பெருமதிப்பிற்கு உரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
என்னுடைய முதல் கடிதத்திற்கு நீங்கள் பதில் அனுப்பியதற்கு மகிழ்ச்சி
மற்றும் நன்றி. எனக்கு முக நூல் கொஞ்சம் அசவுகரிய படுவதால் மின்னஞ்சல்
மூலம் தொடர்பு கொள்கிறேன்.
தொடர்ந்து உங்கள் வலைதளத்தை வாசிக்கிறேன். ஒவ்வொரு பதிவையும்,
சிறுகதையையும், வாசிக்கும் பொழுது எழும் சிலிர்ப்பிலும், உள்ள
உவகையிலும், நெகிழ்ச்சியின் விளிம்பினிலும் பல முறை மின் அஞ்சல் அனுப்ப
முயன்றது உண்டு, ஆனால் உங்களின் நேரத்தை வீணடிக்க மனம் இல்லாமல் பல முறை
எழுதிய இ -மெயில்களை அனுப்பவில்லை .உங்களின் கன்னி நிலம், உலோகம்
மற்றும் அனல் காற்று வாசித்த பின் என்னுடய உணர்ச்சி கொதிப்பை அடக்க
முடிய வில்லை. உங்களுக்கு எழுதியே தீர வேண்டும் என்ற மன நிலையை அடைந்து
விட்டேன். என்னால் முயன்ற வரை உங்களின் பதிவுகளை என் நண்பர்களுடன்
பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் வாழ்வில் நான் மிகவும் மதிக்கும்
மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களின் எழுத்தால் உங்களை மிக அதிக
நெருக்கத்தில் உணர்கிறேன்.
நான் அடுத்த வாரம் 15 நாட்கள் விடுப்பில் இந்தியா வருகிறேன். உங்களை
சந்திக்க மிகவும் அவா, ஆனால் தூரத்தில் இருந்தே பிரமித்து ரசிக்கிறேன்.
நீங்கள் இன்னும் பல பிரம்மாண்டமான படைப்புகளை படைக்க எல்லாம் வல்ல
இறைவனிடம் வேண்டுகிறேன்.
விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை வாங்க விண்ணப்பித்துள்ளேன். என்றும் உங்கள்
எழுத்தை தீரா தாகத்துடன் வாசிக்க காத்து கொண்டு இருக்கிறேன்.
நன்றி,
இப்ராகிம்
Doha, கத்தார்
கோவில்பட்டி – India
அன்புள்ள இப்ராகீம்
தாமதமான கடிதத்திற்கு மன்னிக்கவும். நான் வரும் ஜூன் 8 அன்று கனடா சென்று ஜூலை 26 அன்றுதான் திரும்புகிறேன். ஆகவே தங்களைச் சந்திக்கமுடியாத நிலை. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
பொதுவாக எழுத்து எழுத்தாளனிடம் ஒரு அணுக்கத்தை உருவாக்கும்போது கூடவே தனிப்பட்ட முறையில் ஒரு விலக்கத்தையும் அளிக்கிறது என்று படுகிறது. அதைத்தான் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் என் வரையில் அந்த அகலத்தை இல்லாமலாக்கவே முயன்றுவருகிறேன். அதற்காக நான் எதையும் செய்வதில்லை. நான் முடிந்தவரை இயல்பாக இருப்பேன்
ஆனால் என் நண்பர்கள் மிகப்பெரும்பாலும் நீண்ட காலமாக தொடர்வதைக் காணும்போது என்னிடம் சில குணாதிசயங்கள் இருக்குமென்றே நினைக்கிறேன். ஆகவே நாம் சந்திக்கலாம். ஒன்றும் ஆகாது )))
பொதுவாக கலை, இலக்கியம் இரண்டும் இணைமனங்களுடன் உரையாடும்போது மட்டுமே விரிவடைபவை. இணைமனங்கள் நம் சூழலில் மிகமிக அரிதாகவே காணக்கிடைப்பவை. ஆகவே பலவகையிலும் தொடர்புகளை உருவாக்கி நீட்டிக்கவேண்டியிருக்கிறது.
இப்ராகிம் என்ற இன்னொரு நண்பர் இருக்கிறார். என் பழைய பாஸ் அலியின் மருமகன். அக்னிநதி பற்றிய ஒரு நல்ல கடிதம் பதிவாகியிருக்கிறது. ஆகவே உங்கள் பெயரை பாதுஷா என்று மாற்றிக்கொள்கிறேன்
ஜெ