நாராயண குரு எனும் இயக்கம் -1

naraya

 

நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல எட்டடிக்கு மேலே விலகி நிற்கவில்லை என்றாலே தீட்டு ஆகிவிடும். ஈழவர் புலையருக்கு எட்டடி தள்ளி நிற்க வேண்டும். ஆகவே பொதுப்பாதைகளில் நடமாடுவது, பொது இடங்களுக்கு வருவது போன்ற சமூகச் செயல்பாடுகளெல்லாமே சமூகத்தில் ஏறத்தாழ அனைவருக்குமே மறுக்கப்பட்டன.

சாலைகளும் சந்தைகளும் இல்லாத நிலையில் உற்பத்தியும் வணிகமும் குன்றி கேரள சமூகம் வறுமையின் இருளில் மூழ்கிக் கிடந்தது. அக்கால கேரள சமூகத்தின் பிற்பட்ட சித்திரத்தை வார்ட் அன்ட் கானர், பிரான்சிஸ் புக்கானன், பர்போஸா ஆகியோரின் குறிப்புகளை ஆதாரமாகக் காட்டி தன்னுடைய சாதியமைப்பும் கேரள சமூகமும் என்ற நூலில் வரலாற்றாசிரியரான பி கெ பாலகிருஷ்ணன் விரிவாக நிறுவுகிறார். [1] இந்நூலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இவ்வாசிரியரால் காலச்சுவடு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் அக்கால கேரளச் சமூகத்தின் சித்திரத்தை அளிக்க உதவக்கூடிய இரு முக்கிய நூல்கள் நிர்மால்யா எழுதிய ‘கேரள தலித் போராளி அய்யன்காளி’ மற்றும் அ.கா.பெருமாள் எழுதிய ‘தென்குமரியின் கதை’.

தீண்டாமை உச்சத்தில் இருந்தாலும் கூட நேரடியான அப்பட்டமான சுரண்டல் தடையின்றி நிகழ்ந்தது. கேரளத்தில் அன்று இருவகையான அடிமை முறைகள் இருந்தன. ஒன்று ஒருமனிதன் முற்றாகவே பிறிதொருவனுக்கு அடிமையாக இருப்பது, அவனால் விற்று வாங்கப்படுவது. இன்னொன்று மற்ற காலங்களில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து தேவை ஏற்படும்போது மட்டும் நிலப்பிரபுக்களுக்கும் ஆலயங்களுக்கும் மன்னர்களுக்கும் இலவச உழைப்பு [ஊழியம்] அளிப்பது. உண்மையில் இரண்டாம் வகை அடிமைமுறையே மேலும் கொடுமையானது. இதில் அடிமை உழைப்பு உண்டு, அடிமைக்கு எந்த உரிமையாளரும் பொறுப்பேற்றுக் கொள்வது இல்லை. புலையர் பெரும்பாலும் முதல்வகை அடிமைகள். ஈழவர் இரண்டாம்வகை அடிமைகள்.

அத்தகைய சூழலில்தான் நாராயணகுரு பிறந்தார். அவரது பேரியக்கமே கேரளத்தை ஒரு நவீன சமூகமாக ஆக்கியது

நாராயணகுரு

 

நாராயணகுரு1854ல் திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பழஞ்ஞி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை மாடன் ஆசான், தாய் குட்டியம்மா. மிகச் சிறு வயதிலேயே வறுமையில் வாடினாலும் அவருக்கு கல்வி கற்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரம் சாலைத் தெருவில் வாழ்ந்த தைக்காடு அய்யாவு என்ற தமிழரின் தொடர்பு கிடைத்தது. அவர் ஒரு அடிமுறை ஆசான், யோக ஆசிரியர் மற்றும் வேதாந்தி. பிரிட்டிஷ் ரெசிடென்சியில் சூப்பரிண்டண்டாக வேலை பார்த்தார். அவருக்கு சாலைத் தெருவில் ஒரு கடை இருந்தது. அங்கு அமர்ந்து தமிழை ஆழ்ந்து கற்கவும் திருமந்திரம் போன்ற நூல்களை அவரிடம் பாடம் கேட்கவும் குருவால் முடிந்தது.

தன் இருபத்து மூன்றாவது வயதில் துறவறம் பூண்ட குரு பிறகு முப்பது வயது வரை எங்கிருந்தார் என்பது தெரியவில்லை. குமரிமாவட்டத்தில் மருத்துவாழ் மலையில் அவர் சிலகாலம் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. அவரை ஒரு வாலிப யோகியாக பார்த்த சிலரது பதிவுகள் பிற்காலத்தில் கிடைத்துள்ளன. தீண்டப்படாத சாதியினருக்கு கல்வி மறுக்கப்பட்ட அக்காலத்தில் குரு வேதங்களையும் உபநிடதங்களையும் தரிசனங்களையும் ஆழ்ந்து கற்றது வியப்புக்குரிய செய்தியே. பாரதத்தில் சாதிக்கு அதீதமாக தடைகளற்ற ஞானம் புழங்கிய ஓர் உலகம், துறவு பூண்டு அலைந்த அன்னியர்களின் உலகம் அன்றிருந்தது என்பதற்கான ஆதாரம் அது. ரிஷிமூலம் கேட்கப்படாத ஒரு சமூக அமைப்பும் அன்றிருந்தது போலும்.

1888-ல் திருவனந்தபுரம் அருகேயுள்ள அருவிக்கரை என்ற சிற்றூருக்கு திரும்பி வந்த நாராயணகுரு அங்கே ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து சிவலிங்கமாக பதிட்டை [பிரதிஷ்டை] செய்தார். ஈழவனுக்கு பிரதிஷ்டை உரிமை உண்டா என்ற வினாவுக்கு ‘நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிவன் அல்ல ‘ என்று பதில் சொன்னார் [பாரதி உட்பட பலர் பதிவு செய்தது போல ‘நான் நிறுவியது ஈழவ சிவன் ‘ என்றல்ல] அந்த கோயில் வாசலில் ‘சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது ‘ என்று எழுதி வைத்தார்.

அன்றைய கேரளக் கலாச்சார உலகில் பெரும் புரட்சியாக அது கருதப்பட்டது. அவ்விபரத்தைக் கேள்விப்பட்டு மைசூரில் டாக்டராக வேலை பார்த்து வந்த டாக்டர் பல்பு குருவை காண வந்தார். அவரது உண்மைப்பெயர் பத்மநாபன். ஆனால் தீண்டப்படாத மக்கள் கடவுள் பெயர் சூட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்கேற்ப அப்பெயர் ‘ஜன்மி’-யால் [நில உடைமையாளர்] மாற்றப்பட்டது. அவர் பி.ஏ. படிப்பை ஒரு பாதிரியாரின் உதவியுடன் முடித்தபோது கேரள மன்னர் அரசு அவருக்கு வேலை அளிக்க மறுத்தது. மைசூருக்கு சென்று அவர் மருத்துவப்பயிற்சி பெற்று உயர்பதவிக்கு வந்தார். கேரளத்தில் புழுக்களைவிட தாழ்ந்தவர்களாக வாழ்ந்த மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினார். அவ்வாறாக கேரள கலாசார வாழ்வை மாற்றியமைத்த பேரியக்கமான எஸ்.என்.டி.பி [ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா] 1903 ல் திருவனந்தபுரத்தை மையமாக்கி அருவிப்புறத்தில் நிறுவப்பட்டது. 1928-ல் குரு தனக்கு பின்பு தன் பணிகளை செய்யும் அமைப்பாக ஒரு சன்யாசி மடத்தை உருவாக்கினார். தர்ம சங்கம் என்ற அவ்வமைப்பு வற்கலை என்ற ஊரில் சிவகிரி என்ற மலைமீது துவங்கப்பட்டது.

நாராயண குருவின் அணுகுமுறை மிக மிக நேரிடையானது. எதிர்மறை மனநிலைக்கு அதில் சற்றும் இடமில்லை. எண்பது வயது வரை வாழ்ந்த அவர், மிகக் கொந்தளிப்பான பல சூழல்களை சந்தித்த அவர், தன் வாழ்நாள் முழுக்க எதைப்பற்றியும் எதிர்மறையாக எதுவுமே சொன்னதில்லை. எவரையுமே கண்டித்ததில்லை. நாயர்கள் தங்களைத் தீண்டப்படாதவர்களாக நடத்துகிறார்கள் என்று குமுறிய ஈழவ இளைஞர்களிடம் அதை தடுக்க ஒரே வழி புலையர்களை நாம் அணைத்து சேர்த்துக் கொள்வதே என்று அவர் உபதேசித்தார். இது குருவின் போக்கு என்ன என்பதை காட்டும் உதாரண சம்பவமாகும். அவர் பொதுவாக உபதேசம் செய்வதில்லை. பேருரைகள் ஆற்றும் வழக்கமே இல்லை. தனிப்பட்ட முறையில் பேசும்போது நகைச்சுவை மிக்க சில வரிகள் மட்டுமே சொல்வார். முக்கியமான சமயங்களில் அவர் சொல்ல சில வரிகளைப் பிறர் எழுதியெடுத்து அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

தீண்டாமை முதலிய கொடுமைகள் ஒழிய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை என்ன? அதை ‘தீண்டாமைக்கு அதீதமானவர்களாக தங்களை கல்வி செல்வம் ஆன்மீகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்ளுதல், ஆதிக்க சக்திகளை விட கல்வி, செல்வம், ஆன்மீக வல்லமை மிக்கவர்களாதல் ‘ – என சுருக்கமாக வகுத்துக் கூறலாம். எஸ்.என்.டி.பி யின் ஆரம்பகால செயல்பாடுகள் இரு தளங்களில் தீவிரம் கொண்டன.

நாராயணகுரு முதலில் உருவாக்கிய மாற்றம் அனைவரும் கூடும் பொது இடங்களாக கோயில்களை அமைத்தல் என்பதை கேரளச்சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மக்கள் அனைவரும் சாதாரணமாகக் கூடும் பொது இடம் என்பது கேரள சமூக அமைப்பில் அன்றுவரை இல்லாத ஒன்றாகும். ஈழவர்களும் பிற சாதியினரும் தங்கள் குலவழிபாட்டு முறையையே அன்று கொண்டிருந்தார்கள். கடவுள்கள் பெரும்பாலும் அந்தந்த குடும்பத்துக்கு சொந்தமானவை. நாராயணகுரு அவரே நேரில் சென்று அந்தச் சிறுதெய்வங்களை பிடுங்கி அகற்றினார். சிறுதெய்வ வழிபாட்டை முழுக்க ஒழித்துக்கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படி ஆலயங்களை அமைத்து அங்கே சிவன் விஷ்ணு தேவி போன்ற பெருந்தெய்வங்களை நிறுவினார். தெற்குக் கேரளத்தில் கூர்க்கஞ்சேரி, பெரிங்கோட்டுகரை, வடக்கே தலைச்சேரி கண்ணனூர், கோழிக்கோடு, ஆலுவா கர்நாடகாவில் மங்களூர் தமிழ் நாட்டில் நாகர்கோவில், ஈழத்தில் கொழும்பு முதலிய ஊர்களில் அவர் நிறுவிய முக்கியமான கோவில்கள் உள்ளன.

தற்காலப் பார்வையில் அவர் நாட்டார்க் கடவுள்களை அகற்றிவிட்டு பிராமணியப் பெருந்தெய்வங்களை நிறுவினார் என்பது வேறுமாதிரி படக்கூடும். ஆனால் அதற்கு அன்றிருந்த நோக்கங்களும் அதன் விளைவுகளும் மாறுபட்டவை. நாயர்கள் கூட கருவறைக்கு அருகே போக முடியாத சமூகச்சூழலில் குரு அந்தப் பதிட்டைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயப்பிரவேசம் மறுக்கப்பட்ட மக்களுக்கு, அதற்கு தங்களுக்கு தகுதியில்லை என்று நம்பிய மக்களுக்கு அது அளித்த தன்னம்பிக்கை சாதாரணமல்ல. அவ்வாலயங்களில் பூஜைகளையும் அன்றைய தீண்டப்படாத மக்களே செய்தனர். மலையாளத்திலும் அழகிய சம்ஸ்கிருதத்திலும் குரு அக்கோவில்களுக்கு பூஜைமந்திரங்களை உருவாக்கி அளித்தார். அவற்றில் தெய்வ சதகம், சுப்ரமண்ய சதகம், காளீநாடகம், சாரதா தேவி துதி முதலியவை மிக உக்கிரமான கவித்துவம் கொண்டவை [காளீநாடகம் சமீபத்தில் சுவாமி வினய சைதன்யாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்டரேச்சர் இதழில் வெளிவந்து பாரத அறிவுஜீவிகள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது]. இவ்வாறாக அவ்வாலயங்கள் சமூகப்பொது இடங்களாக மாறின.

குலதெய்வங்களை இல்லாமல் செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கை முறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன. உதாரணமாக கள், மாமிசம் ஆகியவற்றை படைத்து உண்டு குடித்து களிப்பதே இவ்வழிபாட்டின் முக்கியமான கூறு. இதன்மூலம் உருவாகும் பூசல்கள் வழிபாட்டின் பகுதியாக கணிக்கப்பட்டன. இதனாலேயே பெண்களும் குழந்தைகளும் இவற்றில் பங்குகொள்வதுமில்லை. சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்தது வழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார். வன்முறை மேலோங்கிய பலிகொள்ளும் தெய்வங்களின் இடத்தில் கல்விக்கடவுள் சரஸ்வதி வருவது முக்கியமான மாற்றமே. குடிகளியாட்டம் ஆகியவற்றாலான வழிபாட்டுக்குப் பதிலாக பிரார்த்தனையும் அறிவார்ந்த தத்துவ விவாதங்களும் கொண்ட வழிபாட்டு முறை உருவானது. அதாவது வழிபாடு ஒரு நவீன சமூகக்கூட்டுச் செயல்பாடாக மாற்றப்பட்டது.

உண்மையில் ஈழவர்களின் மதம் பெளத்தமாகவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தது. பெளத்தம் அழிந்த பிறகே அவர்கள் சிறுதெய்வ வழிபாட்டுக்கு மீண்டார்கள். நாராயணகுருவின் இயக்கம் பெளத்த வழிபாட்டுமுறையை மீண்டும் கொண்டுவந்தது என்று சொல்வதே சிறப்பு. நாராயண குரு தன்னை பெளத்தன் என்று சொல்லியதுண்டு. அவர் முன்வைத்த அத்வைதம் யோகாசார பெளத்தத்தின் பிறிதொரு வடிவமே. நாராயணகுருவை நவபுத்தன் என்று சொல்பவர்கள் உண்டு.

குலதெய்வ ஒழிப்பின் முக்கியமான இன்னொரு தளம் தமிழகத்தில் பரவலாக கவனிக்கப்படவில்லை, கேரளத்தில் பி.கெ.பாலகிருஷ்ணன் போன்றோர் இதைப் பேசியுள்ளனர். உலக அளவில் பார்த்தால் தெய்வ உருவகங்கள் மூன்று வகைப்படும்.

  1. செயல்தளத் தெய்வங்கள்
  2. முழுமுதல் தெய்வம்
  3. தத்துவார்த்த தெய்வம்.

செயல்தளத்தெய்வங்கள் தொல்பழங்காலப் பழங்குடி வாழ்க்கையிலிருந்து முளைத்து நாட்டார் பண்பாட்டில் வேரூன்றி வளர்பவை. பழங்குடிமனம் தன் செயல்பாடுகள் மூலம் கண்டடைந்த ஆழமான இறையனுபவங்களின் வெளிப்பாடுகள் அவை. ஆகவே இவை எண்ணற்றவை, ஒழுங்கற்றவை. இவை மிகக் குறுகிய எல்லைக்கு உட்பட்டவை. ஒரு குறிப்பிட்ட செயலுக்கு, ஒரு குறிப்பிட்ட குலத்துக்கு, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு என வரையறுக்கப்பட்டவை இவை. வரப்புக்கு ஒருதெய்வம் வாய்க்காலுக்கு வேறு தெய்வம் என்று இவை காணப்படுகின்றன.

செயல்தளத்தெய்வங்களில் சில காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து உருவானவையே பெருந்தெய்வங்கள் எனலாம். பெருமதங்களின் உருவாக்கங்கள் இவை. பெருமதங்கள் தெய்வங்களை ஒன்றோடொன்று இணைத்தும், சடங்குகளை மறுவிளக்கம் அளித்து தொகுத்தும், தெய்வங்களை முழுமைப்படுத்தியபடியே சென்று ‘முழுமுதல் தெய்வம் ‘ என்ற கருத்தை அடைகின்றன. இதன் போக்கில் தத்துவமும் புரானங்களும் உருவாகிப் பெருகுகின்றன. சிறுதெய்வம் மானுட வாழ்க்கைக்குள் வாழ்க்கையின் ஒருபகுதியாக இருக்கையில் முழுமுதல் தெய்வம் உலகுக்கு அப்பால் நின்று உலகை இயக்குவதாக உள்ளது. அது பிரபஞ்சத்தின் உறுப்பு அல்ல, பிரபஞ்சத்தின் மூல காரணமாகவும் பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டு சக்தியாகவும் உள்ளது. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிறது அது.

மனித மத வரலாற்றில் சிறுதெய்வங்களில் இருந்து முழுமுதல்தெய்வம் நோக்கிய நகர்வு மிக முக்கியமான ஒரு பாய்ச்சல் ஆகும். இன்றும்கூட சமூகப் படிநிலைகளில் கீழ்த்தளத்தில் நிற்கும் இனக்குழுக்களே சிறுதெய்வ வழிபாட்டில் அதிகமாக ஈடுபட்டுள்ளன. படிநிலை மேலே செல்லச் செல்ல முழுமுதல் தெய்வ வழிபாடு காணப்படுகிறது. இது ஒரு முக்கியமான உண்மையைக் காட்டுகிறது. ஒரு சமூகம் முழுமுதல்தெய்வத்தை அடையும்போது அதன் வாழ்க்கைமுறையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் பல உருவாகின்றன. அவை அச்சமூகத்தை பொருளியல் சார்ந்தும் கலாச்சாரம் சார்ந்தும் முன்னகரச்செய்கின்றன. அவை என்ன என்பதை விரிவாகப் பேசமுடியும். குறிப்பாகச் சொல்லவேண்டியது இதுதான். சிறுதெய்வங்களை வழிபடும் சமூகங்கள் தங்கள் இனக்குழு அடையாளத்துக்குள் கட்டுப்பட்டு தங்களுக்குள் சுருண்டுகொள்ளும் தன்மை கொண்டுள்ளன. நம்பிக்கைகள் சார்ந்தே அவற்றின் வழிபாடு இருப்பதனால் அவை காலத்துக்கு ஏற்ப அவை மாறுவது இல்லை. முழுமுதல் தெய்வத்தை அடையும் சமூகங்கள் தத்துவார்த்தமாக வழிபாட்டை விளக்க ஆரம்பிப்பதனால் மாற்றங்களை உள்வாங்க ஆரம்பிக்கின்றன. முக்கியமாக சமானமான பிற இனக்குழுக்களுடன் அவை இணையவோ ஒருங்கிணைந்து செயல்படவோ முடிகிறது. அதாவது ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பிரிவதற்குரிய மனநிலை விலகி ஒருங்கிணைவதற்கான மனநிலை உருவாகிறது.

இந்தியச் சூழலில் முழுமுதல் பெருந்தெய்வங்களை அளிக்கும் மதங்கள் ஐந்து. சைவம், வைணவம், சாக்தேயம், கிறித்தவம், இஸ்லாம். தென்தமிழ்நாட்டில் கிறித்தவ மதம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமுதல்தெய்வத்தை அளித்து அவர்களின் பொருளியல் சமூக வாழ்வில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்கியது என்பது சமீபகால வரலாறு. சைவமும், வைணவமும், சாக்தமும் அதற்கு முந்தைய காலகட்டங்களில், குறிப்பாக பக்தி இயக்க காலகட்டத்தில், அப்பணியைச் செய்தன. பக்தி இயக்கமே இந்தியக் கலாச்சாரம் என நாம் காணும் பொதுவான கூறுகளில் பெரும்பாலானவற்றை உருவாக்கியது. நம்மாழ்வார் தொடங்கி ராமானுஜர் வரை, நாயன்மார் காலம் தொடங்கி சித்தர்களின் காலம் வரை பக்தி இயக்கத்தின் பணி முழுமுதல்தெய்வம் என்ற கருத்தை உருவாக்கி எளிய மக்களிடையே கொண்டு செல்வதாகவே இருந்தது.

பக்தி இயக்கம் தேய்ந்து மறைந்தபோது அந்த பணியும் நின்றது. சாதி அமைப்பு மேலும் கெட்டிப்பட்டது. பக்தி இயக்க நாயகர்களான ராமானுஜர், மத்வர், பசவர் போன்றோரால் உருவாக்கப்பட்ட சாதிமறுப்புச் சமூகக் குழுக்கள் கூட புதிய சாதிகளாக மாறின. எளிய மக்களுக்கு முழுமுதல்தெய்வங்களை வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் சமூக அரசியல் சக்தியாக திரள்வதும் தடுக்கப்பட்டது. நாராயணகுரு ஒருவகையில் துஞ்சத்து எழுத்தச்சனின் அடுத்த கட்டம் ஆவார். பக்தி இயக்கத்தின் சமூக அரசியல் மாற்றத்தின் குரலை கேரளத்துக் கொண்டு வந்தவர் எழுத்தச்சன். எளிய நாட்டார் வாய்மொழி சந்தத்தில் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எழுதி முழுமுதல்தெய்வத்தை கேரள மண்ணில் நிறுவியவர் அவர். மலையாளமொழி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி, கேரள தேசியத்தின் விதை, கேரள எளிய மக்களின் முதல் பிரதிநிதி, கேரள சமூகத்தின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர் எழுத்தச்சனே என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் குறிப்பிடுவது இதனாலேயே. [4]

எழுத்தச்சன் உருவாக்கிய மாற்றம் உறைந்து போய் மறைந்துவிட்ட நிலையில் அதை புத்துயிர் பெறச்செய்தவர் நாராயணகுரு. கேரள மறுமலர்ச்சியின் நாயகனாக அவரை இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் காண்பதன் காரணமும் இதுவே. ஒருவகையில் எழுத்தச்சன் தொடங்கி வைத்ததை நாராயணகுரு முழுமை செய்தார். எளியமக்களுக்கு முழுமுதல்தெய்வத்தை அவர் அளித்தது அத்தகைய மாபெரும் சமூகப் புரட்சி ஒன்றின் தொடக்கம் ஆக அமைந்தது. நாராயண குருவைப் பொறுத்தவரை ஒரு தெய்வம் என்பது மனித சமத்துவநோக்கின் முதல்படியே. 1921 ல் ஆலுவாயில் சகோதரன் அய்யப்பனின் முயற்சியால் கூட்டப்பட்ட உலக சகோதரத்துவ மாநாட்டில் குரு வெளியிட்ட ‘ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு ‘ என்ற வரி அவரது மையமான உபதேசமாக கொள்ளப்படுகிறது. அம்மாநாடே கேரளத்தில் மனித சமத்துவத்துக்கான செய்தியை மக்கள் மத்தியில் ஆழப்பதித்தது. மாப்பிளா கலவரங்கள் என்றபேரில் பெரும் மதக்கலவரங்கள் கேரளத்தில் எழுந்த காலகட்டம் இது என்பதை நாம் நினைவு கூரவேண்டும்.

தெய்வ உருவகங்களில் மூன்றாவது, உச்சமானது தத்துவார்த்த தெய்வம் ஆகும். ரிக்வேதத்தில் ‘பிரம்மம் ‘ என்ற கருத்துருவமாக நாம் தூய தத்துவார்த்த தெய்வ உருவகத்தைக் காண்கிறோம். பொதுவாக கீழை மதங்களிலேயே தத்துவார்த்த தெய்வ உருவகங்கள் உள்ளன. கன்பூஷியமதம், யோகாசார பெளத்தம், ஜென் பெளத்தம், அத்வைதம் ஆகியவற்றின் இறை உருவகம் தூய தத்துவக் கருத்துநிலையாக உள்ளது. முழுமுதல்தெய்வம் என்ற கருத்தே தத்துவார்த்த உருவகம்தான். ஆனால் அது திட்டவட்டமானதும் கூட. தத்துவார்த்தத் தெய்வ உருவகம் மிக அருவமானது. சாதாரணமான பார்வையில் அதை தெய்வம் என்றே சொல்ல முடியாது. பிரபஞ்சம் குறித்த ஒருவகை புரிதல் மட்டும்தான் அது. முழுமுதல்தெய்வம் என்ற உருவகத்தின் அடுத்தபடி, மேலும் நுண்மையான தளம், தத்துவார்த்த தெய்வம் அல்லது கருத்துருக் கடவுள் என்பதே.

நாராயணகுரு முழுமுதல் தெய்வத்தை அளித்து அடுத்தபடியாக தத்துவார்த்தமான தெய்வத்தை முன்வைத்தார். நீண்டகால அடிபப்டையில் மிக நுட்பமாக இதை குரு நிகழ்த்தினார் எனலாம். அவர் நிர்மாணித்த கோயில்கள் இதற்கு சிறந்த உதாரணமாகின்றன. முதலில் சிவலிங்கத்தையும் பிறகு சுப்ரமணியர், ஜகன்னாதர் போன்ற கடவுள்களையும் பதிட்டை செய்த குரு அடுத்த கட்டத்தில் விளக்கையும் பிறகு ‘சத்யம் தர்மம் தயை ‘ என்ற சொற்களையும் கருவறை தெய்வமாக பதிட்டை செய்தார். இறுதியில் சேர்த்தலை களவங்கோடு கோவிலில் மூலவராக நிலைக்கண்ணாடியை நிறுவியபிறகு மேலும் கோயில்கள் வேண்டாம் கல்விச்சாலைகளே போதும் என்று சொல்லிவிட்டார். அவர் அருவிக்கரையில் கோயிலை நிறுவியபோதே சொன்ன கருத்துதான் இது. ஆனால் அதன் பிறகு பல படிகளிறங்கி வந்து கோயில்கள் நிறுவி மீண்டும் அரை நூற்றாண்டுக்கு பிறகு துவங்கிய தளத்துக்கே வந்து சேர்ந்தார். மக்களை அங்கு கொண்டு சேர்ப்பதே அவரது நோக்கம் என்று ஊகிக்கலாம். தன் ‘நாராயணகுரு தொகைநூல்’-லில் பி.கெ.பாலகிருஷ்ணன் [5] இவற்றை விரிவாக விளக்கியுள்ளார்.

இந்தக் கோணத்தில் பார்த்தால் நாராயணகுருவின் முக்கியமான சிறப்புக் கூறான நடைமுறை விவேகம் தெரியும். இந்திய சமூகவிடுதலைக்காகப் போரிட்டவர்கள் அனைவருமே எளிய மக்களுக்கு அவர்களுடைய பழங்குடிக் குலதெய்வங்களை தவிர்த்து முழுமுதல் தெய்வங்களை நோக்கிச் செல்ல வழிகாட்டியுள்ளனர். அய்யா வைகுண்டர் போன்றவர்கள் சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்களை முன்வைத்தனர். சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ண இயக்கம், டாக்டர் அம்பேத்காரின் புதிய பெளத்த இயக்கம், வள்ளலாரின் அருட்பெரும்ஜோதி இயக்கம் ஆகியவை தூய கருத்துருக் கடவுள்களை முன்வைத்தன. முந்தையது நவீனக் கல்வி பெற்ற ஒருசாராருக்கு உவப்பாக இருக்காது. பிந்தையதை எளிய மக்களால் எளிதாகப் பின்தொடர முடியாது. நாராயண குரு நடுவேயுள்ள பாதையை தெரிவு செய்து முதல் தளத்தில் தொடங்கி இரண்டாம் தளம் நோக்கி செல்கிறார்.

நாராயணகுருவின் அடுத்த முக்கியமான பணி கல்வித்துறையில்தான் என்று சொல்லலாம். தற்காலத்தில் கூட கேரளத்தில் மிக அதிகமாக கல்வி நிறுவனங்களை நடத்துவது நாராயணகுரு துவக்கிய பேரியக்கமே. பள்ளிகளும் கல்லூரிகளும் துவங்குவதும் படிக்கும் உரிமைக்காக போராடுவதும் அவ்வியக்கத்தின் ஆரம்பகால பணிகளில் முக்கியமானதாக இருந்தது. ஈழவ சமூகமே படிப்புமிக்க சமூகமாக மாறியது. பொதுவாக கேரளத்தின் கல்விநிலை புரட்சிகரமாக மாறியது. தற்காலத்தில் நமது தேசத்தில் முழு எழுத்தறிவுள்ள ஒரே மாநிலமாக அது உள்ளதற்கு காரணமும் நாராயணகுருவின் அறிவியக்கமே. மலையாளிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்வதும், அவர்கள் செல்வத்துக்கு முதலீடாக உள்ளதும் அவர்களுடைய கல்வியே.

நாராயணகுரு அறிவின் அதிகாரத்தை உய்த்துணர்ந்த சமூக சீர்திருத்தவாதி. மீண்டும் மீண்டும் ஆங்கிலக்கல்வியை குரு பெரிதும் வலியுறுத்தினார். தன் முக்கிய மாணவரான நடராஜ குருவை ஐரோப்பாவுக்கு அனுப்பி மேலை தத்துவத்தில் ஆழ்ந்த பயிற்சிபெற அவர் ஏற்பாடு செய்தது குறிப்பாகக் கவனிக்கத்தக்கது. ஆங்கிலம் அதிகாரத்தின் மொழியாக இருப்பது மேலும் பலகாலம் தொடரும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தை உலகை அறியும் ஊடகமாக அதன் மூலம் தாங்கள் வாழும் எல்லைகளை மீறிச்செல்லும் வாகனமாக குரு எண்ணினார். நவீனகாலகட்டத்தின் அறிவின் மொழி அது என்பது அவரது எண்ணமாக இருந்தது

ஆனால் சம்ஸ்கிருதத்தின் முக்கியத்துவம் குறித்த தெளிவான புரிதல் அவருக்கு இருந்தது. நாராயணகுருவுக்கு சம்ஸ்கிருததுடன் இருந்த உறவு குறித்து விரிவாக விவாதிக்கவேண்டும். பொதுவாக ஈழவ சமூகத்தில் சிறிய எண்ணிக்கையிலான சிலருக்கு சம்ஸ்கிருத அறிவு இருந்தது. அவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தைக் கற்கும் பொருட்டு குலவழக்கமாக அதைக் கற்றவர்கள். ஆனால் மதநூல்களிலோ தர்மநூல்களிலோ அவர்களுக்குப் பயிற்சி இருக்கவில்லை. நாராயணகுரு ஆங்கிலக் கல்வியை அனைவரும் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தாழ்த்தபப்ட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அறிவார்ந்த தளங்களில் செயல்படும் முக்கியமானவர்கள் சம்ஸ்கிருத ஞானம் அடையவேண்டும் என்று எண்ணினார். சம்ஸ்கிருத ஞானம் என்னும்போது குரு உத்தேசித்தது மதநூல்களிலும் தர்மநூல்களிலும் பெறும் ஆழமான பயிற்சியையையே.

காரணம் இந்திய சமூகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு உள்ள இடம் குறித்த தெளிவான ஒரு புரிதல் அவருக்கு இருந்தது. மதஞானமும் தர்மஞானமும் சம்ஸ்கிருதத்தில் அமைந்ததும் சம்ஸ்கிருதம் பாரதம் முழுமைக்குமான பொது ஊடகமாக அமைந்ததும் நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட நிகழ்வுகள். ஆகவே சம்ஸ்கிருதத்தை மறுப்பது வரலாற்றை மறுப்பதுதான். நாராயணகுருவின் வழிமுறை எதிர்ப்பதும் புறக்கணிப்பதும் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லவேண்டும். கற்பதும் வென்றெடுப்பதும் ஆதிக்கம் பெறுவதுமே அவரது வழிமுறைகள். புறக்கணிப்பதன் மூலம் மத அதிகாரம் அதை ஏற்கனவே கையில் வைத்திருப்பவர்களிடமே தங்கிவிடவே வழிவகுக்கிறோம் என்பதே அவரது கருத்து. சம்ஸ்கிருதத்திலும் வேதவேதாந்தங்களிலும் தர்மநூல்களிலும் ஈழவர்கள் முதன்மை பெறுமளவுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்பதே நாராயணகுருவின் எண்ணமாக இருந்தது.

நாராயணகுருவின் காலம் முதல் தொடங்கி இன்றுவரை சம்ஸ்கிருதக் கல்வி ஈழவ சமூகத்தின் முக்கியமான கூறாக இருந்து வந்துள்ளது. அதன் மூலம் குரு உத்தேசித்த மதஞானத்தையும் மத அதிகாரத்தையும் அச்சமூகம் அடையவும் செய்தது. பிற பகுதிகளில் பிற்பட்ட சமூகங்கள் பொருளியல் அடிப்படையில் ஆதிக்கம் பெற்றும் பெறமுடியாத மத, கலாச்சார அதிகாரத்தை ஈழவ சமூகம் அடைந்தது இதனாலேயே எனலாம். மேலும் சம்ஸ்கிருதக் கல்வி பொதுவாக இலக்கியதளச் செயல்பாடுகளிலும் ஈழவசமூகத்தில் முக்கியமான தூண்டுதலாகவும் வலிமையாகவும் அமைந்து வருவதும் கண்கூடு. நாராயணகுரு உருவாக்கிய இந்த சம்ஸ்கிருதக் கல்வி ஆர்வத்தை பாரதியார் [6] தன் கட்டுரைகளில் மிகுந்த ஆர்வத்துடன் எழுதியுள்ளார்.

சமூக அதிகாரத்தில் செல்வத்தின் இடம் குறித்து நாராயணகுருவுக்கு இருந்த புரிதல் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. தன் சேவைக்காலத்தில் முப்பதுவருடம் குரு தொழில் அபிவிருத்தி குறித்து மீண்டும் மீண்டும் பேசியுள்ளார். ஈழவ சமூகத்தில் விரல்விட்டு எண்ணத்தக்க சில குடும்பங்கள் பெருநில உடைமை காரணமாக செல்வ வளத்துடன் இருந்தன. ஐதீகம் சார்ந்த காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டன. இக்குடும்பங்கள் எல்லாமே பெளத்தமதப் பின்னணியும் கொண்டவை. பாலி மொழி ஏடுகள் பல இவர்கள் வீடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. ஈழவர்கள் பெளத்தர்களாக இருந்து பெளத்தம் வீழ்ச்சி அடைந்தபோது நிலம் இழந்து தீண்டப்படாதவர்களாக ஆகியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இவை. இக்குடும்பங்களை தொழில்துறையில் இறங்க நாராயணகுரு வற்புறுத்தினார். கேரளத்தின் கயிறு ஓடு தொழில்கள் உருவாக அவரே காரணம்.

ஆனால் நிகழ்காலத்தில் நின்று பார்க்கும்போது கேரள அறிவுத்துறையில் குரு உருவாக்கிய மாற்றமே மிக முக்கியமான பங்களிப்பு என்று படுகிறது. கேரள பொதுவுடைமை அரசியல் நாராயணகுருவில் துவங்குகிறது என ஈ.எம்.எஸ் எழுதினார். [‘நாராயணகுரு தொகைநூல் ‘ -பி. கெ. பாலகிருஷ்ணன்] மூன்று தலைமுறைகளாக நாராயணகுருவை தொடர்ந்து அறிஞர்கள் பல துறைகளிலும் உருவானபடியேயிருந்தார்கள். நாராயணகுருவின் நேரடி சீடர்கள் என மூவரை முக்கியமாக சொல்லலாம். மகாகவி குமாரன் ஆசான் நாராயணகுருவின் முதல் சீடர். மிகச் சிறு வயதிலேயே எஸ்.என்.டி.பி இயக்கத்தின் செயலராகி நெடுங்காலம் பணியாற்றியவர். பாரதி தமிழுக்கு யாரோ அந்த நிலைதான் அவருக்கு மலையாளத்தில். நவீனக் கவிதை, இதழியல் இரண்டுமே ஆசானிலிருந்து தொடங்கியவை. அவரது ‘கருணை’, ‘சண்டால பிட்சுகி’, ‘துரவஸ்தை’ முதலிய குறுங்காவியங்கள் கேரள இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு களம் அமைத்தவை. ஆசானின் நடை நேரடியானதும் உணர்ச்சிகரமானதுமாகும். அது எழுப்பிய அலை மிகப்பெரியது. எழுதப்பட்ட காலம் முதல் இன்றுவரை நாலணா ஒரு ரூபாய் பிரசுரங்களாக அவரது கவிதைகள் லட்சக்கணக்கில் விற்கப்படுகின்றன என்பதை குறிப்பாகச் சொல்லவேண்டும்.

நாராயணகுருவின் அணுக்கத்தொண்டரும் அடிப்படைக் கருத்துக்களில் அவரை நிராகரித்தவருமான சகோதரன் அய்யப்பன் அடுத்த முக்கியச் சீடர். கேரளத்தில் நாத்திக சிந்தனையை நிறுவிய முன்னோடி அவரே. புலையர்களை அணிதிரட்டி ஆரம்பகட்ட கிளர்ச்சிகளை நடத்தியவர் அய்யப்பன். அக்காரணத்தாலேயே ‘புலையன்’ அய்யப்பன் என்று அறியப்பட்டவர். மூன்றாமவர் நடராஜ குரு.

கேரளத்தின் முக்கியமான மூன்று நாளிதழ்களின் ஸ்தாபகரும், வரலாற்றாசிரியருமான சி.வி.குஞ்ஞிராமன் நாராயணகுருவின் முக்கியமான சீடர்களில் ஒருவர் அவரது மகன்தான் மார்க்சிய தத்துவ வரலாற்றாசிரியரான கெ.தாமோதரன். கேரள சுதந்திரப்போராட்டத்தின் முதல்கட்ட தலைவர்களில் ஒருவரான டி.கெ.மாதவன் நாராயணகுருவின் நேரடி சீடர்தான். அவரால் நடத்தப்பட்டது தான் வைக்கம் போராட்டம். அப்போராட்டத்தில் ஈ.வே.ரா. பங்கேற்றார். [தமிழக வழக்கப்படி அது மிகைப்படுத்தப்பட்டு அவர் ‘வைக்கம் வீரராக’ ஆக்கப்பட்டதெல்லாம் மிகவும் பிற்பாடுதான்.] குறிப்பிட்ட பட்டியலில் கேரளத்தின் ஆன்மீக கலாச்சார அறிவுத்துறை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் பேரை சேர்த்துச் சொல்லிவிட முடியும்.

கேரள பண்பாட்டுவரலாற்றில் ஆழமான பங்களிப்பை ஆற்றிய கேரள கெளமுதி இதழ் குழுமம் நாராயணகுருவின் மாணவரான சி.வி.குஞ்சுராமனால் உருவாக்கப்பட்டதாகும். இதில் எழுதி உருவான படைப்பாளிகளின் ஒரு வரிசையையே இங்கே பட்டியலிட முடியும். இவ்விதழ் மூலம் கேரள சிந்தனையில் உருவான பொதுவான பாதிப்பும் முக்கியமானது. இவ்வரிசையில் முக்கியமாக சொல்லப்படவேண்டிய படைப்பாளி பி.கெ.பாலகிருஷ்ணன். வரலாற்றாசிரியர், இதழாசிரியர், நாவலாசிரியர், திறனாய்வாளர் ஆகிய தளங்களில் கேரள சிந்தனையின் அடிப்படைகளை செதுக்கிய மேதை அவர்.

காந்தி 1925-ல் நாராயண குருவை வந்து சந்தித்திருக்கிறார். சாமியார்கள் மீது நம்பிக்கை இல்லாதவரும் பொதுவாக எவரையுமே சந்திக்காதவருமான காந்தி நாராயண குருவை ஒரு அவதார புருஷர் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அச்சந்திப்புக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி [காஞ்சிபெரியவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்] காந்தியை கேரளத்தில் பாலக்காட்டில் வைத்து சந்தித்து தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஆலயப்பிரவேச போராட்டம் ஆகியவற்றிலிருந்து பின்வாங்குமாறு காந்தியிடம் கோரிக்கை வைத்தார். ஹிந்து சாஸ்திரங்கள் அவற்றை அனுமதிக்காது என்றும் அச்செயல்கள் ஹிந்துதர்மத்தை படிப்படியாக அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார். காந்திக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஹிந்து உயர்சாதி மக்களின் ஆதரவு தன் போராட்டங்களுக்கு கிடைக்காமலாகிவிட வாய்ப்புண்டு என்றும் அவர் உணர்ந்திருக்கலாம்.

நாராயணகுருவை அவர் அரைமனதாகவே சந்திக்க வந்தார். ஆனால் அச்சந்திப்பு அவரை நாராயணகுருவின் முன் பணிந்து கற்க வைத்தது. அவர்களுடைய பேச்சு விபரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் வெகுநாட்களாக தன் மனத்தில் இருந்த ஐயங்கள் பல அன்றுதான் முழுமையாக நீங்கின என்று காந்தி அன்று திருவனந்தபுரத்தில் நடந்த பிரார்த்தனை வகுப்பில் குறிப்பிட்டார். அச்சமயம் கூடவேயிருந்தவர்களில் ஒருவரான மூர்க்கோத்து குமாரன் என்பவரும் ஆசானும் சொன்ன குறிப்புகளின் படி காந்தி வர்ணாசிரம தர்மத்துக்கு சஸ்திர ஆதாரம் உண்டா என்று கேட்டதாகவும் ஹிந்து சாஸ்திரங்களில் மாறக்கூடிய நீதி சாஸ்திரங்கள் மட்டுமே அதை போதிக்கின்றன என்றும் அடிப்படை அறங்களை போதிக்கும் நூல்கள் எதிலுமே சாதிக்கு இடமில்லை என்று உறுதியாக கூறமுடியுமென்றும் நாராயணகுரு சொன்னதாக தெரிகிறது. காந்திக்கு வர்ணாசிரம தர்மம் ஏதோ ஒரு வகையில் தேவையானது என்று எண்ணம் இருந்தது. நாராயணகுரு அதை மறுத்தார். காந்தி அதை பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டார்.

காந்தியின் அரசியல் செயல்திட்டங்களில் முக்கியமான இரண்டு நாராயணகுருவின் இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்று அவர் ஏற்றுக் கொண்டவை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஹரிஜன இயக்கம், மது ஒழிப்பு இயக்கம் ஆகியவையே அவை. 1923-ல் கன்யாகுமரி வந்த தாகூரும் நாராயணகுருவை சந்தித்து அவர் பாரத தேசத்தில் தோன்றிய மகாரிஷிக்களில் ஒருவர், ஒரு பரமஹம்சர் என்று கருத்து தெரிவித்தார். ஆனால் வாழ்ந்த காலத்தில் நாராயணகுருவின் புகழ் தென்னிந்தியாவில் கூட கேரளத்துக்கு வெளியே அதிகமாகப் பரவவில்லை.

நாராயணகுரு தன் 74 வது வயதில் 1928-ல் கேரளத்தில் வற்கலை என்ற ஊரில் அவர் உருவாக்கிய சிவகிரி மடத்தில் காலமானார். அங்கே அவரது சமாதி உள்ளது. அவர் இறக்கும்போது அவர் தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கம் ஏறத்தாழ அதன் சாதனைகளை முடித்துக் கொண்டு அரசியல் இயக்கமாக ஆகி பேரங்களில் இறங்க ஆரம்பித்திருந்தது. நாராயணகுரு கடைசிக்காலத்தில் எஸ்.என்.டி.பி இயக்கத்தை முழுக்கவே நிராகரிக்கும் மனநிலையில் இருந்தார். அமைப்புசார்ந்த செயல்பாடுகளின் எதிர்விளைவுகளை அவர் காண நேர்ந்தது. கடைசி பதினைந்து வருடங்களில் நாராயணகுரு தத்துவ முக்கியத்துவம் கொண்ட தன் நூல்களை இயற்றினார். ஏற்கனவே பொதுமக்களின் வழிபாட்டுக்காகவும் தன் தத்துவங்களை அவர்களுக்கு எளியமுறையில் கொண்டு சேர்க்கவும் நாராயணகுரு துதிக்கவிதைகள் மற்றும் வேண்டுதல் பாடல்களை எழுதியிருந்தாலும் இறுதிக் காலகட்டத்தில்தான் அவரது முக்கிய நூல்கள் உருவாயின. இவை நடராஜ குருவின் வேண்டுதலுக்கு இணங்கி உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன. இறப்புக்குப் பின்னர் நாராயணகுருவின் இயக்கம் இந்த நூல்களில் இருந்து மீண்டும் புதிதாக முளைத்தெழுந்தது.

நாராயணகுரு மலையாளம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தர்சன மாலா, ஆத்மோபதேச சதகம் ஆகிய நூல்கள் தத்துவார்த்தமாக முக்கியமானவை. தமிழ்ப் பாடல்கள் பெரிதும் திருமந்திரம் சித்தர் பாடல்கள் ஆகியவற்றின் சாயல் கொண்டவை. குருவுக்கு வெண்பா மிகவும் கைவருகிறது. திருக்குறளை குரு மொழிபெயர்த்திருக்கிறார். நாராயணகுருவின் தத்துவ நோக்கு அவரது மாணவர்களால் பிற்பாடு இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது. அது இந்திய அறிவுத்தளத்தில் முக்கியமான ஓர் இயக்கமாக ஆயிற்று.

[தொடர்ச்சி ]

நூல்கள்

1. சாதியமைப்பும் கேரள வரலாறும். பி கெ பாலகிருஷ்ணன். சுருக்கமான தமிழாக்கம் ஜெயமோகன். காலச்சுவடு 13
2. கேரள தலித்போராளி அய்யன்காளி. நிர்மால்யா. தமிழினி சென்னை.
3. தென்குமரியின் கதை. டாக்டர் அ. கா. பெருமாள். தமிழினி சென்னை
4. கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி – இ எம் எஸ் நம்பூதிரிப்பாட். [மலையாளம்]
5. ’நாராயணகுரு தொகைநூல் ‘ -பி. கெ. பாலகிருஷ்ணன் [மலையாளம்]
6. பாரதியார் கட்டுரைகள். தொகைநூல்

Copyright:Thinnai. com

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 25, 2004

முந்தைய கட்டுரைகடைசி முகம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏன் அது பறவை?