பகுதி ஆறு : மணிமருள் மலர் – 3
திருஷ்டத்யும்னன் தன் அறைக்குச் சென்றதுமே அனைத்துடலும் தளர மஞ்சத்தில் படுத்து அக்கணமே நீள்துயிலில் ஆழ்ந்தான். விழிகளுக்குள் வண்ணங்கள் கொப்பளித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து விழித்துக் கொண்டபோது அவன் அறைக்குள் சிற்றகல் சுடர் மணியொளி விட்டுக் கொண்டிருந்தது. அந்த வண்ணங்களை பெண்களாக எண்ணியதை உணர்ந்து புன்னகையுடன் எழுந்து கதவைத்திறந்து இடைநாழியை நோக்கினான். அவனுக்காகக் காத்திருந்த தூதன் வந்து வணங்கி “பாஞ்சாலரை வணங்குகிறேன். யாதவ அரசி தங்களை இரவில் அரசியர் மாடத்தில் சந்திக்க விழைவதாக செய்தி வந்துள்ளது” என்றான்.
உடலில் கூடிய விரைவுடன் திருஷ்டத்யும்னன் திரும்பி அறைக்குள் ஓடி ஏவலரை அழைத்து நீராட்டுக்கு ஒருங்கு செய்யுமாறு ஆணையிட்டான். விரைந்து நீராடி ஆடைகளை அணிந்து அரசதோற்றத்தில் வெளிவந்து முற்றத்தில் நின்றபோது அவனுக்கான தேர் அங்கு சித்தமாக இருந்தது. அதிலிருந்த தேரோட்டி, “அமருங்கள் பாஞ்சாலரே! தங்களுக்காக அரசியார் காத்திருக்கிறார்” என்றான். அவன் ஏறிக்கொண்டதும் இருபக்கமும் ஓங்கி நின்ற ஏழடுக்கு மாளிகைகளை ஊடுருவிச்சென்ற கல்பதிக்கப்பட்ட தரையில் சகடங்கள் ஒலிக்க தேர் சென்றது. சாளரங்கள் ஒவ்வொன்றாக ஒளிகொண்டு விழிகளாகத் தொடங்கின. விளக்கொளிகள் நீண்டு செவ்விரிப்புகளாக பாதையில் கிடந்தன. அந்திக்குரிய ஓசைகள் எழுந்து சூழ்ந்தன. மரங்களில் சேக்கேறிய பறவைகளின் குரல்களுடன் ஆலயமணிகளின் ஒலிகளும் இசைக்கூடங்களின் யாழிசையும் முழவிசையும் கலந்த செவிமுழக்கம்.
தேர் வளைந்து அரசியர் மாடத்தின் முன்னால் நின்றது. பச்சைத்தலைப்பாகையில் அந்தகக் குலத்தின் முத்திரைப்பொன் சூடிய இளம் அமைச்சன் அருகே வந்து வணங்கி “வருக பாஞ்சாலரே! என் பெயர் கலிகன். அரசியார் தங்களை எதிர்நோக்கி அமர்ந்திருக்கிறார்” என்றான். அவன் இறங்கியதும் அங்கு நின்றிருந்த வீரர்கள் அவனையும் பாஞ்சால குலத்தையும் வாழ்த்தி குரலெழுப்பினர். கலிகன் ”தங்கள் தூதோலை அரசியிடம் வந்தது. பரிசில் பொருட்களை அரசி பார்வையிட்டார். தங்களிடம் இந்திரபிரஸ்தத்தைப் பற்றியும் தங்கள் தமக்கையார் குறித்தும் பேச விழைகிறார்” என்றான். அக்குறிப்புகூட சத்யபாமாவின் ஆணைப்படியே அளிக்கப்படுகிறதென உணர்ந்த திருஷ்டத்யும்னன் “அது என் நல்லூழ்” என்றான்.
“அரசி மன்று வந்து அமர்ந்ததும் அழைப்புவரும் இளவரசே, வருக ” என்றான் கலிகன். உள்ளூர ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று மிகச் சரியாக பொருத்தப்பட்டிருப்பதை அவன் உணர்ந்தான். ஒவ்வொரு கணமும் அரசுசூழ்தலையே எண்ணுபவரால் மட்டுமே அவ்வாறு செயல்களை ஒன்றுடன் ஒன்று பின்னி பெருவலையென விரிக்கமுடியும். ஓர் அரண்மனையின் எளிய செயல்களில் உள்ள ஒழுங்கு மையத்தில் இருப்பவரின் திறனை காட்டுகிறது. வலையின் ஒரு முடிச்சு சிலந்தி எப்படிப்பட்டதென்பதற்குச் சான்று.
இளைய யாதவரின் அரண்மனை அளவுக்கே உயர்ந்து வளைந்திருந்த கூரைக்குக் கீழே யவனர்களால் அமைக்கப்பட்ட உருண்ட சுதைத்தூண்களால் தாங்கப்பட்ட நீண்ட இடைநாழியின் ஒருபக்கம் திறந்த சதுரமுற்றமும் மறுபக்கம் வளைந்த மேல் முகடு கொண்ட பெரிய வாயில்களும் பட்டுத் திரைச்சீலைகள் தொங்கி அசையும் பெருஞ்சாளரங்களும் இருந்தன. அறைகளுக்குள் மானுடர் ஓசையில்லாது வண்ணநிழல்களென செயலாற்றினர். திரையசையும் ஒலி என மந்தணக்குரலில் உரையாடினர்.
அங்கு காவல் நின்ற அனைவருமே தோலாலான காலணிகள் அணிந்து ஓசையின்றி நடப்பதை அவன் கண்டான். அவனுடைய இரும்புக் குறடின் ஒலி மட்டுமே அங்கே ஒலித்தது. அடி வைக்க அடி வைக்க அந்த ஒலி பெருகி அரண்மனையின் பல்வேறு அறைகளுக்குள் எதிரொலித்தது. திறந்திருந்த பெருவாயில்கள் ஒவ்வொன்றும் அவ்வொலியை நோக்கி வாய் திறந்து கவ்விக் கொள்ள வருவதாகத் தோன்றியது. ஒரு கணம் தயங்கியபின் அவன் தன் குறடைக் கழற்றி அங்கிருந்த தூண் ஒன்றின் அருகே வைத்து திரும்பி ஏவலனிடம் “எனக்கு ஒரு மென்தோல் காலணி கொணர்க!” என்றான்.
அவனைப் புரிந்து கொண்ட கலிகன் ”இக்கணமே இளவரசே!” என்று சொல்லி விரைந்து சென்றான். அவன் ஓசையற்ற பலநூறுபேர் ஒவ்வொரு கணமும் உள்ளும் புறமும் வந்துசென்று செயலாற்றிக்கொண்டிருந்த அந்த அறைகள் கரையான் புற்றுக்கள் போன்றிருப்பதாக எண்ணிக்கொண்டு நின்றிருந்தான். கலிகன் கொண்டுவந்த காலணிகளை அணிந்தபின் அவ்வரண்மனைக்குள் தானும் ஒரு கரையானாக கலந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். உள்ளடுக்குகளில் கரவறைகள். மந்தணப்பாதைகள். எங்கோ ஒரு அரசி. அத்தனை பேரையும் பெற்று நிறைத்திட்டவள்.
பெரிய வெண்கலக் கதவுக்கு முன் அவர்கள் சென்று சேர்ந்தபோது கலிகன் வணங்கி ”இதற்குமேல் தாங்களே செல்லுங்கள் இளவரசே! என் அலுவல் இங்கு நிற்பது” என்றான். வாயில் காவலனிடம் அவனுடைய முத்திரை கொண்ட விரலாழியைக் காட்டி “பாஞ்சால இளவரசர்” என்றான். “சற்று நேரம் பொறுங்கள் இளவரசே” என அவன் உள்ளே சென்றான்.
அவன் உள்ளே சென்று மீள்வது வரை அந்தக் கதவில் பொறிக்கப்பட்டிருந்த சிற்பங்களை நோக்கி திருஷ்டத்யும்னன் நின்றான். யவனச் சிற்பியரால் செதுக்கி வார்க்கப்பட்ட அந்தக் கதவு ஒன்றுடன் ஒன்று சரியாக உடல் பொருந்தி படலமென பரவிய பலநூறு புடைப்புச் சிற்பங்களால் ஆனதாக இருந்தது. அவன் நோக்குவதைக் கண்ட கலிகன் ”இது யவனர்களின் பிரமோதியன் என்னும் தெய்வம் விண்ணிலிருந்து முதல் நெருப்பைக் கொண்டு வந்த கதையைச் சொல்கிறது. இறைவிருப்புக்கு மாறாக மானுடரின் நன்மைக்கென அவன் நெருப்பை விண்ணிலிருந்து மண்ணுக்கு இறக்கிவந்தான். அவர்களுக்கு நெருப்பென்பது மானுடவிழைவின் அடையாளம்.” என்றான். அதைக் கேட்டதுமே ஒவ்வொரு சிற்பமும் பொருள்கொண்டு உயிர் பெற்றதைப் போல ஆவதை அவன் கண்டான். பதிக்கப்பட்ட செந்நிற வைரமென நெருப்பை எடுத்துக் கொண்டு முகில்களில் பாய்ந்து இறங்கும் பிரமோதியனை சற்று குனிந்து அவன் நோக்கினான். அந்த முகத்தில் பேருவகையுடன் சற்று அச்சத்தையும் கலக்க முடிந்த அச்சிற்பியின் கற்பனைத் திறனை வியந்தான்.
ஓசையின்றி வெண்கல அச்சில் சுழன்ற கதவு திறந்து வெளிவந்த காவலன் “இவ்வழி பாஞ்சாலரே!” என்றான். திரும்பி சிற்றமைச்சரிடம் தலையசைத்துவிட்டு திறந்த சிறு வாயிலினூடாக திருஷ்டத்யும்னன் உள்ளே சென்றான். ஓர் அறைக்குள் நுழையப்போவதாக அவன் எண்ணியிருந்தான். உள்ளிருந்தது ஒரு பெரும் பூந்தோட்டம் என்பதை அறிந்ததும் கால்தயங்கி நின்றுவிட்டான். ஒன்றுடன் ஒன்று கலந்த பலவகையான மலர்மணங்கள் குளிர்காற்றென வந்து அவனைச் சூழ்ந்தன.
அவனை நோக்கி வந்த சேடி ஒருத்தி வணங்கி “வருக பாஞ்சாலரே!” என்றாள். அவன் மலர்களைத் தொட்டு அலையும் நோக்கை நேர்செலுத்த முடியாமல் செடிகளின் நடுவே போடப்பட்ட கற்பாதைவழியாக மெல்ல நடந்தான். சோலை நடுவே மலர் சூழ்ந்த கொடியிருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த சத்யபாமையை கண்டதும் சீரான அரசமுறை நடையுடன் அருகே சென்று வணங்கி “துவாரகையின் அரசியை வணங்குகிறேன். தங்கள் பாதங்கள் என் பார்வையில் பட்ட இத்தருணம் என் குடிக்கு பெருமையளிப்பதாக!” என்றான்.
புன்னகையுடன் “இளைய பாஞ்சாலரை சந்திப்பது எனக்கும் இந்நகருக்கும் மகிழ்வளிப்பது. துவாரகை தங்களை வணங்குகிறது. அமர்க!” என்று சத்யபாமா சொன்னாள். அவள் நீலநிற நூல்பூக்கள் பின்னப்பட்ட பீதர்நாட்டு வெண்பட்டாடை அணிந்து, இளங்குருத்துக்கொடி போன்ற மெல்லிய மணிமுடியை தலையில் சூடியிருந்தாள். அதில் தளிரிலைகள் போல பொற்தகடுகள் விரிந்திருக்க நடுவே மலர்ந்த செம்மலர்கள் போல பவளங்களும் வைரங்களும் பதிக்கப்பட்டிருந்தன. காதுகளில் சுடர்ந்த செங்கனல் கற்களும், தோள்சரிந்து முலைமேல் குழைந்த மணியாரமும் கைகளில் அணிந்திருந்த வெண்முத்து வளையல்களும் அருகிருந்த அகல்சுடர்கொத்தின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன.
அணிகள் அரசியரை உருவாக்குவதில்லை அரசியரால் அவை பொருள் கொள்கின்றன என்று எண்ணிக் கொண்டான். உடலெங்கும் சுடர் விழிகள் திறந்தவள் போலிருந்தாள் பாமா. அத்தனை விழிகள் அவனை நோக்கி கூர்ந்திருக்க அகல்சுடரின் கனல் படர்ந்த அவள் விழிகளை நோக்கி பேசுவது எளிதல்ல என்று தோன்றியது. அவள் புன்னகையுடன் “இந்திரப்பிரஸ்தத்துக்காக செல்வத்தை நாடி தாங்கள் வந்திருக்கிறீர்கள் என்றும், அச்செல்வம் அரசரால் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் அறிந்தேன். அதற்கு மேலாக எனது தனிக் கொடையாகவும் செல்வத்தை அளிக்க நினைக்கிறேன். தங்கள் உடன் பிறந்தவளிடம் என் வாழ்த்துக்களைச் சொல்லி அதை கொடுங்கள். பாஞ்சால இளவரசி அமைக்கவிருக்கும் இந்திரப்பெருநகரில் என்னுடையதென ஓரிரு மாளிகைகள் அமையட்டும்” என்றாள். ”அது என் நல்லூழ் அரசி!” என்றான் திருஷ்டத்யும்னன்.
“அந்நகரின் வரைபடத்தை வரவழைத்து பார்த்தேன். துவாரகை போலவே சுருளாக குன்று மேல் ஏறும் பெருநகரம். அழகியது. அருகிருக்கும் யமுனை அதை மேலும் அழகாக்குகிறது” என்றாள் சத்யபாமா. திருஷ்டத்யும்னன் “யமுனையே ஆயினும் இங்குள்ள பெருங்கடலுக்கு அது நிகராகாது” என்றான். “கடலெனும் நீலக்குழலில் சூடப்பட்ட மலர் போலிருக்கிறது இந்நகர். இதன் பேரழகை நான் எங்கும் கண்டதில்லை.”
சத்யபாமா புன்னகையுடன் ”இங்கு நான் உணர்ந்தது ஒன்றுண்டு பாஞ்சாலரே. பெருவணிகம் நிகழாத நகரம் வாழ்வதில்லை. ஆனால் நகரின் அனைத்து ஒழுங்குகளையும் அழகையும் பெருவணிகம் ஒவ்வொரு கணமும் அழித்துக் கொண்டிருக்கும். பெருவணிகர் அளிக்கும் செல்வத்தைக் கொண்டு அப்பெருவணிகத்தை கட்டுப்படுத்துவதே நகர் ஆளுதலின் கலை. இங்கே உலக வணிகர் நாளும் ஒருங்குகூடுவதனாலேயே ஒவ்வொரு நாளும் நகரை சீர்படுத்த வேண்டியுள்ளது” என்றாள். திருஷ்டத்யும்னன் “நான் சென்ற நகரங்களில் இந்நகரளவுக்கு முழுமை கூடிய பிறிதொன்றில்லை” என்றான். “ஒவ்வொரு நாளும் மீட்டப்படும் யாழ் போலிருக்கிறது இது. மீட்டும் மெல்விரல்களை இதோ இங்கு கண்டேன்.”
அவனுடைய புகழ் மொழிகளை அவள் மேலும் கேட்க விரும்பியதை விழிகள் காட்டின. அந்நகரைக்குறித்த பெருமிதம் அவளுடைய இயல்பென்று அவன் அறிந்தான். குழந்தையை அன்னையிடம் புகழ்வதுபோல என்று தோன்றியது. “இந்நகர் பாரத வர்ஷத்தில் இணையற்றது அரசி. ஒவ்வொரு அணுவிலும் உயிர்த்துடிப்புள்ளது. எந்நகரிலும் வாழும் பகுதிகளும் அழிந்த பகுதிகளும் இருக்கும். உயிருள்ள இடங்களும் வெறும்சடலத்துண்டுகளும் கொண்டுதான் நகரங்கள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருக்கும் இடங்கள் என்றே இங்குள்ள அத்தனை மூலைகளையும் வளைவுகளையும் நான் கண்டேன்” என்றான்.
“பாரதவர்ஷத்தில் இதற்கு இணையாக முழுமையாக ஆளப்படும் சில நகரங்கள் உள்ளன என்றறிந்துள்ளேன். இளமையில் ஒரு முறை ஜராசந்தரின் ராஜகிருகத்திற்கு சென்றுளேன். அது அவரது விழியாலும் சொல்லாலும் முழுதாளப்படும் பெரு நகரம். ஆனால் அந்தக்கட்டுப்பாட்டினாலேயே தன் உயிர்த்துடிப்பை இழந்து விசையால் இயக்கப்படும் பெரும்பொறி போல இருந்தது. அஸ்தினபுரி எனக்கு தொன்மையான ஒரு முரசு எனத் தோன்றியது. இந்நகரோ நதிப்பெருக்கருகே செழித்த காடு போல் உள்ளது. கட்டற்றதென்று முதற் கணமும் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதென்று மறுகணமும் தோன்றச் செய்யும் பெரும் முழுமை இதற்கு கை கூடியுள்ளது” என்றான்.
அவன் சொல்லச் சொல்ல அவள் முகம் விரிந்துகொண்டே சென்றது. “இந்நகர் தங்களால் ஆளப்படுவதென்பதை ஒவ்வொரு தெருவிலும் காண முடிந்தது யாதவ அரசி” என்றான். “நகராளும் காவலர் வாளேந்தும் மிடுக்கு கொண்டிருக்கவில்லை. இசைக்கோல் ஏந்தும் பணிவு கொண்டிருக்கின்றனர். முகப்புகள் அளவுக்கே புழக்கடைகளும் தூய்மையும் அழகும் கொண்டிருக்கின்றன. இங்குள்ள கொடிகளை வந்ததுமே பார்த்தேன். ஒரு கொடியும் ஓரம் கிழிந்ததோ பழையதோ கடற்காற்றில் பறந்தும் அழுக்கானதோ ஆக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் கொடிகளைக்கூட நோக்கி சீர்படுத்தும் ஒரு சித்தம் இங்குள்ளது என்றுணர்ந்தேன். இது கொற்றவையால் ஆளப்படும் திரிபுரம் அல்ல. திருமகளால் ஆளப்படும் ஸ்ரீபுரம்” என்றான்.
புகழ் மொழி அவளை மேலும் மேலும் மலரச் செய்து இதழ்களும் விழிகளும் பூக்க வைத்தது. நாணமென உடல் மெல்ல ஒல்க, மெல்ல சிரித்து “ஆம். இங்கு வந்த ஒவ்வொரு யவனரும் சோனகரும் பீதரும் அவ்வாறே சொல்லியுள்ளனர். உலகில் இந்நகருக்கிணையான பிறிதொன்றில்லை என்று நானும் அறிவேன்” என்றாள். “இது திருமகள் கொலுவீற்றிருக்கும் செம்மலர் என்றொரு சூதன் சொல்லக் கேட்டேன். நானும் அவ்வண்ணமே உணர்ந்தேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.
சத்யபாமா தன் குழலில் சரிந்த முத்தாரத்தை சீர்ப்படுத்தி காதுக்கு முன் செருகியபடி “இளைய யாதவர் இன்று இங்கிருந்து கிளம்புகிறார் என்றனர். அவர் இளைய பாண்டவருடன் அஸ்தினபுரி செல்வதாக சொன்னார்” என்றாள். அவள் விழிகள் மாறிவிட்டிருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவனுடைய புகழ் மொழிகளை உவகையுடன் அள்ளிக்கொண்ட அவள் உள்ளம் உடனே அதைக் கடந்து எச்சரிக்கை கொண்டுவிட்டது என்றறிந்தான். எளிய பொதுச் சொற்கள் வழியாக மீண்டு வருகிறாள். மெல்ல அவள் கூற விழைவதை நோக்கி செல்வாள். அவள் அரசுசூழ்கலை அறிந்தவள் அல்ல. ஆகவேதான் அந்த மாற்றம் அத்தனை தெளிவாக வெளித்தெரிகிறது.
மேலும் அவளே பேசட்டும் என அவன் காத்திருந்தான். “இந்திரப்பிரஸ்தத்தின் அமைப்பையும் ஒழுங்கையும் கண்டு திரும்புவதாக இளைய யாதவர் சொன்னார். ஆனால் முன்னரே அவர் அதை அறிவார்” என்றாள். திருஷ்டத்யும்னன்.”ஆம் அவரறியாதது இல்லை” என்றான். “அதன் வரைபடத்தை அவர் இங்கு வைத்திருந்தார்” என்றாள். வீண்சொற்கள் வழியாக உரையாடல் செல்வதை உணர்ந்தான். தொலை தூரத்தில் அருவி ஒலி கேட்கும் உணர்ச்சியுடன் படகில் செல்வது போன்று எச்சரிக்கையுடன் அமர்ந்திருந்தான்.
“சததன்வா படைமேற்கொள்ளக் கூடும் என ஒற்றுச் செய்தி வந்துள்ள இந்நேரத்தில் அரசர் அஸ்தினபுரி செல்வது உகந்ததல்ல என்று நான் உணர்ந்தேன்” என்றாள். திருஷ்டத்யும்னன் அச்சொற்கள் எந்த நோக்கத்துடன் சொல்லப்படுகின்றன என்ற எச்சரிக்கையை அடைந்து “உரிய கைகளில் அதை ஒப்புக்கொடுத்துவிட்டுத்தான் செல்வதாக யாதவர் சொன்னார்” என்றான். சத்யமபாமா “இங்கு அவருக்கு நம்பிக்கைக்குரிய பலர் உள்ளனர்” என்றாள். எங்கே உரையாடலை கொண்டு செல்கிறாள் என்றறியாமல் திருஷ்டத்யும்னன் காத்திருந்தான்.
“பாஞ்சாலரே, சியமந்தக மணியைப்பற்றி நீர் அறிந்திருக்கிறீரா?” என்று அவள் கேட்டாள். மிக மெலிதாக அவள் உள்ளத்தின் விளிம்பு தெரிவதைப்போல அவன் உணர்ந்தான். “ஆம். அது வான் சுழலும் கதிரின் விழி என்று சூதர்கள் பாடுவதுண்டு” என்று அவன் சொன்னான். “இன்று பாரத வர்ஷத்தின் அத்தனை சக்ரவர்த்திகளும் விழையும் மணி அது” என்றாள் சத்யபாமை. “எங்கள் அந்தகக் குலத்திற்கு வெங்கதிரோனால் வழங்கப்பட்டது அது. எங்கள் குல தெய்வம் என அதை கொண்டிருக்கிறோம். அதை தான் கொள்ள வேண்டுமென்று சததன்வா விழைகிறான்.”
அவள் விழிகளில் வந்து சென்ற மெல்லிய அசைவை அவன் கண்டான். ஓர் ஆழ்ந்த உணர்வை அவள் கடந்து செல்கிறாள் என்று தோன்றியது. ”இளையோனே, இளமை முதல் அந்த மணியை நான் என் அகத்தில் உணர்ந்திருக்கிறேன். அதுவே நான் என்று உணர்வேன். என் தந்தையிடம் அந்த மணி இருப்பதே குறை என நான் உணர்ந்ததுண்டு ஏனெனில் நான் இங்கிருக்க என் கொழுநர் நெஞ்சில்தான் அந்த மணி இருந்தாக வேண்டும். அதை பிறர் கொள்வதென்பது என்னை வெல்வதென்றே ஆகும். ஒரு போதும் நான் அதை ஒப்ப முடியாது” என்றாள்.
“சததன்வா யாதவர்களின் தலைமையை வெல்ல அந்த மணியை விழைகிறான் என்று அறிந்தேன்” என்றான் திருஷ்டத்யும்னன். சத்யபாமை விழி சரித்து சற்று தலை திருப்பினாள். அக்கணம் அவளில் அரசி மறைந்து ஒரு அழகிய இளம்பெண் தோன்றினாள். “இல்லை இளையோனே! அவன் கொள்ள விழைவது அரசை அல்ல” என்றாள். அக்கணமே நெடுந்தூரம் தாவிச் சென்று அனைத்தையும் புரிந்துகொண்ட திருஷ்டத்யும்னன் “ஒரு போதும் அந்த மணியை அவன் வெல்ல ஒப்பேன். என் உயிர் கொடுக்க சித்தமானேன்” என்று தலை வணங்கி சொன்னான்.
அவன் தன்னை உணர்ந்துகொண்டதை அறிந்து சற்றே திகைப்புற்றவள் போல அவள் விழி தூக்கி “அவனை சுட்டு விரலால் சுண்டி எறிய துவாரகை அரசரால் இன்று இயலும். ஆனால் அவர் விலகிச்செல்ல விழைகிறார். அவரது திட்டங்களை நானறியேன்…” என்றாள். திருஷ்டத்யும்னன் “அவர் இங்குளோர் விழைவுகளுடன் விளையாட எண்ணுகிறார் அரசி” என்றான். சத்யபாமா “ஆம், என் விழைவுகளுடனும்தான்” என்றாள்.
யாழ்க்கம்பிகள் மேல் விரல்தொட்டது போல திருஷ்டத்யும்னன் அவள் விழிகளை நோக்க பாமா “அதனால்தான் இங்கிருக்காமல் களம்விட்டு வெளியே செல்கிறார்” என்றாள். “இளைய பாண்டவருடன் செல்லத்தான்…” என்று திருஷ்டத்யும்னன் தொடங்க “இளைய பாண்டவர் இங்குதான் இருக்கிறார். நாளில் பெரும்பகுதியை அவருடன்தான் செலவிடுகிறார் அரசர். துணைவியர் அனைவருக்கும் அப்பால் அவர் உள்ளத்தில் மிக அண்மையில் இருப்பவர் தோழரே. அவருக்கோ இவர் இருக்குமிடமே விண்ணுலகம். எனவே இருவருமே இந்திரப்பிரஸ்தம் செல்ல எந்தத் தேவையும் இல்லை” என்றாள்.
திருஷ்டத்யும்னன் அதற்கு என்ன மறுமொழி சொல்வது என்றறியாமல் அமர்ந்திருந்தான். “நான் ஐயுறுவது என்னவென்றால் இந்த ஆடலில் இருப்பது சததன்வா மட்டுமல்ல” என்று சத்யபாமை சொன்னாள். “அறுவரை இக்களத்தில் கருக்களென அவர் நிறுத்தியுள்ளார். நானும் சததன்வாவும் இருபக்கம் நிற்கிறோம். அக்ரூரரும் கிருதவர்மனும் சாத்யகியும் நீங்களும். நடுவே இருப்பது சியமந்தகம். மானுடர் எவரும் விழையும் செல்வம். மானுட விழைவுகளுடன் அது விளையாடிக்கொண்டிருக்கிறது.”
“இளைய பாஞ்சாலரே, என் பொருட்டு நீங்கள் அக்ரூரரின் எண்ணமென்ன என்றறிக!” என்றாள் பாமா. உள்ளம் சற்று திடுக்கிட “அவர் இளைய யாதவரின் அகச்சான்று என்றார் சாத்யகி” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், அதுவும் உண்மையே. ஆனால் சியமந்தகம் அனைத்தையும் வென்று செல்லும் வல்லமை கொண்டது. அதன் முன் எவை நின்றிருக்குமென அறியேன் இளையோனே!. செங்கதிரோனின் தழல் இரும்பை நீராக உருக்கும் வெம்மை கொண்டது அல்லவா?”
அவன் கால்கள் நடுங்கத் தொடங்கின. “அக்ரூரரை ஐயப்படுகிறீர்களா?” என்று மீண்டும் கேட்டான். “நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் அனைவரையும் ஐயப்படுகிறேன்” என்றாள். “அக்ரூரர் இந்நகரில் அரசருக்கிணையாக அமர்ந்திருக்கிறார் அரசி, அவர் விழைய இனி ஏதுமில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “அரசருக்கு இணையாக அரசராக அல்ல” என்றாள் சத்யபாமை.
“அத்துடன் கிருதவர்மன்…” என்று திருஷ்டத்யும்னன் சொல்லப்போக “இளையோனே, கிருதவர்மன் எதன் பொருட்டு இளைய யாதவரின் தொண்டனாக ஆனான்?” என்றாள் பாமா. திருஷ்டத்யும்னன் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை உளம்கூர்ந்து அமர்ந்திருந்தான். “இளைய யாதவரின் ஆற்றலைக் கண்டு அவன் அடிமையானான். அது நிகழ்ந்த கணத்தை நான் நன்கு நினைவுறுகிறேன். இளையோராக யாதவர் ஹரிணபதத்திற்கு வந்து எமது மன்றில் நின்று பேசியபோது அவரில் எழுந்த ஊழிப்பேராற்றலின் அழகைக் கண்டு உளம் மயங்கி உடன் வந்தவன் கிருதவர்மன். எளிய யாதவனாக இந்நகர் புகுந்து இன்று இந்நகரை முழுதாள்கிறான்” என்றாள்.
“இளையோனே, வழிபடு தெய்வத்தின் குணங்களை வழிபடுவோன் தானும் அடைகிறான். தெய்வம் என்பது மானுடன் தான் என உணர்வதின் உச்சமல்லவா? தெய்வமென்றே ஆகி மீள்வதையல்லவா அவன் முழுமை என்று அறிகிறான்” என்றாள் பாமா. திருஷ்டத்யும்னன் அவளுடைய சொற்களை தன் சித்தத்தின் பலநூறு விழிகளால் சூழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். “கிருதவர்மன் அவன் உள் ஆழத்தில் ஏதோ ஓர் அறையின் இருண்ட பீடமொன்றில் இளைய யாதவராக மாறுவேடமிட்டு அமர்ந்திருக்கிறான் என்றுணர்க!” என்றாள் சத்யபாமா.
திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். அரசு சூழ்தலின் உத்திகளை கடந்துசெல்லும் அகநோக்கு கொண்டவள் இவள் என எண்ணினான். அவள் மெல்ல பீடத்தில் சாய்ந்து வலக்கையால் சரிந்த மேலாடையை எடுத்து மடியிலிட்டு புன்னகைத்து “உங்கள் உடல் நலம் எவ்வாறுள்ளது இளையோனே?” என்றாள். அவள் அப்பேச்சை முடித்து விலகி விட்டதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். “மெதுவாகவே சீரடையும் என்றனர் அரசி” என்றான். அவள் “போரில் அடைந்த இழப்பு அல்லவா? பெரிதொரு போர் உங்களை மீட்கக்கூடும் பாஞ்சாலரே” என்றாள்.
கூர்முள்ளால் தொடப்பட்டது போல திடுக்கிட்டு விழிதூக்கி அவள் கண்களைப் பார்த்ததுமே அவள் என்ன சொல்கிறாள் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். தலை திருப்பி “ஆம், அதையே நானும் எண்ணுகிறேன்” என்றான். “வென்று வருக! நலம் சூழ்க!” என்று அவள் சொன்னாள். “ஆணை அரசி” என்று அவன் தலை வணங்கினான். அவள் கைதூக்கி அவனை வாழ்த்தினாள்.
சத்யபாமை திரும்பி நோக்க தொலைவில் பூக்களின் நடுவே நின்றிருந்த சேடி மெல்ல அருகே வந்தாள். இடக்கையை அவள் மெல்ல அசைத்ததும் அவள் பின்னால் வந்து சத்யபாமையின் நீண்ட ஆடையை எடுத்து மண் படாமல் பிடித்துக் கொண்டாள். சத்யபாமை எழுந்துகொள்ள திருஷ்டத்யும்னனும் எழுந்து நின்றான். சத்யபாமை அவனிடம் “தங்களை நான் என் இளையோனாக எண்ணுகிறேன். மேலும் தாங்கள் யாதவர் அல்ல. யாதவரின் எளிய விழைவுகளுக்கு அப்பால் செல்லவும் மண்ணில் காலூன்றிநின்று நோக்கவும் தங்களால் இயலுமென நினைக்கிறேன். அக்ரூரருடனும் கிருதவர்மனுடனும் அணுகியிருங்கள். என் விழிகளாக தங்களிரு விழிகள் அமையட்டும்” என்றாள். “ஆணை அரசி” என்று திருஷ்டத்யும்னன் தலை வணங்கினான்.
அவள் திரும்பிச் செல்ல இரு காலடி எடுத்து வைத்தாள். பின் இயல்பாக ஆடையை சீர்படுத்தும் பாவனையில் நின்று மறுபக்கம் திரும்பி அவனை விழி நோக்காமல் “மற்ற அரசியரை தாங்கள் சந்திக்க வேண்டும் அல்லவா?” என்றாள். திருஷ்டத்யும்னன் உள்ளூர புன்னகைத்தான். அதுவரை இருந்த பொற்பீடத்திலிருந்து இறங்கி யாதவப் பெண்ணாக அவள் மாறிவிட்டதை எண்ணிக் கொண்டான். “விதர்ப்ப அரசி வலப்பக்க மாளிகையிலும் ஜாம்பவதி இடப்பக்க மாளிகையிலும் இருக்கிறார்கள். பிற ஐவருக்கும் ஐந்து மாளிகைகள் இவ்வரண்மனை வளைப்புக்கு வெளியே குன்றின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளன” என்றாள்.
“ஆம், இளவரசி, அவர்களையும் சந்தித்தாக வேண்டும். அதுவே அரசமுறை” என்றான் திருஷ்டத்யும்னன். “விதர்ப்ப அரசி இளையவருடன் அஸ்தினபுரிக்கு போகிறாள் என்று இன்று செய்தி வந்தது. அவளை முன்னே சந்தித்துவிடுங்கள்” என்றாள். அவள் அறியாமல் விழி திருப்பி தன் விழியை நோக்குவாள் என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். ஆனால் அவள் இயல்பான குரலில் “அரசரின் எட்டு துணைவியர் எட்டு குலங்களை சார்ந்தவர்கள், அறிந்திருப்பீர்” என்றாள். “ஆம்” என்றான். “அவர்களில் விதர்ப்ப அரசியே க்ஷத்ரிய குலத்தில் பிறந்தவள் என்பதால் அஸ்தினபுரியில் அவளுக்கு தனி இடம் இருக்கக்கூடும்” என்றாள் சத்யபாமா.
அவள் உள்ளம் செல்லும் திசையை மிக அண்மையிலெனக் கண்டு உள்ளூர எழுந்த புன்னகையுடன் திருஷ்டத்யும்னன் சொன்னான் “ஷத்ரியர் என்பதால் இளைய அரசிக்கான இடம் அமைவது இயல்பு. ஆனால் இந்நகர் யாதவ நிலம். இதை ஆளும் யாதவ அரசி தாங்களே” என்றான். “நிலமும் குலமும் ஏற்றவரே பட்டத்தரசி. பிறர் துணைவியரே.” அவள் முகம் புன்னகை கொள்வதை பக்கவாட்டில் கன்னத்தின் அசைவெனவே அறிய முடிந்தது. ஆனால் விழிகளைத் திருப்பி அவள் அவனை நோக்கவில்லை. “நன்று” என்று சொல்லி நடந்து விலகிச் சென்றாள்.
தலை வணங்கியபின் அவன் அங்கு நின்று அவள் செல்வதை நோக்கினான். அவள் மீண்டும் திரும்பவில்லை. அவள் உரு மறைந்ததும் அவன் கைகள் தளர்ந்து தொடைகளை தொட்டன. செல்லும்போது ஒருகணமேனும் அவன் விழிகளை திரும்பி நோக்கியிருந்தால் அப்போது அவள் அரசியென்றல்லாமல் யாதவப் பெண்ணென்று இருப்பதை அவன் உணர்ந்திருப்பதைக் காணமுடியும் என அவள் அறிந்திருந்தாள். அப்படி விழி கொடுக்கலாகாது என்ற நுட்பமே அவளை அரசியாக்குகிறது என்று எண்ணிக் கொண்டான்.