அன்புள்ள ஜெ,
“எங்கும் குறள்” என்னும் தங்களின் நகைச்சுவைக் கட்டுரை, கத்திமீது நடப்பது போன்றது. அய்யன் வள்ளுவரை தாங்கள் அவமதித்துவிட்டதாக, பேச்சு கிளம்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. “யாகாவா ராயினும்” குறளுக்கு, உங்களின் குடிகார நண்பர் தந்த பொழிப்புரை அபாரம்.“எப்பொருள்” என்னும் குறளுக்கு தாங்கள் எழுதிய நாலாம்பால் திரிக்குறளை, எனக்கு மட்டும் நீங்கள் தந்தருளினால், என் பிறவிப்பயனை அடைந்துவிட்டதாக எண்ணி, நான் இறும்பூது எய்துவேன்.என் பள்ளி நாட்களில் எனக்கு சொல்லப்பட்ட முதல் திரிக்குறள்,
“கற்க கல்கி குமுதம் கற்றபின்
விற்க பாதி விலைக்கு” என்பதாம்.
யாராவது, பழைய பேப்பர் கடைக்காரரின் மகன் எழுதியிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொள்வேன்.
அப்புறம், கல்லூரி நாட்களில், ” மஞ்சள்பூசி” என்னும் நாலாம்பால் திரிக்குறள் அறிமுகமாயிற்று. அதை நான் இங்கே சொன்னால், எனக்கு “பாத அணி” அடிகள் விழக்கூடும்.
நகைச்சுவைக் கட்டுரைகளை எழுத எங்கிருந்துதான் உங்களுக்கு சிந்தனை வருகிறதோ?
அன்புடன்,
பெத்துசாமி, செந்தாரப்பட்டி.
அன்புள்ள பெத்துசாமி,
நம் நிஜவாழ்க்கையில் பெரிய விஷயங்களாக முன்வைக்கப்படுவனவற்றை கிண்டல் செய்துகொண்டுதான் மேலே சிந்திக்க ஆரம்பிக்கிறோம். மேல்நாடுகளில் அந்த மரபு மிக மிகப்பெரியது. என் வாசிப்பில் கேரளத்திலும் எதையும் கிண்டல்செய்யலாம். அது ஒரு ஆரோக்கியமான மனநிலையாகவே கருதப்படுகிறது. கிண்டல் என்பது அவமரியாதை அல்ல. அதுவும் ஒருவகை ரசனையே.
நான் எனக்குப்பிடித்த குறள், அத்வைதம் போன்றவற்றையே கிண்டல்செய்கிறேன். பொதுவாக நகைச்சுவை உணர்வுகொண்டவர்களை மட்டுமே கிண்டல்செய்கிறேன். அது ஒரு நட்பான தளம் என்றே எண்ணுகிறேன்.
கிண்டல் செய்வதன்மூலம் நாம் ஒரு விஷயத்துடன் நம் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்கிறோம். அப்பாவை கிண்டல்செய்வதை விட தாத்தாவை அதிகம் கிண்டல்செய்திருப்போம் அல்லவா?
ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள். இங்கே கிண்டல்களை ‘சீரியஸாக’ எடுத்துக் கொள்பவர்களே அதிகம்.
ஜெ
888
ஜெ..
1. கற்கக் கசடற கல்கண்டு குமுதம் – கற்றபின்
-
விற்க பாதி விலைக்கு
2. இன்னா செய்தாரை ஒறுத்தல் – அவர் நாண
-
கன்னா பின்னாவெனத் திட்டல்.
இதில் ஒன்று – மிகப் பழமையானது – இரண்டாவது நானே ரூம் போட்டு யோசித்து எழுதியது – இலக்கணப் பிழை பொருத்தருள்க.
திரு.வி.க வை எப்போது நினைத்தாலும் சு ரா வின் சென்னைப் பயணக் கட்டுரையும், தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த “அழகு” என்னும் கட்டுரையும் நினைவுக்கு வரும் – ஆனால், உம் கட்டுரை நெகிழ வைத்தது. காமம் sublimate ஆகி காதலாக, பாசமாக மாறுவது தான் எவ்வளவு அழகு?? தொல் தமிழர் பாஷையில் சொல்ல வேண்டுமெனில்.. “மணிரத்னம் படம் மாதிரி இருந்துச்சு” (ஏன் அப்படீன்னு கேட்காதீங்க)
தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம் செல்லாத காசின் பின் அலையும் வாழ்வில் அவ்வப்போது வந்து தழுவும் தென்றலாய் உமது கட்டுரைகள்.
பாலா
அன்புள்ள பாலாஏன் நாம் குறள்களை நக்கல்செய்துகொள்கிறோம்? விதிவிலக்கே இல்லாமல் அத்தனை பதின்பருவ பையன்களும் குறளில் புகுந்து விளையாடுகிறார்கள்.
குறள் நம்முடைய மரபின் பிரதிநிதி என்பதே காரணம். அது நம் அப்பா போல. அப்பாவை கிண்டல்செய்துதானே நாம் சிந்தனையை ஆரம்பிக்கிறோம்? அஜிதனின் முக்கியமான நக்கல்கள் பலவும் என்னைப்பற்றியவை
சமீபத்தில் நானும் அவனும் நடக்கப்போனோம். நான் அது மைனாதானே என்றேன். அப்பா அது வார்ப்ளர் என்றாள் சைதன்யா. அஜிதன் ”ஏம்ம்பா பறவை விஷயத்திலே மட்டும் சற்று டொங்கல் போல் இருக்கிறாய்?’ என்றான் அஜிதன்
பெரிய உச்சங்கள் நிகழ்ந்த மொழிகளில் பசங்களின் கிண்டல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்
ஜெ
88888
இன்னும் சில குறள்கள்
அ(ற)த்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் …
செல்வத்துள் செல்வம் பிக்பாக்கெட் செல்வம் மற்றெல்லாம் கேணையர் பையிலும் உள
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இருந்தாலும் கண்ணென்ப கையெழுத்தே “செக்“கிற்கு
துப்பாக்கி துப்பாக்கி ….(ஐயோ பயமா இருக்கே)
தெய்வம் தொழாள் கொழுந்தன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
தேர்வுப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
டியுசனடி சேரா தார்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வகுப்பறையின் போட்டடோவுள் வைக்கப்படும்
பிட் அடித்து வாழ்வாரே வாழ்வர் மற்றவரெல்லாம் பெயிலாகிச் சாவாரே சாவர்
அன்பிற்கும் உண்டே அடைக்கும் தாழ் பிறரால் வெளியிலிருந்து போடப்படும்
அன்புடன்
மு.சித்தநாத பூபதி
மயிலாப்பூர்
அன்புள்ள பூபதி
கிறள்கள் நன்றாக இருந்தன. ஆனால் நல்ல கிறள் தளைதட்டக்கூடாது. அது பொதுவாக மிகவும் கஷ்டமானது
என் இணையதளத்தில் சிறுநீர் சிரிழ்ச்சையாளர் ஒருவர் குறளுக்கு அளித்த விளக்கத்தை அளித்திருக்கிறேன். அந்த விளக்கம் நம் கற்பனைகளைவிட ஜாலியானது இல்லையா?
ஜெ