பாபநாசம் பற்றிய கேள்விகள், கடிதங்கள் அனைத்துக்கும் நன்றி. ஒட்டுமொத்தமாக அனைத்துக்கும் இந்தக்குறிப்பை எழுதிவிடுகிறேன். விரிவாக இந்தக்கடிதங்களைக் கொண்டுசெல்ல நான் விரும்பவில்லை.
திருஸ்யம் -பாபநாசம் ஒப்பீடு நினைத்ததுபோல மேலோட்டமாக நடக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. சில நல்ல குறிப்புகளைக் கண்டேன்.லால் அப்டி நடிச்சிருக்கார், கமல் இப்டி பண்ணியிருக்கார் என்பது போன்ற பேச்சுகளே வரவில்லை. ஜார்ஜ்குட்டி வேறு, சுயம்புலிங்கம் வேறு. சுயம்பு நான் அறிந்த ஒரு மனிதர். மளிகைக்கடை வைத்திருக்கிறார். மிகச்சிறிய குறிப்புகளைக்கொண்டே அந்த கதாபாத்திரத்தை ஊகித்து முழுமைசெய்திருக்கிறார் கமல். கழுத்தில் வைக்கும் கர்சீப்பில் இருந்து பௌடரை எடுப்பது ஓர் உதாரணம். சுயம்புலிங்கம் பாசமலர் பார்த்துக் கண்கலங்குபவர்- நூற்றுப்பத்தாவது தடவையாக. அந்தக்குணச்சித்திரம்தான் படத்தில் உள்ளது. ஜார்ஜ்குட்டிக்கு பெரிய குற்றவுணர்ச்சி இல்லை. அவர் வெற்றிகொண்டு நடந்துசெல்கிறார். சுயம்புலிங்கம் இனிமேலும் தன் வாழ்க்கையின் கடைசிக்கணம் வரை குற்றவுணர்ச்சியால் குமைவார். அவரது மூடும் கண்களில் தெரிவது அந்தத் துயரம்தான். இந்த குணவேறுபாடு எழுத்திலேயே வந்துவிட்டது.கமல் அதைத்தான் ஜித்துவுக்கு நடித்து அளித்திருக்கிறார்.
பல பழமொழிகள் எங்கே பேசப்படுபவை என கேட்டிருந்தனர். ‘கசாப்புக்கடை கட்டுறதை ஆடு வேடிக்கை பாக்கப்பிடாது’ ‘பெருச்சாளி பாக்காத பாதாளம் இல்லை’ போன்ற பல பழமொழிகள் இதில் உள்ளன. என் நாவல்களிலானாலும் வசனங்களிலானாலும் வரும் எல்லா பழமொழிகளும் நானே எழுதுபவைதான். அவை பிறகுதான் பழமொழிகள் ஆகின்றன. நான்கடவுளின் ‘தீயில என்ன சுத்தமும் அசுத்தமும்?” அங்காடித்தெருவின் ‘விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ ‘யானை வாழுற காட்டில்தான் எறும்பும் வாழுது’ போன்ற வரிகளை என்னிடமே பழமொழியாக பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நண்பர்களுக்கு மீண்டும் நன்றி