ஹனீஃபாக்கா

மதராசப்பட்டணம் படத்தை இன்னொருதடவை பார்க்கச் சென்றிருந்தேன், முதல்தடவை சைதன்யா பார்க்கவில்லை. நான் திரையரங்கில் இருந்து ‘உன் படத்தை மீண்டும் பார்க்கப்போகிறேன். எப்படி தாங்கப்போகிறேன் என்று தெரியவில்லை’ என்று ஆரியாவுக்கு வேடிக்கையாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உரக்கச்சிரித்தபடி ‘ஏன் அந்த விஷப்பரீட்சை?’ என்று தொலைபேசியில் கேட்டார். முதலில் பார்த்தபோது வெகுநேரம் எனக்கு படத்துடன் இணைய முடியவில்லை. காரணம் கொச்சின் வி.எம்.சி. ஹனீஃபா.

படத்தின் தொடக்கத்தில் அவரது படத்தைக் காட்டி அவர் நடித்த கடைசிப்படம் என்றார்கள். அதன் பிறகு படம் முழுக்க நான் அவரது கண்களைச் அண்மைககட்சியில் சந்திக்கும்போதெல்லாம் ஓர் அதிர்ச்சியை அறிந்துகொண்டிருந்தேன். படத்தில் அவரை அவராகவே கண்டுகொண்டிருந்தேன். அமைதியிழந்தவனாக நினைவுகளில் அலைந்து அலைந்து மீண்டேன்.

மதராசபப்ட்டினம் ஹனீஃபாக்காவின் தேர்ந்த நுண்ணிய நடிப்புக்கு மிகச்சிறந்த உதாரணம். நகைச்சுவை என்றால் வசனங்களை கத்தவேண்டும் முகபாவனைகளில் மிகை வேண்டும் என்ற வழக்கமான நம்பிக்கைகளை மிக எளிதாகக் கடந்துசென்றிருக்கிறார். அதில் அவர் செய்வது நம்பி என்ற கதாபாத்திரத்தை. அந்தக்கதாபாத்திரத்தின் இயல்புமூலம் உருவாகும் மெல்லிய வேடிக்கையையே நகைச்சுவையாக முன்வைக்கிறார். சிரிக்க வைப்பதில்லை, புன்னகைக்கச் செய்கிறார்.

புகைப்படம் என்ற நவீன காலகட்டத்தில் தானும் பதிந்துவிடவேண்டும் என்று தவிக்கும் எளிமையான ஆத்மா. கொஞ்சம் நல்லியல்புகள், கொஞ்சம் அற்பத்தனங்கள், கொஞ்சம் கோழைத்தனம். முகபாவனைகள் சரளமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. ‘உன் கழுதையைப்பிடிச்சிருக்கு’ என்று சொல்லுமிடத்தில் அந்த முகம், அது அவருக்கே உரியது.

கஸ்தூரிமானுக்காக லோகி திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது லோகியின் பாலக்காட்டில் லக்கிடி கிராமத்து வீட்டில்தான் ஹனீஃபாக்காவை சந்தித்தேன். அந்த நாளில்தான் முரளியையும் சந்தித்தேன். மாலை ஏழுமணிக்கு நான் செல்லும்போது மூவரும் முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மூவருமே மது அருந்துவதுபோல தோன்றியது. ஹனீஃபாக்கா குடிக்கமாட்டார் கம்பெனிமட்டும் கொடுப்பார் என்று பிறகு தெரிந்தது.

நான் அறிமுகம் செய்துகொண்டதுமே ஹனீஃபாக்கா சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டார். அது அவரது இயல்பு. என்னைப்போல அவருக்கு பழக்கமானவர்கள் பத்தாயிரம்பேராவது இருந்திருக்கலாம். எல்லாரிடமும் அவருக்கு ஆத்மார்த்தமான உறவும் இருந்திருக்கும். ‘நீ நாயரா?’ என்றார் என்னிடம். ‘ஆமாம்’ என்றேன். ‘குடித்துப்பார். நல்ல நாயரென்றால் மூன்றாம் ரவுண்டுக்குப் பின் லெஃப்ட் ரைட் வைப்பான்’ என்றார்.

முரளி மூன்றாம் ரவுண்டுக்குப் பின்னர் அவரது லங்காலட்சுமி நாடகத்தைப்பற்றிச் சொல்லி அதன் சில காட்சிகளை நடித்தும் காட்டினார். ஒயிலாக்க நாடகத்துக்குரிய வகையில் அவர் காலெடுத்து காலெடுத்து வைத்தபோது ஹனீஃபாக்கா என்னிடம் சீரியஸாக ‘நான் சொன்னேன் இல்லை?’ என்றார். அந்த தீவிர கணத்தில் சிரித்திருந்தால் அங்கே கொலை விழுந்திருக்கும். சிரிப்பை அடக்க நான் பல்லைக் கிட்டித்துக்கொண்டேன்.

அதன்பின்னர் கஸ்தூரிமான் படப்பிடிப்பில் எடுக்கும்போது மீண்டும் ஹனீஃபாக்காவைச் சந்தித்தேன். அந்தப்படத்தில் மீரா ஜாஸ்மினிடம் வழியும் வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்தில் மூலத்தில் ஹனீஃபாக்கா நடித்திருந்தார். தமிழில் ஒரு தமிழ்நடிகரை நடிக்கச்செய்யலாமென நான் சொன்னேன். ஆரம்பத்தில் முழுக்கமுழுக்க தமிழ் நடிகர்கள் என ஒத்துக்கொண்டிருந்த லோகி படிப்படியாக மலையாள நடிகர்களையே கொண்டுவர ஆரம்பித்திருந்தார். தமிழ்நடிகர்களின் ஒரேமாதிரியான செயற்கையான உடலசைவுகள் அவருக்குச் சலிப்பூட்டின. நுட்பமாக நடிக்கக்கூடியவர்களுக்குக் கொடுக்குமளவு பணம் இல்லை. ஆகவே ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நாலைந்து நடிகர்களை வரவழைத்துப் பேசியபின் மலையாள நடிகர்களையே ஒப்பந்தம் செய்ய நேர்ந்தது. அதே போக்கில் ஹனிஃபாக்காவையும் லோகி கூப்பிட்டார்.

ஹனீஃபாக்கா லோகியின் நண்பர், நண்பருக்கும் மேல். தொலைபேசியில் ‘ஆ ஹனீஃபா…இது நான்தான்.நாளைக்கு நேரமிருந்தால் கோயம்புத்தூருக்கு வா’ என்றார் லோகி. மறுநாள் ஹனீஃபாக்கா வந்திருந்தார். கேப்டன் வீரபாண்டியின் வசனங்களை அவர் ஒருவகையில் பேசி தயாரித்துக்கொண்டார் மொத்தம் மூன்றே நாட்களில் அவரது பங்கை நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த மூன்றுநாளும் நான் அவரிடம் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

தனிப்பேச்சில் ஹனீஃபாக்காவிடம் அதிகம் நகைச்சுவையை பார்க்கமுடியாது. எப்போதும் பயணக்கவலைகளில் இருப்பார். கூடவே செல்பேசி வழியாக தன் சொந்த வீட்டையும் நிர்வாகம் செய்துகொண்டிருப்பார். சிலசமயங்களில் அவரது இயல்பான நகைச்சுவை வரும். லோகி படப்பிடிப்பில் தலையில் ஒரு துண்டு கட்டியிருப்பார். தாடியுடன் அப்போது அவரைப்பார்க்க பரதனின் சாயல் தெரியும். ‘இவன் யாரு, பரதனைக் கொண்டுபோனபோது சிந்தினதா?’ என்றார் ஹனீஃபாக்கா.

தன்னுடைய நடிப்பைப்பற்றி பிறர் புகழ்ந்து பேசினால் குழந்தை மாதிரி உற்சாகமாகக் கேட்பார். அவர் இயக்கிய படங்களை பற்றி எந்தவகையான மதிப்பும் அவருக்கு இல்லை. விதிவிலக்குகள் லோகி எழுதி அவர் இயக்கிய ஜாதகம் மற்றும் வாத்ஸல்யம். ‘சினிமா எடுத்து சினிமா செய்ய கற்றவர் பத்மராஜன். நான் சினிமா எடுத்து சினிமா செய்யாமலிருக்க கற்றேன்’ என்றார் ஹனீஃபாக்கா. ‘இனி டைரக்‌ஷன் இல்லை..போதும்’ என்றார்.

அதன்பின் நான் அவரைச் சந்தித்தது டப்பிங்கில். உள்ளே இன்னொருவர் பேசிக்கொண்டிருக்க நான் வெளியே அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது இயல்பாக ‘ஹனீஃபாக்கா’ என்று அழைத்தேன். அவர் அதைக் கவனிக்காதவர் போல தெரிந்தது. ஆனால் உள்ளே செல்லும்போது ‘வரட்டே மோனே’ என்றார். அன்றுதான் அவரை நான் கடைசியாக பார்த்தது. அதன்பின் எத்தனையோ படங்களில். இப்போது அவர் நடிகராக அல்ல என் சொந்த ஹனீஃபாக்காவாக தெரிந்தார்.

ஹனீஃபாக்காவின் திரைவாழ்க்கையில் திருப்புமுனை என்றால் அது கிரீடம் படம்தான். லோகி உருவாக்கிய ‘ஹைத்ரோஸ்’ என்ற கோழையான ரவுடியின் கதாபாத்திரம் ஹனீஃபாக்காவின் உருவத்துக்கும் முகபாவங்களுக்கும் மிகக்கச்சிதமாகப் பொருந்தி போயிற்று. அதன்பின் ஹனீபாக்கா நடித்த கணிசமான கதாபாத்திரங்கள் ஹைத்ரோஸின் பல்வேறு வடிவங்கள்தான்.’ பலவருடங்களாக ஹைத்ரோஸாகவே நடிக்கிறீர்களே சலிக்கவில்லையா” என்று கேட்டேன். ‘சாகரா காலகட்டத்திலே நாங்கள் மத்தியால்தான் காலையிலே பல்தேய்ப்பது. ஆனாலும் சலிக்காது’ என்றார் ஹனீஃபாக்கா [சாகரா என்றால் கேரளக்கடற்கரையில் மிக அதிகமாக மீன் கிடைக்கும் ஒருகாலகட்டம்]

சலீம் முகமது ஹௌஷ் என்பது ஹனீஃபாக்காவின் சொந்தப்பெயர். என்னுடைய பிறந்தநாள்தான் அவருக்கும் ஏப்ரல் 22. ஆனால் ஒன்பதுவருடம் மூத்தவர், 1951. கொச்சியில் வெளுத்தேடத்து வீட்டில் ஏ.பி.முகமதுவுக்கும் ஹாஜிராவுக்கும் மகனாகப் பிறந்தார். செயிண்ட் ஆல்பர்ட் கல்லூரியில் தாவரவியலில் பட்டப்படிப்பு படிக்கும்போதே மிகச்சிறந்த தனிமனிதநடிப்பு நிபுணராக அறியப்பட்டார். கொச்சின் கலாபவன் என்ற கலைநிறுவனம் குரல்போலிக்கலை, மேடைநகைச்சுவைக்கலை ஆகியவற்றில் எழுபதுகள் முதல் பெரும்புகழ்பெற்றிருந்தது. அதில் இருந்து திரைக்கு வந்த ஆரம்பகால நடிகர் ஹனீஃபா. லோகி இந்த கலாபவனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். கலாபவன் மணி முதல் திலீப் , பிந்துபணிக்கர் வரை பல கலைஞர்களை லோகிதான் திரைக்குக் கொண்டுவந்தார்

ஹனீஃபாக்கா மிகச்சிறந்த இலக்கிய வாசகர். மாதவிக்குட்டியின் ரசிகர் என்றே சொல்லலாம். தொண்ணூறுகள் வரை சமகால இலக்கியம் மீது கூர்ந்த கவனிப்பு அவருக்கிருந்தது. நடிகராகப் புகழ்பெற்றபின் வாசிப்பு குறைந்தது. அவர் எழுத்தாளராகத்தான் திரைக்கு வந்தார் என்பது பலர் அறியாதது. 1977ல் ஏ.பி.ராஜ் இயக்கிய ’அவள் ஒரு தேவாலயம்’ என்றபடத்துக்கு கதை- திரைக்கதை எழுதியதுதான் அவரது திரைநுழைவு. அதன்பின்னர் 15 படங்களுக்கு கதை- திரைக்கதை எழுதியிருக்கிறார். அவரது எழுத்தில் சிறந்த படம் என்றால் 1984ல் ஜோஷி இயக்கத்தில் வெளிவந்த சந்தர்ப்பம் என்ற படம்தான். மம்மூட்டியும் சரிதாவும் நடித்த இந்த மாபெரும் வெற்றிப்படம் விவாகரத்து குழந்தைகளில் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய அழுத்தமான கலைப்படைப்பு.

1979ல் ஒரு சிறு வேடத்தில் ’அஷ்டவக்ரன்’ என்ற படத்தில் தோன்றினார் ஹனீஃபா. சொல்லப்போனால் லோகியின் கண்கள் அவர்மேல் படுவதுவரை அவரது திரைவாழ்க்கை கௌரவமானதாக இருக்கவில்லை. நண்பருடன் சேர்ந்து சில்க் ஸ்மிதா நடித்த பாலியல்படம் ஒன்றையும் தயாரித்து நடித்திருக்கிறார். அவரது தோற்றம் காரணமாக வில்லன் வேடங்களையே செய்ய வாய்ப்புகள் வந்தன.

1989ல் கிரீடம் வந்தது. அத்துடன் அவர் நகைச்சுவை நடிகராக அறியப்படலானார். விபச்சாரியின் மகனாகப் பிறந்து சிறுவயது முழுக்க விதவிதமான மனிதர்களின் அடிகளையும் வசைகளையும் வாங்கி வளர்ந்து பிழைப்புக்காக கேடியாக வேடமிட்டு உள்ளூர அஞ்சி அஞ்சி வாழும் ஹைத்ரோஸ் இன்றும் மலையாளிகளின் பிரியத்துக்குரிய கதாபாத்திரம். கிரீடத்தின் இரண்டாம்பகுதியாக 1993ல் வெளிவந்த செங்கோலில் அக்கதாபாத்திரத்தை முழுமையாக்கினார் ஹனிஃபாக்கா.

ஹனீஃபாக்காவின் திரைவாழ்க்கையின் வெற்றிகள் அனைத்திலும் லோகி இருந்திருக்கிறார். லோகி எழுதிய பெரும்பாலான படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஹனீஃபாக்கா ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 1985ல் ’ஒரு சந்தேசம்கூடி’ அவரது முதல் படம். தமிழில் ஆறுபடங்களை இயக்கினார். கடைசியாக 1994ல் அவரே எழுதி பீஷ்மாச்சாரியா என்ற படத்தை இயக்கினார். ஆனால் லோகி எழுதி அவர் இயக்கிய ஜாதகம், வாத்ஸல்யம் ஆகிய இருபடங்களையே அவரது சாதனைகளாகச் சொல்லமுடியும். வாத்ஸல்யம் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான கேரள அரசு விருதையும் லோகி இயக்கிய சூத்ரதாரன் படத்தின் நடிப்புக்காக சிறந்த குணச்சித்திரநடிகருக்கான விருதையும் பெற்றார்.

பிரியத்தால் கனிந்த குரலுடன் மட்டுமே லோகி ஹனீஃபாவை பற்றிப் பேசியிருக்கிறார். ‘என்னுடைய சினிமா வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் கலந்தே பார்த்திருக்கிறேன். ஒரு எள்முனையளவுக்குக்கூட தீய அம்சங்கள் இல்லாத மனிதர் ஹனீபா. நான் புனிதர்களை பார்த்ததில்லை. நான் பார்த்தவரையில் ஹனீஃபா ஒரு புனிதர் என்றே சொல்வேன். எனக்குத்தெரிந்த மனிதர்களில் எவர் படத்தையாவது என் பூஜையறையில் வைப்பதாக இருந்தால் அது ஹனீஃபாவின் படம்தான்’

லோகியின் இக்கட்டுகளில் எல்லாம் ஹனீஃபா கூட நின்றிருக்கிறார். தன் பணம் வேறு லோகி பணம் வேறு என்றுகூட அவர் பார்த்ததில்லை. பல தருணங்களை லோகி சொன்னபோது மனிதர்களை மனிதர்களுடன் இணைப்பது வாழ்க்கை மட்டுமல்ல அதற்கும் அப்பால் உள்ள பிறிதொரு பெரும் ஆற்றல் என்றே தோன்றியிருக்கிறது.

மதராசப்பட்டினத்தின் இறுதியில் ஒரு காட்சியில் ஹனீஃபாக்கா படமாக தெரிவார். படமாகவேண்டுமென துடித்த நம்பியின் ஆத்மாவுக்கு பொருத்தமான முடிவு. மலையாள சினிமாவில் ஹனீஃபாக்கா ஓர் அழியாத முகம்தான்

லோகிததாஸ் வாழ்க்கைக்குறிப்பு http://www.jeyamohan.in/?p=5472
லோகி,மலையாளசினிமா:கடிதங்கள் http://www.jeyamohan.in/?p=4686

உப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3 http://www.jeyamohan.in/?p=4544

உப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2 http://www.jeyamohan.in/?p=4523

உப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) http://www.jeyamohan.in/?p=4519

கதையின் காணப்படாத பக்கங்கள்,லோகிததாஸ் http://www.jeyamohan.in/?p=4516

உப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4 http://www.jeyamohan.in/?p=4552

ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2


ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2

ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1 http://www.jeyamohan.in/?p=4190

முரளி


முரளி

http://www.jeyamohan.in/?p=3377 லோகி.5, தனியன்

http://www.jeyamohan.in/?p=3372 லோகி4,

http://www.jeyamohan.in/?p=3352 லோகி. 3, ரசிகன்

லோகி,2. கலைஞன்


லோகி,2. கலைஞன்

முந்தைய கட்டுரைசுஜாதாவை கைவிட்டது எது?
அடுத்த கட்டுரைநமது சினிமா ரசனை