வணக்கம் ஜெ,
அக்னிப்பிரவேசம் கடிதங்களில் ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலை முகப்புத்தகத்தில் பார்த்து, பின்னர் கடிதங்களைப் படித்து அதன் பின்னர் கட்டுரையைப் படித்தேன்.
நீங்களே கருணையற்ற ஆராய்ச்சி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வகையில் இதுவும் ஒரு கருணையற்ற கட்டுரை அல்லவா? :-)
அன்றைய காலகட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பது ஒன்று. அப்படிப் பார்க்கையில் 12 வயது வித்தியாசம் என்பது அக்கால கட்டத்தில் ஒன்றுமே இல்லை அல்லவா. இதுவே கட்டுரையின் இன்னொரு இடத்தில் 16 வயது இடைவெளி என்பது போல கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருப்பினும் அது பெரிய எதிர்மறை விசயம் கிடையாது. அப்படி இருக்கும்போது சதாசிவத்தால் வடிவமைக்கப் பட்டு எம்.எஸ். அடைந்த வளர்ச்சி என்பது நல்ல விசயம் தானே?
ஏன் என்றால குலத்திற்கு அப்பாற்பட்டு எல்லாப் பெண்களும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கப் பட்ட சூழல் தானே? இன்று வரை பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தாங்களாகவே தேர்ந்தெடுக்க முடியாது என்பது தானே சாதிக்கு அப்பாற்பட்டு எல்லா குடும்பங்களிலும் நிலவுகிற சூழல்? அப்படி வைத்துப் பார்க்கும் போது கட்டற்ற சுதந்திரத்திடன் மனதுக்கு தக்க வாழ்க்கை என்ற ஒரு அளவுகோலோடு ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி சரி?
கட்டுடைப்பு என்பது சரி. அவசியமானது. ஆனால் அதனால் ஏதாவது பலனிருக்க வேண்டுமள்ளவா? ஒரு ஊழல் அரசியல் வாதியின் முகத்தை தோலுரிப்பது அல்லது ஒரு மத நம்பிக்கையை, ஒரு சிந்தாந்தத்தை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்ப்பது என்பதைப் போன்றதா ஒரு தனி மனிதரின் வாழ்க்கை?
இது நீங்கள் பிராமணர்களுக்கு விடுகிற சவாலாக இருக்கலாம். இதுதான் அவர் இருந்தாலும் உன்னால் அவர் பாட்டை ரசிக்க முடிகிறதா எனப் பார். அப்போதுதான் நீ உண்மையான் இசை ரசிகன் என்று. ஆனால் இதனால் நீங்கள் எம்.எஸ்.க்கு செய்வதன்ன? ஒரு அரசியல் வாதியையோ அல்லது சித்தாந்தத்தையோ கட்டுடைக்கும் போது அதற்கு இது வரை இருந்த வரவேற்பு உடை பட்டு அதன் எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய இடத்தில் கொஞ்சம் தட்டுகிறோம். இதனால் சமுதாயத்திற்கு பலன் கிடைக்கும் என்கிற அற நோக்கில். இங்கே எம்.எஸ். வரலாற்றில் எப்படி பார்க்கபட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவர் பெற்ற புகழ்களுக்கு அவர் தகுதியானவர் அல்ல என்றா?
இதனால் யாருக்கு என்ன பலன்? ‘பொய்மையும் வாய்மையிடத்த’ என்கிற போது, ‘வாய்மையும் பொய்மையிடத்த’ எப்பலனும் இல்லையெனில் அல்லவா?
தன் வாழ்நாள் முழுக்க அவர் தவமிருந்து அடைந்த ஓர் இடம், துடைத்த ஓர் இழுக்கு என்று நீங்கள் குறிப்பிடும் போது, அவர் அந்தரங்கத்தை பொதுவெளியில் வைப்பது அந்த வாழ் நாள் தவத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகிறது அல்லவா? அவர் செய்த பிழைதான் என்ன?
ஏன் இதை எழுதுகிறேன் என்றால் திரு.ஜியார்ஜ் எழுதிய புத்தகத்தைக் காட்டிலும் உங்கள் விமர்சனத்தால் இச்செய்தி பெரு வாரியாக பரவும். உங்களுக்கு அவர் பாடல்களைக் கேட்கும் போது இனி மிகுந்த மன நிறைவு வரும் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதைத் தாண்டி வேறு பயன் ஏதும் இக்கட்டுரைக்கு உண்டா?
அன்புடன்,
சாய் மகேஷ்
அன்புள்ள சாய் மகேஷ்
நான் விரிவாகவே பதில் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். உங்கள் கடிதம் என் பதில் உங்களுக்கு உவப்பில்லை என்பதையே சொல்கிறது. அது உங்கள் மனநிலை. நான்ஒன்றும் சொல்வதற்கில்லை. நான் உண்மைக்கு பெருமதிப்புண்டு, அது நம்மையும் நாம் வாழும் சூழலையும் அறிவதற்கு உதவியானது என நினைக்கிறேன். வரலாற்றை அவ்வடிப்படையில்தான் அணுகுகிறேன். நேதாஜியை காந்தியை நேருவை அனைவரையும் அப்படியே ஆராய்கிறேன். நீங்கள் சுகமான பொய்கள் போதுமென நினைக்கிறீர்கள். அடிப்படையே வேறு
எம்.எஸ் என்ற பெண்ணை அல்ல வரலாற்று உருவத்தை நாம் ஆராய்கிறோம். அது எப்படி உருவாகி வந்தது என பார்க்கிறோம். அதில் இருக்கிறது நம்முடைய உண்மையான வரலாறு. நம்முடைய சமூக மனநிலை. நம்முடைய நோய். அதை மறைப்பதில் பொருளில்லை. அதை அறிவதில், கடந்துசெல்வதில்தான் நேர்மை இருக்கிறது. உண்மையான சவால் இருக்கிறது
ஜெ