இந்துத்துவன்

அன்புள்ள ஆசிரியருக்கு,

உங்களுடைய ” ரூபாய்க்கும் மதிப்பு இருக்கும் என்பதை என்றாவது நீங்கள் உணரக்கூடும்” என்ற வரியை இதைவிட சிறந்த தருணத்தில் வாசித்திருக்க முடியாது என்று தோன்றுகிறது….

இலக்கியம் வாசிக்கும் நண்பர்கள் எல்லோருடனும் விடிய விடிய பேசிவிட்டு இப்பொழுது வீட்டுக்கு வருகிறேன்.

உங்களைப் பற்றி பேசாத இலக்கியப் பேச்சா.. எனக்கு உங்கள் எழுத்துக்கள் போல் மற்றவர்கள் எழுத்து அறிமுகம் இல்லை என்பதால் நான் உங்களைப்பற்றி மட்டுமே பேசினேன். இன்னொரு நண்பரும் பேசினார் அவரும் உங்கள் வாசகரே. எல்லோருமே உங்கள் படைப்புகளில் எது உச்சம், எது சுமாரன மோசமான படைப்பு என்றெல்லாம் பேசி வந்தார்கள். இதுவரையும் சரி. இதற்கு அடுத்து அவர்கள் முன் வைத்த கருத்தோடு முற்றிலும் மாறுபட ஆரம்பித்தேன். ஜெ.மோ இந்துத்துவா அரசியல் செய்கிறார். அவரின் படைப்புகள் இந்து மதத்தில் இவ்வளவு இருக்கிறது என்பதை நாம் உணராமல் போய்விட்டோமே என்ற பயத்தை ஏற்படுத்துகிறது இது இவர் செய்யும் அரசியல் என்றார்கள். வீட்டிற்கு வந்தால் ரூபாய்க்கும் மதிப்பிற்கும் என்ற உங்கள் பதிவைப் படிக்கிறேன்….

எனக்கு சத்தியமாக இவர்கள் பேசுவது புரியவில்லை.. உங்கள் படைப்பாளுமையை ஒத்துக்கொண்டவர்கள் கூட முரண்படும் இடம் பிடிபடவில்லை. ஒருவர் சொல்லும் எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றாலும் அடிப்படையையே எப்படி மறுக்க முடியும். எனக்கு உங்கள் வலைதள பதிவுகளே முதலில் அறிமுகம். எனக்கு பல விளக்கங்களைத் தந்துள்ள பதிவுகள் அதிகம். எனக்குத் தெரிந்த விளக்கத்தை வைத்துக்கொண்டு நீங்கள் இந்துத்துவாதி என்பதை ஏற்க முடியவில்லை. கடவுள் என்று பேசினாலே ஆத்திகனா..இந்து மதத்தைப் பேசினாலே தப்பா.. என்னதான் சொல்கிறார்கள்.. விஷ்ணுபுரத்தில் இருந்து பல இடங்கள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன.. தூங்கிக் கொண்டிருக்கும் ஆழ்வாரை தட்டியவுடன் அவர் ஏதோ சொல்லிவிட்டு தூங்கி விடுவார். அதை வைத்துக் கொண்டு மற்றவர்கள் தொடர்வார்கள்.. அஜிதர் ஒவ்வொருவராய் வெல்லும் போதெல்லாம் ஒரு விளக்கு எரியும்.. பின்னர் சித்தரும் அந்த சிறுவனும் பாதாள அறைக்குப் போகும்போது அதெல்லாம் அந்த இடத்தின் கட்டுமான ரகசியம் என்பதைப் பார்ப்பார்கள்.. கண்ணன் ஒரு ஞானி.. அவன் தெய்வமாக்கப் படுகிறான் என்று செல்கிறீர்கள்.. இதெல்லாம் சேர்ந்தது இந்து மதம் என்று சொல்பவரை இந்துத்துவா என்ற சொல்லில் ஏன் அடைக்க வேண்டும்.. எனக்கு உங்களைப் புனிதப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்கள் சொல்வதுமாதிரியே இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் எழுத்து என் சிந்தனைத் தளத்தை வேறு தளத்திற்கு எடுத்துக் கொண்டு போவதாகவே நான் உணர்கிறேன். எந்தத் தத்துவம் சரியென்று சிறுவன் கேக்கும்பொழுது சித்தர் இந்த இளம் துறவி எல்லோரையும் வென்றிடுவான்அதற்குப்பின் அவன் நிலையை நினைத்து வருந்துகிறேன்னு சொல்லுவார்.. அஜிதர் எல்லாரையும் ஜெயிச்சுட்டு தனிமைல தோட்டத்துல நடக்கும்போது என்னடா எல்லாத்தையுமே தருக்கப்படுத்திட்ருக்கோம்ன்னு தவிப்பார்.. எனக்கு இந்த எழுத்து கொண்டுபோற இடத்துல வேற எதுவும் தேவையில்லை.. இந்துத்துவா ன்னு இவங்க சொல்றது எதத்தான் தெரிஞ்சுக்கத்தான் இத எழுதுறேன்

இப்படிக்கு
விஷ்ணுபுரம் வாசகர் வட்ட ஆளுன்னு முத்திரைக் குத்தப்பட்ட :)
சங்கர்

***

அன்புள்ள சங்கர்,

பலமுறை சொன்ன பதில்தான்

ஒரு சின்ன வரலாற்று வரைபடம். இந்தியா வாழ்க்கைமுறையில், கலையில், அறிவியலில் மேலோங்கியிருந்த ஒரு நாகரீகம். சீனாபோல, எகிப்துபோல, கிரேக்கம் போல. இதை எவரும் மறுக்கவியலாது. ஆனால் அந்தபெரும் பாரம்பரியத்தில் ஒரு சீரான சரிவு பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் தொடங்கியது. இந்தியாமீதான அன்னியப்படையெடுப்புகள் அதன் கட்டமைப்பை அழித்தன.

பெருமைக்குரிய நாகரீகங்கள் தங்கள் வளார்ச்சிப்போகிலேயே அழிவை நோக்கிச் செல்கின்றன. ஏனென்றால் பண்பாட்டு வளர்ச்சி என்பது பன்மைத்துவம் நோக்கிக் கொண்டுசெல்லும். ஒவ்வொரு உட்கூறும் தனித்து வளரும். அவ்வாறு வளர்பவை ஒன்றுடன் ஒன்று முரண்படும். அந்நிலையில் அது ஒற்றைப்படையான, வலிமையான போர்ச்சமூகமாக அல்லாமலாகும். ஒருமையும் தீவிரமும் கொண்ட, அதேசமயம் பண்பாட்டில் பின்நிலையில் நிற்கும் சமூகங்களால் அவை தோற்கடிக்கப்படும். இந்தியாவிற்கும் அது நேர்ந்தது

எழுநூறாண்டுக்காலத் தேக்கம். அதன்பின்னர் பதினெட்டாம்நூற்றாண்டில் ஒரு மறுமலர்ச்சி உருவானது. அதற்குக்காரணம் ஆங்கிலக்கல்வி. ஐரோப்பியத் தொடர்பு.அதையே இந்திய மறுமலர்ச்சி என்றும் இந்துமறுமலர்ச்சி என்றும் சொல்கிறார்கள். இந்துமதச்சிர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், நாராயணகுரு இயக்கம், வள்ளலார் இயக்கம் போன்றவை உருவாகின. இந்தியாவின் தொன்மையான பண்பாடு மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டது. மறுவரையறை செய்யப்பட்டது.

அந்த மறுமலர்ச்சியே இந்தியச் சுதந்திரப்போராக மலர்ந்தது. இந்தியா விடுதலை அடைந்தது. இந்த பெரும் இயக்கத்தின் கனிகளே தாகூரும், பாரதியும், குவெம்புவும், குமாரனாசானும், பிரேம்சந்தும், மாணிக் பந்தியோபாத்யாயவும், சிவராம காரந்தும், புதுமைப்பித்தனும் ,தாராசங்கர் பானர்ஜியும் இன்னும் பலநூறு ஒளிமிக்க தாரகைகளும்.

அன்று ஒரு பெரிய கனவு இருந்தது. இந்தியாவின் மெய்ஞான மரபை, அறிவியலை, தத்துவத்தை அறுபட்ட இடத்திலிருந்து எடுத்து வளர்த்து நவீன உலகின் அறிவியக்கத்திற்கு நிகரானதாக முன்னே கொண்டுசெல்வது. பத்தொன்பதாம்நூற்றாண்டில் அது மீளமீளப்பேசப்பட்டது.இந்திய மறுமலர்ச்சியில் இரு முகங்கள் இருந்தன. ஐரோப்பாவின் சிறந்த பண்பாட்டுக்கூறுகளை உள்வாங்குதல், இந்தியப் பண்பாட்டுக்கூறுகளை வளர்த்தெடுத்தல்.

ஆனால் சுதந்திரத்திற்குப்பின் நம் பார்வையில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. சுதந்திரப்போரில் இருந்து உருவானவர் என்றாலும் அடிப்படையில் இந்தியமெய்ஞான மரபில் நம்பிக்கையற்றவரும் ஐரோப்பிய மரபு மீது கண்மூடித்தனமான வழிபாட்டுணர்வு கொண்டவருமான நேரு பிரதமரானார். இந்தியாவின் பெரும்பஞ்சங்களை நேரில் கண்ட அவருக்கு உடனடியான வறுமை ஒழிப்பு மட்டுமே முக்கியமானதாகத் தோன்றியது. அதற்கான கல்வி, அதற்கான சிந்தனை ஆகியவற்றை இங்கே அவர் வடிவமைத்தார். அத்துடன் சுதந்திரம் கிடைத்தபோது உருவான பெரும் மதக்கலவரங்களும் அதை ஒட்டி உருவான காழ்ப்புகளும் அவர்களை அச்சுறுத்தின. கல்வியை மதத்தில் இருந்து பிரிக்க திட்டமிட்டனர்.

நேருவும் அவரது அணுக்கர்களான மகாலானோபிஸ் பி.என்.ஹக்ஸர் போன்றவர்களும் இணைந்து இங்கே உருவாக்கிய கல்விமுறை என்பது இந்திய மரபு சார்ந்த அனைத்தையுமே மதம்சார்ந்தது என விலக்கிவைப்பதாக இருந்தது. ஒரு தேசம் அதன் தத்துவப்பாரம்பரியத்தை – உலகின் மிகப்பெரிய தத்துவப்பாரம்பரியங்களில் ஒன்றை- ஒரு சொல்கூட தன் மாணவர்களுக்கு கற்பிக்காத கல்விமுறை ஒன்றை உருவாக்கியிருக்கிறது என்றால் அது இந்தியாவில் மட்டும்தான். உலகவரலாற்றிலேயே முன்னும் பின்னும் அதற்கு உதாரணம் இல்லை. முழுமையான ஐரோப்பியக்கல்வி இங்கே பொதுக்கல்வியாக ஆகியது. சோறிடும் கல்வியே கல்வி என்றாயிற்று

வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே இந்தியச் சிந்தனைத்தளத்தில் திட்டமிட்டு உருவாக்கி நிலைநிறுத்தப்பட்ட இந்தியமரபு வெறுப்பு, இந்துமரபு வெறுப்பு என்பது சுதந்திரப்போராட்ட காலத்தில் அன்றைய உணர்ச்சிகளால் கட்டுக்கடங்கி இருந்தது. சுதந்திரத்திற்குப்பின்னர் நம்முடைய நவீனக் கல்விமுறையானது அதை தீனிபோட்டு வளர்த்து பேருருவம் கொள்ளச்செய்தது. அத்தனை கல்விநிறுவனங்களும் பண்பாட்டு நிறுவனங்களும் இந்தியவெறுப்பாளர்கள், இந்து வெறுப்பாளர்களால் நிறைந்தன.

எழுபதுகளில் இந்தியா ஒரு வலிமையான நாடாக எழக்கூடும் என்ற அச்சம் எழுந்தபோது [செஸ்டர் பவுல்ஸ் போன்ற ராஜதந்திரிகளின் நூல்கள் அவ்வச்சத்தை பதிவுசெய்கின்றனர். அணுகுண்டு வெடிக்கப்பட்டதும், பிராந்திய வல்லரசாக இந்தியா மாறமுயன்றதும் ஒரு காரணம்] உலக ஆதிக்க சக்திகள் இந்தியாவின் மீதான மறைமுகப்போரை கருத்துத்தளத்தில் தொடங்கின.

ஆகவே இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான அனைத்து சிந்தனைகளுக்கும் நிதி குவியத்தொடங்கியது. இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட அனைவருமே நிதிகளில் திளைத்தனர். அவர்களுக்கு மட்டுமே நிதிக்கொடைகள், பயணங்கள், விருதுகள், சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. இந்திய மரபை, இந்துமரபைச் சார்ந்து சற்றேனும் பேசக்கூடிய அனைவருமே விதிவிலக்கே இல்லாமல் புறக்கணிக்கப்பட்டார்கள்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்துமதம் காரணம் என எண்ணப்பட்டதனால் இந்துமதத்தை இழிவும் அவதூறும் செய்வது பெருந்தொழிலாகவே அன்னிய சக்திகளால் பேணப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய -இந்து எதிர்ப்பு என்பது நம் அறிவுத்துறையில், ஊடகத்துறையில், கல்வித்துறையில் ஒரு எதிர்க்கமுடியாத பெரும் சக்தியாக நின்றது. இன்றும் நீடிக்கிறது. அது உருவாக்கிய சிந்தனைமுறை, நம்பிக்கைகள் ஒற்றைவரிகளாகவே இளைஞர்களுக்கு வந்து சேர்கின்றன. அவற்றைச் சொல்லிக்கொண்டிருப்பதே நவீனசிந்தனையாளனாகக் காட்டுவது என்று நம்புகிறார்கள் இவர்கள்.

மறுபக்கம் 1925ல் இந்தியாவில் இந்துத்துவ அரசியல் தொடங்கியது. இந்தியதேசிய மறுமலர்ச்சி, இந்துமத மறுமலர்ச்சி ஆகியவை உருவாக்கிய உணர்வலைகளை அரசியல் சக்தியாகத் திரட்டுவதற்கான முயற்சி அது. முஸ்லீம்லீக் தோன்றி இஸ்லாமிய மதவாதம் ஓர் அரசியல்சக்தியாக எழுந்தபோது அதற்கு எதிர்வினையாகத் தோன்றியது இந்து மதவாத அரசியல். காங்கிரஸின் பிழைகளால் அது மெல்லமெல்ல வளர்ந்தது. எண்பதுகளில் வலிமையான அரசியலாக ஆகி இன்று ஆட்சியைப்பிடித்துள்ளது

இந்துமதம் என்பதை ஓர் ஒற்றை அடையாளமாகக் குறுக்கி மக்களைத் திரட்டுவது இந்துத்துவம். அதற்கும் இந்து மெய்ஞான மரபுக்கும், இந்து தத்துவமரபுக்கும், இந்துமதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்துமரபு என்பது பன்மைத்தன்மை கொண்டது. ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு வளர்வது. ஆனால் இந்து எதிர்ப்பாளர்கள், இந்திய எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக இந்துத்துவ அரசியலும் இந்துஞானமரபும் ஒன்றே என வாதிட்டு வருகிறார்கள். இந்துமரபை அவதூறு செய்து சிறுமைசெய்து அழிக்கும் முயற்சி என்றே அதைக்கொள்ளவேண்டும்

இதுதான் பின்புலம். ஓர் எழுத்தாளனாக நான் இந்துமெய்ஞான மரபில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். நாராயணகுருவின் வேதாந்த மெய்ஞான மரபில் வந்தவன். மெய்யியலிலும் உயர்தத்துவத்திலும் இந்துமரபையும் பௌத்தமரபையும் ஏற்றவன். என் எழுத்துக்களில் அவற்றை வெளிப்படுத்துகிறேன். இந்திய மரபை, இந்துமரபை ஒட்டி எழும் சிந்தனையும் இலக்கியமும் வளர்ந்து நீளுமென்றால் அது உலக நாகரீகத்திற்கே ஒரு பெருங்கொடை என நினைக்கிறேன். விவேகானந்தரும் தாகூரும் பாரதியும் கண்ட கனவுதான் அது.

நான் நவீன எழுத்தாளன். ஆகவே நம்பிக்கைகளை முன்வைப்பதில்லை. ஆராய்கிறேன். பரிசீலிக்கிறேன். வாதிடுகிறேன். மேலும் இம்மரபு அளிக்கும் படிமங்களைக்கொண்டு கனவு காண்கிறேன். அக்கனவினூடாக என் மரபின் ஆழ்மனதை சென்றடைகிறேன். என் காலகட்டத்தின் மொழியில் அவற்றை முன்வைக்கிறேன். பல்லாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு பண்பாட்டின், இலக்கிய இயக்கத்தின் சமகால நீட்சி நான். கம்பனின் காளிதாசனின் பாரதியின் தொடர்ச்சி என என்னை எண்ணிக்கொள்கிறேன்.

ஓர் இந்துவாக நான் எந்த மதத்திற்கும் எதிரி அல்ல. எல்லாவற்றையும் இணைத்துக்கொள்ள முயல்பவன். தேசியவாதி என்றமுறையில் நான் ஏற்பது காந்தி முன்வைத்த மதச்சார்பற்ற இந்தியாவைத்தான். என் இந்தியதேசியத்தில் இந்துக்களுக்கு நிகரான இடத்திலேயே அனைவரும் இருக்கிறார்கள்.
.
இங்குள்ள இந்துவெறுப்பாளர்கள் மற்றும் இந்திய எதிர்ப்பாளர்கள் அவர்களின் வெறுப்பரசியல் காரணமாக எனை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் சொல்வதை அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது. அவதூறு ,காழ்ப்பு ,கசப்புகள் மூலம் மட்டுமே அவர்கள் என்னை எதிர்கொள்ளமுடியும். இந்துப்பாரம்பரியம், இந்து மெய்ஞான மரபு, இந்தியதேசியம் பற்றிய எச்சிந்தனையையும் இந்துத்துவ அரசியல் என முத்திரையிட்டபின்னரே அவர்களால் பேசமுடியும். அது அவர்களின் செயல்திட்டம். அதற்காக அவர்கள் நியமிக்கப்ப்ட்டிருக்கிறார்கள். ஊதியமும் பெறுகிறார்கள்

என் படைப்புலகை வாசிப்பவர்கள் எவருக்கும் நான் எழுதுவதென்ன என்று தெரியும். அது மதவாதம் அல்ல. மதமே அல்ல. அது மதத்தை மையமாகக் கொண்ட ஒரு பெரிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நின்று எழுதப்படும் நவீன இலக்கியம், நவீன சிந்தனை. அதைப்புரிந்துகொள்பவர்களே என் வாசகர்கள். நான் எழுதுவதைப்புரிந்துகொள்ளாதவர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை. இன்றைய இந்து-இந்திய எதிர்ப்புப்பிரச்சாரகர்களின் புகைமூட்டம் கலையும். அன்று நான் இப்பாரம்பரியத்தை விமர்சனத்துடன் அணுகி முன்னெடுத்த எழுத்தாளனாகவே அறியப்படுவேன்.

ஜெ

முந்தைய கட்டுரைநாகம் (புதிய சிறுகதை)
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 5