கல்கி போன்ற எழுத்தாளர்களின் இடத்தைத் தாங்கள் அங்கீகரிக்கும் போதிலும் அவரைப் பற்றி யாராவது கேட்கும் போது நீங்கள் அடையும் எரிச்சல் எனக்கு சற்று அதீதமாய்ப் படுகிறது. அவர் போன்ற எழுத்தாளர்கள் அடுக்கி வைத்த செங்கல்லின் மீது ஏறி நின்று கொண்டு தானே நம் போன்றவர்கள் கட்டிடம் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.உங்களின் அலர்ஜியை எனக்கு சுந்தர ராமசாமியின் ‘சிவகாமி சபதத்தை முடித்து விட்டாளா?’வுடன்தான் (ஜெ ஜெ சில குறிப்புகள்) ஒப்பிடத் தோன்றுகிறது. இன்னொன்று எழுத்தையும் மீறிய எழுத்தாளனின் மனம் எப்படியாவது படைப்பில் வெளிப்படும் போது அதை உய்த்து உணர்வது மட்டுமே வாசகனின் வாசிப்பு அனுபவத்தை விசாலப் படுத்துமென்பதால் எந்த எழுத்தும் தள்ளப்பட வேண்டியதில்லை என்றும் அது குறித்த எள்ளலைத் தவிர்க்கலாம் என்பதும் என் எண்ணம். குயில் கூவுகின்ற கானகங்களில் காகங்களுக்கும் இடம் உண்டு.
அடுத்ததாக கல்கி மற்றும் புதுமைப் பித்தன் இருவேறான இலக்கியப் போக்குகளை அவதானித்தார்கள் என்பது உண்மையா? எனக்கு என்னவோ ஒரே இலக்கிய நோக்கை அவ்விருவரும் தத்தமது வழிகளில் அடைய முயன்றார்கள் என்று தான் தோன்றுகிறது. அவர்கள் இருவர் பற்றிய என் விரிவான கட்டுரைகளின் கண்ணிகள் இதோ:
http://tamilaswath.blogspot.in/2012/05/blog-post.html
http://tamilaswath.blogspot.in/2012/06/blog-post_5826.html
அன்புடன்,
அஸ்வத்