கண்ணுக்குத்தெரிபவர்களும், தெரியாதவர்களும்

அன்புள்ள ஜெ.,

இன்று அலுவலகம் விட்டு வரும் வழியில் அம்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பாக நிகழ்ந்துவிட்டிருந்த அந்த விபத்தை பார்க்க நேர்ந்தது. இரு வாலிபர்கள் இறந்து விட்டிருந்தார்கள். அவர்களருகே இன்னொருவர் அழுது கொண்டிருந்தார். நண்பராக இருக்கக்கூடும். தலைக்கவசம் இருந்திருந்தால் பிழைத்திருக்கலாமென்றார் அருகிலிருந்த ஒருவர். அழுதுகொண்டிருந்தவர் மட்டும் நினைவிலே இருந்தார். அவரைப்போலவே நானும் புழல் சாலையில் அழுதுகொண்டு நின்றிருக்கிறேன் ஒன்பதாண்டுகள் முன்பு. என் இரு நண்பர்களில் ஒருவர் தக்கலை மற்றவர் சூலூர்பேட்டை. நான்தான் ஐவிட்னஸ். கேஸ் இன்றுவரை விசாரணைக்குக்கூட வரவில்லை. அவர்கள் நினைவாகவே வீடு வந்து சேர்ந்தேன். சும்மா அமர்ந்திருந்தேன். இரவு பன்னிரணடாகியிருந்தது. இன்றைய புதுப்பதிவு இருந்தது. அந்த முன்னூறுபேர் பதிவை படித்ததும் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்ததோர் உணர்வு. அதிர்ச்சிக்குக் காரணம் நான் 1000 பிரதிகள் இருக்கும் என எண்ணியிருந்தேன். 300 என்பது மிகக்குறைவாக பட்டது முதலில். ஏழு வருடம் முன்பு என் கடிதத்திற்கு நீஙகளெழுதிய பதிலில் குறிப்பிட்டிருந்தீர்கள்… புதிதாக 1000 பேர் உங்கள் தளத்தை படித்தால் அதில் இருவர் மட்டுமே உங்கள் வாசகராகக் கூடும் என. அந்தக் கணக்கு இப்பொழுது அதிகரித்துவிட்டதாக தோன்றுகிறது.

ஆனால் தடாலடியாக யாரும் உங்களை படித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். என் பதினெட்டு வயதிற்குள் எங்கள் வீட்டில் கண்மணி, மாலைமதி முதல் சுஜாதா, பாலகுமாரன் வரை படித்திருக்கிறேன். அப்படியிருந்தும் தொப்பி திலகம் வரை உங்கள் அறிமுகம் இல்லை. விகடன் கதாவிலாசம் வழியாக ஏதோ தெரியும். அதியமான் விஷ்ணுபுரம் நாவலை தராதிருந்தால் நானும் காசிரங்கா கூட்டத்தோடு ஜகா வாங்கியிருப்பேன். ஆனால் யானைக்கு எர்ரம் குதிரைக்கு குர்ரமென இணயத்திலோ யாருடனோ வம்படித்துக்கொண்டிருப்பேன். விஷ்ணுபுரத்தைவிட அதிகம் பாதித்தது நீங்கள் கண்ட அந்த உடலே ஒளியான புழு. அதை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இயல்பாகவே ‘தமோகுணம்’ அதிகமுள்ள எனக்கு அது சற்று சுறுசுறுப்பை தந்து Competition-ல் இருக்க வைக்கிறது.

மற்றபடி இறுதி வரியிலிருக்கும் நன்றி எனும் வார்த்தை சற்றே அதிகப்படி. அதை நாங்கள் சொல்ல வேண்டும் உங்களின் ஒவ்வொரு வரிக்காகவும்…….

நன்றியுடன்
R.காளிப்ரஸாத்

அன்புள்ள காளிப்பிரசாத்,

அந்த முந்நூறுபேர் என்பது கண்ணுக்குத்தெரியும் முகங்களால் ஆன ஒரு வட்டத்தைப்பற்றி சொன்னது. ஏராளமான வாசகர்கள் இருப்பதை நான் அறிவேன். என்னுடன் கசந்தும் சினந்தும் விவாதிப்பவர்களும் என் சிறந்த வாசகர்களே. அவர்களின் மொழியையும் சிந்தனையையும் நான் தொடர்ந்து மாற்றியமைத்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

சிலசமயங்களில் வாசகர்கள் கண்ணுக்குத்தெரிவதும் தேவையாகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைநிறம்- கடிதம் 2
அடுத்த கட்டுரைகதையறிதல்