கதையறிதல்

அன்பின் ஜெய்,

மனத்தடை மடை திறந்ததால் எம் முதல் மடல், இணைய அறிவால் நிகழ்ந்த விபத்தில் இன்று வரை உங்கள் எழுத்தை பின்தொடரும் மீச்சிறு வாசகன். இணையத்தில் பரவலாக மேயும் தருணத்தில் வியாசர் சுகனை சந்திக்கும் அத்தியாயத்தில் அறிமுகம் ஆனது நம் வெண்முரசு, அக்கணம் பீமன் அறிந்து உண்ட அமுதஆலகாலம் போல் இன்று வரை என் சிந்தை முழுவதும் அதுவே.

“திரௌபதி சிரித்தபடி “ஆனால் நஞ்சு என்பது அமுதத்தின் தங்கை என்கிறார்கள். அது இனியது என்று சொல்லப்படுவதுண்டு” என்றாள். “அதை நாடிச்செல்பவர்களுக்கு இனிக்கக்கூடும்” என்றான் பீமன்.

நான் நாடிச்சென்ற இந்நஞ்சு என்னை தித்திக்கவே செய்தது. இந்நஞ்சு தங்கள் வலைதளத்தில் உள்ள மற்ற படைப்புகளையும் வாசிக்கசெய்தது. மேலும் கையில் சிறு தேக்கரண்டியுடன் கடலை அள்ள நினைக்கும் வேட்கையுடன் இலக்கிய படைப்புகளை படிக்கமுயன்று கொண்டு இருக்கின்றேன். அதை எவ்வாறு என் குழந்தைகளுக்கு (வயது 1) அவர்களின் எதிர்காலநலனாக கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை, சிறு வயது முதல் அவர்களுக்கு எந்தந்த புத்தகங்களை படிக்க தருவது என்று தாங்கள் தெரிவித்தால் என்னைபோன்ற மற்ற இளம் வாசகர்களும் பயனடைவார்கள். ( இது பற்றி முன்பே உரைத்திருப்பின் பகிரவும் )

நன்றிகள் பல

அன்புடன்

சசிகுமார். ரா

சேலம்

அன்புள்ள சசிக்குமார்

நம் சூழலில் பொதுவாக இலக்கியமோ கலைகளோ குடும்பச்சூழலில் இயல்பாக அறிமுகமாவதில்லை. ஆகவே தற்செயல் நிகழ்ந்தால்தான் உண்டு. பெரும்பாலான வாசகர்கள் தற்செயல்மூலமே அத்தனை அறிவார்ந்த விஷயங்களையும் அறிந்திருப்பார்கள். இப்போது இணையம் இந்த தற்செயல்களைச் சற்று கூட்டுகிறது

தொடர்ந்து வாசியுங்கள். எப்போதும் வாசிப்பு நீங்கள் நின்றிருக்கும் இடத்திற்கு சற்று மேலே நிற்பதாக இருக்கட்டும். வாசிப்பில் உங்கள் பங்களிப்பு எப்போதுமிருக்கட்டும்

சிறுகுழந்தைகள் அவர்களே வாசிக்கும்போது நூல்களை அறிமுகம் செய்யலாம். அதுவரை அவர்களுக்குக் கொடுக்கவேண்டியது ‘கதை’ தான். ஒரு குழந்தை சொற்களைக் கேட்டு காட்சிகளை காண ஆரம்பித்தது என்றால் அவனே வாசகன். கதை சொல்லிக்கொண்டே இருங்கள். அது உங்கள் கதை சலித்து தானே புத்தகத்தை நாடும்வரை

ஜெ

முந்தைய கட்டுரைகண்ணுக்குத்தெரிபவர்களும், தெரியாதவர்களும்
அடுத்த கட்டுரைநூலகம்