வற்கீஸின் அம்மா:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு

சற்று பிந்தித்தான் வற்கீஸின் அம்மா கட்டுரை– அல்லது அனுபவத்தை படித்தேன். வயதானவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையேயான உறவு அப்படிப்பட்டது. அதில் ஒரு கொடுக்கல் வாங்கல் உள்ளது. இளையவர்கள் வயதானவர்களுக்கு எதிர்காலம் என்ற நம்பிக்கையை அளிக்கிறார்கள். வயதானவர்கள் இளையவர்களுக்கு இறந்தகாலம் என்ற தொடர்ச்சியை அளிக்கிறார்கள். மனித அனுபவத்தில் இதெல்லாம் மாறி மாறி வருகின்றன. நான் இந்தியா செல்லும்போது நானறிந்த அத்தனைபேரும் வயோதிகர்களாக என்னைச்சூழ்ந்து விடுகிறார்கள். ஒவ்வொருவரும் என்னுடைய சென்ற கால வாழ்க்கையின் ஒரு துளியை எனக்கு அளிக்கிறார்கள். அந்த அனுபவம் மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது

சிவசுப்ரமனியம்
[தமிழாக்கம்]

அன்புள்ள சிவசுப்ரமணியம்,

உங்கள் வரிகள் என்னை மிகவும் யோசிக்கச் செய்தன. ஆம் நாம் இம்மாதிரியான தருணங்களில் நெகிழ்ச்சியடைவதற்குக் காரணம் அப்போது உணரப்படும் ஆழமான ஒரு மரபுத்தொடர்ச்சிதான். மனிதம் என்பது நான் அல்ல நாம், அது அழியாத ஒரு தொடர்ச்சி என்று உணர்வதுபோல.
ஜெ

***

அன்பு ஜெ சார்.  வற்கீசின் அம்மா போலவே, வயது முதிர்ந்த அன்னையர் நம்மைப் பரிவோடு கை பற்றிப் புன்னகைத்தல் பெரிய ஆசிர்வாதம் என்று நினைக்கிறேன். முன்னமே பழகியவர்களோ அல்லது முதல் சந்திப்போ. எல்லா மூதாட்டிகளுமே மறைந்த தாயாரையும், பாட்டியையும் நினைவில் கொணர்ந்து கண் நனைய வைப்பவர்கள். இது போலவே அறிமுகமில்லாத குழந்தைகளும் நம்மைப்பார்த்து மலர்ந்து சிரித்தால்,அல்லது நம் கண்சிமிட்டலை சுவீகரித்து புன்னகைத்தால் அதுவும் பேரின்பம். நான் ஒரு மனிதன் ( நம்பத்தகுந்த மனிதன்) என்ற அங்கீகாரமாய்ப் பூரிப்பேன்.  வாழ்வின் பல அவலங்களையும் தாண்டி, மனிதப்பிறப்பும் வேண்டுவதே என்று மகிழ வைக்கும் தருணங்கள் இவை.  

அன்புடன் ரகு நாதன்

அன்புள்ள ரகுநாதன் அவர்களுக்கு,

நீங்கள் சொல்வது என் சொற்கள் போல இருந்தது. அந்த தருணங்களில் நாம் ஒரு மன உச்சத்தை அடைகிறோம். சில சமயங்களில் நம்மை கைக்குழந்தைகள் ஆசீர்வதிக்கின்றன என்ற எண்ணமும் அதன் விளைவான மன எழுச்சியையும் நான் அடைந்தது உண்டு
ஜெ

***

திரு ஜெ.எம்,  

 ரஷ்யாவின் முகம்(ஆசிரியர்-அலக்ஸி டாக்ச்டாப் என்றுநினைக்கிறேன்.தவறெனில் திருத்துக) என்ற ஒரு சிறுகதையை வர்கீசின் அம்மா நினைவுபடுத்தியது.போரில் முகம் சிதைந்து போன ஒரு ராணுவ வீரன்,அதைத்தன்  அம்மா எப்படி எதிர் கொள்ளக்கூடுமோ என்று அஞ்சுகிறான். தன்னை அவள் இனம் கண்டு கொள்ள முடியாதென எண்ணி,மகனின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு,தாயிடமே வந்து தங்கி விட்டுப்போகிறான்;அந்தத்தருணத்தில் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத தாய்,அவன் கிளம்பிச்சென்றதும் எழுதும் கடிதத்தில்,நண்பனாக அவன் தங்கிய சில நாட்களில் அவன் துணிகளைத் துவைத்துப்போட்டபோது,”மகன் வாசனை”யைத்தான் உணர்ந்து விட்டதாகவும் ,சிதைந்த முகத்தை  ஏற்கக்கூடிய மனம் ,ஒரு தாய்க்கு இருக்காது என்று அவன் எண்ணியது,எத்தனை பேதைமை என்பதையும் புலப்படுத்துவாள்.சிலிர்ப்பை ஏற்படுத்திய அந்தக்கதை போலவே உங்கள் விவரிப்பின் விவரமும் நெகிழ்த்துகிறது.தாய்மையின் உள்மன ஆழங்கள்,உணரப்பட வேண்டியவை மட்டுமே

யோகம் பற்றிய தெளிவுகள் கிடைக்கத்தொடங்கியிருக்கின்றன.;பதஞ்சலி குறித்த உங்கள் கட்டுரைகள் மேலும்,மேலும் புதிய தரிசனங்களையும்,உள்ளொளிகளையும் எனக்கு அளிக்குமென நம்புகிறேன்

  “தீராத குழந்தைப்பருவம் கொண்டவன் எவனோ,அவனே எழுத்தாளன்” என்றும்,”நம் கைகள் வழியாக நம் குழந்தை வளர்வதைத்தொட்டு அறிவதென்பது,மானுடனுக்கு இயற்கை அளித்துள்ள பேரனுபவங்களுக்குள் முக்கியமானது” .என்றும் முன்னொரு முறை நீங்கள் எழுதியதைக்குறித்து வைத்திருக்கிறேன். (புத்தககக் கண்காட்சி ஒன்றில்-வசந்தகுமாரும் அப்போது உங்கள் அருகிருந்தார்-உங்களை நான் சந்திக்க வாய்த்தபோது,நேரிலேயே முன் குறித்த வரிகளை நெகிழ்வுடன் உங்களிடம் பகிர்ந்தேன்;அது,,உங்களுக்கு நினைவிருக்குமா,தெரியவில்லை.அந்த சமயத்திலேதான்,நான் பாட்டியாகி,சில காலமாகி இருந்ததால்,அந்த வார்த்தைகளை,என்னால் அனுபவபூர்வமாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.).இப்பொழுது,உங்கள் புதிய பதிவான “நமது கைகளில்”,மேலே குறித்த உங்கள் வரிகளை மீண்டும் நினைவுக்குள் மீட்டிக்கொள்ள,ஒரு வாய்ப்பளித்து விட்டது.
  எப்படியோ,அம்மாவும்,குழந்தையுமாய்க்கடிதம் நீண்டு விட்டது.

 குருவணக்கத்துடன்.

சுசீலா

***

ஐயா,
வணக்கம்.
மனதை உருக்கி விட்டிர்கள். 
படிக்க படிக்க கண்கள் பனிக்க ஆரம்பித்தன. அடுத்தடுத்த வரிகளைத் தாண்டும் போது, கண்ணீர் பெருகிற்று..
இந்த மாதிரியான அன்பு தான் உலகை நடத்திச் செல்கிறதா?

உங்கள் நேர்மையை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன். உங்கள் வாழ்க்கையின் உண்மைகளை பகிர்ந்து கொள்ளும் தைரியம் வியப்படைய வைக்கிறது!
‘hats off to you sir”
வெற்றி மகள்

***

அன்புள்ள ஜெயமோகன்

வழக்கம் போலவே மற்றுமொரு நெகிழ வைக்கும் பதிவு. என் சிறு வ்யது வாழ்க்கைக்கு எடுத்துச் சென்று விட்டீர்கள். நான் பிறந்ததும் ஆறு வயது வரை வளர்ந்ததும் நாசரேத் என்ற ஊரில். அந்த ஊர் முழுக்க முழுக்க கிறிஸ்துவத்திற்கு மாறிய ஒரு சிறிய டவுண். அங்கிருந்த நாடார்கள் ஒட்டு மொத்தமாக கிறிஸ்துவ மதத்தைத் தழுவி ஓரளவுக்கு மேற்கத்தியப் பண்பாடுகளுக்கு அறிமுக்மாயிருந்த நகரம். அங்கிருந்த கோவாப்பரெட்டிவ் வங்கியில் என் அம்மாவின் தந்தையார் பணிபுரிந்தமையால் வெகு காலமாக அந்த ஊரிலேயே என் அம்மாவின் குடும்பம் வசித்து வந்த படியால் அந்த ஊரில் ஒரு அந்நியராக இருந்த பொழுதும் ஊரின் ஒரு அடையாளமாகவே இணைந்து போயிருந்தனர். ஊரில் இருந்த ஒரு சில இந்துக் குடும்பங்களில் எங்களதும் ஒன்று. நான் சிறு வயதில் தூங்கும் நேரம் தவிர பெரும்பாலான நேரங்களைக் கழித்தது அக்கம் பக்கத்துக் கிறித்துவ வீடுகளில்தான். அவர்கள் பெயர்களும் மேற்கத்திய அமெரிக்க பாணியில் வைத்துக் கொள்வார்கள். எதிர் வீட்டுப் பையன்களின் பெயர்கள் எமெர்சன்., வாஷிங்டன், கென்னடி, அர்பான் என்றிருக்கும் பெண்களின் பெயர்களோ ஜாய்ஸ், ஸ்டெல்லா, ஜாக்குலின் என்று வசீகரமான பெயர்களாக இருக்கும். பெயர்கள் மட்டும் அல்லாமல் பொட்டில்லாத அவர்கள் முகமும், வீட்டுக்குள் நீங்கள் உன்னிப்பாக கவனித்திருந்தது போல் தொங்கும் எம்ப்ராய்டரி செய்யப் பட்ட திரைகளும், தலையணை உறைகளும், கைக்குட்டைகளும், உணவிற்கு அவர்கள் பயன் படுத்தும் பீங்கான் பாத்திரங்களும், சாப்பாட்டு மேஜைகளும், யேசுநாதர் படங்களும் அவற்றின் அருகே அமைதியாக சுடர் விட்டுக் கொண்டிருக்கும் மெழுகு வர்த்திகளும், வாசகங்கள் பொறிக்கப் பட்ட ஃப்ரேம் செய்து மாட்டப் பட்ட சுவர் படங்களுமாக முற்றிலும் ஒரு வித்தியாசமான சூழலைத் தருவதினாலேயே அவர்கள் வீடு எனக்கு எப்பொழுதும் ஆர்வத்தைத் தூண்டுபவனையாக இருந்தன. நாசரேத்தில் இருந்து ஊருக்குச் செல்லும் பொழுது ஏதோ ஒரு அந்நிய தேசத்திற்குப் போவது போல உணர்ந்திருக்கிறேன். சிறு வயதில் என் அம்மா என்னை வளர்த்தை விட அதிகமாக பாசத்துடன் எதிர் வீட்டு  ஸ்டெல்லா வீட்டு அம்மாள் (அவர்கள் பெண்ணை வைத்துத்தன் அவர்களின் வீட்டுப் பெயரையே அழைப்போம்) வளர்த்ததுதான் அதிகம். ஜெனரல் மெர்ச்சண்ட்ஸ் கடை வைத்திருக்கிறார்கள்.  இன்றும் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் தவறாமல் அவர்களச் சென்று பார்த்து விட்டுத்தான் வருகிறேன். சென்ற முறை சென்ற பொழுது மிகவும் தளர்ந்திருந்த அந்த அம்மாள் என் கைகளைப் பிடித்துக் கொண்டு நெடுநேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வீட்டுக்குள் அழைத்துச் சென்று என் அம்மாவுடன் அவர்கள் இருக்கும் போட்டோவை ஆர்வத்துடன் காண்பித்தனர். அதை நான் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்கள் யாரும் பிற மதத்தினரை வெறுத்துக் கண்டதில்லை. ப்ரோட்டஸ்டண்டுகளிடம் அந்த வெறுப்பை அநேகமாகக் காண முடியாது.

வண்ன நிலவனின் ரெய்னீஸ் ஐயர் தெரு போன்ற ஒரு தெரு அந்த நாசரேத்தில் உள்ள தெரு. இருபுறமும் பூவரச மரங்கள் அடர்ந்த ஒரு சோலை போன்ற தெருக்கள் முழுக்க கிறுத்துவர்கள் நிறைந்திருந்த அந்தத் தெருவில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக என் அம்மாவின் குடும்பம் வசித்து வந்திருந்தனர். ரெய்னீஸ் ஐயர் தெரு என் சிறு வயது நினைவுகள் காரணமாகவே என்னை வெகுவாக ஈர்த்த ஒரு அற்புதமான படைப்பு.

இன்னும் ஒரு சில நண்பர்களை வெகு காலம் கழித்துக் காணும் பொழுது பேச பொதுவான விஷயங்கள் இல்லாமல் போனாலும் வெறுமே அமைதியாக அமர்ந்திருப்பதே மனதுக்கு ஒரு வித சந்தோஷத்தை அளிக்கின்றது. அதை மிக அருமையாக வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

மனித மனங்கள் அன்பினால் இணையும் தருணங்களை மிக அருமையாக நெகிழ வைக்கும் வரிகளால் எழுதியிருந்தீர்கள். என் நினைவுகளைக் கிளறியமைக்கு மீண்டும் நன்றி

அன்புடன்

ராஜன்

முந்தைய கட்டுரைவற்கீஸின் அம்மா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழியம் ஓர் ஆய்வு