தாயார்பாதம், அறம்- அஸ்வத்

அறம் விக்கி

அன்பு ஜெயமோகன்,

நலமா?

அறம் தாயார் பாதம் மற்றும் யானை டாக்டர் கதைகளைப் படித்தேன். நல்ல கதைகள். தத்ரூபமாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தங்களுடைய எழுத்து வேலைச் சுமையிலும் குவியும் பாராட்டுகளிலும் என் போன்ற ஒரு வாசகனின் மடலைத் தாங்கள் பொருட்படுத்தக் கூடும் என்றால் ஆச்சர்யமே. தவிரவும் ஒரு நாளைக்கு ஆயிரம் மடல்கள் மின்னஞ்சல் பெட்டியில் வருவதென்றால் அதை நினைத்தாலே எனக்கு ஆற்றுப் போகிறது. இதில் எல்லாவற்றையும் படிப்பதற்கே பெரிய பிரயாசை தேவைப் படுகிறது. இதை உள்வாங்கி பதிலும் போடுவதென்றால் நினைத்தே பார்க்க முடியவில்லை. உண்மையிலேயே அசுர உழைப்பு.
என்றாலும் தங்களுக்கு மடல் எழுதுவதைக் கைப்பழக்கமாகி விடுவது என்று எண்ணம். காரணம் எனக்கு இது மனதில் வைத்திருக்கும் பாரத்தை இறக்கி வைத்தாற்போல் இருக்கிறது.
இனி கதைகள்:
யானை டாக்டர்: மிகவும் உன்னதமான கதை. யானைகளின் குண இயல்புகளை ஏற்கெனவே நான் அறிந்தும் படித்தும் கேள்விப்பட்டும் இருந்தாலும் கூட தங்களின் விவரிப்பு மனதில் உன்னதமான மனக் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை. ஈழ யானைகளைப் பற்றி அந்தக் காலத்தில் தருமு அருப் சிவராம் சிறுகதைகள் எழுதி இருக்கிறார். ஆனால் அவை நிஜம் அல்லாத ‘பாண்டசிக்’ கதைகள். நிஜத்தை எழுதியே அமானுஷ்யமான ஒரு விளைவை ஏற்படுத்த முடியும் என்பது தங்களின் படைப்புத் திறனுக்கு சாட்சி. வேறு ஒரு நிலைக் களனில் ஜெயந்தன் ‘புலம்பல்’ என்று இதே மாதிரி ஒரு கதை எழுதி இருக்கிறார்.

தாயார் பாதம்: அசோகமித்ரனின் தண்ணீர் நினைவுக்கு வருகிறது. கிழம் ஒன்று புத்தி பேதலித்துப் போய் ‘5 படி அரிசி போட்டா அரைக்க’ என்று அரற்றிக் கொண்டே இருக்கும். நளின கலைகளில் ஈடு பட்டிருக்கும் மனிதர்களின் மறு பக்கம் இருக்கும் குரூரத் தன்மை, இரக்கமற்ற ஆணாதிக்கம் பெண்கள் படும் பாடு என்று பன்முகங்களை ஒருங்கிணைத்துச் சுட்டும் கதை. இதற்கான கருவை எங்கிருந்து தேர்ந்தெடுத்தீர்கள் என்று அறிய ஆவல்.

அறம்: இதன் ஹீரோ எம் வி வெங்கட்ராம் போல் தெரிகிறதே? அவரே பெரிய கதை சொல்லி. நீங்களும் பெரிய கதை சொல்லி. இணைந்தால் கேட்க வேண்டுமா? அவரின் விவரிப்பில் ஒரு சாதாரண மனிதன் கேட்டிருந்தால் வெட்டி வம்பாகப் போய் இருக்கும். மனதைத் தொடும் சிறு கதையானது தங்களின் ரஸ வாதத்தினால் தான்.

வேறு: அகிலனைப் பற்றித் தங்களின் விமர்சனத்தை படித்தேன். எனக்கென்னவோ அகிலனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்று தோன்றுகிறது. இதை நாம் விரிவாக அலச வேண்டும்.

காயல் பட்டினம் பாய் ‘ஜனசம்மோதினி’ சாயலில் ஒரு பாட்டு பாடி இருக்கிறார். நம்ம பார்வதிபுரத்தில் சாரல் அடிப்பது போல். கேளுங்க:

https://www.youtube.com/watch?v=ZZJvHtoTW-k

அன்புடன்,

அஸ்வத்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 39
அடுத்த கட்டுரைதெய்வங்கள் பேய்கள் தேவர்கள் : 1 – இரு புராண மரபுகள்