பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 4
ஹரிணபதத்தில் மாலை இளமழையுடன் சேர்ந்து மயங்கத் தொடங்கியது. அஸ்வபாதமலைச்சரிவின் ஆயர்பாடிகளில் சித்திரை வைகாசி மாதங்களைத் தவிர்த்த பிற நாட்களில் மதியம் கடந்ததும் காற்று அவிந்து இலைகள் அசைவிழக்கும். தோல்மேல் பசையென வியர்வை பரவி சிறு பூச்சிகள் கடிக்கும். மூச்சு ஊதிப் படிந்தது என இலைகளின் அடியில் நீராவிப்படலம் எழும். புதர்களின் சுருண்ட சிலந்தி வலைகளில் மெல்லிய நீர்த்துளிகள் திரண்டு அதிரும். பறவைகள் இலைப்புதர்களுக்குள் சென்றமர்ந்து சிறகு கோதி ஒடுங்கும். ஓசைகள் அமைதியின் திரையொன்றால் மேலும் மேலும் மூடப்படும். ஒவ்வொன்றும் தங்கள் எடையை தாங்களே அறிந்து தங்கள் நிழல்கள் மேல் அழுந்திக்கொள்ளும். பசுக்கள் வெம்மூச்சு விட்டு கண்கள் கசிய தலை தாழ்த்தி காத்திருக்கும். ஆயர் கன்றுகளைத் திரட்டி பாடி சேர்ப்பதற்குள் மழைத்துளிகள் சரிந்து வந்து நிலத்தை தாக்கும். விரைந்த உடுக்கின் தாளத்துடன் மலை இறங்கி மழை வந்து ஆயர்பாடிகளை மூடி யமுனை மேல் படர்ந்து நீர்ப்பரப்பை புல்லரிக்கவைக்கும். எஞ்சியிருக்கும் வெயிலில் தொலைதூரம்வரை பீலி வருடியதுபோல மழை சிலிர்த்துச்செல்வதை காணமுடியும். ஒளி மிக்க நாணல் போல யமுனை மழையில் நின்றிருக்கும். மரங்கள் மழை அறையும் ஒலியுடன் மாலை ஆயர்பாடியைச் சூழ்ந்திருக்கும்.
மழையை ஆயர் விரும்பினர். ஒவ்வொரு நாளும் கன்றுகள் கடித்துண்ட புல்லின் எச்சம் கைகூப்பி வேண்டிக்கொள்வதனால் வானம் சுரந்து பெய்கிறது என்று அவர்கள் நம்பினர். ஆனால் அன்று மழை பெய்தபோது ஒவ்வொருவரும் அச்சமூட்டும் வருகையொன்று போல அதை உணர்ந்தனர். அறியாது எழுந்து நனையாத இடம் நோக்கி செல்ல முற்பட்டு பின் உணர்ந்து மீண்டும் வந்து அமர்ந்திருந்த பாமையை சுற்றி நின்றனர். அவர்களை அறைந்து தழுவி உடைகளை கொப்புளங்களுடன் ஒட்டவைத்து, முகம் கரைந்து வழிய, மூக்கு நுனிகளிலும் செவி மடல்களிலும் சொட்டி மழை கவிந்தது. நடுவே அவள் கருவறை நின்று நீராட்டு ஏற்கும் அன்னையின் சிறு சிலை போல் அமர்ந்திருந்தாள். குறுநுரைகள் எழுந்த நெற்றியில் விழுந்த மழை குறுமயிர்ப் பிசிறல்களை வெண்பளிங்கில் கீறல்கள் போல் படிய வைத்தது. கூர்மூக்கு நுனியில் ஒளிமணிகளாக சொட்டி உதிர்ந்தது. கன்னத்து நீலரேகைகள் வழியாக துளிகள் இறங்கி கழுத்து வளைவில் விரைந்து தோள்குழிகளில் தேங்கியது. அவள் ஆடை காற்றின் ஈரத்துடன் புடைத்து விசும்பும் உதடுகள் போல் துடித்து அமைந்தது.
விழிகள் ஒவ்வொன்றும் அவளை நோக்கி சிலைத்திருந்தன. ஒவ்வொருவரும் அங்கிருப்பவள் அங்கிலாது எங்கோ இருக்கும் ஏதோ ஒரு சிற்றுரு என அவளை உணர்ந்தனர். மழை மேலும் மேலும் வலுத்தபடியே சென்றது. மரங்கள் நீர் சவுக்குகளால் வீசப்பட்டு துடிதுடிக்கத் தொடங்கின. விண்ணின் சடைச்சரங்கள் மண்ணை அறைந்து அறைந்து சுழன்றன. மண் கரைந்து செங்குழம்பாகி, நாகமென வளைந்து, சுருண்டு மடிந்து ஓடிவந்து, அவர்கள் காலடிகளை அடைந்து மண்கரைத்துத் தழுவி இணைந்து ஓடையாகி சரிவுகளில் குதித்திறங்கி பட்டுமுந்தானையென பொழிந்து யமுனையின் கருநீர்ப்பெருக்கில் விழுந்து செம்முகில் குவைகளாக எழுந்து பின் கிளைகளாக பிரிந்து ஒழுக்கில் ஓடியது மழைப்பெருக்கு. அவளை கரைத்தழிக்க விழைந்ததுபோல. கைக்குழவியை முந்தானையால் மூடிக்கொள்ளும் அன்னை போல மழை.
மழைக்குள் கைகளால் மார்பை அணைத்து உடல் குறுக்கி நின்றிருந்த ஆயர் மகளிர் உடல்நடுங்கி அதிர உதடுகள் துடிக்க ஒவ்வொருவராக விலகி மரநீழலும் கூரைத்தாழ்வும் நாடி சென்றனர். மெல்ல அங்கிருந்த ஒவ்வொருவரும் விலகிச் செல்ல அவளருகே மாலினியும் ராகினியும் மஹதியும் மட்டுமே எஞ்சினர். மாலினி பாமையின் காலைப் பற்றி “என் தெய்வமே, நான் சொல்வதை கேள்… துவாரகைக்கு உன் கொழுநனுக்கு சேதி போய் விட்டது. ஆமென்று அவன் சொன்ன செய்தி நாளையே வந்து விடும். நீ நினைத்தது நடக்கும். வஞ்சினம் உரைத்ததை நீ வென்று விட்டாய் என்றே உணர்க! இவ்வெல்லைக்கு மேல் யாதவரை தண்டிக்காதே! எழுந்திரு என் கண்ணே” என்றாள். அவள் சொற்கள் உடலெனும் கற்சிலைக்கு அப்பால் குடியிருந்த அவளை சென்றடையவில்லை என்று தோன்றியது. “என் அன்னையே, என் மகளே, நான் சொல்வதை கேள். இங்கு இம்மழையை ஏற்று நீ இரவெல்லாம் அமர்ந்திருந்தாய் என்றால் அன்னை என்னாவேன்? அதையாவது எண்ணு” என்றாள். மழைகரைத்த கண்ணீருடன் கைகூப்பி “என் செல்லமே, என் முன் நீ இறக்க மாட்டாய், உன் முன் நான் இறப்பேன். பலிகொள்ளாதே, மூதன்னை வடிவமே” என்றாள்.
சொற்களுக்கு அப்பால் இருந்து அத்தொல்தெய்வம் அவளை நோக்கியது, பெண்ணே நீ யார் என்பது போல. அவளறிந்த சிறுகைகள். அவள் முத்தமிட்ட மென்பாதங்கள். அவள் நெஞ்சோடு அணைத்து முலையூட்டிய சிறு குமிழ் உதடுகள். அவள் கோதி கோதிச் சலித்த செழுநறுங் கூந்தல். அவள் பார்த்துப் பார்த்து கனவில் எழுப்பிய நீலக்கனல் விழிகள். அவையல்ல இவள். அந்த சமித்தில் பற்றியெறிந்த வேள்விச்சுடர். வேறேதோ அறியா அவி உண்டு அனலாகி எழுந்தாடுவது. சூழ்ந்திருக்கும் வேள்விச் சாலைக்கு அப்பால், நெய் அள்ளி நாதம் ஓதி அதைப் புரக்கும் வைதிகருக்கு அப்பால், ஒளிரும் காற்றுக்கு அப்பால், இப்புவி படைத்த முழுமையை நடித்து நின்றாடும் வேள்வித்தீ. விண்ணுடன் மட்டுமே தொடர்புடையது என அது தனித்திருக்கும் விந்தைதான் என்ன? அவள் அறியவில்லை தன் மகளை. மகளென வந்ததை. அங்கே திருமகளென அமர்ந்திருந்த அதை.
இருண்டு சூழ்ந்து பெய்து கொண்டிருந்த மழையில் சேற்றில் கால்களை மடித்து தன் மகளை வெறித்து நோக்கி பகலெல்லாம் அமர்ந்திருந்தாள் மாலினி. இரவென, நிசியென, கருக்கலென மழை வழிய அவள் உடல் நடுங்கி துள்ளி விழத்தொடங்கியது. மெல்லிய அதிர்வோடிய உடல் இழுபட முகம் கோண வலக்கை ஊன்றி நினைவழிந்து சரிந்த அவளை ஆய்ச்சியர் வந்து அள்ளி கொண்டுசென்று அறை சேர்த்தனர். ஆடை நீக்கி, உலர் ஆடை அணிவித்து, அகில் புகை காட்டி வெம்மை கொள்ளச் செய்தனர். அவர்கள் அளித்த இன்கடுநீரை இருகைகளாலும் பற்றி அமுதென அருந்தி விழித்து எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருள் நோக்கி எழுந்து அவள் ஏங்கி அழுதாள். அவள் விழித்தெழாமல் இருக்க சிவமூலிப் புகையை அளித்து மீண்டும் படுக்கவைத்தனர். அரசில்ல முன்னறையில் சத்ராஜித் மீண்டும் மீண்டும் மதுவருந்தி தன்னிலை அழிந்து வெண்சேக்கையில் எச்சில் வழிய ஆடை குலைய விண்ணிலிருந்து விழுந்தது போல் கிடந்தார். நினைவு சிதறி எப்போதோ மெல்ல மீண்டு புரள்கையில் “இளையோனே, உன்னை நான் கொன்று விட்டேன். உன்னை கொன்று விட்டேன் என் செல்லமே” என்று சொல்லி நாக்குழறி உலர்ந்த உதடுகளால் ஓசையிட்டு அழுதார்.
அரசில்லத்திலும் ஊர்மன்றிலும் சூழ்ந்த சிற்றில்களிலும் எல்லாம் அந்தகக் குலத்து ஆயர்கள் நிறைந்து சாளரங்களின் ஊடாகவும் வாயிலின் ஊடாகவும் நீலக்கடம்பின் அடியில் அமர்ந்திருந்தவளை நோக்கி நின்று குளிர்நடுங்கினர். மறுநாள் காலையிலும் இருள்செழித்து மழை அறுபடாது நின்றபோது ராகினியும் எழுந்து கூரையின் அடியை நாடியபின் அவளருகே மஹதி மட்டும் எஞ்சியிருந்தாள். ஆயர்குடிகளில் அவளை நோக்கி ஒரு சொல்லும் சொல்லாதவள் அவளே என்று ஆய்ச்சியர் உணர்ந்தனர். கண்ணீர் விட்டவர், கை தொழுதவர், கால் பற்றி இறைஞ்சியவர் அனைவரும் விலக சொல்லற்று அருகே நின்றவள் மட்டுமே அங்கிருந்தாள். மொழியிலாது உணரக்கூடிய ஒன்றினால் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர் என. சொல்லின்மையால் மட்டுமே சொல்லிவிடக்கூடிய ஒன்று அங்கே நிகழ்ந்தது என. பின்னிரவில் எழுந்து நோக்கியவர் நீலக்கடம்பின் அடியில் நான்கு விழிகள் மின்னுவதை மட்டுமே கண்டனர். நிழல்களென சூழ்ந்திருந்தன தெய்வங்கள்.
விடியலில் இளநீலப் புலரிமழை யமுனையிலிருந்து எழுந்துவந்து அன்னைக்கோழி ஆயர்பாடி மேல் சிறகுசரித்து அமர்ந்திருக்கையில் இல்லங்களிலும் ஊர்மன்றிலும் அனைவரும் துயின்றிருந்தனர். நீலக்கடம்பின் அடிமரம் சாய்ந்து செவிலியன்னையும் மயங்கி இருந்தாள். அவளொருத்தி மட்டும் நீலம் நோக்கி விழி மலர்ந்து அமர்ந்திருந்தாள். மெல்லிய முடிவிலாச் சொல் என பெய்த மழையை அங்கு பிறர் எவரும் கேட்கவில்லை, காணவும் இல்லை. ஒவ்வொரு கதிர்வழியாகவும் விண்ணொளி இறங்கி மண்ணை வந்து தொட்டது. இளநீலம் புன்னகைத்து காலையொளியாகியது. காற்று ஒன்று கடந்துவந்து இலைகளனைத்தையும் தொட்டு உதறி ஈரம் சொட்டி வடியச் செய்தது. நரம்போடிய மென்மை மிளிர இலைகளெல்லாம் தளிர்களென்றாயின. கன்னத்தில் ஒட்டிய அவள் மயிர்ப் பிசிறுகள் எழுந்து சுருண்டன. புதுப்பால் படலம் என நெற்றி ஒளிகொண்டது. அன்னையைக் கவ்விப்பற்றி அடம்பிடிக்கும் குழவி போன்று படபடத்த அவள் ஆடை உலர்ந்து எழுந்து பறக்கத் தொடங்கியது. கன்று தேடும் அன்னைப் பசுவொன்று தொழுவத்தில் ஓங்கி குரலெழுப்பியது. அதைக் கேட்டு எழுந்த ராகினி நெஞ்சில் கைவைத்து எங்கிருக்கிறோம் என ஏங்கி முன்தினம் நடந்தவற்றை நினைவு கூர்ந்து பதறி எழுந்தோடி வெளிவந்து ஆயரில்லத்துப் புறக்கடையில் நின்று நோக்கியபோது இளவெயிலில் நீலக்கடம்பின் அடியில் பூத்திருந்த அவளைக் கண்டாள். ஒருபோதும் அதற்கு முன் அவளைக் கண்டதேயில்லை என்று உணர்ந்தாள்.
காலையில் செய்தி ஆயர்பாடி அனைத்திற்கும் சென்று சேர்ந்திருந்தது. யமுனைக்கரை வழியாக அஸ்வபாத மலைச்சரிவிலிருந்த எழுபத்திரெண்டு ஆயர்பாடிகளிலிருந்தும் ஆயர்குலங்கள் இசைக்கலம் ஏந்தி நடமிட்ட பாணர் தலைவர, சூழ்ந்த அவர்களின் பாடல் துணை வர, கண்ணீருடன் கைகூப்பி ஹரிணபதம் நோக்கி வரத்தொடங்கினர். வண்ண ஆடைகளும் தலைப்பாகையுமாக அவர்கள் மன்றடைந்து அங்கு எழுந்த நீலக்கடம்பை சூழ்ந்தனர். அவளிடம் ஒரு சொல்லேனும் சொல்லமுடியுமென்று எவரும் எண்ணவில்லை. தொலைவில் அவளைக் கண்டதுமே தலைக்கு மேல் கைகூப்பி “மூதன்னையே, யாதவர் குலத்து அரசியே, உன் பொற்பாதங்கள் அடைக்கலம் தாயே” என்று கூவி வழுத்தினர். கொண்டு வந்த அரிமலர்ப் பொரியையும் அருங்காணிக்கைகளையும் அவள் முன் படைத்து நிலம் தொட்டு தலை தாழ வணங்கினர். பெண்டிர் அவளைச் சூழ்ந்து அமர்ந்து கைகூப்பி கண்ணீர் வடித்தனர். ‘திருமகள் எழுந்த முற்றம் இது. இங்கு விண்ணாளும் பெருமகன் கால் எழும்’ என்று பாணர் கிணை மீட்டி பாடினர். சூழ்ந்தமர்ந்து ஆயர் குலத்து மூதன்னையரின் கதைகளை மூத்தபாணர் பாட பிறர் மெய் விதிர்க்க கேட்டிருந்தனர். பெண் குழந்தைகளை மடியமர்த்தி அவளைச் சுட்டி பெண்ணென்று ஆயர் குடியில் பூப்பது எது என்றுரைத்தனர்.
அவர்கள் அறிந்த ஒன்று, எப்போதும் அண்மையில் இருந்த ஒன்று, அறிவால் தொட முயல்கையில் சேய்மை காட்டும் ஒன்று கண் முன் அமர்ந்திருந்தது. அவள் பெயர் பாமை என்று மட்டுமே அப்போது அறியக்கூடியதாக இருந்தது. பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் அமைச்சரிடம் செய்தி துவாரகைக்கு சென்றுவிட்டதா என்று கேட்டார். பறவைத்தூது துவாரகையைச் சென்றடைவதற்கே இரண்டு நாட்கள் ஆகும் என்றார் அமைச்சர். அங்கிருந்து மறுமொழி வருவதற்கு மேலும் இருநாட்கள் ஆகும். அவன் துவாரகையில் இருந்து கிளம்பி சியமந்தக மணி தேடி அடைந்து கை கொண்டு அங்கு வருவான் என்றால் கூட பதினைந்து நாட்கள் போதாது என்றார். “முழுநிலவு நாளுக்குள் கன்யாசுல்கமாக சியமந்தகத்துடன் அவன் வராவிட்டால் இவள் உயிர் துறப்பாள் என்றிருக்கிறாளே” என்றார் பிரகதர். “திருமகள் தன்னை அறிவாள். தன் சொல் அறிவாள்” என்றார் அந்தகக்குலத்தின் முதற்பூசகர் கிரீஷ்மர். “அச்சொல் இங்கு பூத்தது நம் மூதன்னையர் அருளால் என்றுணர்க! அது நிகழும். ஆயரே, கேளுங்கள்! மலரிதழ்கள் மாலையில் வாடும், வைரங்கள் காலத்தை வென்றவை” என்றார்.
அன்று மாலையும் மழை எழுந்தது. அதற்குள் அவளைச் சுற்றி தேன்மெழுகு பூசப்பட்ட ஈச்சைத் தட்டிகளால் கூரை அமைத்திருந்தனர். சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களும் நனையாமல் இருக்கும்பொருட்டு சிறு தோல்கூடாரங்கள் அமைக்கப்பட்டன. இரவில் கூரையிடப்பட்ட அனல் குழியில் நெருப்பு கனன்றது. அதன் செவ்வொளியில் உருகும் உலோகத்தால் ஆனவள் போல் அவள் அங்கிருந்தாள். அவள் விழியில் வெண்பரப்பில் தெரிந்த கனலை நோக்கி ஆயர் மகளிர் கைகூப்பி அமர்ந்திருந்தனர். இரவு மழை அவர்களின் மேல் விண்சரிந்தது போல கவிழ்ந்து பின் வழிந்து நெடுநேரம் சொட்டி மறைந்தபின் கீற்று நிலவு வானில் எழுந்தது. இருளில் ஈர இலைகளின் பளபளப்பை காற்று கொந்தளிக்கச்செய்தது. கோடிக் கூர்முனைப் படைக்கலங்கள் சுடரும் படை ஒன்று இருளுக்குள் நின்றிருப்பது போல காடு அவர்களை சூழ்ந்திருந்தது. துளி சொட்டும் ஒலியால் தனக்குள் பேசிக்கொண்ட இருள்வெளி. அதற்குள் எங்கோ ஓநாய்கள் எழுப்பிய ஓலம் ஒலித்தது. அதைக் கேட்டு அன்னைப்பசு தன் குட்டியை நோக்கி குரலெழுப்பியது.
ஒருநாளும் இரவை அதுபோல் உணர்ந்ததில்லை ஆய்ச்சியர். அத்தனை நீளமானதா அது? அத்தனை எடை மிக்கதா? அத்தனை தனிமை நிறைந்ததா? இரவெனப்படுவது அத்தனை எண்ணங்களால் ஆனதா? இப்பெரும் ஆழத்தின் விளிம்பில் நின்றா இதுநாள் வரை களித்தோம்? இனி இரவு என்ற சொல்லை அத்தனை எளிதாக கடந்து விட முடியாது என்பதை அவர்கள் அறிந்தனர். அருகே நின்றிருக்கும் கொலைமதவேழம். அப்பால் அனைத்தையும் விட்டு மூடியிருக்கும் கரியபெருவாயில். ஒவ்வொரு துளியாகச் சொட்டி உதிர்ந்து வெளுத்து தன்னை விரித்து காலையாகியது. கண்கூசும் ஒளியிலும் கூழாங்கற்களின் அருகே சிறுநிழல் தீற்றல்களாக சிதறிக்கிடந்தது.
மழை முடிந்த காலை மண்ணில் விரிந்த வரிகளால் ஆனது. மயில்கழுத்துச் சேலையிலிருந்து பிரிந்து விழுந்த பட்டு நூல் என ஒளிரும் நத்தைக்கோடுகளால் ஆனது. அதில் எழும் வானவில்லால் ஆனது. கூரை அடியில் மணிச்சரம் போல் விழுந்த குழித்தொடர்களால் ஆனது. குளித்த கருமையின் குருத்து ஒளியுடன் வந்தமர்ந்து கருமூக்கு தாழ்த்தி செவ்வாய் காட்டிக் கூவும் காகங்களால் ஆனது. பாதிகழுவப்பட்ட மலையுச்சிப்பாறைகளால், முழுக்க நீராடிய கூழாங்கற்களால் ஆனது. நான்காம் நாள் காலையிலும் அன்று அக்கணம் அங்கே பதிக்கப்பட்டது போல் அவள் அமர்ந்திருந்தாள். தலைமுறைகளுக்கு முன் எங்கோ எவராலோ பதிட்டை செய்யப்பட்ட கன்னி அம்மன் சிலை போல. கொடிவழிகள் குலமுறைகள் என அவள் விழிமுன் பிறந்து வந்தவர்களைப் போல் தங்களை அவர்கள் உணர்ந்தார்கள். அவள் முன் படைக்கப்பட்ட உணவில் மலர்கள் விழுந்திருந்தன. கைநீட்டி ஒரு குவளை நீரையும் அவள் கொள்ளவில்லை. காலடியில் வைக்கப்பட்ட காணிக்கைகளை நோக்கவும் இல்லை. மறுகணம் எழப்போகும் ஒன்றை நோக்க விழைபவள் போல் யமுனை அலைநீர்ப் பெருக்கை நோக்கி அமர்ந்திருந்தாள்.
அடுத்த நாள் பறவைத்தூது வந்தது என்று அமைச்சர் தன் அலுவல் அறையிலிருந்து இரு கைகளையும் விரித்து வெளியே ஓடி வந்து கூவிச் சொன்னார். அங்கிருந்த ஆயர் அச்சொல்லை என்னவென்று அறியாமலே எதிர்கொண்டு உவகைக் குரலெழுப்பி அவரை சூழ்ந்து கொண்டனர். “அவன் முன் சென்றது நம் தூது தோழரே!” என்று அமைச்சர் கூவினார். “அவன் அவை முன் சென்று நின்றது நம் சொல். நம் ஓலையை அவன் அவையில் படித்தான். அக்கணமே துவாரகையிலிருந்து கிளம்பி சியமந்தகத்தை தேடிச் செல்வதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான்.” இடக்கையால் உடுக்கை மீட்டி சொல்துடிக்க எழுந்து “அவன் மாயன். காலமும் தூரமும் அவன் முன் ஒடுங்கிச் சுருங்கும். இங்கு வந்து நம் தேவியை அவன் கொள்வான். ஐயமில்லை!” என்றார் ஒரு பாணர். “ஆம் அது நிகழ வேண்டும். அவ்விருமுனைகளும் ஒவ்வொருமுறையும் தவறாமல் சந்திக்கும் என்ற உறுதியின் பேரில் இயங்குகிறது இப்புடவி. அவ்வுறுதியின் மேல் நின்றிருக்கின்றன இந்த மலைகள். அவ்வுறுதியின் மேல் கவிழ்ந்திருக்கிறது இந்நீல வானம்” என்றான் இன்னொரு பாணன்.
“அத்தனை தொலைவில் உள்ளது துவாரகை!” என ஏங்கினாள் ஆய்ச்சி ஒருத்தி. “அதனை விட தொலைவில் உள்ளது வானம். ஒரு மழையினூடாக மண்ணை ஒவ்வொருநாளும் முத்தமிடுகிறது வானம்” என்றான் முதுபாணன் ஒருவன். அந்த நாளின் தேன் என மெல்லிய உவகை அங்கெலாம் சூழ்ந்தது. அவள்முன் சென்று மண் தொடப்பணிந்து “அன்னையே, உன் சொல் காக்க உன் தலைவன் எழுந்தான். அவன் வஞ்சினம் வந்துள்ளது அறிக!” என்றார் அமைச்சர். அச்சொற்களுக்கும் அப்பால் மாறா விழிமலர்வுடன் அவள் அமர்ந்திருந்தாள்.
எங்கிருக்கிறான்? என்ன செய்யப் போகிறான்? என்று அறிய ஒற்றர்களை ஏவுவதாக அமைச்சர் சொன்னார். குடித்தலைவர்கள் அவரைச் சூழ்ந்து நின்று “ஒவ்வொரு கணமும் ஒற்றுச்செய்தி வரவேண்டும். நம் குலம் வாழும் என்ற உறுதி ஒவ்வொரு முறையும் நம்மை வந்தடைய வேண்டும்” என்றனர். “யாதவரே, அவன் தன் நிழலும் அறியா தனி வழிகள் கொண்டவன். எங்ஙனம் அறிவோம் அவன் பயணத்தை?” என்றார் கிரீஷ்மர். “இங்கு முழுநிலவு எழுவதற்கு முன் அவன் நிகழ்வான் என்று நம் மூதன்னையரை வேண்டுவோம். நாம் செய்யக்கூடுவது அது ஒன்றே” என்றார் பிரகதர். ஒவ்வொரு நாளுமென அவர்கள் காத்திருந்தார்கள். அத்தனை மெதுவாகச் செல்வதா யமுனை என்று அவர்களின் அகம் வியந்தது. ஒவ்வொரு அலையாக அந்நதிப்பெருக்கை அதற்கு முன் அவர்கள் எவரும் உணர்ந்திருக்கவில்லை. காலை வெயில் ஒளியாகி உருகும் வெள்ளிக் குழம்பாகி பளிங்குத் தூணாகி நின்றிருக்கையில் மெல்லிய வலைபோல் ஆன நீலக்கடம்பின் நிழலுக்குக் கீழ் ஒளிச்சுடர்கள் பரவிய உடலுடன் அமர்ந்திருந்தவள் தன் அசைவை முன்பெங்கோ முற்றிலும் விடுத்திருந்தாள். காற்றில் ஆடிய குழலோ உடையோ மூச்சில் ஆடிய முலையோ அல்ல அவள். அவளுக்குள் இருந்து எழுந்து சூழ்ந்து அமைந்திருந்தது காலம் தொடா அசைவின்மை ஒன்று.
மாலையில் அந்தியில் மழை விழுந்த குளிர்ந்த இரவுகள். முகில் கிழித்த தனித்த பிறைநிலவு. கருக்கிருட்டைத் துளைத்த கரிச்சானின் தனிக்குரல். காலை எழுந்த சேவலின் அறைகூவல். வாசல் வந்து நிற்கும் முதல் காகத்தின் குரல். நீண்டு நிழலாகி முற்றத்தைக் கடக்கும் மரங்களின் பயணம். ஒவ்வொரு நாளென கடக்க மெல்லிய துயரொன்று ஆயர்பாடிகளை சூழ்ந்தது. கிளர்ந்து கண்ணீருடன் வந்தவர்கள் சோர்ந்து மீண்டனர். கண்ணெதிரில் அவள் உடல் உருகுவதை காண முடியாது கண்ணீர் விட்டு இல்லங்களுக்குள் சென்று அமைந்தனர். அவள் அமர்ந்த நீலக்கடம்பின் நிழலில் மீண்டும் அவளுடன் மஹதி மட்டுமே எஞ்சினாள். காலையில் அங்கு வந்து அடிவணங்கி மீளும் சிலரன்றி பிறர் அங்கு வரவில்லை. காற்று உதிர்த்த மலர்களும் பழுத்திலைகளும் அவளைச் சூழ்ந்து கிடந்தன. அவளுக்கிட்ட பந்தல் மாலைக்காற்றில் பிசிறி பின்பு கிழிந்து விலகியது. நிலவு ஒவ்வொருநாளும் மலர்ந்து பெருகியது, நாள்தோறும் கூர்மை கொள்ளும் இரக்கமற்ற படைக்கலம் போல.
செய்தி வந்ததா என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளையும் நோக்கினர். வரவில்லை என்ற சோர்வுடன் ஒவ்வொரு மாலையும் அமைந்தனர். வாராது ஒழியுமோ என்ற ஏக்கத்துடன் முன்னிரவுகளை கடந்தனர். வராது என்ற துயருடன் இருண்ட கருக்கலை அறிந்தனர். ஆயர்பாடியில் எப்போதும் இல்லாத அமைதி நிறைந்தது. எடை மிக்க அமைதி நீர் ஆழத்துப் பாறைகள் போல் ஆயர் இல்லங்களை குளிர்ந்தமையச் செய்தது. நீரடியில் அழுத்தத்துடன் அசைந்தன மரங்கள். ஆயிரம் கோல் ஆழமுள்ள நீரின் எடை ஒவ்வொரு இலையிலும் அமர்ந்திருந்தது. ஒவ்வொரு கல்லையும் அதனிடத்தில் ஆழப்படுத்தியது. ஒவ்வொருவர் உடலிலும் மதயானைகளின் எடை கூடியது. ஒவ்வொரு எண்ணம் மேலும் இரும்புக் குவையென பதிந்திருந்தது.