நண்பர்கள்

1
அன்புள்ள ஜெ,

சீனுவின் கடிதத்திற்கு பதிலாக – “பிரியத்தில் வேறுபாட்டை நான் வைத்துக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேண்டியவர்கள்” – என்று எழுதியிருந்தீர்கள்.

இக்கடிதத்தை படித்த அன்றே இதனையும் படிக்க நேர்ந்தது:

Not to honor men of worth will keep the people from contention;
Not to value goods which are hard to come by will keep them from theft;
Not to display what is desirable will keep them from being unsettled of mind

இதில் முதல் வரியை நித்யா விளக்குகிறார்:

“என் எண்ணத்தில் ஒருவன் எட்டடி உயரமிருக்கிறான். இன்னொருவனோ நாலடி மட்டுமே. என் பிரக்ஞையில் எட்டடி உள்ளவனின் நிலையை குறைத்து அதனை வேண்டுமென்றே நாலடி உள்ளவனின் நிலையில் சேர்க்க முடியும். இதன் மூலம் என் அகத்தில் ஒரு சமநிலை ஏற்படுகிறது. இப்போது நான் யாரையும் நிராகரிக்க வேண்டியதில்லை; யாரையும் துரத்த வேண்டியதில்லை. யாருடைய பிரிவிற்கும் வருந்தத் தேவையில்லை. ஒருவன் இன்னொருவன் அளவுக்கே சிறந்தவன். (ஏதோ ஒருவகையில் குறையுடையவர்கள் என்று கருதிய) மக்களிடம் இதுகாறும் நான் காணத்தவறிய விழுமியத்தை இப்போது என்னால் காணமுடிகிறது. இன்னும் சிலர்மீது தேவைக்கதிகமாக வைத்திருக்கும் மரியாதையையும் குறைத்துக்கொள்ள முடியும். என் மனம் புதியதொரு சமநிலையையும் தெளிவையும் பெறுவதோடு, சமூகமும் மாற்றத்திற்குள்ளாகிறது. இச்சமூகமாற்றம் செயலால் அல்ல – தரிசனத்தால் ஏற்படுவது.”

(Meditations on the Way – A Contemplative and Personalized Study of the Tao Teh Ching)

வியப்பதைத் தவிர வேறொன்றறியேன்! :)

ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

நண்பர்கள் என்றுமே எனக்கு முக்கியமானவர்கள். இன்றல்ல, நான் ஆரம்பப்பள்ளியில் பயின்றநாட்களில் இருந்தேன். அன்றுள்ள நண்பர்கள் அனேகமாக இன்றும் தொடர்கிறார்கள். எவரிடமிருந்தும் நான் விலகியதில்லை. அனைவருமே எனக்கு முக்கியமானவர்கள்

ஆறாம் வகுப்பு வரை என் அருகிலிருந்த சலீலன் [முழுக்கோடு] சிலநாட்களுக்கு முன் காலமானான். நண்பனின் இறப்பு நமது இறப்புதான். அந்த இறப்பு இரண்டு இரவுகள் அலைக்கழித்தது. வர்கீஸ் என்னிடம் “எப்பமும் உன்னை கேட்டுக்கிட்டே இருப்பான்” என்றான். ‘அடிக்கடி கூப்பிட மாட்டானே? நானேதானே கூப்பிடணும்?” என்றேன். ‘அவன் உன்னைய மாதிரி புக்கு படிக்கப்பட்டவன் இல்லல்லா? அதனால உன்னைய விளிச்சப்பிடாதுன்னு நெனைச்சான்” என்றான்

ஒரு பெரிய அதிர்ச்சி அச்சொல். புத்தகங்கள் வழியாக அவனிடமிருந்து விலகவில்லை மேலும் அணுகியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமோ என எண்ணிக்கொண்டேன்

ஜெ

முந்தைய கட்டுரைஜெகே பற்றி அமி
அடுத்த கட்டுரைஊட்டி ஒரு பயணம்