பெரிய மரத்தடிகளை நீரில் மிதக்கவைத்துக் கொண்டுவந்து கரையொதுக்கி சேர்த்துக்கட்டி பல்லாயிரம் ஸீல்கள் முதுகோடு முதுகுசேர்த்துக்கிடப்பதுபோல வைத்திருந்த பெரிய ஆற்றின் கரையில் இருந்தது அந்த சிறிய வீடு. ஓட்டுவீடுதான், ஆனாலும் அதைக் குடிசை என்றுதான் சொல்லவேண்டும். உற்சாகமில்லாத நாலைந்து தென்னைமரங்களுக்கு நடுவே மணற்பாங்கான முற்றத்துக்கு அப்பால் காரை பூசாத செங்கற்சுவர்களும் இடிந்து போன திண்ணையும் கொண்ட வீடு மூடியிருந்தது. கேரளத்தில் கண்ணூர் அருகே நீலேஸ்வரம் என்ற சிற்றூர். நான் அந்த முற்றத்தில் தயங்கி நின்றேன். கதவைத்தட்டலாமா?

மெல்ல திண்னையில் ஏறி ”மாஷே…மாஷே” என்று கூப்பிட்டேன். கதவு திறந்தது. ஒரு பெண்மணியின் பாதிமுகம் எட்டிப்பார்த்தது. ”யார்?”என்று கேட்டது. ”மாஷ் இருக்கிறாரா?” ”சந்தைக்குப்போனார்”என்றபின் மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் என்னையே பார்த்தார்கள். வயது ஐம்பதுக்குமேல் இருக்கும். ஒட்டிய கன்னங்கள் குழிந்த கண்கள் உலர்ந்த உதடுகள் என கூலித்தொழிலாளிகளுக்குரிய அடிபட்ட முகம்.
”நான் காஸர்கோட்டில் இருந்து வறேன்”என்றேன். அந்த அம்மாள் ஒன்றும் சொல்லவில்லை ”எப்போ வருவார்?” என்றேன் ”தெரியாது” என்றார்கள். கொஞ்சம் சிந்தனை செய்தபின் ”வருவாரா?”என்றேன் ”அதைப்பற்றி ஒன்றுமே சொல்லமுடியாது. போவது வருவது எதையுமே என்னிடம் சொல்வதில்லை”
நான் திரும்பி ஊருக்குள் சென்று டீக்கடையில் இருந்து நாளிதழ்களை வாசித்தேன். நதிக்கரைக்குப் போய் அமர்ந்து கையில் இருந்த ருஷ்ய நாவலை வாசித்தேன். மூன்றுமணிநேரம் கழித்துத் திரும்பிவந்தேன். தூரத்திலேயே திண்ணையில் கே.பி.ஆர்.கோபாலன் இருப்பது தெரிந்துவிட்டது. சட்டைபோடாத உடம்புடன் ஒரு சாரம் மட்டும் உடுத்தி அதை மடித்துக்கட்டிக்கொண்டு கால்பரப்பி அமர்ந்திருந்தார். அவரைப்பார்த்ததுமே என் நடைதளர்ந்தது. திரும்பிப்போய்விடலாமா என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் முன்னால்தான் சென்றுகொண்டிருந்தேன்.
என்னைப்பார்த்ததும் ஆச்சரியம் ஏதுமில்லாமல் ”வாங்க சகாவே…”என்றார். சரியான கேரளநாட்டுப்புறத்தானின் சிரிப்பு. அந்தச்சிரிப்பால் ஊக்கம் பெற்று நான் அருகே சென்றேன்.”.. உக்காருங்க சகாவே..”என்று திண்ணையைக் காட்டினார். லேசான நாட்டுச்சாராய வாசனை. கையில் பீடி புகைந்தது. ”இழுக்கிறது உண்டா?” என்றபடி ஒரு பீடியை நீட்டினார். ”இல்லை” என்றேன். ”சகாவு எங்கேயிருந்து வருகிறீர்கள்?” நான் ”காசர்கோட்டில் இருந்து” என்றேன். ”அங்கே என்ன வேலை?” ”டெலி·போனில்” பீடியை ஆழ இழுத்து ”அப்படியா? அப்படியானால் கம்பித் தபால் தொழிலாளி அல்லவா? சந்தோஷம்…யூனியன் வேலைகள் எப்படிப் போகின்றன?”
”நன்றாகப்போகின்றன”என்றேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”சகாக்கள் எல்லாரும் சேர்ந்துதானே தங்கியிருக்கிறீர்கள்? தினமும் அரசியல் வகுப்புகள் நடக்கின்றனதானே?” என்று உற்சாகமாகக் கேட்டார். நான் அதற்கெல்லாம் ’ஆமாம்’என்றேன். அவர் உள்ளே எட்டிப்பார்த்து ”இந்த சகாவுக்கு ஒரு கட்டன் சாயா கொண்டு வா”என்றார். என்னிடம் ”என்னுடைய மனைவி”என்றார். அவருக்கு அப்படி ஒரு மனைவி இருக்கும் விஷயம் எனக்கு தெரியாது. அவரை பிரம்மசாரி என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
என்னுடைய முகபாவனையைக் கவனித்தபடி ”இப்போதுதான் ஒரு வருடம் முன்பு சேர்த்துக்கொண்டேன். அவளுக்குக் காசநோய். இருமலும் காய்ச்சலும் வரும். மருந்து சாப்பிடுகிறாள். இரண்டு பிள்ளைகள் இருந்தன. இப்போது யாருமே இல்லை. வேலைக்கும் போகமுடியாது. எனக்கு வீட்டில் சில வேலைகள் செய்து கொடுப்பாள். எனக்குத்தான் சுதந்திரப்போராட்ட தியாகிக்கான பென்ஷன் வருகிறதே, செத்தபின் இவளுக்கு வரட்டும் என்று ஒரு பதிவுசெய்து வைத்தேன்”
எனக்கு சற்றே கூச்சமாக இருந்தது. அவரைப்போன்ற ஒருவர் அப்படித்தான் சிந்தனைசெய்ய முடியும். தன்னைப் பற்றிய பிம்பம், ஊரார் பேச்சு எதையும் எப்போதுமே ஒரு பொருட்டாக எண்ணியவரல்ல அவர். அவரது தோற்றத்தை இன்றும் தெளிவாக நினைவுகூர்கிறேன். நல்ல வெண்ணிறமான உடல். தொப்பை இல்லாத இறுக்கமான வயிறும், நரைமுடி மண்டிய மார்பும், நரம்பு புடைத்த முண்டாத்தசைகளும் அவர் இளமையில் வலிமையானவராக இருந்தார் என்பதற்கான சான்றுகள். நரைத்த வெண்மயிர் நெற்றியில் துருத்திக்கொண்டு நின்றது. வலிமையான தாடை. பழுப்புநிறமான பற்கள் உறுதியாகவே இருந்தன. மீசையில்லா முகத்தில் விரிந்த மூக்குதுளைக்குள் இருந்த நரைமுடிகள் துருத்தி நின்றன. நட்பான ஒரு பாமரத்தன்மை அவரது பேச்சில் சைகைகளில் சிரிப்பில் எப்போதும் இருந்தது. சுட்டுவிரலை நீட்டிக் கைகளை மேலே தூக்கி மேடையில்பேசுவதுபோலத்தான் பேசினார்.
கே.பி.ஆர்.கோபாலனைப்பற்றி இணையத்தில் தேடினேன். சிலவரிகள் மட்டுமே சிக்கின. கேரள கம்யூனிஸ்டுக்கட்சியின் வரலாற்றில் சில வரிகள் இருந்தன. அவ்வளவுதான், அவர் கிட்டத்தட்ட மறைந்தேபோய்விட்டார். நான் 1986 இல் அவரைக் கண்டபின் இருவருடம் கழித்து அவர் மறைந்தார். அப்போது நாளிதழ்கள் ஓரளவு அவரைப்பற்றிப்பேசின. அதுகூட அவரை சீக்கிரமாக மறப்பதற்கான அவசரம்தானா என்று இப்போது தோன்றுகிறது.
கண்ணூர் மாவட்டத்தில் கல்யாசேரியில் 1921 ல் பிறந்த கே.பி.ஆர்.கோபாலன் அறுபதுவருடங்களுக்கு முன்னர் இந்தியாவையே கேரளத்தை நோக்கித் திருப்பினார். 1940ல் பிரிட்டிஷார் இந்தியாவை இந்தியர்களின் அனுமதி இல்லாமல் உலகப்போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்துப் போராட்ட அறைகூவலை காங்கிரஸ் விடுத்தது. அந்த அறைகூவலைக் காங்கிரஸ் கட்சிக்குள் அப்போது இருந்த சோஷலிஸ்டுக்களும், கம்யூனிஸ்டுக்கட்சியை உருவாக்கி தனியாகச் செயல்பட்ட புரட்சியாளர்களும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக முன்னெடுத்தார்கள். வடகேரளத்தில் கேளப்பன் தலைமையிலான காங்கிரஸ் அப்போராட்டத்தை தீவிரமாக நிகழ்த்தியது. அத்துடன் அன்று அங்கே முளைவிட ஆரம்பித்திருந்த கம்யூனிஸ்டுகள் இணைந்துகொண்டார்கள்.
1940, செப்டெம்பர் 15ல் கேரளத்தில் ‘மொறாழ’ என்ற இடத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஊர்வலம் கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்டது. அப்போது கம்யூனிஸ்டுக்கட்சியில் அனுபவமுள்ள மூத்த தலைவர்கள் யாரும் இல்லை. அனைவருமே இளைஞர்கள். அன்று பத்தொன்பது வயதானவராக இருந்த கே.பி.ஆர்.கோபாலன் அப்போராட்டத்தில் ஆவேசமாக ஈடுபட்டார். போராட்டம் அப்போது அடித்தளவர்க்கத்துத் தொழிலாளர்கள் நடுவே பரவ ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே தொழிற்சங்கப்போராட்டங்கள் ஆரம்பித்திருந்தன. 1936ல் கேரள கம்யூனிஸ்டுக்கட்சி கண்ணனூரில் நிறுவப்பட்டுவிட்டிருந்தது. ஆகவே அரசும் முதலாளிகளின் படைகளும் அப்போராட்டத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டன

போலீசாரும் பெரும் குண்டர்படையும் தொழிலாளர்களைத் தாக்கினார்கள். போராட்டம் மோதலாக மாறியது. இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டார்கள். போலீஸ் கடுமையான அடக்குமுறையை உருவாக்கியது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அப்போது வடகேரளத்தில் உருவாகியிருந்த வேளாண்மைத்தொழிலாளர் அமைப்பை அழித்துவிடுவதற்கான முயற்சியாக அது வளர்ந்தது. கொலைவழக்கில் அறக்கல் குஞ்சிராமன், விஷ்ணு , பாரதீயன், சுப்ரமணிய ஷேனாய் ஆகியோருடன் முதற்குற்றவாளியாக கே.பி.ஆர்.கோபாலன் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
கே.பி.ஆர்.கோபாலனின் மரணதண்டனைக்கு எதிராக அரசியல் கிளர்ச்சி உருவானது. காங்கிரஸ் அதில் கம்யூனிஸ்டுகளை ஆதரித்தது. சர்தார் பட்டேல் கே.பி.ஆர்.கோபாலன் கொல்லப்படக்கூடாதென தீவிரமாக வாதாடினார். இதழ்கள் அவருக்காகக் குரல்கொடுத்தன. ஆனால் கே.பி.ஆர்.கோபாலன் மன்னிப்பு கோரவோ கருணைக்கு மன்றாடவோ மறுத்துவிட்டார். பரவலான கிளர்ச்சியின் பயனாக அவரது மரணதண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு 1948ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். தூக்குக்கயிற்றை முத்தமிட்டு மீண்ட அவரை கம்யூனிஸ்டுக் கட்சி தன்னுடைய கதாநாயகனாக முன்னிறுத்தியது.
கே.பி.ஆர்.கோபாலனின் வாழ்க்கை முழுக்கமுழுக்க கம்யூனிஸ்டு இயக்கத்துடன் பிணைந்தது. ஏ.கெ.கோபாலன், பி.கிருஷ்ணபிள்ளை,ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் போன்ற தலைவர்களுடன் இணைந்து கட்சியை உருவாக்க தன் வாழ்க்கையை அவர் செலவிட்டார். சுதந்திரத்துக்குப் பின்னர் பி.டி.ரணதிவேயின் ஆயுதப்புரட்சிக்கோட்பாடு முன்வைக்கப்பட்டு நாடெங்கும் கம்யூனிஸ்டுக்கள் கிளர்ந்தெழுந்தபோது கே.பி.ஆர்.கோபாலன் முன்பு அவருக்காகக் குரல்கொடுத்த அதே பட்டேலின் அரசால் கைதுசெய்யப்பட்டு மீண்டும் சிறைசென்றார்.
ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு கட்சி தேர்தலரசியலுக்கு வந்ததை ஏற்க கே.பி.ஆர்.கோபாலன் தயங்கினார். ஆனால் கட்சியின் நிலைப்பாட்டுடன் ஒத்துழைத்தார். 1957 இல் கேரளத்தில் முதல் கம்யூனிஸ்டு அரசு உருவானபோது அதை ஒரு தற்காலிக சமரசமாகவே அவர் எடுத்துக்கொண்டார். அந்த அரசாங்கத்தில் பங்கெடுக்க அவர் மறுத்தார். அவரது தம்பி கே.பி. ஆர்.ரயரப்பனுக்கு அவ்வாய்ப்பு வழங்கப்பட்டது.
உண்மையில் கே.பி.ஆர்.கோபாலனை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று கட்சிக்குத் தெரியவில்லை. அவர் முழுக்க முழுக்க ஒரு புரட்சிக்காரர். ஒரு புரட்சியால்மட்டுமே அவரை பயன்படுத்திக்கொள்ள முடியும். ”நமக்கு ஆட்சி சர்க்கார் பேப்பர்வேலை ஒன்றும் சரிப்படாது என்று நம்பூதிரிப்பாடிடம் சொல்லிவிட்டேன்…வேண்டுமென்றே அடிக்கடி தலைமைச்செயலகம் சென்று அதன் திண்ணையில் குந்தி அமர்ந்து பீடிபிடிப்பேன். அரசாங்க செயலாளர்கள் ·பைல்களுடன் போகும்போது என்னை பவ்யமாக வணங்குவார்கள். நான் முகம் கொடுத்தே பேசமாட்டேன். பூர்ஷுவா நாய்களிடம் நமக்கென்ன வேலை?”என்றார் கே.பி.ஆர்.கோபாலன். கட்டன் சாயாவும் வேகவைத்த மரவள்ளிக் கிழங்கும் அந்த அம்மாள் தந்தார்கள்.
கே.பி.ஆர்.கோபாலன் ஈ.எம் எஸ்ஸிடம் திரும்பத்திரும்பச் சொன்னார், அதிகநாள் அந்த அரசை முதலாளிகள் விட்டுவைக்கமாட்டார்கள் என்று. ஆகவே அதிகாரம் கிடைத்ததுமே சடசடவென செய்யமுடிபவற்றை எல்லாம் செய்ய வேண்டும். நிலங்களை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யவேண்டும். ஏழைக் குடிகிடப்புகளை அங்கீகரிக்கவேண்டும். ”சாலைத்தெருவுக்குப் போய் அங்கே தெருவில் கிடக்கும் ‘அலவலாதிகளை’ எல்லாம் பிடித்துவந்து ஆளுக்கொரு தொழிலோ நிலமோ கொடுப்போம். கம்யூனிசம் வந்தால் என்ன செய்யமுடியும் என்று ஒரு கோடிகாட்டுவோம்”என்றார்.
”அப்படியெல்லாம் உடனே செய்துவிடமுடியாது என்றார் நம்பூதிரிப்பாடு. அப்படியென்றால் பதவி எதற்கு, பேசாமல் எழுதிக்கொடுத்துவிட்டு வாருங்கள் என்றேன். பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்” என்றார் கே.பி.ஆர்.கோபாலன். நாளடைவில் தலைவர்களே கே.பி.ஆர்.கோபாலனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். ”பூர்ஷுவாக்களின் அரசை ஆட்சி செய்யவா புரட்சி செய்தோம் என்று கேட்டேன்”என்றார் கே.பி.ஆர்.கோபாலன் தீவிரமாக பீடியை இழுத்தபடி.
”ஆனால் ஈ.எம்.எஸ்சின் அரசு நிலவினியோகம் செய்ததே. குடிகிடப்புகளை அங்கீகரித்ததே. வேறு எந்த அரசும் அதைச் செய்யவில்லையே”என்றேன். கே.பி.ஆர்.கோபாலன் கடும் சினத்துடன் பீடியைத் தூக்கி வீசினார் ”நீ அரசாங்க ஊழியன். தொழிற்சங்கக்காரன். உன் மூளை அப்படித்தான் வேலைசெய்யும். சம்பளம் வாங்குபவன் மூளை சம்பளத்துக்கு அடிமை. உன்னைமாதிரி சேறு வந்து படிந்ததனால்தான் இப்போது புரட்சி துடுப்புதட்டி நிற்கிறது”என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை.
இருமி அடங்கியபின்பு கே.பி.ஆர்.கோபாலன் தணிந்தார் ”சகாவே, இன்றுள்ள சில்க் ஜிப்பா கம்யூனிஸ்டுகள் சொல்வதை நம்பாதீர்கள். நன்றாக யோசித்துப்பாருங்கள். நம்பூதிரிப்பாடின் அரசு நிலவினியோகம் செய்தது உண்மை. ஆனால் எந்த நிலத்தை? கோயில்களும் ஊர்ப் பிரமுகர்களும் வைத்திருந்த உரிமையாளர்கள் இல்லாத உபரி நிலத்தை. அதைப் பிடுங்கி ஏழைகளுக்கு கொடுப்பதா கம்யூனிசம்? இங்கே உள்ள நிலப்பிரபுக்கள் ஏழைகளை ஆண்டாண்டுக்காலமாகச் சுரண்டி சேர்த்து வைத்துள்ள நிலங்களைப் பிடுங்க வேண்டாமா? அதுதானே கம்யூனிசம்?”
என்னால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. ”ஒன்றும் சொல்ல முடியவில்லை இல்லையா? அப்படித்தான். நம்பூதிரிப்பாடும் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்…சகாவே, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் நானெல்லாம் என்ன நினைத்தேன் தெரியுமா? இங்கே உள்ள நிலமும் சொத்தும் எல்லாம் மன்னர்களுக்கும் மன்னர்களின் காவல்நாய்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கால்நக்கிகளுக்கும் சொந்தமானது. சுதந்திரம் கிடைத்ததும் அந்த அநியாயமான சொத்துரிமைகள் ரத்துசெய்யப்படும் என்று நம்பினேன். ஆனால் சுதந்திரம் கிடைத்ததும் முதலில் அவர்கள் சொன்னது அந்தச் சொத்துரிமைகள் பாதுகாக்கப்படும் என்று.தான்..அந்த ஏமாற்றத்தைவிடப் பெரியது நம்பூதிரிப்பாடும் அதே சொத்துரிமையை ஒத்துக்கொண்டது… நில உச்சவரம்புச்சட்டம் கொண்டுவருகிறார். அப்படியானால் அந்த உச்சவரம்புக்குள் உள்ள நிலங்களை அவர்களுடையதென அவர் ஒப்புக்கொள்கிறாரா? அதுவா கம்யூனிசம்?”
”சரி அவர் என்னசெய்திருக்க வேண்டுமென எதிர்பார்த்தீர்கள்?” ”வேறு என்ன உடனே நிலங்களைப் பிடுங்கி வினியோகம் செய்ய வேண்டியதுதானே” ”யாரை வைத்து?” ”சர்க்காரை வைத்து” என்றார். ”சர்க்காரின் ஆபீஸர்களும் போலீஸும் எல்லாம் அவர்கள் வைத்திருந்ததுதானே?” என நான் கேட்டேன்.”அப்படியானால் ஏன் அவர் இருக்கவேண்டும் ? இறங்கி வரவேண்டாமா?” ”வந்து?” ”புரட்சிசெய்ய வேண்டும். விவசாயக்கூலிகளை ஒன்று திரட்டிப் போராடவேண்டும்” ”அது நடக்குமென நினைக்கிறீர்களா?” ”நடக்கும். உயிரைக்கொடுக்கத் தயாரென்றால் நடந்தே தீரும். மார்க்ஸிசம் தோற்காது. அது சயன்ஸ்”
நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். ’நான் கிளம்புகிறேன்’என்றேன். அவரும் என்னுடனேயே கிளம்பி வந்தார். இருளுக்குள் பேசியபடி நடந்தோம். கே.பி.ஆர்.கோபாலன் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார். அதன் சுடர் மட்டும் கூடவே வந்தது. அவரது தூங்காத கண் போல. கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரிவினை அவரை எப்படி அன்னியமாக்கியது என்று சொன்னார். கட்சிக்குள் கலகக்காரராக நீடித்தார் கே.பி.ஆர்.கோபாலன். பின்னர் கட்சி அமைப்புகளில் இருந்து வெளியே வந்தார். ஆனால் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக அவர் செயல்படவேயில்லை. கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஏன் பிரிந்து கிடக்கவேண்டும் என்று அவருக்குப் புரியவில்லை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து புரட்சி செய்யவேண்டும் என்று அவர் ஓயாமல் வாதாடினார். தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார்.
”நான் அவசரநிலைக்காலத்திலும் ஜெயிலுக்குப்போனேன்”என்றார் கே.பி.ஆர்.கோபாலன். அப்போது அவர் நக்சலைட் என்று சொன்னார்கள். ”நான் கம்யூனிஸ்ட். பிளவுபடாத கம்யூனிஸ்ட்” என்றார். எப்போதும் கம்யூனிஸ்டுக்கட்சிகளுடன் அவருக்கு உறவிருந்தது. தலைவர்கள் அவரை மதித்தார்கள். நாயனாரை ”எடோ நயனாரே” என்று கூப்பிட்டுப் பேசும் அளவுக்கு நெருக்கம். ஆனால் எந்த இடத்திலும் அமராமல் அலைந்தார். சர்வ சாதாரணமான ஒருவராக. அழுக்கு வேட்டியுடன் டீக்கடைகளில் அமர்ந்திருப்பார். பீடித்தொழிலாளர் சங்க கட்டிடத் திண்ணையில் அமர்ந்து பேப்பர் படிப்பார். அங்கேயே படுத்தும் தூங்குவார். ‘தூக்குமேடை கெ.பி.ஆர்’ என்றால் பழைய தோழர்கள் வணங்குவார்கள். புதியவர்களுக்கு அவரது வரலாறே பெரும்பாலும் தெரியாது.
”என்னால் எங்கேயும் இருக்க முடியாது. இருந்துவிட்டவனால் புரட்சியைக் கொண்டுவர முடியாது..”என்றார் . ”ஆயுதமில்லாமல் புரட்சி வராதா?”என்றேன்.”நான் புரட்சி என்று சொன்னதுமே அவர்கள் அடிக்கிறார்கள் அல்லவா? அப்படியானால் ஆயுதம்தானே இங்கே ஆட்சி செய்கிறது? அதை ஆயுதமில்லாமல் எப்படி எதிர்கொள்ள முடியும்?” கே.பி.ஆர்.கோபாலன் சொன்னார். ”தங்கவாட்ச் கட்டிய காலேஜ் வாத்தியாருக்குச் சங்கம் வைப்பதைப் புரட்சி என்கிறார்கள் இன்றைக்கு. அவன் எப்படிப் புரட்சி செய்வான்? இழக்க ஒன்றுமில்லாதவன்தான் புரட்சி செய்வான்.அவனிடம் பேசுவோம்…என்ன சொல்கிறீர்கள்?”
முச்சந்தியில் நான் விடைபெற்றேன். பொடிநடையாக ரயில்நிலையம்சென்றால் மங்களூர் வண்டியைப் பிடிக்கலாம். கே.பி.ஆர்.கோபாலனிடம் விடைபெற்றேன். ”லால் சலாம் சகாவே ” என்றார். ஏராளமான சினிமாக்கள் வழியாக நகைச்சுவையாக மாறிப்போன கோஷம். செவ்வணக்கம். ஆனால் அவரது எரியும் பீடிக்கண் அதைச் சொல்வதுபோலத்தான் இருந்தது. இன்னொரு மிடறு நாட்டுச் சாராயத்துக்காகத்தான் நள்ளிரவில் செல்கிறார் என்று நினைத்தேன்.
அவர் நோயில்படுக்கக்கூடாது என்று ஆசைப்பட்டேன். அவரைப் பிறர் வந்து பார்த்து அனுதாபம் தெரிவிப்பதுபோல ஆகக்கூடாது. அவர் மேலும் செய்வதற்கு ஒன்றும் இல்லை. வரலாறு என்பது கடந்தகாலமாக இருந்தால்தான் பொருத்தம். அவருக்கு திடீர் சாவு வரவேண்டும். அல்லது போலீஸ் அவரைக் கொல்லவேண்டும். ஏன், நானேகூட அவரைக் கொன்றுவிட்டு அரசாங்கத்தின் தூண்டுதலால் அவரைக் கொன்றேன் என்று வாக்குமூலம் கொடுக்கலாம். என்ன மடத்தனம், ஆனால்…அவருக்கு இனி எஞ்சியிருப்பது ஒரு சிறந்த சாவுதான். ஆனால்….
ரயில்நிலையம் திரும்பும் வழியில் தூரத்தில் நின்று பார்த்தேன். சிவந்த கனல் மட்டும்தான் தெரிந்தது.