பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 3
அஸ்வபாதம் என்னும் இரட்டைமலைக்கு சுற்றிலும் அமைந்த எழுபத்தெட்டு யாதவச்சிற்றூர்களில் நடுவிலிருந்தது ஹரிணபதம். அங்கு அந்தகக் குலத்து யாதவர் நெடுங்காலம் முன்னர் கங்கைக்கரையிலிருந்து முதுமூதாதை வீரசேனரின் தலைமையில் நூறுகுடியினராக ஐந்தாயிரம் பசுக்களுடன் புதிய புல்வெளிதேடி அங்கே வந்தனர். குதிரைக்குளம்பு போலிருந்த மலைக்குக் கீழே மானுடக்காலடிபடாத குறுங்காட்டில் சற்றுமேடான பகுதியொன்றில் நூறு மான்கள் கொண்ட ஒரு கூட்டம் படுத்திருந்தது. அவர்களின் ஓசையைக்கேட்டும் அவை கலையவில்லை. இளமான்கள் சற்றே செவி தழைத்தன. அன்னைமான்கள் மட்டும் கொம்புகளைத்தாழ்த்தியபடி ஈரக்கரியவிழிகளை உருட்டி நோக்கி மூச்சுவிட்டன.
வீரசேனர் “இயல்பாகவே மான்கள் இவ்விடத்தை தெரிவுசெய்துள்ளன. அச்சமின்றி அவை இங்கிருப்பதை நோக்கினால் இங்கு தலைமுறைகளாகவே தங்கியிருக்கின்றன. இதுவே நம் இடம். இங்கு நம் கன்றுகள் செழிக்கும்” என்றபடி தன் கோலை அங்கே நாட்டினார். சூழ்ந்து நின்றிருந்த யாதவர்கள் தங்கள் பொதிகளை இறக்கி வைத்து கை நீட்டி இளைப்பாறினர். காட்டில் கழிவெட்டிக்கொண்டுவந்து பிறைநிலவு வடிவில் நூற்றெட்டு குடில்களைக் கட்டி நடுவே இருந்த முற்றத்தில் கன்றுகளை நிறுத்தி சுற்றி கூர்தீட்டிய கழிகள் நடப்பட்ட அகழியை அமைத்து ஊர்அமைத்தனர். ஹரிணகணம் வாழ்ந்த இடம் அப்பெயரால் அழைக்கப்பட்டது.
யாதவக்குடிகளில் அந்தகர்கள் மட்டுமே சூரியனை வழிபட்டனர். தென்மதுராபுரி என அழைக்கப்பட்ட யாதவப்பெருநகரை ஆண்ட சத்வத குலத்து கிரிராஜரின் எட்டாவது மைந்தர் வீரசேனர். சத்வதர்கள் மழைபுரந்து புல்வெளிகளைக் காக்கும் இந்திரனை முதல்தெய்வமாக வணங்கியவர்கள். வருணனும் சோமனும் அவர்களின் மலரும் நீரும் பெற்றனர். நூற்றெட்டு மூதன்னையர் இல்லங்களுக்குப்பின்னால் உருளைக்கற்களாக பதிட்டைசெய்யப்பட்டு ஆண்டுதோறும் வசந்தகால இருள்நிலவில் பலிபெற்றனர். ஈரவானில் ஊர்களுக்குமேல் வளைந்தெழும் இந்திரவில்லால் அவர்களின் குலமும் ஆநிரைகளும் வாழ்த்தப்பட்டன. ஒளிகொண்டு அதிரும் வஜ்ராயுதத்தாலும் இடியோசையாலும் காக்கப்பட்டன.
பிறந்தபோது வீரசேனர் விழியில் ஒளியற்றிருந்தார். ஒலிநோக்கியே குழந்தை திரும்புகிறது என்று இரண்டாவது மாதத்தில்தான் கிரிராஜர் அறிந்தார். எட்டாவது மைந்தன் என்பது யாதவர்களில் மூதன்னையரின் நல்லருள் என்று எண்ணப்பட்டதனால் குழந்தை பிறந்த நாள்முதல் மாலைதோறும் சூதருக்கும் பாணருக்கும் அயலவருக்கும் குடியினருக்கும் ஊன்விருந்தும் மதுவிருந்தும் நடந்துகொண்டிருந்தது. விழியின்மையை மருத்துவச்சி கண்டு சொன்ன அன்று நிறைந்த பேரவையில் மதுமயக்கில் இருந்த மன்னர் திடுக்கிட்டு அரியணைவிட்டு எழுந்தார். ஒருகணம் கழித்து மதுவைக்கடந்து செய்தி சென்று அகத்தை அடைந்ததும் கடும் சினத்துடன் உறுமியபடி உடைவாளை உருவியபடி மகளிர்மாளிகை நோக்கி எழுந்தார். அவையினர் அவர் கால்களைப்பற்றி தடுத்தனர். பழிகொள்ளவேண்டாமென கண்ணீருடன் மன்றாடினர்.
மூதன்னையரின் பழிச்சொல் என வந்துபிறந்தவனை விழியாலும் தொடமாட்டேன் என்று கிரிராஜர் மறுத்துவிட்டார். அவரது ஆணையின்படி ஒரு வெள்ளைத்துணியில் சுற்றப்பட்ட குழந்தை குறுங்காட்டின் மூதன்னையர் ஆலயத்து பலிபீடத்தில் அந்தியில் வைக்கப்பட்டது. குழந்தையை ஓநாய்களாக வந்த மூதன்னையர் உண்டுவிட்டதாக கிரிராஜருக்கு சொல்லப்பட்டுவிட்டது. அதை அவரும் நம்பினார். ஆனால் அது சேடியரால் எடுத்துவரப்பட்டு மகளிர்மாளிகையில் செவிலியர் அணைப்பில் எவருமறியாமல் வளர்வதை அவர் அறிந்திருந்தார். விழியிழந்தவன் பிறந்த பழிநீங்க ஒருவருடம் முழுக்க அன்னம், ஆதுரம், ஆடை, இல்லம், நீர்நிலை, கல்வி, வேள்வி, பலி என்னும் எட்டுவகை கொடைகளை செய்தார்.
ஏழுவயதுவரை விழியிழந்த மைந்தன் செவிலியன்னை கராளமதியின் அணைப்பில் வாழ்ந்தான். ஏழுவயதாகியும் முலையுண்ணும் வழக்கம் கொண்டிருந்தான். ஏழாண்டுகாலமும் அவள் பெருமுலைகள் அவனுக்காக சுரந்தன. அவனுக்கு அரைநாண் அணிவிக்கப்படவில்லை. முதலுணவு அளிக்கப்படவில்லை. பெயர்கூட இடப்படவில்லை. அந்தகன் என்றே அவனை அழைத்தனர் அன்னையும் பிறரும். அவனுடைய அன்னைச்செவிலி மட்டும் வீரசேனன் என்றாள். அப்பெயரை அவள் எவரிடமும் சொல்லவில்லை. அது கிரிராஜரின் தந்தையின் பெயர். அந்தகனுக்கு அப்பெயரை இட்டதை அறிந்தால் அவளும் கழுவேற்றப்படுவாளென அறிந்திருந்தாள். எவருமில்லாதபோது முலைகளுடன் சேர்த்து அப்பெயரை நூறுமுறை அழைத்து முத்தமிடுகையில் அவள் ஓங்கி எழுந்த அரண்மனை மாடங்களை காவல்கோட்டங்களை கோட்டைவாயில்களை வென்றாள்.
அந்நாளில் ஒருமுறை கானாடலுக்காக மகளிர் அருகே ஃபால்குனி ஆற்றங்கரைக்குச் சென்றபோது மைந்தனையும் கராளமதியிடமிருந்து வாங்கிக்கொண்டு சென்றனர். நீர்கண்டு நிலைமறந்த சேடியர் மைந்தனை ஒரு பாறைமேல் அமரச்செய்து எழலாகாது என்று சொல்லிவிட்டு நீரில் இறங்கி நீராடினர். இனிய பலாப்பழத்தின் நறுமணம் பெற்று நாவூறிய மைந்தன் எழுந்து அத்திசை நோக்கி சென்றான். நீராடி வந்த செவிலியர் மைந்தனைக்காணாது பதறினர். நான்குதிசைகளிலும் பிரிந்து ஓடி அவனை தேடினர். அழுகை ஊறிய அவர்களின் குரல் காட்டுமரங்களிலும் பாறைகளிலும் எதிரொலித்து பச்சைத்தழைப்புக்குள் நிறைந்தது. பகலெல்லாம் தேடியபின் அவர்கள் திரும்ப வந்து அழுகையுடன் சென்று முதல்படைத்தலைவரிடம் மைந்தன் காணாமலானதை சொன்னார்கள். அவன் ஆயிரம் படைவீரரை அனுப்பி காடெங்கும் மீண்டுமொருமுறை தேடச்சொன்னான்.
மறுநாளும் மைந்தன் கிடைக்காமலானபோது அவனை ஓநாய்கள் உண்டிருக்கலாமென்று உறுதிசெய்தனர். அச்செய்தி அவன் அன்னையையும் அரண்மனை மாந்தர் அனைவரையும் நீள்மூச்சுடன் ஆறுதல்கொள்ளச் செய்தது. அவனை வளர்த்த செவிலியன்னை மட்டும் தன் அறையிருளுக்குள் நெஞ்சில் அறைந்து அழுதுகொண்டிருந்தாள். மூதன்னையர் பதிட்டைக்கு முன் ஊன்சோறும் செம்மலரும் படைத்து பலியூட்டி அவன் வாழ்ந்த கடன் முடிக்கப்பட்டது. சின்னாட்களிலேயே அவனை அரண்மனையும் ஆயர்குலமும் மறந்தது. உள்ளறை இருளில் சிக்குபிடித்த முடியும் பித்தெழுந்த விழிகளும் கொண்ட ஒரு முதுமகள் அவள் மட்டுமே அறிந்த அவன் பெயரை சொல்லிச்சொல்லி கலுழ்ந்துகொண்டிருந்தாள். அவள் சொல்வதென்ன என்று எவரும் அறிந்திருக்கவில்லை.
எட்டுமாதங்களுக்குப்பின் தலைமுடி சடையாகி உடலெங்கும் புண்ணும் மண்ணும் பற்றி செதிலடைந்து அவன் திரும்பிவந்தான். ஆனால் அவனுக்கு விழிதிறந்திருந்தது. அவன் நகர்முகப்பை அடைந்தபோது இறந்த சடலம் மீண்டு வந்தது என்று அஞ்சிய காவலர் கோட்டைமேல் ஏறிக்கொண்டனர். அரண்மனை வாயிலில் காவலர் அஞ்சியோடியபின் பூசகர்கள் சேர்ந்து தெய்வச்சிலைகளுடன் சென்று அவனை எதிர்கொண்டனர். ஆனால் சிறுசாளரம் வழியாக அவனைக் கண்ட கராளமதி இருகைகளையும் விரித்தபடி பெருமுலைகள் ஊசலாட அன்னைப்பசுவென அமறியபடி ஓடிவந்து அவனை அள்ளி தன்னோடு அணைத்து கண்ணீரும் சொற்களும் சிதற முத்தமிடத்தொடங்கினாள். அவன் அவளிடம் “அன்னையே, நான் விழிகொண்டுவிட்டேன். காடு மிக இனிது. ஆயினும் உன்னைநோக்கவே வந்தேன்” என்றான்.
அன்றிரவு அவனுக்கு எப்படி விழிதிறந்தது என அவன் தன் அன்னையிடம் சொன்னான். காட்டுக்குள் சென்றபோது வழிதவறி அவன் ஓர் ஓடையில் விழுந்து நீர்விரைவால் அடித்துச்செல்லப்பட்டு ஆழ்ந்த பிலம் ஒன்றுக்குள் விழுந்தான். கூரிருள் பெருகிக்கிடந்த அந்த நிலவாய்க்குள் விரல்களில் எழுந்த விழிகளால் நோக்கி அவன் வழிகண்டு சென்றான். தான் அமர்ந்து துயில சிறுகுழி ஒன்றை அடைந்தான். அங்கே சிறுமீன்களையும் நண்டுகளையும் பிடித்துண்டு நீர் அருந்தி இருந்தான். அஞ்சி துயருற்று அலறிய அவன் குரல் அவனிடமே திரும்பி வந்தது. நாளும்பொழுதுமற்ற ஆழத்தில் அவன் அன்னை அன்னை என்று சொல்லிக்கொண்டு அச்சொல்லைப்பற்றி வாழ்ந்தான். பின் அங்கே கருவறையின் வெம்மையையும் ஈரத்தையும் கண்டுகொண்டான்.
எட்டுதிசைகளையும் கதிர்க்கைகளால் சூழும் சூரியன் மாமேருவின் உச்சியில் அமைந்துள்ள பிரம்மபதத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் ஒளியற்ற வெண்ணிறமலராக அமைகிறது. அங்கே பொருட்களில் உறையும் பிரம்மதேஜஸே ஒளியென்றாகிறது. அத்தனை மலைகளுக்கும் அத்தனை கடல்களுக்கும் வடக்கே, மண்ணின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் மேருவில் இரவென்றும் பகலென்றும் இல்லை. நாளென்றும் ஆண்டென்றும் இல்லை. அங்கு காலமென்றாகியுள்ளது பிரம்மனின் ஓர் இமைப்புக்கணம் மட்டுமே.
அந்தியில் சூரியன் தன் ஆயிரம்கோடி கதிர்களைச் சுருக்கி ஆமை என தன்னுள் இழுத்துக்கொள்கிறது. செந்நிறமான ஒற்றை நாக்கை மட்டும் அக்னிக்கு அளித்துச்செல்கிறது. ஒளிகொண்டெழும் அக்னி இரவை ஆள்கிறான். பகலில் கிழக்கில் எழும்போது அக்னியிலிருந்து தன் செங்கதிரை சூரியன் மீண்டும் எடுத்துக்கொள்கிறான். பிரம்மனின் அவையில் அக்னி ஒரு செம்மலராக மலர்ந்திருக்கிறது.
பிரம்மயுகத்தின் தொடக்கத்தில் ஒருநாள் அக்னி சூரியனிடம் அவன் செவ்வொளிக்கதிர் ஒன்றை ஒரு பகலுக்கு மட்டும் தானே வைத்துக்கொள்ள ஒப்புதல் கோரினான். நட்புக்காக சூரியன் அதை ஏற்றான். சூரியன் அளித்த அச்செங்கதிருடன் அன்று பகல் முழுக்க தட்சிணமேரு என்னும் மலைமேல் தானுமொரு சூரியனாக அமர்ந்திருந்தான். அன்று காலை விடிந்தபோது மேற்கிலும் ஒரு செந்நிறச் சூரியனைக் கண்டு அஞ்சிய மானுடர் அத்திசைநோக்கி முழந்தாளிட்டு கைகூப்பி வணங்கி வாழ்த்துரை எழுப்பினர். அச்சொற்களால் மகிழ்ந்த அக்னி மறுநாள் காலை அச்செஞ்சுடரை சூரியனுக்கு திருப்பி அளிக்காமல் மண்ணுக்குள் புகுந்து மறைந்துகொண்டான்.
சூரியக்கைகள் மண்ணையும் விண்ணையும் துழாவி அக்னியை தேடின. மண்ணுக்கு அடியில் உள்ள இருள்நிறைந்த வழிகளை சூரியன் அறிந்திருக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகாலம் அக்னி செஞ்சுடருடன் அக்குகைகளுக்குள் வாழ்ந்தான். இருண்ட குடல்வழிகள் செங்குருதி நிறம் கொண்டன. ஆயிரம்கோடி தலைமுறைகளாக ஒளியை அறியாமல் அங்கே வாழ்ந்த சிற்றுயிர்களில் கண்கள் எழுந்தன. அடித்தட்டில் வாழ்ந்தவற்றுக்கு முதுகிலும் பறந்தலைந்தவற்றுக்கு அடிவயிற்றிலும் விழிகள் திறந்தன. சிறுபுழுக்கள் செம்மணிகளாயின. ஒவ்வொன்றும் பிறிதொன்றை அறிந்தன.
நூறாண்டுகளுக்குப்பின் அவியேற்காது மெலிந்த அக்னி மண்ணுக்குமேல் எழ முடிவெடுத்தான். தன்னிடமிருந்த சூரியச்சுடரை ஒரு சிறிய ஒளிர்மணியென ஆக்கி அதை தான் வாழ்ந்த சியாமாந்தக பிலத்தின் சிறிய துளையொன்றுக்குள் போட்டுவிட்டு மேலே வந்தான். அங்கே நின்றிருந்த பேராலமரத்தை தன் செந்நாக்குகளால் பற்றி அவன் உண்ணத்தொடங்கியபோதே சூரியன் தன் ஆயிரம் கைகளால் அவனைச்சூழ்ந்து பிடித்துக்கொண்டான். விண்ணுக்குத்தூக்கப்பட்டு சூரியன் முன் நிறுத்தப்பட்ட அக்னி அக்கதிர் தன்னிடமிருந்து தவறி பாதாளத்தின் இருளுக்குள் விழுந்துவிட்டது என்று சொன்னான். நூறாண்டுகாலம் அக்னியை சிறையிலிட்டு மீளமீள கேட்டும்கூட அதையே அவன் சொன்னான்.
மண்ணில் அவியேற்க அக்னி எழாததைக் கண்ட முனிவர்கள் விண்ணளந்தோனிடம் முறையிட்டனர். அக்னியை விடுவிக்கும்படி மணிவண்ணன் ஆணையிடவே சூரியன் அக்னியை சிறையகற்றினான். தன் ஆழிவளைக்குள் வந்து சுடர்மணியைத் தேடிய அக்னி அது அத்துளைவழியாக மிக ஆழத்தில் விழுந்துவிட்டிருப்பதை கண்டான். அவனுடைய நீண்ட செங்கரங்களை அங்கே ஊறிப்பெருகிய கரிய நீர் உடனே அணைத்தது. நூறுமுறை முயன்றபின் அதை அப்படியே விட்டுவிட்டு அவன் மேலுலகம் சென்றான். சூரியத்துளி அங்கே நீரின் ஆழத்தில் விழிமணி என விழுந்து கிடந்தது.
கைகளால் துழாவி இருளில் அலைந்த அந்தகச் சிறுவன் வழிதவறி சேற்றுப்பரப்பில் சறுக்கி விழுந்து எழுந்து மேலும் விழுந்து குகையிருளுக்குள் சென்றுகொண்டிருந்தான். அணைத்து வருடும் அன்னைவிரல்கள் என புழுக்கள் நெளிந்த காமாந்தகம் என்னும் இருள்பாதை வழியாக அவன் சென்றான். பின்னர் உருகும் செங்குழம்புகள் ஈரத்தசையென அசைந்த மோகாந்தகம் என்னும் குகையை அடைந்தான். இருண்ட நாகங்கள் விழியொளிர நாநீட்டி வருடிச்சென்ற குரோதாந்தகம் என்னும் மூன்றாம் குகையை கடந்தபின் பிரம்மம் மண்ணுலகை உருவாக்கியபின் எப்போதும் ஒளிதொட்டிராத சியாமாந்தகம் என்னும் ஆழ்குகைக்கு சென்று சேர்ந்தான். விழியின்மை அளித்த அறியாமையால் அவன் காக்கப்பட்டிருந்தான்.
மண்ணின் கருவறையின் சுருள்பாதைக்குள் சென்று அவன் அடைந்த சியாமாந்தகத்தில் இருளில் சுடர்ந்து கிடந்த மணி அவன் இருண்ட விழிகளுக்குத்தெரிந்தது. அதை நோக்கி தவழ்ந்துசென்று அதை அள்ளி கைகளில் எடுத்தான். சிறுநெல்லிக்காய் அளவிருந்த அச்சுடரை ஏதோ உணவென்று எண்ணியது அவனுடைய பசி. அதை வாயிலிட்டபோது பனிக்கட்டிபோல குளிர்ந்த கல் என உணர்ந்து துப்பினான். தலைதூக்கியபோது அவன் கையிலிருந்த அந்த மணியின் ஒளியில் அக்குகையின் கல்மடிப்புகளை, கல் அலைகளை, கல்லுருகி வழிந்த அகிடுகளை, கல்கூம்புகளை கண்டான்.
அந்த மணியின் ஒளியை கருவியாக்கி மூன்று குகைகளையும் கடந்து திரும்பிவந்தான். காலையொளி விரிந்துகிடந்த காட்டைக் கண்டு விழியே சித்தமென திகைத்து நின்றான். மூன்றுநாட்கள் இமைக்காமல் நின்றிருந்தவன் “தேவா” என அலறியபடி கைவிரித்து காட்டுக்குள் பாய்ந்தோடினான். அழுதும் சிரித்தும் அரற்றியும் பதினைந்து நாட்கள் அவன் காட்டில் இருந்தான். பின் பசுவின் குரல் அம்மா என்றழைக்கக்கேட்டு கராளமதியை நினைவுகூர்ந்தான்.
அவனிடமிருந்த அந்த மணியை அன்னை கையில் வாங்கிப்பார்த்தாள். “இது உன்னிடமும் உன் குலத்திடமும் என்றும் இருக்கட்டும். பிறர் அறியவேண்டியதில்லை. உனக்கு இதுவே தெய்வமென்றாகி வழிகாட்டுக!” என்று வாழ்த்தினாள். சியாமாந்தகப் பிலத்தில் கண்டடைந்தமையால் அம்மணியை சியமந்தகம் என்று அவன் அழைத்தான். அவன் ஆடைக்குள் அந்த மணி எப்போதுமிருந்தது. ஆகவே அவன் உடலில் பாளை இளங்குருத்தின் மெருகு தெரிந்தது. அவன் விழிகள் சூரியன் எழுந்த பனித்துளிகள் என மின்னின. அவன் சொற்களில் நூறுமுறை தீட்டப்பட்ட வாளின் கூர்மை இருந்தது. அவனை சத்வத குலத்து யாதவர் தங்களுக்கு மூதன்னையர் அளித்த கொடை என்று எண்ணினர்.
ஏழு மூத்தவர்களும் அவனை அஞ்சினர். அவன் நாடாளக்கூடாதென்று அவர்கள் நாளும் பல சூழ்ச்சி செய்தனர். அதற்கென ஒரு தருணம் அமைந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சத்வதகுலத்தின் நூற்றெட்டு பெருங்குடிகளும் அங்கிருந்த கஜமுகம் என்னும் மலையுச்சியில் கூடி இந்திரனுக்கு கொடைவிழா எடுப்பார்கள். மழைக்காலம் முதிர்ந்து வானில் இந்திரனின் யானைகள் எழுந்திருக்கும். அவன் படைக்கலங்கள் மின்னி மின்னிச்சூழும். விண்சரிவில் அவன் பெருநகைப்பு முழங்கும். பன்னிரண்டு இளங்கன்றுகளை இந்திரனுக்கு பலியிட்டு வணங்குவர். அந்த ஊனை சமைத்து முதுகள்ளுடன் உண்டு களியாடுவர். மலைச்சரிவில் அமைந்த தோல்கூடாரங்களில் இளையோரும் மகளிரும் கூடிவிளையாடுவர்.
இந்திரவிழவில் ஒளிரும் வெண்கல்பீடத்தில் அமர்ந்த இந்திரனின் முன்னால் வாள்வைத்து தலைவணங்கி ஒவ்வொரு யாதவனும் தன்னை முழுதளிக்கவேண்டும் என்பது முறைமை. வீரசேனன் இந்திரன் முன் தலைவணங்க உறுதியாக மறுத்துவிட்டான். ஏழு உடன்பிறந்தாரும் உருவியவாளுடன் அவனைநோக்கிப் பாய்ந்தனர். குடிமூத்தார் எழுந்து அவர்களை அடக்கி அவனிடம் அதைப்பற்றி வினவினர். விழியளித்த கதிரவன் ஒருவனையே வணங்குவதாக நெறிகொண்டிருப்பதாக வீரசேனன் சொன்னான். “இந்திரன் யாதவர்களின் பெருந்தெய்வம். அவனை வணங்காதவன் யாதவன் அல்ல” என்று கிரிராஜர் கூவினார். “மழையளிக்கும் மன்னனை வணங்காத ஒருவன் நம்முடன் இருந்தால் காடுவறளும். கன்றுகள் செத்தழியும்” என்று குலப்பூசகர் சொன்னார்.
“இந்திரனை வணங்குக! இல்லையேல் யாதவக்குடிவிட்டு நீங்குக!” என்று கிரிராஜர் இறுதி ஆணையிட்டார். “விழி ஒன்றே என் செல்வம்” என்று சொன்ன வீரசேனன் சத்வதர்களின் தென்மதுராபுரி விட்டு நீங்க சித்தமானான். அவனுடன் நூறு யாதவக்குடிகளும் தங்கள் ஆநிரைகளுடன் செல்ல முன்வந்தனர். ஆனிமாதம் ஏழாவது வளர்பிறைநாளில் வீரசேனன் தன் குடியினருடன் வடக்கு நோக்கி கிளம்பினான். யமுனையை அடைந்து குறுங்காடுகளையும் சதுப்புகளையும் கடந்து அஸ்வபாதமலையடிவாரத்தை கண்டடைந்தான். அங்கே ஹரிணபதம் அமைந்தது.
ஹரிணபதத்தின் நடுவே ஏழடுக்குக் கல்மேடை அமைத்து அதில் பன்னிரு ஆரங்கள் கொண்ட சக்கரவடிவில் கதிரவன் பதிட்டைசெய்யப்பட்டான். அதன்மேல் மரப்பட்டைகளால் ஆன ஆலயத்தை எழுப்பினர். சில ஆண்டுகளில் அது கல்லால் ஆன சிற்றாலயமாக மாறியது. நூற்றெட்டு கதிர் விரிந்த செம்முகத்தில் விழிகளுடன் சூரியனின் வடிவம் பொறிக்கப்பட்ட ஆலயத்தின் முகப்பில் அமைந்த பலிபீடத்தில் ஒவ்வொருநாளும் ஏழுநிறப் புதுமலர் வைத்து வணங்கினர். ஆண்டுக்கு ஒருமுறை சூரியன் விஷுவராசியில் அமையும் நன்னாளில் சியமந்தகத்தை சூரியனின் காலடியில் வைத்து அந்தகக் குலத்து யாதவர் அனைவரும் தலைவணங்கி தங்களை முழுதளித்தனர். நூற்றெட்டு யாதவக்குலங்களில் சூரியனை முழுமுதல்தெய்வமாகக் கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே.
ஹரிணபதத்திற்கு அருகே ஆழத்தில் யமுனை பாறைகளை மோதி அலைத்து வெண்சிறகு கொண்ட கருநாகம்போல் சென்றது. படகில் செல்பவர்களுக்கு மரங்களுக்குமேல் எழுந்து நின்ற குதிரைக்குளம்புதான் அடையாளம். நூற்றெட்டு சிற்றோடைகள் எழுந்து வழிந்து அமைந்த பசும்புல்வெளியில் யாதவர்களின் ஆநிலைகள் அமைந்தன. அவ்வோடைகள் யமுனைக்குள் கொட்டிக்கொண்டிருக்கும் குளிரோசையை அஸ்வநாதம் என்றனர்.
வீரசேனரின் குடி அங்கே தழைத்தது. எழுபத்தெட்டு சிற்றூர்களாக அவர்கள் பிரிந்து பரவினர். அவரது அறுபத்திரண்டாவது கொடிவழியில் வந்த நிம்னர் வளைதடிச் செங்கோலும் குருத்தோலை மணிமுடியும் அணிந்து எருதுக்கொம்பு பதித்த இருக்கையில் அமர்ந்து அக்குடிக்கு தலைமை தாங்கினார். அவரது மைந்தன் சத்ராஜித் இளமையிலேயே கனவுகள் கொண்டிருந்தான். அஸ்வபதத்தாலும் யமுனையாலும் வேலியிடப்பட்ட சிறுநிலத்திற்குள் யாதவக்குடிகள் பாறைக்குள் சிக்கிய ஆலமரமென ஒடுங்கி வளர்வதாக எண்ணினான். யமுனைப்படித்துறையில் அமர்ந்து நெடுந்தொலைவில் பாய்விரித்துச்செல்லும் கலங்களை நோக்கி அமர்ந்திருந்தான். கால்கள் நீண்டு தோள்கள் பருத்ததும் தன் இளையோன் பிரசேனனுடன் மிருகபதத்தில் இருந்து கிளம்பி மதுராபுரிக்குச் சென்றான். செல்லும்போது அவன் தந்தை அந்த சியமந்தக மணியை அவனுக்களித்து அதை உடனுறைத்தெய்வமெனக் கொள்க என வாழ்த்தி அனுப்பினார்.
மதுராபுரியை ஆண்ட உக்ரசேனரின் படையில் ஒரு நூற்றுவனாகச் சேர்ந்த சத்ராஜித் எப்போரிலும் சிறுபுண்கூட பட்டதில்லை. தொட்ட செயலெல்லாம் துலங்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆயிரத்தவனாகவும் பின் மதுராபுரியின் எட்டுபெரும் படைப்பிரிவுகளில் ஒன்றின் தலைவனாகவும் ஆனான். யமுனைக்கரையில் களிந்தகம் என்னுமிடத்தில் அமைந்த சிறுமண்கோட்டையின் பொறுப்பை அடைந்தான். களிந்தகத்தைச் சுற்றிக் கற்கோட்டை அமைத்து காவலரண் சமைத்து உள்ளே வல்லமைவாய்ந்த வில்லவர்களை நிறுத்தி அதை மதுராபுரியின் இரண்டாம்தலைநகராக ஆக்கினான். களிந்தபதத்தின் துறையில் மதுராவுக்குச் செல்லாத சிறுபடகுகள் அணைந்தன. அங்குள்ள சந்தையில் சிறுகுடி யாதவர் நெய் கொடுத்து பொருள் கொள்ளவந்தனர். களிந்தகம் மதுராபுரிக்கு அளிக்கும் கப்பச் செல்வம் ஒவ்வொரு நாளும் வளர்ந்தது.
களிந்தகத்தின் குறுநிலமன்னராக சத்ராஜித்தை உக்ரசேனர் உடைவாளும் கணையாழியும் அளித்து அரியணை அமர்த்தினார். அந்தக யாதவர்களின் தலைநகராக களிந்தகம் மாறியது. அங்கே மூன்றடுக்கு அரண்மனையும் அந்தகக் குடியின் முதன்மைத்தெய்வமாகிய கதிரவன் ஆலயமும் அமைந்தன. அவ்வாலயத்தில் சித்திரை விஷுவராசியில் சியமந்தகமணி சூரியவிழியாக பதிட்டைசெய்யப்பட்டு ஆயிரத்தொருவகை மலர்களாலும், கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதை, மகாநதி, கிருஷ்ணை, காவேரி என்னும் ஒன்பது மாநதிகளின் நீராலும் வழிபடப்பட்டது. மதுராபுரிக்கு கப்பம்கட்டும் நான்கு யாதவச் சிற்றரசுகளில் முதன்மையானதாக களிந்தகம் கருதப்பட்டது. அனைத்து குலச்சபைகளிலும் சத்ராஜித் முதல்மதிப்பிற்குரியவராக ஆனார். .
சத்ராஜித்தின் நான்கு அரசியரில் விருஷ்ணிகுலத்து மாலினிதான் மூத்தவளும் முதன்மையானவளும். யாதவ வழக்கப்படி அவர் ஹரிணபதத்தைவிட்டு கிளம்புவதற்கு முன்னர் முதிரா இளமையிலேயே மாலினியை மணந்துவிட்டார். அவளை அவர் களிந்தகத்துக்கு கொண்டுசெல்லவில்லை. அங்கே போஜகுலத்து சித்ரையையும் பத்மையையும் மணந்துகொண்டு அரசியராக இருத்தினார். எப்போதாவது அவரும் அகம்படிப் படையும் யமுனை வழியாக களிந்தகத்தின் எழுகதிர் கொடிபறக்கும் படகுகளில் ஹரிணபதத்திற்கு வருவதுண்டு. அவர்களின் குலச்சடங்குகளில் மட்டும் மாலினிக்கு முதன்மையுரிமை இருந்தது. அவள் அதிலேயே நிறைவடைந்துவிட்டிருந்தாள்.
மாலினி விருஷ்ணிகுலத்து கதாதன்வாவின் மகன் சியாமகனின் இரண்டாவது மகள். மதுவனத்தின் காடுகளில் கன்றுமேய்த்து வளர்ந்தவள். அவளால் அரசியென்றாக முடியவில்லை. கணவனுடன் இரண்டுமுறை களிந்தகத்தின் அரண்மனைக்குச் சென்று சிறிதுநாள் வாழ்ந்ததுமே அவ்வாழ்க்கை தனக்கு உகந்ததல்ல என்று அறிந்துவிட்டாள். பசுக்களின் ஒலியும் மணமும் இல்லாத, காலையொளியை புல்வெளிமேல் காண வாய்ப்பற்ற, அந்தியில் கழுத்துமணிகளுடன் பொழுது சிவப்பதை பார்க்கமுடியாத வாழ்க்கை அவளுக்கு பொருளற்றதாகத் தோன்றியது. அங்குள்ள மானுடர் கூடணையப் பரிதவிக்கும் அந்திப்பறவைகள் போல எந்நேரமும் சுழன்றுகொண்டிருப்பதாக எண்ணினாள்.
“அங்கே காட்டையும் மலைகளையும் கதிரையும் நதியையும் சித்திரங்களாக தீட்டி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பார்க்கும் பெண்களும் சித்திரங்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்” என்று மாலினி தன் தோழி மஹதியிடம் சொன்னாள். “வெறும் சித்திரங்களடி. காற்றில் சித்திரச்சீலைகள்கூடத்தான் நெளிகின்றன.” தன் இளையாள்கள் இருவரையும் அவள் சித்ரை என்றுதான் சொன்னாள். அவள் வயிற்றில் முதல்கரு உருவானபோது செய்தியறிந்து மகிழ்ந்த சத்ராஜித் நூறு படகுகளில் அணிகளும் ஆடைகளுமாக ஹரிணபதத்திற்கு வந்தார். ஏழுநாட்கள் நீண்ட உண்டாட்டு நிகழ்ந்தது. எட்டாம் நாள் கிளம்பும்போது தன்னுடன் வந்து தங்கும்படி மாலினியை அழைத்தார். “என் மகள் இங்கே பசுக்களுக்கு நடுவே வளரட்டும்” என்று மாலினி சொன்னாள். “மூதன்னையர் அவளைச்சூழ்ந்து காக்கட்டும்.” அவள் வயிற்றை வருடி முத்தமிட்டுவிட்டு சத்ராஜித் கிளம்பிச்சென்றார்.
சத்யபாமை அன்னையுடனும் இரு மூதன்னையருடனும் விரிந்தகன்ற ஆயர்பாடி இல்லத்தில் வளர்ந்தாள். வட்டவடிவமான முகப்புக்கட்டிடத்தைச் சுற்றி பன்னிரு சிறுகட்டடங்கள் ஓங்கிய வேங்கைமரங்களின் வேலியால் சூழப்பட்டிருந்த வளாகம் அது. புற்கூரைக்குக் கீழே சாணிமெழுகி செந்நிறத்தில் சித்திரக்கோலமிடப்பட்ட சுவர்கள் கொண்ட முகப்புக்கட்டிடத்தில் அவளுடைய தாத்தா நிம்னர் ஆயர் குடியினரை சந்தித்தார். அதன்பின்னாலிருந்தது அவர் தங்கிய இல்லம். அதைத்தொடர்ந்து சத்ராஜித் வந்தால் தங்கும் அரச இல்லம். அருகே சுவடியறை. அதற்கப்பால் களஞ்சிய அறைகள். இல்லநிரையின் இடதுகோடியில் சமையல் கூடம். அருகே உணவுக்கூடமும் பெண்களின் புழங்கிடமும். அதைத்தொடர்ந்து பெண்கள் துயிலும் இல்லங்கள். வலதுகோடியில் நெய்க்கலங்கள் அடுக்கப்பட்ட ஆக்னேயசாலை.
பின்பக்கம் பிறைவடிவில் நூற்றெட்டு தொழுவங்களில் நின்றிருந்த ஒவ்வொரு பசுவும் மாலினியின் கண்முன் பிறந்து வளர்ந்து ஈன்று கனிந்தவை. ”ஐந்துபசுக்களின் வாழ்வுக்காலம் தானிருந்து நிறைந்தவள் மூதன்னையரின் உலகை அடைகிறாள். நான் இரண்டு பசுக்களின் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்” என்று மாலினி புறக்கடைத் திண்ணையில் கால் நீட்டி அமர்ந்து சொல்வாள். புன்னகையுடன் மஹதி “ஐந்துபசுக்களென்றால் எழுபத்தைந்து கன்றுகள் அல்லவா?” என்றாள். ”போடி, இந்த மூன்றைப்பெற்றே நான் முலைதளர்ந்துவிட்டேன்” என்று சொல்லி அவள் எழுந்து சென்றாள். “ஈன்று சலித்த பசு உண்டா அரசி?” என்று மஹதி கூவ “நீ சென்று ஈன்று வாடீ… என்னால் இனி முடியாது” என்று மாலினி சமையலறைக்குள் இருந்து சிறுசாளரம் வழியாக சொன்னாள்.
மஹதி சத்யபாமையிடம் “பெண்ணென்று ஆனபின் பசு என்றுமே முலைஒடுங்குவதில்லை மகளே” என்றாள். ”கருவுற்று நீலித்த காம்புகளுடன் கண்கனிந்து காத்திருக்கும். பின்னர் பால்பொழிந்து தொழுநிறைக்கும். முலைகளால் ஆனது பசு. ஊருணியை ஊற்றுக்களால் நிறைக்கும் மலைபோன்றது அதன் உடல்.” சத்யபாமை பெருமூச்சு விட்டாள். “நீருக்குள் என்னடி கண்டாய்? ஏன் எப்போதும் நெடுமூச்செறிகிறாய்?” என்று மஹதி கேட்டாள். ஒன்றுமில்லை என தலையசைத்து பாமா விழிவிலக்கிக்கொண்டாள். “சொல்லடி” என்றாள் மஹதி மீண்டும். “நான்காவது இருளில் என் முதுமூதாதை கண்டதுபோன்ற ஒரு விழியை” என்றாள் சத்யபாமை.