‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10

பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 4

தொலைவில் ஊர்மன்றின் ஒலியெழக்கேட்டதுமே பாமா கால்தளர்ந்து நின்றுவிட மஹதி திரும்பி நோக்கி “என்னடி? ஏன் நின்றுவிட்டாய்?” என்றாள். “ஒன்றுமில்லை அன்னையே” என்றாள் பாமா. “காலில் முள்குத்திவிட்டதா?” என்றாள் மஹதி. “இல்லை…” என்று பாமா தலையசைக்க மஹதி “என்னாயிற்று உனக்கு? ஏன் காலையிலிருந்தே முகம் தணிந்திருக்கிறாய்?” என்றாள். பாமா ஒன்றும் சொல்லாமல் விழி தாழ்த்தி நீள்மூச்செறிந்தபின் நடந்தாள்.

பாலமுதுப்பானையை சுமந்துவந்த ஆய்ச்சி சிரித்தபடி “நீள்மூச்சிடும் பெண்ணிடம் ஏன் என்று கேட்கலாகாது அன்னையே” என்றாள். அவளுடன் வந்த இன்னொருத்தி “ஆனால் அது அன்னைக்கு மட்டும் தெரிவதே இல்லை. காலங்காலமாக அது அப்படித்தான்” என்றாள். மஹதி “சும்மா இருங்களடி… அவள் இன்னும் சிறு குழந்தை. காலையில் ஆற்றுக்குச் சென்றாள். ஆழத்தில் எதையோ கண்டு அஞ்சிவிட்டாள்” என்றாள். “ஆற்றுநீரில் இருந்தவன் கந்தர்வனா காமதேவனா?” என்றாள் ஒருத்தி. ஆய்ச்சியர் சேர்ந்து சிரிக்க “எதற்காகத்தான் சிரித்துக்கொள்கிறீர்களடி?” என்றாள் மஹதி. “சிரிக்காமல் இச்சுமையை எப்படி தாங்குவது அன்னையே?” என்றாள் ஓர் இளையவள்.

ஊர்மன்று நிறைந்திருந்ததை நீண்ட இடைவழியில் சென்றபோதே காணமுடிந்தது. முந்நூறு மூங்கில்தூண்களுக்குமேல் வட்டவடிவில் ஈச்சை ஓலையால் கூரையிடப்பட்ட கொட்டகை அது. நடுவே குடிமூத்தோர் தங்கள் வளைதடிகளை மடியில் வைத்து குலக்குறிகள் கொண்ட தலைப்பாகைகளுடன் அமர்ந்திருக்க இளையோர் சூழ நின்றிருந்தனர். சத்ராஜித் மரப்பீடத்தில் அமர்ந்திருந்தார். அருகே பிரசேனன் தூணில் சாய்ந்து நின்றான். மன்றுநடுவே காலையில் வந்த முதியவர் மழிக்கப்பட்ட பெரிய தலையுடன் நின்று கைவீசி பேசிக்கொண்டிருந்தார். அவர் பெயர் அக்ரூரர் என அவள் அதற்குள் அறிந்திருந்தாள். அவருக்குப்பின்னால் கைகட்டி நின்றிருந்த பலராமர் வெளியே எங்கோ நோக்கிக்கொண்டிருந்தார். இளையவன் கிருஷ்ணன் அச்சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் வேறேதோ எண்ணி புன்னகைப்பது போலிருந்தது.

அவள் மிகத்தொலைவில் ஒரு கணநேரவிழிவீச்சில் அவையை நோக்கி அவனை அடைந்து விழிவிலக்கிக்கொண்டபின் ஒருமுறைகூட அவனை நோக்கவில்லை. ஆய்ச்சியர் பாலமுதுக்குடங்களை கொண்டு சென்று கொட்டகையின் பின்பக்கம் கட்டப்பட்ட பந்தலில் வைத்தனர். ஒருத்தி அங்கே அமைக்கப்பட்டிருந்த கல்லடுப்புகளில் மரக்கரியை பரப்பி நெருப்பிட்டு அதன் மேல் கலங்களை வைத்து பாளைவிசிறியால் வீசி அனலெழுப்பத் தொடங்கினாள். வாழையிலைகளைப் பரப்பி அதன்மேல் கூடையில் கொண்டுவரப்பட்ட அக்கார அப்பங்களையும் பாலப்பங்களையும் பரப்பினர்.

அப்பங்களின் மணத்தை அறிந்த யாதவ இளையோர் சிலர் திரும்பி நோக்கினர். ”அப்பத்தை அறிந்ததும் அரசியலை விட்டுவிட்டனர். இவரகள்தான் கம்சனுடன் போருக்குப்போகப்போகிறார்கள்…” என்றாள் மஹதி. ஆய்ச்சியர் வாய்பொத்திச் சிரித்தனர். “சிரிக்கவேண்டாம்… இவர்களுக்கு இவர்கள் எவரென்று தெரியாது. இவர்களிடம் படுத்து பிள்ளைபெற்ற நமக்குத்தெரியும்” என்று மஹதி சொன்னபோது எழுந்த சிரிப்பொலி கேட்டு ஏழெட்டுபேர் திரும்பி நோக்கினர். ஒரு முதியவர் வாயில் கைவைத்து அமைதியாக இருக்கும்படி எச்சரித்தார்.

பாமா மன்றை நோக்கியபடி படி ஏறி மூங்கில்தூண்பற்றி நின்றாள். “மன்றுநோக்கவேண்டுமென்றால் உள்ளே செல்லடி… நாம் யாதவர். நம் குடியில் பெண் விழைந்தால் மன்றமர முறைமை உண்டு” என்றாள் மஹதி. “அப்படியென்றால் மன்றில் இருக்கிறான் இவள் நீருள் அறிந்த ஆண்மகன்” என்றாள் இளைய ஆய்ச்சி ஒருத்தி. “ஆம். அய்யோடி, நான் அதை எண்ணவே இல்லை” என்றாள் இன்னொருத்தி. இளையவள் ஒருத்தி அவள் தோளைப்பற்றி “எவரடி? சொல்!” என்றாள். இன்னொருத்தி “எவரை அவள் விழியிமைக்காது நோக்குகிறாளோ அவர்” என்றாள். இன்னொருத்தி சிரித்தபடி “இல்லை, எவரை ஒருமுறைகூட நோக்கவில்லையோ அவர்” என்றாள். பெண்கள் உடல் அதிர மெல்லிய ஒலியில் சிரித்தனர். மஹதி “சும்மா இருங்களடி மூடப்பெண்களே. அவளை யாரென நினைத்தீர்கள்? தேர்கொண்டு சென்று களம்நின்று போர்புரியும் பெண் அவள் என்று நிமித்திகர் கைக்குறி நோக்கி சொல்லியிருக்கின்றனர். நம் மூதன்னையரின் அருள் முழுதும் கொண்டவள் அவள்” என்றாள்.

அக்ரூரர் உரத்தகுரலில் “…பழி ஒருபோதும் தானாக மறைவதில்லை யாதவரே. தலைமுறை தலைமுறையாக நின்று கொல்லும் என்பதை நினைவுறுங்கள். உக்ரசேனனின் அரியணை வஞ்சகத்தால் அமைக்கப்பட்டது. அதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. இன்று இவ்வரக்கன் அதை கொழுங்குருதியால் நீராட்டிக்கொண்டிருக்கிறான். அங்கே வெட்டுண்டு விழுந்த குழந்தைகளின் விழிகள் இன்னும் மறையவில்லை என்கின்றனர் பாணர். இப்போது நாம் பேசியாகவேண்டியது ஒன்றைப்பற்றி மட்டுமே. குருதி… குருதியை குருதியால் மட்டுமே கழுவமுடியும். நீரால் அல்ல. கண்ணீரால் அல்ல. முலைப்பாலாலும் அல்ல. குருதியால் மட்டும்தான். நான் கேட்கவந்திருப்பது குருதியை மட்டுமே… அதற்கு எனக்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றார்.

யாதவர் அவை ஓசையடங்கி காத்திருந்தது. “சொல்லுங்கள்… நாம் இனியும் காத்திருப்பதில் எந்தப்பொருளும் இல்லை.” திரும்பி தன்னருகே நின்றிருந்த இளையோரை இரு கைகளாலும் தோள்தழுவி “இவர்கள் விருஷ்ணிகுலத் தோன்றல்கள். வசுதேவரின் மைந்தர்களைப்பற்றி நீங்கள் அனைத்தையும் அறிந்திருப்பீர்கள். தோள்வல்லமையால் ராமனும் சொல்வல்லமையால் கிருஷ்ணனும் பாரதவர்ஷத்தில் எவருக்கும் நிகரானவர்கள். வல்லரக்கனின் வெறியை இவர்கள் வெல்வது உறுதி” என்றார். பலராமர் ஆம் என்பதுபோலத் தலையசைத்து சிரித்தார். ”இவர்களுடன் நம்முடைய வாள்களும் தோள்களும் இணையவேண்டும். நான் இங்கு வந்தது அதற்காகவே… யாதவகுலமூத்தார் சொல்லளித்தால் இவர்கள் செய்து காட்டுவார்கள்.”

அதன்பின்னரும் அவையில் ஓசையென ஏதும் எழவில்லை. ஒருவரை ஒருவர் நோக்கினர். மெல்லிய உடலசைவைக் காட்டிய சிலரை நோக்கி அனைத்து விழிகளும் திரும்பின. ”இந்த அவையில் யாதவப்பெருங்குலங்கள் அந்தகர் போஜர் குக்குரர் விருஷ்ணிகள் ஷைனியர் என்னும் ஐந்திலிருந்தும் மூத்தோர் அமர்ந்துள்ளீர். என் சொற்களுக்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றார் அக்ரூரர். முதியவரான போஜகுலத்து தனகர் மெல்ல அசைந்து “யாதவர்கள் ஒரு நாடல்ல. கங்கை யமுனைக்கரைகளெங்கும் பரந்துள்ள பெருங்கூட்டம். இன்று ஒருசெய்தியை யாதவரிடையே பரப்பவே ஒருமாதகாலமாகும். நமக்கு போர்த்தொழில் பழக்கமில்லை. நாம் ஆநிரை புரந்து காட்டில் வாழும் கூட்டம்” என்றார்.

“இன்னும் எத்தனை நாள்தான் இதை சொல்லிக் கொண்டிருக்கப்போகிறோம்?” என்று அக்ரூரர் உரத்த குரலில் கூவினார். ”நம் குலம் வேருடன் அழியும்போதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறோமா?” தனகர் “அக்ரூரரே, வல்லமையற்றவர்களுக்கு தெய்வங்கள் துணையிருக்கும் என்றுதான் நூல்கள் சொல்கின்றன” என்றார். “ஆம், தெய்வங்கள் துணைக்கும், அறத்தில் நின்று அஞ்சாமலிருப்பவர்களுக்கு. ஆணவத்தின் முன் அடிபணிபவர்களை, அறப்பிழைகள் முன் வாளாவிருப்பவர்களை தெய்வங்களும் வெறுக்கும்.” குக்குர குலத்து சமீகர் “நாங்கள் இறக்க விரும்பவில்லை. எங்கள் குழந்தைகள் இம்மண்ணில் வாழவேண்டுமென விழைகிறோம். எங்கள் குலப்பெண்கள் இல்லம்நிறைக்கவேண்டுமென எண்ணுகிறோம். அவ்வளவுதான்” என்றார்.

அக்ரூரர் மேலும் சொல்லின்றி கைகளை விரித்தார். விருஷ்ணி குலத்தவனாகிய சாம்பன் உரக்க “இந்தப்போரில் நாம் உண்மையில் எவருடன் போரிடுவோம்? மகதத்துடனா?” என்றான். அதுவரை அத்தனைபேரும் கேட்க எண்ணிய வினா அது என அவர்கள் சேர்ந்து எழுப்பிய ஓசைகள் காட்டின. “ஆம்… அதைச் சொல்லுங்கள் முதலில்” என்றனர். சாம்பன் “நாம் சுற்றிச்சுற்றி ஏன் பேசவேண்டும்? மகதத்தின் பெரும்படையுடன் யாதவர்கள் போரிடுவதைப்பற்றி பேசத்தான் நாம் இங்கு வந்திருக்கிறோமா?” என்றான். அக்ரூரர் “நாம் மகதத்துடன் போரிட்டாகவேண்டுமென எவர் சொன்னது? நமது போர் கம்சனுடன். அதை மகதர்களுக்கு சொல்வோம். மகதத்திற்கு என்னவேண்டும்? கப்பம் தானே? அதை நாம் அளிப்போம்” என்றார்.

“அக்ரூரரே, மகதத்திற்குத்தேவை கப்பம். அதை கம்சனே சிறப்புறச் சேர்த்து அளிக்கிறார். அந்நிலையில் அவரை மாற்ற அவர்கள் ஏன் முயலவேண்டும்?” என்றார் அந்தக குலத்தின் குடிலர். அக்ரூரர் “நாம் யாதவர்கள். நம்மை கம்சன் தலைமைதாங்கி நடத்துவதை நாம் விரும்பவில்லை… நமக்கு நம் தலைவர்களை தேர்வுசெய்ய உரிமை உண்டல்லவா?” என்றார். “ஆம், உண்டு. ஆனால் அதை எதற்காக மகதம் பொருட்படுத்தவேண்டும்?” அக்ரூரர் சலிப்புடன் தலையசைத்து “இதைப்பற்றி நாம் பேசப்பேச பொருளின்மையே எழுந்து வரும்… அவையீரே, நாம் கன்றுமேய்ப்பவர்கள். கன்றுகள் புல்மேயும்போது ஓய்வாக அமர்ந்து புறம்பேசுவதை ஒரு கலையென பயின்றவர்கள். எதையும் வெறும்பேச்சாக மாற்றும் உள்ளம் கொண்டவர்கள்” என்றார்.

”அக்ரூரரே, நான் கேட்கவிழைவது ஒன்றே” என்று உரத்தகுரல் எழுப்பியபடி எழுந்து நின்ற இளைஞனின் பெயர் சததன்வா என்று பாமா அறிந்திருந்தாள். மும்முறை அவன் அவள் தந்தையுடன் இல்லத்திற்கு வந்திருந்தான். அந்தக குலத்தில் பார்ஸ்வ குடியைச்சேர்ந்த அவனுக்கு அவளை மணம்புரிந்துகொள்ளும் விழைவிருந்தது. அவன் தந்தை கிருதாக்னி மலைமடிப்பில் கூர்மபுரி என்னும் ஒரு சிறுநகரை அமைத்திருந்தார். மதுராபுரிக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக அது ஆகிக்கொண்டிருந்தது. தந்தை அவளிடம் அவனுக்கு பாலமுது கொண்டுசெல்லும்படி சொன்னதிலிருந்து அவருக்கும் அவ்வெண்ணம் உண்டு என்று அன்னையும் செவிலியும் அறிந்திருந்தனர். “ஆண்மையும் ஆணவமும் கொண்டவன். அவன் ஆணவம் மன்றுநிற்குமா என்று நோக்கியபின் முடிவெடுக்கலாம்” என்று அன்னை தந்தையிடம் சொல்லிவிட்டதாக மஹதி அவளிடம் சொன்னாள்.

சததன்வா எழுந்தபோது அரைக்கணம் விழிவந்து அவளை நோக்கிச்சென்றது. அங்கே அவன் சொல்வதெல்லாம் அவள் கேட்கவே என்று பாமா அறிந்தாள். “அக்ரூரரே, யாதவர்களின் அரசுகள் ஆறு. கம்சன் ஆளும் மதுராபுரி, தேவகரின் உத்தரமதுராபுரி, சூரசேனரின் மதுவனம், குந்திபோஜரின் மார்த்திகாவதி, சத்ராஜித்தின் களிந்தகம், ஹ்ருதீகரின் சதபதம். இவற்றில் எத்தனை அரசுகள் நம்முடன் உள்ளன? அதை முதலில் சொல்லுங்கள். இங்குள்ள யாதவக்குடிகளெல்லாம் வெறும் மக்கள்திரள்கள். படைகளோ காவலரண்களோ களம்கண்ட அறிதலோ அற்றவர்கள்…” என்றான்.

அக்ரூரர் “எனக்குத்தேவை நம் குடிகளின் ஒப்புதல். நாம் திரண்டாகவேண்டும் குலத்தோரே… இதைவிடச் சிறந்த தருணமென ஒன்று வரப்போவதில்லை” என்றார். “ஐந்து அரசுகளில் மார்த்திகாவதியை ஆளும் குந்திபோஜர் சூரசேனரிடம் மகள்கொண்டவர். அவருக்கு அஸ்தினபுரியின் உதவியும் உள்ளது. அவர் நம்முடன் உள்ளார். தேவகர் தன் தமையனின் மைந்தர் கம்சனிடம் அச்சமும் பகைமையும் கொண்டிருக்கிறார். இங்கு நிற்கும் இளைய யாதவர் தேவகரின் மகள் வயிற்றில் பிறந்தவர். களிந்தகத்தின் உதவியை நாடி நான் இங்கு வந்திருக்கிறேன். சதபதத்தின் அரசர் போஜர்குலத்து ஹ்ருதீகரின் மைந்தர் கிருதவர்மன் இங்குள்ளார்…” என்றார்.

“அப்படியென்றால் அவர் பேசட்டும்…” என்றான் சததன்வா. அத்தனைபேரும் அவையிலிருந்த இளையவனாகிய கிருதவர்மனை நோக்கி திரும்பினர். தன் மீதான நோக்கினால் தத்தளிப்பு கொண்ட அவன் நாணி முகம் சிவந்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “சொல்லும் இளையவரே. அவை உங்கள் குடியின் சொல்கேட்க காத்திருக்கிறது” என்று அக்ரூரர் அவனை அழைத்தார். மெலிந்த உடலும் பெரிய குரல்வளையும் பாறைமேல் பாசி படர்ந்ததுபோன்ற மீசையும் கொண்ட கிருதவர்மன் எழுந்து “விருஷ்ணிகள் ஒரே குலமாக முடிவெடுப்பதே சிறந்தது என நினைக்கிறேன். சூரசேனரின் மதுவனத்தின் சார்பில் இங்கே வசுதேவரின் மைந்தர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்திருப்பதிலிருந்து…” என்று சொல்லத் தொடங்க சததன்வா உரத்தகுரலில் “கிருதவர்மரே, ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் கம்சரும் விருஷ்ணிகுலத்தவரே” என்றான். அவையிலிருந்தவர்கள் சிரித்தனர்.

கிருதவர்மன் தடுமாறி குரல் உடைய “ஆம், ஆனால்…” என்று சொல்லவந்து தடுமாறி “விருஷ்ணிகுலம் எடுக்கும் முடிவை நானும் எடுக்கிறேன்” என்றான். சததன்வா நகைத்தபடி “விருஷ்ணிகுலத்தைச்சேர்ந்த எவர் முடிவை நீங்கள் எடுப்பீர்கள் என்றுதானே கேட்கிறோம்” என்றான். கிருதவர்மன் சிறிய சிவந்த உதடுகள் அதிர தன் குடிமூத்தவரை நோக்கியபடி “தெரியவில்லை” என்றான். மீண்டும் அவை நகைத்தது. சததன்வா திரும்பி அக்ரூரரை நோக்கி “நான் கேட்பது இவ்வளவுதான். மதுவனமும், மார்த்திகாவதியும், உத்தரமதுராபுரியும் ஒன்றாக இருக்கிறீர்கள் என்றால் அதை நாங்கள் நம்புவதற்குரிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளனவா? இம்மன்னர்கள் ஏதேனும் ஓலையை அளித்துள்ளனரா?” என்றான்.

அக்ரூரர் “இளைஞனே, அப்படி ஓர் ஓலையை அவர்கள் இப்போது அளிக்கமுடியுமா என்ன? கம்சனின் ஒற்றர்கள் சூழ்ந்துள்ளனர். அவன் படைகள் இந்த ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நின்றுள்ளன. அப்படியொரு உடன்படிக்கை உருவாகுமென்றால் உடனே போர் எழுவது உறுதி அல்லவா?” என்றார். “நன்று, நான் கோரியதை சொல்லிவிட்டீர் அக்ரூரரே” என்று சொல்லி சததன்வா சிரித்தான். “ஓர் ஒப்பந்த ஓலையை அமைக்கவே அஞ்சும் மூன்று அரசர்கள் இணைந்து மகதத்தின் படைவல்லமைகொண்டவரும் அச்சமற்றவருமான கம்சரை வெல்ல நினைக்கிறீர்கள் இல்லையா?”

அவையின் நகைப்பு உரக்க ஒலித்தது. அவர்கள் நகைக்க விரும்புகிறார்கள் என்பதை சததன்வா புரிந்துகொண்டான். அந்நகைப்பு வழியாக தங்கள் அச்சத்தையும் இயலாமையையும் கடந்துசெல்ல அவர்கள் விரும்பினர். அவர்களின் எதிர்வினைகள் வழியாக அச்சமயம் அவையில் திரண்டுவந்த உணர்ச்சிகளின் குரலாக சததன்வா தன்னை ஆக்கிக்கொண்டே சென்றான். அவள் தன்னை நோக்குகிறாள் என்பதுதான் அவனை சொல்லூற்றென ஆக்குகிறது என்று பாமா உணர்ந்துகொண்டாள். நன்றாகவே அவைக்குள் சென்று மூங்கிலில் சாய்ந்து மார்பில் கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.

“போர் என்பது வெல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் அதற்குரிய திட்டங்களுடன் நிகழ்வது. அவ்வாறு அல்லாததை போர் என்றல்ல, தற்கொலை என்றுதான் சொல்வார்கள்” சததன்வா தொடர்ந்தான். “நீங்கள் மூவரும் முன்னின்று போர் செய்யலாம். என்னதான் இருந்தாலும் தேவகர் கம்சரின் சிறியதந்தை. சூரசேனரின் மைந்தர் கம்சரின் அமைச்சராக இருந்தவர். ஆகவே போருக்குப்பின் இருவரிடமும் கம்சர் சொல்நிலை கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் உங்களை நம்பி களமிறங்கிய மலைமக்களாகிய எங்களை அவர் விட்டுவைக்கமாட்டார். எங்கள் ஆநிரைகள் அழியும். ஊர்கள் எரியுண்ணப்படும். எங்கள் இல்லமுற்றங்களில் குருதி நிறையும். அவ்வண்ணம் என்றால் இது தற்கொலை அல்ல, கொலை.”

“ஆம், ஆம்” என்று அவை குரலெழுப்பியது. அந்தக குலத்து முதியவரான சதானீகர் எழுந்து “எங்களை பலியிட்டு நீங்கள் கம்சரிடம் ஒரு வணிக விளையாட்டை ஆடவிருக்கிறீர்கள். நீங்கள் இழப்பதற்கொன்றுமில்லை. நாங்கள் வேருடன் அழிவோம். எங்கள் மூதாதையர் நீரில்லாமல் நிகருலகில் வாழ்வார்கள்…” என்றார். ஒரேசமயம் பலர் எழுந்து நின்று கைகளை வீசி கூச்சலிட்டனர். “ஆம், இதில் ஏதோ சூதிருக்கிறது! எங்கள் உயிருடன் விளையாடுகிறீர்கள்!” அவர்கள் நடிக்கிறார்கள் என்பது அவளுக்கு உறுதியாகத் தோன்றியது. ஆனால் முகங்களிலும் குரல்களிலும் இருந்தவை உண்மையான உணர்ச்சிகள். அவ்வுணர்ச்சிகளை அவர்கள் பெருக்கிக்கொண்டார்கள். கூட்டமாக ஆகும்போது எவ்வுணர்ச்சியையும் பெருக்கிக் கொள்ளமுடியும் போலும்.

“அமைதியாக இருங்கள்… அமைதி… இது என் ஊர். என் மன்று” என்று சத்ராஜித் குரலெழுப்பினார். “இங்கு ஒரு பூசல் நிகழ்வதை நான் விரும்பவில்லை. எதையும் நாம் பேசிமுடிக்கமுடியும்…” அவரது முழங்கும் குரல் யாதவர்களை அமைதியாக்கியது. “நாங்கள் உங்களை நம்புகிறோம் அந்தகரே. நீங்கள் முடிவெடுங்கள்…” என்றார் ஷைனிய குலத்தவரான சுருதசோமர். “ஆம், அனைவரும் தங்கள் குரலை முன்வைக்கட்டும். எல்லா கோணங்களிலும் சிந்தித்து முடிவெடுப்போம்” என்றார். சததன்வா “நாம் இங்கு கூடியிருப்பதே வசுதேவர் மைந்தர்களுக்காக. அவர்கள் பேசட்டும்” என்றான்.

விருஷ்ணி குலத்தவனாகிய சாம்பன் “ஆம், அக்ரூரர் சொல்லிக்கொடுத்த சொற்களை அவர்கள் இன்னும் மறக்கவில்லை என்றால் அவர்கள் சொல்வதே சிறப்பு” என்றான். சிரிப்பொலியை கையால் அடக்கிய அக்ரூரர் “சாம்பா, உனக்கு இவ்விளையோர் மேல் காழ்ப்பிருக்கலாம். ஆனால் அதற்கான இடம் இதுவல்ல” என்றார். “எனக்கு இவர்கள்மேல் எப்படி காழ்ப்பில்லாமலிருக்கும்? இவர்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்திகள் அல்லவா?” என்றான் சாம்பன். சத்ராஜித் “போதும்…” என்று கை தூக்கி சொன்னார்.

போஜகுலத்தின் மூத்தவரான விகிர்தர் “மூத்தவர் பேசட்டும்” என்றார். பலராமர் சிரித்து “நான் பேச ஒன்றுமில்லை. கம்சனை கொல்லவேண்டும் என்று என் தந்தை எனக்கு ஆணையிட்டிருக்கிறார். ஆகவே நான் அவன் தோள்களைப் பிடித்து பிய்த்தெடுப்பேன். அவன் நெஞ்சு பிளந்து குருதியை அள்ளி என் நெஞ்சிலும் முகத்திலும் பூசிக்கொள்வேன். அதைச்செய்யாமல் உயிர்வாழேன்” என்றார். சாம்பன் “மிகச்சிறந்த எண்ணம்… நாளை நாம் குருதிச்சோறு கொடுத்து வணங்க சிறந்ததோர் நடுகல் அமையவிருக்கிறது” என்றான். அனைவரும் வெடித்துச்சிரிக்க சத்ராஜித் சிரித்தபடியே கையைத் தூக்கி “சொல்லுங்கள் இளையயாதவரே, நீங்கள் என்ன செய்யவிருக்கிறீர்கள்?” என்றார். சாம்பன் “வெண்ணை உண்டு புல்லாங்குழல் இசைப்பார். கம்சன் நெஞ்சடைத்து உயிர்துறப்பான்” என்றான். சிரிப்பில் அவை முழங்கியது. பாமா தன்னைச் சுற்றிலும் சிரிக்கும் முகங்களைக் கண்டாள்.

இளையவன் முன்னால் வரும் ஒலியை அவள் கேட்டாள். மெல்ல கசங்கிய மஞ்சள்பட்டாடை. மண் தொட்டு மூன்றடி எடுத்துவைத்த கால்கள். “அவையோரே, நான் கம்சனை கொல்வேன். ஆயர்குடிகொண்ட பழி தீர்ப்பேன். இதில் ஐயமே இல்லை என்றுணர்க!” என்றான். பெண்மை கலந்த மென்குரல். குழலிசை கலந்த குரல். சாம்பன் “இனிய சொற்கள். இசைபோல ஒலிக்கின்றன. உடன் முழவும் குழலும் ஒலித்திருக்கலாகாதா என நான் ஏங்குகிறேன்” என்றான். ஆனால் அவையில் ஆங்காங்கே சிறிய சிரிப்பொலிகள்தான் எழுந்தன. மஹதி மெல்ல படியேறி பாமையின் அருகே வந்து நின்று அவள் தோள்மேல் கை வைத்துக்கொண்டாள்.

கிருஷ்ணன் சாம்பனை பொருட்படுத்தாமல் “நான் இங்கு வந்திருப்பது எந்த யாதவரையும் நயந்து உதவிகோருவதற்காக அல்ல. நான் யாதவர்களின் முழுமுதல் மன்னன் என இங்கு அறிவிக்கிறேன். என் சொல்லுக்கு எதிர்ச்சொல் எவர் சொல்வதையும் ஏற்கப்போவதில்லை. மதுராவை வென்று கம்சனை நான் கொல்வேன். என்னுடன் நிற்பவர்கள் என் நண்பர்கள். எதன்பொருட்டானாலும் என்னுடன் நிற்காத எவரும் என் எதிரிகளே. அவர்கள் எக்குலத்தார் என்றாலும் வேருடன் அழிப்பேன். அவர்களின் இல்லங்களை எரியூட்டுவேன். அவர்களின் குடியின் ஒரு நினைவுகூட எஞ்சவிடமாட்டேன்” என்றான்.

“அய்யோடி, இவனைப்பற்றித்தானா அப்படி சொன்னார்கள்!” என்று மஹதி அவள் தோளை இறுக்கிக் கொண்டாள். பாமா அவையை சூழ நோக்கினாள். திறந்த வாய்களும் விழித்துத் தெறித்த விழிகளுமாக அச்சத்தில் உறைந்தவை போலிருந்தன அத்தனை முகங்களும். பாமாவின் விழிகள் சென்று அவன் கால்களை தொட்டன. பத்துநகங்களும் ஒளிவிட புன்னகை திகழும் கால்கள். நீலத்தாமரை மொட்டுகள். உள்ளங்கால் சிவந்திருக்குமென்று அப்போதுதான் அறிந்தாள். “இங்குள்ள யாதவர் தங்கள் நிலையென்ன என்று இப்போது அறிவிக்கட்டும்…” என்று அவன் சொன்னான். “என் நண்பர்களைத் தழுவி எதிரிகளை எண்ணத்தில் குறித்திட்டு இங்கிருந்து மீள்கிறேன்.”

அவை உறைந்ததுபோல் இருந்தது. வெளியே ஆய்ச்சி ஒருத்தி ஏதோ சொல்லும் ஒலி கேட்டது. அந்தப் பாதங்களுக்கு அடியில் மென்மையான இரு கைகள் எழுந்து அவற்றை தாங்கியிருக்கின்றனவா என்ன? மெய்நிறம் இப்படி நீலமென ஆனதென்ன? புலரிமழையென குளிர்ந்திருக்குமா அவை? அவள் விழிதூக்க விழைந்தாள். இமைகளுக்குமேல் அத்தனை வானத்து எடையும் ஏறியமர்ந்திருந்தது. மூச்சிரைக்க மேலுதட்டை பற்களால் இழுத்துக் கடித்தபடி வேட்டைநாயின் முன் அஞ்சிச் செயலற்ற முயல் என அசையாமல் நின்றிருந்தாள். அவள் கன்னங்களும் கழுத்தும் தோள்களும் சிலிர்த்து மயிர்க்கால்கள் எழுந்தன. முதுகில் வியர்வைத்துளி ஊறி வழிந்து இடையை அடைந்தது.

போஜகுலத்து தனகர் அமர்ந்தவாறே கைகூப்பி “எந்தையே” என்றார். கம்மிய குரலில் “ஏழைகள்… வாழ்வதற்காக மட்டுமே விழைபவர்கள். ஏதுமறியாதவர்கள். உனக்கு நாங்கள் அடைக்கலம். பெற்றபிள்ளைகள் என எங்களை மடியமர்த்திக் காத்தருள்க தேவா!” என்றார். அவை ஓர் ஒற்றைத் தொண்டையென விம்முவதை அவள் கேட்டாள். நடுங்கும் கைகளை தலைமேல் தூக்கியபடி எழுந்த ஒரு முதியவர் விழிநீர் வழிய நின்று நடுங்கினார். அவள் திரும்பி நோக்கியபோது அனைவரும் அழுதுகொண்டிருந்தனர். துடிக்கும் உதடுகளை கூப்பிய கரங்களை ஒவ்வொன்றாக நோக்கி வந்தபோது அவள் கண்களிலிருந்தும் கண்ணீர் வழியத் தொடங்கியது. மஹதி அவள் தலையை தன் மார்பில் சேர்த்து விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.

அவ்வுணர்ச்சிகளுக்கு முற்றிலும் அப்பால் நின்று அவன் சொன்னான் “இந்த அவையில் சதபதத்தின் கிருதவர்மரும் கூர்மபுரியின் சததன்வாவும் களிந்தகத்தின் சத்ராஜித்தும் தங்கள் ஒப்புதலை வாளேந்தி அறிக்கையிடவேண்டுமென விழைகிறேன்.” அக்கணமே உலோகக்கிரீச்சிடலுடன் வாளை உருவியபடி எழுந்த கிருதவர்மன் “செயலும் எண்ணமும் வாழ்வும் சாவும் தங்களுக்குரியவை இளையவரே. இனி எனக்கென ஏதுமில்லை. என் ஆநிரைகள் மேல் மூதாதையர் மேல் குலதெய்வங்கள் மேல் ஆணை” என்றான். சததன்வா சற்றுநேரம் அசையாமல் அமர்ந்திருந்தான். பின்பு எழுந்து வாளை உருவி தாழ்த்தி “யாதவ அவையின் ஆணைக்கு தலைவணங்குகிறேன். மதுராபுரியை வெல்லும் இப்போரில் விருஷ்ணிகுலத்து வசுதேவரின் மைந்தரை முழுதுள்ளத்துடன் துணைக்கிறேன்” என்றான்.

சத்ராஜித் “நான் சொல்வதற்கொன்றுமில்லை இளையவரே” என்றார். “யாதவர் அவை இதோ முடிவெடுத்துவிட்டது. இங்குள்ள அந்தகக் குலமூத்தார் எண்ணியதற்கு அப்பால் நான் செல்லமுடியாது.” அந்தகக்குலத்தவர் “ஆம் ஆம்” என்றனர். “ஆனால் நான் இன்று கம்சரின் படைத்தலைவன். என்னிடமிருக்கும் அனைத்தும் அவர் அளித்தவை. நான் சென்று முறையாக என் விலக்கத்தை அவருக்கு தெரிவித்தாகவேண்டும். அதுவே முறையாகும்” என்றார் சத்ராஜித். “உடனே மகதத்தின் படைகள் என்னை சூழ்ந்துகொள்ளும். நான் அப்படையெடுப்பை தாங்கிநிற்கவேண்டுமென்றால் எனக்கு யாதவகுலங்கள் துணைநின்றாகவேண்டும்.”

“அதை அஞ்சவேண்டியதில்லை அரசே. மார்த்திகாவதியும் மதுவனமும் உத்தரமதுராபுரியும் சதபதமும் கூர்மபுரியும் ஒரேநாளில் போரை அறிவிக்கலாம். அதை அவர்கள் அஞ்சுவர்” என்றான் இளைய யாதவன். பிரசேனர் “இப்போதே இன்னொன்றையும் தெளிவுபடுத்திக்கொள்ள விழைகிறேன். இன்று மதுராபுரிக்கு கப்பம்கட்டும் சிற்றரசாக உள்ளது களிந்தகம். நாளை இளைய யாதவர் மதுராபுரியை கைப்பற்றுவார் என்றால் களிந்தகத்தின் நிலை என்ன?” என்றார். இளைய யாதவன் “இளையமன்னர் எதிர்நோக்குவது என்ன?” என்றான். ”போருக்குப்பின் மதுராபுரிக்கு நாங்கள் கப்பம் கட்டமாட்டோம். இணையான நிலைகொண்ட யாதவ அரசாக நீடிப்போம்” என்றார் பிரசேனர்.

அக்ரூரர் “அது எப்படி? இன்று யாதவர்களுக்கிருப்பது மதுராபுரி என்னும் வல்லமைகொண்ட அரசு. நமக்குள் எவ்வண்ணம் இருப்பினும் மதுராவின் ஆற்றலால்தான் பேரரசுகள் யாதவர்களை அஞ்சுகின்றன” என்றார். “யாதவ அரசுகளின் வலுவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கிக்கொள்வோம். அதன் கூட்டுமுடிவுகளுக்கு மட்டுமே களிந்தகம் கட்டுப்படும்” என்றார் சத்ராஜித். “அரசே, அப்படியொரு கூட்டமைப்பு உருவானாலும்கூட அதற்கு ஒரு தலைமை வேண்டும்… அத்தனை முடிவுகளையும் குலச்சபைகள் கூடி எடுக்கமுடியாது” என்றார் அக்ரூரர். “அதை பின்னர் முடிவுசெய்வோம். யாதவக்கூட்டரசுக்கு மட்டுமே களிந்தகம் கட்டுப்படும்” என்று சத்ராஜித் சொன்னார்.

“அவ்வாறே ஆகுக!” என்றான் இளைய யாதவன். அவை மெல்ல உடல்தளரும் ஒலிகள் எழுந்தன. குலமூத்தார் அனைவரும் மெல்லிய குரலில் பேசிக்கொண்ட ஒலி முழக்கமாக எழுந்தது. பிரசேனர் கைகளைத் தூக்கி “நன்று, இதுவரை சொல்லாடி களைத்துவிட்டோம். சற்று பாலமுதும் அப்பமும் உண்டு உயிர்மீள்வோம்” என்றார். அத்தனைபேரும் அந்த உணர்வலைகளிலிருந்து மீளவிழைந்தனர் என்பதனால் சிரிப்பும் கூச்சலுமாக கைகளைத் தூக்கி “ஆம் ஆம்” என்றும் “நல்லுணவு! நல்லுணவு!” என்றும் கூவினர். சாம்பன் “பாலமுது முதியோருக்கு. இளையோருக்கு கள்ளமுது!” என்றான். சிரித்துக்கொண்டும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டும் அனைவரும் வெளியே சென்றனர்.

வெளியே பிசிர்மழை அடங்கி வெயில் வழிந்து நின்றிருந்தது. நீராடிய புல்லிதழ்களும் கூழாங்கற்களும் இலைகளும் ஒளிவிட்டன. பாதிநனைந்த மரங்கள் காற்றில் மெல்ல அசைந்தாடின. கூரைவிளிம்புகளில் இருந்து ஒளிமணிகள் உதிர்ந்து மணலில் குழியிட்டன. மஹதி “வாடி…” என்று பாமையை தோள்பற்றி அழைத்துச்சென்றாள். ஆய்ச்சியர் மூங்கில்குவளைகளில் மென்பருப்பு போட்டு வெல்லம் சேர்த்து கொதிக்கவைத்த பாலமுதை அள்ளி வைத்து யாதவர்களுக்கு அளித்தனர். மஹதி மரத்தட்டில் இரண்டு அப்பங்களை எடுத்துவைத்து மஞ்சள்மூங்கில்குவளையில் ஆவியெழும் பாலமுதை ஊற்றி அவள் கையில் கொடுத்து “கொண்டு சென்று கொடு” என்றாள். “யாரிடம்?” என்றாள் பாமா. “அடி, அதற்குள் பெண்ணுக்குரிய மாயங்களை கற்றுக்கொண்டாயா? யாருக்கு என்று அறியமாட்டாயா நீ?” என்றாள் மஹதி. அவள் தலைகுனிந்தாள்.

“இன்று தெரிந்ததடி, எதற்காக இத்தனை முழுமையுடன் நீ பூத்து மலர்ந்திருக்கிறாய் என்று. மூதன்னையர் அனைத்தும் அறிந்தவர்கள். விண்ணுலகில் அவர்கள் கூழாங்கற்களை நகர்த்திவைத்து விளையாடுவதன் விரிவே மண்ணில் அழுதும் சிரித்தும் நாம் ஆடும் வாழ்க்கை.” அவளைத் தழுவி “அங்கே தங்கள் பொக்கைவாய் திறந்து சுருங்கிய விழிகள் ஒளிவிட அவர்கள் உன்னைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறார்கள் இப்போது” என்றாள்.

அடிக்கால்கள் வியர்வை கொள்ளும் என்பதை பாமா அப்போது அறிந்தாள். மலைவிளிம்பின் பாறையில் நிற்பதுபோல தொடைகள் நடுங்கின. பற்றுக்கோல் என அந்த தாலத்தை பிடித்துக்கொண்டு நிலம் நோக்கி நடந்தாள். இறுகி குளிர்ந்து நெஞ்சை நிறைத்த மூச்சை விட்டு சற்றே விழி எடுத்து அப்பாதங்களை நோக்கினாள். அங்கே சென்று சேர ஏழு அடி தூரம் என்று அறிந்தாள். ஏழுபிறவிகளினூடாக அடைந்தது அது என உணர்ந்தாள்.

முந்தைய கட்டுரைகுட்டப்பனுக்கு ஏன் தெரியவில்லை?
அடுத்த கட்டுரைபெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1