வற்கீஸின் அம்மா:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

வற்கீஸின் அம்மா கட்டுரை கண்களில் நீர் வரச்செய்தது. சமீபத்தில் எந்த ஒரு எழுத்தும் இத்தனை நெகிழச் செய்ததில்லை. இத்தனைக்கும் அதில் துக்கமாக ஏதும் இல்லை. துக்கமான விஷயங்களை மறைத்து வெற்றியையும் அன்பையும் மட்டும்தான் சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் மனசு நெகிழ்ந்துவிட்டது.ஏன் என்றே தெரியவில்லை. வாழ்க்கையில் எத்தனை அருமையான தருணங்களை நாம் அடைகிறோம் இல்லையா? அவற்றை அடையாளம் காணவும் பதிவுசெய்யவும் நல்ல எழுத்தாளர்களால் மட்டுமே முடிகிறது

ஜெயந்தி

அன்புள்ள ஜெயந்தி

என் நண்பரும்ன் வழிகாட்டியுமான மலையாள திரைக்கதை ஆசிரியர் லோகித் தாஸ் சொல்வார், இரண்டு விஷயங்கள்தான் கண்களை நிறைய வைக்கின்றன என்று. அன்பின் தருணம், அன்பின்மையின் தருணம். அன்பின் தருணம் மனித உன்னதங்களின் வெளிப்பாடு அல்லவா
ஜெ

***

அன்பு ஜெயமோகனுக்கு,

தங்களின் வற்கீஸின் அம்மா கட்டுரையைப் பார்த்தேன் மிகுந்த மன சிலாகிதம் அடைந்தேன். உண்மையில் ஒழுக்கம் பண்பாடு என்ற கட்டுரைக்கு உதாரணமாகத் தான் இக்கட்டுரை அமைந்துள்ளது. ஒழுக்கமும் பண்பாடும் ஒரு சேர அமையப்பெற்றவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு அடிமட்டத்தில் இருந்தாலும் எந்த தொழில் பார்த்தாலும் நிச்சயம் ஒரு காலத்தில் உன்னத நிலையை அடைவார்கள் என்பதற்கு வற்கீஸ் ஒரு மிகச் சிறந்த உதாரணம். இத்தகைய நிகழ் கால உதாரணங்கள் இன்றைய காலகட்டத்திற்கு மிக மிக அவசியமானதாகும். தங்களின் எழுத்துப் பணி தமிழ் உலகத்திற்கு ஒரு கொடையாகும். உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

இப்படிக்கு

S. ராதாகிருஷ்ணன்

ராஜபாளையம்

அன்புள்ள ராதாகிருஷ்ணன்

ஆம். நீங்கள் சொல்வது உண்மை. மிகச்சிறந்த சதிகாரர்கள் எல்லாவற்றையும் அடைகிறார்கள், சுற்றிலும் மனிதர்கள் இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். அது கடைசியில் தோல்வியையே அளிக்கும். வற்கீஸைப்போன்றவர்கள் மேலும் மேலும் மனிதர்களை அடைகிறார்கள். அது பொருட்செல்வமாகவும் அருட்செல்வமாகவும் விளைகிறது
ஜெ

************

அன்புள்ள ஜெயமோகன்,“வற்கீஸின் அம்மா” படித்தது என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. கிரித்தவ வீட்டுச் சூழலை விவரித்த விதம், என் பள்ளிப்பருவத்திற்கு இட்டுச்சென்றது.என் மூத்த தமக்கையின் பள்ளித் தோழியின் (கிரித்தவப் பெண்) வீட்டிலும்,70 களின் கடைசியில், உங்களின் வர்ணணைக்கு மிக மிகப் பொருத்தமான காட்சிகளை காண முடிந்திருந்தது. பொட்டு இல்லா நெற்றி, ஈறு தெரியும் மலர்ந்த சிரிப்பு, பிரஷ்கொண்டு பல் துலக்குதல், பிஸ்கெட்-பழங்களின் உபயோகம் (எங்கள் வீட்டில் இதெல்லாம் உடம்பு சுகமில்லாத பொழுதுதான் !) கிரித்துவ இல்லங்களை வித்தியாசமாக எனக்கு காட்டியது அந்தக் காலங்களில்.

உங்களின் எழுத்து எனக்கு என் பள்ளிப் பிராயத்தை நினைவு படுத்தியது !! கட்டுரையை முடித்திருந்த பாங்கு மிகவும் நெகிழச்செய்தது !!

நன்றி !!

வெ கண்ணன்

பெங்களூர்.

அன்புள்ள கண்ணன்

நீங்கள் குறிப்பிட்டது உண்மை. ஐரோப்பியப்பண்பாட்டின் சிறந்த சில அம்சங்களை உள்வாங்கியவர்களாக இந்திய கிறித்தவர்கள் இருக்கிறார்கள். சுந்தர ராமசாமி சொல்வார், வேறு யார் எப்படி இருந்தாலும் பரவாயில்லை எனக்கு, நர்ஸ் கிறித்தவராக இல்லாவிட்டால் உடலை ஒப்படைக்க மாட்டேன் என்று.

ஆனால் தமிழக கிறித்தவர்களில் ஒருதலைமுறைக்குள் மதம் மாறியவர்களில் ஒரு வகையான அடிபப்டைவாத இறுக்கம், பிறமத வெறுப்பு உண்டு. பெந்தேகொஸ்தே யோகாவா சாட்சிகள் போன்ற சில இறுக்கமான கிறித்தவ அமைப்புகள் தங்களவர் அல்லாத அனைவரையுமே கடுமையாக வெறுக்க கற்றுக்கொடுக்கின்றன. எங்கள் தெருவிலேயே இரு வீடுகள் உள்ளன. அந்த வீட்டு குழந்தைகள் கூட பிற மதத்தவரைப்பார்த்து புன்னகை கூட புரியாது.

இந்த இயல்பு கேரள கிறித்தவர்களிடம் இல்லை. தமிழக கடலோர கத்தோலிக்கர்களிடமும் கிடையாது. அவர்கள் பலகாலம் முன்னரே மதம் மாறியவர்கள். ஆகவே சற்று இயல்பாக மதத்தை எடுத்துக்கொள்ள அவர்களால் முடிகிறது. நகைச்சுவையும் பிறமதங்களை புரிந்துகொள்ளும் போக்கும் அவர்களிடம் அதிகம்.

ஜெ

***

அன்புள்ள ஜெ,
வற்கீஸின் அம்மா அனுபவம் ஒரு கவித்துவ முடிவுடன் மிகச்சிறந்த சிறுகதை போல் இருந்தது. சில சொற்களில் சொல்லப்பட்டாலும் வற்கீஸின் அம்மாவின் முகம் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது. நுட்பமான நகைச்சுவை பல வரிகளில் உள்ளது. உதாரணமாக அப்பாக்கள் இருவரும் பேசாமலேயே அன்பை வளர்க்கும் இடம்.

வாழ்த்துக்கள்

ராகவ்

அன்புள்ள ராகவ்

உங்கள் கடிதம் அந்தவரியை கூர்ந்து பார்க்க வைத்தது. நானும் வற்கீஸும்கூட பாதிநேரம் சும்மாதான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்போம்
ஜெ

அன்புள்ள ஜெய்,

வற்கீஸின் அம்மா கட்டுரையைப் படித்தேன். அது உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த கட்டுரை. சில இடங்களில் என் கண்களின் கண்ணீர் வந்தது. என்ன ஒரு பெரெரனுபவம் உங்களுக்கு!. மேலும் அதை சிறப்பாக சிறப்பான வார்த்தைகளில் வடித்திருந்த விதமும் வியப்படையச்செய்தது. நன்றி

கெ.ஜெ.அசோக் குமார்
வற்கீஸின் அம்மா

முந்தைய கட்டுரைமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்
அடுத்த கட்டுரைவற்கீஸின் அம்மா:மேலும் கடிதங்கள்