பாடல் பெற்ற ஸ்தலம். வசை என்று சொல்லலாம். ஞானசம்பந்தர் போகிற போக்கில் தனக்கு அருள் செய்யாமல் ஒற்றைக் காலில் நிற்கும் நடராசனை எட்டுவாரி இடக்குப் பண்ணிவிட்டுப் போனார். பிறகு வந்த ராஜாக்கள் கற்றளி எழுப்பி, அறுபத்து மூவரைக் குடியமர்த்தி, பெரியநந்தி செதுக்கி, சுற்றியுள்ள தெருக்களை அக்ரஹாரமாக ஆக்கி, உற்சவம், தேரோட்டம், உலா என்று ஒழுங்கு பண்ணிப் புண்ணியம் அடைந்தார்கள்.
ஒரு பத்துத் தலைமுறைக்கு செல்வாக்காகத்தான் இருந்தார் சுகவனேஸ்வரர். அப்புறம் தெப்பக்குளக்கரை பிள்ளையார், திடீர் மவுசு பெற்று காணிக்கை வசூலும், குழந்தைப் பேறு அருளும் தர ஆரம்பித்து விட்டமையினால் பக்தர் நடமாட்டம் குறைந்துவிட்டது. ஆனாலும் சுகவனேஸ்வரர் சுகவாசி. நிலபுலன்கள் இருந்தன. காவலாட்களும் இருந்தனர். சில்லறை மானியங்களும் வந்தன.
ஆனால் அந்தியானால் கோயில் வளாகம் ஓவென்று ஆகிவிடும். பிரகாரத்து சிற்பங்களிடையே இரண்டறக் கலந்து விளையாடும் குரங்குகளும் சென்றுவிட்டால் அர்ச்சகர் சம்பு குருக்களும், மொழ மொழவென்ற கருங்கல் லிங்கமும், முணுக் முணுக் விளக்கும்தான் பாக்கியமாகும். வலது பக்கத்திலிருந்த சம்பந்தப் பெருமானுக்கு போக்குக் காட்டிய நடராசப் பெருமான் லண்டன் கோடீஸ்வரனின் வரவேற்பறைக்குப் போய்ப் பத்து வருடம் ஆகிவிட்டது.
நிலைமை திடீரென்று மாறியது. காரணம் கிளிச்சாமி. ஒரு நாள் இரவு கையில் ஒரு சிறு மரப்பெட்டியும், தோள்களில் இரண்டு கிளிகளும் மொட்டைத்தலையும் காவியும் கம்புமாக வந்த ஆசாமி கிளிஜோசியமாக இருக்கும் என்றுதான் மற்ற எவரையும் போலவே குருக்களும் நம்பினார். காலணா பெயரப் போவதில்லை என்ற விரக்தியில் அவர் திரும்பியே பார்க்கவில்லை. வந்த ஆசாமி பிரகாரத்தை வலம் வந்து, சந்நதிகள் தோறும் கும்பிட்டு விட்டு, நந்தியின் வலது பக்கமாகக் கல்தூணில் சாய்ந்து அமர்ந்து, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்த பிறகுதான் அவர் அசைப்பில் திரும்பிப் பார்த்தார்.
வசீகரமான மொட்டைதான். எதிர்காலத்தில் அதன்மீது ரோமம் வரச் சாத்தியமில்லை என்பதோடு, இறந்த காலத்திலும் இருந்திருக்குமா என்று வியப்புக் கொள்ள வைக்கும் ஜாஜ்வல்யம். தூணின் முணுக் விளக்கு அதன்மீது பிரதிபலிப்பது கூட அழகாக இருந்தது. நல்ல சிவப்பு நிறம். பெரிய மூக்கு. பிடிவாதமாக அழுந்திய உதடுகள். தொண்டைக் குழியில் ருத்திராட்சம். வயிறு ஒட்டிக் கிடந்தது. “பாவம் சாமியார்” என்றார் குருக்கள், சக தொழிலாளியின் அனுதாபத்தோடு. அத்துடன் அதை மறந்து வெளியே போய் இருட்டிவிட்டதா என்று பார்த்தார்.
கீழ்வானில் சிவப்பு அழிந்த பிறகு, வாட்ச்மேன் கருணாகரனிடம் குரல் கொடுத்துவிட்டு, உள்ளே வந்தார். அப்போதும் சாமி அப்படியே உட்கார்ந்திருந்தது. பசி மயக்கமாக இருக்குமோ என்ற எண்ணம் குருக்களுக்கு ஏற்பட்டது. உள்ளே போய் எஞ்சிய கருமங்களைத் தொழில் நேர்த்தியுடன் சுருக்க முடித்து, கொத்துமணி குலுங்க, வாசலைச் சாத்தினார். தர்மகர்த்தா வீட்டில் மாடுகளைத் தொழுவிலேற்றிவிட்டு, கையைக் கழுவியபடி கருணாகரன் குருக்களிடம் “சாத்தலாமா” என்றார். குருக்கள் உட்பக்கமாக கையைக் காட்டி விட்டு நைவேத்யச் சோற்றுடன் கிளம்பிவிட்டார். கருணாகரனும் ஜாடையாக ஒருமுறை பார்த்துவிட்டுக் கதவை மூடிவிட்டான்.
மறுநாள் காலை குருக்கள் உள்வாசலைத் திறக்கும்போது கதவுக்குள்ளிருந்து கீச்சுக் குரலொன்று “சிவா” என்றது. குருக்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கருணாகரனும் சிறிது பயந்தது உண்மை. விடியலின் அரையிருட்டு வேறு. சற்று நேரம் கழித்து குருக்கள் தயங்கித் தயங்கி உள்ளே காலடி எடுத்து வைத்தார். லாந்தர் விளக்கு கையிலிருந்து ஆட, தூண்கள் நடனமிட்டன. சிலைகளின் நிழல்கள் பூத வடிவங்களாகப் பொங்கி, விசுவரூபம் கொண்டு அசைந்தன.
குடலைப் பற்றிக்கொண்டு குருக்கள் முன்னால் நடக்க, கருணாகரன் தொடர்ந்தான். சன்னதி இருட்டில் ஒரு குரல் “சிவா, சிவா” என்று சொல்வது கேட்டது. பெண் குரல். பெண் குரல்கூட இல்லை. ஒருவிதமான அமானுடமான உச்சாரிப்பு. “போயிடலாம் சாமி” என்றான் கருணாகரன். குருக்களுக்கு சாமிபயம் சுத்தமாக இல்லை. இரு என்று கைகாட்டிவிட்டு, முன்னால் நகர்ந்தார். இப்போது ஜபம் செய்வது ஒருவர் அல்ல, இருவர் என்பது புரிந்தது. இரு குரல்கள் மாறி மாறி “சிவா, சிவா!” என்று ஒரே தளத்தில் சொல்லிக் கொண்டிருந்தன.
மார்பு படபடக்க சன்னிதானத்தை அடைந்தபோது சட்டென்று குரல்கள் நின்றன. விருட்டென்று ஏதோ பறவைகள் தூண்களை உரசியபடி பறப்பது தொரிந்தது. லாந்தாரின் ஒளியில் நந்தியின் பிம்பம் பிரமாண்டமாகக் கூரைமீது விழுந்து, சரிந்தது. நந்தியைச் சுற்றித் திரும்பியபோது, எதிரே தரையில், நேற்றிருந்த அதே கோலத்தில், அமர்ந்திருந்த சாமியாரைக் கண்டார் குருக்கள். அவருக்கு எல்லாம் புரிந்து போயிற்று. வில்லங்கம் என்று அவருடைய மனக்குறளி சொல்லியது. கிழம் செத்துக்கித்து வைத்திருக்கப் போகிறது. மூஞ்சி வேறு மெழுகு பொம்மைபோல இருக்கிறது. பழியைப் புத்திசாலித்தனமாகக் கருணாகரன் மீது போட்டுவிட உத்தேசித்து, “முட்டாப்பயலே, நேத்து போறச்சயே உங்கிட்ட சொன்னேனே, கெழத்த தூக்கி வெளியே போட்டுட்டு சாத்துடான்னு, கேட்டியா?” என்றார்.
கருணாகரன் சட்டென்று இரண்டிலொன்றுக்குத் துணிந்தான். “சாமி சத்தியமா நேத்தைக்கு நாந்தேன் இவரைத் தூக்கி வெளியே போட்டுக் கதவைச் சாத்தினேன் சாமி. கண்ணாணை. என் மருதப்பன் மேல் ஆணை” என்று சாதித்துவிட்டான்.
“புளுகாதே. சிலை திருட்டு போனதுக்கப்புறம் கோயிலுக்குள் காக்கா நொழையாம காவந்து பண்ணியிருக்கு சர்க்கார்” என்றார் குருக்கள்.
கருணாகரன் குரலைப் பாரிதாபமாக ஆக்கிக்கொண்டான். “கண்ணாணை, நான் பொய் சொல்லலை சாமி. நேத்தைக்கு இவரைத் திண்ணையில் விட்டுட்டுத்தான் கதவைச் சாத்தினேன். அப்பவே ஒரு மாதிரி சிரிச்சார். சாமி, இது என்னமோ மந்திரமாயம் பண்ணிப்போட்டு உள்ளே வந்திருக்கு.”
சட்டென்று குருக்களின் தலைமீது கீச்சுக்குரல் “சிவா!” என்றது. தூணுக்கு அப்பால் இன்னொரு குரல் “சிவா! சிவா!” என்றது. எதிரொலிகளும் எழுந்து, சர்வம் சிவமயமாகப் பொலிந்தது.
குருக்கள் நம்பவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை. பிடிவாதமாக எதையும் நம்புகிறவரோ, நம்பாமலிருப்பவரோ அல்ல அவர். ஆனால், காலையில் கருணாகரனின் கதைகேட்டு ஊரே கோயிலுக்குள் திரண்டபோது அவருடைய மடியின் சில்லறை ஒலி அவரை நம்ப வைத்தது. கிளிச்சாமியார் கோயிலின் தவிர்க்க முடியாத உறுப்பாக ஆனார்.
சாமியார் “சிவா” என்ற வார்த்தை தவிர வேறு எந்த வார்த்தையும் மறந்துகூட உச்சாரிப்பது இல்லை.
“சாமி இவன் என் புள்ளை”
“சிவா”
“சாமி பயலுக்கு நாக்கு வெளங்க மாட்டேங்குது. வயசு பனிரண்டாச்சு”
“சிவா!”
“சாமி கையால தொட்டா எல்லாம் சொரியாப் போயிடும்”
“சிவா!” – இப்படித்தான் சம்பாஷணை ரீதி.
கோயிலுக்குள் கூட்டம் நெரிபட்டது. தினம் ஒரு மணிநேரம் சாமி ஒரு படியில் அமர்ந்து அருள் புரிவது வழக்கமாயிற்று. அந்த நேரம் ஒரு வேளைச் சாப்பாடும் ஏற்பார். அனேகமாகப் பழங்கள். ஒரு டம்ளர் பால். மிச்ச நேரம் முழுக்க கிளிகளுடன் இருப்பார். பேன் பார்த்தல், சிறகுகளை நீவிவிடுதல், வாயைப் பிளந்து சுத்தம் செய்துவிடுதல் இப்படி.
நாளடைவில் கிளிகள் பெருகின. தினம் இரண்டு கூடை பழங்கள் தேவைப்படுமளவுக்கு. எல்லாக் கிளிகளும் முதலில் ‘டிவீக்’ என்றன. சாமியார் கையை அசைத்தால் பறந்து அகன்றன. அவர் இரவு பகலாக அவற்றை ‘சிவா’ என்று அழைத்தார். ‘சிவா சிவா’ என்று கொஞ்சினார். ‘சிவா’ என்று கூப்பிட்டபடி, கெஞ்சியபடி, பின்னால் அலைந்தார். பிறகு அவையும் ‘சிவா’ என்று சொல்ல ஆரம்பித்தன.
சிவநாமங்கள் ஏகப்பட்ட விசில்களைக் குழந்தைகள் களேபரமாக அடிப்பதுபோல சதா ஒலித்தன. கோயிலுக்குள் சிவநாமம் தவிர வேறு எதையும் எவரும் கூறமுடியாதபடி எங்கும் அவ்வொலியே நிறைந்திருந்தது. கிளிகளுக்காகப் பக்தர்கள் பழங்களைக் கொண்டுவந்து கொட்டினர். அவை கொத்திப் போட்ட மிச்சத்தைப் பிரசாதமாக உண்டனர். நூற்றுக்கணக்கான அலகுகள் கூவிய சிவநாமம் ஒரு இரைச்சலாக உருவமின்றி மாறி, தூண்களை மோதி சதா ஒலித்தது. ‘ரீதி ஓங்காரம்’ என்றார்கள் பண்டிதர்கள். அதன் நடுவே இரண்டற்று கிளிச்சாமி வசித்தது.
அவர் தூங்கும்போது அவர் மீது கிளிகள் அடர்ந்து மொய்த்திருக்கும். அவர்மீது எப்போதும் இரண்டொரு கிளிகள் அமர்ந்திருக்கும். தனக்குரிய கல்லில் அவர் வந்தமர்ந்து ஆசி வழங்கும்போதும் கிளிகள் அவரைச் சுற்றிப் பறக்கும். கிளிச்சாமி எவர் முகத்தையும் பார்ப்பதில்லை. எந்தக் கரங்களையும் வித்தியாசப்படுத்துவதும் இல்லை. ஒரே ஆசி, ஒரே பிரசாதம். ஒரே சிவநாமம். ஒருமுறை அவர் ‘சிவா’ என்றால் ஒரு நூறு அலகுகள் ‘சிவா சிவா’ என்று ஓலமிடும். உடனே பக்தர் கூட்டத்திலிருந்தும் ஐந்தெழுத்து பீரிட்டெழும்.
குருக்களுக்கு மேனி வளப்பம் விழுந்துவிட்டது. அழகான தொப்பைகூட சரிந்துவிட்டது. பூணூல் வெள்ளை நிறமாகவே இருக்கும் அதிசயம்கூட நிகழ்ந்துவிட்டது. ஆரம்பத்தில் கிளிச்சாமியின் சிவகோஷம் அவருக்கு உவப்பாகவே இருந்தது. அது வலுக்க வலுக்க உண்டியில் கனக்கும் என அவர் நினைத்தார். பிறகு இனி சிவபெருமானே வந்து தடுத்தாலும் வசூலை நிறுத்த முடியாது என்று அறிந்தார். ஒருவிதமான மெத்தனமும் பெருந்தன்மையும் அவருக்கு ஏற்பட்டது.
இந்தக் கிழம் ஏன் இப்படி சிவா சிவா என்று கூவிப் பிராணனை விடுகிறது என்றுகூடத் தோன்ற ஆரம்பித்தது. மேலும் சமயம் கிடைக்கும்போது கிளிச்சாமியின் அருகே சென்று அமர்ந்து சீண்டுவதில் அவருக்குப் பேரானந்தம். நாளடைவில் கிளிச்சாமியைக் கலைத்து ஒரு வார்த்தையாவது கூறவைத்துவிடுவதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டார் குருக்கள். ஆனால் அது அத்தனை எளியதாக இல்லை. பெரும்பாலான பேச்சுகளுக்கு சாமி எதிர்வினையே தருவதில்லை. எனவே குருக்களின் பேச்சும் முற்றி முற்றி வந்தது.
‘சரசாவைத் தெரியுமோ?’ என்றார் குருக்கள் ஒருநாள்.
‘சிவா’ என்றார் சாமி.
‘சரக்குன்னா அவள்னா சரக்கு. என்ன ஒடம்பு. என்ன பேச்சு, என்னா தளுக்கு! அதெல்லாம் தலைமுறை தலைமுறையா படிஞ்சு வரணும். தொழில் செஞ்சு கத்துக்கணும். நம்ப வீட்டு பருப்புக் குழம்பு ஜென்மங்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராதுங்கறேன்.’
‘சிவா’ என்றது சாமி. உடனே கீச்சுக்குரல்கள் ‘சிவா! சிவா’ என்று எதிரொலி செய்தன.
‘நேத்தைக்குப் போயிருந்தேன். சாமி காசு பணம் பெரிசில்லை. மனுஷா தொடர்புதான் முக்கியம்ங்கறா. நூத்திலே ஒரு வார்த்தைங்கறேன். அவா சாதியிலே ஒரு வழக்கம் இருக்கு வேய். பிரம்மரேதஸ் கெடைக்காட்டி பெத்துக்கவே மாட்டாளாம். சும்மாவா ஜிகுஜிகுன்னு இருக்காங்கறேன். நான் இருக்கிறவரை உங்க பேட்டைக்கே பஞ்சமில்லையடிம்மான்னு சொல்லிட்டு வந்தேன். எப்டி? ஹெஹெஹெ…’
‘சிவா’ என்றது சாமி. கோயிலே சிவா என்று பொங்கியது.
குருக்களுக்கு வெறி ஏறியது. ‘இல்லை, தெரியாமத்தான் கேக்கிறேன். வோய், நீர் எதை நினைச்சுண்டு இப்படி ஒக்காந்திருக்கீர்? மனுஷன்னா சந்தோஷம் வேணும் வோய். ஆனானப்பட்ட சிவபெருமானுக்கே பெஞ்சாதி ரெண்டு. நீர் யாரு வோய், கைலாசத்துப் பூதகணமா? அப்படியிருந்தா உம்மையும் ரெண்டும் கெட்ட உருப்படியா அவனே படைச்சிருப்பானே. வாயத்தெறவும் ஓய், உம்முன்னு இருக்காம…’
‘சிவா’
ஸ்தம்பித்துப்போய் சற்று நேரம் உட்கார்ந்திருந்தார் குருக்கள். முகத்தில் நிர்க்கதியான ஒரு தவிப்பு. பிறகு ‘நாசமாப் போவும்’ என்று அடிவயிற்றிலிருந்து ஒரு புகைச்சல். எழுந்து போய் விட்டார்.
குருக்களுக்கு ராத்திரி தூக்கம் வரவில்லை. வேர்த்துக் கொட்டியது. கண்ணை மூடினால் உள்ளே உள்ளே டபடபவென்று ஏதோ கிளி சிறகடித்தது. காதில் சதா கீச்சுக்குரல் ‘சிவா’ என்றது. முதலில் ‘என்ன மனுஷன் சே’ என்ற வெறுப்புதான் ஏற்பட்டது. கிளிகளுடன் பேசிப் பேசித் தன்னையும் கிளி மாதிரி ஆக்கி வைத்திருக்கிறான். பிறகு மெல்ல ஒரு பீதி ஏற்பட்டது. உண்மையிலேயே இப்படி மனசையும் நாவையும் வென்றடக்க முடியுமா? இந்த ஜென்மத்தில் தன்னால் சாத்தியப்படாது. அப்படியானால் இது யார்? மக்கு மண்டூகமா? ஞானியா? சித்த புருஷனா?
நாற்பது வருடம் லிங்கத்தைத் தொட்டுணர்ந்த குருக்களின் மனம் உடனடியாகச் சிரித்தது. சித்தபுருஷனாவது ஒன்றாவது! எல்லாம் சோற்றுக்குப் போடுகிற வேஷங்கள். சரி, ஒருவேளை அது சித்த புருஷனாகவே இருந்து தொலைத்து விட்டால்…? குருக்களின் சந்தேகம் வளர்ந்தபடியே போயிற்று. இரவு வெளுக்கும் சமயம் அவர் எண்ணங்களின் சுமையினால் வதங்கிப் போய்விட்டிருந்தார். ஒருவேளை கடவுள் இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்ற பயம்தான் அவரைக் கோயில் காரியங்களை முறைப்படி செய்ய வைப்பது. அதுவே இப்போதும் துரத்தியது. எதற்கு வம்பு?
விடிந்ததும் விடியாததுமாக அரக்கப் பரக்க ஓடிவந்து கிளிச்சாமி காலில் விழுந்தார் குருக்கள். ‘சாமி தப்புப் பண்ணிட்டேன். மன்னிக்கணும். இந்தப் பாவிக்கு மன்னிப்பு குடுக்கணும்’ என்று வேண்டினார். சாமி சலனமின்றி ‘சிவா’ என்றது.
அவ்வளவுதான். குருக்களின் கடைசி மனத்தடையும் உடைந்தது. ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார். தொப்பை குலுங்கிய குலுக்கத்தில் குரலே வெளிவரவில்லை. கருணாகரன் அவரை அணைத்துச் சமாதானப்படுத்தினான். கிளிச்சாமி மௌனமாக எழுந்து சென்றது.
இந்தச் சம்பவம் கருணாகரனின் பிரச்சார வலிமையுடன் சேர்ந்து பரவி, சாமிக்கு கீர்த்தி சேர்த்தது. குருக்கள் சாமியின் கிளிகளில் ஒன்றை எடுத்து அதற்கு சரசாவின் பெயரைக் கற்றுத்தர அதிதீவிர முயற்சி செய்ததாகவும், ஆனால் கிளி சிவநாமம் தவிர வேறெதையும் கூற மறுத்துவிட்டதாகவும் வதந்தி பரவியது. கிளிகள் சாமியிடம் தவிர வேறொருவரிடமும் ஏதும் பேசாததும் அதற்கு வலிமை சேர்த்தது. தனக்கும் சரசாவுக்குமிடையேயான தொடர்புகள் அம்பலத்திற்கு வந்துவிட்ட நிலையில் ஊரார் பேச்சிலிருந்து தப்பவும், பாதி மனப்பூர்வமாகவும், குருக்கள் ஒரு மாறுதலைக் கைக்கொண்டார். அவர் நாவிலும் சிவநாமம் சதா ஒலிக்க ஆரம்பித்தது.
ஆனால் இரண்டு நாள் கழித்து, கிளிச்சாமி திராட்சைப் பழங்களைத் தனது கிளிகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது, மேற்படி சிவனடியார்களுள் ஒன்று சாமியின் தோளில் சகஜமாக ஏறி அமர்ந்து, சிவந்த கண்களை மடத்தனமாக உருட்டியபடி ‘சரசா’ என்றது. சாமியார் சவுக்கடி பட்டவர்போல ஒரு கணம் உடல் துடித்தார். கப்பென்று பறவையைப் பிடித்தார். அவர் கைக்குள்ளிருந்து அதன் தலையும் வாலும் வெளியே தொரிந்தது. தலை சொன்னது ‘சரசா…சரசா…?’
கிளிச்சாமி பழுதடைந்த பாக்கெட் ரேடியோவைக் குலுக்குவது போல அதைக் குலுக்கினார். குலுக்கக் குலுக்க அது ‘சரசா, சரசா!’ என்றது. சாமியார் ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றார். பிறகு உரக்க அதைப் பார்த்து ‘சிவா!’ என்றார். பலநூறு கிள்ளைகள் சிவா என எதிரொலிக்க, அது மட்டும் ஊடே அபசுரமாக ‘சரசா’ என்றது.
கிளிச்சாமி சற்றுநேரம் சுவாரில் சாய்ந்து அமர்ந்தார். எதிரே அந்தக் கிளியும் சிறகை விரித்து சாரிந்தபடி நின்றிருந்தது. சாமியார் அதன் மூஞ்சியைப் பார்த்தார். பரம வெள்ளையாக இருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவருள் ஏதோ பொங்கி வந்தது. அந்தக் கிளிமட்டும் எப்படி அதைக் கற்றுக்கொண்டது? யாரிடம் பழகுகிறது அது? குருக்கள் அதற்குக் கற்றுத் தந்துவிட்டாரா? வேறு எந்தக் கிளியும் எவரிடமும் பேசுவதில்லை. இதுமட்டும் என்ன பாப ஜென்மம்!
சிவனடியார் ஒரு சுற்றுப் பறந்து ஒரு துண்டு தேங்காயுடன் வந்தது. காலால் அதைப் பற்றி ஒருமுறை அலகால் கொத்தித் துருவி, மென்று விழுங்கிவிட்டு, ‘சரசா!’ என்றது. சாமியார் ஆவேசமாகப் பாய்ந்து அதைப் பிடிக்கத் தாவினார். அது லாகவமாக விலகி, விருட் என்று பறந்தது, சுவர்ப்பதுமையின் தோளில் அமர்ந்து, தலையை ஒரு மாதிரியாகச் சாரித்தபடி, ‘சரசா?’ என்றது.
‘சிவா’ என்று சாமியார் ஆங்காரத்துடனும் வெறியுடனும் கத்தினார்.
‘சரசா! சரசா!’ என்றது சிவகணம்.
சாமியார் அதை நோக்கிப் பாய்ந்தார். அது சிலை சிலையாக மாறி மாறிப் பறந்தமர்ந்து போக்குக் காட்டியது. சாமியார் கத்தக் கத்த அது ஒரே விடையைச் சொன்னது. கடைசியில் பிரகாரத்துக் கூரை மீது அமர்ந்தபடி அதிவேகமாக ‘சரசா-சரசா- சரசா-சரசா-‘ என்றது.
‘சிவா சிவா’ என்று சாமியார் அழுதார்.
‘சரசா சரசா’ என்று கிளி சொன்னது.
சாமியார் தன் மார்பில் ஓங்கி அறைந்தார்.
விம்மி விம்மி அழுதபடி ‘சிவா! சிவா!’ என்றார்.
‘சரசா!’ என்று தலையைச் சாரித்தது கிளி.
சாமியார் மெல்ல அடங்கினார். பிற கிளிகளைத் திரும்பிப் பார்த்தார். அவை தம்பாட்டில் ‘சிவா’ என்று வாழ்ந்து கொண்டிருந்தன.
‘சிவா’ என்று கனிவாக அழைத்தார்.
‘சரசா’ என்றபடி கிளி அருகே வந்து அமர்ந்தது.
‘சிவா’ என்றபடி சாமியார் அதைப் பிடித்தார்.
‘சரசா’ என்றபடி கிளி பிடிக்குள் தலையைச் சாரித்து கண்களைச் சுழட்டியது.
அதை அப்படியே தன் வேட்டிக்குள் மூடி ஓரமாக எடுத்துச் சென்றார் சாமியார். உள்ளே ‘சரசா சரசா’ என்று குரல் கேட்டது.
ஆளற்ற பிரகார மூலையை அடைந்ததும் சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரே அமுக்கு. ‘சரசா’ உயிர்விட்டது.
துணியை விரித்துப் பார்த்தார். பச்சை நிறத்தில், வயிறு அப்போதும் வெதுவெதுப்பை இழக்காமல், படுத்திருந்தது கிளி. அப்படியே தூக்கிச் சுவருக்கு அப்பால் விசிறினார். உடம்பு பரபரத்தது. திரும்பி ஓடி வந்தார். கிளிகளை நோக்கி ‘சிவா’ என்று கத்தினார். ‘சிவா’ என்றன குரல்கள். சாமியார் செவிகூர்ந்தார். ஏதாவது அபஸ்வரம் கேட்கிறதா? இல்லை என்று தெரிந்தது. மீண்டும் மீண்டும் சிவா என்று கூவினார். சுருதி சுத்தமாக சிவநாமம் எழுந்தது. சாமியாருக்கு மனக்குவடில் அழுத்தம் குறைந்தது. அன்று அவர் சாப்பிடவில்லை. நேரம் ஆக ஆக அவருக்கு அழுகை அழுகையாக வந்தது. சுருண்டு படுத்தபடி அழுதார். பிறகு தூங்கிப்போனார்.
இரண்டுநாள் கழித்து மீண்டும் சாமியாரை வதைக்கும் அந்தச் சொல் காதில் விழுந்தது. ஒரு சிவபக்தக் கிளி இன்னொரு பக்தையிடம் ‘சரசா’ என்று கொஞ்சுவதையும், அது வாலை விரித்து விசிறி ‘சரசா’ என்று பதிலளிப்பதையும் அவர் கேட்டார். இம்முறை சாமியார் அதிக நேரத்தைச் செலவழிக்கவில்லை. காதலர்களுக்கு அமரத்துவம் அளித்துவிட்டு யோசனையிலாழ்ந்தார்.
இதை இப்படியே விடக்கூடாது. கோயிலுக்குள் யாரோ வேண்டுமென்றே இதைச் செய்கிறார்கள். முதல் சந்தேகம் குருக்கள் மீது விழுந்தது. ஆனால் குருக்கள் ஆளே மாறிவிட்டார். சும்மா சொல்ல ஆரம்பித்த சிவநாமம் எசகு பிசகாக அவர் மண்டைக்குள் ஏறிவிட்டது. சதா வாய் ஓயாமல் ‘சிவா’ தான். தூங்கும்போதும் சிவா. ஏப்பமும், கொட்டாவியும், இருமலும், தும்மலும்கூட சிவகோஷம். முதலில் சற்று சந்தேகத்துடன் பார்த்த ஊராரும் அதை ஒரு உபாதை என்று ஏற்றுக்கொண்டார்கள்.
குருக்களுக்கும் உடலின் எந்தக் காற்றும் ‘சிவா’ என்று வெளியேறும்படி தசை அமைப்பு கிடைத்துவிட்டது. தர்மகர்த்தா பிள்ளைக்கு மாடுகள் தவிர வேறு அக்கறை கிடையாது. சாமியாருக்குக் கண்ணில் ஒருவித பித்துக்களை வந்துவிட்டது. சதா சந்தேகத்துடன் நடமாடினார். ஒவ்வொரு காலடியோசையையும் செவி கூர்ந்தார். ஒவ்வொரு பக்தகோடியையும் கூர்ந்து கவனித்தார். அவருடைய தேஜஸே போய் விட்டது என்று பேசிக்கொண்டார்கள். அவர் அருள் வழங்கினால் பலன் ஏற்படுவதும் குறைந்து வந்தது. அதற்கேற்ப தினம் இரண்டு கிளிகள் மதிலுக்கு வெளியே செத்துக்கிடப்பதை ஊரார் காண நேர்ந்தது.
சாமியார் குருக்களை விஷமாக வெறுக்க ஆரம்பித்தார். குருக்களைப் பார்த்தாலே அவர் உடம்பு நடுங்கும். உதடுகள் துடிக்கும். ஆனால் பக்திப் பரவசமாகக் குருக்கள் ‘சிவா’ என்று திருப்பிச் சொல்லுவார்.
சாமியாருக்குத் தூக்கமும் குறைந்து விட்டது. ராத்திரியில் அரைத் தூக்கம்தான். தனது கிளிகளின் மனத்தைக் கலைக்கும் பாவியின் காலடியோசைக்காக அவருடைய ஒரு செவிப்புலன் எப்போதும் காத்திருந்தது. ஆனால் கிளிகள் நிரம்பிய மண்டபங்களில் யாருமே எப்போதுமே நுழையவில்லை. சாமியார் மூன்று நாளையத் தவிப்பிற்குப் பிறகு அன்றுதான் தூங்கினார். கனவுகளும் வெளிக்குரல்களும் கலங்கி வந்த சுழியின் ஆழத்திலிருந்து ‘சரசா’ என்ற குரல் கேட்டது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. தொண்டை உலர்ந்திருந்தது.
கோயில் ‘ஓ’ வென்று கிடந்தது. கிளிகளின் சிவகோஷம் எழுந்தது. சாமியார் சில கணங்கள் வெறித்தபடி அமர்ந்திருந்தார். பிறகு தன்னருகே ஏதோ பொறுக்கியபடி யோசித்தார் சுற்றி வந்து கொண்டிருந்த கிளியைப் பிடித்தார். அதை முகத்தருகே கொண்டுவந்து உற்றுப் பார்த்தபடி ‘சிவா’ என்றார். வேண்டாம் விஷப்பரிட்சை என்றது மனம். ஆனால் விடவும் முடியவில்லை. தயங்கினார். பிறகு மனதை உந்தி முன்நகர்த்திக் குரலைக் குவித்து அதனிடம் ‘சிவா’ என்றார்.
சிவந்த அலகைத் திறந்து ‘சரசா’ என்றது பறவை.
சாமியாரின் உடம்பு தூக்கிவாரிப் போட்டது. அதைவிட்டு விட்டு, தன் முகத்தைக் கைகளால் மூடியபடி உடல் குலுங்கினார். அது விலகி எதையோ பொறுக்கி விழுங்கிய பிறகு உற்சாகமாக சாமியாரிடம் ‘சரசா?’ என்று விசாரித்தது.
சாமியார் திடீரென்று கேவிக்கேவி அழ ஆரம்பித்தார்.
இரவு முழுக்க. மறுதினம் பகல் முழுக்க, அழுதபடி உட்கார்ந்திருந்தார். அன்றிரவு கோயிலைவிட்டு ஓடிப்போய் முக்குத் தெருவில் நுழைந்து ஒவ்வொரு வீட்டுக் கதவாகத் தட்டி ‘சரசா வீடு எது?’ என்று விசாரித்து அலைந்தார். மறுநாள் அவர் ஊரைவிட்டு ஓடிப்போய்விட்டதாகத் தெரிந்தது.
பத்து நாட்களில் கோயிலே ‘சரசா’ நாமத்தினால் நிறைந்தது. பிரகாரங்களும் மண்டபங்களும் அதிர்ந்தன. அபச்சாரம் என்று குதித்தார் தர்மகர்த்தா. மக்கள் கொதித்து எழுந்தனர். சாமியாரைத் தேடிக் கையில் கம்புகளுடன் கும்பல்கள் அலைந்தன. குருக்களுக்கு சீட்டுக் கிழிந்தது. கிளிகள் குறவர்களால் வேட்டையாடப்பட்டு, அழிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு குறவனுக்கும் ஒரு கூடை கிளி.
குருக்களின் மனைவியும் குழந்தைகளும்தான் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். அவர் கவலைப்படவில்லை. சிவநாமத்தை ஜெபித்தபடி பிள்ளையார் கோயில் திண்ணையில் அமர்ந்துவிட்டார்.
-1992
(நன்றி: தட்டச்சு செய்து உதவிய நண்பர் – K.பாலா, சக்தி வாடகை நூலகம், திருநெல்வேலி)