சென்ற 1-11-08 அன்று சென்னையில் எழுத்தாளர் கோ.ராஜாராம் அவர்களின் மகளுடைய திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அசோகமித்திரனைச் சந்தித்தேன். அவரைப்பார்த்து நெடுநாள் ஆகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு உயிர்மையின் கூட்டம் ஒன்றில் அவரைப்பார்த்தது. சென்னைக்குச் சென்றாலும் சாதாரணமாகச் சென்று சந்திக்க முடியாத அளவுக்கு தள்ளி புறநகரில் இப்போது குடியிருக்கிறார். திருமணத்துக்கு நானும் கவிஞர் ஹரன்பிரஸன்னாவும் சுவாமிநாதன் என்ற நண்பரும் சென்றோம். உள்ளே சென்றபோது ராஜாராம் என்னைப் பார்த்து கலாப்ரியாவா என்று கேட்டார். அவர் என்னை நேரில் பார்த்ததே இல்லை. உள்ளே சென்று துக்காராமைப் பார்த்தோம்.
அதிகம் கூட்டம் இல்லாத கூடத்தில் பேசிக்கொண்டு நின்றபோது அசோகமித்திரன் வருவதாக ஹரன் பிரசன்னா சொன்னார். நான் முன்னால்சென்று வணங்கினேன். மதுமிதாவுடன் பேசிக்கொண்டிருந்தவர் என்னை நோக்கி திரும்பி ”ஆ?” என்று ஆச்சரியப்பட்டு அவரது இளமைக்கால ஆதர்சமான எர்ரால் ·ப்ளின் வாள்சண்டை போடுவது போல கைகாட்டி,”சண்டையெல்லாம் நன்னா போடுறேளா?” என்றார். ”ஆமா சார்”என்று புன்னகைசெய்தேன்.
என் கைகளை தன் மெல்லிய கரங்களால் பிடித்துக்கொண்டு ”எப்டி இருக்கேள்?” என்றார். ”நல்லா இருக்கேன்” என்றேன்.”நாவல் எழுதறேளா?” நான் ”ஆமா சார், அசோகவனம்னு ஒரு நாவல்” என்றேன். ”அவ எப்டி இருக்கா? அருண்மொழி? பாத்து ரொம்ப நாளாச்சு”. ”நல்லாருக்கா” என்றேன். ”நான் பத்து வருஷமா ஒரு நாவல் எழுதறேன்…மேலே நகரலை”என்றார். அப்போது கோ.ராஜாராமின் அமெரிக்க நண்பர் சுந்தரமூர்த்தியும் அவர் மனைவியும் வந்தார்கள். அவர்களை அசோகமித்திரனுக்கு முன்னரே தெரியும் போல. அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்
சாப்பிட்டு விடலாம் என்று துகாராம் சொன்னதனால் லி·ப்டை நோக்கி நடந்தோம். ஹரன் பிரசன்னா புகைப்படம் எடுக்கலாம் என்றார். லி·ப்டின் முன்னால் வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். லி·ப்டில் ஏறி மேலே சென்று சாப்பிட அமர்ந்தோம். அசோகமித்திரனின் அருகே நான் அமர்ந்துகொண்டேன். மறுபக்கம் சுந்தரமூர்த்தி அமர்ந்துகொண்டார். அவர்கள் அமெரிக்க நினைவுகளைச் சொல்ல அசோகமித்திரன் அவரது மகனுக்கு நிகழ்ந்த ஒரு விபத்தைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்.
பின்னர் அவர் என்னை நினைவுபடுத்தி ”மெட்ராஸிலேதான் இருக்கேளா?” என்றார். ”இல்லைசார்…நாகர்கோயில்தான். அப்பப்ப வந்துட்டு போறதோட சரி..”என்றேன். ”சினிமாவுக்கு எழுதறதாச் சொன்னாங்க” ”ஆமா சார்…ரெண்டுபடம் எழுதினேன்” ”அந்தக்காலத்திலே கூட இளங்கோவன்னு ஒருத்தர் இலக்கியத்திலேருந்து சினிமாவுக்குப்போயி ரொம்ப புகழோட இருந்தார். அப்றம் நெறைய பணம் இழந்து கடைசிகாலத்திலே கஷ்டப்பட்டார். நல்ல மனுஷன்”
”நான் அந்த அளவுக்கு சீரியஸா சினிமாவிலே இல்லை சார். சினிமாவிலே இப்ப ரைட்டர்னு நாம பெரிசா ஒண்ணும் செய்றதுக்கு இல்லை. சும்மா கொஞ்சம் பணம் வருது. அவ்ளவுதான்” ”அப்டியா? எழுதறதுக்கெல்லாம் நேரம் கெடைக்குதா?” ”அதெல்லாம் பிரச்சினை கெடையாது…வேலைக்குப் போறதில இருக்கிற சலிப்புதான் பிரச்சினை”
மீண்டும் மறுபக்கம் பேசிக்கொண்டிருந்துவிட்டு என்னை நோக்கி திரும்பி புன்னகைசெய்தார். ”ஒரு மாசம் முன்னாடி தாமோதர ரெட்டி சாலைக்கு போயிருந்தேன் சார்…” அசோகமித்திரன் முகம் மலர்ந்து ”அப்டியா? எப்டி இருக்கு?”என்றார். ”பார்க்கிங் லாட் மாதிரி இருக்கு. ஒரே கார்” ”ஆமா அப்பல்லாம்கூட அப்டித்தான் இருந்தது. எப்பவும் வண்டிகள் போய்ட்டு வந்திட்டு இருக்கும். நடக்கறதுக்கே பயமா இருக்கும்”
நான் அசோகமித்திரன்னை முதலில் சந்தித்தது அவரது சொந்தவீடான தாமோதரரெட்டிசாலை வீட்டில்தான். பழைய ஓட்டுவீடு. அசோகமித்திரன் அவர் அப்பாவை இழந்து சிறுவனாக குடும்பத்துடன் சென்னைக்கு வந்து பல இடங்களில் வாடகைவீடுகளில் தங்கியிருந்து பின்னர் வாங்கிய வீடு. நானும் ஆராவமுதன் என்ற நண்பரும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். வீட்டுமுன் திண்ணையில் வேட்டிமட்டும் கட்டி நின்றிருந்தார். ”என்னத்துக்காக பாக்கணும்?” என்றார். ”நாங்க உங்க வாசகர்கள்”
‘அதுக்காக?’ என்ற பாவனை அசோகமித்திரன் முகத்தில் தெரிந்தது. ”இங்கேயே ஒக்காந்து பேஷலாமே…உள்ளேயெல்லாம் ஒரே நெரிசல்” என்று முற்றத்திலேயே அமர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பாராட்டு, வியப்பு, இலக்கியக் கருத்துக்கள் எதையுமே அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. பத்து நிமிடம் கழிந்ததும் ”சரி கிளம்புங்கோ” என்று சொல்லிவிட்டார்.
அதன்பின் இருமுறை அவரை அதே தாமோதர ரெட்டி தெரு வீட்டில் சத்தித்தேன். ஒரு பேட்டிக்காகப் போனபோது கேள்விகளைப் பார்த்துவிட்டு ”நேக்கு ஒண்ணும் தோணல்லை. நீ என்ன நெனைக்கிறே?” என்று அவரது மகனிடம் கேட்டார். அவரது மகன் முகத்தில் மெல்லிய கேலி.”நான் இதெல்லாம் யோசிக்கிறதே கெடையாது. சரி எழுதி குடுத்திடறேன்…” என்றார்
மூன்றாம் முறை அருண்மொழிக்காக. என்னிடம் பேசுவதைவிட உற்சாகமாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தார். ”நீ குபராஜகோபாலன் ஜானகிராமன் ரெண்டுபேரையும் படிச்சிடு…ரொம்ப சூட்சுமமா எழுதுவா” என்றார். அப்போது அவர் இருந்த அந்த வீட்டை அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட விற்றுவிட்டிருந்தார். அவர்கள் கொடுத்த தரைத்தள குடியிருப்பில் இருந்தார். ”காபி சாப்பிடலாமோ . இங்கே ஒரு ஓட்டலிலே காபி நன்னாருக்கும்”என்று வெளியே கூட்டிச்சென்றார். வீட்டில் அப்போது அவர் தனியாகத்தான் இருந்தார்.
”நாங்க குடிவந்தப்ப அங்கெல்லாம் ஜனநடமாட்டமே கம்மி. கிஷ்ணாயில் காரன் மட்டும்தான் தெருவிலே வருவான்” என்றார் அசோகமித்திரன். ”இப்ப கார் இல்லேன்னா அங்கே இருக்க முடியாது…” நான் ”இப்பல்லாம் எல்லா எடத்திலயும் அப்டித்தான் இருக்கு சார். ஹைதராபாத் செகண்டிராபாதெல்லாம் ரொம்ப மாறியாச்சு. ஊருக்குள்ள எடமே கெடையாது. எல்லாம் அடுக்குமாடிகள். இப்ப உங்க லான்ஸர்பாரக்கெல்லாம் இருக்குமான்னே தெரியல்லை” என்றேன். ”ஆமாமா…ஒண்ணுமே நிக்கிறதில்லை. கண்ணெதிரே மாறிண்டே இருக்கு”
சாப்பிட்டுவிட்டு கீழே வந்தபோது சல்மா வந்திருப்பதைப் பார்த்தேன். அசோகமித்திரன் அவரை அணுகி பேச ஆரம்பித்தார். பரவலாக விருந்தினர் வர ஆரம்பித்தார்கள். இம்மாதிரி பொதுநிகழ்ச்சிகளில் எனக்கு ஒரு சங்கடம் உண்டு. நான் கடுமையாக விமரிசனம் செய்தவர்களை நேருக்கு நேர் சத்திக்கவேண்டியிருக்கும். எனக்கு பொதுவாக எவரிடமும் பேசுவதில் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் அவர்கள் இறுக்கமாக பார்வைகளை தவிர்த்து கஷ்டப்படுவார்கள். ஆகவே மெதுவாகக் கிளம்பிவிட்டேன்.
அசோகமித்திரனைப் பற்றி நினைத்துக்கொண்டே வந்தேன். அசோகமித்திரன் எழுதிய நிலமும் மக்களும் முழுமையாகவே பூமியில் இருந்து மறைந்துவிட்டார்கள். ஆனால் அவரது எழுத்துக்களில் இப்போதும் அவற்றை அத்தனை துல்லியமாக நம்மால் காணமுடிகிறது. அந்த நிலம் அழியாது. சொல்லப்போனால் காலம் தோறும் வளரும். நம் மொழியில் உள்ள பூம்புகார் உண்மையான பூம்புகார் புதைந்து விதையாகி முளைத்து கிளைபரப்பிய பெருமரம் அல்லவா?