கடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு

நெஞ்சே,
காணும் இவ்வுலகை கனவென்றே இரு,
சுற்றத்தை, கூடிப் பின் ஓடும் சந்தைக்கூட்டமென்றே இரு,
வாழ்வை, குடங்கவிழ்நீர் ஓட்டமென்றே இரு,
-பட்டினத்தார்-

நண்பர் ஒருவர் சரக்குக் கப்பலில் பணி புரிகிறார். துறைமுகத்துக்குள் கப்பல் நுழையும்போதுதான் அவரது பணி துவங்கும். நிற்கும் சரக்குக் கப்பல் கூட்டத்தில் தடம் பிடித்து தன் கப்பலை சரக்கு இறக்கி ஏற்ற வாகாக நிறுத்தி, பின் அதே போல அடுத்து வரும் கப்பல்களுக்கு இடர் இன்றி தடம் கண்டு துறைமுகத்தை விட்டு கப்பலை வெளிக்கொண்டுவருவது வரை,கேப்டனுக்கு உதவுவது அவரது பணி.

தென் துருவம் துவங்கி, வட துருவம் வரை அவர் கால் பதிக்காத துறைமுகங்களே இல்லை. உதிர்ந்த ஈசலின் இறக்கையை காற்றிலிருந்து பாதுகாப்பது போன்ற பாவனையில், தனது வீங்கிப் பழுத்த பாஸ்போட் புத்தகத்தின் பக்கங்களை புரட்டி, பல்வேறு தேசங்களின் முத்திரைகளை காட்டுவார்.

பீரில் உளம் ஊறிய பொழுதுகளில், கடல் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார். என் ஒன்றரையணா வாழ்வில் நின்று அவரது டாலர் அனுபவங்களை வாய் பிளந்து கேட்பேன். ஒரு முறை நடுக்கடலில் மிதந்துகொண்டிருக்கும் மரப்பெட்டி ஒன்றினை கண்டெடுக்கிறார்கள். பொதுவாக சரக்குக் கப்பல் பெட்டிகள் நீர் புகா வண்ணம் மூடக் கூடியவை. இப்படிக் கடலில் கண்டெடுக்கும் பெட்டிகளில் பலசமயம் அபூர்வங்கள் கிடைப்பதுண்டு. பெட்டியை திறந்து பார்த்தால் உள்ளே, குற்றுயிராக ஒரு ஆப்ரிக்க யுவன்.

ஆப்ரிக்காவிலிருந்து அகதியாக ஆஸ்திரேலியா நோக்கி கிளம்பியவன். ஆஸ்திரேலியா போகும் சரக்குக் கப்பல் ஒன்றினில், மோப்பம் பிடிக்கும் வேட்டை நாய் காவல்களையும் மீறி ஒளிந்து கொள்கிறான். தனது தேச எல்லை கடந்ததும் வெளிப்படுகிறான். கேப்டனுக்கு கடும் கோபம். யுவனுக்கு ஆஸ்த்ரேலியாவில் அகதி வாழ்வும், அதன் வழி வசதியும் கிடைக்கும். கேப்டனுக்கு வேலை போகும்.பார்த்தார் கேப்டன். அவனைப் பிடித்து ஒரு பெட்டியில் அடைத்து கடலுக்குள் எறிந்துவிட்டார். காப்பாற்றப்பட்ட ஆப்ரிகன், அந்தப் பெட்டியின் எண்ணைக் கொண்டு தான் வந்த கப்பல் மீது வழக்கு தொடுத்தான். இப்போது அவன் ஆஸ்திரேலியாவில் வசதியாக. கேப்டன் சிறைக்கம்பிகளுக்குப் பின்னே.

பதினாலு நாட்கள் உணவும் நீரும் இன்றி, நடுக்கடலில் மிதந்துகொண்டிருந்த அந்த ஆப்ரிக்க யுவனின் கதை பாப்பிலான் கதையையும் விஞ்சும் ஒன்றாகப் பட்டது. மனிதனால் எதைத்தான் செய்ய முடியாது?
இதேபோல குறிஞ்சிப்பாடி அகதிகள் முகாமில் இருந்த இளம்பெண் நான்கு நாட்கள் கடலில் கைவிடப்பட்டு கரை சேர்ந்த கதையை சொன்னார். ஒரே ஒரு இரவு படுக்கும் இடம் மாறிப்போனாலே நமக்கு தூக்கம் பிடிக்காது. அனைத்தையும் இழந்து அடுத்த வேளை உணவும், உறக்கமும் எங்கே என்றே தெரியாமல், தன் மண்ணை விட்டு கிளம்புகிறானே ஒரு அகதி, அவனது துயர் மானுடத் துயர்களில் தலையாயது என்றே சொல்ல வேண்டும்.

இலக்கியம் ஆதியாகமத்தில் யூதர்களின் புலப்பெயர்வு துவங்கி, எத்தனை புலப்பெயர்வு வாழ்வுகளை சுட்டுகிறது. யாரறிவார் ‘’யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்று உலகுக்கு உரைத்தவன், ஒரு புலம்பெயர் ஆத்மாவாகக் கூட இருக்கக்கூடும்.

இலங்கை இனப்படுகொலைகளைத் தொடர்ந்து, தமிழர்களின் மாபெரும் புலப்பெயர்வு துவங்குகிறது.அதில் தொண்ணூற்றுமூன்றில் தனது பத்தொம்பதாவது வயதில், இலங்கையின் குப்ளான் எனும் சிறு கிராமத்திலிருந்து , ரஷ்யா, ஜெர்மனி வழியே கள்ளத்தனமாக பல நாட்டு எல்லைகளை கடந்து கனடாவுக்குள் நுழைந்து, இரண்டாயிரத்துமூன்றில் அகதி உரிமம் பெற்று, நிலையான பணியில் அமரும் நிஷாந்த் எனும் யுவனின், புலப்பெயர்வு பயணத்தில், அகதி வாழ்வில், அவனுக்கு நேர்ந்த, நிகழ்ந்த, பார்த்த,கேட்ட, சம்பவங்களில் மையம் கொள்கிறது, தமிழின் மகத்தான கதைசொல்லிகளில் ஒருவரான அ.முத்துலிங்கம் அவர்களின் புதிய நாவலான ‘கடவுள் தொடங்கிய இடம்’

மாஸ்கோ,உக்ரைன்,ஜெர்மனி,கனடா என,வெவ்வேறு நிலங்களில், பத்து வருடங்களில் நிஷாந்தை பாதிக்கும் வாழ்க்கைத் தருணங்களே, நாவல். அகதி வாழ்வில் பலர், கிளம்பி எந்த இடரும் இன்றி இலக்கை அடைகிறார்கள். பலர் எல்லை கடக்கையில் சிக்கி சிறை செல்கிறார்கள், பலர் காணாமல் போகிறார்கள், சிலர் வருடக்கணக்காக எங்கெங்கோ அலைக்கழிந்து இலக்கை அடைகிறார்கள். இதில் இறுதி வகைமைக்குள் வருபவன் நிஷாந்த்.
அகதிகள் தொடங்கிய இடம் தொட்டு, சேரும் இடம் வரை இடைபடும் எல்லைகள்தோறும் விதவிதமான ஏஜண்டுகள்,ப்ரோக்கர்கள் வசம் விற்கப்படுகிறார்கள். பயணம் முதல் தங்கும் இடம் வரை அனைத்தும் சட்ட விரோதம். ஆகவே ஏஜெண்ட்டுகள் தலையீடு இன்றி, பயணிக்கும் அகதிகள் எதையுமே செய்ய முடியாது. வேலைக்கு போக முடியாது. குறைந்தபட்சம் அறைக்கு வெளியில் சென்று ஊர் சுற்றக் கூட முடியாது. விடை அளிக்க முடியாத ஒரு வினா போதும், அனைவருமே சிக்கிக்கொள்ள நேரிடும்.

நிஷாந்தின் அறைக்குள் விதவிதமான தேசத்தை சேர்ந்த விதவிதமான அகதிகள் வந்து வந்து போகிறார்கள். போராளிகள், வங்கிக் கொள்ளையர்கள், கற்பழித்தவர்கள், போதை மருந்து கடத்துபவர்கள் என வித விதமான நபர்கள். எல்லைக்காவலின் பலவீனம் அறிந்து அவ்வப்போது ஏஜென்ட்டுகளால் திடீரென அழைத்து செல்லப்படுவார்கள் வழமை போல, சிலர் சிறைக்குபோக சிலர் தொலைந்து போக, ஆசீர்வதிக்கப்பட்டோர் நிற்க நிலம் காண்கிறார்கள்.
புலம்பெயர் வாழ்வால் சிதறி, தனது குடும்பத்தை தேடித் போகும் சந்திராமாமி, குழந்தைகளை தேடிப்போகும் சகுந்தலா, தனது குழந்தையுடன் கணவரை தேடிப்போகும் ஈஸ்வரி, தனது மாணவர்களை தேடிப்போகும் அம்பிகாபதி ஆசிரியர், அனைத்துக்கும் மேல் அகல்யா, என நிஷாத் உடன் தங்கிஇருந்தவர்களுடன் அவன் வாழ்வில் நிகழும் பாதிப்புகளே நாவல்.

குடுமபத்தை விட்டுப் பிரிந்து மாஸ்கோவின் அறைக்குள் ஒடுங்கிய நாள் துவங்கி, விதவிதமான முகங்கள் கொண்டு மானுடத்துயர் நிஷாந்தை வந்து அடைந்துகொண்டே இருக்கிறது. கூடவே இருண்ட காட்டில் மின்மினி ஒளி போல நம்பிக்கையின் உவகையும். ஆசிரியர்தான் நிஷாந்தின் அனைத்து துயர் கணங்களிலும் டெலிபோன் குரல் வழியே துணையாக நிற்கிறார். அவனுக்கு முதல் நண்பரும் அவர்தான், எந்த இடரும் இன்றி இலக்கை முதலில் சேர்வதும் அவர்தான். அவரது சொற்களே நிஷாந்த்க்கு பல சமயம் நம்பிக்கை அளிக்கிறது.

உக்ரைனில் அவனை மிகவும் பாதிக்கும் உறவு, சந்திரா மாமி, கொஞ்சம் இலக்கியம் கற்றவள், பறவைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவள், நன்கு சமைக்கத் தெரிந்தவள், இவன்மீது தாய் போன்ற கரிசனம் கொண்டவர். லிதுவேனியா எல்லையை கடக்கும்போது, இருவரும் இரவு இருளில் வழி தவறி, சதுப்பு நிலம் ஒன்றினில் சிக்கிக்கொள்கிறார்கள். பறவையின் ஒலியைக் கொண்டு பாதை கண்டுபிடிக்கிறாள் சந்திரா மாமி. மீளும் முயற்சியில் மாமிக்கு காயம்பட, உக்ரைன் சீதோஷ்ணம் மாமியை வாட்ட, சில நாள் படுக்கைவாசத்துக்குப் பின் ஒரு பறவையின் அழைப்பை ஏற்று, மாமி நிஷாந்தை விட்டுஇயற்கை எய்துகிறாள்.

ஏஜண்ட் ஏமாற்ற இரண்டு வருடம் உக்ரைனிலேயே சிக்கிக் கிடக்கிறான் நிஷாந்த். அப்போது அவன் அறைக்கு குழந்தையுடன் வருகிறாள் ஈஸ்வரி. கணவன் ஈஸ்வரி குழந்தைக்காக அங்கே காத்திருக்க, இங்கே ஈஸ்வரி அலெக்ஸ் எனும் மற்றொரு அகதியுடன் நெருக்கம்ஆகிறாள். பிடிக்காத நிஷாந்த் அலெக்ஸ்உடன் சண்டை போட்டு, ஏஜெண்ட்டின் கோபத்துக்கு ஆளாகிறான்.

பிறகு வருகிறாள் அகல்யா. நிஷாந்த் தான் தங்கிஇருக்கும் வீட்டு எஜமானிஅம்மா வசம் அகல்யாவை சில அடிப்படை ருஷ்ய சொற்கள் கற்க அழைத்துப் போகிறான். நிஷாந்தின் எஜமானியம்மா மீதான அன்பும்,அகல்யா மீதான காதலும் சூழல் காரணமாக முத்தங்களும் அணைப்புக்களுமாக இறுகுகிறது. இம்முறை அகல்யாவுடன் நிஷாந்த் ஸ்லோவாக்கியாவில் எல்லை தாண்ட முயன்று, அவன் மட்டும் பிடிபடுகிறான். போலிஸ் வசம் அடி வாங்கி அகல்யா,அகல்யா என கதறுகிறான். இங்கே இப்படி ஒரு ஆளே இல்லாதது போன்ற பாவனையுடன் போயே போய்விடுகிறாள் அகல்யா.

இம்முறை வேறொரு அகதிக்குழு அறைக்கு வருகிறது. அதில் நாயகமாக புஷ்பநாதன் வீரசைவ வேளாளர் விளங்குகிறார். ஒருமுறை சாப்பாட்டு சண்டை பெரிதாகி, புஷ்பநாதன் சமையல்காரரை கத்தியால் குத்தி கொலை செய்ய, மொத்தக் குழுவும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறது.

இம்முறை வேறு வழியே இன்றி ஓடி, வெற்றிகரமாக எல்லையை தாண்டி ஜெர்மனியை அடைகிறான். அங்கே சத்யன் எனும் நண்பனைக் கண்டு உணவகத்தில் கோப்பையை கழுவும் வேலையில் அமர்கிறான். ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் அகல்யாவை சந்திக்கிறான். பித்து தலைக்கேற, இந்த நிலத்தில் இனி இருக்கவே கூடாது என முடிவெடுத்து, வழமைபோல சில தோல்விகளுக்குப்பின் கனடா வந்து இறங்குகிறான்.

வேலை தருவதாக சொன்ன சற்குணத்தை நம்பி, அவன் திருடன் என்பதை அறியாமல் அவனுடன் தங்குகிறான். சற்குணம் அனைத்து காரியங்களையும் நிஷாந்த்தைக் கொண்டே செய்கிறான். சூழ்ச்சி புரிந்து நிஷாந்த் தப்புகிறான். கற்பகவிலாஸ் எனும் உணவகத்தில் வேலையும், அங்கிருக்கும் ஆச்சியின் நட்பும் கிடைக்கிறது.
வழியில் உக்ரைன் அறையில் பார்த்த ஈஸ்வரியை சந்திக்கிறான். அவள் மனம் திருந்தி கணவருடன் ஏற்றுமதி தொழில் ஈடுபட்டு இருக்கிறாள். அவள் தனது கம்பனியிலேயே நிஷாந்த்துக்கு வேலை போட்டு தருகிறாள்.
சற்குணத்தின் மொட்டைக் கடிதங்களையும் மீறி, நிஷாந்தின் அகதிஉரிமையை அரசு உறுதி செய்கிறது.
புதிய வீட்டின் சாவி நிஷாந்தின் கையில், கதவை திறக்க செல்கிறான். நாவல் நிறைகிறது.

நாவல் நெடுக,ஸ்லைட் காட்சி மாறுவதுபோல விதவிதமான மனிதர்கள், தனித்துவமான குணாம்சங்களுடன் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஜம்ப்பர் என்பவன் பற்றிய வர்ணனை இது.
//ரௌடி முன்பக்கம் கைலியை மடித்துப் பிடிப்பான். பெரிய ரௌடி பின்பக்கம் மடித்துப் பிடிப்பான். ஜம்ப்பர் முன்பக்கம் மடித்துப் பிடித்திருப்பான்//.

நாவலின் தனித்துவமான பாத்திரம் மாசி என்பவர் சொல்லும் கதையில் வரும் மாஜிஸ்ட்ரேட். மாஜிஸ்ட்ரேட் இனக் கலவரத்தில் புலம்பெயர்ந்தவர். கையில் ஒரு குடும்ப வரலாறு டைரி வைத்திருக்கிறார். அவரது ஆறாவது தலைமுறை பூட்டன். மிக மிக பணக்காரன். டச்சு அரசையே எதிர்த்தவர். அதன் காரணமாக டச்சு அரசு வசம் தனது சொத்துக்களை இழந்தவர். பழிக்கு பழி வாங்கும் விதமாக இப்போது மாஜிஸ்ட்ரேட் இரண்டு நாடுகளில் வெற்றிகரமாக தன்னை அகதியாக பதிந்திருக்கிறார். அதில் ஒன்று டச்சு நிலம். தாத்தா விடம் அரசு பறித்ததை பேரன் அகதியாக வசூல் செய்கிறார். திருமணம் கூடுகிறது. அனைத்தும் சுபமாகி வரும் நேரம், மாஜிஸ்ட்ரேட் கைது செய்யப் படுகிறார். எது அ.முத்துலிங்கமோ அது முழுமையாக கூடி வந்த அத்யாயம் இது.

மனித மனம் எத்தனை விசித்திரம் கூடியது என்பதற்கு நாவலுக்குள் வலிமையான இரண்டு தருணங்கள் வருகிறது. அறைக்குள் கொலை நடந்து போலீஸ் வந்து, அனைவரையும் வாரிச் செல்கிறது. போலீஸ் சும்மாவே அடிப்பார்கள். கொலைவேறு நிகழ்ந்துவிட்டால் கேட்கவா வேண்டும். உக்ரைனில் வாய்க்குள் பெயர் நுழையாத சிற்றூருக்குள், காவல் நிலையத்தில் வைத்து நிஷாந்த் குழு மீது தீபாவளி கொண்டாடுகிறது காவல்துறை.அனைத்தும் முடிந்து அறைக்கு திரும்பியவர்கள், காயத்துக்கு மருந்திட்டபடி விட்ட தமிழ்ப்படத்தை விட்ட இடத்திலிருந்தது தொடருகிறார்கள்.
ஒருமுறை ஏஜென்ட் நிஷாந்த் வசம் சொல்கிறார். ஒருபோதும் உன்னை பிறருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளாதே. சும்மா பொழுதுபோக்குக்கு தெருவிளக்கை கல்லால் அடித்து உடைப்பதுபோல, அதுவரை உன்னுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர் சும்மா பொழுதுபோக்குக்கு உன்னை எல்லையில் காட்டிக்கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்.

காதல், நட்பு, தாய்மை, தந்தைமை என ஆராத்துயரின் சித்திரங்கள் நாவலை நிறைக்கிறது. நிஷாந்தின் கடவுச்சீட்டில் நிஷாந்த்தை ஏமாற்றிவிட்டு அவனது நண்பன் பயணிக்கிறான். அவன் பயணித்ததோ போதை கடத்தும் குழுவுடன். சிக்கி சிறை செல்கிறான். அங்கிருந்து நிஷாந்த்துக்கு கடிதம் எழுதுகிறான் ‘’ நீ நல்லவன். உனக்கு துரோகம் இழைத்ததற்கு தண்டனையாக இங்கு தனிமை சிறையில் இருக்கிறேன். ஆனால் இது நீ செய்திருக்க வேண்டிய பயணம். நீ தப்பிவிட்டாய் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’’.

இலங்கையில் இருக்கும் தாய் நிஷாந்துக்கு கடிதம் எழுதுகிறாள் அதில் வரும் வரி ‘’ நீயும் நானும் ஒன்பதுமாதம் ஓருடலில் ஈருயிர் கொண்டு வாழ்ந்தோம் எனும் நினைப்பு மட்டுமே இன்று எனக்கு ஒரே ஆறுதல்’’ தாய் மகன் பிரிவாற்றாமையை, இத்தனை வலியுடன் பதிந்த வரிகள் பிறிதொன்றில்லை.

அகல்யாவின் தாய், மிகுந்த கொடுமைக்கு உட்பட்டு வாழ்கிறாள். ஒருநாள் அகல்யாவுக்கு தலை சீவி விடுகிறாள்.அலங்கரித்து அழகு பார்க்கிறாள். நெடுநேரம் மௌனமாக மகளை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அன்று மாலை வெளியே போன அம்மாவை, அதன்பின் அகல்யா பார்க்கவே இல்லை. அகல்யாவின் அனைத்து சுயநலமும் அங்கிருந்து துவங்கி இருக்கலாம்.

மாஜிஸ்ட்ரேட் அம்மா இறக்கையில், அவளது தலையணைக்கு கீழே மகன் எழுதிய கடிதங்களின் குவியல். ஒரு முறை பெல்ஜியத்தில் நிஷாந்த் யார் கண்ணிலும் படாமல் பயணிக்கிறான். ஒரு அம்மா அவனையே கவனிக்கிறாள். நிஷாந்த் பயந்து வெகு விரைவாக அவ்விடத்தை விட்டு அகல முயல. அந்த அம்மா அவனை துரத்தி வருகிறாள். அவளது கையில் சில நாட்களுக்கான உணவு. நிஷாந்த் கையெடுத்து கும்பிடுகிறான். வேறென்ன செய்ய இருக்கிறது?
மருத்துவம் படிக்க கனடா சென்ற மகன் சபாவிடமிருந்து ஒரு கடிதமும் இல்லை. நாளிதழில் பிரபல வங்கிக் கொள்ளையனாக தனது மகனின் படத்தைக் காண்கிறார் தந்தை. நாளிதழை கையில் பிடித்தபடி தெருவெங்கும் பித்தனைப்போல் அலைகிறார். வாய் மட்டும் சபாவை குழந்தையில் கொஞ்சிய பெயரான ‘சப்புக்குட்டி சப்புக்குட்டி’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறது.

கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் புஷ்பராஜனை காண்கிறான் நிஷாந்த். இலங்கையில் இருந்து கிளம்பி கால் நூற்றாண்டுகாலம் அகதியாக அலைந்தவர், மகள் நினைவு கொண்டு ஏங்குகிறார். அவளுக்கு கிட்காட் பிடிக்கும், அப்பா அனுப்புனாருன்னு சொல்லி அனுப்புறியா என்று வினவுகிறார்.இருபதுவயது மகள். நிஷாந்த் அவர் கைக்குள் பொதிந்துவைத்திருக்கும் மகள் படத்தைப் பார்க்கிறான். அதிலிருக்கும் மகளுக்கு மூன்று வயது.
கையில் புது வீட்டின் சாவியுடன், கடந்து போன அனைத்தையும் யோசிக்கிறான் நிஷாந்த்.
இந்த வாழ்வுக்கு என்னதான் பொருள்? விஞ்ஞானமும், மெய்மையும், கலைகளும் காலம்தோறும் விடை தேடும் வினா பொருளற்றது எனும் விடை முன் இருள் அந்தகாரமாக எழுந்து நிற்கிறது.

வெண்முரசு நாவல் வரிசையில் ஒரு தருணம் உண்டு.இரவு , போர்க்களம். வீரர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனைவி குழந்தைகள் எங்கோ இவர்களின் பொருட்டு துயில் நீக்கி காத்திருக்கிறார்கள். இதோ இங்கே இவர்கள் உறங்கிக்கொண்டிருக்கிரார்கள். இவர்களில் எவர் வீடு மீள்வார் தெரியாது. கொல்லவும்,கொல்லப்படவும் பிறந்தவர்கள். உறங்குகையில் குழந்தை போலும் தோற்றம் அளிப்பவர்கள்.

அர்ஜுனன் கேட்கிறான் ‘’கிருஷ்ணா இவர்களைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றும்?’’
கிருஷ்ணன் சொல்கிறான் ‘’புன்னகைத்துக் கொள்வேன்’’.

அ. முத்துலிங்கம் செய்வதும் இதுதான்.

மோசே எனும் நாய் பற்றி வர்ணிக்கிறார். இரண்டே வரிகள். பாய்ந்து பாய்ந்து நக்கும், பார்க்க உருண்டையாக இருக்கும். இனி வாசகன் மனதில் அந்த நாய் நீங்காத கதாபாத்திரம். புன்னகை எழாமல் அந்த நாயை நினைத்துக் கொள்ளமுடியாது.
//அந்த ஏஜன்ட் ரொம்ப ஜாக்கிரதையான ஆசாமி, நஞ்சே அருந்தினாலும்கூட எக்ஸ்பைரி தேதி சரிபார்த்தபின்தான் அருந்துவார்//.
//கொஞ்சம் பெரிய கோட். அணிந்தபிறகு உள்ளே இன்னொருவருக்கு இடம் இருந்தது//.
அகதியாக எல்லை தாண்டும் நிஷாந்த் உடன் இன்னொரு பெண்ணையும் அழைத்து செல்ல கட்டளை வருகிறது. அவளையும் அழைத்து சென்றால் குறிப்பிட்ட இடம் செல்ல செலவை எஜெண்டே ஏற்றுக் கொள்வதாக சொல்கிறார். அப்போது நிஷாந்த் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான் ‘’ நடக்க ஏலாத எலி, தொடப்பக்கட்டாய இழுத்துக்கிட்டுப்போக பாத்துச்சாம்’’.
ஆம் இந்த அர்த்தமின்மை எனும் வாழ்க்கைப் பிரவாகம் முன் புன்னகைத்தவாறே நின்றபடி நம்மையும் புன்னகைக்கவைக்கிறார் அமு.

இந்த நாவலின் பலம், நாவல் எனும் வடிவின் வழியே ஆசிரியர் கண்டடைந்து வாசகனுக்கு அளிக்கும் தரிசன பலம்.
லௌகீகமாக கனிந்த ஆச்சி சொல்கிறாள். ‘’ஈரப் பொடவ உடனே காயனும்னா எப்புடி? கொஞ்சம் நேரம் ஆவும். காத்திருக்கணும். ஆனா நிச்சயம் காயும். மனுஷனோட எல்லா கஷ்டமும் அப்படித்ததான். கொஞ்சம் காத்திருந்தா போதும் காஞ்சிடும்’’

பகீரதன் எனும் இயக்கப் பெடியனின் சொல்லாக ஒரு வரி வருகிறது. கழுத்தில் தொங்கும் சயனைட் குப்பியை நெருடியபடி சொல்கிறான் ‘’ பார் சாகணும்னாகூட இத்தனை வழி இருக்கு. அப்போ வாழ எத்தனை வழி இருக்கும்?’’
தற்கொலை முடிவுடன் ரயிலுக்காக காத்திருக்கும் நிஷாந்த், அலெக்ஸாண்டர் எனும் பரதேசியை சந்திக்கிறான். அவன் சொல்கிறான் ‘’காதலிப்பது மட்டுமல்ல இன்னும் மனிதன் செய்ய ஏனென்னவோ இருக்கிறது. பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. [அங்கு ஓடும் நதி ஒன்றின் பெயரை சொல்லி] அதன் துவக்கம் முதல், இறுதி வரை பார்த்திருக்கிறாயா? இங்கே ஆயிரம் ஆண்டு பழமையான தேவாலயம் இருக்கிறது. இணையற்ற அழகுடன் அங்கு ஒரு சரவிளக்கு தொங்கிக்கொண்டிருக்கிறது. அதை பார்த்துவிட்டாயா? நித்தமும் வியக்க இங்கு நிறைய இருக்கிறது’’
ஆம் அபத்தமான அர்த்தமற்ற இந்த வாழ்வு மரணத்தில் முடியும் ஒன்றுதான். ஆனால் அந்த வாழ்வில் நித்தம் நித்தம் கண்டு வியக்க, புன்னகைக்க எண்ணிறந்த விஷயங்கள் உள்ளது. என்பதே இந்த நாவல் வாசகனுக்கு கையளிக்கும் பொக்கிஷம்.

இந்த நாவலின் பலவீனம். அது வெகுஜனப் பத்திரிகைக்காக வாராவாரம் எழுதப்பட்டதால் உண்டானது. இந்த நாவல் அது மையம் கொள்ளும், பேசும் இடர்கள் சார்ந்து விரிந்து பரவாமல் முட்டி நிற்கிறது. இதன் காரணமாக, படைப்புக்குள் ஆழம் நோக்கிய ஆசிரியரின் தன்னிச்சையான பயணம் தடுக்கப்படுகிறது.

உதாரணமாக சக அகதி, காவலர்களால் தடுக்கப்பட்டு நிஷாந்த் பெயர்சொல்லி கதற கதற நிஷாந்த் முகம் காட்டாமல் போகும் இடம். நீலச் சொண்டுகள் கண்டு நிஷாந்த் அகல்யா நினைவெழுந்து அலைக்கழிவதைக் காட்டிலும், இந்த தருணத்தில்தான் அகல்யா நினைவு எழ, அவளின் விசித்திர இயல்புகள் சார்ந்து அவன் சிந்திக்க சரியான தருணம். இத்தகு நகர்வுகள் இந்த நாவல் எழுதப்பட்ட தளம் காரணமாக நிகழவில்லை.

ஈஸ்வரி மனம் மாறி வாழ்வில் தெளிவது சில சொற்களில் கடந்து செல்லப்பட வேண்டிய ஒன்றல்ல. இத்தனை வித்யாசமான நிலப்பரப்புகள் ஊடே நிஷாந்த் பயணித்தும், சொந்த கிராமம் துவங்கி, எந்த நகரத்தின் நிலமும் காட்சிப்படுத்தப் படவே இல்லை. ஒரு தற்கொலைக்கு முன் மனம் இந்த உலகின் காட்சிகளை எப்படி அணுகும், பெயரோ பாஷையோ புரியாத புதிய நிலத்தின் காவல் நிலையம் எத்தனை பதட்டம் அளிக்கும்?

பூமி தொடங்கிய ஆதிகாலம் தொட்டு, தேலோன் பள்ளத்தாக்கு கன்னிநிலமாகவே இருக்கிறது. அங்கிருந்து ஈஸ்வரி கண்டடைந்ததே தன் நிறுவனத்துக்கான பெயர். கன்னி நிலம் அளிக்கும் தரிசனம் ஒன்றினால் நிகழும் மாபெரும் அகமாற்றம். எத்தகையதொரு தருணம்? இது நாவலுக்குள் முற்றிலும் தவறவிடப்பட்ட காரணம், வெகுஜன பத்திரிகை இதைத் தாங்காது என்பதே.

அனைத்துக்கும் அப்பால், எம்மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அம்மொழியில் இதை அம் மக்கள் தமதென்று கொண்டாடுவர். இன்றைய தேதியில் உலக அகதிகள் எண்ணிக்கை ஐந்து கோடி என்று நாவலுக்குள் ஒரு குறிப்பு சொல்கிறது.
.

தமிழில் ஒரு உலக நாவல். நவீனத் தமிழ் கண்ட மகத்தான படைப்பாளிகளுள் ஒருவர் அ. முத்துலிங்கம் எனும் கூற்றுக்குப் பதாகை ‘கடவுள் தொடங்கிய இடம்’ எனும் இந்த நாவல்.

.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 18
அடுத்த கட்டுரைஇந்தியசிந்தனை- ஒரு கடிதம்,விளக்கம்