எப்படி இருக்கிறேன்?

1

பாஸ்போர்ட்டை தொலைத்து மீட்டதைப்பற்றி எழுதப்போய்
பல கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. பல அழைப்புகள். ஒன்றுமில்லை, நன்றாகவே இருக்கிறேன். வாழ்க்கையின் மிக உன்னதமான நாட்கள் என்று சொல்லவேண்டும். வெளியே இருப்பதுதானா வாழ்க்கை என்பது? வெளியே ‘ஒரு மார்க்கமாக’த்தான் இருக்கிறேன். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உள்ளே பொன்பூத்திருக்கிறது

சொல்லை அளைந்துகொண்டிருக்கிறேன். சீக்கிரமே எழுதிவிடக்கூடிய அத்தியாயங்களைக்கூட அப்படி முடித்துவிடவேண்டாம் என்று மெல்லமெல்ல எழுதுகிறேன். எழுதாதபோது இசை. ஒருமாதத்துக்கும் மேலாக அஷ்டபதி. அனேகமாக இரவெல்லாம் . முழுமையான தனிமையில். மீண்டும் மீண்டும் ‘ரதிசுக ஸாரே’. ஒரு பெரிய கற்பனை மெல்லமெல்ல எந்த இருப்புகளை விடவும் பிரம்மாண்டமானதாக ஆகிவிடுவதை அஷ்டபதியைப்போல காட்டும் வேறென்ன உள்ளது

ஒவ்வொருநாளும் ஒவ்வொன்று பிடித்து ஆட்டுகிறது. பண்டிட் பலுஷ்கர் நாலைந்துநாள். உஸ்தாத் ரஷீத்கான் சிலநாள். நேற்று விடியவிடிய சுவாதித்திருநாள். சலியே குஞ்சனமோ. சுவாதித்திருநாளும் கண்ணனைத் தீண்டியிருக்கிறார்.ஒருபாட்டை நானோ அதுவோ மட்டும் எஞ்சினால்போதும் என்ற வெறியுடன் கேட்பது என் வழக்கம். சலியே குஞ்சனமோ ஒரு தீராத கொஞ்சல்.

காற்றில்லாதபோதும் கொடியைப் பறக்கவிடுவதற்கு இசை தேவைப்படுகிறது. எப்போதும் பறந்துகொண்டிருத்தல்தான் இந்நாட்களின் அடையாளம். மிக அருகே கிருஷ்ணனை துவாரகையை மகாபாரத மானுடரை காணமுடிகிறது. மொழியை தொட்டாலே கனவு வந்துவிடுகிறது

இது மிக எளிமையான ஒரு மூளைநிகழ்வு என்றும் மறுபக்கம் மூளையே சொல்கிறது. பிரமைகளை, மயக்கங்களை உருவாக்கிக் கொள்ளும் வேட்கை மூளைக்கு உண்டு. அந்த வழியைச் சற்றுத் தூண்டிவிட்டாலே போதும், அதுவே அதைநாடிச்செல்லத் தொடங்கிவிடும்.

மூளையை வைத்து விளையாடுவதில் உள்ள எல்லை என்பது அந்த விளையாட்டு நமக்கே தெரிவதுதான். அது தெளிவாகவே இருக்கிறது. ஆகவே இது இனியது

https://www.youtube.com/watch?v=krI10xk42ko

முந்தைய கட்டுரைஜீவ காருண்யம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9