பின் தொடரும் நிழல்

அன்புள்ள ஜெயமோகன்,

பின் தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கின்றேன். பித்துப்பிடிதர்ப்போல இருக்கிறது. ஒரு வாரமாயிற்று. ஏன் இந்த வேதனையை விரும்பி வரவேற்கின்றேன் என்று மட்டும் புரியவில்லை. இதே வேதனை முன்பு ஏழாம் உலகம் படிக்கும் போதும்.

“”என்ன ஆயிற்று? விடிந்து விட்டதா ?இரவு முடிந்து விட்டது.அவ்வளவு தான்””

இந்த இரண்டு வரிகள் பல நாட்கள் என்னை தூங்கவிடாமல் அலைக்கழிக்கின்றன. இருட்டு எனபது மிகக்குறைந்த ஒளி. இப்படிப்பட்ட எழுத்துக்கள் ஓரு நூற்றாண்டில் மறுமுறை வருமா?

இன்று டக்கர் பாபா பள்ளியில் உங்களது உரையை கேட்டேன். உங்களை சந்தித்து பேச விழைந்தேன். உடம்பு நடுங்கியது. நான் தயாராகவில்லை. இன்னும் பல நாட்கள் ஆகலாம். வெண் முரசு வெளியீட்டு விழா மற்றும் உப்பு வேலி புத்தக வெளியீட்டிலும் பார்த்தேன். என்றாவது உங்களை சந்திக்கும் தைரியம் வரக்கூடும். பார்க்கலாம்.

காடு, கொற்றவை, விஷ்ணுபுரம் வெண் முரசு முதல் இரண்டு பாகங்கள், வெள்ளை யானை, அறம் எல்லாம் ஒரு முறை படித்தாயிற்று. இன்னும் 99 முறை மீதி இருக்கலாம். இல்லை,அதற்கு மேலுமோ? பார்க்கலாம்.

டார்த்தீனியம் வெளிவந்த வருஷத்தில் கணையாழியில் 2 சிறுகதைகளும், சில கவிதைகளும், ஒரு வீதி நாடகமும் எழுதியிருந்தேன். அப்போது எனது வயது 19. உடனே ஹோசூரில் வேலைக்கு சென்று .விட்டேன். அத்துடன் எல்லாம் .முடிந்தது.இப்போது 31 வருடம் ஆகிவிட்டது நான் வேலை செய்ய ஆரம்பித்து. இனி மீதி வாழ்கை உங்களது நூல்கள் போதும்.

எப்போதாவது உங்களை நாகர்கோவில் வந்து சந்திக்க வேண்டும்.

இறைவன் எல்லா ஆசிகளும் உங்களுக்கு நல்கட்டும்

பிரியமுடன்

தரமங்கலம் மணி

அன்புள்ள மணி

நன்றி, நான் சந்தித்திருக்கலாம். மீண்டும் சந்திப்போம்

நீங்கள் எழுதியதை மீண்டும் தொடரலாம் என்று நினைக்கிறேன். இலக்குகள், இடங்கள் பற்றிய கவலைகள் இல்லாமல் அவ்வப்போது எழுதுவதென்பது நாட்களை நிரைவாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் என்பதே என் எண்ணம்.

பின் தொடரும் நிழலின் குரலில் ச்மான்குலைக்கும் ஓர் அம்சம் இருக்கிறது. அது நாம் அறவுணர்வு என சொல்வது எத்தனை நொய்மையானது என்று நமக்குக் காட்டுகிறது. அதைக்கடந்துவருவது ஒரு சவால்தான்

ஜெ

முந்தைய கட்டுரைஎன் நண்பர்கள்
அடுத்த கட்டுரைதனிவரிசை