங்களாகவே அவளுக்கு அலுவலகப்பணிச்சுமை. குழந்தைகளின் படிப்புக்காக. அதன்பின் அவள் பெற்றோரின் நோய் என பலவகை குடும்பப்பொறுப்புகள். ஆகவே இருமாதகாலப் பயணம் என்பது ஒரு பெரிய விடுதலையாக அமையமுடியும் என்று தோன்றியது.
ஆனால் முக்கியமான பிரச்சினை டோரா. அவளை நாய்விடுதியில் விட்டுவிட்டுச்செல்வதுதான் ஒரே வழி. ஆனால் அத்தனைநாள் பிரிந்து இருக்கமாட்டாள். டாபர்மான் நாய்கள் பிடிவாதமான பேரன்பு கொண்டவை. அருண்மொழியின் பெற்றோருடன் அவளுக்கு நெருக்கம் உண்டு. காரிலேயே திருவாரூர் கொண்டுசெல்லலாமா என்று யோசித்தபோது அவர்களே வந்து வீட்டில் தங்கிக்கொள்வதாகச் சொன்னார்கள். டோராவும் என் மாமனாரும் மிக நெருக்கமானவர்கள். ஐந்தாம்தேதி அவர்கள் வந்ததுமே பயணமனநிலை அமைந்துவிட்டது
எடிஹாட் விமானத்தில் அபுதாபி வழியாக டொரெண்டோ வந்தேன். விமானநிலையத்தில் அ.முத்துலிங்கம் அவர்களும் செல்வமும் உஷா மதிவாணனும் ஆனந்தும் ரீங்கா ஆனந்தும் வந்திருந்தனர். நேராக விடுதிக்குசச் சென்றோம். இரண்டுநாட்கள் விடுதி. அதன்பின் உஷாவின் வீடு. டொரெண்டோ அருகே ஸ்டோவில் என்னும் ஊரில் உள்ள அது ஒரு பெரிய மாளிகை. அங்கிருந்த கண்ணாடி அறை நான் தங்கிய மிக அழகிய இடங்களில் ஒன்று. வானத்தின் கீழே அறைக்குள் அமர்ந்திருக்கமுடியும்.
கனடாவில் ஒவ்வொரு நாளும் உற்சாகமாகச் சென்றது. நான்கு சந்திப்பு நிகழ்ச்சிகள். காலம் சார்பில் நிகழ்ந்த சந்திப்பில் நான் சிலப்பதிகாரம் பற்றிப்பேசினேன். டொரெண்டோ எழுத்தாளர் சங்க நிகழ்ச்சியில் சமகாலத்தின் இலக்கிய மாறுதல்கள் பற்றிப் பேசினேன். எழுத்தாளர் சங்க நிகழ்ச்சியில் இந்திய இலக்கியம் உருவாகிவந்த வழியைப்பற்றிப்பேசினேன். மெட்ராஸ் கலை இலக்கியம் கழகத்தில் அறம் பற்றி. எல்லா நிகழ்ச்சிகளுக்குமே பெருந்திரளாக இலக்கிய ஆர்வலர் வந்திருந்தனர். இயல்விருது விழாவில் இலக்கியத்தை அமைக்கும் என் மனநிலை பற்றிப்பேசினேன்
விவசாயிகள் சந்தைக்குச் சென்றோம்.அருகே அலெண்டோ என்னும் காட்டில் காம்பிங் சென்றோம். அருங்காட்சியகத்தில் பாம்பியின் அடையாளங்களைக் கண்டோம். இத்தாலியின் வெசூவியஸ் எரிமலை 2000 ஆண்டுகளுக்கு முன் வெடித்து பாம்பி என்னும் நகரை அழித்தது. லார்ட் லிட்டன் பாம்பியின் கடைசிநாட்கள் என்ற பேரில் எழுதிய நாவலை நான் இளவயதில் வாசித்திருக்கிறேன்.அங்கே அனலில் மடிந்து போனவர்களின் உடல்கள் பாறையில் படிவுகளாக கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் ரப்பர் குழம்பை ஊற்றி வடிவை எடுத்து கண்காட்சியாக வைத்திருந்தனர். செத்துப்போனவர்கள் சற்றுமுன் மடிந்தவர்கள் போல தெரிந்தனர். நாய் ஒன்று உச்சகட்ட வலியில் சுருண்டு நின்றிருந்தது. ரொட்டி சுடுபவனின் மேஜைமேல் பாதிரொட்டி இருந்தது.
அ.முத்துலிங்கம் அவர்களுடன் ஸ்டிராட்ஃபோர்டுக்குச் சென்று சவுண்ட் ஆஃப் மியூசிக் என்னும் இசைநாடகம் பார்த்தோம். சினிமாவாகப் பார்த்த கதை. ஆனால் இசைநாடகம் என்பது கண்முன் நிகழும் ஒரு கலையனுபவம். மானுட உள்ளம் கொள்ளும் உச்சம்- பயிற்சியும் கலையஎழுச்சியும் சந்திக்கும் புள்ளி- நேர் அனுபவமாகக் கிடைப்பது அது. பன்னிரண்டுநாட்கள் கனடாவில் செலவழித்தோம்
ஜூன் 23 அன்று விமானத்தில் பாஸ்டன் வந்தோம்.பாஸ்டன் பாலா வீட்டில் தங்கினோம். சென்றமுறையும் அவர் இல்லத்தில்தான் தங்கினேன். அமெரிக்க இலக்கிய நிகழ்வுகள் அனைத்துக்கும் மையப்புள்ளி போல் செயல்படும் பாலாதான் இம்முறையும் என் பயணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்தார். அரவிந்த் கருணாகரன் பாலாவுடன் விமானநிலையத்துக்கு வந்தார். அவருடன் எம்.ஐ,டி ஹார்வார்ட் வளாகத்துக்குச் சென்றேன்.
வேல்முருகன் சென்றமுறை சந்தித்த நண்பர். மீண்டும் அதே சிரிப்புடன் அவரை பார்த்தது மிகுந்த மனநிறைவை அளித்தது. பி ஏ கிருஷ்ணனின் மருமகன் நம்பியை சந்தித்தோம். அல்பெனியில் இருந்து நண்பர் ஓப்லா விஸ்வேஷ் வந்திருந்தார்.பாஸ்டன் நகரில் சுற்றினோம். பாஸ்டனின் நினைவகங்களைப் பார்த்தோம். கனடா எல்லை வரைசென்று ஃப்லூம் கார்ஜ் என்னும்ஆழ்ந்த மலைப்பிளவை கண்டோம்.
பாஸ்டனில் எமர்சனின் இல்லம் சென்றமுறை வந்தபோதே என்னை மிகவும் கவர்ந்த இடம். நான் வாசித்த ஆரம்பகால அமெரிக்க ஆசிரியர்களில் ஒருவர் எமர்சன். ஆகவே அவரது நேரடிப் பாதிப்பிலிருந்து என்னால் விடுபட முடிந்ததே இல்லை. இயற்கையில் இருந்து ஓர் ஒட்டுமொத்த மானுடநோக்கை அடையும் அவரது ஆழ்நிலைவாதம் என்னை என்றும் ஈர்க்கும் கொள்கை.
இம்முறையும் வால்டன் ஏரிக்குச் சென்று தோரோவின் குடிலை நோக்கி நின்று காந்தியைப்பற்றி சிந்தித்தோம்.எமர்சனின் இல்லத்தைச் சென்று பார்த்தோம். எமர்சனின் அன்றாட வாழ்க்கையையே அந்த இல்லத்தில் நிற்கும்போது கற்பனைசெய்துகொள்ள முடியும் . அவர் தினமும் அதிகாலையில் நடக்கச்செல்லும்போது அணியும் தொப்பியும் காலணிகளும் அவரது கைத்தடியும் அங்கே இருந்தன. பொருட்களில் நினைவுகள் அழியாமல் தங்கிவிடுகின்றன.
பாஸ்டனில் ஒரு கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அதில் நான் வாசிப்பில் ஏற்படும் பொதுவான ஐந்து பிழைகள் என்னும் தலைப்பில் பேசினேன். வாசகர்கள் வந்திருந்தாலும் பெரிய அளவில் கேள்விபதில்களாக உரையாடல் நிகழவில்லை. சம்பந்தமே இல்லாத இருவர் வந்திருந்து நேரத்தை வீணடித்தனர்.
அங்கிருந்து வாஷிங்டன் நிர்மல் வீட்டில் சந்தித்தோம். அவரது துணைவி ராஜியும் என் நல்ல வாசகி. சஹானா ,மேகனா என்னும் இரு குழந்தைகளும் உற்சாகமான துணையாக இருந்தனர். எங்களுக்காக வாஷிங்டன் பற்றி ஒரு செய்திப்பலகை தயாரித்து அதை தொலைக்காட்சி பாணியில் கையை அசைத்து விளக்கினர். வாஷிங்டன் நினைவகங்களை, வெள்ளைமாளிகையை பார்த்தோம்.
வாஷிங்டன் நண்பர் வேல்முருகன் இல்லத்தில்தான் முன்பு வந்தபோது தங்கியிருந்தேன். மாறாமல் அப்படியே இருக்கிறார். வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தில் இலக்கியத்தில் நுண்ணுணர்வு பற்றி உரையாற்றினேன். என் நண்பரும் ஃபெட்னாவின் செயலருமான நாஞ்சில்பீட்டரைச் சந்தித்தேன்
நியூயார்க்கில் பழனிஜோதி மகேஸ்வரி இல்லத்தில் தங்கினேன். குழந்தைகள் ஶ்ரீராம் அஞ்சனா இருவரும் அந்நாட்களை இனியவையாக ஆக்கினர். பழனி ஜோதி என் சிறந்த வாசகர். மகேஸ்வரியும். ஆனால் இருவருமே எனக்கு கடிதம் வழியாகக்கூட அறிமுகம் அற்றவர்கள். நியூயார்க்கில் கார்த்திக் பிரசன்னா தம்பதியினரின் இல்லத்திலும் தங்கினேன். அவரது மகள் பெயர் அழகானது, சாரல். வேல்முருகனும் பழனிஜோதியும் நியூயார்க்கிலும் வந்து உடனிருந்தனர்.
நியூயார்க்கின் தெருக்களில் பகல் முழுக்க அலைந்தோம். இரவு இரண்டு மணிக்கு திரும்பி மறுநாள் காலை மீண்டும் ஆறுமணிக்குக் கிளம்பினோம். வாழ்க்கை கொப்பளிக்கும் இடம் அது. மானுடம் என்றும் சொல்லலாம். பல இனங்கள். முடிவில்லாத முகங்கள். சுதந்திரதேவி சிலை என் வாழ்க்கையில் நான் கண்ட மிக அழகிய சிற்பங்களில் ஒன்று. மகத்தான இலட்சியம் ஒன்றின் வடிவமும் கூட. மீண்டும் அச்சிலையைப்பார்த்ததும் கிளர்ச்சியடையச்செய்யும் அனுபவமாக அமைந்தது
நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கக்கூட்டத்தை பழனிஜோதி உதவியுடன் பி கெ சிவக்குமார் ஒருங்கிணைத்திருந்தார். அதில் காந்திய யுகம் இந்திய இலக்கியத்தை உருவாக்கிய விதம் பற்றிப்பேசினேன். நியூஜெர்ஸி அருகே நண்பர் அரவிந்தன் கண்ணையன் இல்லத்தில் தங்கினேன். இணையத்தில் என் அதிதீவிர எதிர்தரப்பாளர் அவர். ஆனால் என்றும் அவர்மேல் மதிப்புண்டு எனக்கு. அமெரிக்க வழிபாட்டாளர் , ஆனால் அந்நாட்டின் செல்வம் வெற்றி ஆகியவற்றுக்கு மேலாக அதன் இலட்சியவாதமே அவரை கவர்ந்திருக்கிறது.
ஃபிலடெல்ஃபியா அரசியல்சட்ட மையத்திற்கு அரவிந்தன் கண்ணையன் அழைத்துச்சென்றார். மேரிலாண்ட் அருகே இன்னும் குதிரைவண்டியில் சென்று மின்சாரமில்லாமல் வாழும் அமிஷ் என்னும் மதக்குறுங்குழுவினரின் கிராமத்தைச் சென்று பார்த்தோம். நியூயார்க்கில் பிராட்வே அரங்கு ஒன்றில் ஒரு இசைநாடகம் பார்த்தோம். விக்டர் யூகோவின் லெ மிஸசரபில்ஸ். பள்ளியில் படித்த துணைப்பாட நூல். பின்னர் நாலப்பாட்டு நாராயணமேனன் மொழியாக்கத்தில் மலையாளத்தில் .பின்னர் ஆங்கிலத்தில். இலட்சியவாதத்தின் அழியாத செயலூக்கத்தை காட்டிய புனைவு அது . அற்புதமான நாடகமாக்கல்
நியூயார்க்கில் பழனிஜோதி, வேல்முருகன் குடும்பத்துடன் சென்று கடல்மேல் பாரச்சூட்டில் பறந்தோம். அறுநூறடி உயரத்தில் இருந்தபடி கடலையும் கரையையும் ஒரு பெரிய வட்டத்தின் இரு அரைவட்ட விளிம்புகளாகப் பார்த்தோம். மறக்கமுடியாத அனுபவம். சென்றமுறை நான் சிறில் அலெக்ஸுடன் சென்று மியாமி கடற்கரையில் பாரச்சூட்டில் பறந்ததை நினைத்துக்கொண்டேன்.
பாபநாசம் வெளியாகி நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்திருந்தேன். அன்றே படத்தை அங்குள்ள அரங்கிற்குச் சென்று பார்த்தோம். வாரநாட்களில் அரங்கு நிறைந்திருந்தது வியப்பளித்தது. நியூயார்க்கில் பல அரங்குகளில் தொடராக பாபநாசம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஐன்ஸ்டீனின் இல்லத்தை பார்த்தேன். எங்களை பழனிஜோதியின் நண்பர் மார்க் அழைத்துச்சென்று காட்டினார். லத்தீன் அமெரிக்க இசையில் ஆய்வுசெய்யும் மார்க் பிரின்ஸ்டனில் வசிப்பவர். பிரிட்டிஷ் பிரஜை.
நியூயார்க்கில் இருந்து டொலிடோ சென்றோம். அங்கே ர.சு. நல்லெபெருமாளின் மகள் சிவஞானம் சக்திவேல் வீட்டில் தங்கினோம். சிவாவும் சக்திவேலும் என் நெடுங்கால நண்பர்கள். அருங்காட்சியகத்தை பார்த்தோம். ஓல்ட் மேன்ஸ் கேவ் என்னும் காட்டுப்பகுதியை சென்று பார்த்தோம். அங்கிருந்து அருகே கொலம்பஸ் நகரில் ஷான் என்னும் ஷண்முகம் வீட்டுக்குச் சென்று தங்கினேன். கொலம்பஸ் நகரில் தமிழ்ச்சங்கத்தில் தமிழின் நீண்ட இலக்கிய மரபின் வரலாறு குறித்து பேசினேன்.
மறுநாள் சிவா வீட்டில் என் நண்பர்கள் பலர் வந்திருந்தனர். வெண்முரசு விவாதக்குழுமத்தை ஒருங்கிணைக்கும் ஹரீஷ் வந்திருந்தார். மினசோட்டாவில் இருந்து வேணு தயாநிதியும் எங்களூர்க்காரரான கிறிஸ்டோபரும் வந்தனர். இரவு நெடுநேரம் வரை இலக்கிய உரையாடல்
டெட்ராய்ட் அருகே உள்ள டொலிடோ ஒரு பல்கலைநகரம். சிவாவும் சக்திவேலும் பேராசிரியர்கள். சிறிய ஊராக இருந்தாலும் அங்கிருந்த அருங்காட்சியகம் பிரமிப்பூட்டுவது. கண்ணாடித்தொழிலுக்குப் புகழ்பெற்றிருந்த டொலிடோவில் அற்புதமான ஒரு கண்ணாடி அருங்காட்சியகத்தைக் கண்டோம். கிமு 2 ஆம் நூற்றாண்டிலேயே கண்ணாடி ரோம பண்பாட்டில் புழக்கத்தில் இருந்தது . அக்கால மாதிரிகள் சில அங்கிருந்தன. ஔவையார் யவனர் நன்கலம் தந்த நீலநிற மதுக்குப்பியைப்பற்றிப் பாடியிருப்பதை நினைவுகூர்ந்தேன்.
ராலேயில் ராஜன் சோமசுந்தரம் இல்லத்தில் தங்கினேன். அவரது மனைவி சசிகலாவும் நல்ல வாசகராக இருந்தார்.மகள் தன்யாவுக்கு தம்பி ஆதித்யாவைக் கொஞ்சவே நேரம் போதவில்லை. பத்துமாதமான ஆதித்யா உலகை கடித்துப்பார்த்து புரிந்துகொள்ளும் வேட்கையுடன் இருந்தான். உலகிலேயே அக்காதான் அவனுக்கு முக்கியமான ஆளுமை என்று தெரிந்தாள்.
ராலே அருகே ஓடிய நதிக்கரையோரமாக ஒரு நீள்நடை சென்றோம். இன்னொருநாள் அருகே ஒரு காட்டுக்குச் சென்று பலவகையான விளையாட்டுப்பயிற்சிகளில் ஈடுபட்டோம். நீளமான கம்பியில் கோர்த்துக்கொண்டு காட்டுக்குமேல் ஜேம்ஸ்பாண்ட் போல பறந்துசென்றது முக்கியமான அனுபவம். அருண்மொழி பறந்ததைக் கண்டு கண்டு கண்களை இன்னொருமுறை இமைத்து சரிபார்த்துக்கொண்டேன்.
ராலேயின் அருங்காட்சியகத்தில் நவீன ஓவியங்களின் அரங்கு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அங்கே ஓர் இலக்கியக்கூட்டத்தில் பேசினேன் தன்யா பியானோ வாசிக்க ராஜன் சோமசுந்தரம் டிரம்ஸ் இசைக்க எங்களுக்காக ஒரு சிறிய இசைநிகழ்ச்சியை அவர்களின் இல்லத்தில் நிகழ்த்தினர்.
ராஜன் சோமசுந்தரம் அருகே உள்ள டியூக் பல்கலையில் பணியாற்றும் நான்கு பேராசிரியர்களை இல்லத்துக்கு வரச்சொல்லியிருந்தார். பௌத்த மெய்யியலிலும் ஜென் பௌத்தத்தின் உலகியல் மரபிலும் உயராய்வு செய்பவர்கள். ஒரு மாலை முழுக்க அவர்களிடம் பௌத்தம் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தேன். முக்கியமான விவாதம். அவர்கள் ஆழமாக ஆய்வுசெய்திருந்தபோதிலும் இந்திய தத்துவத்தைப்புரிந்துகொள்வதில் பேராசிரியர்கள் ஆற்றும் நுண்ணிய புரிதல் பிழைகளையும் கொண்டிருந்தனர். உண்மையில் ஒரு நேரடியான குருவழியாக அன்றி அவற்றைக் கடக்க முடியாது. அப்பிழைகளைப்பற்றியே அதிகமும் பேசினோம்.
நாகர்கோயில் பி.டி.பிள்ளை திருமணமண்டப உரிமையாளரின் மகள் ரமிதா முன்னரே எனக்குத்தெரிந்தவர். அவர் இல்லத்திற்குச் சென்று குமரிமாவட்டச்சுவையுடன் மீன்கறியும் சோறும் சாப்பிட்டோம்.
மறுநாள் ஹூஸ்டனில் ராஜா எங்களை வரவேற்றார். அவரது குடும்பம் ஊரில் இல்லை. அருகே ஆஸ்டின் என்ற ஊரில் நடந்த இலக்கியக்கூட்டத்தில் பேசினேன். நெடுந்தொலைவிலிருந்து என் வாசகர் முருகனும் அவர் மனைவியும் எங்களை பார்க்க வந்திருந்தனர்.மணி என்னும் முருகனின் மனைவி நர்மதா ஜக்கி வாசுதேவின் மாணவி. யோகப்பயிற்சி செய்பவர். நேபாளம் சென்று அங்கிருந்து ஜக்கியின் மானசரோவர் பயணத்தில் ஒருமாதம் உடனிருந்து கலந்துகொள்வதாகச் சொன்னார
ஆஸ்டினிலேயே ஒரு ஏரிக்கரை விடுதியில் தங்கினோம். மறுநாள் ஆஸ்டினின் தொன்மையான நகரப்பகுதியை சுற்றிப்பார்த்தோம். கிட்டத்தட்ட ஒரு கௌபாய் பட சூழல் இருந்தது அங்கு. ஆஸ்டின் பழைய வைல்ட் வெஸ்ட் பகுதியான டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைநகரம். அங்குள்ள சட்டச்சபையில் அவர்களின் இறந்தகாலப் பதிவுகளைப்பார்த்தது ஒரு வரலாற்றுத்தரிசனம். அதற்கு நிகரானது கிட்டத்தட்ட நூறாண்டு பாரம்பரியம் கொண்ட அங்குள்ள சால்ட் லிக் என்னும் உணவகத்தில் ஸ்டேக் சாப்பிட்டது. மாட்டிறைச்சி ஸ்டேக் மானுடம் கண்டறிந்த உணவுகளில் முதன்மையானது என்பது வயிறளவில் மல்லுவான என் எண்ணம்.
ஆஸ்டினில் விஷ்ணுபுரம்.காம் தளத்தை நடத்தும் ஆனந்தக் கோனாரைச் சந்தித்தேன். டல்லாஸில் இருந்து பறந்து வந்திருந்தார். ஹூஸ்டனில் அருகே உள்ள கடற்கரைக்குச் சென்று ராட்சத ஊஞ்சலில் ஆடினோம். உள்ளூர் கடலுணவுகளை உண்டோம். வீட்டில் ராஜாவே சிறப்பாக சமைத்து உணவளித்தார். ஹூஸ்டன் மீனாட்சி ஆலய வளாகத்தில் நடந்த நடந்த சந்திப்பில் சங்ககாலம் முதல் சமகாலம் வரை தமிழிலக்கியப்போக்குகளை ஒரே பார்வையில் தொகுத்துப் பேசினேன். எங்களூர்க்காரரான நண்பர் வினோ கிங்ஸ்டனைச் சந்தித்தேன்.
கடைசியாக கலிஃபோர்னியா. சான் பிரான்ஸிஸ்கோவில் நண்பர் திருமலைராஜன் ,ஆர்வி, பக்ஸ் என்னும் பகவதிப்பெருமாள், நாராயணன் ஆகியோர் வந்து எங்களை வரவேற்றனர். சொல்புதிது குழும நண்பரான பிரபு போர்ட்லண்ட் பல்கலையில் படிக்கிறார். அங்கிருந்து 20 மணிநேரம் பஸ்ஸில் பயணம் செய்து எங்களைப்பார்க்க வந்திருந்தார். அன்றாடம் என அவர்களை இணையத்தில் சந்தித்துக்கொண்டிருந்தமையால் அவர்களை எல்லாம் புதிதாகச் சந்திப்பதுபோல இருக்கவில்லை. அதிலும் ஆர்வி சென்னையில் இருக்கும் நண்பர்களில் ஒருவராகவே தெரிந்தார். அவரைப்பற்றிய பேச்சு இல்லாமல் அன்றாட விவாதம் நிகழ்வதில்லை.
பக்ஸ் வீட்டில் தங்கினேன். அவரது மனைவி சித்ராவின் உபசரிப்பையும் குமரிமாவட்டச் சமையலையும் எடுத்துச்சொல்லவேண்டும். இவ்வீடுகளில் தங்கும்போது இல்லப்பெண்களை தொந்தரவு செய்யக்கூடாதென்றே எப்போதும் நினைப்பேன். ஏனென்றால் பெரும்பாலும் பயணங்கள் சந்திப்புகள் உரையாடல்கள் என நள்ளிரவு கடந்தபின்னரே நாங்கள் தூங்கமுடியும். அதன்பின்னர் வீட்டை ஒழுங்குசெய்தபின்னரே அவர்கள் தூங்குவார்கள். நான் அதிகாலையில் எழுந்து வெண்முரசு எழுதுவேன். எழுந்ததும் பாலில்லாத டீ குடிப்பது என் வழக்கம். இரவில் பழம் மட்டுமே உண்பதனால் காலையில் சீனிபோட்ட டீ மிகவும் தேவைப்படும். ஆனால் அவர்களை எழுப்புவது கருணையுள்ள செயல் அல்ல என்பதனால் ஓசையின்றி எழுந்து அமைதியாக என் அறையிலேயே தட்டச்சு செய்துகொண்டிருப்பேன். இந்த இல்லங்களில் எல்லாமே ஒருநாளுக்குள் பெண்கள் அதைப்புரிந்துகொண்டு அவர்களே ஓசைகேட்டு எழுந்து கறுப்பு டீ கொண்டுவந்து தந்ததை எண்ணும்போது அந்தப்பரிவுக்கு நிகராக எந்தப்பரிசும் இல்லை என்று தோன்றுகிறது.
கலிஃபோர்னியாவில் தினம் ஒரு நண்பர் வீட்டில் கூடினோம். பாலாஜி சீனிவாசன், நாராயணன், அருணகிரி என்ற சுந்தரேஷ் ஆர்வி திருமலைராஜன் ஆகியோரின் இல்லங்களுக்கு நான் சென்றபோது அவற்றை நண்பர்களின் சந்திப்பாகவும் ஆக்கிக்கொண்டனர். ஒவ்வொரு இல்லத்திலும் முப்பதுக்கும் மேல் நண்பர்கள் வந்து இலக்கியச்சந்திப்பகவே உரையாடல் நிகழ்ந்தது. ஃப்ரீமாண்ட் பாரதி தமிழ்ச்சங்கத்தில் நடந்த இலக்கியக்கூட்டத்தில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட இலக்கியநண்பர்கள் பங்கேற்றனர். நானும் பி.ஏ.கிருஷ்ணனும் பேசினோம். பி ஏ கிருஷ்ணன் கம்பராமாயணத்தில் இரணியவதைப்படலம் பற்றிப் பேசினார். நான் இந்திய இலக்கியத்தின் இந்தியத்தன்மை பற்றிப்பேசினேன்.
நண்பர்கள் டில்லிதுரை அவரது மகளும், இந்தியாவிலிருந்து வந்து மருத்துவத்துறையில் பணியாற்றும் சாந்தினியும் அவர் மகனும் நானும் அருண்மொழியும் ஒருகாரிலும் சுந்தரேஷ் அவரது மனைவி நித்யா திருமலைராஜன் அவரது மனைவி செல்வி பக்ஸ் மற்றும் சித்ரா என ஒரு பெரிய கும்பல் இரு கார்களிலாக வடமேற்கு கடற்கரை ஓரமாக ஒரு நீண்ட பயணம் சென்றோம். யானைமுக சீல்களையும் பெரிய பன்றி சீல்களையும் பார்த்தோம். பருத்த உடலுடன் அவை சாணிக்குவியல்கள் போல கரைநிறைந்து படுத்து நாய்களைப்போல குரைப்பொலி எழுப்பிக்கொண்டிருந்தன.
சுந்தரேஷின் மனைவி நித்யாவும் திருமலைராஜனும் அவர் மனைவி செல்வியும் பக்ஸும் அவர் மனைவி சித்ராவும் என ஏழுபேர் காரில் ஒரு நீண்ட பயணம் சென்றோம். நேராக லாசன் தேசியப்பூங்கா சென்று லாசன் எரிமலையையும் அதைசுற்றியிருந்த கந்தக குழம்பு கொதித்த ஊற்றுகளையும் பார்த்தோம். வீட் என்ற இடத்தில் விடுதியில் தங்கி அங்கிருந்து மௌண்ட் சாஸ்தா எரிமலைக்குச் சென்றோம்.
சாஸ்தா மலை அமெரிக்காவிலேயே எனக்கு பிடித்த இடம், நான் புனிதமானது என எண்ணும் இடம் அந்தமலைமுகடு. நாங்கள் சென்றபோது இருட்டிவிட்டது. அங்கே ஒரு யூதக்குடும்பம் பிரார்த்தனைசெய்துகொண்டிருந்தது. விண்மீன்கள் நிறைந்த இரவில் அங்கு நின்றது இமையமலைமுகடில் நின்றிருக்கும் எழுச்சியை அளித்தது. நெடுங்காலம் முன்பு செவ்விந்தியர்கள் தங்கள் மண்மறைந்த மூதாதையர் வாழும் புனிதமான மலை என எண்ணி அதை வழிபட்டனர். அந்த உணர்வை என்னாலும் பகிரமுடியும் என்று தோன்றியது
மறுநாள் மீண்டும் மௌண்ட் சாஸ்தாவைப்பார்த்துவிட்டு கிரேட்டர் லேக் சென்றோம். எரிமலை வெடித்த வட்டக்குழியில் தேங்கிய அந்த மாபெரும் ஏரியை காரில் சுற்றிவந்தோம். விழிகளை விலக்கமுடியாத நீலம். இப்பயணத்தின் உச்சம் இந்த நீலம்தான். என் மனதை இப்போது நிறைத்திருக்கும் நீலம்.
நண்பர் விசுவும் அவரது நண்பரும் தோழியும் வந்து சான்பிரான்ஸிஸ்கோவுக்கு அழைத்துச்சென்றனர். செங்குத்தாக இறங்கி வளையும் சான்பிரான்ஸிகோவின் தெருக்களும் செந்நிறமான கோல்டன் கேட் இரும்புப்பாலமும் அந்நகரின் அழகுகள். மறுநாள் குமரிமாவட்டம் ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த நண்பர் பத்மநாபனும் கணிதவியல் ஆய்வாளரான ஜெயராமனும் நாபா சமவெளியில் ஒயின் தயாரிப்பு நிலையத்துக்குக் கூட்டிச்சென்றனர். திராட்சை பயிரிட்டு ஒயின் தயாரிக்கும் தோட்டம் அது. மூன்றுவகை ஒயின்களை ஒரு மிடறுவீதம் சுவைத்துப்பார்த்தேன். இனிய மணம்கொண்டவை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவு என்பது இப்பயணத்தின் தனித்தன்மை என்று தோன்றுகிறது. மொராக்கோ, மெக்ஸிகோ வகை உணவுகள் காரமானவை. டெக்ஸ்மெக்ஸ் என்ற அமெரிக்க மெக்ஸிகக் கலவை உணவு காரமற்ற மெக்ஸிகச்சுவை. தாய்லாந்து சீன உணவுகள் சற்று வித்தியாசமான சுவைகொண்டவை.
அருங்காட்சியகங்களை ஒவ்வொரு ஊரிலும் பார்த்தோம். ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகங்களை வாழ்நாள் அனுபவம் என்றே சொல்லவேண்டும். ஹுஸ்டன் அருங்காட்சிகத்தில் சீனாவில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான நாகரீகத்தின் தொல்பொருட்களை தற்காலிகக் காட்சியாகக் கொண்டுவந்து வைத்திருந்தனர். சீனநாகரீகமே பழையது, இது மேலும் பழையது. வெண்கலக்காலம். கிமு 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். யானைகள், யானைத்தந்தங்களை ஏந்திய தெய்வங்கள். சீனாவில் யானை கிடையாது. அப்படியென்றால் இந்த மக்கள் யார் என்பது பெரும் புதிராக எஞ்சுகிறது. பொன்பூசப்பட்ட மாபெரும் தெய்வமுகமூடிகள் இந்திரனுக்குரியவை என நான் சும்மா நினைத்துக்கொண்டேன்.
இந்தப்பயணம் முழுக்க தொடர்ந்து வெண்முரசை எழுதினேன். அதற்காக தூக்கத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டேன். விடியற்காலையில் எழுதியபின் பயணம் தொடங்கும். நள்ளிரவில் வந்து முடியும். சென்றமுறை உரைகளை முன்னரே எழுதிக்கொண்டேன். இம்முறை அதற்கு முடியவில்லை. பெரும்பாலான உரைகள் மேடைக்குச்சென்று அமர்ந்தபின் உருவாக்கிக்கொண்ட முன்வரைவை ஒட்டிப் பேசியவை. அவை வெளியானபின் பார்த்தேன். எல்லா உரைகளுமே கச்சிதமான வடிவுடன் இருந்தன. நியூஜெர்ஸி, ஹ்யூஸ்டன், ஃப்ரீமாண்ட் உரைகள் அவற்றில் மிகச்சிறந்தவை எனத் தோன்றியது.
எல்லா ஊர்களிலும் நண்பர்கள் கூடிவந்து சந்தித்தனர். விழாக்கள் அனைத்திலுமே திரளாக வந்திருந்தனர். முத்துக்கிருஷ்ணன் வெண்முரசை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நாராயணனின் வீட்டில் ஆற்றிய உரை என்னை வியப்புக்குள்ளாக்கியது. அனைவருமே மிகச்சிறந்த வாசகர்கள். பயணத்தின் ஒவ்வொரு கட்டமும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இம்முறை நான் எதையுமே கவனத்தில்கொள்ளவில்லை. ஓர் ஊரில் சென்றிறங்கியபின்னரே அந்த ஊருக்கு வருவதை அறிந்தேன். அனைத்துத் திட்டங்களையும் ராஜனும் பாலாவும் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
நண்பர்கள் விமானநிலையத்தில் பெட்டிகளை எடுக்கும் இடத்துக்கு வந்து வரவேற்று அழைத்துச்சென்று நான் பார்க்கவேண்டிய இடங்களை தாங்களே திட்டமிட்டு ஒவ்வொரு இடங்களையும் உடன் வந்து காட்டி திரும்ப விமானநிலையம் வந்து பாதுகாப்புச்சோதனையை கடப்பது வரை நின்று வழியனுப்பிய முகங்கள் ஒவ்வொன்றும் நினைவில் எழுகின்றன. அனைவரையும் பற்றி விரிவாக எழுத நேரமில்லை. இத்தனை தீவிரமான வாசகர்கள் தமிழிலக்கியப்பரப்பில் வேறெந்த எழுத்தாளருக்கும் அமைந்ததில்லை என்றே தோன்றியது. தமிழிலக்கியம் ஒரு மாறுதலை அடைந்துகொண்டிருக்கும் காலம் இதுஅதற்கு இணையம் என்னும் ஊடகம் முக்கியமான காரணம். நான் அனைவருடனும் ஒவ்வொருநாளும் பேசிக்கொண்டிருக்கிறேன். அத்துடன் தனிப்பட்டமுறையிலும் பேசிக்கொண்டிருக்கிறேன்.
26 இரவில் சென்னை விமானநிலையம் வந்தோம். சென்னை நண்பர்கள் ஏறத்தாழ அனைவருமே விமானநிலையம் வந்திருந்தனர். பெருங்கூட்டம் என்றுதான் சொல்லவேண்டும். மீண்டும் அனைவரையும் ஒருங்கே கண்ட உற்சாகம் பயணத்தின் களைப்பை முழுமையாக நீக்கியது. விடுதிக்கு வந்தபின் இப்போது கிரேட்டலர் லேக்கின் நீலம் மட்டுமே நிறைந்திருக்கிறது விழிகளில். இந்திரநீலம்