பகுதி நான்கு : எழுமுகம் – 2
பிரசேனர் தன் தமையன் அறியாமல் அத்தனை நாடுகளுக்கும் மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார். நேரடியாகவே ஜராசந்தர் வரை செய்தியை கொண்டு சேர்த்தபோதும் மகதம் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. யாதவப்பெண்ணை ஜராசந்தர் மணப்பதில் அமைச்சர்களுக்கு உடன்பாடில்லை என்று ஒற்றர்செய்தி வந்தது. கலிங்கமும் மாளவமும் வங்கமும் பாமா அந்தப்புரத்துப் பெண்ணாக வரலாம் என்றும் யாதவப்பெண்ணுக்கு அரசிநிலை அளிக்க இயலாதென்றும் செய்தி அனுப்பின. கோசலம் அவளை ஆயிரம் பொன் கன்யாசுல்கம் அளித்து மகள்கொள்ள சித்தமாக இருந்தது. ஆனால் மணம் கொள்ள விழையும் மூத்த இளவரசனுக்கு விழியில்லை என்றும் ஆகவே இளவரசுப்பட்டமே இல்லை என்றும் தெரியவந்தது.
நாள்செல்லச்செல்ல பிரசேனர் சோர்ந்து தமையனை சந்திப்பதையே தவிர்க்கத் தொடங்கினார். அரசுநடத்துவதை மட்டும் தன் அரண்மனையில் அமர்ந்து முடித்துவிட்டு மாலையில் யமுனைக்குள் ஓடும் ஏதேனும் படகில் தாசியருடன் சென்று செலவிட்டார். சத்ராஜித் பகலிலும் குடிக்கத்தொடங்கினார். எவரையும் சந்திக்கமுடியாமலானபோது தனிமையில் இருந்தார். தனிமையில் எண்ணங்கள் சுழன்று சுழன்று வதைத்தபோது மது இனிய புகலிடமாகியது. பிற்பகலில் குடிக்கத்தொடங்கிய ஒரு மாதத்திற்குள் காலையில் எழுந்ததுமே அவருக்கு மது தேவைப்பட்டது. பின்னர் மதுவை எண்ணியதுமே உடல் பதறத்தொடங்கியது. எளிமையானவை கூட சித்தத்தை சென்றடையவில்லை. கைகால்கள் நடுங்கத் தொடங்கவே அதற்குரிய உடல்மொழி அமைந்தது. இருகைகளையும் விரல்கோத்து மோவாயை அதன் மேல் வைத்து பற்களை இறுகக் கடித்து பழுத்த இலைபோல் ஆன விழிகளால் நோக்கியபடி பேச்சுகளை கேட்டிருப்பார். விழிகள் அலைமோதிக்கொண்டிருக்கும். ஓரிருமுறை உடல் துயிலில் தளர்வது போல அசைந்ததும் திரும்பி ஏவலனிடம் மது கொண்டுவரும்படி கைகாட்டுவார்.
எட்டாவது மாதம் சேதிநாட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. சேதிநாட்டு சிசுபாலருக்கு பாமாவை மணம் முடித்து வைக்கும் பொறுப்பை அவரது அமைச்சர் சத்யசீலர் ஏற்றுக்கொண்டார். அதற்கு நிகரியாக அவருக்கு பன்னிரண்டாயிரம் பொன்னை களிந்தகம் மறைமுக ஊதியமாக அளிக்கவேண்டும். அதை சத்ராஜித்திடம் கலக்காமலேயே பிரசேனர் ஏற்றுக்கொண்டதும் சத்யசீலர் சிசுபாலரிடம் பேசிவிட்டு விரிவான முற்கோரிக்கைகளை அனுப்பினார். பாமாவுக்கு மகள்செல்வமாக சியமந்தக மணியை சிசுபாலருக்கு அளிக்க வேண்டும். அவ்வுறுதி அளிக்கப்பட்டால் மகள்கொடை கேட்டு சிசுபாலரே ஹரிணபதத்திற்கு வருவார். சிசுபாலரின் ஏழாவது துணைவியாக பாமாவை ஏற்று அரச அகம்படியுடன் அணிப்படகுகளில் சேதிநாட்டுக்கு கொண்டுசெல்வார். அவளுக்கு சேதிநாட்டின் யாதவகுலத்து அவைகளில் மட்டும் அரசியாக அமரும் இடம் அளிக்கப்படும். அரண்மனையும் கொடியும் முரசும் கிடைக்கும். அவளை சேதிநாட்டு யாதவ அரசி என்று சொல்லிக்கொள்ளலாம்.
சத்ராஜித் பிரசேனரின் சொற்களை சித்தத்தில் வாங்காமல் விழித்து நோக்கி அமர்ந்திருந்தார். “இதுவே இன்று நம் முன் உள்ள சிறந்த வழி மூத்தவரே…” என்று பிரசேனர் முடித்ததும் சிறிய ஏப்பத்துடன் அவர் மதுகொண்டுவரும்படி ஏவலனை நோக்கினார். “சியமந்தக மணியை அளிப்பதென்றால்…” என்று அமைச்சர் லட்சுமணர் மெல்ல சொல்லத்தொடங்கியதுமே பிரசேனர் “நாம் அந்த மணியை இனிமேலும் பேணமுடியாது அமைச்சரே. அதை அடைய துவாரகையின் அரசன் முயல்கிறான். நான் ஒவ்வொருநாளும் அதற்கான முயற்சிகளை ஒற்றர்கள் வழியாக வென்றுகொண்டிருக்கிறேன். அது நம் கைமீறி துவாரகைக்கு சென்றுவிட்டதென்றால் இன்றைய நிலையில் நாம் போர் புரிந்து அதை மீட்கமுடியாது. அந்தகர்களின் பொருளை விருஷ்ணிகுலத்தான் சூடுவதுபோல அவமதிப்பென ஏதுமில்லை” என்றார்.
“அதை சேதிநாட்டான் சூடலாமா?” என்றார் லட்சுமணர். சினத்துடன் “சேதிநாட்டரசன் யார்? யாதவக்குருதியில் வந்த ஷத்ரியன். அவன் அதைச் சூடுவது நமது இளவரசி சூடுவதற்கு நிகர்” என்றார். “நாம் இன்று கோருவது களிந்தகத்துக்கு வல்லமை கொண்ட அரசன் ஒருவனின் காவலை மட்டுமே…” சத்ராஜித் “சிசுபாலர் நம் அரசியை மணமகளாக ஏற்பது உறுதியா?” என்றார். “ஆம், சொல்கொடுத்துவிட்டார்” என்றார் பிரசேனர். “அரசியாக அல்ல, அரசியரில் கடைநிலையளாக” என்றார் லட்சுமணர். “அரசனின் துணைவியே அரசி எனப்படுகிறாள்” என்று பிரசேனர் சொல்ல சத்ராஜித் அதை நோக்காமல் மதுகொண்டுவரும் ஏவலனையே நோக்கிக்கொண்டிருந்தார்.
லட்சுமணர் “சியமந்தகமணிக்காகத்தானே நாம்…” என்று தொடங்க மதுவை அருந்திவிட்டு மேலாடையால் வாயைத்துடைத்து நிமிர்ந்த சத்ராஜித் உரக்க “சியமந்தக மணியை மட்டும் அல்ல, களிந்தகத்தையே சேதிநாட்டான் காலடியில் வைக்கிறேன். அவன் அரண்மனைத் தொழுவத்தில் சாணியள்ளுகிறேன். அவன் காலடியில் அமர்ந்து மிதியடிகளை துடைக்கிறேன். ஏதும் தடையில்லை. என் மகள் முடிசூடி அரசப்படகில் ஹரிணபதம் விட்டு செல்வதை நான் காணவேண்டும். இனி அவள் தன் கைகளில் புல்லரிவாளும் மத்தும் ஏந்தக்கூடாது…” என்றார். அவரது உடலை உலுக்கியபடி ஓர் ஏப்பம் வந்தது. உதடுகள் வளைய கழுத்தின் தொய்ந்த தசைகள் இழுபட்டு நெளிய சத்ராஜித் கண்ணிர் விட்டு அழுதார். “இனிமேலும் என்னால் தாள முடியாது இளையோனே. நான் இப்படியே இறந்துவிட்டேன் என்றால் என் குலமூத்தாருக்கு என்ன மறுமொழி சொல்வேன்? எப்படி அவர் முன் சென்று நிற்பேன்?”
பிரசேனர் பார்வையை திருப்பிக்கொண்டு “இன்றே ஒப்புதல்செய்தியை அனுப்பிவிடுகிறேன் மூத்தவரே” என்றார். சத்ராஜித் “ஹரிணபதத்திற்கும் செய்திபோகட்டும்” என்று சொல்லி எஞ்சிய மதுவை விழுங்கினார். பிரசேனர் தலைவணங்கி அவை நீங்கும்போது அவருக்குபின்னால் வந்த லட்சுமணர் வெறுப்பால் மின்னிய சிறிய விழிகளுடன் “நானறிந்த அரசியலாடல்களில் இதைப்போல இழிந்த ஒன்று இல்லை. என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எதன்பொருட்டு நாம் இளைய யாதவரின் உறவை மறுத்தோம்? இப்போது சியமந்தக மணியையும் இழந்து இவனுடைய அரண்மனைச்சேடியாக நம் இளவரசியை அளித்து…” என்றதுமே பிரசேனர் திரும்பி உடைவாளில் கையை வைத்தபடி “வாயை மூடும். இல்லையேல் இக்கணமே…” என்று கிட்டித்த தாடையுடன் சொன்னார்.
“என்ன செய்வீர்? பிராமணனை கொல்வீரா? கொல்லும்… உம் தலைமுறைகளை பிரம்மஹத்தி என தொடர்ந்து வருகிறேன்” என்றார் லட்சுமணர். மூச்சிரைக்க பிரசேனர் உடல் தளர்ந்தார். பற்கள் இறுக, கண்களை சுருக்கியபடி “நீர் இதற்காக வருந்துவீர்” என்றார் . “உண்மையை சொல்லும்பொருட்டே பிராமணன் மண்ணில் பிறக்கிறான். நெறிநூல்கள் நால்வருணத்தின் தலைமேல் எங்களை அமரச்செய்வது அதற்காகவே” என்றார் லட்சுமணர். “என்ன உண்மை? சொல்லும் என்ன உண்மை?” என்று பிரசேனர் மீண்டும் குரலெழுப்பினார். “உம் நெஞ்சறிவது…” என்று லட்சுமணர் சொன்னதும் “சொல்லும் என்ன உண்மை?” என்று பிரசேனர் தொண்டை உடையும்படி கூவினார்.
“உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறேன் பிரசேனரே…” என்றார் லட்சுமணர். “ஆனால் ஒன்றை உணருங்கள். ஒருபோதும் களிந்தகத்தின் அரியணையில் நீங்கள் அமரமுடியாது.” ஒரு கணம் உறைந்த பிரசேனர் துடித்து முன்னால் பாய்ந்து அவர் தோளைப்பிடித்து இழுத்து சுவருடன் சாய்த்து “இழிமகனே, என்ன சொல் சொல்கிறாய்? என்ன சொல்லிவிட்டாய்?” என்று கூவினார். மறுகணம் மூச்செல்லாம் வெளியேற “பாவி, பெரும்பாவி… எப்படி சொன்னாய் அதை?” என்று ஈரத்துணி காற்றில் படபடக்கும் ஒலியில் கேட்டார். “இழிமகனே… இழிமகனே, என்னை என்னவென்று நினைத்தாய்? என் தமையனையா? நானா? அடேய், இழிமகனே!” அவரது கழுத்திலும் சென்னியிலும் நீலநரம்புகள் புடைத்தன.
லட்சுமணர் “புற்றரவு மிகமிக ஓசையற்றது இளையவரே. அது அங்கிருப்பதை அது மட்டுமே அறியும்” என்றபின் பிரசேனரின் கையை தட்டிவிட்டுவிட்டு திரும்பி நடந்து சென்றார். விழுந்து விடுபவர் போல அசைந்த பிரசேனர் அவருக்குப் பின்னால் ஓடிச்சென்று தோளை மீண்டும் பிடித்து முரட்டுத்தனமாகத் திருப்பி “நில்லும்… என்ன சொன்னீர்? நான் என் தமையனின் அரியணைக்கு விழைவுகொண்டிருக்கிறேன் என்றா? பார்த்துக்கொண்டிரும்… சேதிநாட்டுக்கு இளவரசி சென்று மணிமுடிசூடி அமர்வாள். களிந்தகம் துவாரகைக்கு நிகராக யாதவர்கள் நடுவே நிமிர்ந்து நின்றிருக்கும். அதை நீர் பார்ப்பீர்” என்றார்.
லட்சுமணர் சற்றே வளைந்த இதழ்களுடன் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றார். பிரசேனர் தளர்ந்து பிடியை விட்டு உடைந்த குரலில் “என்னால் தமையனை விட மேலாக ஒருவனை எண்ணமுடியவில்லை லட்சுமணரே. அந்த அவையில் அவர் எளிய ஒருவராக அமர்ந்திருப்பதை என்னால் தாளமுடியவில்லை. அந்த எண்ணத்தால் நான் ஆற்றிய பிழை இது… அது மட்டுமே நான் கொண்ட ஆணவம். ஆம் நான் அத்துமீறிவிட்டேன். அது என் பிழை… பெரும்பிழை ” என்றார். அவர் கண்களில் இருந்து நீர் வழிந்தது. துடிக்கும் உதடுகளுடன் “வேண்டுமென்றால் என் ஆணவம் அனைத்தையும் உதறிவிட்டு சென்று யாதவன் காலிலும் விழுகிறேன். சேதிநாட்டுச் செய்தி வருவதுவரை அதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் பலமுறை கிளம்பிவிட்டேன். பல்லாயிரம் முறை உள்ளூர அவனிடம் மன்றாடிவிட்டேன். என் தமையனின் மதிப்பை எண்ணி மட்டுமே தயங்கினேன்…”
லட்சுமணர் வெற்றுவிழிகளுடன் அசையாமல் நின்றார். பிரசேனர் இறைஞ்சும் குரலில் “என்னை நீர் நம்பவில்லையா? சொல்லும். என் முகம் நோக்கி ஆலகாலம் தடவிய சொற்களைச் சொன்னீர். ஒருபோதும் அச்சொற்களுடன் என் உடல் சிதையேற முடியாது… அப்பழியுடன் என்னால் என் மூதாதையர் முன்னால் சென்று நிற்கமுடியாது. சொல்லும்…” என்றார். லட்சுமணர் “நான் அந்த நச்சரவை எண்ணிக்கொண்டிருக்கிறேன். அதற்குநிகரான ஆற்றல் கொண்ட ஒன்றை பிரம்மம் படைக்கவில்லை” என்றபின் திரும்பி நடந்தார். பிரசேனர் அறியாமல் நெஞ்சைத்தொட்ட கையுடன் வெறுமே நோக்கி நின்றார்.
சிசுபாலனின் வருகையறிவிப்பு பன்னிருநாட்களுக்குப்பின் வந்துசேர்ந்தது. களிந்தகத்தின் அரண்மனை முழுக்க அது நிறைவின்மை கலந்த ஆறுதலைத்தான் உருவாக்கியது. செய்தி வந்ததும் மாலினி பாய்ந்து புறக்கடைக்கு ஓடி அங்கே தயிர் கடைந்துகொண்டிருந்த ஆய்ச்சியர் நடுவே நின்ற மஹதியை அணுகி “சேதிநாட்டு சிசுபாலர் வருகிறாரடீ… அடுத்த வளர்பிறை நான்காம்நாளில் அவரே மகள்கொடை கோரி இங்கே வருகிறார். இப்போதுதான் அறிந்தேன். ஹரிணபதத்தையும் அத்தனை ஆயர்பாடிகளையும் அணிசெய்யும்படி அரசரின் ஆணை…” என்று மூச்சிரைத்தபடி கூவினாள். “பார்த்தாயா, நான் முன்னரே ஒருமுறை சொன்னேன். சிசுபாலர்தான் அவளுக்குரிய அரசர் என்று. அவர் இளைஞர், இளைய யாதவருக்கு நிகரான வீரர். அவர் போர்க்களத்தில் இளைய யாதவரின் தலையை அறுப்பார் என்று குறி சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா?”
மஹதி வெற்றுப் புன்னகையுடன் “அவர் வரட்டும் அரசி” என்றாள். “நினைத்துப்பார். சேதிநாடு என்பது எவ்வளவு தொன்மையானது? என் குலத்தின் மூத்தவர் ஒருவர் சேதிநாட்டு தமகோஷரின் அவையில் எளிய கணக்கராக பணியாற்றினார். இன்று அந்த அரியணையில் என் மகள் அமரப்போகிறாள். சேதிநாட்டுக்கு அவள் உரிமையானவள் என்று பிறவிநூலில் எழுதப்பட்டிருந்தால் அவளை எப்படி துவாரகைக்கு மணம்பேச முடியும்? இது தெரியாமல் இங்கே சில பெண்கள் வீண்பேச்சு பேசினார்கள். கேட்கிறேன், ஒவ்வொருவரிடமாக கேட்கத்தான் போகிறேன், இப்போது என்ன சொல்லப்போகிறார்கள் என்று.”
ராகினி திரும்பி வெண்ணை திரட்டி உருட்டிக்கொண்டிருந்த பாமாவை பார்த்தாள். அவளுக்கு எல்லாம் கேட்டிருந்தது என்பதை முகமே காட்டியது. ஆனால் புன்னகை சற்றும் மாறவில்லை. கைக்குழந்தையை என வெண்ணையை உருட்டி மென்மையாகத் தூக்கி கலத்தில் வைத்து வாழையிலையால் மூடியபின் கைகளை சிகைக்காய் நீரில் விட்டு கழுவிக்கொண்டாள். அவளுக்கும் சிசுபாலன் மேல் விருப்பு எழுந்துவிட்டதா என்ற ஐயம் ராகினிக்கு ஏற்பட்டது. புன்னகையுடன் அவளை நோக்கிய பாமா “வருகிறாயாடி? நீராடச்செல்கிறேன்” என்றாள்.
பாமாவுடன் செல்லும்போது ராகினி அவள் முகத்தையே ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டிருந்தாள். மெல்ல தனக்குள் ஏதோ பாடிக்கொண்டும் அவ்வப்போது புன்னகைசெய்துகொண்டும் அவள் வந்தாள். காலால் தரையில் கிடந்த சருகை எற்றினாள். உதிர்ந்துகிடந்த மலர் ஒன்றை பொறுக்கி முகர்ந்துவிட்டு தலையில் வைத்துக்கொண்டாள். “சிசுபாலர் வரவிருக்கிறார் இளவரசி” என்றாள் ராகினி. “வரட்டுமே” என்றாள் பாமா. “அவர் இளைய யாதவரின் எதிரி” என்றபின் மீண்டும் ஓரக்கண்ணால் பார்த்தாள். “அப்படியா?” என்றாள் பாமா. “ஆணவம் கொண்டவர் என்கிறார்கள். துவாரகைமேல் பொறாமை கொண்டிருக்கிறார். சேதிநாடு துவாரகையைவிட தொன்மையானது. படைபலம் மிக்கது. ஆகவே அவர் துவாரகையை அழிக்கக்கூடும் என்கிறார்கள்.”
பாமா விழிகளைத் தூக்கி “நீலக்கடம்பில் இன்றைக்கு நிறைய புதியமலர்கள்!” என்று கைநீட்டினாள். “இளவரசி, சிசுபாலருக்கு உங்களை பிடித்திருந்தால் என்ன செய்வீர்கள்?” என்றாள். பாமா “நான் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. சிந்திப்பது என் வேலையும் இல்லை” என்றாள். ராகினி தன்னுள் சற்றே நஞ்சை உணர்ந்து அதை சொல்லில் தீட்டி “இளவரசி, உங்களுக்கும் அரசியாகும் விழைவு வந்துவிட்டது அல்லவா?” என்றாள். கேட்டதுமே அவளுக்குள் பதற்றம் எழுந்தது. நா நீட்டிய நாகம் விழி சுடர உடல் சுருட்டிப்பின்னடைந்தது. ஆனால் யமுனையை சுட்டிக்காட்டி பாமா “நான் சொன்னேனே, இன்றைக்கு நீர்விளிம்பு மூன்றாம் படியை தீண்டும் என்று… பார்” என்றாள். “நேற்றே நீருக்குள் நல்ல குளிர்” என்றபடி யமுனையை நோக்கி சென்றாள். ராகினி முலைகள் விம்மி அமைய பெருமூச்சுவிட்டபின் அவளை பின்தொடர்ந்தாள்.
களிந்தகமும் அஸ்வபதத்தின் அந்தகச்சிற்றூர்களும் சேதிநாட்டு அரசரின் வரவுக்காக காத்திருந்தன. சேதி நாட்டின் வல்லூறு கொடியுடன் முதல் அணிப்படகு யமுனையில் தென்பட்டதுமே ஹரிணபதத்தின் எல்லையில் இருந்த யாதவச்சிற்றூரான தட்சிணவனத்தின் உயரமான மரத்தின்மீது கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் அமர்ந்திருந்த இரு காவலர்களும் களிவெறி கொண்டு குறுமுழவை ஒலிக்கத் தொடங்கினர். கல் பட்டு பறவைக்கூட்டம் கலைவது போல யாதவர் ஊர்கள் ஓசையுடன் எழுந்தன. ‘சேதிநாட்டு மன்னர் மணம்கோரி வந்துகொண்டிருக்கிறார்’ என்று கூவியபடி இளம் பாணன் ஒருவன் ஊர்த்தெருக்களில் ஓடினான்.
யாதவர்கள் கூட்டமாக ஓடிவந்து யமுனைக்கரையின் மேடுகளில் ஏறி நின்று நீர்ப்பரப்பில் சென்றுகொண்டிருந்த ஏழு படகுகளை நோக்கினர். அவற்றில் ஆறு காவலுக்குச் செல்லும் சிறுபடகுகள். ஒன்று மட்டுமே பெரிய அணிப்படகு. “அதுதான் சிசுபாலரின் படகு…” என்று ஒருவன் சொன்னான். “மூடா, அகம்படி இல்லாமலா சேதிநாட்டரசர் வருவார்?” என்று களிந்தகத்தில் காவல்பணியில் இருந்து முதிர்ந்து விலகிவந்த ஒருவர் சொன்னார். “அது தூதுப்படகு. அரசரும் அகம்படியும் வருவதை முறைப்படி அறிவிப்பார்கள். இங்கே அனைத்தும் சித்தமாக இருக்கிறதா என்று தெரிவிப்பார்கள்…” யாதவர்கள் திகைப்புடன் “இதற்கே இவ்வளவு பெரிய படகா?” என்றனர். “சேதிநாடு என்றால் என்னவென்று எண்ணினாய்? அடேய், பாரதவர்ஷத்தின் தொன்மையான நாடுகளில் ஒன்று அது. சேதிநாட்டு அரசகுலம் மாமுனிவர் தீர்க்கதமஸின் குருதியில் இருந்து எழுந்தது. தெரிந்துகொள்” என்றார் முதியவர்.
அணிப்படகுக்கு நிகரான விரைவில் கரையில் யாதவர்கள் ஓடியே வந்தனர். ஹரிணபதத்தை படகுகள் அடைந்தபோது கரைமுழுக்க விழவுக்கூட்டம் போல மக்கள் நிறைந்திருந்தனர். படகிலிருந்து சேதிநாட்டு அரசமுத்திரை பொறித்த தலைப்பாகைகளுடனும் உருவிய வாள்களுடனும் இறங்கிய வீரர்கள் படகுத்துறையில் அணிநிரக்க தொடர்ந்து சேதிநாட்டின் கொடியுடன் ஒரு வீரன் வந்தான். அவனைத்தொடர்ந்து செம்மணியாரமும் செவ்வைரக்குண்டலங்களும் அணிந்து இறங்கிவந்தவன் சிசுபாலனா என்று ஹரிணபதத்தினர் மீண்டும் ஐயம் கொண்டனர். அவனை வரவேற்க சத்ராஜித் வராமல் பிரசேனர் வந்ததிலிருந்து அவன் சிசுபாலனல்ல என்று தெரிகிறது என்றான் முதுபாணன் ஒருவன். சற்றுநேரத்திலேயே அவன் பெயர் சித்ரகர்ணன் என்றும் சேதிநாட்டின் முதன்மை படைத்தலைவன் என்றும் செய்தி கிசுகிசுப்பாக பரவியது.
சித்ரகர்ணனை பிரசேனர் முறைப்படி வரவேற்று அழைத்துச்சென்றார். அவர்கள் சத்ராஜித்தின் இல்லத்திற்கு சென்று நெடுநேரமாகியும் ஒன்றும் நிகழாதது கண்ட யாதவ குலப்பாடகன் ஒருவன் “சத்ராஜித் மீண்டும் மகற்கொடை மறுத்துவிட்டார்” என்றான். வியப்புடன் யாதவர் தங்களுக்குள் பேசிக்கொண்ட முழக்கம் எழுந்தது. ‘அவருக்கென்ன, பித்து பிடித்துள்ளதா?’ என்றும் ‘சியமந்தக மணியை இழக்க விரும்பவில்லை அவர். மூட மன்னர்!’ என்றும் பேசிக்கொண்டவர்கள் சற்று நேரத்திலேயே பேசிப்பேசிச்சென்று ‘அந்தகர்களிடம் பெண்கொள்ளும் தகுதி அரசர்களுக்கில்லை’ என்று பேசத்தொடங்கினர். இந்த மணப்பேச்சும் முறியும் என்றால் அதை எப்படி தங்கள் தன்முனைப்பைக்கொண்டு எதிர்கொள்வது என அவர்களின் உள்ளம் திட்டமிட்டது. “அந்தகர்கள் சியமந்தகமணியை ஒருபோதும் பிரிவதில்லை. அது உடலை உயிர்பிரிவதற்கு நிகர்” என்றார் ஒரு முதியயாதவர். “அந்தகர்கள் ஒருநாள் பாரதவர்ஷத்தை ஆள்வார்கள். அன்று அந்த சக்ரவர்த்தியின் மார்பில் சியமந்தகம் அணிசெய்யும்” என்றார் இன்னொருவர். “சியமந்தகம் முடிவெடுக்கிறது. சத்ராஜித் என்னசெய்வார்?” என்று ஒரு முதுபாணன் சொன்னான்.
அப்போது சத்ராஜித்தின் இல்லத்தின் மேல் நின்ற மூங்கில் கொடிமரத்தில் சேதிநாட்டின் வல்லூறு கொடி ஏறியது. முரசொலி கேட்டு திரும்பிப்பார்த்த சிலர் “சேதிநாட்டுக் கொடி!” என்று கூவுவதைக்கேட்டு அனைவரும் விழிதூக்கி நோக்கினர். “சேதிநாட்டுக்கொடி! அவ்வண்ணமென்றால் மணத்தூது ஏற்கப்பட்டுவிட்டது” என்று ஒருவன் கூவினான். “சேதிநாட்டுப் பட்டத்தரசி நம் யாதவகுலப்பெண்!” என்று ஒரு பாணன் கைவிரித்துக்கூவ யாதவர்கள் வாழ்த்தொலி எழுப்பி யமுனைக்கரையை நிறைத்தனர். யமுனைக்கரையிலிருந்த அனைத்து காவல்மாடங்களிலும் சேதிநாட்டின் கொடி ஏறியது.
சத்ராஜித்தின் படைவீரர்கள் வந்து யமுனைப்படித்துறையை வளைத்து கூட்டத்தை விலக்கினர். மங்கல இசைக்குழுவினர் வந்து இடப்பக்கத்தில் அணிநிரக்க வலப்பக்கத்தில் அந்தகக்குலத்தின் பூசகர்கள் மான் தோல் ஆடையும் சடைமுடியும் மலர்மாலைச்சுருளும் வளைதடியும் கங்கணமுமாக வந்து நின்றனர். சற்றுநேரத்தில் அரச அணித்தோற்றத்தில் சத்ராஜித் இருபக்கமும் ஒரு காவல் வீரர் உருவிய வாளுடன் அகம்படிசெய்ய நடந்துவந்தார். அவரைத்தொடர்ந்து அந்தகக் குலத்து மூத்தார் எழுவர் வளைதடிகளும் பெரியதலைப்பாகைகளும் குண்டலங்களும் வெண்ணிற ஆடையும் அணிந்து நடந்து வந்தனர். யாதவர்கள் அரசரையும் மூத்தாரையும் வாழ்த்தி குரலெழுப்பினர்.
சத்ராஜித் படித்துறையில் நின்றுகொள்ள சித்ரகர்ணன் பிரசேனர் இருவரும் களிந்தகத்தின் கொடிபறந்த அணிப்படகில் ஏறி யமுனையில் சென்றனர். “எதிரேற்கச் செல்கிறார்கள். அது அரசமுறை” என்று முதிய வீரர் சொன்னார். அனைவரும் நீர்வெளியின் வான்விளிம்பை நோக்கிக்கொண்டிருந்தனர். சிறிய பறவை ஒன்றின் குஞ்சித்தூவி தெரிவதுபோல சேதிநாட்டின் கொடி தெரிந்ததும் முரசுகளும் முழவுகளும் வாழ்த்தொலிகளும் முழங்கத்தொடங்கின. மெல்ல தொடுவான்கோட்டில் படகுகள் எழுந்து வந்தன. ஏழு அணிப்படகுகள் அறுபது காவல்படகுகள் சூழ வந்தன. “படையெடுப்பு போலல்லவா இருக்கிறது!” என்று முதிய யாதவர் ஒருவர் வியந்தார்.
“சியமந்தக மணியை பெண்செல்வமாக கேட்டிருக்கிறார்” என்றார் ஒருவர். “பெண்ணையே கொடுக்கிறோம்… மணியை கொடுத்தாலென்ன? அவர் முடியில் இருக்கவேண்டியதுதான் அது” என்றார் முதிய யாதவர். “சேதிநாட்டரசர் பாரதவர்ஷத்தை ஆளும் ஆற்றல் கொண்டவர்… இளைய யாதவர் அவரை அஞ்சித்தான் கடல் எல்லைக்குச் சென்று நகர் அமைத்திருக்கிறார்.” இளம்பாணன் உரக்க “சேதிநாட்டில் எழவிருக்கிறது அந்தகர்களின் கொடி. இளவரசியின் கருவில் பிறக்கும் மைந்தர் சியமந்தக மணியை அணியும் சக்ரவர்த்தி” என்று கூவ யாதவர் தங்கள் வளைதடிகளைத் தூக்கி ஓசையிட்டனர்.
அணுகிவந்த படகுகளில் இருந்து எரியம்புகள் எழுந்து வானில் வெடித்து அணைந்தன. அவை வர வர அவற்றில் இருந்து எழுந்த முரசுமுழக்கமும் கொம்பொலியும் கரையை அடைந்தன. அவற்றிலிருந்த வீரர்கள் கொடிகளை வீசிக்கொண்டிருந்தனர். அணிப்படகுகளின் பாய்கள் நீரில் இறங்கும் நாரைக்கூட்டத்தின் சிறகுகள் போல ஒரேசமயம் அணைந்தன. முதல்படகு பெரிதாகி வந்தது “பெரிய படகு!” என்று யாரோ சொன்னார்கள். “யமுனைக்காக இந்தப்படகில் வந்திருக்கிறார். கங்கை என்றால் நாவாயில் அல்லவா வருவார்” என்றது இன்னொரு குரல். முதல்படகு துறையணைந்ததும் அதிலிருந்து வீரர்கள் இறங்கி துறைமேடையில் அணிவகுத்தனர். காவல்படகுகள் யமுனையின் கரையில் ஒதுங்க அதிலிருந்து கயிறுகள் வழியாக இறங்கிய வீரர்கள் யமுனைக்கரையை முழுமையாகவே சூழ்ந்து கொண்டனர்.
ஆறாவது படகில் மிகப்பெரிய கொடிமரமும் அதில் முகில்துண்டு என மெல்ல நெளிந்த பெரிய கொடியும் இருந்தன. அதன் நடைபாலம் கரையை தொட்டதும் சத்ராஜித் கைகூப்பியபடி துறைவிளிம்பை நோக்கி சென்றார். அந்தகக் குலத்து மூத்தார் மலர்த்தாலம் ஏந்திய சேடியர் தொடர அவருடன் சென்றனர். உள்ளிருந்து பிரசேனரால் வழிநடத்தப்பட்டு சிசுபாலன் மெல்ல இறங்கி வந்தான். செவ்வைரங்கள் மின்னும் சிறிய மணிமுடியும் செங்கனல்குண்டலங்களும் செம்மணியாரமும் அணிந்து பொற்பின்னல் செய்த வெண்பட்டாடை அணிந்திருந்தான். பொன்னாலான காலணியை தூக்கி அவன் ஹரிணபதத்தின் கரையில் வைத்ததும் பெருமுரசம் முழங்கியது. அந்தகக் குலத்து மூத்தார் “வருக! ஹரிணபதம் வாழ்த்தப்பட்டது. குலமூத்தார் மகிழ்ந்தனர். மூதன்னையர் அருள் புரியட்டும்” என்று கூவி மலர்தூவி வாழ்த்தினர். யாதவர் “சேதிநாட்டரசர் சிசுபாலருக்கு நல்வரவு…” என்று கூவி வாழ்த்தி அரிமலர் வீசினர்.
சிசுபாலன் நின்றவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு தன்னை வணங்கி “ஹரிணபதம் பெருமை கொள்கிறது. இன்று அதன் வரலாறு முதிர்ச்சி அடைந்தது. இனி அதற்கு பெருமைகள் மட்டுமே” என்று முகமன் சொன்ன சத்ராஜித்தை நோக்கி மெல்ல தலையசைத்தான். அவர் வணங்கியதற்கு மறுவணக்கம் செய்யவில்லை, முகமனும் சொல்லவில்லை என்பதை அனைத்து யாதவரும் உணர்ந்தனர். பிரசேனர் பணிவுடன் தலைசாய்த்து தன் தமையனை சுட்டிக்காட்டி “தமையனார் தங்கள் வருகைக்காக காத்திருந்தார். தங்கள் கருணையால் களிந்தகம் வெல்லவேண்டுமென கனவு காண்பதாக சொன்னார்” என்று சொல்ல சிசுபாலன் மீண்டும் சற்று தலையசைத்துவிட்டு திரும்பி சித்ரகர்ணனிடம் “படகுகளை நிரைவகுக்கச் சொல். நாம் இங்கே நெடுநேரம் தங்க முடியாது என நினைக்கிறேன்” என்றான்.
“தாங்கள் தங்கி இளைப்பாற அனைத்து ஒருக்கங்களும் செய்யப்பட்டுள்ளன” என்றார் சத்ராஜித். “ஆனால் இங்கே அரண்மனை ஏதுமில்லை, புல்வீடுகள்தான் என்று செய்தி வந்ததே?” என்றான் சிசுபாலன். சத்ராஜித் தலைவணங்கி “களிந்தகத்தில் அரண்மனை உள்ளது திரும்பும்போது அங்கு தங்கலாம். குலமூத்தார் இங்கிருப்பதனால்…” என்று சொல்லத்தொடங்க இடைமறித்து “நான் செல்லும் வழியில் மகதத்தின் மாளிகையில் தங்கலாமென எண்ணுகிறேன்… களிந்தகத்தின் கோட்டையை வரும்போது பார்த்தேன். மண்சுவர் என்று தோன்றியது” என்றபின் “செல்வோம்” என்றான். சத்ராஜித் தலைவணங்கி “ஆம்” என்று சொல்லி அவன் பின்னால் நடந்தார்.
அந்தகக் குலப்பூசகர் தங்கள் கோல்களை தூக்கியபடி அருகே வந்தனர். “இது எங்கள் குலவழக்கப்படி வரவேற்பு. தங்கள் வருகையால் எங்கள் கன்றுகள் செழிக்கவேண்டும் என்பதற்காக” என்றார் சத்ராஜித். எரிச்சலுடன் திரும்பிய சிசுபாலன் கையசைத்து “எனக்கு நேரமில்லை… செல்வோம்” என்று சித்ரகர்ணனிடம் சொல்லிவிட்டு நடந்தான். சத்ராஜித் பிரசேனரை பார்க்க அவர் செல்லவேண்டியதுதான் என்று விழியசைத்தார்.
மாலினி சுவர்மேல் சாய்க்கப்பட்ட ஏணிமேல் ஏறி நின்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிவந்த சேடிப்பெண் “அரசருக்கு சேதிநாட்டரசர் முகமன் சொல்லவில்லை. குலப்பூசகர் அணுகவும் அனுமதிக்கவில்லை” என்று சொல்லி மூச்சிரைத்தாள். “ஏனடி?” என்றாள் மாலினி. முதுமகள் ஒருத்தி “ஷத்ரியர் எந்தக்காலத்தில் யாதவர்களை ஒரு பொருட்டாக எண்ணியிருக்கிறார்கள்? அவர்கள் அஞ்சிய ஒரே யாதவர் கார்த்தவீரியர்தான். அவரையும் பரசுராமர் கொன்று ஆயிரம் துண்டுகளாக வெட்டிக் குவித்தார்” என்றாள். “வாயை மூடு கிழமே. நல்லவேளையில் அமங்கலமாக சொல்லெடுக்கிறயா?” என்றாள் மாலினி சினத்துடன்.