அன்புள்ள ஜெயமோகன் சார்,
ஆரோக்கிய நிகேதனம் இப்போதுதான் படித்து முடித்தேன், மொழியாக்கத்தில் இருந்த சில குறைபாடுகள் தவிர, இது எனக்கு மிகவும் பிடித்த, மனதுக்கு அருகிலமர்ந்த நாவல், நம் இந்திய மரபில் மரணத்தை எதிர்கொள்வதற்காக, ஒரு வித மனோ நிலையை நாம் ஏற்படுத்தி வைத்திருந்தோம், அதற்காக காத்திருத்தல், கனிந்தவர்கள் அதை அக மகிழ்வோடு ஏற்றுகொள்ளுதல், அந்த பயணத்திற்கு தன்னை தயார் செய்தல், என்று இங்கே, பிறப்பு போலவே மரணமும் பெரும் நிகழ்வாகவே இருந்திருக்கிறது, என்பதை இந்த நாவல் முழுவதும் பேசுகிறது.
‘ மகா சாயர்”கலான மஷாய் குடும்பத்தினர், உப வேதமான , ஆயுர் வேதத்தில், தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து, கிராமத்து ஜனங்களுக்கு சிகிச்சை அளிப்பதையும்,தியான நிலையில் அடைந்த அமைதியான மனோ நிலையை நாடி பார்ப்பதிலும், நாடியின் துடிப்பின் மூலம், அந்த வியாதியின் வீரியம், முதல் அந்த நோயாளியின் மரணம் வரை அறிந்து, அறிவிப்பதிலும் மஷாய்கள் ஆத்மார்த்தமான சேவையையே செய்துவந்துள்ளனர்.
புதிதாக வரும் அலோபதி டாக்டர் பிரத்யோத்திற்கு ஆரம்பம் முதலே, இந்த, பழைய வைத்திய முறையின் மீது வெறுப்பும், ஜீவன் மஷாய் மீது, காழ்ப்பும் ஏற்பட, ஒரு தருணத்தில், வயதான, ஊரே மதிக்கும் ஜீவன் மஷாய்யை திட்டிவிடுகிறார்.
ஒரு சில மனிதர்கள் தங்கள் செய்யும் தொழில் சார்ந்து, அதில் அவர்கள் கரைத்து ஊற்றும் ஆத்மா சார்ந்தும் , மிகப்பெரிய மரியாதையை யும், மென்மையான மனதையும் பெற்றுவிடுகின்றனர், அதற்கு இழுக்கு வரும்பொழுது, முழுவதுமாக உடைந்து விடுகின்றனர் ,
ஜீவன் மஷாயும், உடைந்து போய், தன் நாடி பார்க்கும் மிக அரிய கலையை விட்டு விடுகிறார், மனம் புண் பட்டிருந்தாலும் , அகம் விரும்பும், அடுத்தவர்க்கான சேவை எனும் அற்புத கலையை மீண்டும் ஒரு மழை நாளில், ஒரு கட்டாயத்தின் பேரில் தொடங்க, அது பல்கி பரவி, மீண்டும் சுறுசுறுப்பாக அடுத்தவர்களுக்காக, இயங்க ஆரம்பித்து விடுகிறார்,
அவர் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் பல்வேறு மனிதர்களின் பட்டியல் மிக சுவாரஷ்யம் வாய்ந்தது.
தின்று, தின்று மரணத்தை தழுவிய தாந்து கோஷால், தனக்கு மரணம் வேண்டாம் என்று மன்றாடும் மனிதன்
மரணத்தை அறிந்து கங்கைக்கரை நோக்கி சென்று அமர்ந்த நிலையிலும்,அமைதியாக தன் மகனுக்கு, உபதேசம் செய்யும் ஜீவனின் தந்தை ஜகத் மஷாய்.
தனக்கு நோய் என்று தெரிந்ததும், ஆற்றின் ஓரமாக குடில் அமைத்து, ஒவ்வொரு நொடியும் தைரியமாக காத்திருக்கும் படகோட்டும் வீரன் ராணா பாடக்,
பிரத்யோத் டாக்டரின் மாமியாரின் அம்மாவான, அந்த கிழவி சாக விரும்பாமல், எனக்கு சிகிச்சை செய் என்று கதறும் கிழவி ,
முன்னாள் காதலி மஞ்சரி
என்று ஒரு நீளமான பட்டியல்.
ஒரு கட்டத்தில் இது ஆயுர்வேதத்திற்கும் , அலோபதிக்கும் நடக்கும் சண்டையோ என்று தோன்றும் அளவிற்கு, மஷாயின் நாடி ஞானம் துல்லியமாக நடந்து, மனிதர்கள் இறப்பதும், பிரமோத்தின் அலோபதி மருத்துவ முறை மனிதர்களை குணப்படுத்துவதும் என இரு முனைப்போர் தான்.
ஆனால் ஜீவன் மஷாய் எனும் மருத்துவருக்கு உள்ளே இருக்கும் ”மகாசாயர்”, அத்தனை உள்ளங்களையும் வென்று விடுகிறார். பிரத்யோத்தின் மனைவி மஞ்சுவிற்கு ஜீவனை நாடி பார்க்க அழைக்கும் தருணத்தில், பிரமோத்தின் அத்தனை தன்முனைப்பும் உடைந்து, அந்த மனிதர் முன் சரண் அடைகிறான். அவரிடம் தனக்கு இந்த நாடி ஞானத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்கும் சாதாரண மாணவனாக நிற்கும் பிரத்யோத் டாக்டர், ஜீவன் மஷாயை இன்னும் ஒரு படி மேலே தூக்கி படிக்கிறது.
தன் நாடியை தானே பார்த்துக்கொள்ளும் ஜீவன், டாக்டர் பிரத்யோத்திடம் இந்த மரணத்துக்கு நான் ஆதங்கம் கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மரணத்தை நம் மரபு மிக சாதரணமாக ஏற்றுக்கொண்டுள்ளதா ?
அப்படியெனில் மார்க்கண்டேயன் போன்ற கதைகள் இங்கே ஏன், நிலவுகிறது?
நவீன சிகிச்சை முறைகள் ,மூலம் நாம் மரணத்தை எதிரியாக பார்க்க விழைகிறோமா ?
இப்படிப் பல கேள்விகளை எனக்குள் ஏற்படுத்திய படைப்பு.
பரிந்துரைத்த உங்களுக்கு நன்றி சார்.
அன்புடன்
சௌந்தர் .G