ஆசிரியருக்கு,
“கரடி” மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது வீட்டு விலங்காக பழக்கப் படுத்துதல் என்கிற ஒட்டு மொத்த நிகழ்வு பற்றி.
ஆங்கிலத்தில் taming மற்றும் domestication என்கிற இரு வேறு வார்த்தைகள் உள்ளது. taming ஒரு விலங்கை பழக்கப் படுத்துதல் , domestication ஒன்றை வீட்டு விலங்காக்குதல், அதாவது ஒரு இனத்தையே உருவாக்குதல்.
இக்கதையில் கரடி tamingல் இருந்து domestication நோக்கி கொண்டு செல்லப்படுகிறது என்பது ஒரு உருவகம். பழக்கப் படுத்துததால் விலங்குகளுக்கு நாம் மேம்படுத்துகிறோமா அல்லது வலுக்கட்டாயமாக அதன் சுயத்தை இல்லாமல் ஆக்குகிறோமா என்கிற கேள்வியையும் இக்கதை எழுப்புகிறது.
இப்படியே தான் பழங்குடிகளுக்கு நன்மை செய்கிறோம் என பெருமதம் அதன் அடையாளங்களை அழித்து தன்னைப் போல மாறுகிறது. செல்வமளிக்கிறோம் எனக் காட்டி ஒரு பண்பாடு இன்னொன்றை அதன் அடையாளங்களை விழுங்கி தன்னைப் போல மாற்றுகிறது. பெரு நிறுவனகள் சிறு நிருவனங்களை இவ்வாறு மாற்றுகிறது, பொதுக் கல்வி தனது சீருடையை பிற குலக் கல்வி மீது அணிவிக்கிறது.
இது ஒருவகையில் மேம்பாடு, இன்னொரு கையில் அடையாளமிழப்பு.
கரடியை வலிந்து நம்மைப் போல மாற்றி, நம்மைப் போலப் பழக்கி பின் தானாக அது நாம் செய்வதை அது செய்ததால் நாம் அதற்கு வழங்கிய பரிசே அத்துப்பாக்கி குண்டு.
மாற்றுவது நாம் தண்டனை மாறியதற்கு.
கிருஷ்ணன்.