எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜா நடத்தும் இசைநிகழ்ச்சி சார்பாக ஞாநி சங்கரன் எழுதிய குறிப்பை பிறிதொரு தருணத்தில் என்றால் கீழ்மையின் உச்சம் என்றே சொல்வேன். ராஜா எம்.எஸ்.வியின் இறப்பு உருவாக்கிய அனுதாபத்தை வைத்து பணம் சம்பாதிக்க முனைகிறார் என்றும் அது கிரிமினல் நடவடிக்கை என்றும் ஞாநி எழுதியிருக்கிறார். ராஜாவின் நிகழ்ச்சி மூலம் பெறப்படும் பணம் எம்.எஸ்.வி பேரால் ஒரு டிரஸ்ட் அமைக்க செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அச்செய்தியை அறிந்தும் பொருட்படுத்தாமல் ஞாநி இதை வன்மத்துடன் எழுதுகிறார். இன்று ஞாநி இருக்கும் நிலையில் அவரது நோயுற்ற உடலில் எழும் மனச்சிக்கல் என்றே இதைச் சொல்வேன். அவருக்கு என் அன்பும் அனுதாபமும். என் கவலை அவர் எழுதிய அந்த நோய்வெளிப்பாட்டை ஆதரித்துக் கும்மியடிப்பவர்களைப் பற்றித்தான்.
இந்த இழிவிவாதத்தில் நான் இறங்குவது தகுதிக்குறைவு. ஆயினும் இத்தருணத்தில் இச்சொற்களையேனும் நான் சொல்லியாகவேண்டும். ராஜா எம்.எஸ்.வி மீது கொண்டிருந்த பெருமதிப்பை நான் கண்டிருக்கிறேன். எம்.எஸ்.வியின் பாடல்களை ராஜா பாராட்டி நெகிழ்ந்து எனக்குப் பாடிக்காட்டிய அரிய அனுபவமும் உண்டு.அவர்களுக்கிடையேனான உறவு என்பது நம் சமகாலத்து அற்புதங்களில் ஒன்று. ராஜா எம்.எஸ்.விக்குச் செய்த பெரும் பொருளியல் உதவிகளையும் நான் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். எம்.எஸ்.வியின் தன்மதிப்பு பாதிப்படையாமல் அதை ராஜா செய்வதில் இருந்த நளினமான பாவனைகளைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். ஒரு தம்பியின் இடத்திலேயே என்றும் ராஜா எம்.எஸ்.விக்கு இருந்தார்.
நம் சிறுமை எந்த எல்லை வரை செல்லும்? நம்மால் எந்த மகத்துவத்தின் முன்னும் பழிப்புகாட்டி மேலும் சிறியவர் ஆவதற்கு மட்டுமே முடியுமா என்ன? இந்த மண்ணில் நாம் வாழும் வாழ்க்கையை சற்றேனும் தாங்கிக்கொள்ளும்படி செய்த கலைஞர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா?