‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 6

துவாரகையின் அரண்மனை வளாகத்துக்குள்ளேயே கல்பரப்பப்பட்ட பெரிய சதுக்கத்திலிருந்து இரு பிரிவாக பிரிந்து சென்ற பெருஞ்சாலையின் இறுதியில் இடது பக்கத்தில் கடலை நோக்கி ஒரு முகமும் நகர் பெரு முற்றத்தை நோக்கி மறுமுகமும் கொண்டு வெண்சுண்ணம் பூசப்பட்ட மரச்சுவர்கள் கடல் துமி நனைத்து காலை ஒளியில் மின்னிக் கொண்டிருக்க ஏழுமாடங்கள் கொண்டு ஓங்கி நின்றிருந்தது ஜாம்பவதியின் அரண்மனை. அதன் முகப்பில் கரிய பெருங்கைகளை மல்லிட அழைப்பதுபோல் விரித்து எரியும் செவ்விழிகளுடன் நின்றிருக்கும் கரடியின் மரச்சிலை அமைந்திருந்தது. மாளிகையின் மும்மாடங்களின் மீது நடுவே துவாரகையின் கருடக் கொடியும் வலப்பக்கம் கரடித்தலை பொறிக்கப்பட்ட ஜாம்பவர் குலக் கொடியும் இடப்பக்கம் யாதவர்களின் பன்னிரு குலங்களுக்குப் பொதுவான கன்று உண்ணும் பசு பொறிக்கப்பட்ட கொடியும் பறந்து கொண்டிருந்தன.

சாத்யகி தன் குதிரையை இழுத்து நிறுத்தி சற்று திரும்பி திருஷ்டத்யும்னனிடம் ”தங்களை மட்டும் சந்திக்கவே ஜாம்பவ அரசியின் அழைப்பு. இவ்வெல்லைக்கப்பால் தாங்களே செல்லவேண்டியதுதான்” என்றான். ”அரசமுறையின்றி சந்திக்கலாகாதா என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். “சந்திக்கலாம், இங்கு யாதவ அரசி மட்டுமே முறைமைகளை முழுமையாக பேணுபவர். ஆனால் ஜாம்பவ குலத்தரசியை சந்தித்தபின் ஏன் சந்தித்தோம் என்பதை யாதவ அரசியின் அமைச்சர்களிடம் தனித்தனியாக விளக்குவதற்குள் நம் சொற்களெல்லாம் ஒழிந்துவிடும். அதைவிட எங்கும் முறைமையை பேணுவதே உகந்தது” என்றான்.

அவன் இயல்பாகச் சொல்வது போலிருந்தாலும் குரலிலிருந்த இளநகையை உணர்ந்து திருஷ்டத்யும்னன் புன்னகைத்து, “சரி. மீண்டு வரும்போது பார்ப்போம்” என்று சொல்லி புரவியை தட்டினான். அவர்களை முன்னரே கண்டு எழுந்து காத்து நின்ற முதற் காவல்கோட்டத்திலிருந்த யாதவ வீரர்கள் அவனை நோக்கி வந்து தலை வணங்கினர். கரிய பேருடலுடன் இருந்த காவலர் தலைவன் அருகே வந்து வெடிக்குரலில் “வருக பாஞ்சால இளவரசே, அரசி தங்களை காத்திருக்கிறார்” என்றபோது திருஷ்டத்யும்னன் சற்று திடுக்கிட்டான்.

“எங்கள் அரசி தங்கள் வருகையை உடனே அறிவிக்கும்படி சொன்னார். ஆகவேதான் தாங்கள் வந்ததுமே முரசறைந்தோம். இப்போது அரசி அறிந்திருப்பார்” என அவன் கைகாட்டி அழைத்துச் சென்றான். “இந்த வழியே செல்லவேண்டும்… அங்கே இன்னொரு காவல்கோட்டம் உள்ளது… இங்கே நல்ல காவல் உண்டு பாஞ்சாலரே.” திருஷ்டத்யும்னன் “நன்று” என்று சொல்லி புன்னகைசெய்தான். “நீர் ஜாம்பவரா?” என்றான். “ஆம், இளவரசே. ஜாம்பவர்குலத்தின் பிங்கல குடியை சேர்ந்தவன். என் குடியினர்தான் அங்கே காட்டை காவல் காப்பவர்கள். அப்படியே இங்கே வந்துவிட்டேன். அவர்கள் யாதவர்கள். நான் அவர்களுக்குத்தலைவன். இங்கே ஜாம்பவர்களே காவலர்தலைவர்களும் அமைச்சர்களும் ஒற்றர்களும்… ஏனென்றால் எங்கள் அரசி ஜாம்பவ குலத்தை சேர்ந்தவர்.”

சினத்துடன் போலவே முகம் சுருங்க கைவீசி உரத்த ஒலியுடன் அவன் பேசினான். “இங்குள்ள வெயில் கடினமானது. அதைவிட இங்குள்ளவர்கள் பேசும் மொழி அச்சுறுத்துவது. நாங்கள் எதைச்செய்தாலும் அது முறைமையல்ல என்கிறார்கள் யாதவர்கள். இந்நகரம் யாதவ அரசியின் ஆட்சியில் உள்ளது என்பதனால் அவர்கள் சொல்வதை எல்லாம் அரசரின் அமைச்சர்கள் ஏற்கிறார்கள். ஆகவேதான் நான் எவரிடமும் எதுவுமே பேசுவதில்லை. ஏனென்றால் பேசப்பேச நாம் முறைமைகளை மீறுகிறோம் என்பதை கண்டடைந்திருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” திருஷ்டத்யும்னன் புன்னகையை அடக்க உதடுகளை இறுக்கியபடி வேறுபக்கம் நோக்கினான்.

இரண்டாவது காவல்கோட்டத்தில் இருந்த காவலர்களும் ஜாம்பவ குலத்தவர்கள் மட்டுமே என திருஷ்டத்யும்னன் உணர்ந்துகொண்டான். யாதவர்களைவிட அரை மடங்கு பெரிய உடலும், நீண்ட வெண்பற்கள் கொண்ட பெரிய வாயும் அமைந்தவர்கள். இருள் நிறம் கொண்டவர்கள். அங்கிருந்த ஜாம்பவ காவல் தலைவனிடம் முதல்காவலர்தலைவன் மிக உரத்த குரலில் “கச்சரே, நீர் சொன்னபடி அதை அனுப்பி வைக்கவில்லை. ஆகவே நாம் பேசியது முடிவுக்கு வந்துவிட்டது. இனி நானும் அனுப்பி வைக்க மாட்டேன்… ஏனென்றால்…” என பேசத்தொடங்க அவன் மேலும் உரக்க “சத்தம் போடாதே… ஓசையிட்டு பேசலாகாதென்பது அரசமுறைமை என்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? சொன்னால் என்ன புரிகிறது உனக்கு? மூடன்” என்றபடி திரும்பி திருஷ்டத்யும்னனிடம் “இந்த ஜாம்பவர்களை இங்கே வைத்து வேலைக்குப்பழக்குவதைப்போல கடினமான பணி ஒன்றும் இல்லை. காட்டுக்கரடிகள் இவர்கள்” என்றபின் அப்பால் சென்ற ஒரு காவலனிடம் “அர்க்கரை வரச்சொல் மூடா” என்று கூச்சலிட்டான். அவன் திரும்பி “அர்க்கர் துயில்கிறாரே” என்று கூவினான். தன் தொடையில் ஓங்கி அறைந்து “எழுப்புடா, அறிவிலியே” என்றான் காவலர்தலைவன். “இங்கே இளவரசர் காத்திருக்கிறார் அல்லவா?”

அர்க்கர் உள்ளிருந்து துயிலில் வீங்கிய இமைகளுடன் மெல்ல நடந்து வந்து அவனிடம் மீண்டும் முத்திரை விரலாழியை கேட்டார். அதை பலமுறை திருப்பித்திருப்பி கூர்ந்து பார்த்தபின் உள்ளே சென்று அங்கிருந்த மேலும் முதிய காவலரிடம் இன்னொரு முறை காட்டி உறுதி செய்து கொண்டு திரும்பி வந்து, “வருக இளவரசே!” என்றார். “பாஞ்சால இளவரசை ஜாம்பவர்குலத்து அரசியின் பொருட்டு வரவேற்கிறோம்” என்று சொல்லும்போதே கொட்டாவி எழ வாயைத் திறந்து பெரிய பற்களும் தொங்கி ஆடிய உள் நாக்கும் தெரிய ஓசையிட்டார். காவலர்தலைவன் “வருக இளவரசே” என அழைத்துச் சென்றான்.

காவலர் தலைவன் “யாதவர்கள் அனைவருமே பார்க்க ஒன்று போல் இருக்கிறீர்கள் இளவரசே” என்றான். “ஆகவே அடையாளங்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப கூர் நோக்குகிறோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “நான் யாதவன் அல்ல” என்றான். “நீங்கள் ஜாம்பவரா? இல்லையே!” என்றான் அவன். திருஷ்டத்யும்னன் ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்தான். “யாதவர்களை நாங்கள் கண்டதுமே அடையாளம் கொள்வோம். அவர்கள் சிறியவர்கள். ஆகவே தங்களுக்கு அறிவு கூடுதல் என எண்ணிக்கொண்டிருப்பார்கள்.” திருஷ்டத்யும்னன் சிரித்துவிட்டான். “ஆம், ஆனால் அவ்வண்ணம் எண்ணாத வேறு வகை யாதவன் நான்” என்றான்.

அரண்மனையின் பிறை வடிவ பெருமுற்றத்தில் நான்கு பொலனணித் தேர்களும் மூன்று பல்லக்குகளும் நின்றிருந்தன. தேர்களுக்கான வெண்புரவிகள் அப்பால் அரண்மனையின் நிழல் விழுந்த பகுதியில் கடிவாளங்கள் முதுகின்மேல் போடப்பட்டிருக்க சேணம் அணிந்து நின்று தலையாட்டி மணியோசை எழுப்பியபடி முகத்தில் கட்டப்பட்ட தோல் பைகளிலிருந்து  கொள் தின்று கொண்டிருந்தன. பல்லக்குத்தூக்கிகளும் ஜாம்பவர்களே. அவர்கள் கால்மடித்து அமர்ந்து பாக்கு மென்ற தாடைகளுடன் திரும்பி நோக்கினர். அரண்மனையின் நிழல் சாய்வாக நீண்டு கடல் துமியின் ஈரம் சாய்வாகப் படிந்து சென்ற கல்தரைப் பரப்பைக் கடந்து மறுபக்கம் எழுந்து துணை மாளிகையின் சுவர் மேல் மடிந்து மேலேறி நிற்க அதன் மூன்று கொடி நிழல்களும் படபடத்தன. மாளிகை முகப்பின் ஏழு பெரிய யவனத்தூண்களின் உத்தரம்தாங்கிய மேல்முனையின் மலர் மடிப்பின் விளிம்பில் கன்னங்கள் உப்பிய சிறு குழந்தை தேவர்கள் கைகளில் மலர்கள் பூத்த தளிர்க்கொடிச் சுருள்களுடன் புன்னகைத்தபடி பறந்தமைந்திருந்தனர்.

பன்னிரு நீள்படிகளில் ஏறி முட்டை ஓடு என வெண்சுண்ணத்தால் ஆன முற்றத்தில் தரை மீது நடந்து சென்று அங்கே திறந்திருந்த வாயிலை அடைந்தான். அவனை நோக்கி இரும்புக்குறடுகள் ஒலிக்க குதிரைப்படை மலையிறங்குவது போல வந்த ஏழு காவலர்கள் “பிங்கலரே, உள்ளே அரசி வந்து அமர்ந்துவிட்டார்கள்… இவர்தான் இளவரசரா?” என்று கூச்சலிட்டனர். பிங்கலர் “இவர்தான். நான் காவல்கோட்டம் முதல் துணையாக வருகிறேன். உடன் வந்த இன்னொரு யாதவர் அங்கேயே நின்றுவிட்டார்” என்றபின் திருஷ்டத்யும்னனிடம் “இவர்கள் அரண்மனைக் காவலர்கள். உரக குடியினர்” என்றான். அவர்கள் திருஷ்டத்யும்னனை நோக்கி புன்னகைக்க, தலைவன் “நாங்கள் ஜாம்பவர்குலத்தின் செய்தியாளர்கள்…” என்றான். மறுபக்கம் இருந்த அறைகளில் பெருங்குரலில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். பெருந்தூண்களும் உயர்ந்த வளைமுகட்டுச்சாளரங்களும் உயர்ந்த குவைமாடக்கூரையும் கொண்ட அத்தகைய மாளிகைகள் அமைதி நிறைந்திருப்பதற்கானவை என திருஷ்டத்யும்னன் எண்ணினான்.

“அரசியின் அறை இதுதான்… சற்று பொறுங்கள் இளவரசே” என்றபின் தலைமைக்காவலன் வெண்கலக் கதவை மும்முறை தட்டியதும் அதை ஓசையுடன் திறந்து வெளிவந்த இளம்அமைச்சன் திருஷ்டத்யும்னனைக் கண்டு தலைவணங்கினான். “வருக இளவரசே!” என்று அழைத்து “பாஞ்சால இளவரசர் ஜாம்பவர்களின் அரண்மனைக்குள் வந்தது பெருமையளிக்கிறது. இத்தருணம் வாழ்த்தப்படுவதாக!” என்று முகமன் சொன்னான். ”என் பெயர் சம்புகன். ஜாம்பவ குலத்து கோலக குடியைச் சேர்ந்தவன். மூத்த ஜாம்பவருடைய அமைச்சர் குழுவிலிருந்தேன். இங்கு அரசியின் மூன்றாம் அமைச்சனாக பணியாற்றுகிறேன்.”

“தங்களை முறைமைக்காகவே அரசி சந்திக்க விழைகிறார். தாங்கள் கொண்டுவந்த தூதையும் அதன் விளைவுகளையும் அவர் அறிந்திருக்கிறார். தாங்கள் முறைமைக்குரிய இன் சொற்களை சொல்லலாம். அரசுமுறைச் சொற்களை அமைச்சரிடம் சொல்லவேண்டுமென்பது இங்குள்ள நெறி. தங்கள் அருள்கோருகிறேன்.” திருஷ்டத்யும்னன் அவனுடைய திரண்ட கரடித்தோள்களையும் செவ்வண்ணம் பூசப்பட்ட தோல்பட்டையை சுற்றிச்சுற்றி அமைக்கப்பட்ட தலைப்பாகையையும் அதிலிருந்த சிறிய பொன்னாலான கரடி முத்திரையையும் நோக்கினான். கரடி குலத்துப் பழங்குடிகள் தன் உள்ளத்தில் எழுப்பிய சித்திரத்திற்கு முற்றிலும் மாறாக பிறிதொருவகை அரசும் அமைச்சும் குடியும் கொண்டவர்கள் என எண்ணினான்.

ஜாம்பவ அரசியைப் பற்றி தான் கொண்டிருக்கும் உளச் சித்திரம் அவளைக் கண்டதுமே முழுமையாக மாறப்போகிறது என திருஷ்டத்யும்னன் எண்ணிக் கொண்டான். சம்புகன் “தங்களுக்கு அரை நாழிகை நேரம் இளவரசியால் அளிக்கப்பட்டுள்ளது இளவரசே. முறைப்படி முகமன்கள் சொல்ல வேண்டும் என்பது இங்குள்ள முறைமையாயினும் அரசி அதை நெடுநேரம் கேட்க விரும்புவதில்லை” என்றான். திருஷ்டத்யும்னன், ”இது முறைமை சார் சந்திப்பு மட்டும்தான் சம்புகரே, நான் செய்தியென சொல்வதற்கு ஏதுமில்லை” என்றான். சம்புகன் “வணக்கங்களை தெரிவிப்பதும் செய்தியல்லவா?” என்றான். அவன் விழிகளை ஒருகணம் நோக்கிவிட்டு திரும்பி திருஷ்டத்யும்னன் ”ஆம்” என்றான். இடைநாழியின் இருபக்கமும் திறந்திருந்த அறைகளுக்குள் அமைச்சு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதை கண்டான். ஜாம்பவதிக்கும் ஒற்றர்களும் அவர்களைத் தொகுக்கும் அமைச்சர்களும் கருவூலமும் கருவூலக் காவலர்களும் நிதியாளுநர்களும் இருப்பதை அறிந்தான்.

சிறியதோர் கூடத்திற்குள் அவனை அழைத்துச் சென்று அங்கிருந்த வெண்பட்டு விரித்த பீடத்தில் அமரச் செய்தான் சம்புகன். “இங்கிருங்கள் இளவரசே. நான் அரசியின் ஆணை பெற்று வருகிறேன்” என்று சொல்லி தலைவணங்கி மறுபக்கமிருந்த சிறிய வாசலைத் திறந்து மறைந்தான். சற்று மிகையாகவே அந்த முறைமைகள் உள்ளனவா என்ற எண்ணத்துடன் அச்சிறு கூடத்தின் அமைப்பை நோக்கியபடி திருஷ்டத்யும்னன் காத்திருந்தான். ஏழு நீள்வட்ட வடிவ சாளரங்களால் வானம் உள்ளே வரும்படி கட்டப்பட்டிருந்த நீள்வட்ட வடிவஅறை. திரைச்சீலைகள் முற்றிலும் விலக்கப்பட்டதால் ஏழு சாளரங்கள் வழியாகவும் வெளியே இருந்த கடல் தெரிந்தது. நீல நெளிவு காலை ஒளியில் கண் கூசும்படி மின்னிக் கொண்டிருந்தது. கடல் காற்று உள்ளே சுழன்று அவன் குழலை அள்ளி பறக்கவைத்து ஆடைகளை துடிக்கச்செய்தது. இடக்கையால் மேலாடையை அள்ளி உடலில் சுற்றிக்கொண்டான்.

காலையில் இளமழை இருந்ததனால் காற்றில் நீர்த்துமிகள் கலந்திருந்தன. சில கணங்களுக்குள்ளேயே குளிரத் தொடங்கியது. மெல்லிய ஓசையுடன் வெண்கலக் கதவு திறந்து வந்த சம்புகன், “இளவரசே! தாங்கள் அரசியை சந்திக்கலாம்” என்றான். திருஷ்டத்யும்னன் எழுந்து அவனைத் தொடர சிறு வாயிலைத் திறந்து மறுபக்கம் அழைத்துச் செல்லப்பட்டான். மூன்று பெரிய சாளரங்கள் கடல் வெளியை நோக்கி திறந்திருக்க அவ்வறை ஒளி நிரம்பியதாக இருந்தது. ஆனால் வெளியே இருந்த மரத்தாலான அமைப்பொன்றால் உள்ளே வரும் காற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. சாளரத்தில் போடப்பட்டிருந்த நீலத்திரைச்சீலைகள் மெல்ல நெளிந்து கொண்டிருந்தன. சித்திரச்செதுக்குகள் செறிந்த வெள்ளிச் சட்டம் கொண்ட மையச்சாளரத்தருகே பொன்மலரிருக்கையில் ஜாம்பவதி அமர்ந்திருந்தாள்.

உள்ளே நுழைந்ததுமே திருஷ்டத்யும்னன் தலைவணங்கி “ஜாம்பவ குலத்து அரசிக்கு வணக்கம். துவாரகையின் அரசிக்கு பாஞ்சாலம் தலை வணங்குகிறது. இத்தருணத்தில் என் தந்தையின் பொருட்டும் என் தமையரின் பொருட்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான். ஜாம்பவதியின் கண்களில் கற்ற செய்யுளை நினைவுகூரும் இளஞ்சிறுமியின் பதற்றம் தெரிவதைக்கண்டு திருஷ்டத்யும்னன் தனக்குள் புன்னகைசெய்தான். “பாஞ்சால குலத்திற்கும் தங்களுக்கும் துவாரகையின் வணக்கம். ஜாம்பவ குலமூதாதையர் தங்களை வாழ்த்துக! இங்கு தாங்கள் வந்ததை அவர்கள் எங்களுக்கான பெருமை என கருதுவர்” என்று சொல்லி அமரும்படி கை காட்டினாள். அவன் அப்பீடத்தில் அமர்ந்துகொண்டு ”தங்கள் வாழ்த்துக்களால் என் ஐந்து குலங்களும் பெருமை கொண்டன அரசி” என்றான்.

ஜாம்பவதியின் தோற்றம் அவனை விழிகளென மாறவைத்தது. அவன் கண்ட பெண்களில் அவளுக்கிணையென பெருந்தோற்றம் கொண்டவர் பிறரில்லை என்று எண்ணிக்கொண்டான். அமர்ந்திருக்கையிலேயே அவனது தோள் அளவுக்கு இருந்தது அவளுடல். மல்லர்களுக்குரிய தோள்கள். தசை திரண்ட புயங்கள். யானை மத்தகமென எழுந்த முலைகள் மீது வேப்பிலைச்சரப்பொளி முகபடாமென பரவி ஒசிந்து இறங்கியது. படர்ந்த வட்ட முகத்தில் செதுக்கப்பட்டது போன்ற சிறிய மூக்குக்கு இரு பக்கமும் மலைச்சுனைகளின் ஒளியுடன் நீண்டு விரிந்த எருமை விழிகள். தடித்து மலர்ந்த உதடுகளுக்கு உள்ளே வெண்பற்களின் நுனி நிரை தெரிந்தது. நீண்டு தழைந்த காதுகளில் மலர்க்குழை அணிந்திருந்தாள். கைகளில் சந்தன மரத்தில் கடைந்து பொன் நூல் பின்னப்பட்டு நீலவைரங்கள் பதிக்கப்பட்ட கடையங்களும் தோளில் மணிமின்னிய சந்தனத் தோள்வளைகளும் அணிந்திருந்தாள்.

அவள் முகம் உருண்ட கன்னங்களுடன் அரக்கர்குலத்துக் குழந்தை என எண்ணச்செய்தது. “தாங்கள் கொண்டு வந்த தூதுச் செய்தியையும் அதை யாதவ அரசர் ஏற்றதையும் அறிந்தேன் பாஞ்சாலரே!” என்றாள். அவள் குரலும் சிறுமிகளுக்குரியது போலிருந்தது. “மூத்த அரசியை தாங்கள் சந்தித்ததையும் அறிந்தேன்” என்று சொன்னபோது அவள் குரலில் மிகச்சிறிய மாற்றம் ஒன்று வந்ததோ என அவன் எண்ணினான். ”ஆம். நேற்று பேரரசியை சந்தித்தேன்” என்றான். அவன் எண்ணியதற்கு மாறாக அவள் கண்களில் சிரிப்பு ஒன்று அசையும் குறுவாளின் நுனியின் ஒளியென தெரிந்தது. இதழ்கள் விரிந்தபோது கன்னத்தின் இருபக்கமும் சற்று மடிந்து முகம் மேலும் குழந்தைத்தனம் கொண்டது. “நாளிருப்பதனால் முறையாக எட்டு அரசியரையும் நீங்கள் சந்திக்கலாம்” என்றாள்.

“ஆம்” என்றான் அவன். “சந்திக்க எண்ணியிருக்கிறேன். அதுவும் என் தூதுமுறையில் அடங்குவதே.” ஜாம்பவதி “அம்முறைமையில் சிறுபிழையுமின்றி நோக்குங்கள். எப்பிழைக்கும் எப்படியும் பன்னிரண்டு இடங்களில் நீங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்” என்றாள். திருஷ்டத்யும்னன் விழி தூக்கி அவளை நோக்க இதழ்களை மடித்துக்கொண்டு சிறுமியைப் போல உடல் குலுங்க சிரிக்கத் தொடங்கினாள். சிரிப்பை அடக்க முடியாது கையைவைத்து வாயை பொத்திக்கொண்டாள். திருஷ்டத்யும்னன் சிரித்து “ஆம். இந்நகரே யானை அங்குசத்தை என முறைமையை அஞ்சிக் கொண்டிருக்கிறது” என்றான். அச்சொல் அவளை மீண்டும் சிரிக்க வைக்க, போதும் என்பது போல வலது கையை ஆட்டி இடக்கையால் வாய்பொத்தி சிரித்து குலுங்கினாள். சிரிப்பில் முகம் அனல்பட்ட கரிய இரும்புக் கலமென உள்சிவப்போடி விரிந்தது.

அவன் அவள் சிரிப்பை அகம் மலர நோக்கியிருந்தான். கீழ்உதட்டை உள்ளே இழுத்துக் கடித்து சிரிப்பை அடக்கியபின் விம்மி வந்த பெருமூச்சுகளுடன் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டாள். கட்டு மீறி மீண்டும் சிரிப்பு எழுந்தது. கொதிக்கும் கலனில் ஆவியென இதழ் விளிம்பு தெறிக்க சிரிப்பு பீரிட ஓசையிட்டு நகைத்தபின் ”மன்னியுங்கள். நான் அப்படித்தான். என்னால் முறைமைகளை முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை. சிரித்துவிடுகிறேன்” என்றாள். திருஷ்டத்யும்னன் சிரித்தபடி ”ஆம் அரசி, முறைமைகளைக் கண்டு சிரிக்கத் தொடங்கினால் அதன் பின் அரசியர் விடிவது முதல் இருள்வது வரை விடாது சிரிக்க முடியும்” என்றான்.

அவனை நோக்கி ஆம் என்று சொல்வதற்குள் மீண்டும் அவளுக்கு சிரிப்பு பீரிட்டு வந்தது. சிரிப்பு உடல் முழுக்க நிகழ்ந்து கொண்டிருந்தது அவளுக்கு. கருங்குழல் கற்றைகள் விழுந்த கன்னத்தில், இறுகிய தடித்த கழுத்தில், நகைகள் அழுந்திய தடம் பதிந்த மார்புப்பரப்பில் இடை வளைவில் எங்கும் சிரிப்பு தேங்கி நின்றது. மெல்ல சிரிப்பு துளித்துச் சொட்டி ஓய மீண்டு வந்து “இந்த துவாரகையை ஒரு நாடகமென கண்டிருப்பீர்” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “நாடகத்துக்குள் நாடகம் என இங்கே நடந்து கொண்டிருக்கிறது. வெளியே பெருங்களியாட்டமெனும் நாடகம், அதற்குள் அரசு சூழ்தலைப் பற்றிய நாடகங்கள், உள்ளே அரசியரின் உளநாடகங்கள்” என்றான்.

“என்ன நாடகம் கண்டீர்?” என ஜாம்பவதி கேட்டாள். “பாமா பரிணயம்” என்றான். “அதுவா?” என்று சிரித்தபடி, ”ஆம், அது அழகிய நாடகம்தான்” என்றாள். “முதல் முறை அதை நான் இளைய யாதவருடன் அமர்ந்து கண்டேன். அவருக்கு அப்பால் யாதவ அரசி அமர்ந்திருந்தாள். இரண்டாவது அங்கத்தில் என்னை அரசர் முன்னரே கைப்பிடித்துவிட்டாரென்ற செய்தியை அறிந்து கத்தியை உருவி இளைய யாதவரை அவள் குத்தப் போகும் இடத்தை விறலி நடித்தபோது நான் சிரித்துவிட்டேன். மறுபக்கமிருந்து அவள் திரும்பி என்னை சினந்து நோக்கினாள்” என்றாள். திருஷ்டத்யும்னன் “அப்போதுகூட வாளை உருவியிருக்கலாம்” என்றான். ஜாம்பவதி “எப்போதும் உருவிய வாள் ஒன்று அவள் ஆடைக்குள் இருக்கிறது” என்றாள். “இளவரசே, ஆனால் இங்கே இளைய யாதவரைவிடவும் எனக்கு அண்மையானவள் அவளே. என் அன்னையென்றே நான் அவளை உணர்கிறேன்.”

திருஷ்டத்யும்னன் “அதையும் இந்நகரெங்கும் கண்டேன்” என்றான். “அனைவரும் பேரரசியை அன்னையென உணர்வதனாலேயே அவரை ஏமாற்றுவதை களியாடலாக கொண்டிருக்கிறார்கள்” என்றான். அவள் “சரியாகச் சொன்னீர்கள்” என்று சிரித்தாள். “துவாரகை அரசி அந்நாடகங்களை விரும்புகிறார். அந்நாடகங்களில் இருந்து தன் நடிப்பை பெற்றுக் கொள்கிறார்.” ஏதோ எண்ணம் எழ சிரித்தபடி “அவள் அரண்மனையின் வாயில்கள் திறப்பதை விட மூடுவதற்கே உகந்தவை என்று ஒரு கவிஞன் எழுதிய அங்கதம் இந்நகரில் அனைவரையும் புன்னகைக்க வைப்பது” என்றாள்.

திருஷ்டத்யும்னன் சிரிக்க “மூடிய கதவுகளுக்கு மறுபக்கம் நின்று இளைய யாதவர் ஒவ்வொரு நாளும் முறையிடுகிறார் என்பார்கள் சூதர்கள். அக்கதவு திறக்கும்போது விடிந்துவிடும். ஆகவே மறுநாளும் தொடரும்” என்றாள். திருஷ்டத்யும்னன் “யாதவ அரசி தாளாமை மிக்கவர்” என்றான். ”இல்லை. அப்படி தன்னை காட்டுகிறாளா?” என்று கேட்டாள் ஜாம்பவதி. திருஷ்டத்யும்னன் அவளை நோக்கியபின் ”தாங்கள் எண்ணுவதை நான் புரிந்து கொள்கிறேன் அரசி!” என்றான்.

“இளையோனே! ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனுக்கு அவன் விரும்பும் ஒன்றை நடித்து பரிசளிக்கிறாள். என் வாயில் கடந்து வரும் இளைய யாதவர் கூழாங்கற்களும் சிறு வில்லும் கொண்டு விளையாட வரும் சிறுவன். அவள் வாயிலைக் கடந்து செல்பவர் காதலுக்காக இறைஞ்சி வாயில் நின்றிருக்கும் தனியர். வைரத்தின் ஒவ்வொரு பட்டையையும் ஒவ்வொருவருக்கென பகிர்ந்தளித்திருக்கிறார் என்று அவரைப் பற்றி சூதர்கள் பாடுவார்கள்” என்றாள்.

அவள் பேசவிழைவதை அவன் உணர்ந்தான். முதலில் அவள் தன்னுடன் பேசுவதில் மகிழ்வதாக எண்ணினான். அவள் விழிகளில் எழுந்தெழுந்து அணைந்த உணர்ச்சிகள் அவள் தன்னுடனேயே பேசிக்கொண்டிருப்பதை காட்டின. இளஞ்சிறுமியர் களிப்பொருட்களை எடுத்து எடுத்து நோக்கி உள்ளே அடுக்குவதைப்போல அவள் தன் ஆழத்துள் இருந்த இளைய யாதவரைப்பற்றி பேச விழைந்தாள். அரைநாழிகை நேரத்தை அமைச்சன் அளந்து அளித்ததைப்பற்றி எண்ணிக்கொண்டதும் அவனுக்கு புன்னகைதான் வந்தது. “நான் இங்கே அமர எப்போதும் விரும்புவேன். இல்லையேல் அந்த அறைக்குள் இதேபோல் ஒரு சாளரம் இருக்கிறது. அங்கே இரு சாளரங்கள் வழியாகவும் இங்குள்ள பெரிய வாயில் தெரியும்.”

“வியப்புக்குரியது அது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “வானத்தை அள்ளி மண்ணில் இறக்கும் வாயில்.” அவள் உதட்டை அழுத்தி “எனக்கு அது வாயில் என்றே தோன்றவில்லை. எங்கள் குலமூத்தார் ஆலயம் காளநீலத்தின் உள்ளே உள்ளது. அங்கே முன்பு ராகவராமன் வந்து அமர்ந்திருந்த பெரிய கடம்பமரம் இருந்தது என்கிறார்கள். அது பொன்னால் ஆன அடிமரம் கொண்டது. நான் இளம்பெண்ணாக இருக்கையில் ஒரு கனவு கண்டேன். மண்ணுக்குள் இருந்து ஒரு பொன்வேர் எழுந்து வளைந்து நின்றிருப்பதாக. புதைந்து கிடக்கும் பொன்மரம் வேர் நீட்டி தளிர்விடுவதைக் கண்டேன். அதை நான் எவரிடமும் சொன்னதில்லை. இங்கு வந்து இந்தப் பெருவாயிலை நோக்கியதும் என் அகம் திடுக்கிட்டது. நான் பார்த்த வேர்வளைவு இதுதான்” என்றாள்.

அவள் விழிகள் வேறெங்கோ இருந்து மீண்டுவந்து அவனை நோக்கின. “என் கனவில் நான் யானையாக இருந்து அந்த வேரை நோக்கினேன்” என்றாள். “இந்தச் சாளரத்தருகே அமர்ந்து நோக்கும்போதும் என்னை பிடியாக உணர்வேன்.” உடனே அனைத்தையும் கலைத்து மணிக்கொத்துகள் குலுங்குவது போல சிரித்துக்கொண்டு “என் உடலைக்கண்டவர்கள் பிடியானை என்றே சொல்கிறார்கள். இளையயாதவர் மணந்த எட்டு திருமகள்களில் ஒருத்தியாக என்னைப்பற்றி பாடும் பாணர்கள் என்னை கஜலட்சுமி என்று பாடுவதுண்டு” என்றாள்.

திருஷ்டத்யும்னன் “தங்களை இளைய யாதவர் மணந்த கதை இங்கே நடிக்கப்படுகிறதா அரசி?” என்றான். “ஆம், நடிக்கப்படுகின்றது. அருகிருந்து பார்த்தவர்கள் போல பாடுகிறார்கள். நான் பார்த்திருக்கவே அவை வளர்ந்து மாறுகின்றன. யாரிவள் என என்னையே நான் வியந்து பார்க்கிறேன்” என்றாள். திருஷ்டத்யும்னன் “அரசகுடியினர் சூதர்பாடலில்தான் முழுமைகொள்ளவேண்டும்” என்றான். “ஆம், நான் இங்கே ராணித்தேனீ போல கூட்டுக்குள் இருக்கிறேன். நகரெங்கும் என்னிலிருந்து பிறந்த தேனீக்கள் போல பலநூறு ஜாம்பவதிகள் சுழன்றுகொண்டிருக்கிறார்கள்.”

“ஜாம்பவர் குலத்தில் இளைய யாதவர் பெண்கொண்டதை பாஞ்சாலத்தில் பெருவியப்புடன் நோக்கினர்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஜாம்பவர் பிறமானுடருடன் உறவற்றவர்கள். வெல்லவோ அணுகவோ முடியாதவர்கள். அது இளைய யாதவர் கொண்ட அரசுசூழ்தல் என்றே எங்கள் அவையில் பேசப்பட்டது.” ஜாம்பவதி “அப்படித்தான் எங்கும் பேசப்படுகிறது. ஆனால் அது அவர் எனக்களித்த பரிசு என்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் அவரது காதல்விழிகளைத்தான் நான் கண்டேன்” என்றாள்.

முந்தைய கட்டுரைவாழ்க்கையின் விசுவரூபம்
அடுத்த கட்டுரைதேவியர் உடல்கள்