கொடிக்கால்

1

இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சாகித்ய அக்காதமி சார்பில் ஒர் இலக்கியக்கூட்டம் நாகர்கோயிலில் நடந்தது. அதில் நான் பார்வையாளனாக கலந்துகொண்டேன். பேச்சாளர்கள் பேசி முடித்ததும் கேள்விநேரம். ஒரு முஸ்லீம்பெரியவர் எழுந்து மிக நீளமான கேள்வியைக் கேட்டார். நான் அன்றைய மனநிலையில் எவரையும் புண்படுத்துபவன் [இன்று சிலரை மட்டும்.] எழுந்து துடுக்காக ‘ஐயா நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க வரவில்லை. உங்கள் பெயரைப்போட்டிருந்தால் வந்திருக்கவும் மாட்டோம். அறிவிக்கப்பட்டவர்கள் பேசட்டும்’ என்றேன்.

அவர் ‘மன்னிக்கவேண்டும் மன்னிக்கவேண்டும்’ என்று அமர்ந்துகொண்டார். அப்படி அவர் அமர்ந்தது எனக்கு சற்று அதிர்ச்சி அளித்தது. அவ்வாறு மிகையாகப் பேசுபவர்கள் வாதிடத்தான் செய்வார்கள் என்பது என் எண்ணம். அவரது பெயர் கொடிக்கால் அப்துல்லா என்று அறிந்துகொண்டேன். அன்றுமாலை சுந்தர ராமசாமியைச் சந்திக்கச்சென்றேன். அவர் என்னிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. நான் நெடுநேரம் கழித்து அவரது மனநிலைக்குக் காரணம் கேட்டேன். ‘கொடிக்காலை என்னவென்று நினைத்தீர்கள்? அவர் இந்த நகரத்தின் ஆத்மா. அவரை அவமதிப்பது என்னை அவமதிப்பது போல’ என்றார். நான் குன்றிப்போனேன். பின்னர் கொடிக்கால் அவர்களிடம் அதற்காக மன்னிப்பு கோரினேன். அவர் சிரித்தபடி என்னைத்தழுவிக்கொண்டு ‘என்ன இப்படி மன்னிப்பெல்லாம் கேட்கிறீர்கள்? சின்ன வயதில் ராமசாமியும் இதேமாதிரித்தானே இருந்தார்?” என்றார்

சமீபத்தில் கொடிக்கால் அவர்களின் கன்யாகுமரி இல்லத்தில் நானும் கிருஷ்ணனும் ஒருநாள் முழுக்கத் தங்கி அவரது வாழ்க்கையனுபவங்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம். கொடிக்கால் செல்லப்பா என்று அறியப்பட்ட இடதுசாரிச் செயல்பாட்டாளர் எப்படி கொடிக்கால் அப்துல்லா ஆனார் என்பதற்குப்பின் ஒரு பெரிய வரலாறு இருந்தது. குமரிமாவட்டத்தில் கொடிக்கால் என்ற ஊரில் எளிய தலித் குடியில் பிறந்து மிக இளமையிலேயே அனாதையாக ஆகி படிப்போ செல்வமோ இல்லாதிருந்த கொடிக்கால் செல்லப்பா தனக்கென பணமும் அதிகாரமும் சேர்க்க நினைக்கவில்லை. தன்னைச்சூழ்ந்திருந்த மக்களின் நலனுக்காக வாழ்க்கையை அளித்தார். இடதுசாரி இயக்கங்களின் தீவிரப்பணியாளராக ஆனார். சுதந்திரப்போரிலும் அதன்பின் குமரிமாவட்டத்தை தமிழகத்துடன் சேர்ப்பதற்கான தமிழகமீட்புப் போராட்டத்திலும் ஈடுபட்டார். மீண்டும் மீண்டும் சிறைசென்றார். அவரது கல்வி முழுக்க அவர் சிறையில் இருந்து கற்றுக்கொண்டது. ஐந்தாம் வகுப்பு படித்த கொடிக்கால் பல பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார். பல மாநாடுகளில் கருத்துரை ஆற்றியிருக்கிறார். இரண்டு கல்லூரிகளை நிறுவி நடத்திவருகிறார்

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தான் சார்ந்த சமூகத்திற்கு இந்திய ஜனநாயகமும் இடதுசாரி இயக்கங்களும் எதையும் செய்யவில்லை என்ற உணர்வை அடைந்தார். இஸ்லாம் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இளமையிலேயே அவருக்கு ஆன்மீக தேட்டம் இருந்தது. போத்தங்கோடு ஆசிரமத்தில் சின்னாட்கள் இருந்திருக்கிறார். இஸ்லாம் அவருடைய உள்ளத்திற்கு உகந்த மதமாக இருந்தது. அல்லாவின் குரலை எங்கோ தன்னுள் கேட்டார். அவரது மதமாற்றம் குமரிமாவட்டத்தில் அன்று ஓர் அலையை கிளப்பியது. ஆனால் கொடிக்கால் அன்றும் இன்றும் குமரிமாவட்டத்தின் பண்பாட்டில், அதன் ஆன்மீகத்தில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தி

எனக்கு கொடிக்கால் சுந்தர ராமசாமியின் வடிவமாகவே எப்போதும் தெரிகிறார். சில மனிதர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு மேலெழுந்து ஒரு சமூகத்திற்கே தந்தையாகிறார்கள். அத்தகைய மூதாதையரால் வழிநடத்தபடும் சமூகமே வாழும். குமரிமாவட்டத்தின் மூதாதையர் வரிசையில் இன்றிருக்கும் மாமனிதர் கொடிக்கால். இன்று அவரது பிறந்தநாள். நாகர்கோயிலில் நிகழும் விழாவுக்கு என் வாழ்த்துக்கள். இத்தருணத்தில் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கிக்கொள்கிறேன்.

கொடிக்கால்- ஹிந்து கட்டுரை

முந்தைய கட்டுரைஊடகங்களின் கள்ள மெளனம்
அடுத்த கட்டுரைபிரயாகை- கேசவமணி