ஊட்டி நண்பர்கள் வருகை

இனிய ஜெயம்,

ஊட்டி முகாம் பதிவுகள் கண்டேன். அதென்ன பள்ளிப் பிள்ளைகள் பள்ளிக்கு டிமிக்கி கொடுத்தால் அவர்கள் பெயரை கரும் பலகையில் எழுதி வைப்பதைப் போல எனது, ஜாஜா, மற்றும் பிரசாத் பெயர்களை எழுதி ஒட்டி விட்டீர்கள்?

பிரசாத் , ஜாஜா, சுனில் இவர்கள் அனைவரும் இல்லறமல்லது [அல்லாதது] நல்லறம் அன்று என்று கண்டு அமைந்து விட்டார்கள் என நினைக்கிறேன். சேலம் சதீஷ் [ஆச்சர்யம்] தம்பதி சமேதராக புகைப்படத்தில் கண்டேன். [மகா ஆச்சர்யம்] சிரித்துக் கொண்டு வேறு இருக்கிறார். பார்ப்போம்.

பிரகாஷ் மூன்று ஆண்டுகளாக பாடு பட்டு இப்போதுதான் முகாமில் இடம் பிடித்திருக்கிறார். முகாம் அறிவிப்பு கண்டவுடன் நிறைய பெண் வாசகிகளின் தொலை பேசி அழைப்பு. புகைப்படத்தில் நமது செட் பிராப்பர்டி தவிர வேறு பெண் முகங்களே காண விலை.

எங்கோ உள் குத்து நடக்கிறது. முகாம் உறுப்பினர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை தேவை எனும் கலக குரலை இங்கே பதிவு செய்கிறேன்.

முகாம் வர இயலவில்லை என்றுதான் பெயர். விஜய் சூரியன் துவங்கி, செல்வேந்திரன் வரை தாங்கள் தேர்வு செய்த கதையை என்னுடன்தான் விவாதித்தனர்.

குறிப்பாக செல்வேந்திரன் தொலைபேசும்போது மண்டபத்துக்குள் தாய் மாமன் ஸ்தானத்தில் அமர்ந்திருந்தேன். போன் வந்ததும் வெளியே வந்து விட்டேன். பேசி முடித்து மீண்டும் மாணவரை ஏகுகையில் புரோகிதர் கடும் கோபத்தில் இருந்தார்.

மறுநாள் இன்னும் உச்சம் மற்றொரு தொலைபேசி அழைப்பு. வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தேன். புரோகிதர் கடும் சினத்துடன் வெளி ஏறிக் கொண்டிருந்தார். விசாரித்தேன். புரோகிதர் மணமக்கள் தலையில் வைத்து உடைக்க அப்பளம் கேட்டிருக்கிறார். என் தங்கையும் அப்பளம் கொண்டுவந்திருக்கிறார். பொரிக்காத பச்சை அப்பளம்.

பிறகென்ன ஒன்றரை லிட்டர் பவண்டோ போத்தல் வாங்கித் தந்த பிறகே அவர் சினம் தணிந்தது.

மணி மாறன் காடு நாவல் வழியே இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தவர். ஒரு முறை புதுவை கடற்கரையில் மாலை ஐந்து மணி துவங்கி இரவு ஒன்பது வரை அவருடன் ஜெயம் படைப்புலகம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அன்றுதான் அவர் எனக்கு மிக அண்மை ஆனார். அவர் இவ்வளவு சரளமாக எழுதக் கூடியவர் என்பது ஆச்சர்யம் அளித்தது. உங்க பக்கத்துலதான் உக்காருவேன் என்று ஒரு மாதம் முன்பே சீட் போட்டு வைத்திருந்தார். ஏன் ஊட்டி வர வில்லை என்று கேட்டார்.

நானும் ஜெயம்மும் கொள்கை மாறுபாடு காரணமாக, கருத்து வேறுபாடு கொண்டு நண்பர்களாக பிரிந்து விட்டோம் என்று பதிலிறுக்க ஆசைதான்.

ஒரு நாவல் எழுதி முடித்து முதல் பேட்டியில் சொல்வதற்காக அந்த பதிலை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன்.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு

பல கடிதங்கள். ‘அப்படியென்றால் நான் வராதது உங்களுக்கு இழப்பு இல்லையா? வந்தது மகிழ்ச்சி இல்லையா?’ என்ற கோணத்தில். வந்தவர்களெல்லாரும் நெருக்கமானவர்கள்தான். அனைவருமே நெஞ்சுக்கு அருகேதான் இருந்தனர். வராதவர்கள் என எழுதியவர்கள் வருவதாகச் சொல்லி பின்னர் வராமல் நின்றுவிட்டவர்கள்.

பிரியத்தில் வேறுபாட்டை நான் வைத்துக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேண்டியவர்கள். எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மட்டுமே ராஜமாணிக்கத்தையும் விஜயராகவனையும் நினைப்பேன். ஜாலியாக இருக்கும்போது உங்களை. யாருடனாவது சண்டை போட்டால் ராஜகோபாலனை. சும்மா பேசிக்கொள்ள கிருஷ்ணனை. இப்படி நண்பர்கள் ஆளுக்கொரு சுவை

ஜெ

முந்தைய கட்டுரைவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்ரஸாத்
அடுத்த கட்டுரைதலைமறைவு