‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 29

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 2

பெரிய நீள்வட்ட அவைக்கூடத்தின் மறுமுனையில் மேடைமேல் எழுந்த பொற்பீடத்தில் பொன்னூல்பின்னலிட்ட வெண்ணிறப் பட்டாடை அணிந்து முத்துமாலைகள் சுற்றிக்கட்டப்பட்ட இளஞ்சிவப்புத்தலைப்பாகையில் மயிற்பீலியுடன் அமர்ந்திருந்தவரைத்தான் திருஷ்டத்யும்னன் முதலில் கண்டான். அவர் முன் ஏழு நிரையாக பீடங்களிடப்பட்ட பிறைவடிவ அவையில் காவல் வீரர் சுவர் சாய்ந்து படைக்கலம் ஏந்தி விழியிமையாதவர் போல் நிற்க அமைச்சரும் யவனர் எழுவரும் அமர்ந்திருந்தனர். முறைமைசாரா அவைக்கூடல் என தெரிந்தது. அக்ரூரர் பேசிக்கொண்டிருந்த சொல்லை நிறுத்தி அவர்களை திரும்பி நோக்கினார். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் அவை முன் சென்று தலை வணங்கினர். “துவாரகைத்தலைவருக்கு வணக்கம். யாதவ மன்னருக்கு என் உடைவாள் பணிகிறது” என திருஷ்டத்யும்னன் சொன்னான்.

இளைய யாதவர் புன்னகைத்து “வருக பாஞ்சாலரே! தங்களை முன்னரும் கண்டிருக்கிறேன். தாங்கள் என்னைக் காணும் உடல்நிலையில் அப்போது இல்லை” என்றார். அக்குரலைக்கேட்டு உளம் எழுச்சிகொள்ள சற்று முன்னகர்ந்து “இல்லை அரசே, நான் தங்களை கண்டேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “விழி திறக்க முடியா வெம்மை உடல் நிறைய நினைவழிந்து நான் படுத்திருந்தபோது என் மருத்துவநிலையின் அறைக்குள் உடன்பிறந்தாளுடன் நீங்கள் வந்திருந்தீர்கள். நெற்றியில் கைவைத்து என்னை உணர்ந்தீர்கள். இன்மொழி ஏதோ சொல்லி மீண்டீர்கள். விழி திறக்காமல் குரலினூடாக உங்களை நான் கண்டேன். ஒளி விரிந்த பெரும்புல்வெளி ஒன்றில் ஆநிரை சூழ குழல் கையிலேந்தி நீங்கள் நின்றிருக்க அருகே நின்று நான் நீங்கள் சொல்லும் ஒரு மொழியை கேட்டதாக உணர்ந்தேன்” என்றான்.

இளைய யாதவர் புன்னகைசெய்தார். திருஷ்டத்யும்னன் “அச்சொல்லை நான் இதுநாள்வரை மீள மீள எனக்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். பொருளறியா ஒரு பாடல் வரியென” என்றான். கையை சற்று தூக்கி உரக்க “தீயோரை அழித்து நல்லோரைக்காத்து அறத்தை நிலை நாட்ட யுகங்கள் தோறும் மீள மீள நிகழ்கிறேன் என்ற வரி. அது யார் பாடிய பாடலென்று அறியேன். அதை நீங்கள் சொன்னதாக என் உள்ளம் எண்ணிக்கொண்டிருக்கிறது” என்றான். முகம் விரிந்த புன்னகையுடன் “ஆம், எங்கோ எவரோ பாடிய பாடல். மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல்” என்ற இளைய யாதவன் “அமர்க!” என்றான். திருஷ்டத்யும்னன் கைகூப்பி “இன்று இப்படி மணிக்கற்கள் சுடரும் அரியணையில் உங்களைப் பார்ப்பதற்கே நான் அப்போது பார்க்காதிருக்கலானேன் என உணர்கிறேன்” என்றான்.

நிலவொளியால் ஆனது போல் ஒளிர்ந்த வெள்ளிப்பீடம் ஒன்றில் இரு சேவகர் வழிகாட்டி அவனை அமரச் செய்தனர். சாத்யகி பின்னால் சென்று சிறுபீடம் ஒன்றில் அமர்ந்தான். திருஷ்டத்யும்னன் அக்ரூரரை நோக்கி தலை வணங்கி “மூத்த யாதவரை வணங்குகிறேன். தங்கள் அருள் என் மேலும் என்னை இங்கு அனுப்பிய ஐந்து குலம் மேலும் திகழ்க!” என்றான். அக்ரூரர் “உங்கள் தந்தையை நன்கறிந்திருக்கிறேன் இளவரசே. சௌத்ராமணி வேள்வியின் அனலில் தோன்றிய மைந்தன் என உங்களை பாணர் பாடவும் கேட்டிருக்கிறேன். இன்று தலைக்குமேல் முகம் தெரியும் இளவலாகக் காண்பது உவகை அளிக்கிறது” என்றார். திருஷ்டத்யும்னன் “தாங்கள் என் தந்தையின் வடிவாய் இங்கிருக்கிறீர்கள் யாதவரே” என்றான்.

இளைய யாதவர் “பாஞ்சாலரே, தாங்கள் வந்த நோக்கம் எதுவோ அதை முன்னரே அளித்து விட்டேன் என்பதை அறிவீர்” என்றார். “ஆம், அப்படி சொல்லப்பட்டேன் ஆயினும் என் இளவரசி அளித்த சொல் கொண்ட ஓலையை தங்களுக்கு அளிக்க கடன்பட்டிருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். அக்ரூரர் எழுந்து கை நீட்ட திரௌபதி அளித்த திருமுகத்தை பொற்குழலில் இருந்து வெளியே எடுத்து நீட்டி நீள நீவி சுருள்விரித்து முதற்சொல்லை படித்தபின் தலைவணங்கி அவரிடம் அளித்தான். அதை அவர் வாங்கி ஒரு சொல் வாசித்தபின் புன்னகையுடன் சுருட்டியபடி “இதிலுள்ள ஒவ்வொரு வரியையும் முன்னரே அறிவேன் பாஞ்சாலரே” என்றார்.

பெருநகைப்புடன் “எழுதப்படும்போது அருகிருந்தீரோ மாதுலரே?” என்று இளைய யாதவர் கேட்க “ஆம், எம் விழிகளுள் ஒன்று அவ்வறைக்குள் பறந்து கொண்டிருந்தது” என்றார் அக்ரூரர். அவையிலிருந்த அனைவரும் நகைக்க இளைய யாதவர் “இந்திரநீலம் திகழவிருக்கும் வெண்முகில் நகரம் என் நகரம் அல்லவா? அதை அமைக்கும் செல்வம் இக்களஞ்சியத்தில் உள்ளது. உங்கள் அரசியிடம் இன்றே அச்சொல்லை அனுப்புகிறேன். நீங்கள் திரும்புவதற்கு முன் செல்வம் அங்கே சென்றிருக்கும்” என்றார். திருஷ்டத்யும்னன் “நன்றி துவாரகைக்கு அரசே! பாஞ்சால குலம் என்றும் இக்கடன் தங்கள் குல வழிகள் தோறும் திகழ வேண்டுமென்று விரும்புகிறது. கோடி செல்வம் திரும்பக் கொடுத்தபின்னும் இது எஞ்சட்டும்” என்றான். “அவ்வண்ணம் விழைவீர் என்றால் மும்மடங்கு வட்டி கணக்கிடச்சொல்கிறேன்” என்று இளைய யாதவர் சொல்ல அவை உரக்க நகைத்தது.

பொற்கால் அரியணையில் வைரமுடி சூடி அமர்ந்திருக்கும் ஒருவர் அத்தனை இயல்பாக இருக்க முடியுமென்று அப்போதுதான் அவன் கண்டான். வீட்டு முற்றத்தில் அமர்ந்து மண் அள்ளி விளையாடும் சிறு குழந்தை போல, கன்று ஓட்டி புல்வெளி சேர்த்தபின் குழல் ஊதி கரைமரம் ஒன்றில் நிழலமர்ந்திருக்கும் யாதவச் சிறுவன் போல விளையாட்டென அவர் அங்கிருந்தார். “பாஞ்சாலரே, என்ன கண்டீர் இந்நகரில்?” என்றார் இளைய யாதவர். சாத்யகி சிரித்து “ஜாம்பவானை வென்று சியமந்தகமணி கொண்ட ஆடலை” என்றான். இளைய யாதவர் நகைத்து “சியமந்தக மணியின் ஆடலை நீங்கள் மேலும் காணநேரும் இளைஞரே” என்றார்.

அக்ரூரர் திரும்பி “சியமந்தகமணியை பற்றித்தான் தாங்கள் வரும்போது பேசிக்கொண்டிருந்தோம்” என்று திருஷ்டத்யும்னனிடம் சொன்னார். “அந்த மணிக்கான விழைவு என்றும் இருந்தது. ஆனால் இப்போதுதான் அதை நோக்கி எழும் ஒருவன் உருவாகியிருக்கிறான்.” திருஷ்டத்யும்னன் வினாவுடன் நோக்க “கூர்மபதத்தின் சததன்வா அந்த மணிக்காக படை தொடுக்கலாகும் என்றும் மன்று கூடி சூழ்ச்சி செய்வதாகவும் ஒற்றுச் செய்தி வந்துள்ளது. அந்த மணி தனக்கு யாதவர் குலத்தின் தலைமையை பெற்றுத்தரும் என்று அவன் நினைக்கிறான்.”

சாத்யகி சிரித்து “ஒரு மணியா தலைமையை அளிப்பது?” என்றான். அக்ரூரர் “இளையவனே, என்றும் அரச நிலை என்பது அடையாளங்களால் ஆக்கப்படுவது என்று அறிக! மணிமுடியும் செங்கோலும் அரியணையும் வெண்குடையும் அடையாளங்கள் மட்டுமே. சியமந்தகம் யாதவர் குடிகளில் பிறர் எவரிடமும் இல்லாத செல்வம். அதை வென்றவன் அக்கணமே தலைமைக்கான அடையாளம் கொண்டவன் ஆகிறான். அவ்வடையாளத்தை தன் படைபலம் வழியாக நிறுவிக்கொள்வான் என்றால் அவன் முதன்மை பெறுகிறான். அவ்வகையில் சததன்வா எண்ணுவது சரியே. அவன் படைகொண்டு வருவான் என்ற செய்தியே யாதவரிடம் அவனுக்கென ஓர் ஆதரவுப்புலத்தை உருவாக்கும்” என்றார்.

சாத்யகி திரும்பி இளைய யாதவர் என்ன சொல்லப்போகிறார் என்பது போல பார்க்க அவர் இயல்பாக அசைந்து “ஆம், யாதவரிடம் பிளவுபட விழையும் ஒரு துடிப்பு என்றுமுள்ளது” என்றார். திருஷ்டத்யும்னன் “அக்ரூரரே, அந்த மணியை விழையும் தகுதி அவனுக்கு உண்டு என எண்ணுகிறீரா?’ என்றான். அக்ரூரர் “இளவரசே, தாங்கள் அறிந்திருக்கலாம், சததன்வா இன்று கூர்மபதத்தின் எளிய இளவரசன் அல்ல. ஹரிணபதத்தின் யாதவ அரசியை நம் அரசர் மணப்பதற்கு முன்னரே அவன் வடக்கு நோக்கி சென்றான். காசியரசனின் உதவியுடன் இமயமலைச்சாரலில் அவனுக்கென ஒரு தனியரசை உருவாக்கிக்கொண்டான். கிருஷ்ணவபுஸ் இன்று வலுவான ஒரு யாதவச்சிற்றரசு. அவனைச் சூழ்ந்து பன்னிரெண்டு யாதவச் சிற்றூர்கள் உள்ளன. நாம் அறிவோம், காசி மகதத்திற்கு அணுக்கமானது. மகதமும் நமக்கு எதிராக இன்னொரு யாதவனை முன் வைக்க விழைகிறது” என்றார்.

அக்ரூரர் தொடர்ந்தார் “சததன்வா சியமந்தகத்தை கொள்வான் எனில் அவனே யாதவர் தலைவன் என்று மகதம் சொல் பரப்பும். செல்வம் அளிக்கப்பட்டால் அதை பாடி நிறுவ பாணரும் அமைவர். மகதத்தின் படைகளுடன் வந்து யாதவ நிலத்தில் ஒரு பகுதியை வென்று பிறிதொரு யாதவர்தலைவனாக தன்னை அமைத்துக்கொள்ள சததன்வா விழைகிறான். அந்த யாதவனை துவாரகைக்கு மாற்றாக நிறுத்தவும், துவாரகையை வென்ற பின் தங்கள் கைச்சரடுக்கு அசையும் பாவை மன்னனாக அமைக்கவும் மகதம் எண்ணுகிறது என்பதில் ஐயமில்லை.” இளைய யாதவர் புன்னகையுடன் “எப்போதும் மகதத்தின் ஒரு காய் நம்மை நோக்கி நகர்த்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. இம்முறை தெரிவது ஒரு காய். தன் கண்காணா சரடுகளால் அது அசைப்பது பல காய்களை” என்றார்.

திருஷ்டத்யும்னன் “அந்த மணி இங்கு எவரிடம் உள்ளது?” என்றான். அக்ரூரர் “இன்னமும் அது யாதவ அரசியின் தந்தை சத்ராஜித்திடம்தான் உள்ளது. களிந்தகமோ சிறு கோட்டை. அங்கு அதை வைத்திருப்பது பாதுகாப்பல்ல என்று நான் பலமுறை சொன்னேன். ஆனால் அது அவர்களின் குலமுறைச் செல்வம், அது அங்கிருப்பதே முறை என்று அரசர் சொல்லிவிட்டார். அதை வருடம் மும்முறை ஹரிணபதத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கு மூதன்னையர் முன் அதை வைத்து வழிபடுகிறார்கள். குலம்கொண்ட செல்வத்தை கள்வர் முன் படைத்து கைகட்டி நிற்பது போன்ற செயலது என்றே எனக்கு எப்போதும் தோன்றியுள்ளது” என்றார்.

இளைய யாதவர் சிரித்தபடியே “அக்ரூரரே, தெய்வங்கள் முன் தங்கள் குலமணியைப் படைப்பது அவர்களின் முறையென்றால் கள்வரை அஞ்சி அதை நிறுத்தி விட முடியுமா? பிறகென்ன அரசு? மணிமுடி?” என்றார். அக்ரூரர் “அவ்வண்ணமல்ல. நான் சொல்வது ஓர் எளிய காப்புமுறை குறித்தே. அச்சடங்குகள் நிகழ்கையில் அரசி தன் அகம்படிப் பெரும்படையுடன் துவாரகையில் இருந்து அங்கு செல்லலாம். ஹரிணபதத்தில் மூதன்னையரின் வழிபாட்டில் அவரும் இணையலாம். அப்போது அவ்வூர் நம் படைகளால் சூழப்பட்டிருக்கும். சியமந்தகத்தைக் கவர எண்ணும் கைகளிலிருந்து காக்கவும் பட்டிருக்கும்” என்றார். “ஆனால் மணம் முடித்து இங்கு வந்தபின் ஒருமுறை கூட தன் ஊர் திரும்ப நம் அரசி ஒப்பவில்லை. அவர் உள்ளம் இங்கிருந்து ஒருபோதும் பிரியப் போவதில்லை.”

சாத்யகி “அன்னை சத்யபாமை துவாரகையைவிட்டு ஓரிரவேனும் பிரிந்திருப்பது நிகழாது. இது அவர் திருமகளென ஒளிகொண்டு வாழும் செந்தாமரை மலர் என்று பாணர்கள் பாடுகிறார்கள். அது உண்மை” என்றான். “கிருதவர்மனை மேலும் ஒற்றுச் செய்திகளை தொகுத்துக் கொணரச் சொல்லி அனுப்பியுள்ளேன்” என்றார் அக்ரூரர். “சததன்வா எண்ணுவதென்ன என்று நமக்கு இங்கு ஐயமில்லை. அவன் செய்ய உள்ளது என்ன என்று அறியவே விழைகிறேன்.” அவரது கவலையை எவ்வண்ணமும் பகிர்ந்துகொள்ளாதவர் போல இளைய யாதவர் எழுந்து சிறுவர் சோம்பல் முறிப்பதுபோல கைவிரித்து “அக்ரூரரே, இச்சிறு அலுவலை நீரும் கிருதவர்மரும் இணைந்து நிகழ்த்துக. நான் அஸ்தினபுரிக்குச் சென்று சிலநாட்கள் கடந்து மீள எண்ணியுள்ளேன்” என்றார்.

அக்ரூரர் திகைத்து “இப்போதா…? இன்றுதானே அஸ்தினபுரியின் தூதர் இங்கு வந்துள்ளார். தூதும் முடிந்துள்ளதே?” என்றார். “இது அதன் பொருட்டு அல்ல. இளைய பாண்டவர் அஸ்தினபுரிக்குச் செல்ல விழைகிறார். நான் உடன் செல்வதாக சொல்லி இருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். அக்ரூரர் குழப்பத்துடன் சாத்யகியை நோக்கிவிட்டு “அரசர் இந்நிலையை சற்று குறைத்து புரிந்துள்ளார் என நினைக்கிறேன். சததன்வாவின் அறைகூவல் சிறிதல்ல. மகதத்தின் படைகளைப் பெற்றுவிட்டால் நம் மீது ஒரு போர்த் தாக்குதல் இருக்கக் கூடும்” என்றார்.

இளைய யாதவர் ஏவலரிடம் கிளம்பலாம் என கையசைத்துவிட்டு “அதற்குத்தான் மன்று சூழ்ந்து அரசியல் தேர தாங்கள் இருக்கிறீர்கள். படை கொண்டு சென்று வெல்ல கிருதவர்மர் இருக்கிறார். இந்நகர் காக்க என் மருகன் சாத்யகியும் உள்ளான். அக்ரூரரே, நீங்கள் இருக்கையில் நான் எதை ஆற்ற வேண்டும்? எதை அறிய வேண்டும்?” என்றார். அக்ரூரர் “அவ்வண்ணமெனில் தங்கள் ஆணை!” என்று சொல்லி தலை வணங்கினார்.

ஏவலர் அவரது ஆடைகளை கொண்டுவந்தனர். செங்கோலை ஏவலனிடம் அளித்து, மணிமுடியை எடுத்து பொற்தாலத்தில் வைத்துவிட்டு, பட்டாலான பெரிய யவன ஆடையை தோள்வழியாக அணிந்தார். யவன வணிகர்களில் ஒருவர் “சியமந்தகம் யாதவரை நிலையழியச்செய்யும் ஒரு மாயத் தெய்வம்” என்றார். இளைய யாதவர் “மானுடரை ஆட்டி வைப்பவை தெய்வங்கள் அல்ல. தெய்வங்கள்தான் இங்கு வந்ததுமே மானுடவிசைகளில் சிக்கிக்கொள்கின்றன” என்று சொல்லி நகைத்தார். அவரது இதழ்களில் வெண்பற்கள் மின்னிய அழகைக் கண்டு திருஷ்டத்யும்னன் ஒருகணம் தாளா அகஎழுச்சி கொண்டான். ஒரு மானுடன் இந்தப்பேரழகை கொள்வதெப்படி?

இன்னொரு யவனர் நகைத்தபடி “யாதவ குலங்களைன அமுது கவர்ந்த மோகினிபோல் ஆட்டி வைக்கிறது போலும் இச்சியமந்தகமணி” என்றார். “ஆம், ஆனால் அனைத்து பெரும்செல்வங்களும் இதைப்போன்று விழைவின் களத்தில் இடைவிடாத ஆடலில்தான் உள்ளன” என்றார் இளைய யாதவர். “ஏனெனில் செல்வத்தைக் கொள்பவன் இவ்வுலகை வெல்கிறான் என்கின்றனர் நூலோர். ஒரு செல்வம் பிறிதொரு செல்வத்தை வெல்கிறது. செல்வம் மேலும் செல்வமாக ஆகிறது. அது தனக்குரிய அனைத்தையும் தானே உருவாக்கிக் கொள்கிறது” என்றபடி தன் மேலாடையை சுற்றி அமைத்துக்கொண்டார். “செல்வமெனும் தெய்வம் தனக்குரியவர்களை தேடிச்சென்று தொட்டு எடுத்துக்கொள்ளும் விந்தையை எண்ணி எண்ணி வியக்கலாம். அதிலுள்ளது இப்புடவியை நடத்தும் முதன்மைப்பெருநெறி.”

“அக்ரூரரே, நான் பயணத்திற்கான ஒருக்கங்களை செய்ய வேண்டியுள்ளது. சற்று ஓய்வெடுத்துவிட்டு திரியக்வனம் செல்கிறேன். அங்கே இளைய பாண்டவர் தன் தோழியருடன் தீராநீர்விளையாட்டில் இருக்கிறார். அவரை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரிக்கு நாளைமறுநாள் கிளம்புகிறேன்” என்றபின் திரும்பி திருஷ்டத்யும்னனிடம் “இங்கிருங்கள் பாஞ்சாலரே. என் மருகனை துணையுங்கள். தங்கள் சொல்லுக்கும் வாளுக்கும் உரிய வேலை இங்கு வரக்கூடும்” என்றார். திருஷ்டத்யும்னன் தலை வணங்கி “அதையே விழைந்தேன் அரசே” என்றான். எதையோ அறிந்து தன்னுள் ஒளித்துகொண்டிருப்பதுபோல காட்டும் மாறா இளஞ்சிரிப்புடன் “அவ்வாறே ஆகுக!” என்று உரைத்து இளைய யாதவர் அரியணை பீடம் விட்டு படியிறங்கினார்.

அப்பால் சித்தமாக நின்ற இசைச் சூதர்கள் கொம்பும் முழவும் மீட்ட வீரர் வாழ்த்தொலி உரைக்க கைவணங்கியபடி மெல்ல நடந்து மன்று நீங்கினார். அவை எழுந்து வாழ்த்தொலித்து இளைய யாதவரை வழியனுப்பியது. வெண்குடை கவிழ்த்து அவர் பின் ஒருவர் செல்ல, முழவும் கொம்பும் ஒலிக்க இசைச்சூதர் முன்னால் செல்ல அகம்படியினர் தாளங்களும் சாமரங்களுமாக தொடர அவர் சென்று மறைவதை திருஷ்டத்யும்னன் நோக்கி நின்றான். வாழ்த்தொலிகள் அவிய பெரும் கதவு மூடப்பட்டது. இயல்பாகி பெருமூச்சுடன் மீண்டும் அவர்கள் பீடங்களில் அமர்ந்து கொண்டனர். அக்ரூரர் திரும்பி சாத்யகியிடம் “நீங்கள் இருவரும் கிருதவர்மரிடம் இருங்கள். அவர் ஆணைகளை இயற்றுங்கள்” என்றார்.

சாத்யகி “இன்று கிருதவர்மர் என்ன அலுவலை இயற்றிவிடப்போகிறார்? நகர் முழுக்க மது நுரைக்கிறது” என்றான். அக்ரூரர் “இளையோனே, இந்நகரம் மது உண்டு மயங்குவது ஒரு தோற்றமே என்று நீ அறிந்திருப்பாய். இங்கு படைக்கலங்கள் கூர் தீட்டப்படுகையில் அந்தப் பட்டுத்திரையை இழுத்து மூடிக்கொள்கிறோம்” என்றார். சாத்யகியின் கண்கள் மாறுபட்டன. “சியமந்தகத்தைக் கவர சததன்வா எண்ணுவதை புரிந்துகொள்கிறேன். ஆனால் உடனே அவன் துணிவானென நம்பவில்லை” என்றான். அக்ரூரர் “அவன் துணிந்துவிட்டான் என்றே எண்ணுகிறேன் இளையோனே. மன்று கூடி தன் சார்புற்றவர்களிடம் பேசுகிறான் என்றாலே துணிந்துவிட்டான் என்றுதான் பொருள்? அவன் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒற்றுச் செய்தி வழியாக இங்கு வந்து சேரும் என அறியாதவனா அவன்?” என்றார்.

திருஷ்டத்யும்னன் “யாதவ அரசி இவற்றையெல்லாம் அறிந்துள்ளாரா?” என்றான். “இளையவனே, இந்நகரம் நம் அரசியின் இல்லத்து வாசலில் இட்ட மாக்கோலம் போன்றது. அவர் அறியாதது இந்நகரில் ஒன்றும் நிகழ்வதில்லை. யாரறிவார்? நாம் இங்கு பேசிக்கொண்டிருப்பதையே அவர் எங்கிருந்தோ கேட்டுக்கொண்டிருக்கலாம்” என்றார். குலமூத்தார் ஒருவர் “சியமந்தகம் இந்நகரத்தில் யாதவ அரசியிடம் இருந்திருக்க வேண்டும், கொற்றவைக் காலடியில் சிம்மம் இருப்பது போல. அதற்கு உகந்த இடம் அதுவே. வேறு எங்கிருந்தாலும் அது இங்கு வந்தாக வேண்டும். அதுவரை அது குருதி கொள்ளும். குலங்களை அழிக்கும். புரங்களை எரிக்கும்” என்றார். அக்ரூரரின் விழி மெல்ல அசைவதைக் கண்டு திருஷ்டத்யும்னன் ஒரு சிறிய உளநகர்வை அடைந்தான். அக்ரூரர் எதையோ எண்ணி தவிர்த்தவர்போல தோன்றினார். நீள்மூச்சு விட்டு “பார்ப்போம் என்ன நிகழ்கிறதென்று” என்றார்.

“சததன்வாவிடம் எத்தனை படைப்பிரிவுகள் உள்ளன?” என்றான் சாத்யகி. “இப்போது மகதத்தின் எட்டு படைப்பிரிவுகள் அவனைத் துணைக்கும் நிலையில் கங்கையின் கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கங்கைக்கரை யாதவர்களில் பன்னிரு குடிகள் அவனை ஆதரிக்கின்றன. படைகொண்டு வந்து சியமந்தகத்தை அவன் வெல்வான் என்றால் யாதவர்களில் மேலும் பலர் அவர்களுடன் சேரக்கூடும்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் “யாதவ மூத்தவரே, அரசு சூழ்தலில் பொதுவாக அது மூடத்தனம் என்றே கொள்ளப்படும். துவாரகையோ பெரு நகரம். யாதவர்களை இணைக்கும் பெருவிசை இளைய யாதவர். இம்மையத்தை உதறி யாதவர் ஏன் விலகிச்சென்று அவரிடம் சேர வேண்டும்?” என்றான்.

அக்ரூரர் “இளையோனே, நிலம் வளைத்து வேளாண்மை செய்யும் குடிகளுக்கும் நிலம் விட்டு நிலம் சென்று ஆபுரக்கும் யாதவருக்கும் உள நிலையில் பெருத்த வேறுபாடு உள்ளது. அனைத்தையும் கைவிட்டு புதிய திசை தேர்ந்து செல்வதென்பதும், அப்பால் அறியப்படாத ஒன்று காத்திருக்கிறதென கனவு காண்பதும் யாதவர் குருதியில் உள்ள இயல்புகள். புதிய நிலம் என்ற சொல்லைப்போல அவர்களை எழுச்சிகொள்ளச்செய்யும் ஏதும் இல்லை. ஆகவே யாதவர் ஒருபோதும் ஒருங்கிணைந்ததில்லை. ஆயிரம் பெரும்கரங்களுடன் ஆண்ட கார்த்தவீரியர் கூட யாதவரில் மூவரில் ஒருவரையே ஒருங்கிணைக்க முடிந்தது. அன்று அத்தனை யாதவரும் ஒருங்கிணைந்திருந்தால் கார்த்தவீரியர் வென்றிருப்பார். இன்று பாரதவர்ஷத்தில் பாதி யாதவரால் ஆளப்பட்டிருக்கும்” என்றார்.

“துவாரகையின் வல்லமையும் வெற்றியுமே யாதவர்களில் பலரை நம்மை விட்டு விலகச் செய்யும் இளையவனே.” என்றார் அக்ரூரர். “எத்தனை கனிசெறிந்திருந்தாலும் இம்மரத்தில் ஒருபோதும் அத்தனை பறவையும் சிறகு ஒடுக்கி அமர்வதில்லை என்றுணர்க”. திருஷ்டத்யும்னன் அதை முழுதும் புரிந்துகொள்ளாமல் தலை அசைத்தான்.

சாத்யகி “பாஞ்சால இளவரசர் பேரரசியைப் பார்க்க விழையக்கூடும்” என்றான். அக்ரூரர் “ஆம், உங்களைப்பார்க்க அரசியும் விழைவார்” என்றார். “இன்று மாலையே முறைமைச்சொற்களையும் செயல்களையும் ஒன்று பிழைக்காமல் நிகழ்த்துங்கள். அவரை அரசியர்மாளிகையில் சந்திக்கலாம். அவரை பார்க்கச்செல்கையில் முறையான அரச உடை அணிந்துகொள்ளுங்கள். நீங்கள் இளைய யாதவரிடம் பேசுகையில் ஒரு பேரரசரை எண்ணவேண்டியதில்லை. யாதவ அரசி அவ்வாறல்ல. ஒவ்வொரு சொல்லிலும் எண்ணத்திலும் அவர் யாதவப்பெருநிலத்தை ஆளும் பேரரசி மட்டுமே.”

அக்ரூரரிடம் விடைபெற்று திரும்பவும் இடைநாழிக்கு வந்தபோது திருஷ்டத்யும்னன் தலைகுனிந்து நடந்தான். “என்ன, அரசு சூழ்தலில் ஆழ்ந்துவிட்டீர் போலும்?” என்றான் சாத்யகி. “இல்லை, நான் எண்ணிக்கொண்டிருப்பது பேரரசரின் சொற்களைத்தான்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சாத்யகி “அவர் விளையாட்டாகப்பேசுவார். அவர் என்ன எண்ணுகிறார் என்பது எப்போதும் அந்தச் சொற்களுக்கு நெடுந்தொலைவில் இருக்கும்” என்றான். “இல்லை, அவ்வாறல்ல. அவர் இன்று சொன்ன அத்தனை சொற்களும் பொருள்மிக்கவை. குறிப்பாக பொருள்விழைவைக் குறித்து சொன்னவை” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி சற்று வியப்புடன் நோக்க “சியமந்தகத்தின் ஆடல் தொடரும் என்றார்” என்றான் திருஷ்டத்யுமனன். “அது தனக்குரியவர்களை தெரிவுசெய்யும் என்றார். நம்மைத்தான் சொல்கிறார். நம்மனைவரின் உள்ளத்து ஆழங்களிலும் அந்த மணிக்கான விழைவு இருக்கலாம் என்கிறார். நான் அதைத்தான் இதுவரை உள்ளூர வினவிக்கொண்டிருந்தேன். நான் அதை விழைகிறேனா என்று” என்றான். சாத்யகி வியப்புடன் “விழைகிறீரா?” என்றான். “ஆம், நான் அரசகுடியினன். பொருள்விழைவே ஷாத்ர குணம். அவர் அந்த மணியைப்பற்றி சொன்னதுமே எனக்குள் விழைவு எழுந்தது. அந்தமணியை சததன்வா கவர்ந்துசெல்ல நான் சென்று மீட்டு வர அதை இளையவர் எனக்கே பரிசாக அளிப்பதுபோல ஒரு பகற்கனவு அப்பேச்சு நடந்துகொண்டிருப்பதனூடாகவே என் நெஞ்சில் ஓடியது.”

சாத்யகி முகம் சற்றே மாற விழிகளை விலக்கியதைக் கண்டு திருஷ்டத்யும்னன் சிரித்துக்கொண்டு “அதே கனவு உமக்குள்ளும் ஓடியதை இதோ உம் விழிகளில் காண்கிறேன்” என்றான். சாத்யகி சிரித்து “ஆம், நான் அதற்காக நாணினேன்” என்றான். “அது மணிக்கான விழைவே. நாம் இளையவர் மேல்கொண்ட அன்பு இவ்வண்ணம் எண்ணச்செய்கிறது” என்றான் திருஷ்டத்யும்னன். “எத்தனை நுணுக்கமாக மானுடனை அறிந்திருக்கிறார்?” என்றான் சாத்யகி. “அந்த மணியை நம் நால்வரிடம் அளித்துவிட்டுச்செல்கிறார். அக்ரூரரும் கிருதவர்மரும் நீரும் நானும் விழைவை வைத்து விளையாடவிருக்கிறோம். எவர் வெல்வார் என அவர் பார்க்க விழைகிறார்” என்றான் திருஷ்டத்யும்னன்.

“அக்ரூரர் இளையவரின் அகச்சான்று. இந்த ஆடலில் நாம் மூவர் மட்டுமே உள்ளோம். அவர் நம்மை ஒற்றறியும் யாதவரின் விழி என்றே தோன்றுகிறது” என்று சாத்யகி சொன்னான். “பாஞ்சாலரே, உண்மையில் இப்போது என்னை அச்சம் வந்து கவ்விக்கொள்கிறது. நம்மால் இந்த ஆடலை கடக்கமுடியுமா? சியமந்தகம் நம் கைக்குக் கிடைக்குமென்ற தருணம் வருமென்றால் நாம் விழைவு கொண்டு அறம்பிழைக்காமலிருப்போமா?” திருஷ்டத்யும்னன் தன் ஆழத்தில் ஒரு திடுக்கிடலை உணர்ந்தான். ஏதோ ஒன்று நினைவுக்கு வந்தது. ஆனால் எதுவென்று தெரியவில்லை.

இடைநாழியினூடாக அதை தன் உள்ளத்தால் துழாவியபடியே நடந்தான். தலைகுனிந்து அருகே வந்த சாத்யகி பெருமூச்சுடன் “மாலையில் சந்திப்போம் பாஞ்சாலரே. தங்களுக்கான அரண்மனை அமைந்திருக்கும் இந்நேரம்” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்தான்.

முந்தைய கட்டுரைவாஷிங்டனில்…
அடுத்த கட்டுரைஅறம்- டொரெண்டோ உரை