இரு காதுகளும் முழுமையாகவே கேட்காமல் ஆனபிறகுதான் சுத்த சங்கீதத்தின் வாசல் திறந்தது என்று ராமையா வெற்றிலை மீது சுண்ணாம்பை மென்மையாகத் தடவியபடி சொன்னார். கும்பகோணத்துக்காரர்கள் வெற்றிலை போடுவது தனி லாகவம். கும்பகோணம் வெற்றிலைகூட நன்கு முற்றிய நெல்லிக்காய் போல ஒரு கண்ணாடிப் பச்சை நிறத்துடன் இருக்கிறது. “இப்ப கண்ணை சும்மா மூடிண்டா போரும். கல்யாணியிலயோ மோகனத்திலயோ வைரவியிலயோ எந்த இடத்தை வேணுமானாலும் பாத்துடலாம். ஒரு தடையும் கெடயாது. தடைன்னா என்ன? கேட்டியா சாம்பா, எது சங்கீதத்தை உண்டு பண்றதோ அந்தக் கருவிதான்டா முதல் தடை மனுஷக்குரல், வாத்தியங்கள் எல்லாமே தடைதான். ஏன்னா சங்கீதத்தால அந்த வாத்தியத்தைத் தாண்டி போக முடியறதில்லை. தடையே இல்லாத கருவி ஒண்ணு இருக்குடா. சொல்லு பாக்கலாம். நீ எங்க சொல்லப் போறே?”
ராமையா முகவாயைத் தூக்கி மென்றார். “இவன் இப்படி இருக்கான்னு பாக்காதே. பெரிய ரசிகன். மௌனி, ஜானகிராமன், கு.ப.ரா. எல்லாம் எழுத்தெண்ணிப் படிச்சவன். சங்கீதத்திலே மாத்திரை சுத்தமாக ரசிக்கிறதுக்கு ஞானம் இருக்கு.”
அந்த ஆள் “விடுங்கண்ணா என்னமோ பாமாலை பாடறீங்க” என்றார். பெரிய உருண்டைக் கண்கள். வெற்றிலைக்காவி ஏறிய எத்துப்பல். பெரிய குரல்வளை கொண்ட நீண்ட கழுத்து. மெலிந்த குள்ளமான உடம்பு. சமையல் உதவியாள் போலிருந்தார்.
“நான் சொல்றது பேத்தல் மாதிரித்தான் இருக்கும். காது உள்ள யாருக்குமே இது புரியாது. கேட்டியா சாம்பா, எந்த வாத்தியம்னாலும் அதுக்குன்னு ஒரு குறை இருக்கு. வயலின் பிளிற முடியாது. நாதஸ்வரம் தேம்ப முடியாது. அதாண்டா காதில கேக்குற சங்கீதத்தோட பிரச்சினையே. ஷேக் சின்ன மௌலானா? சாஹிப்பின் சங்கீதத்த உன்னால நாதஸ்வரம் வழியா மட்டும்தானே கேக்க முடியும்? எனக்கு அப்பிடி இல்லை. அந்த பாழாப்போன கொழாயே வேணாம். அந்தப் பக்கம் சாகிப், இந்தப் பக்கம் நான். நடுவே சங்கீதம் மட்டும்தான். சுத்தமான சங்கீதம். நீ கேக்கிற சிக்கிரி கலப்பட சங்கீதமில்லை. டிகிரி சுத்தம்…”
சாம்பசிவம் என்னை ரகசியமாகப் பார்த்து கண்களை சற்று அசைத்தார். ராமையா மாசக்கணக்கில் பேசாமலிருப்பார். எழுத்தெல்லாம் எப்போதோ நிறுத்திவிட்டார். எப்போதாவது எவராவது வந்தால் பேச்சு பேச்சுதான்.” காது அணைஞ்சப்பவே எனக்குள்ள இருந்த குரல்கள்லாம் ஒண்ணொண்ணா மறந்து போச்சுடா. கடைசியா போனது வீட்டுக்காரியோட குரல். இப்ப மாலியோட குழலோ, லால்குடியோட தந்தியோ ஒண்ணும் உள்ள ஞாபகத்தில் இல்ல. ஆனா அவங்களோட உள்ளே இருந்த சங்கீதம் இருக்கு. சிரிக்காதே. நான் ஒண்ணும், ஒண்ணும் தெரியாத செவிட்டுப் பயல் இல்லை. இப்ப உன் சப்பை மண்டைக்குள்ள என்ன ஓடுதுண்ணு எனக்குத் தெரியாமயும் இல்லை.”
நான் ஒரு டீ சாப்பிடக் கிளம்பியபோது சாம்பசிவம் கூட வந்தார். அவரது சொந்த ஊர் திருச்சி. நான் நினைத்தது சரி, அவரது தொழில் சமையல்தான். ஓட்டலில் சரக்கு மாஸ்டர். திருநாகேஸ்வரத்துக்கு மாதம் ஒருமுறை வருவதுண்டு. அப்போது ராமையாவையும் பார்த்துப் போவது வழக்கம். இருபது வருட நட்பு. “இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கார். சாகித்ய அகாதமி கிடைச்சதிலேருந்து ரொம்ப மாறிட்டார். முன்னெல்லாம் எப்ப பாத்தாலும் ஒரே சலிப்பு சலிப்பு.”
“யாருக்கு வேண்டுதல்?”
“என் அண்ணாவுக்குத்தான். அவருக்கு கொஞ்சம் மனசு சரியில்லை. வாங்களேன். திருநாகேஸ்வரம் பாத்திருக்கேளா?”
“இல்லை. பெரிய கோயிலா?”
“இல்லை. ஆனா ரொம்ப விசேஷம். ஒரு சக்தியை நாம அனுபவபூர்வமா உணர முடியும். வந்து பாருங்கோ.”
கற்பனை செய்திருந்ததை விட அதிகக் கூட்டம். ஏதோ சிறு திருவிழா நடந்துகொண்டிருந்தது. பிரகாரத்தில் ஒரு சிறுமியின் சங்கீதக் கச்சேரி. அரங்கேற்றம் என்று பட்டது. மாந்தளிர் நிறமுள்ள சிறுமி. பட்டுப்பாவாடை, சரிகைக் கை வைத்த ஜாக்கெட், இரட்டைச் சடையில் ஒன்றை மார்பில் எடுத்துப் போட்டிருந்தாள். “மருகேலரா ஓ ராகவா” என்று தொடையில் தாளமிட்டு, தலையை ஆட்டி, இயல்பாகப் பாடினாள். தெப்பக்குளத்து நீரலைகளின் ஒளி தூண்களில் அசைவதுபோல கன்னங்களில் ஜிமிக்கியின் பிரதிபலிப்பு. மிருதங்கமும் வயலினும் முதியவர்கள். பிரியம் நிரம்பிய புன்னகையுடன் தலையாட்டியபடி, பேத்தியுடன் விளையாடுபவர்கள் போல, அவளைப் பின்தொடர்ந்தார்கள். பாவாடை துணியைத் தூக்கியபடி படிகளில் ஏறி இறங்கி விளையாடுபவள் போல சுவரங்களில் சஞ்சரித்தாள்.
சாம்பசிவன் உருண்டை விழிகளைத் துருத்தியபடி, வாயைத் திறந்தபடி பார்த்திருந்தார். பாட்டு கேட்க கொஞ்சம் பேர்தான். பாடகியின் பக்கத்துவீட்டுப் பெண்களாக இருக்கலாம். கச்சேரி முடியப் போகும்போது சாம்பசிவம் என் தோளில் தட்டி இதோ வருகிறேன் என்று கிளம்பிப் போனார். நான் கோயிலை மூன்றுமுறை சுற்றி அலுத்து, தெப்பக்குளப் படிக்கட்டில் கால்வலித்து உட்கார்ந்திருக்கும்போது திரும்பி வந்தார். வந்த வேகத்திலேயே “சாப்பிடமாலா?” என்றார். எனக்குக் கோபம் வந்தாலும் பசி வென்றது. “நல்ல மெஸ் ஒண்ணு இருக்கு” என்றபடி அவர் விடுவிடுவென முன்னால் நடந்தார். நான் துரத்துவதுபோலப் பின்னால் நடந்தேன். சுரங்கப்பாதையின் மறுபக்கம் போல கொல்லைப் பக்கம் தெரியும் பழைய அக்ரஹாரத்து வீடு. கூடத்தில் இலைபோட்டு சாப்பாடு. சாப்பிட்டு முடித்து மெஸ் மாமியிடம் ஏழெட்டு வார்த்தை பேசிச் சிரித்த பிறகு சாம்பசிவம் என்னை மாடிக்குக் கூட்டிச் சென்றார். வெடிப்பு விழுந்திருந்தாலும் சுத்தமாகக் கூட்டித் துடைக்கப்பட்ட சிமிட்டித் தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டோம். காற்று மிக மென்மையாகத் தழுவிச் சென்றது. எனக்கு தூக்கம் சொக்கியது. “இங்கேயே தங்கலாம். காசெல்லாம் கேட்க மாட்டா” என்றார் சாம்பசிவம்.
சாம்பசிவம் மிகவும் அமைதியிழந்திருப்பதைக் கவனித்தேன். அவரால் நிம்மதியாகப் படுக்க முடியவில்லை. பெருமூச்சு விட்டபடியும் தனக்குள் முனகியபடியும் இருந்தார். பத்து நிமிடம் தூங்கி விழித்தபோது நான் புத்துணர்வு பெற்றுவிட்டிருந்தேன். “தூங்கறேளா?” என்றார்.
“இல்லை சொல்லுங்க.”
“ஆரபியும் தேவகாந்தாரமும் இரட்டைக் குழந்தைகள் தெரியுமா?”
“எனக்கு சங்கீதம் அவ்வளவா தெரியாது.”
“தெரிஞ்சுக்குங்கோ.”
“கேட்கிறப்ப ஒரே மாதிரித்தான் இருக்கு.”
“எங்க அண்ணாவுக்கு எப்படிப் பைத்தியம் புடிச்சுது தெரியுமா?”
நான் சற்று அதிர்ந்தேன். அவரது குரல் வித்தியாசமாக இருந்தது. கண்களும் மிகவும் கலங்கியிருந்தன.
“நாங்க ரெண்டு பேரும் பெரிய சங்கீத வித்வாங்களாகணும்னு எங்கப்பா ஆசைப்பட்டார். நான் வாய்ப்பாட்டு கத்துண்டேன். அவன் வயலின். சின்ன வயசிலேயே தெரிஞ்சுபோச்சு. அவன் சரஸ்வதி கடாக்ஷம் உள்ளவன். எட்டு வயசிலேயே எல்லா ராகங்களையும் முழுஸ்வரூபமா வாசிப்பான். வர்ணம் வாசிச்சா அசந்துருவோம். அவனுக்கு எவ்வளவு படிச்சாலும் போதலை. திருமயம் நீலகண்டய்யர்னு ஒருத்தர் மகா ஞானவான். அவர்கிட்டே சிஷ்யனா சேர்ந்தான். அவர் பாட மாட்டார். எந்த வாத்தியமும் வாசிக்க மாட்டார். ராகநுட்பங்களை சுவரக்கோவையா எழுதிக் காமிப்பார். ரெண்டுபேரும் தரையில சுண்ணாம்பால எழுதி எழுதி சங்கீதம் படிப்பாங்க…”
திடீரென்றுதான் சதாசிவனின் போக்கில் மாற்றமிருப்பதை சாம்பசிவம் கண்டார். அப்போது அவருக்கு இருபது வயது. சதாசிவனுக்கு இருபத்தொன்று. சதாசிவனின் வேகம் மிதமிஞ்சிப் போய்விட்டிருந்தது. இரவு பகல் எந்நேரமும் கையில் வயலின் இருந்தது. அகமன ஓட்டம்போல அது நிலைக்காமல் பாடியபடியே இருந்தது. சில நாட்கள் கழித்துத்தான் சாம்பசிவன் கவனித்தார், சதாசிவன் வாசிப்பது மூன்றே ராகங்கள்தான். தீர சங்கராபரணமும் அதன் ஜன்யராகங்களான ஆரபியும் தேவகாந்தாரமும். பிறகு அறிந்தார் அவன் இந்த ராகங்களின் முழு வடிவத்தையும் வாசிக்கவில்லை, ஒரு சஞ்சாரத்தை மட்டும்தான்.
நடந்தது என்ன என்று வி்சாரித்தறிந்தார். மிகமிக நுட்பமான பல விஷயங்களைக் கற்றுத் தெளிந்த சதாசிவனுக்கு மிக எளிய ஒரு விஷயத்தில்தான் சிக்கல் ஏற்பட்டது. ஆரபிக்கும் தேவகாந்தாரத்திற்கும் ஸ்வரம் ஒன்றுதான். எழுதினால் வேறுபாடே இருக்காது. பாடும்போது தேவகாந்தாரத்தில் ரிஷபம், தைவதம் இரண்டும் சற்று ஓங்கும். கற்பிக்கும்போது ஆசிரியர்கள் அவ்விரு சுவரங்களையும் சற்று அழுத்தும்படி கையால் சைகை காட்டிப் பாட வைப்பார்கள்.
ஆரபியின் ஸ்வரங்களை சதாசிவன் வாசிக்கும்போது தவறுதலாக ரிஷபம் சற்று மேலெழுந்ததை அக்கணமே அவன் அறிந்தான். படிகத்தில் விழுந்த ஒளிபோல உடனேயே எல்லா ஸ்வரங்களும் பிரிந்து தேவகாந்தாரமாயின. மனம் நடுங்கிய கணம் தைவதமும் தவறியது. குருநாதர் நெற்றியில் மெல்லத் தட்டியபடி எழுந்து போனார்.
அது சதாசிவனுக்குத் தாங்க முடியாத அடியாக இருந்தது. இரண்டுவருடம் பாட்டு கற்ற குழந்தைகள் கூட அதிகம் தவறு இல்லாமல் பாடிவிடும் விஷயம் அது. அன்று இரவு முழுக்க சதாசிவன் அவ்விரு ராகங்களுக்கு முன்னால் கோபத்துடன் நின்று கொதித்தான். மறுநாள் குருநாதர் அதை வாசிக்கச் சொன்னார். சாதாரணமாகச் சொல்வது போலத்தான் சொன்னார், என்றாலும் அவரது கண்களைச் சந்தித்தபோது சதாசிவன் கூரிய வாளின் நுனியைத் தொடுவதுபோல உணர்ந்தான்.
சதாசிவன் முதலிலேயே ஸ்வரங்களை மனக்கண்ணில் கண்டான் கல்லில் செதுக்கி அடுக்கப்பட்டவை போல அவை உறுதியாக வீற்றிருந்தன. ஆனால் வயலின் தந்திகளில் வில் தவழ்ந்தபோது மனதின் ஒரு பகுதி, எதற்கும் அடங்காமல் திமிறி அலையும் ஒரு பகுதி, திரண்டுவந்து விரல்நுனியில் குடியேறியது. நெற்றியில் ஒரு நரம்பு புடைத்தது. வயலினில் நடுங்கி அதிரும் தந்திகளுடன் இணைந்து மூளையிலும் ஒரு தந்தி அதிர்ந்தது. வில் மூளையின் மென்சதையை உரசிச் செல்வது போலிருந்தது. ரிஷபத்தில் தந்தி அதிர்வதற்கு முன்பு ஒரு கணத்தின் பல்லாயிரம் பகுதிகளில் ஒன்றின் இடைவெளியில் மூளையின் தந்தி அதிர்ந்தது. ரிஷபம் மென்மையாக அதிர தேவகாந்தாரம் ஆரபியாக மாறியது.
அதுதான் தொடக்கம். பிறகு ஒரு போதும் சதாசிவனுக்கு ரிஷபமும் தைவதமும் கைவரவில்லை. மூளை முழுக்க அவ்விரு சுவரங்கள் மட்டும் நிரம்பியிருக்க வயலினில் இருந்து அவை முற்றிலும் மறைந்தன. திருச்சியில் உள்ள எல்லா மனநல மருத்துவர்களும் அவனைப் பாரிசோதித்துச் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. எவாரிடமும் எதுவும் பேசுவதில்லை. இரவும் பகலும் வயலின் வாசிப்புதான். கையிலிருந்து வாத்தியத்தைப் பிடுங்கினால் மூர்க்கமாகிவிடுவான். தூங்கும்போதுகூட அவை கையில் இருக்கும்.
இரவுகளில் சாம்பசிவன் ஐந்து சுவரங்களில் விரியும் விசித்திரமான இசையைக் கேட்டபடி படுத்திருப்பார். மனக்கண்ணில் ஒரு மாபெரும் ஆலயம் எழுந்து வந்தது ஒருநாள். வான் தொடும் ராஜகோபுரமும், விரிந்தகன்ற பிரகாரங்களும், கல்லில் கண்திறந்த சிற்பங்களும், இருள் நிழல்களும், தீபங்களுமாக. அங்கே கொடி மரத்தின் அருகே கால்மடக்கிப் படுத்திருந்த விஸ்வரூப நந்தியின் காதுகள் அசைந்து ஒலிக்காகக் கூர்ந்தன. பிறகு அது தலை தாழ்த்தி, திமில் அசைய, கனத்த உடலைத் தூக்கி எழுந்தது. அக்கணம் வாத்திய ஒலியேயின்றிக் கருவறை வாசல் திறந்தது. உள்ளிருந்து மான்மழுவும் இளம்பிறையும் அணிந்து, புலித்தோலாடை உடுத்த சடைத்தலையன் வெளிவந்து ரிஷபம் மீது ஏறிக்கொண்டான். யாளிகள் வெருண்டு விழித்து வழிவிட, துவாரபாலகர்கள் அதிர்ந்து வணங்கி விலக, அவர்கள் கோயிலைவிட்டு வெளியேறினார்கள்.
ரிஷபமும் தெய்வமும் வெளியேறிய கோயில் ஒரு கணம் உக்கிரமான மௌன நிலையில் உறைந்து நின்றது. பின்பு சிற்ப அமானுடர்கள் பெருமூச்சுடன் அசைந்தார்கள். கண்ணுக்குத் தெரியாத கட்டுகள் சிதறி விழ; பூதங்களும், கின்னரர்களும், யட்சர்களும், மதனிசைகளும் விடுதலை பெற்று இருளில் மிதந்தெழுந்தார்கள். மிருகங்களும் பறவைகளும் மனிதர்களும் கலந்து உருவான விபரித உடல்கள் எங்கும் நடனமிட்டன.
“ராத்ரிலதான் கஷ்டம். கேக்கக் கூடாதுண்ணு காதை மூடிண்டா தெரியும். மனசுக்கு வேற காது இருக்குண்ணு. ராகங்களுக்குப் பின்னாலே பூதகணங்கள் இருக்கு சார். எவ்வளவு அழகான ராகமா இருக்கட்டும். கொஞ்சம் அபஸ்வரமாப் பாடிப்பாருங்க, படுபயங்கரமா மாறிடும். அபஸ்வரம் விழறதை எதிர்பார்த்து பூதகணங்கள் தொடர்ந்து வந்திட்டிருக்கு… சொன்னா நம்பமாட்டீங்க சார். அப்படியே அதுகளை நேர்ல பார்த்ததுமாதிரி இருக்கும். பயத்தில முதுகெலும்பு குளுந்துடும். சிலசமயம் வாந்தி வரமாதிரி இருக்கும். சிலசமயம் தாங்கமுடியாத நாத்தங்கள் கூட வந்திருக்கு…”
சட்டென்று சாம்பசிவம் எழுந்து அமர்ந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டார். “ஆனா சில சமயம் அபூர்வமா அற்புதமான புது ராகங்கள் பிறந்து வந்திடும். இதுவரை நாம கேட்ட எந்த ராகத்தோட, சாயலும் இருக்காது. மனசு பதறி, பரவசமடைஞ்சு, என்ன செய்றதுன்னு தெரியாம தத்தளிக்கிறதுக்குள்ள மறைஞ்சிடும். கனவுமாதிரி வந்து போயிடும் சார். பிறகு எவ்வளவு நினைச்சுப் பார்த்தாலும் அதைக் கொண்டு வந்திட முடியாது. எங்கேருந்து சார் வருது அதெல்லாம்? அப்படீன்னா நமக்குத் தெரிஞ்ச இந்த ராகங்களுக்குப் பின்னால நாம அறியாத அனேகாயிரம் ராகங்கள் இருக்கா? எழுபத்திரண்டு ராகங்கள் நமக்கு தெரிஞ்சிருக்கிறதனாலேயே மிச்ச ராகங்கள்லாம் நமக்குத் தெரியாமப் போயிட்டுதா? பிரபஞ்சத்தை நாத வெளிங்கிறாங்க. பிரபஞ்சத்தில நமக்குத் தெரியாத கோடானுகோடித் தொலைவு இருக்கு. நாம ஏதோ மூலையில் ஒண்டிக் கிட்டிருக்கிற கிருமிகள் தானா. ஏன் சார்?”
பிறகு மெல்ல அடங்கி சாம்பசிவம் பெருமூச்சு விட்டார்.
நான் “பெரிய மேதைகள்லாம் உண்மைல தெரிஞ்சதைத் தேவைப்படறப்ப மறக்கிறதுக்குத் தெரிஞ்சவங்க” என்றேன்.
“இன்னிக்குப் பாடின கொழந்தை பேரு பார்வதி. அவளைப் பாத்துப் பேசிண்டிருந்தேன். இன்னிக்கு அவ ஆரபி, தேவகாந்தாரம் ரெண்டும் பாடினா. அதுவும் சேந்தாப்ல…”
“ஆமாம்.”
“ரெட்டைக் குழந்தகளை ஒரே சமயம் தூக்கி ரெண்டு மார்பிலயும் பால் குடுக்கிற மாதிரின்னு தோணித்து. குளிப்பாட்டி, பொட்டு போட்டு, தாலாட்டி, தூங்க வச்சுட்டா…”
“கேட்டேன்.”
“ஒரு ஸ்வரக்கணக்கும் அவளுக்குத் தெரியலை. எல்லா ராகமும் பாடறா. கணக்கே தெரியாது. இந்த ரெண்டு ராகத்தையும் குழப்பிக்க மாட்டியான்னு கேட்டேன். அவளுக்குக் கேள்வியே புரியலை. ரெண்டும் ரெண்டு மனுஷாளை மாதிரி அவளுக்கு.”
எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. “கணக்குன்னு சொல்றது ஆகாசத்திலே ஏணி வச்சு ஏறிட்டே இருக்கிற மாதிரி” என்றார் சாம்பசிவம்.
“ஆமாம்.” என்றேன். சற்று குரலைத் தாழ்த்தி, “நீங்க கொஞ்சநேரம் தூங்குங்க” என்றேன்.
சாம்பசிவம் மீண்டும் பெருமூச்சுகளாக விட ஆரம்பித்தார். “கடவுள் வெளியே போகிறதுண்ணா என்ன அர்த்தம்? சொல்லுங்க சார்.”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“அவர் அங்க வந்து குடியேறினவர்தான்னு அர்த்தம். ஏன் சார்? கடவுள் இறங்கிப்போன பிறகு அங்க திரும்ப வந்து உக்காந்துக்கிற இன்னொண்ணு இருக்கு. கடவுளை விடப் பெரிசு. படுபயங்கரமானது. ஆனா ரொம்ப அற்புதமானது. அது என்னது? தெரியலை.”
தொடர்ந்து சம்பந்தமில்லாமல் ஏதோ சொற்கள். பெருமூச்சுகள்.
மாலையில் நாங்கள் கிளம்பினோம். நான் பட்டுக்கோட்டைக்கு போகவேண்டும். விடைபெறும்போது சாம்பசிவம் சகஜமாகி விட்டுருந்தார். “மறுபடி கும்மோணம் போறேன். ராமையா சாரைப் பாப்பேன். என்றார். “மண்டைல ஆன்டனா வச்சிருக்கார். வானத்திலேந்து நேரடியா சங்கீதத்தை வாங்கிப்பார்” என்று சிரித்தார்.
சாம்பசிவன் ஏன் பாடுவதில்லை என்று கேட்க எண்ணினேன். கேட்கவில்லை.
– கூந்தல் தொகுப்பு, 2002
குறிப்பு:
சரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களுக்கு இசை விற்பன்னர் சாரங்கதேவர் ஏழு சொற்களை அடையாளமாக அளித்தார். ‘ரி’ ரிஷபம் என்றும் ‘த’ தைவதம் என்றும் கூறப்படுகின்றன. சொற் பொருள் எடுத்தால் இவை ஏறு (காளை) என்றும் இறை (கடவுள்) என்றும் பொருள்படும்.