பகுதி நான்கு : எழுமுகம் – 3
மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்?” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்? இங்கு அவள் என்ன செய்கிறாள்?” என்றான் சிசுபாலன். சத்ராஜித் தயங்கி “இங்கு அவளுக்குரிய அனைத்தும் உள்ளது” என்றார். சிசுபாலனின் இதழ்கள் இளநகையில் வளைந்தன. “இங்கு அவள் என்ன செய்கிறாள்? பசுபுரக்கிறாளா?” என்றபடி சித்ரகர்ணனை நோக்கினான். அவன் புன்னகைசெய்தான்.
கண்களில் சினம் மின்னி மறைய பிரசேனர் “ஆம் அரசே, பசுபுரத்தல் யாதவர்களின் தொழில்” என்றார். சிசுபாலன் திரும்பி அவரை நோக்கிவிட்டு “அவள் என் மாளிகையில் பசு புரக்க முடியாது. சேதிநாட்டு அரசியர் செய்ய வேறுபல பணிகள் உள்ளன” என்றான். சித்ரகர்ணன் உரக்க சிரித்தான். பிரசேனர் ஏதோ சொல்ல வாயெடுக்க சத்ராஜித் வேண்டாம் என்பதுபோல கண்களை விழித்தார். படித்துறையில் இருந்து இல்லம் வரை மரவுரி விரிக்கப்பட்ட மலர்ப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. தோரணங்களும் கொடிகளும் அணிசெய்த வெண்பாதையின் இருபக்கமும் யாதவ வீரர்கள் வேல்களுடன் அணிநிற்க அப்பால் கூடி நின்ற யாதவகுடிகள் சிசுபாலனை வாழ்த்தினர்.
சிசுபாலனின் நடையிலும் நோக்கிலும் இருந்த ஒன்று அனைவரையும் அவனிடமிருந்து உளவிலகல் கொள்ளச்செய்தது. அவன் கால்களை நீட்டி வைத்து தோள்களை அசைத்து காற்றில் நீந்துபவன் போல நடந்தான். ஏளனம் நிறைந்த புன்னகையுடன் அனைத்தையும் நோக்கினான். அவனை வணங்கியவர்கள் வாழ்த்தியவர்கள் எவரையும் நோக்கவில்லை. அவனருகே நடந்தவர்கள்கூட இல்லையென்றானார்கள். ஓரிருவராக இயல்பாக நடைவிரைவை இழந்து பின்னடைய சிசுபாலனும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தும் பிரசேனரும் மட்டும் நடந்தனர். அவர்களுக்கு முன்னால் சேதிநாட்டின் கொடியையும் அந்தகர்களின் கொடியையும் ஏந்திய வீரர்கள் மட்டும் சென்றனர். பின்னால் மங்கல இசையுடன் சூதர்கள் தொடர்ந்தனர். யாதவர்கள் கொண்ட உள்ளத்தளர்ச்சியை வாழ்த்தொலிகளில் மட்டுமல்லாமல் மங்கல இசையிலும் வந்த தளர்வு வெளிப்படுத்தியது.
இல்லத்தின் வாயிலில் சித்ரையும் பத்மையும் சேடியர் சூழ அணிக்கோலத்தில் வந்து நின்று சிசுபாலனை வரவேற்றனர். “தங்கள் வருகையால் ஆயர்பாடி பெருமைகொண்டது அரசே” என்றாள் பத்மை. “இக்குடியின் மூதன்னையர் தங்களை வரவேற்கிறார்கள்” என்று சித்ரை சொன்னாள். சிசுபாலன் அவர்களை நோக்கியபின் தயங்க சத்ராஜித் “இவர்கள் என் அரசியர்” என்றார். “இவர்களும் இங்கே கன்றுமேய்க்கிறார்களா?” என்று அவன் கேட்டான். சித்ரகர்ணன் அதற்கு சிரிப்பதா என்று தெரியாமல் சத்ராஜித்தை நோக்க அவர் “இல்லை, அவர்கள் என்னுடன் களிந்தகத்தில் இருக்கிறார்கள்” என்றார்.
இருசேடியர் ஐந்து ஆமங்கலங்கள் கரைக்கப்பட்ட நீரை எதிர்காட்டி அவனை வரவேற்க அதன் மணத்திற்கு மூக்கைச்சுளித்து பொறுமையிழந்து நின்றான். அவர்கள் அவன் கால்களை நறுமணநீரூற்றி கழுவினர். அரிமலரிட்டு வணங்கி ‘அகம் சேர்க அரசே!’ என்று இன்மொழி சொல்லி உள்ளே அழைத்துச்சென்றனர். அமைச்சர்களும் பிறரும் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டபோது அவ்வறைக்குள் இடமில்லாமல் ஆக முதிய யாதவர் சிலர் வெளியே நின்றுகொண்டனர்.
சிசுபாலனை வெண்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தில் அமரச்செய்து சத்ராஜித் தன் பீடத்தில் அமர்ந்தார். பிரசேனர் அருகே அமர அவருக்குப்பின்னால் அந்தக குடிமூத்தார் எழுவர் அமர்ந்தனர். சிசுபாலனுக்கு அருகே சித்ரகர்ணன் அமர பின்னால் அமைச்சர்கள் அமர்ந்தனர். கருவூல அமைச்சர் கிருபாகரர் வெளியே நின்று கைகளை வீசி செய்கையால் ஆணையிட்டுக்கொண்டிருந்தார். சிசுபாலன் அவரை திரும்பிப்பார்த்தபின் “நீங்கள் யாதவ அரசர் என்று என்னிடம் சொன்னார்கள். நீங்கள் கன்றுமேய்க்கும் சிறுகுடியின் தலைவர்தான் என்று எவரும் சொல்லவில்லை” என்றான். சத்ராஜித் “எங்கள் குலமூதாதை வீரசேனர் அமைத்த ஆயர்பதம் இது. இங்குள்ள அந்தகர்களுக்கு நானே அரசன். எனக்கு மதுராபுரி சிற்றரசர்களுக்குரிய உடைவாளும் கங்கணமும் முடியும் அளித்திருந்தது” என்றார்.
பிரசேனர் “எங்களிடம் சியமந்தகமணி இருப்பதனால் ஆயர்குடிகளில் நாங்களே முதன்மையானவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. விருஷ்ணிகளைவிடவும் அந்தகர்களே மேலானவர்கள். ஆயர்குலப்பாடகர்கள் அதைப்பாடுவதை நீங்கள் கேட்கலாம்” என்றார். சிசுபாலன் “பாடகர்களுக்கென்ன?” என்றபடி திரும்பி கிருபாகரரை நோக்கினான். கிருபாகரர் உள்ளே வர அவரைத் தொடர்ந்து நான்கு வீரர்கள் பெரிய மரப்பெட்டிகளை கொண்டுவந்து வைத்தனர். சிசுபாலன் கைகாட்ட அவர்கள் அதை திறந்தனர். முதல்பெட்டியில் பீதர்நாட்டிலிருந்தும் கலிங்கநாட்டிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பட்டுகளும் பொன்னூல் பின்னலிட்ட பருத்தியாடைகளும் குதிரைமுடி என மின்னிய மரநூல் ஆடைகளும் இருந்தன. இரண்டாவது பெட்டியில் மணிகள் பதிக்கப்பட்ட பொன்னணிகள் செந்நிறமான மென்மயிர்மெத்தைக்குமேல் அடுக்கப்பட்டிருந்தன. மூன்றாவது பெட்டியில் யவனர்நாட்டு நீலநிற மதுப்புட்டிகளும், நறுமணதைலங்கள் கொண்ட சிமிழ்களும் இருந்தன. நான்காவது பெட்டியில் வெள்ளியாலும் பொன்னாலுமான பலவகை கலங்கள்.
“கன்யாசுல்கமாக கொண்டுவரப்படும் பொருட்கள் பெறுபவரின் தகுதியை அல்ல கொடுப்பவரின் தகுதியை காட்டுகின்றன என்பார்கள்” என்றான் சிசுபாலன். “ஆகவே எதிலும் குறைவைக்கவேண்டியதில்லை என்று சொன்னேன். மாளவனின் மகளை மணம்கொள்ளச்சென்றபோது என்னென்ன கொண்டுசென்றேனோ அதில் பாதியை இங்கும் கொண்டுவந்திருக்கிறேன்.” அமைச்சரை நோக்கி சிரித்தபின் “எளிய யாதவப்பெண்ணுக்கு இவ்வளவு தேவையில்லை என்பதுதான் கிருபாகரரின் தரப்பு. ஆனால் அவளுக்குத்தான் இதெல்லாம் தேவை என்றேன். அணிகளும் ஆடைகளும் இல்லையேல் எப்படி அவள் அரசியாவது?” என்று சொன்னான். கிருபாகரர் சிரிக்க பிற அமைச்சர்கள் புன்னகைசெய்தனர்.
பிரசேனர் ஏதோ சொல்ல நாவெடுக்க சத்ராஜித் விழிகளால் தடுத்தார். அதற்குள் யாதவ முதியவர் ஒருவர் “இதற்கிணையான ஆடையணிகளை இளவரசியும் கொண்டிருக்கிறாள். எங்கள் விழவுகளில் வைரங்கள் அணிந்து இளவரசி எழுந்தருளுகையில் திருமகள் தோன்றியதுபோல உளமயக்கு எழும்” என்றார். இன்னொருவர் “இளவரசி அணிகையில் வைரங்கள் ஒளிகுன்றுவதை கண்டிருக்கிறோம். தன்னெழில் அற்றவர்களுக்குத்தான் அணியெழில்” என்றார். சத்ராஜித் பிரசேனரிடம் “இளவரசியை வரச்சொல். சியமந்தக மணி அணிந்த அவள் கோலத்தை சேதிநாட்டார் நோக்கட்டும்” என்றார். இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டன. பிரசேனர் எழுந்து தலைவணங்கி உள்ளே சென்றார்.
சேடிப்பெண்கள் சித்திரக் கலங்களில் கைகளைக் கழுவ நறுமணநீர் கொண்டுவந்தனர். இருவர் அவன் கால்களிலும் கைகளிலும் செங்குழம்பை பூசினர். அவன் கைகழுவிக்கொண்டதும் பொற்குவளையில் பாலமுது கொண்டுவரப்பட்டது. சத்ராஜித் “சுக்கும் மஞ்சளுமிட்ட பாலமுது. யாதவர்களின் வழக்கம்” என்றார். சிசுபாலன் “இனிமேல் விருந்தினருக்கு யவன மதுவையே அளிக்கலாம். ஓரிரு வருடங்களுக்கான மது அந்தப்பெட்டியில் உள்ளது” என்றபடி பாலை வாங்கி ஒரே ஒரு மிடறு மட்டும் அருந்திவிட்டு திரும்ப அளித்தான்.
உள்ளறை வாயிலில் அசைவு தெரிந்ததும் அத்தனைபேரும் தம்மை அறியாமலேயே திரும்பினர். சிசுபாலன் அதை உணர்ந்தாலும் விழிகளை அசைக்காமல் அதே முகத்துடன் “…இங்குள்ள பசுக்கள் காடுகளில் மேய்கின்றன போலும். வேட்டைக்குச் செல்லும் இடங்களில் உண்ணும் பாலில் உள்ள புல்வாடை உள்ளது” என்றான். திரையசைவுபோல நிழல் ஒன்று சிசுபாலனின் முன்னால் ஆடியது. அமைச்சர்கள் விழிமலர்ந்து நோக்குவதை அவன் கண்டான். ஆனால் திரும்பி நோக்காமல் “தென்னிலத்துப் பசுக்கள் மேலும் இனிய பால்கொடுப்பவை. சேதிநாட்டுக்கு அங்கிருந்து கன்றுகளை கொண்டுவரும்படி ஆணையிட்டிருக்கிறேன்” என்றான். அவன் சொற்களில் சித்தம் அலைவதன் தயக்கம் வெளிப்பட்டது. “அவை அளிக்கும் நெய்யின் நறுமணமே வேறு.”
அமைச்சர்களின் முகங்கள் மலர்ந்ததை அவன் அறிந்தான். சித்ரகர்ணன் சற்றே சாய்ந்து “அரசே, இளவரசி…” என்றான். சிசுபாலன் திரும்புவதா என ஒரு கணம் எண்ணி மேலும் ஒத்திப்போட விழைந்து விழிகளை விலக்கியபோது புறக்கடை ஒளியில் வாயிலின் நிழல் நீண்டு அறைக்குள் விழுந்து எதிர்ச்சுவரில் எழுவதை கண்டான். மூன்று பெண்கள் வாயிலை மூடியதுபோல நின்றனர். ஒருத்தி முதுமகள் என தெரிந்தது. அவள் இளையவள் ஒருத்தியை பின்னால் இழுத்துவிலக வாயிலில் நின்றவள் சற்றே திரும்பி தன் குழலை சீரமைத்தாள். ஒரு கணம் அவளை பக்கவாட்டில் நோக்கிய சிசுபாலன் நெஞ்சில் குளிர்ந்த ஈட்டி துளைத்ததுபோல் உணர்ந்தான்.
நடுங்கும் விரல்களுடன் அவன் திரும்புவதற்குள் அந்த நிழல் எதிர்ச்சுவரில் பேருருவத்துடன் எழுந்து மெல்ல உறுமியது. கன்னங்கரிய உடல். பன்றிமுகத்தில் மின்னும் மதங்கொண்ட சிறியகண்கள். அறைக்குள் கடுங்குளிரும் அழுகல் நாற்றமும் நிறைந்தது. வலக்கையில் மேழியும் இடக்கையில் முசலமும் அசைந்தன. “தேவி!” என்று அவன் கைகூப்பினான். “சேதி நாட்டு தமகோஷனின் மகனாக சுருதமதியின் கருவில் நீ பிறந்த அவ்வறையில் எழுந்த தெய்வம் நான். காற்றில் வீசிய கடும்நாற்றமாகவும் திரையசைவில் தெரிந்த நிழலுருவாகவும் என்னை உன் அன்னைமட்டுமே அறிந்தாள். பிறர் அறியாத மந்தணமாக அதை தன்னுள் மறைத்துக்கொண்டாள்.”
“கேள் இளையோனே, மண்ணில் புதைந்தவை அனைத்தும் சென்றுசேரும் அதலம் என்னும் அடியுலகில் வாழ்ந்த திரயம்பகன் என்னும் முக்கண் தெய்வம் உன் வடிவில் மண்ணில் எழுந்தது. நீ மாளாத பொறாமையால் ஆனவன். எனவே ஒவ்வொரு அங்கமும் உள்ளூர அழுகிக்கொண்டிருப்பவன்” என்றாள் வராஹி. “சத்திய யுகத்தில் ஹிரண்யாக்ஷன் என்னும் அரக்கன் புவியை தன் கைப்பந்தென எடுத்துக்கொண்டு இருண்ட அடியிலியில் சென்று மறைந்தான். தேவர்குரல் கேட்டு விழிமலர்ந்த விண்ணவன் புவியன்னையை காக்க பேருருவம் கொண்டு எழுந்தார். இருள்நிற மேனியும் ஒளிரும் செவ்விழிகளும் நீர்நிழலில் இணைந்த நிலவு என எழுந்த வெண்தேற்றைகளுமாக உருக்கொண்டு இருளாழத்திற்கு இறங்கினார்.”
“இருளில் உடல்கரைந்த ஹிரண்யாக்ஷனை அவன் நெற்றிமையத்து ஆயிரத்தாமரையின் பொன்னிற ஒளியால் மட்டுமே காணமுடிந்தது. இருளலைக்கு அடியில் ஒற்றைமீன் என நின்றிருந்த அவனை அணுகி தன் முகக்கொம்பால் குத்திக்கிழித்தார் இறைவன். புவிமகளை தன் நீள்முகத்தில் ஏந்தி மேலே வந்தார். புவிமகளின் உடலொளியில் அவரது நிழல் இருளின் திரையில் விழுந்து உருவானவள் நான்” என்றாள் வராஹி. “ஆழிசங்கு கைகொண்டு விண்ணெழுந்த அவன் அணிந்திருந்த கழல்மணியை மட்டுமே ஹிரண்யாக்ஷன் கண்டான். அதை இறுதியாகக் கண்டு தவித்து காட்சி முடியாமலேயே உயிர்துறந்தான. அவ்விழைவின் எச்சம் விதையென இருளில் முளைத்து திரயம்பகனாக உருக்கொண்டது. இறைவனே உன்னை முழுதறிய எனக்கு ஒரு பிறவி தேவை என்றான். முக்கண்ணனே, என் பேருரு கண்டு நீ பொறாமைகொண்டாய். உன்னை ஆக்கி நிறுத்தி அழித்து நிறைவுசெய்யும் முதல்விசை அதுவாகவே அமையட்டும் என்று ஆழியன் அருள்செய்தார். நிகரற்ற பொறாமை ஒன்று நிகழும் அக்கணம் நீ மண்நிகழ்வதாக என்று வாழ்த்தி மறைந்தார். அப்போது அவனைக் கண்டு புன்னகைத்து அவ்விருளில் நான் மலர்ந்திருந்தேன்.”
“சேதிநாட்டரசன் தமகோஷன் தன் துணைவி சுருதமதியுடன் வந்து மாலினியாற்றில் காமநீராடிக்கொண்டிருந்தபோது விண்ணில் ஒரு கந்தர்வப்பெண் பறந்துசெல்ல அவள் நிழல் நீரில் விழுந்தது. மூழ்கி நீந்திய தமகோஷன் அது தன் துணைவி என எண்ணி கைகளால் பற்ற முயன்று ஏமாந்து நகைத்தான். அவள் அழகில் அவன் மகிழ்ந்ததை அறிந்து பொறாமையால் உடல் எரிந்த சுருதமதி நீரை கனல்கொள்ளச்செய்தாள். அக்கனல் சென்று இருளாழத்தை அடைந்தபோது மண்ணில் எழுந்த திரயம்பகன் மன்னன் உடலில் புகுந்து அவள் கருவறைக்குள் எழுந்து மானுடனானான். பதின்மூன்றுமாத காலம் கருவில் வளர்ந்து நான்கு கைகளுடன் நெற்றியில் விழியுடன் பிறந்தான். அவனை சிசுபாலன் என்று பெயரிட்டு வளர்த்தனர் சேதிநாட்டு அரசனும் அரசியும்” என்றாள் வராஹி. “இங்கு பிறந்ததை நீ எய்துவாய் என்றறிக! ஆகவே வேள்விமுடிவில் எரியேறும் தூண் என நின்றெரிக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்று அருள்புரிந்து மறைந்தாள்.
அந்நிழல் செவ்வொளி கொண்டு தழலென ஆட எழுந்தவள் சாமுண்டி. விழியகல்கள் இரண்டு ஏந்திய ஒரு தழல் என நுதல்விழி. புயல்பட்டெழுந்த கிளைகள் என தடக்கைகள் எட்டிலும் படைக்கலங்கள். இருளருவியென இழிந்த சடைப்பெருக்கு. “கேள் மைந்தா, ஏழுமண்ணையும் ஏழு விண்ணையும் வென்றெழுந்த ஹிரண்யகசிபுவை வெல்ல சிம்மமுகமும் திசையெரி என பெருகிச்சிலிர்த்த செஞ்சடையும் கூருகிர் குவை பத்தும் கொண்டு வந்த அரிமுகத்தான் அவனை அள்ளி தன் மடியிலிட்டு உடல்கிழித்து குடல் எடுத்தபோது அவன் கால்களில் அணிந்திருந்த கழல்மணி ஒன்று உருண்டு அந்தத் தூண்பிளவுக்குள் சென்றது. இருண்ட ஆழத்தில் விழுந்து இரண்டாவது இருளடுக்கான விதலத்தில் மறைந்தது” என்றாள் அன்னை.
“அங்கே ஒரு தூங்காவிழியாகக் கிடந்த கழல்மணி ஆற்றிய தவத்தால் அதன் முன் எழுந்தான் ஆழிவண்ணன். எந்தையே கணநேரம் நான் உன் மடியில் கிடக்கும் பேறடைந்தேன். என் உள்ளம் நிறையவில்லை. உன் மடிதிகழ என்னை வாழ்த்துக என்றது அந்த மணி. இனியவனே, நீ மண்ணில் பிறப்பாய், ஆழிவண்ணன் என நான் வந்தமர்ந்து உன்னை மடியிலமர்த்துவேன். அன்று உன் அகம்நின்ற அனல் அழியும். உன் நுதலெழுந்த விழியும் மறையும் என்று இறையோன் சொல்லளித்தான்” என்றாள் அனலுருவத்தாள். “உன் அரண்மனைக்கு தன் தமையனுடன் வந்த அவன் இளையோனாகிய உன்னை அள்ளி தன் மடியிலமர்த்தி உச்சி முகர்ந்து குழல் அளைந்து விளையாடினான். உன் மென்வயிற்றை தன் செவ்விதழால் கவ்வி உன்னை சிரிக்கவைத்தான். அன்று நீ முழுமையானாய். வாழ்க!”
செந்நிழலாட்டமாக கருடன் மேலேறி சங்குசக்கரமேந்திய கைகளுடன் வைஷ்ணவி அவன் முன் தோன்றினாள். “இனியவனே, முன்பொருமுறை நீ இப்புவியில் மாபலி என்னும் மன்னனென பிறந்தாய். விண்ணவர் அஞ்ச மண்புரந்தாய். உன்னை வெல்ல மூன்றடி மண்கோரிவந்த வாமனன் அவன். விண்ணளந்த கால்தூக்கி உன் தலைமேல் வைத்தான். நீ மூன்றாவது அடியுலகாகிய சுதலத்தை அடைந்தாய். அங்கே மாபெரும் வேர்ப்பின்னலாக விரிந்து நிறைந்தாய். உன் வேர்களில் ஒன்று கவ்வியது மண்ணிலெழுந்து நின்ற கடம்பமரம் ஒன்றை. அதன்மேல் சாய்ந்து நின்று குழலூதினான் ஒரு சிறுவன். சுதி விலகியதால் சினந்தெழுந்து குழல்தாழ்த்தி என்னை எவரென்றறிவாயா என்றான் நீலன். ஆம் அறிவேன், ஆனால் நீ விண்ணளந்து எழுந்தபோதும் நான் அஞ்சவில்லை, இன்று மீண்டும் சிற்றுருவம் விரித்து விண் நிறைத்தாலும் அஞ்சேன் என்றாய்.”
“அந்த அச்சமின்மையை எண்ணி மகிழ்ந்த அவன் மண்நிறைந்தவனே நீ மேலெழுந்து வருக! நூறுமுறை என் முன் அச்சமின்றி விழிதூக்கி நிற்கும் வல்லமையை உனக்களித்தேன், வாழ்க என்றான். அவ்வாறு அவன் முன் நீயும் ஒரு மைந்தனாக இப்புவியை வந்தடைந்தாய். நூறு முறை நீ அவன் முன் நிகரென எழுந்து நிற்பாய். நூறுமுறை அவனை இழித்துரைத்து உன் சொல் தருக்கி எழும். அவனை எவ்வண்ணம் எவர் சொன்னாலும் பொருத்தமே என்பதனால் நீயும் அவனை பாடியவனாவாய். என்றும் அவன் பெயருடன் இணைந்து நீயும் வாழ்வாய். ஓம் அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி வைஷ்ணவி மறைந்தாள்.
எருதின் இளஞ்சீறல் ஒலியுடன் எழுந்து வந்தாள் மகேஸ்வரி. “மைந்தா, நீ முன்பொருமுறை இங்கே பத்துதலைகொண்ட இலங்கைவேந்தனாக பிறந்தாய். அவன் நெஞ்சமைந்த திருவை கவர்ந்துசென்று சிறைவைத்தாய். அவன் குரங்குப்படைசூழ வந்து உன் கோட்டையை வென்றான். அருள்கொண்டு அவனிட்ட வாளி உன் நெஞ்சை துளைத்தது. உன் விழிநிறைத்து அகம்புரந்த அத்திருமகளை மறுமுறைகாணலாகுமா என்று எண்ணி ஏங்கி உயிர்துறந்தாய்” என்றாள் தேவி. “தணியாத பெருங்காமம் தலாதலம் என்னும் அடியுலகில் விதைகளாகின்றது என்றறிக! அங்கே யுகங்களாக நீ செய்த தவத்தால் இன்று இவ்வடிவம் கொண்டாய். இவ்வில்லத்தில் அத்திருமகளை நாடி வந்து அமர்ந்திருக்கிறாய். உன் விழிநிறைத்து அவள் எழுவாள். நீ நிறைவாய்!”
கைகூப்பி நின்றிருந்த அவன் முன் மின்னலென அதிர்ந்த நிழலொளியுருவாக வந்து நின்ற இந்திராணி சொன்னாள் “நீ ஆயிரம் கைகொண்டு அவன் முன் செருநின்ற கார்த்தவீரியன் என்றறிக! உன் புரம் அழிக்க அவன் மழுவேந்தி வந்து நின்றான். கோட்டைகளை இடித்தான். உன் கோபுரங்கள்மேல் அனலென எழுந்தான். உன் கைகளை துணித்துக் குவித்தான். உன் தலைகொய்ய மழுவேந்தியபோது நீ விழைந்த ஒன்றுண்டு. யாதவனாகப்பிறந்தேன், நிகரான ஓர் யாதவன் கையால் இறந்திருக்கலாகாதா என்று. இளையோனே, அழியாத ஆணவம் சென்றடையும் ஆழமே ரசாதலம். ஒவ்வொன்றிலும் உறையும் சாரங்கள் ஊறித்தேங்கிய நீர்வெளி அது. அதிலொரு குமிழியென எழுந்தவன் நீ. இப்பிறவியில் யாதவனின் வளைசக்கரத்தால் வெல்லப்படுவாய். ஆம், அவ்வாறே ஆகுக!”
அவன் முன் இளநகை விரிந்த எழில்முகத்துடன் கன்னியுருக்கொண்டு வந்து நின்றாள் கௌமாரி. “உன் முற்பிறவியில் நீ ஒரு இளமைந்தனை நெஞ்சிலேற்ற எண்ணி ஏங்கி ஏங்கி அழிந்தாய். அவன் சிறுகால்களையும் கைகளையும் முத்தமிட்டு முத்தமிட்டு உயிர்துறந்தாய். சிறியவனே அன்று உன்பெயர் கம்சன். மகாதலத்தில் ஒரு கண்காணா நதிப்பெருக்கென நீ ஓடிக்கொண்டிருந்தாய். அதன் ஒருதுளி எனத்தெறித்து இங்கு வந்துள்ளாய். இப்பிறவியில் நீ எண்ணியதை எல்லாம் அவனுடன் ஆடுவாய். வாழ்க!” என்றாள்.
வெள்ளை நிழலென ஆடிய பிராமியை அவன் கண்டான். அருள்நிறைந்த புன்னகையுடன் அன்னை சொன்னாள் “எஞ்சியவை எல்லாம் சென்றுசேரும் பாதாளத்தில் இருளின் மையச்சுழியை அளைந்துகொண்டிருக்கிறது மேலே விண்ணுலகின் பாற்கடலில் சுருண்டிருக்கும் ஆயிரம் நா கொண்ட அரவின் வால்நுனி. அந்நுனி தொட்டு எழுப்பப்பட்டவன் நீ. எஞ்சிய அத்தனை விழைவுகளும் வஞ்சங்களும் சினங்களும் கனவுகளும் திரண்டு இங்கு வந்திருக்கிறாய். உன்னை சிசுபாலா என்று அவன் தன் மணிநாவால் அழைப்பதை இறுதியாகக் கேட்பாய். இங்கு மறைந்து அங்கு ஒளியுடன் எழுவாய். அவ்வாறே ஆகுக!”
சிசுபாலன் மெல்லிய ஒலி ஒன்றை எழுப்பினான். விக்கல் போலவோ விம்மல் போலவோ. அவன் கால்தளர்ந்து விழப்போகிறவன் போல ஆட சித்ரகர்ணன் எழுந்து அவனை பற்றப்போனான். சிசுபாலன் திரும்பி வாயிலில் நின்ற சத்யபாமாவை ஒருகணம்தான் நோக்கினான். அரசே என நெடுந்தொலைவில் சித்ரகர்ணனின் குரலை கேட்டான். ‘அரசே’ என்று அக்குரல் மீண்டும் விலகிச்சென்றது. மிகத்தொலைவில் எங்கோ அது விழுந்து மறைந்தது.
முலையுண்டு மகிழ்ந்த மகவின் இளநகை என செவ்விதழ் விரிந்த தாமரை மேல் பூத்திருந்தாள். செம்பொன்னிறப் பாதங்களில் பத்து விழிமணிகள் சுடர்ந்தன. பொற்பட்டாடையின் அலைகளுக்குமேல் எழுந்தன பொற்றாமரைக் குவைகள். வலதுமேல்கையில் வெண்தாமரை விரிந்திருந்தது. இடதுமேற்கையில் அமுதக்கலம். அருளி அணைக்கும் இரு மலர்ச்செங்கைகள். முலையூட்டி முடித்து குனிந்து மகவை முத்தமிடும் அன்னையின் கனிந்த விழிகள். அது சிரிப்பதைக் கண்டு மலரும் சிரிப்பு. செம்பொன் உருகியது போல் ஒளிவிடும் மேருமுடிகள் நடுவே சூரியன் என அவள் முலைகளுக்கு மேல் சியமந்தகம் நின்றது. அவன் ‘அன்னை’ என்றான். அச்சொல் எஞ்சியிருக்க நினைவழிந்து நிலத்தில் விழுந்தான்.