அன்புள்ள ஜெ,
உங்கள் பல கட்டுரைகளில் தூய அத்வைதம் என்று வருகிறது. அது என்ன? வேதாந்தமா? அல்லது அத்வைதத்திலேயே இரு பிரிவுகள் உள்ளனவா? அத்வைதத்தை சைவம் என்று கொள்ளலாமா? ஏனென்றால் வைணவர்கள் அத்வைதத்தை மறுத்துத்தானே விசிஷ்டாத்வைதம் பேசுகிறார்கள்? தமிழ்நாட்டில் சைவர்களான ஸ்மார்த்த பிராமணர்களே அதிகமும் அத்வைதம் பேசுகிறார்கள். இந்தக்குழப்பம் பலவருடங்களாகவே எனக்கு இருக்கிறது. உங்கள் விளக்கம் உதவும் என நினைக்கிறேன்
கெ.டி.சாமி
அன்புள்ள சாமி அவர்களுக்கு,
நானும் பல சந்தர்ப்பங்களில் நேர்ப்பேச்சில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நேரிட்டிருக்கிறது. அப்பதில்களை இந்த தருணத்தில் தொகுத்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்.
வேதாந்தம் என்பதன் நீட்சியும் வளர்ச்சியும்தான் அத்வைதம். அத்வைத வேதாந்தம் என்றுதான் சொல்வார்கள். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் மத்வரின் துவைதம் நிம்பார்க்கரின் துவைதாத்வைதம் போன்றவை எல்லாமே வேதாந்தத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளே. அவற்றை ஒட்டுமொத்தமாக பிற்கால வேதாந்தங்கள் என்று சொல்வதுண்டு.
வேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதங்களின் இறுதி என்று பொருள். இரு வகைகளில் இச்சொல் பொருள்படுகிறது. பிற்காலத்தில் உருவான பல ஞானநூல்கள் வேதங்களுடன் இணைக்கப்பட்டன. பிராம்மணங்கள், ஆரண்யகங்கள்,உபவேதங்கள் போன்றவை இவ்வாறு இணைக்கப்பட்டவையே. அவ்வாறே பிற்கால ஞானநூல்களான உபநிடதங்களும் வேதங்களுடன் இணைக்கப்பட்டன. ஒவ்வொரு முக்கியமான உபநிடதமும் ஒரு வேதத்துக்கு உரியதாகும். உதாரணமாக சாந்தோக்ய உபநிடதம் சாமவேதத்தின் துணைப்பகுதி [ உபாங்கம்] இவ்வாறு வேதங்களில் இறுதியாக இணைந்தவை ஆதலால் உபநிடதங்களை ஒட்டிய சிந்தனை வேத இறுதி என்ற பொருளில் வேதாந்தம் என அழைக்கப்பட்டது
இன்னொரு பொருள், உள்ளடக்கத்தின் அடிப்படையில் வேதங்களை இரண்டு பெரும்பகுதிகளாக பிரிக்கும் கோணத்தில் இருந்து சொல்லப்பட்டது. வேதங்களை கர்ம காண்டம் ஞான காண்டம் என பிரிப்பார்கள். வேள்விகளையும் பிற வழிபாட்டுச்சடங்குகளையும் முன்னிறுத்துவது கர்மகாண்டம் என்னும் செயல்பகுதி. தூய அறிதலை மட்டுமே முன்னிறுத்துவது ஞானகாண்டம் என்னும் அறிவுப்பகுதி. ஞானகாண்டம் ரிக் வேதத்தில் கடைசியாக பத்தாம் காண்டமாக உள்ளது. ஆகவே ஞானத்தை முன்னிறுத்தும் போக்குக்கு வேதாந்தம் என்ற பெயர் வந்தது. வேதங்களின் ஞானகாண்டத்தின் வளர்ச்சிநிலைகளே உபநிடதங்கள்.
ஆகவே வேதஞானம் இருபெரும் பிரிவுகளாகவே எப்போதும் இருந்து வந்தது. ஒன்று, வேள்வியையும் சடங்குகளையும் முன்வைக்கும் தரப்பு. இது பூர்வ மீமாம்சம் [முதல் சிந்தனைப்போக்கு] என்று சொல்லப்பட்டது. இவர்கள் வேதங்களை முழுமுதல் ஞானமாக குறிப்பிட்டார்கள். வேதங்களை ஓதுவதே முக்திக்கான ஒரே வழி என்றார்கள். இந்த தரப்பு பிராமணமதமாக அல்லது புரோகிதமதமாக வளர்ந்து இன்றும் இந்து மரபுக்குள் வலுவாக உள்ளது. இவர்களின் மூலநூல் மீமாம்சா சூத்திரம். ஜைமினி எழுதியது.
தூய ஞானத்தை முன்வைக்கும் தரப்பே வேதாந்தம். இது உத்தர மீமாம்சம் [பிந்தைய சிந்தனைப்போக்கு] எனப்படுகிறது. உபநிடதங்களில் பேசப்படுவது இதுவே. கீதையே இதன் முதல்நூலாகும். இந்து ஞானமரபின் மூன்று தத்துவங்கள் [பிரஸ்தானத் திரயம்] எனப்படும் நூல்தொகை வேதாந்தத்தின் மையஞானத்தை விளக்குவது. உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவையே மூன்று தத்துவங்கள். பாதராயணர் எழுதிய பிரம்ம சூத்திரம் வேதாந்தத்தின் கோட்பாட்டு நூல். இந்து ஞானமரபின் தூய அறிவு தரப்பு, அதன் தத்துவ உச்சம் வேதாந்தமே.
வேதாந்தம் பௌத்தத்துடன் உரையாடியது. பௌத்தத்தை அது வளர்த்தது. அதன் விளைவாகவே அதற்குள் மகாயானப்பிரிவின் யோகாசார பௌத்த தரப்புகள் உருவாகி வந்தன. அந்த தரப்புகள் சூனியவாதம் என்றும் விக்ஞானவாதம் என்றும் மேலும் மேலும் நுண்மை கொண்டன. திக்நாகரின் விக்ஞானவாதத்தின் பிரபஞ்ச விளக்கத்தை உள்ளிழுத்துக்கொண்டு புதுப்பிறவி பெற்ற வேதாந்தமே அத்வைதம் ஆகும்.
எட்டாம் நூற்றாண்டில் பிறந்த சங்கரர் பிற வைதிகர்களால் ’மாறுவேடமிட்ட பௌத்தன்’ என பழிக்கப்பட்டார். ஆனால் அவரது தரப்பு பௌத்தஞானத்தின் உச்சிமுனையாகிய விக்ஞானவாதத்தில் இருந்து மேலே சென்று வேதாந்தத்தை விளக்கிய ஒன்று. ஆகவே அவர் பௌத்தர்களை எளிதில் வென்று மீண்டும் வேதாந்தத்தை இந்தியாவில் நிலைநாட்டினார்.
வேதாந்த ஞானமரபின் தனிப்பெரும் ஆளுமைகள் என்றால் அது கீதை இயற்றிய யாதவமன்னனாகிய கிருஷ்ணனும் சங்கரரும்தான். அத்வைதம் இந்தியாவில் ஒரு பெரிய அலையை உருவாக்கியது. அத்வைதமே பிறகு வந்த எல்லா இந்தியச் சிந்தனைகளுக்கும் அடிப்படைக்கட்டுமானமாக அமைந்தது. இந்து சிந்தனைகளுக்கு மட்டுமல்ல சூஃபிசம் போன்ற இஸ்லாமியச் சிந்தனைகளுக்கும், சீக்கிய சிந்தனைககளுக்கும் கூட. ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நாராயணகுரு போன்றவர்கள் அத்வைதிகளே. வள்ளலாரின் ஜோதி தரிசனத்தில் அத்வைதம் உண்டு. அய்யா வைகுண்டர் பேசியது அத்வைதமே. ரமணர் முதல் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் வரை நாம் அத்வைதத்தின் வலுவான பங்களிப்பை காணமுடியும்.
அத்வைதத்துடன் விவாதித்தும் முரண்பட்டும் பல்வேறு சிந்தனைகள் ஏழாம் நூற்றாண்டு முதல் பிறந்தபடியே இருந்தன. அவையே பிற்கால வேதாந்தங்கள். சைவ சித்தாந்தத்தின் கருதுகோள்களிலும் அத்வைதமே முன்னுதாரணமான சிந்தனையாக உள்ளது. விசிஷ்டாத்வைதம் என்றால் ’தனிச்சிறப்புள்ள அத்வைதம்’ என்றே பொருள்.
வேதாந்தம் என்பதும் சரி அதன் மறுவடிவான அத்வைதமும் சரி , மதம் சார்ந்தவை அல்ல. அவற்றுக்கு மதக்கட்டுமானம் தேவை இல்லை. அவை தூய தத்துவங்கள். ஆகவே பலசமயம் மத அமைப்புக்கு எதிரானவையும்கூட. உதாரணமாக ‘தர்க்கம்’ என்ற அறிவுத்துறையை எடுத்துக்கொள்ளலாம். தர்க்கம் கணிதத்தில், இயற்பியலில், பொருளியலில் , சமூகவியலில் எல்லாம் உள்ளுறையாகச் செயல்படக்கூடியது. அதற்கென்று ஒரு அறிவியல்தளம் இல்லை. அத்வைதம் இனிப்பு போல. அது சீனியில் இருக்கலாம் பழங்களிலும் இருக்கலாம் பாலிலும் இருக்கலாம்.
அத்வைதம் ஒரு தரிசனமும் அதற்கான தர்க்கமும் இணைந்த ஓன்று. அது சைவம், வைணவம், சாக்தம் எல்லாவற்றுக்கும் பொது. இந்த மதங்களை ஏற்காத ஒருவருக்கும் அது உரியதே. அறிவியலின் எந்த தளம் சார்ந்தும் அத்வைதத்தை விளக்கிக் கொள்ளலாம். நான் டேவிட் அட்டன்பரோவின் இயற்கை குறித்த வரிகளைக் கேட்கையில் அவர் நவீன உயிரியல் சார்ந்து ஒரு அத்வைதத்தைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார் என நினைப்பேன். ’இயற்கை என்பது வெளியே இல்லை. நீங்கள் அதில் இருந்து வேறல்ல. அது நீங்களேதான்’ [தத்வமசி] என்றுதான அவர் சொல்கிறார்.
இந்து ஞான மரபில் ஒரு முக்கியமான செயலியக்கத்தைக் காணலாம். எந்த ஒரு தத்துவத் தரப்பும் நடைமுறைக்கு வரும்போது வைதீகத்தரப்புடன் சமரசம் செய்துகொள்ள நேரிடுகிறது. சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம் எல்லாம் அப்படி சமரசம் செய்துகொண்டன. அந்தச் சமரசத்தை பிராமணமதத்தின் வெற்றி என்று உடனடியாகச் சொல்லத்தோன்றும்தான். அது சரியல்ல. அது ‘வழிபாடு’ என்ற முறையின் வெற்றி.
மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில் வழிபாடு தேவையாக இருக்கிறது. நாத்திகம் கூட காலப்போக்கில் அவர்களுக்கான வழிபாட்டுச் சடங்குகளை கண்டடைவதைக் காண்கிறோம். ஏனென்றால் சடங்குகள் போன்றவை குறியீட்டு முக்கியத்துவம் கொண்டவை. அவை நம் சிந்தனையை தீண்டாமல் ஆழ்மனதுடன் உரையாடுகின்றன. ஆழ்மனதின் இயல்பான வெளிப்பாடாக அமைகின்றன. மேலும் அந்த குறியீட்டு வடிவங்களும் நடைமுறைகளும் எல்லாம் மக்களின் தொன்மையான பழங்குடி மரபில் வேர்கள் உள்ளவை.
ஆகவே பொதுமக்கள் எப்போதுமே வழிபாடுகளையே அதிகமும் சார்ந்திருக்கிறார்கள். தத்துவம் கூட சடங்குகளாகவும் குறியீடுகளாகவும் உருமாறித்தான் அவர்களிடம் செல்ல வேண்டியிருக்கிறது. அடிப்படையில் சடங்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட பௌத்தம் சமணம் போன்ற தத்துவ மதங்கள்கூட வளர்ச்சிப்போக்கில் சடங்குகளையும் தெய்வ உருவங்களையும் உருவாக்கிக்கொண்டிருப்பதை நாம் காணலாம்.
பூர்வமீமாம்சம் என்னும் பிராமண மதம் முழுக்க முழுக்க சடங்குகளைச் சார்ந்தது. மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் அது பல்வேறு இனக்குழுக்களின் சடங்குகளையும் தெய்வங்களையும் தன்னுள் இழுத்துக்கொண்டு விரிவாக்கம் பெற்றுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் இந்து மரபின் வெகுஜனத் தளமே அதுதான் என்றாயிற்று. ஆகவே இந்து ஞானமரபின் எந்த ஒரு தத்துவத்தளமும் அந்த வெகுஜனத்தளத்துடன் சமரசம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது.
அவ்வாறு மெல்ல மெல்ல அத்வைதத்தின் ஒரு தரப்பு சடங்குகளுக்கும் தெய்வங்களுக்கும் இடமளிக்க ஆரம்பித்தது. சங்கரரே சௌந்தரிய லஹரி முதலிய பக்தி நூல்களை எழுதினார் என்ற வரலாறுகள் உருவாகி வந்தன. மொழியமைப்பை வைத்து அந்நூல்கள் சங்கரருடையவை அல்ல பிற்காலத்தையவை என ஆய்வறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்வைதத்தின் ஞானத்தளம் சாமான்யம் , விசேஷம் [ பொதுத்தளம்,சிறப்புத்தளம்] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. விசேஷதளத்திலேயே அகம்பிரம்மாஸ்மி [நானே கடவுள்] தத்வமசி [அது நீயே] போன்ற தரிசனங்கள் செல்லுபடியாகும் என்றும் சாமான்ய தளத்தில் வழிபாடுகளும் சடங்குகளும் தேவை என்றும் சொல்லப்பட்டது.
ஏற்கனவே கடவுளையும் வழிபாட்டையும் உள்ளே கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அத்வைதத்தில் இருந்து விசிஷ்டாத்வைதமும் துவைதமும் எல்லாம் பிரிந்து வந்தன. காலப்போக்கில் அத்வைதமும் அவ்வாறே ஆயிற்று.பக்தியை மைய ஓட்டமாக கொண்ட சைவ வைணவ மதங்களின் உயர்தத்துவத்தளமாக அத்வைதம் விளக்கப்பட்டது.
இந்த சமரசத்துக்கு எதிராக உள்ள தரப்பையே நாம் தூய அத்வைதம் என்கிறோம். இது அத்வைதத்தின் மூல தரிசனத்தை முழுக்கமுழுக்க சார்ந்திருக்கிறது. அதை வெகுஜனமயகாக்குவதில்லை. அதாவது இது முழுக்கமுழுக்க ஞானகாண்டத்தைச் சார்ந்தது. ’சுத்த அறிவே சிவம்’ என கூவுவது. ஆகவே மதம் சாராதது. ஒரு தரிசனம் மட்டுமாக நிற்கும் தன்மை கொண்டது. ஒரு தர்க்கநிலையாக தன்னை முன்வைப்பது.
இது ஏன் தேவையாயிற்று என்று பார்க்கையில் ஆர்வமூட்டும் ஒரு வரலாற்றுப்பரிமாணம் கண்ணுக்குப் படுகிறது. ராமகிருஷ்ணர் உருவ வழிபாட்டாளராக இருந்தார். சாக்தேயராக இருந்தார். அங்கிருந்து தன் இறுதிக்காலத்தில் அவர் தூய அத்வைதம் நோக்கி வந்தார். ஆனாலும் முழுமையாக அவர் இறைவழிபாட்டில் இருந்து வெளிவரவில்லை. ஆனால் அவரது மாணவரான விவேகானந்தர் தூய அத்வைதி
அதேபோல நாராயணகுரு இறைவழிபாட்டாளராகவும் இருந்தார். சாரதா அஷ்டகம் , சுப்ரமணிய அஷ்டகம் போன்ற நூல்களை அவர் எழுதினார். அருவிக்கரையில் அவர் சிவலிங்கத்தை நிறுவினார். ஆனால் காலப்போக்கில் அவர் தூய அத்வைதத்தையே முன்வைத்தார். அவர் இறைவழிபாட்டை முன்வைத்தது எளிய மக்களுக்காக. அவர்கள் அவரை தொடர ஆரம்பித்த பின்னர் கடைசிக்காலத்தில் விளக்கையும் ‘சத்யம் தயை தர்மம்’ என்ற சொற்களையும் தான் இறைவடிவமாக நிறுவினார். கடைசியில் ‘நானே கடவுள்’ என்ற சொல்லின் வெளிப்பாடாக நிலைக்கண்ணாடியை மூல விக்ரகமாக நிறுவினார். அவரது மாணவர்களான நடராஜ குருவும் நித்யசைதன்ய யதியும் முழுக்க முழுக்க தூய அத்வைதிகள். அவர்கள் எப்போதும் எவ்வகையிலும் இறை வழிபாடோ சடங்குகளோ செய்தவர்கள் அல்ல.
ஏன் இந்த மாற்றம்? பொதுஜன இயக்கமாகச் செயல்படும்போது குறியீடுகளும் சடங்குகளும் தேவைப்படுகின்றன. மரபில் ஊறிய மக்களிடம் பேசும்போது அவை இன்றி அமைவதில்லை. ஆனால் இந்து ஞான மரபு மேலைச்சிந்தனையின் உச்சங்களை தூய அத்வைதம் மூலமே சந்திக்க முடியும். மேலைச்சிந்தனையுடன் உரையாடிய விவேகானந்தர், அரவிந்தர், நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி , ஆத்மானந்தர் போன்ற அனைவருமே தூய அத்வைதத்தை நோக்கி வந்தது இதனால்தான்.
வைணவமும் அத்வைதத்தை சாராம்சத்தில் ஏற்றுக்கொண்டதே. தென்னிந்தியாவின் இருபெரும் வைணவ ஞானிகளான ராமானுஜரும் மத்வரும் விசிஷ்டாத்வைதம் துவைதம் என்னும் இரு தனி ஞானமரபுகளை உருவாக்கிக்கொண்டமையால் அத்வைதம் அதற்கு எதிரானது என்ற மனப்பிம்பம் நம்மிடம் உள்ளது. ஆந்திரத்தில் பத்னான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நிம்பார்க்கர் அத்வைதிதான். அவரது அத்வைதம் துவைதாத்வைதம் என்று சொல்லப்படுகிறது. அவர் வைணவர். பிரம்மத்தை அவர் கண்ணனாகவும் ஆத்மாவை ராதையாகவும் உருவகித்துக்கொண்டார்.
சுத்தாத்வைதம் என்று மரபில் சொல்லப்படும் ஒரு தரப்பு உண்டு. அது ஒரு தீவிர வைணவ மதம். அதன் நிறுவனர் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வல்லபர். தெலுங்கு பிராமணரான அவர் தன் தரிசனத்தை காசி, மதுரா, பிருந்தாவனம் பகுதிகளிலேயே பரப்பினார். அணுபாஷ்யம் என்ற பேரில் அவர் பிரம்மசூத்திரத்துக்கு ஓர் உரை எழுதியிருக்கிறார். ஆனால் சுபோதினி என்ற அவரது ஸ்ரீபாகவத விளக்கமே இன்று பெரும் புகழ்பெற்றுள்ளது. கிரிதரன், பாலகிருஷ்ண பட்டர், கோபேஸ்வரர் போன்ற சீடர்கள் அவருக்குப் பின் அவரது மதத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.
சங்கரரின் அத்வைதம் பிரபஞ்ச நிகழ்வுக்குக் காரணமாக காட்டுவது மாயையை. அந்த மாயையை ஏன் பிரம்மம் உருவாக்குகிறது என்பதற்கு அதில் பதில் இல்லை. ஆகவே அது கேவல அத்வைதம் [வெறும் அத்வைதம்] எனறார் வல்லபர். பிரபஞ்சத்தோற்றம் என்பது பிரம்மத்தின் லீலை என்ற விரிவான விளக்கம் அளிக்கும் வல்லபர் தன்னுடையது சுத்த அத்வைதம் என்று சொல்கிறார். இப்பிரபஞ்சம் என்பது பிரம்மத்தின் அலகிலா விளையாட்டு என்கிறார். அதை விளக்க கிருஷ்ணலீலையை மையப்படிமமாக வைக்கிறார்.
எரியும் தீயில் இருந்து தீப்பொறிகள் சிதறுவது போல ஆற்றல்மயமான பிரம்மத்தில் இருந்து பிரபஞ்சங்கள் உருவாகி வந்தன என்பது வல்லபரின் விளக்கம். ஆத்மாவும் பிரபஞ்சமும் மாயை அல்ல. அவையும் பிரம்மமே. மாயை என்று சொல்லி பிரபஞ்சத்தை நிராகரிப்பது பிரம்மத்தை நிராகரிப்பதேயாகும் என்கிறார்.
வல்லபர் கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடத்திய ராசலீலையை பிரம்மம் பிரபஞ்சங்களுடன் நிகழ்த்தும் லீலையின் குறியீடாகக் காண்கிறார். கோபிகா வல்லபனாகிய லீலாகிருஷ்ணன் அவரது கடவுள். அதேபோல ஆடியும் பாடியும் கிருஷ்ணனை வழிபடுவது அந்த பிரபஞ்ச தரிசனத்தை அளிக்கும் என அவர் சொன்னார். அவரது மதம் பின்னாளில் புஷ்டிமார்க்க வைணவம் என அழைக்கப்பட்டது. இன்றும் மைய இந்தியாவிலும் வங்காளத்திலும் பிரபலமாக உள்ளது.
புஷ்டிமார்க்கம் கோலாகல பக்தி என்ற வழிமுறையைக் கொண்டது. ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக கிருஷ்ணனை அறிய முயல்வது அது. இதன் யோக முறைகளில் ஒன்றுதான் சஹஸயனம் . அதாவது கிருஷ்ணனை எண்ணி புலன்களை அடக்கி பெண்களுடன் படுத்துக்கொள்வது. கோலாகல ரூபனாக கண்ணனை அறிய அது ஒரு வழி எனப்பட்டது. காந்தியின் குடும்பம் புஷ்டிமார்க்க வைணவத்தை ஏற்றுக்கொண்ட ஒன்று. அவரது பிற்காலத்து பிரம்மசரிய சோதனைகள் இந்தப் பின்புலத்தில் இருந்து வந்தவையே.
இன்று புஷ்டிமார்க்கத்தை சுத்தாத்வைதம் என்று சொல்வதில்லை. தூய அத்வைதம் என்னும்போது மதம்,வழிபாட்டுசடங்குகள், கடவுள் ஆகியவற்றைச் சாராத அத்வைதம் என்றுதான் பொருள். நாராயணகுருவின் அறிவு என்ற சிறு நூல் தூய அத்வைதத்தின் மூலநூல் என்னும் அளவுக்கு அதை வரையறை செய்கிறது. ‘அறிவே முழுமுதல் என அறிந்து அறிவில் அறிவாக அமரும் நிலை’ யே அத்வைதம் காட்டும் விடுதலை என அதில் நாராயணகுரு சொல்கிறார்
ஜெ