எம்.எஸ்.வி- விவாதங்கள்

ஜெ,

எம்.எஸ்.வி பற்றி சில கருத்துக்கள் இணையத்தில் பேசப்பட்டுள்ளன, இணைத்திருக்கிறேன். உங்கள் கருத்தை விரும்புகிறேன்

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்

நன்றி. கருத்துக்களை புரிந்துகொண்டேன். நான் சொல்ல ஏதுமில்லை என நினைக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ,

இளையராஜா பற்றி ஷாஜி எழுதிய கருத்துக்களுக்கு நீங்கள் நீண்ட பதில் சொல்லியிருந்தீர்கள். இந்தக்கருத்துக்களுக்கு மறுமொழி சொல்லாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்

ஷாஜி இசை விமர்சகர். அதற்கான அவரது பின்புலத்தகுதிகள் எனக்குத்தெரியும். ஹைதராபாதில் ஐரோப்பிய இசைக்குழு ஒன்றை சில ஆண்டுக்காலம் நடத்தியிருக்கிறார். மரபிசை கற்றிருக்கிறார். மேக்னா சவுண்ட் இசை நிறுவனத்தில் இசைவெளியீட்டாளராக பணியாற்றிருக்கிறார். ஒலிப்பதிவின் தொழில்நுட்பம் தெரியும். ஐந்து தென்னகமொழிகளும் இந்தியும் வங்கமும் தெரியும். இந்திய இசைக்கலைஞர்கள் பெரும்பாலானவர்களிடம் நெருக்கமான தொடர்பு உண்டு. இன்னும் இசை – விளம்பரம் சார்ந்த தொழிலில் இருக்கிறார். இத்தகைய தகுதிகளே விமர்சகனை உருவாக்குகின்றன. அந்தக்குரலையே நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்

நீங்கள் அனுப்பிய இணைப்புகளில் எழுதியவர்கள் என் பெருமதிப்புக்குரியவர்கள். ஆனால் அவை வெறும் அபிப்பிராயங்கள். அப்படி எல்லாருக்கும் சொந்தமான அபிப்பிராயம் இருக்கும். அவற்றுக்கு தனிப்பட்ட ரசனை, தனிப்பட்ட வாழ்க்கைப்பின்புலம் என பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை ஏன் விவாதிக்கவேண்டும்? ஃபேஸ்புக் என்பது அதற்கான களம். அதில் எனக்கு ஆர்வம் இல்லை. நான் உண்மையில் பொருட்படுத்தத் தக்கது என்று எண்ணிய வெ சுரேஷின் கட்டுரைக்கு இணைப்பு அளித்தேன். அவர் இசையை முறையாகக் கற்றவர். ஆகவே அந்தக்கோணத்தில் கருத்து சொல்லும் தகுதி கொண்டவர்.

இசை விற்பன்னன் அல்ல என்றாலும் சினிமாவில் உள்ளிருந்து பணியாற்றுபவன் என்றவகையில் இக்கருத்துக்கள் ஒன்றும் அறியாமல் வெறும் செவிகொண்டு சொல்லப்படுபவை என்பதே என்னுடைய எண்ணம்.

ஒன்று, எம்.எஸ்.வி காலகட்டத்தில் இருந்த இசைப்பதிவுமுறை, இசைகோப்புமுறை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் அவை எழுதப்பட்டுள்ளன. இன்றுள்ள பல அடுக்கு ஒலிப்பதிவுமுறை அன்றிருக்கவில்லை. இன்றுள்ள அளவு தொழில்நுட்பப் பரவல் இல்லை என்பதனால் ஐரோப்பிய ஒலிப்பதிவுமுறைக்கு முப்பது வருடம் பின் தங்கிய ஒலிப்பதிவே அன்றிருந்தது. அதில் நுட்பமான சோதனைகளைச் செய்தவர், சாதித்தவர் சலீல் சௌதுரி மட்டுமே.

இரண்டு, ஒரு பரப்பிசை என்பது ஏற்கனவே ஒரு சூழலில் இருந்துவரும் பாட்டுமுறைக்கும் செவிப்பண்பாட்டுக்கும் இயைந்ததாகவே இருக்கும். உதாரணமாக நாட்டுப்புறப்பாடல்களை, நாதஸ்வரத்தை கேட்டுப்பழகிய காதுகளுக்கு டி.எம்.எஸ்ஸின் இசை அண்மையானது. அத்தனை நெருக்கமான பண்பாட்டம்சம் கொண்டது. பிறிதொருவருக்கு திண்ணையில் இருந்து தொடைதட்டிப்பாடும் பாட்டுமுறை சிறந்ததாக இருக்கலாம். அது தனிப்பட்ட ரசனை. விமர்சகன் தன் ரசனையின் தருக்கத்தை, அது உருவான பின்னணியைச் சொல்லத்தெரிந்தவன்.

மூன்று, நவீன ஒலிநாடாக்கள் மூலம் தமிழகத்தில் [ உலகமெங்கும்] இசைப்பரவல் சாத்தியமான பின்னர் , அனைவரும் பலவகையான இசைமுறைகளுக்கு செவிபழகிய பின்னர், உருவாகும் இசைக்கும் அதற்கு முந்தைய இசைக்கும் பெரிய வேறுபாடு உண்டு. இதை சாதாரணமாக சினிமாவில் இசைத்துறையில் வேலைபார்ப்பவர்கள்கூட அறிவார்கள்.

உதாரணமாக, எம்.எஸ்.வி மேலையிசையில் எந்தெந்த அம்சங்களை எடுத்தாண்டார், எதைத்தவிர்த்தார் என்று பார்க்கலாம். பெரும்பாலும் ஐரோப்பிய [ஸ்பானிஷ்]நாட்டுப்புற இசை, ஐரோப்பிய நடன இசை ஆகியவற்றை மட்டுமே. அவை இங்கே போர்ச்சுக்கல் ஆதிக்கத்தாலும் போர்க்காலத்துப் படைவீரர்களாலும் செவிபழகச் செய்யப்பட்டவை. [இதை தமிழின் இசைமேதை ஒருவர் சொல்லி நான் புரிந்துகொண்டேன், என் சொந்த ஞானம் அல்ல]

பரப்பிசை என்பது பல்வேறு பண்பாட்டுக்கூறுகள் கலந்து உருவாவது. எம்.எஸ்.வியின் இசை நம் மரபிசை, பழைய நாடக இசை, நாட்டுப்புற இசை, ஐரோப்பிய இசை என பல கூறுகளின் கலவை. அன்றிருந்த சினிமாவின் சாத்தியங்களும் தேவைகளும் அதை ஒருபக்கம் இழுத்தன. அன்றிருந்த தமிழ்ச்சமூகத்தின் ரசனையின் தேவை இன்னொரு பக்கம் இழுத்தது. அந்தச் சந்திப்புப்புள்ளியில் நின்று சாதிக்கும் கலைஞன் ஒரு பண்பாட்டின் மிகச்சரியான வெளிப்பாடாக தானாகவே அமைகிறான். அவன் தனிமனிதன் மட்டும் அல்ல.

எங்கும் பரப்பிசை அப்படித்தான் பல்வேறு விசைகளின் தொகுப்பாக உருவாகும். நான் இப்போது கடந்தகால ஏக்கத்துடன் மிகவிரும்பிக் கேட்கும் எல்விஸ் பிரெஸ்லி, ஜான் லென்னான் பாடல்களையும் அபா, போனி எம் பாடல்களையும் ஒப்பிடும்போது எம்.எஸ்.வி யின் தன்னிச்சையான இசைக்கலவைமுறை மேலும் விரிவானதும் நுட்பமானதும் என நினைக்கிறேன்

இந்தப் பண்பாட்டு உரையாடலை விரிவான பின்புலத்தில் வைத்துப்புரிந்துகொள்ளவேண்டும். அதற்குரியவை தகுதியானவர்கள் முன்வைக்கும் விவாதங்களே இன்று தேவை. மற்றபடி ஒரு செய்தியை ஒட்டி சமூக ஊடகங்களில் பேசிக்கொள்ளப்படுபவற்றை நாம் கருத்தில்கொள்ளவேண்டியதில்லை.

நல்ல விவாதம் எதிர்காலத்தில் நிகழுமெனக் காத்திருப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைஎம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி
அடுத்த கட்டுரைபுதுமைப்பித்தனின் வாள்